http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 4 May, 2013

திருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 29. சருவ வியாபகம் - பாடல்கள்: 22.


,
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:16: ஆகாசப்பேறு...................பாடல்கள்:010 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:17: ஞானோதயம்..................பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:18: சத்தியஞானானந்தம்...பாடல்கள்:009   
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:19: சொரூப உதயம்...........பாடல்கள்: 011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:20: ஊழ்................................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:21: சிவரூபம்......................பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:22: சிவதரிசனம்................பாடல்கள்:008 

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:23: முத்திபேதம் கருமநிருவாணம்.பாடல்கள்:002

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:24: சூனிய சம்பாடனை..........பாடல்கள்: 067

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:25: மோன சமாதி..................பாடல்கள்: 020

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:26: வரையுரை மாட்சி...........பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:27: அணைந்தோர் தன்மை.....பாடல்கள்: 022
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:28: தோத்திரம்.....................பாடல்கள்: 046 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:29: சருவ வியாபகம்...........பாடல்கள்: 022
*************************************************
தந்திரம் 9- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -029 
கூடுதல் பாடல்கள்  .........................................(364+022=386)

*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம் பாடல்கள்: 022
பாடல் எண் : 1
ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியுந் தனைஎய்தும்
சாயும் தனது வியாபகந் தானே.

பொழிப்புரை : ஆன்மா, பரமுத்தி நிலையில் விளைகின்ற சிவபோகத்தை நுகர்தலாகிய இஃது ஒன்றைத்தவிர, அந்தப் போகத்தைத் தருகின்ற சிவத்தைத் தனக்கு வேறாக வைத்து ஆராய்கின்ற அறிவையும், மாயா மலத்தின் காரியமாய்ப் பொருந்திய அதிசூக்கும, சூக்கும, தூல உடம்புகளைப்பற்றி, புறஞ்செல்லுதலையும் உடையதாகின்ற வரையில் அதனது இயற்கைத் தன்மையைத் தலைப்பட்ட வியாபக நிலை அதற்கு நிலைக்கமாட்டாது.
*************************************************
பாடல் எண் : 2
நானறிந் தப்பொருள் நாட இடமில்லை
வானறிந் தங்கே வழியுற விம்மிடும்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.

பொழிப்புரை : மெய்ப்பொருளை நம்மின் வேறாகத் தேடி அடையும் இடம், நான் அறிந்தவரையில் எதுவும் இல்லை. அதனை நாம் நம்மிலே அறிதல் எவ்வாறு` எனின், `பரவியோமம்` எனப்படும் திருவருளை முன்னே அறிந்து. நம் வழியை நாம் விட்டு, அதன் வழியில் நின்றால், மெய்ப்பொருள் விறகைக் கடைந்தவழித் தோன்றும் தீ, பின் அந்த விறகைத் தானி அழிப்பதுபோல. நம் அறிவிலே விளங்கிப் பின் `நாம்` என வேறு முனைத்து நிற்கும் தற்போதத்தை அழித்து, நம்மைத் தானாக்கிக் கொள்ளும். ஆகவே, கருவிக் கூட்டங்களை `நாம் அல்ல` என்று கண்டு கழித்து நாம் தனித்து நின்றவழி, முன்னெல்லாம் உயிர்ப்பு வடிவில் இருந்த அந்த ஒளி விளக்கு இப்பொழுது தானேயாய் விளங்கும். ஆகவே இம்முறையில் ஒருவன் அதனை அறிவானே ஆயின், அவன் அதனோடு ஒற்றித்துத் தனது செயற்கைத் தன்மையாகிய அணுத் தன்மையின் நீங்கித் தனது இயற்கைத் தன்மையாகிய வியாபக நிலைப்படுதல் கூடும்.
*************************************************
பாடல் எண் : 3
கடலிடை வாழ்கின்ற கௌவை யுலகத்(து)
உடலிடை வாழ்வுகண் டுள்ளொளி நாடின்
உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக்
கடலின் மலிதிரைக் காணலு மாமே.

பொழிப்புரை : ஆரவாரம் மிக்க கடலாற் சூழப்பட்ட உலகத்தில் உடலில் தங்கி வாழ்கின்ற ஆரவார வாழ்வின் உண்மையை ஆராய்ந்துணர்ந்தால், அந்த உடலிற்றானே தன்னோடு உடன் உறைகின்ற சிவானந்தத் தேனை கடலிடை நிரம்பப் புதிது புதிதாக எல்லையின்ற எழுந்து வருகின்ற அலைபோல்வதாகக் காண முடியும்.
*************************************************
பாடல் எண் : 4
பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட் டிகலிட மெல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்குரையாமே.

