பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
=======================================================
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
=======================================================
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்.................பாடல்கள்: 001 இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்...........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:10: திதி..................................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:11: சங்காரம்........................................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:12: திரோபவம் ...................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:13: அநுக்கிரகம் .................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:14: கர்ப்பக் கிரியை ..........................பாடல்கள்: 040
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:15: மூவகைச் சீவ வர்க்கம்.............பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:16: பாத்திரம்.......................................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:17: அபாத்திரம் .................................பாடல்கள்: 004 =========================================(பாடல்கள்: 152 + 008 + 004 + 004 = 168 )
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:15. மூவகைச்சீவவர்க்கம்(பாடல்கள்:8)
பாடல் எண் : 1
விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.
பொழிப்புரை : எல்லா உயிர்களும் `விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகையுள் அடங்கி நிற்கும். அம்மூவகையினருள் விஞ்ஞானகலர் நான்கு வகையினர்; பிரளயாகலரும், சகலரும் தனித்தனி மும்மூன்று வகையினர்; ஆக அனைவரும் பத்து வகையினராவர்.
=================================================
பாடல் எண் : 2
விஞ்ஞானர் கேவலத் தாராது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசுரம் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.
தஞ்ஞானர் அட்டவித் தேசுரம் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.
பொழிப்புரை : மேற்கூறியோருள் விஞ்ஞானகலர் நால்வராவார், `ஆணவமலத்தில் அழுந்தாத அவ்வளவில் நிற்போரும், அட்ட வித்தியேசுரபதவி, சத்தகோடி மகாமந்திரங் கட்குத் தலைவராம் பதவி இவற்றைப் பெற்றோரும், ஞானம் முதிரப் பெற்றோரும், அம்முதிர்ச்சியால் ஆணவமலம் பெரிதும் நீங்கப்பெற்ற முத்தரும்` என இவராவர்.
=================================================
பாடல் எண் : 3
இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட் டுருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட் டுருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.
பொழிப்புரை : இனிப் பிரளயாகலர் மூவராவார், `அபக்குவரும், பக்குவரும்` என இருதிறப்படும் நிலையில் பக்குவர், `சுத்தவித்தையில் நின்று அசுத்தமாயா புவனங்களைக் காவல் செய்பவரும், குணதத்துவத்தில் நின்று பிரகிருதிமாயா புவனங்களைக் காவல் செய்பவரும், எனத் தனித்தனி நூற்றெண்மராம் உருத்திரர்களாவர். எனவே, இவ்விருவரோடு, பெத்தராகிய அபக்குவரும் கூடப் பிரளயாகலர் மூவராகின்றனர். இனிச் சகலராவார் ` ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும்மலமும் உடையவரே.
=================================================
பாடல் எண் : 4
பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.
பொழிப்புரை : சகலரும், `அபக்குவர், பக்குவர்` என இருதிறப் பட்ட நிலையில் பக்குவர், `சாதகரும், சீவன்முத்தரும்` என இரு வகையினர் ஆவர்.
=================================================
பாடல் எண் : 5
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.
பொழிப்புரை : இயற்கையில் அகலராய் நில்லாது, தவமாகிய செயற்கையால் அகலராய் நிற்பார் ஒன்பது வகைப்படுவர். அவரும், `விஞ்ஞானகலர், பிரளயாகலர்` என்னும் பெயரைப் பெறுவர். அவ்வொன்பதின்மராவர், விஞ்ஞானகலருள் அபக்குவர் ஒழிந்த நால்வரும், பிரளயாகலருள் அபக்குவர் ஒழிந்த, `உருத்திரர், மால், அயன், இந்திரன், பிறகடவுளர்` என்னும் ஐவருமாவர்.
=================================================
பாடல் எண் : 6
வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியே
தஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்.
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.
தஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்.
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.
