http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Tuesday 19 June, 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :09/1. ஏரொளிச் சக்கரம் (பாடல்கள்:01-18/36) பாகம் I





 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.......................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்............பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்............பாடல்கள்: 100 
நான்காம் தந்திரம்:பதிக எண்:09: ஏரொளிச் சக்கரம்......பாடல்கள்: 036
======================================================(371+36=407)

நான்காம் தந்திரம்-பதிகம் எண்:09/1. ஏரொளிச் சக்கரம்
(பாடல்கள்:01-18-36/36
) பகுதி-I

பாடல் எண் : 1
ஏரொளி உள்எழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழும் நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.

பொழிப்புரை :   தன்னுள்ளே ஏரொளி எழப்பெறுவதாகிய தாமரை மலர் நான்கிதழ்களை யுடையது. அவ் ஏரொளியாவது, சுத்த மாயையினின்றும் தோன்றும் வாக்கேயாம். அவ்வொளி பல கூறுகளாய் வளர்ந்து உடம்பெங்கும் குறைவின்றி நிறையப் பெற்ற பின், உடலாகிய சக்கரம் (யந்திரம்) ஏரொளிச் சக்கரமாய்விடும். அப்பொழுது ஐம்பூதங்களில் ஒளிப் பொருளாகிய தீ, அச்சக்கரத்தின் நடுவிலே அணையாது நின்று ஒளிர்வதாம்.
==============================================
பாடல் எண் : 2
வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
வன்னி எழுத்தவை மாபெருஞ் சக்கரம்
வன்னி எழுத்திடு மாறது சொல்லுமே.

பொழிப்புரை :    தீயின் பீசாக்கரங்களே ஏனைய பூத அக்கரங்கள் எல்லாவற்றினும் சிறந்து நிற்கும். அதனால், அவை வானத்தையும் அளாவி நிற்கும். அவற்றையே `சக்கரம்` என்று கூடச் சொல்லி விடலாம்; அவற்றைச் சக்கரத்துள் இடும் முறை இங்குச் சொல்லப்படும்.
==============================================
பாடல் எண் : 3
சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்வெழுத் தாவன
சொல்லிடு நூறொடு நாற்பத்து நால்உருச்
சொல்லிடு சக்கர மாய்வரும் ஞாலமே.

பொழிப்புரை :   ``விந்துவினால் எழும் நாதம்`` என்புழிச் சொல்லப் பட்ட சுத்த மாயை வாக்காக விருத்திப்படுமிடத்துப் பன்னிரு பிராசாத கலைகளாயும் விருத்திப்படுவதாம். அக்கலைகளே சிவமாயும் விளங்கும். அவைகளை, நூற்று நாற்பத்து நான்கு அறைகளில் அமைக்க, மேற்கூறிய ஏரொளிச் சக்கரம் தோன்றுவதாம்.
==============================================
பாடல் எண் : 4
மேல்வரும் விந்துவும் அவ்வெழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின்
மேல்வரு சக்கர மாய்வரும் ஞாலமே.

பொழிப்புரை :   உயிரெழுத்துக்களின் ஈற்றில் ஓதப்படும் விந்து வாகிய `அம்` என்பது தனிஓர் எழுத்தாய் நிற்பினும், அகரம் முதலிய பிற உயிர்களோடு கூடி நிற்றலும் உடைத்து, முடிவில் உள்ள நாதமாகிய `;` என்பதும் அத்தன்மையது. சக்கரங்களில் முதற்கண் உள்ள அறையில் எந்த எழுத்து உள்ளதோ, அந்த எழுத்துக்குரிய கலையின் சக்கரம் அதுவாகும். அவ்விடத்து அச்சக்கரம் அக்கலைக்குரிய பிண்டமாதலேயன்றி அண்டமாயும் விளங்கும்.
==============================================
பாடல் எண் : 5
ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்த எழுத்தே.

பொழிப்புரை :   ஏரொளிச் சக்கரம் பல உலகங்களாயும் அமையும் பெருமையது. அதில் உள்ள விந்து நாதங்களும் அன்ன. அதனால் அச்சக்கரத்தில் இருக்கும் எழுத்துக்களை அறிவுடையோர் சிவமேயாக எண்ணுதலில் தலைப்படுவர்.
==============================================
பாடல் எண் : 6
விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கர மாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

பொழிப்புரை : சுத்த மாயையினின்றும், விருத்திப் பட்ட எழுத்துக்கள் முதற்கண் `நாதமும், விந்துவும்` என்னும் சூக்கும, சூக்குமாசூக்கும நிலைகளாய் நின்று, பின்னரே தூலமாயினவாம். அந்த எழுத்துக்களால் சக்கரங்கள் அமையுமிடத்து ஒடுக்க முறையில் முதற்கண் பிருதிவி சக்கரமும், அதன்மேல் அப்பு சக்கரமும் நிற்கும்.
==============================================
பாடல் எண் : 7
அப்பது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ் அன லாயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாய் எழ
அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.

