http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday, 2 April 2012

திருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:21: அன்புடைமை (பாடல்கள் :10)



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

விநாயகர் வணக்கம்...............................................................பாடல்கள்: 001
பாயிரம். பதிக்க வரலாறு.......................................................பாடல்கள்: 039
முதல் தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்.....................பாடல்கள்: 056
முதல் தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு .....................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு ....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்.............................பாடல்கள்: 030
முதல் தந்திரம்:பதிக எண்:05: யாக்கை நிலையாமை.....பாடல்கள்: 025
முதல் தந்திரம்:பதிக எண்:06: செல்வம் நிலையாமை....பாடல்கள்: 009
முதல் தந்திரம்:பதிக எண்:07: இளமை நிலையாமை......பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:08: உயிர் நிலையாமை...........பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:09: கொல்லாமை.....................பாடல்கள்: 002
முதல் தந்திரம்:பதிக எண்:10: புலால் மறுத்தல்.................பாடல்கள்: 001
முதல் தந்திரம்:பதிக எண்:11: பிறன்மனை நயவாமை.....பாடல்கள்: 003
முதல் தந்திரம்:பதிக எண்:12: மகளிர் இழிவு......................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:13: நல்குரவு................................பாடல்கள்: 005
முதல் தந்திரம்:பதிக எண்:14: அக்னி காரியம்.....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:15: அந்தணர் ஒழுக்கம்............பாடல்கள்: 014
முதல் தந்திரம்:பதிக எண்:16: அரசாட்சி முறை.................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:17: வானச் சிறப்பு......................பாடல்கள்: 002
முதல் தந்திரம்:பதிக எண்:18: தானச் சிறப்பு.......................பாடல்கள்: 001
முதல் தந்திரம்:பதிக எண்:19: அறஞ் செய்வான் சிறப்பு...பாடல்கள்: 009
முதல் தந்திரம்:பதிக எண்:20: அறஞ் செயான் திறம்........பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:19: அன்புடைமை......................பாடல்கள்: 010
=====================================================(269+010=279)
முதல் தந்திரம்: 27-பதிகங்கள்
பதிகம் எண் :21.அன்புடைமை  (10பாடல்கள்)

பாடல் எண் : 1
அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 

பொழிப்புரை :  இதன் பொருள் வெளிப்படை.
**************************************************
பாடல் எண் : 2
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

பொழிப்புரை :  ஏனை அன்பினும் சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பின் பெருமையை நான் அறிந்தவாற்றால், என் உள்ளத்தில் சிறந்திருப்பது அந்த அன்பே.
**************************************************
பாடல் எண் : 3
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்பொன் மணியினை எய்தவொண் ணாதே.

பொழிப்புரை :  மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றல், வேனிலில் ஐந்தீ நாப்பண் நிற்றல் முதலிய துணைச்செயல்களைச் செய்து உடம்பை ஒறுத்தாராயினும், முதற் செயலாகிய அன்பு செய்தல் இல்லாதார் என் தலைவனாகிய சிவபெருமானை அடைதல் இயலாது.
**************************************************
பாடல் எண் : 4
ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே. 

பொழிப்புரை :  சிவபெருமானிடத்துப் பேரன்பு உள்ளவரே அவனை முற்றப் பெறுவர். சிறிது அன்பு உடையவர் அவனது அருளைப் பெறுவர். அன்பே இல்லாது குடும்ப பாரத்தை உடையவராய் இருப்பவர் பிறவிக் கடலையே காண்பவராய், கொடுமை நிறைந்த வழியிற் சென்று, கொங்கு நாட்டை அடைந்தவர்போல் ஆவர்.
**************************************************
பாடல் எண் : 5
என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே. 

பொழிப்புரை :  உலகீர், நீவிரும் எனது அன்பு போன்ற அன்பைப் பெருக்கிச் சிவபெருமானைத் துதியுங்கள். நீவிர் முன்னே அதனைச் செய்யுங்கள்; அவன் பின்னே உங்கட்கு அவ்வன்பு பெருகுமாறு வெளிப்பட்டுத் தனது அருள் எனக்குக் கைவந்தது போல உங்கட்கும் கைவரச் செய்வான்.
**************************************************
பாடல் எண் : 6
தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
யானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

பொழிப்புரை :   வாய்ப்புடைய வழியில் தேன் ஒழுகுகின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் யான் என்றும் ஒரு பெற்றியனாகும்படி எனது அன்பில் நிலை பெற்றுள்ளான். அவன் பிறர் தன்னை ஒருமுறை ஒருபெயரால் துதிப்பினும் அத்துதி பழுதுபடாதவாறு என்றேனும் ஒருநாள் வான்வழித் துணையாய் நின்றருளுவான்.
**************************************************
பாடல் எண் : 7
முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்தன் அகலிடத் தானே.

பொழிப்புரை :  தனது உலகத்திலேயே விளங்கி நிற்பவனாகிய சிவபெருமான், துன்பத்தையே மிக உடையதாகிய இவ்வுலக வாழ்க்கையில், அத்துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் அடைதற் பொருட்டு `அன்பு` என்னும் பண்பினையும் படைத்து வைத்துள்ளான். அவ்வாறு அன்பை முன்னதாகவும், இன்பத்தை அதன் பின்னதாகவும் வைத்துள்ள அம்முதல்வனது அருளை அறிந்து, அவனிடத்தில் உலகர் அன்புசெய்கின்றாரில்லை.
**************************************************
பாடல் எண் : 8
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவஎன் றேத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. 

பொழிப்புரை :  கருத்தில் ஒளிரும் பொன்னொளியாகிய சிவ பெருமானை உளத்திற் கொண்டும், புறத்தில் வைத்து வணங்கியும், `இறைவனே` என்று துதித்தும், அன்பினால் அவனை அவனது அரிய அருளைத் தருமாறு வேண்டினால், தேவர் தலைவனாகிய அவன் அங்ஙனம் வேண்டுவார்க்கு அவர் விரும்பியவற்றைக் கொடுப்பான்.
**************************************************
பாடல் எண் : 9
நித்தலுந் துஞ்சும் பிறப்பையுஞ் செய்தவன்
வைத்த பரிசறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று
நச்சியே அண்ணலை நாடகி லாரே. 

பொழிப்புரை :  எவ்வுயிர்க்கும் உறக்கமும், விழிப்பும் நாள்தோறும் நிகழுமாறு செய்தவன் அங்ஙனம் செய்த குறிப்பை அறியாதார் நிற்க, அறிந்தவர் தாமும் உலக ஆசையையே உள்ளத்தில் கொள்கின்றனர். அத்தலைவனை விரும்பி, அவனையே தமக்குப் பெருமானாக நினைக்கின்றிலர்.
**************************************************
பாடல் எண் : 10
அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. 

பொழிப்புரை :   உலகத்தோற்றத்திற்கு முன்னும், உள்ளவனாயும் ஞானிகட்கும் முதற் குருவாயும் உள்ள இறைவன் உயிர்களின் அகத்தே அன்புருவாயும், புறத்தே பல குறிகளாயும் இருக்கின்றான். முடிவாக அவன் அன்பினுள்ளே விளங்கிப் பிறவாற்றால் அறியப் படாதவன் ஆவன். ஆதலால், அன்பில் நிற்பவர்க்கே அவன் உறுதுணையாவான்.
**************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத் தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!