http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 3 March, 2013

திருமந்திரம்-தந்திரம்09: பதிகம் 05 & 06. பஞ்சாக்கரம்-தூலம், பஞ்சாக்கரம்-சூட்குமம் -பாடல்கள்: 10 & 05.

 
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்.......பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..பாடல்கள்: 019 

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி.........பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை..................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்:பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்:005
*************************************************
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -006

கூடுதல் பாடல்கள்  (048+010+005=063)
*************************************************



ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் – தூலம் : பாடல்கள் : 010
பாடல் எண் : 1
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது
நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

பொழிப்புரை : அனைத்துலகங்களுக்கும் முதற்பொருளாய் நிற்கும் கடவுட் பொருள் ஒன்றே. அனைத்து உயிர்கட்கும் உயிராய் உள்ளதும் அதுவே. அதனை உணர்த்தும் `நமச்சிவாய` என்னும் ஐந்தெழுத்து மறைமொழியே ஞானத்தைத் தரும் மறைமொழியாம். அம்மறைமொழியாகிய பழத்தை நான் தின்றே பார்த்தேன். அது தித்தித்த முறையை உலகில் எந்தத் தித்திப்போடு நான் உங்கட்கு உவமித்து உணர்த்துவேன்.?
*************************************************
பாடல் எண் : 2
அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி
உகாரம் முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே.

பொழிப்புரை : சிவன், ``சொல் இறந்து நின்ற தொன்மையன்`` ஆயினும் சொல்லாலன்றி உயிர்கள் அவனை உணர்தல் கூடாமை பற்றி அவன் சொல்வடிவான பல பெயர்களையும் உடையவன் ஆகின்றான். எல்லாப் பொருள்களும் பெயராலே அறியப்படுதலாலும் எல்லாப் பொருள்களிலும் சிவன் அவையேயாய்க் கலந்து நிற்றலாலும் ஒரு வகையில், எல்லாப் பெயர்களும் சிவன் பெயர்களேயாகின்றன. பெயர்கள் யாவும் எழுத்துக்களால் ஆனவை. `அவ் எழுத்துக்கள் ஐம்பத்தொன்று` எனப்படுகின்றன. அந்த எழுத்துக்கள் பிரணவ கலைகளாகிய அகார உகார மகாரங்களால் முறையே `தோற்றம், நிலை, இறுதி` என்பவற்றை அடைவனவாகச் சொல்லப்படுகின்றன. ஆகவே, அனைத்துப் பெயர்களும் தோன்றி அழிவன ஆகின்றன. இந்நிலையில் தோற்றமும் அழிவும் இல்லாத சிவ நாமம், நகாரத்தை முதலாக உடைய ஐந்தெழுத்தாதல் ஆவதாம்.
*************************************************
பாடல் எண் : 3
அகாராதி யீரெட் டலர்ந்த பரையாம்
உகராதி சத்தி உள்ளொளி ஈசன்
சிகாராதி தான்சிவம் ஏதமே கோணம்
நகாராதி தான்மூல மந்திரம் நண்ணுமே.

பொழிப்புரை : `ஐம்பது` அல்லது, `ஐம்பத்தொன்று` எனப்படும் அகரம் முதலாகிய எழுத்துக்களில் பதினாறு வகையாய்ப் பராசத்தி நிறைந்து நிற்கும். (பதினாறாவன சயை, விசயை, அசிதை, பராசிதை, நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, இந்திகை, தீபிகை, இரோசிகை, மோசிகை, வியோம ரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை` என்பன. அந்தச் சத்தியைக் குறிக்கும் பெயர் உகாரத்தை முதலாக உடையது `உமா, என்பது (இஃது உ, ம், அ என்பது கூட்டாக இருத்தலால், `சத்தி பிரணவம்` எனப்படும்.) சத்தி ஒளியாய் நிற்க. அதற்குப் பற்றுக் கோடான சுடராய் உள்ளார்ந்து நிற்பவன் சிவன் முன் மந்திரத்திற் கூறிய ஐந்தெழுத்து மந்திரத்தைச் சிகாரம் முதலாகக் கொண்டு நோக்கினால் அம்மந்திரம் மூன்று கூறாய், `பதி, பசு, பாசம்` என்னும் மூன்றையும் உணர்த்தும், ஆகவே, முன் மந்திரத்திற் கூறியவாறு நகாரத்தை முதலாகக் கொண்ட ஐந்தெழுத்தாலாகிய அந்த மந்திரமே அனைத்து மந்திரங்கட்கும் மூல மந்திரமாம் தகைமையை உடையதாகும்.
*************************************************
பாடல் எண் : 4
வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மே லேஅவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்
ஆயதீ ரும்ஐந்தோ டாம்எழுத் தஞ்சுமே.

