http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 31 March, 2012

திருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:07 (பாடல்:10) இளமை நிலையாமை.








பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

விநாயகர் வணக்கம்...............................................................பாடல்கள்: 001
பாயிரம். பதிக்க வரலாறு.......................................................பாடல்கள்: 039
முதல் தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்.....................பாடல்கள்: 056
முதல் தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு .....................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு ....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்.............................பாடல்கள்: 030
முதல் தந்திரம்:பதிக எண்:05: யாக்கை நிலையாமை.....பாடல்கள்: 025
முதல் தந்திரம்:பதிக எண்:06: செல்வம் நிலையாமை....பாடல்கள்: 009
முதல் தந்திரம்:பதிக எண்:07: இளமை நிலையாமை......பாடல்கள்: 010
======================================================(176+010=186)
பதிகம் எண் :07. இளமை நிலையாமை (பாடல்கள்:10)

பாடல் எண் : 01
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.

பொழிப்புரை : நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண்ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.
****************************************************

பாடல் எண் : 02
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே. 

பொழிப்புரை : மக்கள் பிறந்தபின் சில ஆண்டன்றிப் பல ஆண்டுகள் கழியினும், சிவபெருமானை அறிதலைக் கடனாகக் கொண்டு முயன்று அறிகின்றவர் யாரும் இல்லை. அவ்வாற்றால் இதுகாறும் நீடுசென்ற காலங்கள் இனியும் நீடுசெல்லுமாயினும், அவர் அவனை அறியமுயல்வாரல்லர்.
****************************************************
பாடல் எண் : 03
தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே. 

பொழிப்புரை :சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிகின்ற இளமைப் பருவம், கடைசியில் மிக நுணுகி முடிந்துவிட்ட பின்பு செயல்கள் யாவும் செய்தற்கரியனவாய் ஒழியும். (யாதொன்றும் செய்ய இயலாது என்பதாம்.) ஆதலால், நன்கு இயங்கத்தக்க இளமை உள்ளபொழுதே சிவபெருமானது பெருமையை ஆய்ந்துணர்ந்து உள்ளத்திற் கொள்ளுங்கள்.
****************************************************
பாடல் எண் : 04
விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே. 

பொழிப்புரை : முன்னெல்லாம் என்னை இளமங்கையர் கரும்பைப் பிழிந்து பயனாகக் கொண்ட அதன் சாறுபோலப் பெரிதும் விரும்புவர். இப்பொழுதோ அவர்கட்குக் கரும்புபோல் நின்ற யானே காஞ்சிரங்காய் போல (எட்டிக்காய்போல) நிற்கின்ற நிலையையும் காண்கின்றேன்.
****************************************************
பாடல் எண் :05
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. 

பொழிப்புரை :ஒன்றாய் நின்ற வாழ்க்கைக் காலம், `குழவி, இளமை, முதுமை` என்னும் பருவ வேறுபாட்டால் முத்திறப்பட்டு ஒவ்வொன்றாய் பலவும் கடந்தொழிதலைக் காட்சியிற் கண்டு வைத்தும், உலகர் அவற்றை நினைகின்றிலர். (எனக்கோ அக்காலக் கழிவினால் பேரச்சம் உண்டாகின்றது.) அதனால், நான் இந்நிலவுலகையே அன்றி இதற்குமேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் ஊடறுத்துக் கடந்து அப்பால் நிற்கின்ற சிவபெருமானது திருவடி என்னைத் தன்கீழ் வைத்திருந்தும், பிறிதொன்றை விரும்பாமல் அதனையே விரும்புவேன்.
****************************************************
பாடல் எண் : 06
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே. 

பொழிப்புரை :நாள்தோறும் காலையில் துயில்விட்டு எழுந்த மக்கள், மீண்டும் நாள்தோறும் மாலையில் துயிலுதலும், இவ்வாறே அவர்தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் கழிந்து முடிதலும் போதும். (இனியும் இவை நிகழ வேண்டுவது என்னோ!) சிவபெருமான் இவ்வாறு அவர்களை இவ்விரண்டனுட் படுத்துத் துன்புறுத்துகின்ற முனிவினனாயினும், தன்னை மிக நினைத்த பலர்க்கு இன்பத்தைத் தந்துள்ளான்.
****************************************************
பாடல் எண் :07
பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

பொழிப்புரை :நூலால் தைக்கும் நுண்ணூசிபோலாது, சணற்புரியால் தைக்கின்ற பருவூசிகள் ஐந்தும் ஒரு சணற்பைக்குள் இருக்கின்றன. அவை பருவூசியாயினும் பறக்கும் தன்மை வாய்ந்த யானைகளாம். அத்தன்மையவான அவை மெலிவடையு மாயின், அவை தங்கியுள்ள பையும் பறக்கின்ற தன்மையை உடையதாகிவிடும்.
****************************************************
பாடல் எண் : 08
கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. 

பொழிப்புரை :திருமாலும், பகலவனும் உலகத்தை அதன் உள்ளி ருந்தே அளக்கின்றதை உலகர் சிறிதும் நினைக்கின்றிலர். நினைப் பாராயின், அவ்விருவரும் வீடுபேற்றிற்கு உரியவரையும், பிறப்பிற்கு உரியவரையும் முறையே முப்பதுயாண்டு அகவையிலும், அறுபதுயாண்டு அகவையிலும் இவ்வுலகத்தினின்றும் பிரிக்கின்றவராவார்.
****************************************************
பாடல் எண் : 09
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 

பொழிப்புரை :பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற நிறைமதி, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந்தும், `இளமை நிலையாது` என்பதைக் கீழ்மக்கள் நினைக்கின்றார்கள் இல்லை. (அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால்) அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத்துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.
****************************************************
பாடல் எண் : 10
எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. 

பொழிப்புரை :மக்களுக்கென்று பொருந்திய நூற்றியாண்டின் எல்லைக்கு இடையே கூற்றுவன் வந்து அதனை அறுத்துச் செல்லுதலைப் பலர் அறியாது வாழ்ந்து, அக்கூற்றுவன் வந்தபொழுது துயருற்றமையை நான் எனது வாழ்நாளில் பன்முறை கண்டிருக்கின்றேன்; ஆதலால், வாழ்தல் பொருந்திய நாளில் இளமை நீங்கும் முன்பே அது பொருந்தி நிற்கின்ற நாட்களில் சிவபெருமானைப் பண்ணினால் பாடித் துதியுங்கள்.
****************************************************
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத் தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!