பொழிப்புரை : `கதிர், மதி, தீ` என்னும் பெருஞ்சுடர் மூன்றையும் அவை உலகிற்குப் பயன்படுவ ஆதலைத்தெரிந்து, தனக்கு உடம்பாகக்கொண்டு அந்த ஒளிப்பொருட்கட்கு ஒளியைத் தருகின்ற உள்ளொளியாய் அவற்றில் நிறைந்து நிற்கின்ற சிவனும் வியாபகப் பொருளாகிய ஆன்மாக்கள் ஒன்றுக்கொன்று மாறுபட அடையும் நிலைகளில் எல்லாம் தான் அருள் கூர்ந்து அவற்றின் அறிவுக்கு அறிவாய், அவற்றோடு உடனாய்ப் பலவாகின்றான்.
*************************************************
பாடல் எண் : 5
உறுதியி னுள்வந்த உன்வினைப் பட்டும்
இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ராமே.

பொழிப்புரை : முன் மந்திரத்தில் கூறியபடி சிவன் எல்லா உயிர் களோடும் உடனாய் நிற்பினும், மாயா காரியங்களில் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால் உளவாகின்ற வினைகளில் அகப்பட்டு உழன்ற போதிலும் முடிவில் தன் அடியில் வந்து, `அடைக்கலம்` என அடைந்தவர்க்கே பொன்போலப் பயன்படுவான். சிறியதிலும் சிறியதாய் விளங்குகின்ற ஒளிவடிவாகிய அவன், தன்னைப் பெற்றதனால் மேன்மை பெற்றவர்கட்கே எல்லையில்லா ஒளியாய், எங்கும் நிறைந்து விளங்குவான்.
*************************************************
பாடல் எண் : 6
பற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும்
மற்றவ னாய்நின்ற மாதவன் தானே.

பொழிப்புரை : பற்றப்படும் பொருள்களில் எல்லாம் மேலான பொருளாய், மேலான ஒளியாயும் உள்ள சிவன் அண்டம் முழுதும் நிறைந்து, `கதிர், மதி, தீ` என்னும் முச்சுடர்களாய்ப் புலப்படுவான். பிண்டத்தில் புருவ நடுவிலே தியானிக்கப்படும் பொருளாய் நிலைத் திருப்பான். பின்னும் அவ்வாறு தியானிப்போனும் தானேயாகின்ற தவ வடிவினனும் ஆவான்.
*************************************************
பாடல் எண் : 7
தேவனு மாகுந் திசைதிசை பத்துளும்
ஏவனு மாய்விரி நீருல கேழையும்
ஆவனு மாம் அமர்ந் தெங்கும் உலகினும்
நாவனு மாகி நவிற்றுகின் றானே.

பொழிப்புரை : இன்னும், முன் மந்திரத்திற்கூறிய பரஞ்சுடராகிய சிவன், எல்லாத் திசைகளிலும் அதுவதற்குத் தலைவனாய் நிற்கின்றான். அவைகள் உள்ள எல்லாப் பொருள்களுமாய் இருக்கின்றான்; ஏழு கடல்களால் சூழப்பட்ட ஏழு தீவுகளையும் ஆக்குபவனுமாகி, அவை அனைத்திலும் நிறைந்து அவற்றை நிலைக்கச் செய்பவனுமாய், அங்குள்ளாரது நாவில் அவையாய்க் கலந்து சொற்களைச் சொல்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 8
நோக்கும் கருடன் நொடிஏ ழுலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புரணவல் லானே.