பொழிப்புரை : நந்தி நாமமாகிய நகாராதி ஐந்தெழுத்தாலாகிய மந்திரத்தின் நிலையை நுணுகி நுணுகி நோக்கினால், அடி அண்ணம், கண்டம், (மிடறு, இருதயம், உந்தி, மூலம் என்பவற்றில் முறையாகப் போய், முதல் நிலையாய் நிற்கும். அந்நிலையே `நாதம்` என்பர். அதனை `அகரம்` எனவும் வழங்குவர். இனி அது தியானிக்கப்படும் நிலையில் புருவநடு, நெற்றி, உச்சி அதற்கு மேலும் செல்வனவாகிய நிராதாரம், மீதானம் ஈறாகிய ஐந்திடத்திலும் பொருந்தும்.
*************************************************
பாடல் எண் : 5
கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தான்எழும் போதும்
மரணங்கை வந்துயிர் மாற்றிடும் போதும்
அரணங்கை கூட்டுவ தஞ்செழுத்தாமே.

பொழிப்புரை : ``தோற்றம் உண்டேல் மரணம் உண்டு.(திருமுறை - 7-7-2) என்றபடி பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் உள்ள இயற்கை நியதியின்படி இறப்பை எய்திய மக்களின் உடம்பை உறவினரும், ஊராரும் முறைப்படி எரியூட்டுவார்கள். அவ் எரி, ஏழுவகையான கதிர்கள் மிக்குத் தோன்றும் வகையில் ஓங்கி எரியும். அப்பொழுதுதான் பருவுடம்பில் எஞ்சி நின்ற `தனஞ்சயன்` என்னும் காற்று முதலிய சில கருவிகள் அவ்வுடம்பை விட்டு நீங்குவனவாகும். அவையும் நீங்க உயிர் நுண்ணுடலோடு வினைக்கீடாகத் தான் செல்ல வேண்டிய இடம் நோக்கிச் செல்லும். இவ்வாறான இயற்கை இறப்புவரினும், உயிர் செய்த பெருந்தீவினை காரணமாக இடையே திடீர் செயற்கை இறப்பு வரினும் எப்பொழுதும் உயிருக்குப் பாதுகாவலைத் தருவது திருவைந்தெழுத்து மந்திரமே.
*************************************************
பாடல் எண் : 6
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.

பொழிப்புரை : `ஞாயிறும், திங்களும் எழுகின்ற காலை, மாலை என்னும் வேளைகளில் சிறப்பாகக் கணிக்கத் தக்க மந்திரம் இது` என்பதை அக்காலங்களில் மந்திரக் கணிப்புச் செய்வோரில் பெரும்பாலோர் அறிந்திலர். (ஆகவே அவர்கள் காயத்திரி மந்திரத்தையே அவ்வேளைகளில் கணிக்கின்றனர். ஆகவே) `சந்தியா தேவதை` எனப்படும் சத்திக்கு மிகவும் விருப்பத்தைத் தருவது திருவைந்தெழுத்து மந்திரமே என்பதை அறிந்து அதனை அக்காலங்களில் வாசகம் முதலிய மூவகையானும் ஓதுதலாகிய சிறப்பு அவர்கட்குக் கூடுமோ!.
*************************************************
பாடல் எண் : 7
குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வருவழி மாள மறுக்கவல் லார்கட்
கருள்வழி காட்டுவ தஞ்செழுத் தாமே.

