http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday, 2 May 2012

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:8 தியானம் (பாடல்கள்:19)







 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை............................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
=======================================================(046+019=065)

மூன்றாம் தந்திரம்-பதிகஎண்:8. தியானம்(பாடல்கள்:19)
பாடல் எண் : 1
வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே. 

பொழிப்புரை :  தாரணை இறுதிக்கண் சொல்லியவாறு, `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று` என்னும் பதினைந்துடன் புருடன் ஒன்று கூடப் பதினாறையும் தியான முறைப் படி அவ்வவ் வாதாரங்களில் வைத்துத் தியானித்தல், கருவி கரணங்களினின்று நீங்கிநிற்கும் சாதன யோகமாகவே முடியும். அதற்குமேல் ஒளி வடிவாகிய சத்தியையும், அதற்குமேல் அருவாய் நிற்கும் சிவத்தையும் தியானித்தலே சாத்திய யோகமாம். ஆகவே, தியான யோகம், சாதன சாத்திய வகையால் இங்ஙனம் இருகூறாய் நிற்கும் என்க.
=======================================
பாடல் எண் : 2
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே. 

பொழிப்புரை :  கண் முதலிய பொறியறிவின் சேர்க்கையால் நம்மைப் பண்படுத்தி நின்ற முதற்பொருள் ஒன்று உளது. அஃது, எல்லையற்ற பேரொளியாயினும், அதனை நாம் உள் நாக்கினை ஒட்டி உள்ள சிறிய துளை வழியில் சென்று காண்கின்ற ஒரு சிற்றொளியாகத் தரிசிக்கச் செய்தவாற்றால், `பாம்பு` எனப்படுகின்ற குண்டலி சத்தி நம்மை உய்வித்தது வியக்கத்தக்கது.
=======================================
பாடல் எண் : 3
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

பொழிப்புரை :  புறத்தில் உள்ளவர்களால் பார்க்க இயலாத கண்ணில் (திறவாது மூடியிருக்கின்ற நெற்றிக் கண்ணில்) மின்னல் போலத் தோன்றிய ஒளியைப் பின் அக்கண் நிரம்பக் குறைவின்றிப் பார்த்து, அதனொடு உணர்வு ஒன்றியிருப்பின், பிற முயற்சிகளுள் யாதும் செய்யாமலே அந்த ஒளியை நன்கு தரிசித்திருக்கலாம்.
=======================================
பாடல் எண் : 4
ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே. 

பொழிப்புரை :  உலகர் பலரும் அழிபொருளாகிய உடம்பை உணர்கின்றார்களே யன்றி, அதனோடு வேறறக் கலந்து நிற்கின்ற அழிவில் பொருளாகிய உயிரை அறிதல் இல்லை. இனி, ஒரு சிலர் உயிரை அறியினும், அவ்வுயிர்க்கு உயிராய் நிற்கின்ற சிவனை அறிகின்றார்களில்லை. இனிச் சிலர், `உயிர்க்குயிராய்ச் சிவன் ஒருவன் இருக்கின்றான்` என்று உணரினும், `அவன், ஆஞ்ஞைத் தியானத்தால் காணத்தக்கவன்` என்று உணரமாட்டாதவராகின்றனர். இன்னும் ஒரு சிலரோ, `அவ்வாறு காணத் தக்கவன்` என்று உணர்ந்தும் ஒரு நொடி நேரமாயினும் அந்தத் தியானத்தைத் தலைப்பட எண்ணாமலே யிருந்தொழிவர்!
=======================================
பாடல் எண் : 5
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே. 

பொழிப்புரை :  மேல் மாடத்தில் ஏற்ற வேண்டுவதாகிய விளக்கை நன்றாக ஏற்றிய பின்னும், மாளிகையை அழிக்க அதன் ஒரு பக்கத்தில் பற்றியுள்ள `சினம்` என்னும் நெருப்பை முற்ற அணைத்துவிட்டுக் கீழ் நிலையில் உள்ள மற்றைய விளக்குகளும் அணைந்து போகாதபடி எல்லாவற்றிலும் திரியை ஒரு சேரத் தூண்டி வைத்தால், முன்பு மேல் மாடத்தில் ஏற்றப்பட்ட விளக்கு உண்மையில் ஏற்றப்பட்டதாகும்.
=======================================
பாடல் எண் : 6
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :  நெடுங்காலம் யோகம் செய்யினும், மேற்கூறிய தியான நிலையை அடைய முயல்பவர் அரியர். அந்நிலையை அடைந்தால், சிவன், கண்ணாடியுள்ளே இருக்கின்ற பொருள் இனிது விளங்குதல்போல, உயிர்க்குயிராய் நிற்கின்ற நிலை இனிது விளங்கும்.
=======================================
பாடல் எண் : 7
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.