பொழிப்புரை : (ஆகாயத்தில் இருந்து அனைத்துப் பொருளையும் காணும் கருடன் நம்மால் அறியப்பட்டது.) அதுபோலப் பரம வியோம மாகிய சிதாகாசத்தில் இருந்து கொண்டு ஏனை எல்லாப் பொருளையும் அறிந்தாங்கறியும் கருடன் சிவன் பின்பு அழிக்கப்படுவனவாகிய ஏழுலகங்களையும் இதுபொழுது அவனே காக்கின்றான். ஆகவே உலக முதல்வன் அவனே. ஆதலின், அவ்வுலகங்களில் உள்ள வினைகளையெல்லாம் நீக்குகின்ற, இயல்பாகவே பாசம் இல்லாத, எஞ்ஞான்றும், எவ்வாற்றானும் பிறப்பினுட்படாத கடவுளும் அவனே. பிறப்பு இறப்பு இன்மையால், போக்கும், வரவும் இவன் ஆகிலும், உயிர்களில் அவையேயாய்க் கலந்து நிற்றலால், அவற்றது போக்கு வரவுகளில் நீங்காது நிற்கவும் அவன் வல்லவனாவான்.
*************************************************
பாடல் எண் : 9
செழுந்சடை யன்செம்பொ னேஒக்கும் மேனி
ஒழிந்தன ஆயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்தில கேழினும் ஒத்துநின் றானே.

பொழிப்புரை : சிவன் திருமேனி கொள்ளும்பொழுது சிவந்த சடை, சொம்பொன்போலும் நிறம் இவைகளையுடையனவாகவே கொள்வான். ஏனைப் பொருள்களில் ஒன்றன் வடிவிலேயும் அவன் தோன்றானாகிலும் அவை அனைத்திலும் உடன் நிறைந்து நீங்காமலே நிற்கின்றான். ஆயினும் அவை பிறப்பதுபோல அவன் பிறப்பதில்லை. அவன் ஒடுங்கல் தோன்றல்கள் இல்லாதவனாயினும் அவைகளை யுடைய உலகத்தோடு ஒட்டி நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 10
புலமையில் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
நலமையில் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே.

பொழிப்புரை : எங்கள் தந்தையாகிய சிவபெருமான், வெறும் நூலறிவில் மட்டும் தோன்றுபவன் அல்லன்; தவத்தில் தோற்றஞ் செய்பவன். அப்பால் அத்தவத்தின் பயனாகப் பெறப்படுகின்ற நன்மையுடைய ஞானத்தில் இடையறாது தொடர்ந்து விளங்குபவனும் ஆவான். இனி, `இன்ன செயலுக்கு இன்ன பயன்` எனப் பண்ட மாற்றுப் போலக் கொண்டு வேதியர்கள் கூறுகின்ற காமிய கன்மங்களிலும் எங்கும் நிறைந்து வேதியர்கள் அவர்கட்குப் பயனளித்து வருகின்றான்.
*************************************************
பாடல் எண் : 11
விண்ணவ னாய்உல கேழுக்கும் மேல்உளன்
மண்ணவ னாய் வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவ னாய் அதன் தண்மையில் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை : சிவன், பராகாயத்தில் அனைத்துலகங்கட்கும் மேலேயும் இருக்கின்றான். அப்பொழுதே மிகக் கீழே உள்ள மண்ணில் திண்மையாய் உள்ளவனாயும், அதனைச் சூழ்ந்துள்ள நீரில் தண்மையாய் உள்ளவனாயும், இவ்வாறு எல்லாவற்றிலும் அதனதன் தன்மையாய் நிற்பதுடன், உயிர்களுக் கெல்லாம் வேறோர் அறிவாயும் எல்லாவற்றிலும் கலந்து நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 12
நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேல்என
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாமே.

பொழிப்புரை : சிவன், முன் மந்திரத்திற் கூறியபடி உலகத்தைக் கடந்து அப்பால் மேலும், கீழுமாய், உலகத்தில் எல்லாப் பொருளுமாய் வியாபித்து நிற்றலால் `மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்களை அதிட்டித்துக் காத்தல் படைத்தல்களைச் செய்பவனும் அவனே. அதனால், எல்லாப்பொருள்களின் முழுத்தன்மையும் அவனே.
*************************************************
பாடல் எண் : 13
புவனா பதி மிகு புண்ணியன் எந்தை
அவனேய உலகின் அடற்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறைஎன மாலுற்ற வாறே.

பொழிப்புரை : பெரியோர்கள் சிவனிடத்திலேயே காதல் மிக்கவர்களாய் அவனையே நோக்கி நிற்றற்குக் காரணம், `எல்லாப் புவனங்கட்கும் அதிபதி அவனே; புண்ணியத்தின் பயனாய்க் கிடைப்பவனும் அவனே, யாவர்க்கும் தந்தையும் இவனே; உலகத்தை வலிமை வாய்ந்த தலைமையோடு நடத்துவோனாகி அதனை நடத்துபவனும் அவனே; எண்ணித்தொகை கூறுதற்கு இயலாத அனைத்துயிர்களும் அவனே; ஆகலின் அவன் ஒருவனே கடவுள்` என உணரும் மெய்யுணர்வேயாகும்.
*************************************************
பாடல் எண் : 14
உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின் றியங்கிடும் வாயுவு மாய்நிற்கும்
கண்ணின் றிலங்கும் கருத்தன் தானே.

