http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 29 April 2012

திருமந்திரம்-தந்திரம்02-பதிகம்:21,22,23,24&25. 21.சிவநிந்தை கூடாமை (பாடல்:4); 22.குருநிந்தை கூடாமை(பாடல்:5); 23.மகேச்வரநிந்தை கூடாமை(பாடல்:6); 24.பொறைவுடைமை(பாடல்:2); & 25.பெரியாரைத் துணைக்கோடல்(பாடல்:6).





 

பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
======================================================= 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009 


இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்..................பாடல்கள்: 001 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்...........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:10: திதி..................................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:11: சங்காரம்........................................பாடல்கள்: 010 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:12: திரோபவம் ...................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:13: அநுக்கிரகம் .................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:14: கர்ப்பக் கிரியை ..........................பாடல்கள்: 040
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:15: மூவகைச் சீவ வர்க்கம்.............பாடல்கள்: 008 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:16: பாத்திரம்.......................................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:17: அபாத்திரம்  .................................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:18: தீர்த்த உண்மை......................,....பாடல்கள்: 006
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:19: திருக்கோயிற் குற்றம்...............பாடல்கள்: 005 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:20: அதோமுக தரிசனம்...................பாடல்கள்: 006
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:21: சிவநிந்தை கூடாமை................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:22: குருநிந்தை கூடாமை................பாடல்கள்: 005
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:23: மகேச்வரநிந்தை கூடாமை.....பாடல்கள்: 004 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:24: பொறைவுடைமை.....................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:25: பெரியாரைத் துணைக்கோடல் ...பாடல்: 006
====================================

(பாடல்கள்: 185 + 004 + 005 + 004 + 006 = 204 )
====================================

இரண்டாம் தந்திரம்- பதிகஎண்:21. சிவநிந்தை கூடாமை(பாடல்கள்:4)
பாடல் எண் : 1
தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளியுறு வார்அம ரர்பதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூசையின் கீழது வாமே. 

பொழிப்புரை :  யாவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருக்கோலத்தின் உண்மைகளை நூல்களாலும், நாட்டில் அமைந்த திருக்கோயில்கள், அவற்றில் நிகழும் விழாவகைகள் முதலியவற்றாலும் ஓர்ந்துணர்ந்து, அதனால் தெளிவுபெற்ற ஞானத்தை உடையராய் உள்ளத்தில் அன்புமிகப் பெறுவோர் பின்னர்த் தேவராவர். அவ்வாறு ஓர்ந்துணரவும், தெளியவும் மாட்டாத கீழ்மக்கள் அப்பெருமானை, எலும்பு, தோல், சாம்பல், வெண்டலை முதலியவைகளை உடையவனாய்ச் சுடுகாட்டில் ஆடுதல், தலையோடு ஏந்தி இரத்தல் முதலியவைகளையே நோக்கிச் சிறுதெய்வமாகக் கருதி இகழ்வார்களாயின், அச்செயல், கிளி ஒன்று தானே பூனையின் அருகுசென்று அகப்பட்டு நின்றது போல்வதாய்விடும்.
=================================================
பாடல் எண் : 2
முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
தளிர்ந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே. 

பொழிப்புரை :  `தேவர்` எனவும், `அசுரர்` எனவும் சொல்லப்படுவோர் பேராற்றல் உடையவர்போலச் சொல்லப்படினும், அவரெல்லாம் வினைவெப்பத்தில் அகப்பட்டு உயர்கின்றவர்களும், அழிகின்றவர்களுமேயாவர். அதனால், அவர் திரிபின்றி நிலைபெறும் உணர்வை அடைந்திலர். ஆகவே, தன்னை உணர்வாரது உணர்வில் அமுதம் கசிந்து ஊறுவதுபோல ஊறி நின்று இன்பம் பயக்கும் சிவபெருமானை நினைந்து உள்ளம் குளிர்பவர்க்கல்லது உண்மை ஞானத்தைப் பெறுதல் இயலாது.
=================================================
பாடல் எண் : 3
அப்பகை யாலே அசுரருந் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் பொன்றுப தாமே. 