பொழிப்புரை :  ஒருவன் ஆஞ்ஞைத் தியானம் செய்தால் துன்பம், இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும் முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாதொழியும். பின்பு அவன் சிவனேயாய் விடுவான்.
=======================================
பாடல் எண் : 8
நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.

பொழிப்புரை :  ஆஞ்ஞைத் தியானத்தை முறைப்படி செய்து அதனால் இன்புற்றிருப்பவர்க்கு இவ்வுடம்பு தரும் பயன் இவ்வின்ப நிலையேயாம். ஆகவே, இப்பயனை இவ்வுடம்பு தாராதொழியின், அதனால் பயன் வேறில்லை.
=======================================.
பாடல் எண் : 9
மணிகடல் யாஅனை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.

(
இதற்குப் பின் உள்ள ``கடலொடு மேகம்`` என்னும் பாடல் நாயனார் திருமொழியன்று.)

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

பொழிப்புரை :  `மணி நா ஓசை, கடல் ஓசை, யானை பிளிறும் ஒலி, குழல் இசை, மேகத்தின் முழங்கு குரல், வண்டு, தும்பி இவற்றின் ஒலி, சங்கநாதம், முரசின் முழக்கம், யாழ் இை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்னும் ஒலிகள் போன்ற மெல்லிய ஒலிகள் பத்தினையும் ஆஞ்ஞைத் தியானத்தை அடைந்தவர் கட்கல்லது, மற்றையோர்களுக்குக் கேட்டல் கூடாததாகும்.
=======================================
பாடல் எண் : 10
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே. 

பொழிப்புரை :  தியான யோகத்தால் இறைவனை உணரமாட்டா தவர்க்கு அவனது இயல்பும், தேவர் கூட்டம் முதலிய பிற எல்லாப் பொருள்களும், அவரது உணர்வைத் தம்பால் ஈர்த்து அடக்கி அவரது உணர்வேயாய் நிற்கின்ற, மேற்கூறிய, ``மணி கடல் யானை`` முதலிய ஓசைகளாகவே தோன்றும். அவ்யோகத்தால் அவனை உணர வல்லவர்க்கு அவ்வாறின்றி, ஈசன் இயல்பு முதலிய யாவும், ``அவ் வோசையின் வாசனை`` எனச் சொல்லத்தக்கவாறு, அவ்வோசை நீங்கிய பின்னும் நிலைபெறுவதொரு நுண்ணிய ஓசையாய் விளங்கும்.
=======================================
பாடல் எண் : 11
நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவில்நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே. 

பொழிப்புரை :  தத்துவ நிலையிலும் சத்தியும் சிவமும் இருப்பது நாத தத்துவத்திற்கு அப்பாலாகலின், தியான யோகத்தின் முடிவு நிலையும் மேற்கூறிய பத்து வகை ஓசைகள் அடங்கிய இடமேயாம். அதனால், யோகியரது நோக்கம் அவ்விடத்திற் செல்வதே.
=======================================
பாடல் எண் : 12
உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே. 

பொழிப்புரை :  ஆதார மூர்த்திகள் வெளிப்படும் இடமாகிய ஆறு ஆதாரங்களுள்ளும் உள்ளொளியாகிய பிரமன் முதலிய ஐவரையும் தியானிக்கும் தியானத்தால், புகழப்படுகின்ற ஒளியை உடைய, ஆயினும், சிவனைத் தலைப்பட ஒட்டாத - மயக்கம் நீங்க, அதன்பின், மேம்பட்டவராக மாயோனை முதலில் வைத்து இறுதிக்கண் நாதமூர்த்தியைக் கூட்டி எண்ணும் ஐவருள் நாதமூர்த்தியும் ஒடுங்கக் காணின், பரமசிவனது திருவடியை அடைதல் கூடும்.
=======================================
பாடல் எண் : 13
பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியில்ஓர் ஓசனை நீள்இது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே. 