பொழிப்புரை : சிவகுரு உபதேசித்த மொழி வழியில் நின்று, பிறப்பிற்கு ஏதுவான வழியையே கூறும் சமய நூல்களைக் கைவிடவும், மற்றும் பிறவி வரும் வழிகெட்டுப் போகும்படி அதனைப் போக்கவும் வன்மை பெற வேண்டுவார்க்கு அவ்வன்மையைத் தருவதாகிய திருவருளாகிய வழியைக் காட்டுவது திருவைந்தெழுத்து மந்திரமே யாகும்.
*************************************************
பாடல் எண் : 8
வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.

பொழிப்புரை : செயலற்று நிற்கும்படி வினையின் பயனாகிய துன்பங்கள் வந்து விளையும்பொழுது, அவற்றால் சோர்வுறாதபடி உறுதியைத் தருகின்ற திருவைந்தெழுத்தை ஓதும் கருத்தைக் கொண்டால் அக்கருத்து அதனை உடையவனைச் சிவனது திருவடியில் சேர்க்கும். மேலும் அக்கருத்துடையவன் செய்யும் செயல்கள் சிவனது உருவேயாகும்.
*************************************************
பாடல் எண் : 9
நெஞ்சு நினைந்து தம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.

பொழிப்புரை : மேகங்கள் தவழும் வெள்ளி மலையில் வீற்றிருகின்ற இறைவனை திருவைந்தெழுத்து வழியாக நெஞ்சால் நினைதலும், வாயால், `தலைவனே` என்று சொல்லி வாழ்த்துதலும், இறக்கும்பொழுது, `உனது திருவடியே புகல்` என்று சொல்லியும் நின்றால் அவ்விறைவனது அருளை எளிதில் பெறலாம்.
*************************************************
பாடல் எண் : 10
பிரான் வைத்தஐந்தின் பெருமை உணராது
இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும்
அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.

பொழிப்புரை : இறைவன் உயிர்கள் உய்தியின் பொருட்டு உண்டாக்கி வைத்துள்ள சாதனம் திருவைந்தெழுத்து மந்திரம். அதுவே அவனது பேராற்றலாகிய பொருட் சத்தியும், குண்டலினியாதல் பற்றி, `பாம்பு` என உருவகித்துக் கூறப்படும் சுத்த மாயையால் பலவகையாலும் வியாபிக்கப்பட்டு விளங்கும் அசுத்த மாயையும் பல புவனங்களும் ஆகும். ஆகவே, அதன் பெருமையை உணரமாட்டாத எளிய மக்கள் தங்கள் அஞ்ஞானமாகிய இருளைப் போக்கிக் கொள்ள வல்லவராவரோ!.
*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் – சூக்குமம் : பாடல்கள்: 05
பாடல் எண் : 1
எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளியவே ஓதின் சிவாயநம என்னும்
குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே.

பொழிப்புரை :  எவராலும் மறுக்க ஒண்ணாத உண்மையை எளிய மக்கள் மிக எளிதாக உடன்படாது மறுத்து வாதிடுவர். அவர் அவ்வாதத்தினை விட்டு அஞ்ஞான இருளை அகற்றும் ஞான ஒளியாகிய எங்கள் சிவபெருமானை நினைந்து உருகுகின்ற மனத்தை உடையவராய்க் கணிப்பார்களாயின. அப்பெருமான் அந்த, `சிவாயநம` என்னும் குளிகையினால் அவர்களது உயிரை மட்டுமன்று; உடம்பாகிய செம்பையே பொன்னாக்கி விடுவான்.
*************************************************
பாடல் எண் : 2
தெள்ளமு தூறச் சிவாய நமவென்(று)
உள்ளமு தூற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமு தூறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போற் சூழல்கின்ற வாறே.