பொழிப்புரை :  அசுரரும், தேவரும் அறியாமையாகிய பகை தம் உணர்விலே நின்று கெடுத்தலால் தம்முள் மிக்க பகைகொண்டு தம் வாழ்நாள் முடிவதற்கு முன்பே அழிந்தனர். ஆகவே, சிவபெருமானை உண்மையில் இகழும் கருத்தினரல்லாதவரும், அவனை இகழ்வார்க்கு அஞ்சித் தாமும் இகழ்வார் போல நிற்பினும் அவர் அழிவே எய்துவர்.
=================================================
பாடல் எண் : 4
போகமும் மாதர் புலவி யதும்நினைந்
தாகமும் உள்கலந் தங்குள ராதலின்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே. 

பொழிப்புரை :  வேதத்தை ஓதும் உரிமை பெற்றமையால் `வேதியர்` எனப் பெயர் பெற்றிருந்தும் சிலர், மகளிர் இன்பத்தில் பற்று நீங்காமையால், சிவபெருமானை வழிபட நினையாமல், பிற தெய்வங்களை வழிபடுதலில் முனைந்து நிற்பர்.
=================================================
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:22. குருநிந்தை கூடாமை(பாடல்கள்:5)
பாடல் எண் : 1
பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.

பொழிப்புரை :  கீழ்மக்களாயுள்ளார் ஏனைப் பெரியோரைப் பேணிக் கொள்ளாமை யேயன்றித் தம்மைப் பெற்ற தாய் தந்தையரையும் பேணமாட்டார். மற்றும் உறவினராய் உள்ளவரையும் அவர் மனம் நோகத்தக்க சொற்களைச் சொல்லி இகழ்வர்; தாய் தந்தையரையும், உடன் பிறந்தார் முதலிய சுற்றத்தாரையும் தக்கவாற்றால் பேணுதல் ஆகிய சான்றோர் நெறியில் நிற்பவரன்றி நல்லன பலவும் வேறு யாவர் பெறும் பேறாகும்!
=================================================
பாடல் எண் : 2
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே. 

பொழிப்புரை :  கற்புடை மகளிர், சிவனடியார்கள் தத்துவ ஞானம் உடையவர்கள் இவர்களது மனம் வருந்தும்படி அவர்தம் நெறிக்கு அழிவு செய்தவரது செல்வமும், வாழ்நாளும் ஓராண்டுக்குள்ளே அழிந்தொழியும். இஃது, எங்கள் நந்தி பெருமான்மேல் ஆணையாக, உண்மை.
=================================================
பாடல் எண் : 3
மந்திரம் ஒன்றே உரைசெய்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு
வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே. 

பொழிப்புரை :  மந்திரமாவனவற்றுள் ஒன்றையே உபதேசித்தவராயினும், அவரது மனம் நோவத் தீமைகளைச் செய்தவர்கள், இம் மண்ணுலகில் யாவரும் இகழ்ந்து ஒதுக்குகின்ற நாயாய் நூறுமுறை பிறந்து, பின்பு மக்களாய்ப் பிறக்கினும் புலையராய்ப் பிறந்து, இம்மை மறுமைகளில் யாதொரு பயனையும் எய்தாது வாளா இறந்தொழிவர்.
=================================================
பாடல் எண் : 4
சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே. 

பொழிப்புரை :  ஞான நெறியை உணர்த்துகின்ற ஞானகுருவின் திருமுன்பில், `பொய், குறளை, கடுஞ்சொல், பயனில சொல்` என்னும் தீய சொற்கள் எவர் வாய்வழியாக நிகழினும் உலகில் நன்னெறி அழிந்து, மெய்யுணர்வும் இல்லாதொழியும். தொன்றுதொட்டு வரும் உலகியல் துறைகளும், மெய்ந்நெறித் துறைகளும் மக்களால் மறக்கப்பட்டுப் பல சமயங்களும் கெட, நாட்டில் பஞ்சமும் உண்டாகும்.
=================================================
பாடல் எண் : 5
கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
நெய்ப்பட்ட பால்இள நீர்தயிர்தான் நிற்கக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே. 

பொழிப்புரை :   கன்மி ஞானிக்கு ஒப்பாதல் - அஃதாவது, ஞானிக்கு ஒப்பாகக் கருதி, ஞானகுரு இருக்கவும் அவனை விடுத்துக் கன்மியைக் குருவாகக் கொள்ளுதல், கையில் மாணிக்கம் கிடைத்திருக்கவும் அதனை எறிந்துவிட்டு, வெயிலால் வெதும்பிக் கிடக்கும் பரற்கல்லைக் கையில் எடுத்துச் சுமப்பவன் செயல்போலவும், கையில் நெய்யுள்ள பாலும், இளநீரும், தயிரும் இருக்க அவற்றை உண்ணாமல், பின்புதான் அழிதற்கு ஏதுவாகிய எட்டிப்பழத்தை முயன்று பெற்று உண்பவன் செயல் போலவும் ஆம்.
=================================================
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:23.மாகேசுரநிந்தை கூடாமை (பாடல்கள்:4)
பாடல் எண் : 1
ஆண்டான் அடியவ ரார்க்கு விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே. 

