http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday, 20 October 2012

திருமந்திரம்-தந்திரம் 06: பதிகம் எண் :07, 08 & 09. அருளுடைமையில் ஞானம் வருதல், அவ வேடம் & தவ வேடம்- பாடல்கள்: 010, 006 & 004




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
ஆறாம் தந்திரம்:பதிக எண்:01: சிவகுரு தரிசனம்..............பாடல்கள்: 016
ஆறாம் தந்திரம்:பதிக எண்:02: திருவடிப்பேறு....................பாடல்கள்: 015 
ஆறாம் தந்திரம்:பதிக எண்:03: ஞாதுரு ஞான  ஞேயம் .....பாடல்கள்: 009
ஆறாம் தந்திரம்:பதிக எண்:04: துறவு ....................................பாடல்கள்: 010
ஆறாம் தந்திரம்:பதிக எண்:05: தவம்............................................பாடல்கள்: 007
ஆறாம் தந்திரம்:பதிக எண்:06: தவ தூடணம்.......................பாடல்கள்: 013
ஆறாம் தந்திரம்:பதிக எண்:07:அருளுடைமையின் ஞானம்வருதல் பாடல்கள்:010
ஆறாம் தந்திரம்:பதிக எண்:08: அவ வேடம்.........................பாடல்கள்: 006
ஆறாம் தந்திரம்:பதிக எண்:09: தவ வேடம்.............................பாடல்கள்: 004

==========================================
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -06
கூடுதல் பாடல்கள்  (070+010+006+004= 090)

ஆறாம் தந்திரம்:பதிக எண்:07:அருளுடைமையின் ஞானம்வருதல்-பாடல்கள்:010
ஆறாம் தந்திரம்:பதிக எண்:08: அவ வேடம்........................பாடல்கள்: 006
ஆறாம் தந்திரம்:பதிக எண்:09: தவ வேடம்.........................பாடல்கள்: 004
=============================================

ஆறாம் தந்திரம்-7. அருளுடைமையின் ஞானம் வருதல்-பாடல்கள்:10
பாடல் எண் : 01
பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.

பொழிப்புரை :  (இதன் பொருள் வெளிப்படை)
==============================================
பாடல் எண் : 02
தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகர் திரிவார்
அவிழும் மனமும் ஆதி யருளும்
தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவ மாமே.

பொழிப்புரை :  `சேர மண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் தமிழ்வழங்கும் மண்டலம் ஐந்திலும், மிகப் பரந்த ஞானத்தை உணர்த்துவார் போலப் பிறநாட்டவர் புகுந்து திரிவார்கள். ஆயினும், அம்மண்டலம் ஐந்திலும், `உயிர்களின் அன்பு, இறைவனது அருள்` என்னும் அவ்விரண்டுமே பொருளாக விளங்குகின்றன.
==============================================
பாடல் எண் : 03
புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்
தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே.

பொழிப்புரை :  உலக வாழ்க்கையில் `நல்வினை, தீவினை` என்று இருவினைகளின் தோற்றமும், பயனுமே உள்ளன. அத்தோற்றம், பயன் என்பவற்றை அவை நிகழுங்காலத்தே தெளிய அறிபவர் சில ஞானியரே, அதனால், நீவிர் அந்த ஞானியர் வழிநின்று அவற்றைக் கருதியுணர்ந்து, அவ்வினைகளையும் அடியோடு போக்கி, அவற்றிற்கு அப்பால் இறைவன் இருக்கின்ற இடத்தை ஆராய்ந்தறியுங்கள்.
==============================================
பாடல் எண் : 04
முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.

பொழிப்புரை :  அடியேனுக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்தருளிய சிவன், இருவினை நீங்கிய காலத்து அங்ஙனம் நீங்கப் பெற்றார்க்கு யாதானுமோராற்றல் கண்முன் நின்றே அருளை வழங் குவன். வினையில்லாத நன்மை பொருந்திய குழாத்தினர்க்கு உயிர்க்குயிராய் இருந்தே அருளை வழங்குவன். யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அவ்வருள் நிலையினின்றும் வழுவாதவாறு பாதுகாப்பன்; அப்பாதுகாப்பின் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவான்.
==============================================
பாடல் எண் : 05
சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூடிற் சிவலோக மாமே.

பொழிப்புரை :  சிவனது அருளாலே சிலர், தேவர் பதவியை வேண்டின் அவற்றையும் பெறுவர். சிலர் அதனால் மக்களுடம்பில் நின்றே தெய்வங்களோடு ஒத்த ஆற்றல் பெற்று விளங்குவர். எனினும், சிவனது அருளால் சிறப்பாக வினை நீக்கம் உண்டாதலால், சிவனது அருள் ஒருவர்க்கு உண்மையாகக் கூடிற்று என்றால், அதன் பயனாக அவர்க்குச் சிவலோகமே கிடைக்கும்.
==============================================
பாடல் எண் : 06
புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவ ராவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.