பொழிப்புரை : மேற்சொல்லிய அப்புசக்கரத்தின்மேல் தேயுசக்கரம், அதன்மேல் வாயுசக்கரமும், அதன்மேல் ஆகாய சக்கரமும் அமையும்.

குறிப்புரை :  முதலடி அனுவாதம், இம் மந்திரத்தில் அப்புவை அடியாக எடுத்தமையின்யாவும் அதன்மேல் உள்ளனவாக ஓதினார்.
இதனால், அவை மற்றும் சில கூறப்பட்டன.
==============================================
பாடல் எண் : 8
ஆகாச அக்கர மாவது சொல்லிடில்
ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை
ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவ தறிமினே.

பொழிப்புரை :   ஆகாய பீசத்தைச் சொல்வதனால், ஆகாய சக்கரத்தில் அமைந்த எழுத்துக்கள் யாவும் அந்த ஆகாய பீசமாகவே ஆய்விடும். அதனால், ஆகாய சக்கரம் சிவானந்தத்தைப் பயக்கும் ஆற்றலுடையதாம்.
==============================================
பாடல் எண் : 9
அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி ஓர்க்கும்
அறிந்திடும் அப்பக லோன்நிலை ஆமே.

பொழிப்புரை :   இங்கு அறியப்பட்டு வரும் ஏரொளிச் சக்கரம், வரிசைக்கு ஐந்தாக ஐந்துவரியில் இடப்படும், இருபத்தைந்து புள்ளி களால் அமைவது. (எனவே அப்புள்ளிகளை நேர்க் கோடுகளால் இணைக்கத் தோன்றும் நானான்கு (4X4=16) பதினாறு அறை களால் அமைதல் பெறப்பட்டது.) அவ் அறைகளில் உயிரெழுத்துப் பதினாறும் நாதம் முதலாக அடைக்கப்படும். இவ்வாறாக அமையும் இச்சக்கரம் பொதுவே சிவசூரியனால் விளக்கப்படுவது.
==============================================
பாடல் எண் : 10
அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
எம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
இரும்முதல் நாலும் இருந்திடு வன்னியே
இரும்முத லாகும் எழுத்தவை எல்லாம்.

பொழிப்புரை :    மாதுருகாட்சரங்களில் அகாரம் முதலிய ஆறு எழுத்துக்களும் சிவன் எழுத்துக்களும் ஏகாரம் முதலிய ஆறு எழுத் துக்கள் சத்தி எழுத்துக்களும், இவற்றுக்கு இடையே உள்ள நான்கு எழுத்துக்கள் அங்கி எழுத்துக்களும் ஆகும். ஆதலின், உடலெழுத் துக்கள் பலவும் இந்த உயிரெழுத்துப் பதினாறனுள்ளே அடங்கிநிற்கும்.
==============================================
பாடல் எண் : 11
எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.

பொழிப்புரை :   ஏரொளிச் சக்கரத்தில் அடைக்கப்படும் எழுத்துக் கள் நூற்று நாற்பத்து நான்கும் மந்திர கலை உளப்பட ஆறு வட்டங் களில் நிற்பனவாம். அவ் ஆறுவட்டங்களின் நடுவே அமைந்த இடமே ஏரொளிச் சக்கரத்தின் நடுவிடமாக, அவ்விடத்திலே முதற்கண் (1238) கூறிய வன்னி பீசமாகிய `ஓம் ரம்` என்பதுபொறிக்கப்படும். அவ் விடத்து நிற்கும் பிரணவமும், பீசமுமாகிய அவையே சிவசோதி சொரூபமாய் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அனைத்து எழுத்துக் களிலும் தனது ஆற்றலால் வியாபித்து நிற்கும்.
==============================================
பாடல் எண் : 12
அந்தமும் ஈறும் முதலா னவைஅற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருட மானதே.

பொழிப்புரை :    உடலெழுத்துக்களில் கவர்க்கமாதி ஐவருக்கத்தின் ஈற்றெழுத்துக்களும், யகாராதி சகாராதி (‹) வருக்கங்களின் ஈற்றெழுத்துக்களும் அவ்வவ் வருக்கத்தின் முதலெழுத்துக்களோடு கூடி அனாகத சக்கரத்தோடே நீங்கி யொழிய, விசுத்தி, ஆஞ்ஞை என்னும் இறுதி இரண்டாதாரங்களிலே உயிரெழுத்துப் பதினாறனோடு மற்றிரண்டெழுத்துக் கூடப் பதினெட்டெழுத்தே நிற்றலால், எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய பரசிவனும் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரண்டு எழுத்துக் கடந்து நிற்பவனாகவே எண்ணப்படுகின்றான். அதனால், யோகத்தின் முடிவும் சந்திர மண்டலத்தையும் கடந்து துவாதசாந்தத்தை அடைவதே யாகின்றது.
==============================================
பாடல் எண் : 13
ஆஇன மானவை முந்நூற் றறுபதும்
ஆஇனம் அப்பதி னைந்தின மாய்உறும்
ஆஇனம் அப்பதி னெட்டுட னாய்உறும்
ஆஇனம் அக்கதி ரோன்வர வந்தே.