பொழிப்புரை :  சிவனடியார் உலகில் உள்ளாரில் யார்க்கு என்ன தீங்கு செய்கின்றனர்! அவர்கள் அறவுள்ளம் உடையார், இடுகின்ற பிச்சையை ஏற்று உண்டு போகின்றார்கள். ஆதலின், அவரிடத்து வெறுப்புக் கொண்டு இகழ்ந்து பேசியவர் அடைவது மிகக் கீழான நரகமே.
=================================================
பாடல் எண் : 2
ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாயிடும் நம்நந்தி யாணையே. 

பொழிப்புரை :  சிவனடியாரது உள்ளம் எவ்வாற்றாலேனும் நோகுமாயின். அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக நாடும், அதன் சிறப்புக்களும் அழிதலேயன்றி விண்ணுலக வேந்தன் ஆட்சி பீடத் துடன் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்தொழியும். இஃது எங்கள் நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.
=================================================
பாடல் எண் : 3
ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
போன போழுதே புகுஞ்சிவ போகமே. 

பொழிப்புரை :  `சிவஞானியை நிந்திப்பதே நலம்` என்று கருதி நிந்திப்பவனும், அவ்வாறன்றி, `வந்திப்பதே (வணங்குவதே) நலம்` என்று அறிந்து வந்திப்பவனும் முறையே நல்வினையின் நீங்கித் தீவினையை எய்துபவனும், தீவினையின் நீங்கி நல்வினையை எய்துபவனுமாவர். ஏனெனில், சிவஞானிகட்கு அடியவரான பின்பே எவர்க்கும் சிவபெருமானது திருவருள் கிடைப்பதாகலின்.
=================================================
பாடல் எண் : 4
ஞானம் விளைந்தவர் நம்பிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. 

பொழிப்புரை : சிவஞானம் கிடைக்கப்பெற்ற சிவனடியார்களை விரும்பி வழிபட்டால், எவ்விடத்தும் அரசர்கள் தம் படையுடன் வந்து வணங்க, சிறுபயன்களைத் தருகின்ற தேவர்க்கெல்லாம் முதல்வ னாகிய சிவபெருமானை அவன் அருளால் அடைந்து பேரின்பம் எய்துதல் கூடும்.
=================================================
இரண்டாம் தந்திரம்-பதிக எண்:24. பொறையுடைமை(பாடல்கள்:2)
பாடல் எண் : 1
பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே. 

பொழிப்புரை :  பற்றறாதவர் உள்ளத்தில் பல்லி ஒன்று உள்ளது; அஃது அவரது மூக்கையும், நாக்கையும் பற்றிக்கிடந்து, எந்த நேரமும், எவற்றையேனும் படபடவென்று சொல்லிக் கொண்டிருக்கின்றது. பற்றுக்களைத் துடைத்தவரது உள்ளத்திலோ பெரிய பொறுமை என்னும் நீர் வற்றாது நிறைந்து நிற்கின்றது.
=================================================
பாடல் எண் : 2
வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும்
கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத இலயமுண்டாமே.

பொழிப்புரை :  காட்டில் ஆடுகின்ற கூத்தனுக்கு அளவு கடந்த பொறுமையே பொருளாக அமைவது. அதனால், மாகேசுரர்களே, நீவிர் வாழும் இடத்திற்கு உள்ளும், புறம்பும் இயன்ற அளவில் பலவகையாலும் உள்ளத்தைப் பொறுமையோடு இருக்கப் பழக்கிப் பக்குவப்படுத்துங்கள்.
=================================================
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:25. பெரியாரைத் துணைக்கோடல் (பாடல்கள்:6)
பாடல் எண் : 1
ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
கூடவல் லாரடி கூடுவன் யானே. 