பொழிப்புரை :  மேற் (பா. 568-573) கூறிவந்த இடங்களுள் முடிவாகிய பள்ளியறையில் பகலன்றி இரவே இல்லை. இவ்வொளி யிடத்தை அடைய நினைத்தால் இஃது ஓரு யோசனை தூரத்தில் உள்ளது. இதனை அடைந்துவிட்டால், வீட்டை எக்காலத்தும் தீப்பற்றிக் கொள்ளாமலும் காப்பாற்றலாம். இப்பள்ளியில் சென்றவர் விழித்தெழுந்து வெளிப்போத வேண்டுவதில்லை.
=======================================
பாடல் எண் : 14
கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே. 

பொழிப்புரை :  இயமம் முதலாகத் தான் மேற்கொண்ட நோன்புகள் சிறிதும் குறைவுறாதவாறு அவற்றில் உறைத்து நின்று, பிராணா யாமத்தால் சுழுமுனை நாடி வழியே சென்று ஆஞ்ஞையை அடைந்த யோகிக்கு, உடம்பு, `அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்` என்னும் மூன்று பகுதிகளிலும் செம்மையுற்று, நிற்க வேண்டிய முறையில் சிறிதும் பழுதின்றி நிற்கும் ஆதலால், அஃது ஊழிக் காலம் வரினும் நீங்காத தன்மையைப் பெற்றிருக்கும்.
=======================================
பாடல் எண் : 15
அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே. 

பொழிப்புரை :  (அக்கினி மண்டலம் முதலாகக் கூறிய மண்டலங்கள் மூன்றுக்கும் சிவபெருமான் ஒருவனே முதல்வனாக அறிந்து, எவ்விடத்தும் அவனையே தியானித்து அவனாகின்ற யோகமே உண்மை யோகம்; அது சத்தி நிபாதர்க்கல்லது கூடாது. அது நிற்க.) அம் மூன்று மண்டலங்கட்கும் அக்கினி முதலிய மூவரையே முதல்வராகக் கருதி ஆங்காங்கு அவ்வவரைத் தியானித்து அவரா கின்ற பொது முறைமையும் உண்டு. (அது சத்திநிபாதரல்லாதார்க்கு உரியதாம். மூன்று மண்டலங்கட்கும் மூவர் முதல்வராகிவிடின், கலாம் விளையுமன்றோ எனின்,) மூவரையும் முதல்வராக எண்ணுவோர், ஒருவர் மற்றை இருவர்க்கும் தோழமை யுடையவராக, மூவரிடை இணக்கமே கொள்ளுதலின், கலாம் விளையாதாம்.
=======================================
பாடல் எண் : 16
இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே. 

பொழிப்புரை :  ஒவ்வொரு பயனைத் தருபவர் ஒரோவொரு தேவராக நினைந்து அவர் அனைவரிடத்தும் ஓடி இளைக்கின்ற நெஞ்சத்தைத் தனது சரக்காக உடைய இருட்டறையாகிய உடலி னுள்ளே தனித்தனி முதன்மை பெற்றுத் தோன்றுகின்ற மண்டலங்கள் மூன்றிலும் பொருந்தி ஊடுருவிச் செல்வதாகிய பெரிய நூல் அவ்வாறு அவற்றை ஒன்றுபடக் கோத்துச் செல்லுமாயின், உயிர் மேற்கூறிய இளைப்பை அகன்று, மார்கழி நீராட்டுப்போல இன்ப வெள்ளத்தில் மூழ்கிச் சிறக்கும்.
=======================================
பாடல் எண் : 17
முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே. 

பொழிப்புரை :  பிராணாயாமம் முதலியவற்றை முறைப்படி பயில வல்லவர்க்கு அவற்றின் பயனைத் தருபவன், தேவ தேவனாகிய சிவபெருமானே; (அவன் வழி நிற்போராகிய ஏனைய தேவர் அது மாட்டார்.)
=======================================
பாடல் எண் : 18
நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே. 