பொழிப்புரை : உயிர்களின் உடம்புள்ளிருந்து ஓவாது இயங்கி, உயிரை நிலைப்பிக்கின்ற பிராணனும், வானத்தில் இயங்கி உலகிற்குப் பல நலங்களை விளைவிக்கின்ற, அளவற்ற கதிர்களையுடைய பகலவனும், மண்ணில் ஒரு சிற்றிடமும் விலக்கின்றி எங்கும் இயங்கி வாழ்விக்கும் காற்றும், மற்றும் அனை்ததுப் பொருள்களுமாய் நிற்பவன் சிவன்` என்றால், உயிர்களின் அறிவினுள் விளங்கி, அவ்வறிவை அறியச் செய்பவனும் அவன்தானே? வேறுயாராய் இருக்கமுடியும்?
*************************************************
பாடல் எண் : 15
எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணில் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின் றுருக்கி ஓர் ஆயமும் ஆமே.

பொழிப்புரை : என் அறிவையும், எழுத்து அவ்வறிவின் வழி இன்பத்தையும் உண்டாக்குதல், அவையிரண்டும் இயற்றமிழில் அறிஞரால் ஓர் இனப்படுத்தி எண்ணப்பட்டன. (``எண் என்ப, ஏனை - எழுத்தென்ப``1 ``எண்ணெழுத் திகழேல்``2 ``எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்``3 என்பவற்றைக் காண்க.) இசைத்தமிழில் பண், திறம், (இன்னும் - திறத்திறம்) என்பனவும் அவ்வாறு ஓரினப்படுத்தி எண்ணப்படுவனவாம் இன்னோரன்ன பலவற்றை இனம், இனமாகப் படைத்த சிவபெருமானைக் கண்ணிலும், பொருள்களை உணரும் கருத்திலும் `அது` என்றும், `இது` என்றும் சேய்மைப் பொருளாகவும் அண்மைப் பொருளாகவும் தம்மின் வேறு வைத்து உணர்வார்க்கு அவன் அங்ஙனம் உணரும் உணர்வை, அவ்வுணர்வின் வழியே சென்று உணர்விற்கு உணர்வாய்த் தோன்றி அழித்து, `அவனே தாம் எண்ணும்படி ஒன்றாகியே நின்று, ஒப்பற்ற ஓர் ஊதியமும் ஆவான்.
*************************************************
பாடல் எண் : 16
இருக்கின்ற எண்டிசை அண்டம் பா தாளம்
உருக்கொடு தன்நடு ஓங்க இவ் வண்ணம்
கருக்கொடே எங்கும் கலந்துநின் றானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.

பொழிப்புரை : தோன்றல், நிற்றல், ஒடுங்கல்` என்னும் முத்தொழில்களில் நடுவணதாகிய நிற்றல் தொழிலுடையவாய் உள்ள உலகங்கள் அனைத்தும் தனது உருவத்திற்குள்ளே `இவ்வாறு அடங்கியிருக்க` எனச் சங்கற்பித்துச் சிவன் அவற்றில் நிறைந்து நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 18
அதுஅறி வானவன் ஆதி புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வான் நந்தி எங்கள் பிரானே.

பொழிப்புரை : சிவனது பெருமை, உபநிடதங்களில் `அது` எனப் பொதுவாகச் சுட்டியும், `சித்து` என வரையறுத்தலும் கூறப்படுதலும், எல்லாப் பொருட்கும் ஆதியாயினும், தான் அநாதீயேயாதலும், எந்த அளவையினாலும் அளந்தறியப் படாமையும், உயிர்கள் பல வற்றிற்கும் பொதுப்பட இடமாய் விரிந்து உலகம் முழுதிலும் வியாபகம் ஆதலும் ஆகும். இன்னும் அவனது பெருமையை எல்லாம் எங்களுக்குக் குருவாகிய நந்தி பெருமான்தான் அறிவார்.
*************************************************
பாடல் எண் : 19
நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே.