பொழிப்புரை : சகல
வருக்கத்தினர் வெவ்விய ஞானமாகிய சீவபோதத்தால் செய்துகொண்ட வினைகளில் சில
நல்வினை காரணமாக மக்களுடம்பைப் பெற்றுப் பூலோகத்தில் வாழ்ந்து, அங்கும்
அந்தச் சீவபோதத்தால் செய்த கன்மங்களில் சில நல்வினை காரணமாகச்
சுவர்க்கலோகத்தில் தேவராய் இன்பந்துய்த்துப் பின் எம் ஞானம் போல்வதாகிய
மெய்ஞ்ஞானத்தைத் தலைப்பட்டு, அது முதிராமையால் இடையீடுபட்டுப் பதமுத்தி அபரமுத்திகளில் நின்று, முடிவில் மெய்ஞ்ஞானம் முதிரப்பெற்றுச் சிவத்தோடு இரண்டறக் கலத்தல் உள்ளதே.
=================================================
பாடல் எண் : 7
ஆணவந் துற்ற அவித்தா நனவற்றோர்
காணிய விந்துவாம் நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோர்க்க வரன்றே
சேணுயர் சத்தி சிவதத்வ மாமே
காணிய விந்துவாம் நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோர்க்க வரன்றே
சேணுயர் சத்தி சிவதத்வ மாமே
பொழிப்புரை : ஆணவத்தால் மிகுவிக்கப்பட்ட அறியாமையில் நிகழும் சாக்கிரம் முதலிய அவத்தைகளைக் கடந்தவர்க்கே, நாதம், விந்து முதலிய எல்லாத் தத்துவங்களும் தெளிவாய் விளங்கும். ஏனெனில், ஆணவமும், அதுவழியாகக் கன்ம மாயைகளும் ஆகிய அவற்றுட் கட்டுண்டு நின்றவர் பொருட்டன்றோ அவ்விந்து நாதம் முதலிய தத்துவங்கள் தோன்றுகின்றன!
=================================================
பாடல் எண் : 8
சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டோரே.
அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டோரே.
பொழிப்புரை : ஐவகை மலங்களையும் முற்றக் கெடுத்துச் சிவமானவரே முடிந்த பயனைப் பெற்ற வல்லுநர். அதனால், அவமே
பரமுத்தியாகிய சிவசாயுச்சத்தைப் பெற்று என்றும் இன்புறுவர். இனி
வியப்பைத் தருவனவாகிய தத்துவங்களின் இயல்பை ஆராய்ச்சியால் உணர்கின்றவர்
பாசஞான பசுஞானங்களின் நீங்கினாராயினும், அதன் பின்னர் அவற்றைத் தெளிய உணருங்காலத்தே பதிஞானம் எய்தி வீடுபெறுவர்.
=================================================
இரண்டாம் தந்திரம்- பதிக எண்:16. பாத்திரம்(பாடல்கள்: 4)
பாடல் எண் : 1
திலமத் தனையே சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்
நிலமத் தனைப்பொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே.
பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்
நிலமத் தனைப்பொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே.
பொழிப்புரை : கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னேயாயினும் அதனைச் சிவஞானம் கைவரப்பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன்பயனாக எண்பெருஞ் சித்திகளையும், பதமுத்தி அபரமுத்திகளையும், பரமுத்தியையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல நின்று யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலமத்தனைப் பொன்னைக் கொடுப்பினும், அது யாதும் பயன் தாராமையேயன்றி, ஞானம் குறைதற்கு ஏதுவாயும் விடும்.
=================================================
பாடல் எண் : 2
கண்டிருந் தார்உயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.
கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.
பொழிப்புரை : உலகத்தில்
உணர்வுடையார் சிலரே உயிர்கள் அனைத்தையும் ஒவ்வொரு கால எல்லையில் கூற்றுவன்
கொண்டு போதலை மனத்துட் கொண்டார்கள். பின்னும் தன்னை உட்கொண்டவரது உயிரைத்
தான் தன்னுட்கொள்ளும் குணம் உடையவனும், நன்னெறியாகிய
ஞானநெறியில் சென்றவர்மாட்டு அருள்மீக்கூர்கின்றவனும் ஆகிய சிவபெருமானை
அந்நன்னெறியிலே சென்று உணர்ந்தார்கள். அவர் மேன்மக்களா தலன்றியும், `தேவர்` எனவும் போற்றப்படுதற்கு உரியராவர்.
=================================================
பாடல் எண் : 3
கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிடாத இடிஞ்சிலு மாமே.