பொழிப்புரை :  சிவயோகியரேயாயினும், அனாகதத்தளவிலே நிற்பவர் ஆன்ம நிலையையே உணர்வர்; சிவ நிலையை உணர மாட்டார்.
=======================================
பாடல் எண் : 19
அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 

பொழிப்புரை :  யோகத்தை முறைப்படி பயின்ற அடியவரே, அறிவில்லாத பொருளாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அறிவுருவாய் நின்று, அதனால், வலிய மாயையின் மயக்கத்தையும் வென்று, இறைவனது திருவருளால், வேறு நில்லாது அவனது தன்மையையே தமது தன்மையாகப் பெற்று நிற்கின்ற ஞானத்தை நிலைபெற உணர்ந்தோராவர்.
=======================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:7 தாரணை (பாடல்கள்:09)







பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்..................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்..............பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை...........................பாடல்கள்: 009
=======================================================(037+009=046)
மூன்றாம் தந்திரம்-பதிகஎண்:7. தாரணை(பாடல்கள்:9)

பாடல் எண் : 1
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே. 

பொழிப்புரை :  கோணுதல் (புலன்வழி ஓடுதல்) உடையதாய் இருந்த மனம், பிரத்தியாகாரத்தில் அதனை விடுத்து ஒருவழிப் பட, அதனை அவ்வழியில் முன்போல மீளாதவாறு குறிக் கொண்டு தடுத்து, சுழுமுனை வழியாக மேலே செல்கின்ற வாயுவே பற்றுக்கோடாக மேற்செலுத்தி, ஆஞ்ஞையை அடையு மாற்றால் அவ்விடத்திலே செய்யும் தியானத்தால் ஐம்பொறிகள் செயலற்றிருக்கும் நிலையை எய்தினவர்கட்கு, அந்நிலைதானே பிறவி வரும் வழியை அடைக்கின்ற உபாயமாகிவிடும்.
=======================================
பாடல் எண் : 2
மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே. 

பொழிப்புரை :  மேருமலையின் உச்சியினின்றும் வானீர் அருவி எப்பொழுதும் வீழ்ந்துகொண்டிருக்கும். வில் வடிவாய் அமைந்த அம்பலத்தில் ஒளிவடிவாகிய சிவன், எல்லையில் இன்பத்தைத் தரும் ஆனந்தத் திருக்கூத்தினை எப்பொழுதும் ஆடிக் கொண்டே இருப்பான். இவ்விரண்டையும் நான் நீண்ட சுழுமுனை நாடி வழியாகச் சென்று கண்டேன்.
=======================================
பாடல் எண் : 3
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே. 

பொழிப்புரை :  கருவை ஏற்றுக் குழவியாக மாற்றித் தருகின்ற பெண், மேல் மாடத்தில் எதிர்நோக்கி இருக்கின்றாள். அவளுடன் சேர வேண்டிய ஆடவனோ அடித் தலத்தில் உறங்கிக் கொண்டிருக் கின்றான். அவனை நன்றாக விழித்தெழச் செய்து அப் பெண்டுடன் கூடப்பண்ணினால், நல்ல பாலகன் பிறப்பான்; இதற்கு என் குருவின்மேல் ஆணை.
=======================================
பாடல் எண் : 4
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே. 

பொழிப்புரை :  பூரக இரேசகம் செய்து கும்பிக்கப்பட்ட பிராணவாயு கீழ்ப்போகாதவாறு எருவாயை அடைத்து அதனால் போகாது நின்ற வாயுவை மூலாதாரம், சுவாதிட்டானம் முதலாக மேல் நோக்கிப் போகச்செய்து, ஆஞ்ஞைக்குக் கீழ் உள்ள இடை ஆதாரங்கள் ஒவ்வொன்றிலும் மனத்தை நன்றாகப் பொருந்த வைத்து, நீர் மடையில் கொக்கு, தான் வேண்டுகின்ற மீன் வரும் வரையில் அதனையே குறிக்கொன்டு நோக்கிச் செயலின்றியிருத்தல் போல, அங்குக் கருதப்படுகின்ற கடவுளரால் அவ்வாதாரயோகம் கைவருமளவும் அவரை வழிபட்டிருப்பவர்கட்கு, யோகநிலை முற்றும் கைவரும் காலம் வரையில் இறவாமலே இருத்தலும் கூடும்.
=======================================
பாடல் எண் : 5
கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.