பொழிப்புரை :  சிவபிரானை அடைய விரும்பிய யான், பத்தி காரணமாக, அவன் வெளிப்படும் இடங்கட்கெல்லாம் ஓடியும், அவனையே புகழ்ந்து பாடியும் இன்னோரன்னவற்றால் அவனை அடையவல்லாரது அடிநிழலைப் பிரியாது சேர்ந்திருப்பேன்.
=================================================
பாடல் எண் : 2
தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
நீயிடர்ப்பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
போமிடத் தென்னொடும் போதுகண் டாயே. 

பொழிப்புரை :  நெஞ்சே, நீ உன்னை அகப்படுத்துகின்ற துன்பத்தில் அகப்பட்டுத் தீயில் வீழ்ந்த தளிர்போல் வாட்டமுற்றாலும் சிவபெரு மானிடத்து அன்பு வைத்திலை. இவ்வாறு அத்துன்பத்திலே இருந்து நீ என்ன செய்யப் போகின்றாய்? நான் போகின்ற இடத்திற்கு நீயும் என்னோடு வா.
=================================================
பாடல் எண் : 3
அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே.

பொழிப்புரை :  அறிவுடைய பெரியோர், தேவர்க்குத் தலைவ னாகிய சிவபிரானை அடையும் வழிகளை யெல்லாம். ஆராய்ந்து; அவற்றானே அவனை அடைவர். பின்னர் அவனேயாய் நிற்பர், ஆதலின், தாமும் நன்னெறியில் உறைத்துநின்று, பிறரையும் அவ்வாறு நிற்கச்செய்து உலகிற்கு நயம்புரிகின்ற பெரியாருடன் கூடுதலே பேரின்பம் எய்துவதற்கு வழியாகும்.
=================================================
பாடல் எண் : 4
தாழ்சடை யான்றன் தமராய் உலகினிற்
போர்புக ழால்எந்தை பொன்னடி சேருவார்
வாயடையா உள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறி கூடலு மாமே. 

பொழிப்புரை :  நீண்ட சடையை உடைய சிவபெருமானுக்கு அடி யவராயினமையினால் உலகம் முழுதும் போர்த்த புகழை உடையவ ராய், அப்பெருமானது அழகிய திருவடியையன்றிப் பிறிதொன்றையும் அடைய விரும்பாதவராகிய அவரிடத்துச் சென்று சேர்ந்து உள்ளம் தெளிவடைபவரிடத்துச் சிவபெருமான் அருளுடையவனாவன். அதனால், அவன் அருள் புரியும் நெறி வாய்க்கப் பெற்று. அவனோடு ஒன்றுதலாகிய பேற்றினையும் பெறுதல் கூடும்.
=================================================
பாடல் எண் : 5
உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையா ரழலான் பதிசென்று புக்கே
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலமென் றாரே. 

பொழிப்புரை :  சிவபெருமான் அடியவர் யாவரும் தம்மைப் போலும் அடியாருடன் கூடியே சிவபுரத்தை அடைந்து அதன் வாயிலில் நின்றனர். அப்பொழுது அவ்வாயிலில் உள்ள கணங்கள் சிவபெருமானிடம் சென்று, `அடியவர் குழாமாக வந்துள்ளனர்` என்று விண்ணப்பிக்க, அப்பெருமான், `அவர்கள் உள்ளே வருவாராக` எனத் திருவாய் மலர்ந்தருள, அவ்வருளிப்பாட்டினை அக் கணங்களால் உணர்ந்து, `முறையோ` என்று ஓலமிட்டுச் சென்று தம் குறை தீர்ந்தனர்.
=================================================
பாடல் எண் : 6
அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன் உணர்ந் துழி யிருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே. 

பொழிப்புரை :  எல்லாம் வல்லவனாகிய சிவபெருமானை உணர்த்தும் நூலறிவினால் வருகின்ற பெருமையை உடைய கலைஞன், காலக் கழிவின்கண் பிறவிக் கடலைக் கடந்து சிவபெருமான் திருவடியை அடைவான். அந்நூலறிவைத் தனதாக்கிக் கொள்ளும் அனுபூதிமான், அப்பொழுதே சிவனைப் பெற்று, உலகம் உள்ளளவும் வாழ்வான். ஆகையால் சிவமே பெறும் திருநெறியொழுக்கம் வல்ல சிவானுபூதிச் செல்வரோடேயான் சேர்ந்திருக்கின்றேன் (தி.8 திருச்சதகம்).
இரண்டாம் தந்திரம் மூலமும் உரையும் முற்றிற்று.
================================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரமாம் திருவாசகத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருவாசகரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!