பொழிப்புரை :  அற வடிவினனும், எம் தந்தையுமாகிய சிவபிரானது இரு திருவடிகளை அடைந்ததனாலே, இருளை நீக்கி ஒளிரும் விளக்குப் போல்வதாகிய ஞானம் எனக்கு உண்டாயிற்று. இல்லையேல் உண்டாகமாட்டாது. யாவராயினும் மக்களாய்ப் பிறப்பதோ அல்லது தேவராய்ப் பிறப்பதோ சிவனருள் வாய்க்கப் பெற்றபோதேயாம்.
==============================================
பாடல் எண் : 07
காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.

பொழிப்புரை :  `உடம்பு` என்னும் நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கைவன்மையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செல்லச் செலுத்துதலினால் வழியறியாது மயங்குகின்ற உயிர்கள் சிறிதே உணர்வு பெற்றுச் சிவன்மேற் செல்லும் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப் பெற்றால், அங்ஙனம் அதனைப் பெற்றவரது குழாமாகிய தேரின்மேல் ஏறிச் சீவன் சிவனை அடைந்து அவனாய் விடும்.
==============================================
பாடல் எண் : 08
அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.

பொழிப்புரை :  `சரியை, கிரியை, யோகம்` என்னும் இவற்றின் பயனாகச் சிவலோகவாசிகளாய் அங்குத்தோன்றினும் அங்ஙனம் தோன்றினோர் ஞானத்தைப் பெறுதற்கு அவ்வுடம்பொடு நின்று அங்கே அரிய தவத்தைச் செய்ய விரும்புவர். அத்தவத்தின் பயனாக ஞானத்தைப் பெற்றுச் சிவனடியையும் சேர்வர், அதற்குச் சிவனது அருளை அவர் முன்னர்ப் பெறுதலுடையவரேயாவர்.
==============================================
பாடல் எண் : 09
கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.

பொழிப்புரை :  சூரியனைக் கண்ட சூரிய காந்தக்கல் நெருப்பு வடிவாய் நெருப்பை உமிழும். சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக்கல் முத்துப்போலும் நீர் வடிவாய் நீரை உமிழும். பெருமை பொருந்திய கண் ஆடி எதிர்ப்பட்ட வழியின் வடிவாம். சிவனை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட உயிர்கள் அந்தச் சிவன் வடிவேயாம்.
==============================================
பாடல் எண் : 10
நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல
வீடு மளவும் விடுகின் றிலேனே.

பொழிப்புரை :  நாட்டில் உள்ளார் பலரோடும், மற்றும் எனக்கு உற்றாராய அவரோடும் அளவளாவி, `எங்கள் சிவபெருமான் யாண்டுளன்` என்று தேடுவேன்; அத்தேடுதலுக்கு அவன் அகப்படாதொழியான் ஆதலின், அவன் அகப்பட்ட இடத்தில் `சிவபெருமான் கிடைத்தான்` என்று மகிழ்ந்து அவனோடு சேர்வன். சேர்ந்தபின் என் உயிர் பிறவிடத்தன்றி அவனது திருவடியிலே சென்று சேர்தற் பொருட்டு இந்த உடம்பு அழியும் வரையில் அவனைவிடாதே பற்றிக்கிடப்பேன்.
==============================================
ஆறாம்தந்திரம்-8. அவவேடம்-பாடல்கள்: 06
பாடல் எண் : 01
ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.

பொழிப்புரை :  முயலாது வைத்து வயிறு வளர்த்தலையே பயனகாகக் கருதித் தவத்தவரது பலவகைப்பட்ட வேடங்களைப் புனைந்து, அவற்றாலே பகட்டையும் மிகக்காட்டி உலகத்தாரை அஞ்சுவித்துத் திரிகின்ற அறிவிலிகாள், உலகத்தாரின் வேறுபட்ட வேடத்தைக் கொண்ட நீவிர் அதற்கியைய உண்மை அன்பால் ஆடியும், துதிப்பாடல்கள் பலவற்றைப் பாடியும், அழுதும், `சிவன் எங்கேனும் காணப்படுவானோ` என்று தேடியும் நிற்குமாற்றால் சிவனது திருவடிகளைக் காணும் பேற்றைப் பெறுங்கள் ; அது பயனுடைத்தாம்.
==============================================
பாடல் எண் : 02
ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
ஆன நலங்கெடும் அப்புவி ஆதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

பொழிப்புரை :  இதன் பொருள் வெளிப்படை.
==============================================
பாடல் எண் : 03
இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள
நன்செயல் புன்செய லால்அந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.

பொழிப்புரை :  `ஒருநாட்டில் வாழும் மக்களிடத்துள்ள நற்செயல் தீச்செயல்களாற்றானே அந்த நாட்டிற்கு இன்பமும், துன்பமும் உளவாவன` என்று அறிந்தோர் கூறவர். ஆதலால், அரசனாவான் தனது நாட்டில் நிகழும் நற்செயல் தீச்செயல்களை நாள்தோறும் சோர்வின்றி ஆராய்ந்து தீச்செயல் செய்யாதவாறு மக்களைத் திருத்துவானாயின், அவனது நாடு துன்பமின்றி, இன்புற்று வாழும்.
==============================================
பாடல் எண் : 04
இழிகுலத் தார்வேடம் பூண்பர்மேல் எய்த
அழிகுலத் தார்வேடம் பூண்பர்தே வாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.