பொழிப்புரை :  காலத்தால் கலந்திடப்பட்ட உயிருடன் அக்காலம் கலந்து நிற்கும் இயல்பை ஆராய்ந்து அறியின், அது பிராண வாயுவின் திட்பமேயாம். ஆகவே, அந்த உயிர் பிராண வாயுவை அடக்கும் முறையை அறிந்துகொள்ளுமாயின், உயிர் நிற்பது போலவே அதனைக் கலந்து நிற்கின்ற காலமும் ஓடாது ஒரு நிலையாய் நிற்கும்.
=======================================
பாடல் எண் : 6
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே. 

பொழிப்புரை :  யாவரிடத்திலும் உள்ளமாகிய கருவூலத்தில் ஒரு பெருஞ்செல்வம் உள்ளது. ஆயினும், அக்கருவூலத்திற்கு வாயிலாய் உள்ள சுழுமுனை வழியைத் திறக்க மாட்டாதவர் அச்செல்வத்தை எய்தப் பெறார். அவ்வழியைத் திறக்க விரும்புவோர் பிராண வாயுவை அங்குக் கும்பகம் செய்து திறந்து கும்பித்த அவ்வாயுவை உள்ளே பாய்ச்சுவர். அது செய்யாதோர் மேற்கூறிய செல்வத்தைப் பெறுதற்குத் தம் அறிவை அக்கருவூலத்தின் புறத்தே மோதவிட்டு அல்லற்படுவர். கருவூலத்தைத் திறவாமலே அதிலுள்ள செல்வத்தைப் பெற முயலுபவன் அதனைப் பெறாது பாழுக்கு உழைப்பவனாதலேயன்றி, `அறிவிலி` என அறிவுடையாரால் இகழவும் படுவான்.
=======================================
பாடல் எண் : 7
வாழலு மாம்பல காலம் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தற்
பாழி பெரியதோர் பள்ளி அறையே.

பொழிப்புரை :  சுழுமுனை வழியை ஊடறுத்துச் செல்ல வல்ல தாகிய பிராணவாயுவைப் புறத்துப் போகாதவாறு தடுத்து அச்சுழு முனை வழியுட் பாய்ச்சினால் ஏழு பலகணிகளையும், `தலைவாயில், கடைவாயில்` என்னும் இரண்டு பெரு வாயில்களையும் உடைய பாழ் வீடு இன்பமாகக் கிடந்து உறங்கத் தக்க நல்ல பள்ளியறை யாய்விடும். அப்பொழுது அதில் ஆதாரங்களாகிய கட்டிலிற் கிடந்து பல காலம் இன்புற்றிருக்கலாம்.
=======================================
பாடல் எண் : 8
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.

பொழிப்புரை :  ஒன்றும் அறியாத மாணவனே! உடம்பினுள் நிறைந்திருக்கின்ற பத்து வாயுக்களில் இயங்கும் வாயுக்கள் ஐந்து வீணாய்ப் போய்விட்டால், நீ விழித்திருந்தும் என் செய்ய மாட்டுவாய்! கழிந்ததற்கு இரங்கி நிற்பவனேயாவாய். ஆகையால், பிராணா யாமத்திற்குக் கூறிய முறையைக் கடைப்பிடித்துப் பிராண வாயு மேலேறுதற்கு வழியை உண்டாக்குபவர்கட்கு, மனமாகிய குரங்கை ஆதாரங்களாகிய கோட்டையை விட்டுப் புறத்தே குதித்து ஓடாதபடி நிற்கச் செய்தலும் கூடும்.
=======================================
பாடல் எண் : 9
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே. 

பொழிப்புரை :  தாரணையை மேற்கூறிய பாவனையளவில் செய்யாது, தத்துவ ஞானத்தைப் பெற்று அதன் வழிச் செய்யின், அஃது இறைவனோடே ஒன்றி நிற்பதாகும்.
=======================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.