பொழிப்புரை :  புறத்தில் தெளிவான அமுதமான கண்ணீர் கரந்து பாயவும், அகத்தில் அன்பு பெருகவும் சிவாயநம` என்று ஒருமுறை சொல்வதால் உண்டாகும் இன்பமாகிய அமுத வெள்ளத்தை உண்ண விரும்பாதவர்கள் பெருங்காற்றில் அகப்பட்ட மழைத்துளிபோல அடையும் இடம் அறியாது அலமருதல் இரங்கத்தக்கது.
*************************************************
பாடல் எண் : 3
சிவன் சத்தி சீவன் செறுமலம் மாயை
அவம் சேர்த்த பாசம் மலம்ஐந் தகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுககி லாவே.

பொழிப்புரை :  சூக்கும பஞ்சாக்கரத்தில் சிகாரம் முதலிய ஐந்தெழுத்துக்களும் முறையே சிவம், அருட் சத்தி, உயிர், திரோதான சத்தி, ஆணவ மலம்` என்னும் ஐந்தையும் குறிக்கும். (மாயேயம் மாயையில் அடங்க, மாயை கன்மங்கள் திரோதாயி வழிபட்டு அதனுள் அடங்க, திரோதாயியைக் குறிக்கு நகாரம் ஆணவம் ஒழிந்த மற்றை நான்கு மலங்களையும் குறிக்கும்.) ஆகச் சீவன் ஐந்து மலங்களிலும் நீங்கிச் சிவம் சத்திகளோடே சேர்ந்திருக்குமாயின், பயனில்லாத செயல்களில் செலுத்துகின்ற பாசங்கள் சிவனைச் சாராமாட்டா.
*************************************************
பாடல் எண் : 4
சிவனரு ளாய சிவன்திரு நாமம்
சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச்
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவம தகன்று பரசிவ னாமே.

பொழிப்புரை :  (சிவனுடையனவாகச் சொல்லப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் அவனது அருளேயாகலின்) அவனது திருப் பெயராகிய திருவைந்தெழுத்தும் அவனது அருளேயாகும். அதில் சிகாரம் முதலிய எழுத்துக்கள் மேற்கூறியவாறு, `சிவன், அருட்சத்தி, சீவான்மா, திரோதான சத்தி, ஆணவ மலம்` எனஅபவற்றைக் குறித்து நிற்குமிடத்து அவ்வெழுத்துக்கள் சிகாரம் முதலாக நின்று முத்திக்கு வழி யாகும். (ஆகவே `நகாரம் முதலாக நிற்பின் அஃது அத்தன்மையது ஆகாது` என்றதாயிற்று) அதனால், சிகாரம் முதலாகக் கொண்டு கணிக்கின், அவ்வாறு கணிப்பவன் பிறவியினின்றும் நீங்கிச் சிவனாவான்.
*************************************************
பாடல் எண் : 5
நமாதி நனாதி திரோதாயி யாகித்
தமாதிய தாய்நிற்கத் தாள்அந்தத் துற்றுச்
சமாதித் துரியந் தமதாகம் ஆக
நமாதி சமாதி சிவஆதல் எண்ணவே.

பொழிப்புரை :  நமாதி - `நம` என்பதை முதலாக உடைய தூல பஞ்சாக்கரம். திரோதாயி ஆகி நனவாதி - திரோதான சத்தி வசப்பட்டதாய்ச் சகல கேவலங்களில் நிகழும் சாக்கிரம் முதலிய அவத்தைகளை உண்டாக்கும். (இனி) சமாதித் துரியம் தமது அகம் ஆக-நின்மலாவத்தையே சீவர்களுக்கு உடம்பதாற் பொருட்டு தம் ஆதியாய் நிற்க - அப்பாஞ்சாக்கரம் சிவன் சத்திகளது வசமாதற் பொருட்டு தான் அந்தத்து உற்று முன் சொன்ன `நம` என்பது ஈற்றில் பொருந்த நம ஆதி சமம் சிவ ஆகி ஆதல் எண்ண - `நம` முதலுக்கு ஈடாகச் `சிவ` முதல் ஆவலைக் கருதுக.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா
 

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!