பொழிப்புரை :   ஐம்பதெழுத்துக்களில் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அவ்வுயிரெழுத்துக்கள் பன்னிரண்டுமே முந்நூற்றறுபது நாள்களாகிய ஆண்டும், பதினைந்து நாள்களாகிய பக்கமும், ஆறும், பன்னிரண்டும் ஆகிய இருதுக்களும், மாதங்களும் என்று இவை அனைத்துமாய் நிற்கும். அவற்றிற்கு அச்சிறப்பு, சிவ சூரியனது தோற்றத்தால் ஆனதாம்.
==============================================
பாடல் எண் : 14
வந்திடும் ஆகாச ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்ப திராசியும்
வந்திடும் நாளது முந்நூற் றறுபதும்
வந்திடும் ஆண்டும் வகுத்துறை அவ்விலே.

பொழிப்புரை :  ஏரொளிச் சக்கரமே மேற்கூறிய சிவசூரியன் தோன்றும் ஆகாச வழியாகும். அதனால், அதன்கண் உள்ள எழுத்துக் களே அச்சூரியன் இயக்கத்தால் அமைகின்ற நாழிகைகளும், அந் நாழிகையால் ஆம் நாட்களும், அந்நாட்களால் ஆம் மாதங்களும், அம் மாதங்களின் நாள் முந்நூற்றறுபதால் அமைகின்ற ஆண்டும் ஆகும்.
==============================================
பாடல் எண் : 15
அவ்வினம் மூன்றும்அவ் ஆடது வாய்வரும்
கெவ்வினம் மூன்றும் கிளர்தரு ஏறதாம்
தவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.

பொழிப்புரை :  இராசிகள் பன்னிரண்டில் இடபம் முதல் நான் கினை முதற் கூறாகவும், விருச்சிகம் முதல் நான்கினைக் கடைக் கூறாகவும், எஞ்சிய நான்கையும் இடைக் கூறாகவும் பகுத்து, அக்கூறுகளை முறையே `மேட வீதி, மிதுன வீதி, இடப வீதி` எனக் கொள்க. இராசிகள் பன்னிரண்டும் இங்ஙனம் இம் மூன்று வீதிகளாய் அமைவனவாம்.
==============================================
பாடல் எண் : 16
இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுட் சக்கரம் என்றறி விந்துவாம்
இராசியுட் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.

பொழிப்புரை :   ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரு சக்கரங் களும் முறையே மேடம் முதலிய பன்னிரண்டு இராசியுள் நிற்பன வாகக் கருதித் தியானிக்கப்படும். அத்தியானம் பன்னிரண்டாம் ராசி முடியச்சென்று முற்றின், தியானிப்பவன் விந்து வெளியைப் பெற்ற வனாய்த் திகழ்வான். அவன் பின்னும் அந்தத் தியானத்திலே அழுந்தி நிற்பின், நாத ஒலியைக் கேட்பவனாகவும் ஆவான். பன்னிரு சக்கரங் களும் பன்னிரண்டு இராசிக்குள் நிற்பனவாகக் கருதும் கருத்திற்கு இதுவே பயனாகும்.
==============================================
பாடல் எண் : 17
நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம்
நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.

பொழிப்புரை :   தம்மை அடுத்து நிற்கும் எழுத்துக் காரணமாகத் தாமும் விந்துவாய் நிற்கின்ற, ஏரொளிச் சக்கர எழுத்துக்கள், அன்ன காரணத்தானே நாதமாயும் நிற்கும். அவ்வெழுத்துக்களை அங்ஙனம் தியானித்தலில் சிறிதும் திரியாது நிற்பின், அந்நிலையின்பின் மேற்கூறிய ஒளிக்காட்சி விண்மீன்போலப் புலப்படும்.
==============================================
பாடல் எண் : 18
தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேலோர் தழைத்ததோர் பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.

பொழிப்புரை :   மேற் கூறியது காரணமாக ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரு கலா சக்கரங்களைப் பன்னிரு விண்மீன்கள் என்று கூறலாம். ஆயினும் அவற்றின் தியான முதிர்ச்சியில் விண்மீனினும் மிக்க பேரொளி ஒன்று மேலே உள்ளமை புலனாகும். ஆதலால், அந்த விண்மீன்போல நிற்கும் ஒளிக்காட்சியை இடைவிடாது காணுதல் அப்பேரொளி சிறிதுசிறிதாக மிக்கு விளங்குதற் பொருட்டாம்.
==============================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.