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிடாத இடிஞ்சிலு மாமே.
பொழிப்புரை : நான் சிவபெருமானது திருவடியைக் கருவில் இருந்தபொழுதும் மறந்திலேன், பிறந்து வாழ்கின்ற இப்பொழுதும் அதனை மெய்யன்போடே நான் தேடுகின்றேன். அதனால், அத் திருவடி எனக்கு நெய்விட்டு ஏற்றாது இயல்பாகவே ஒளிவிடும் விளக்காகும்.
=================================================
பாடல் எண் : 4
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவின செய்யும் இலங்கிழை யோனே.
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவின செய்யும் இலங்கிழை யோனே.
பொழிப்புரை : விளங்குகின்ற மெய்ந்நூலை உணர்ந்தவன், `ஆகற்பாலன ஆகுமேயன்றி அழியா; அழியற்பாலன அழியுமேயன்றி அழியாதொழியா; நீங்குவன நீங்குமேயன்றி நில்லா; வருவன வருமேயன்றி நீங்கா` என்பதனை உணர்ந்து, ஒன்றையும் தானே காணாது, அவை அனைத்திற்குங் காரணனான சிவன் காட்டியதைக் கண்டு, அவன் அருளாணையால் ஏவிய செயல்களையே செய்திருப்பான்.
=================================================
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:17. அபாத்திரம் (பாடல்கள்:4)
பாடல் எண் : 1
கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.
பொழிப்புரை : சிவநெறி ஒழுக்கமும், தவமும் இன்மையால் உயர்வு பெறாத மக்களை வேடமாத்திரத்தால் வழிபட்டுத் தானம் செய்வது, வறட்டுப்
பசுவைப் பிறவி மாத்திரத்தால் வணங்கி உணவளித்துப் பாலைக் கறந்து பருக
நினைத்தலோடு ஒக்கும். இனித் தானத்தை உயர்ந்தோரை அறிந்து செய்யாமல்
எவரிடத்தும் செய்தல், ஒரு பயிரைக் காலம் அறிந்து செய்யாது, எக்காலத்திலும் செய்தலையும் ஒக்கும்.
=================================================
பாடல் எண் : 2
ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே.
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே.
பொழிப்புரை : பொருளைத் தானம் செய்தல், யோக நெறியில் இயம நியமங்களாகச் சொல்லப்படும் தவிர்வன செய்வன அறிந்து அந் நிலைக்கண் உறைத்து நிற்கும் உரனுடையோர்க்கேயாம். அவ் வாறன்றி, அவ்வுரனிலார்க்குச் செய்தல் பெருங்குற்றமாம் என்பதை உணர்மின்கள்.
=================================================
பாடல் எண் : 3
ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசர்க்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தூடணம் கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.
தோமாறும் ஈசர்க்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தூடணம் கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.
பொழிப்புரை : குற்றம் நீங்குதற்கு நிமித்தனாய சிவபிரானுக்கும், சிவகுரவர்க்கும், சிவயோகியர்க்கும் குற்றம் கற்பித்து இகழ்பவன் பின்விளைவதை அறியான். அவன் பஞ்ச மாபாதகனிலும் பெரும் பாதகன். அதனால், அவன் பின்னர்ப் பெருநரகில் வீழ்வான். இகழ்ந்து நிற்கும் அவன் பின்னொரு ஞான்று நல்லறிவைப் பெற்று அவர்களைப் புகழ்ந்து வழிபடுவானாயின், முன் செய்த பாதகத்தினின்றும் நீங்கி நரகம் புகாதொழிவான்.
=================================================
பாடல் எண் : 4
மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே.
அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே.
பொழிப்புரை : `தலைவனே, சிவபெருமானே` என்று அவனது நாமத்தைச் சொல்லிக் கைகூப்பி அவனை நினைத்து வணங்கித் தானம் வாங்க அறியாதவர்க்கு, நிலத்தளவும், மலையளவுமான பெரும் பொருளைத் தானமாகக் கொடுத்தாலும் அப்பொருளால் பயன் பெறாது, ஈந்தோனும் ஈயப்பட்டோனும் (ஏற்போனும்) ஆகிய இருவரும் மீளாத நரகக் குழியிலே வீழ்வர்.
=================================================