பொழிப்புரை : எங்கள் சிவன் ஐம்பூதங்களுடன், `ஒளி` எனத் தக்க மற்றும் முப்பொருள்கள் கூட எடடுப் பொருள்களாகிய வடிவினை உடையவன், `பராபரன் பிஞ்ஞகன்` என்பன போன்ற பெயர்களால் புகழப்படுபவன், எல்லா இடங்களும் அவனுக்கு இடங்களே எல்லாவற்றிற்கும் இறுதியாயினும் தனக்கு இறுதியில்லாதவன். அவனை யான் வாழ்த்துகின்றேன்.
*************************************************
பாடல் எண் : 20
தானே கடல்மலை ஆதியு மாய்நிற்கும்
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல்உயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.

பொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை. நூலைச் சிவனது முதன்மையோடு தொடங்கிய நாயனார் முடிவையும் அவனது முதன்மையோடு முடித்தமை நினைந்து இன்புறத் தக்கது.
*************************************************
பாடல் எண் : 21
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய் முப்ப துபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.

பொழிப்புரை : இது நூல் சிதையாமைப் பொருட்டு இதன் அளவை நூற்குள்ளே வரையறை செய்தது.
குறிப்புரை : ``தமிழ்`` என்பது தமிழால் ஆகிய பாடலைக் குறித்தது. இந்நூலின் பாடல் தொகை மூவாயிரம்` என்பதாம்.  `இந்நூற் பாடல்கள் அனைத்துமே `மந்திரம்` எனப் பெயரிடப்பட்ட போதிலும், சிறப்பாக மந்திரமாகவே அமைந்த பாடல்கள் முந்நூறு` என்றபடி. அவை நான்காம் தந்திரத்தில் எண்ணிக் கொள்ளற்பாலன. `எந்திரம்` எனப்படும் சக்கரங்களும் `மந்திரம்` என்றதனானே பெறப்பட்டன. அவை மிகச்சில ஆதலின், தொகை சொல்லப்படவில்லை. இங்ஙனமாயினும், `முந்நூறு மந்திரம்` என்றே ஒரு தனி நூலும் வெளி வந்துள்ளது.1
`உபதேசம்` என்பது ஓர் அதிகாரம். முப்பது பாடல்களுடன் முதல் தந்திரத்தில் இருத்தல் நன்கறியப்பட்டது. முந்நூறு மந்திரத்தை வேறு கண்டவர்க்கு, முப்பது உபதேசம் வேறு கிடைக்கவில்லை போலும்!.  ஈற்றடியில் ``மூன்றும் ஒன்றாமே`` என முடிபு கூறியது, `மந்திரம் உபதேசம்` - எனக் கூறியவற்றை மூவாயிரம் வேறு என மலையற்க - என மலைவு தீர்த்தது. ``செய்த`` `செய்தன` என அன் பெறா அகர ஈற்றுப் பன்மை வினைப் பெயர். இவை செயப்படு வினையாய் நின்றன. இதிலும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.  இங்ஙனம் நாயனார் பாதுகாப்புச் செய்தும், பிரதிகள் நன்கு போற்றாமையால் பாடங்கள் மிகத் திரிக்கப்பட்டும், பாடல்கள் இடம் மாற்றப்பட்டும் சொற்கள் இருமுறை, மூன்றுமுறை சேர்க்கப்பட்டும், சில பாடல்களை விடுத்தும், சில பாடல்களை. இடைச் செருகல்களாக மிகுத்தும் செய்யப்பட்டமை பாதுகாத்தவர்களது. ஊக்கக் குறைவால் நேர்ந்துள்ளதை உணர்ந்து கொள்ளுதல் அறிஞர்க்குக் கடனாய் உள்ளது.
*************************************************
பாடல் எண் : 22
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.

பொழிப்புரை : இது இறுதியில் வாழ்த்துக் கூறி நூலை முடிவு செய்தது. ``என் நந்தி`` என்றதனானே இது நாயனாரின் திருமொழியாதல் விளங்கும்.
*************************************************

ஒன்பதாம் தந்திரம் முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் முற்றுப் பெற்றது.  பத்தாந் திருமுறையாகிய திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் தெளிவுரையும் இம்மூன்றாம் தொகுதியுடன் முற்றும் பெற்றன. அன்புடன் கே எம் தர்மா.....

வாழ்க திருமந்திரம்! வளர்க சிவஞானம்!
திருமூல தேவநாயனார் திருவடிகள் வாழ்க! வாழ்க!

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!