பொழிப்புரை :  தாழ்ந்த குலத்திற் பிறந்தவர்கள் சிலர், ஒழுக்கத்தால் உயர்வெய்த நினையாமல், எளிதில் மேன்மையைப் பெறுதற் பொருட்டுத் தவவேடத்தைப் புனைந்து கொள்வர். உயர்ந்த குலத்திற் பிறந்தவர்கள் சிலரும் அக்குலத்திற்கு ஏற்ற ஒழுக்கமுடையராய்  நிற்கமாட்டாமையின் அக்குலத்தன்மை அழியப்பெற்று அந்நிலை நீங்கிக் கடவுளராக வைத்துப் போற்றப்படும் மிக உயரந்த நிலையைப் பெறுதற் பொருட்டுத் தவ வேடத்தைப் புனைந்து கொள்வர். இவ்விருசாராரும், தொன்று தொட்டே பழிபாவங்களையுச் செய்து பாழ்பட்டு வரும் கொடியராயினார் நாட்டுவாழ் குலத்தோரினின்றும் நீக்கப்பட்ட குலத்தராயினாற் போலவே அரசு முறைமையுள் நாட்டு வாழ்க்கையினின்றும் நீக்கப்பட்டனர்.
==============================================
பாடல் எண் : 05
பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.

பொழிப்புரை :  அகத்தே தவஉணர்வின்றிப் புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு நடித்தவர் புண்ணியராகாது பாவிகளேயாவர் என்பது உண்மையாயின், அச்செயலுடையார் மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. இனி அவரது நடிப்பிற்குப் பயன் மெய்த்தவம் இல்லாதொழிய பொய்த் தவத்தால் இம்மையிற் சிறிது இன்பத்தை நுகர்தலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைதலுமேயாம். ஆகையால் உண்மையான அகத்துணர்வாலே தவம் உளதாகும்; பொய் வேடத்தால் உளதாகாது.
==============================================
பாடல் எண் : 06
பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தார்க்கே.

பொழிப்புரை :  சிலர் தொழில் செய்யாது மடிந்திருந்து வயிறு வளர்க்கக் கருதியே பொய்யாகத் தவ வேடத்தைப் புனைந்து கொள்வர். (`அவர் இல்வாழ்வாரை மருட்டியும், வெருட்டியும், ழிந்த பிச்சையை, நீக்காது ஏற்று உண்டு வாழ்வர்.) மெய்யாகவே தவ வேடத்தைப் பூண்பவர் இல்வாழ்வார் அன்போடு அழைத்து இடும் உயரிய பிச்சையையே ஏற்பர். (இவையும் அவ்விருசாராரையும் அறிதற்குக்குறியாம்.) தோற்றத்தில் பொய்வேடமும் மெய்வேடம் போலவே பூணப்பட்டாலும், உணர்வோடு கூடாத பொய் வேடம் அவர்க்கு உய்தற்கு ஏதுவாய வேடமாகாது கெடுதற்கு ஏதுவாய வேடமாக,) தவத்தினது பெருமையை உணர்ந்து அதனைப் பூண்டு நிற்போர்க்கே அஃது அவர் உய்தற்கு ஏதுவான வேடமாகும்.
==============================================
ஆறாம்தந்திரம்-9. தவவேடம்-பாடல்கள்: 04
பாடல் எண் : 01
தவமிக் கவரே தலையாய வேடர்
அவமிக் கவரே அதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகலர் அவ் வேடம்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண ணாதே.

பொழிப்புரை :  அகத்துத் தவ உணர்வு மிகுந்தவரே புறவேடத்தால் உயர்த்துக் கூறப்படுவர். அகத்து அவ்வுணர்வில்லாது உலகியல் உணர்வு மிகுந்தோர் தவவேடம் புனையின் `உயிர் கொலையை மிகச்செய்யும் வேடர்` எனப் பொருள்படுமாறு இருபொருட் சொல்லாக `வேடர்` எனச் சொல்லப்படுவர். அவர் வேட மாத்திரையால் தவத்தோர் ஆகார் ஆதலின், தவ உணர்வு மிகுந்தவர்க்கல்லது, தவவேடத்தைத் தாங்கிநிற்றல் பொருந்தாது,
==============================================
பாடல் எண் : 02
பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி யவர்க்காம் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.

பொழிப்புரை :  தவவேட்கையோர் யாவர்க்கும் முதற்சாதனமாவது திருநீறணிதல். சிவநூல் கற்பிக்கும் ஆசிரியர்க்கு அதனோடு காதில் அணியப்படுகின்ற செப்புக் குழையும், செம்பை இடையிட்டுக் கோத்த உருத்திராக்க மாலையும் வேடங்களாம். சிவயோகிக்குரிய வேடத்தை ஆராயுமிடத்துச் சிவனிடத்துக் காணப்படும்` கோலங்கள் பலவுமாம்.
==============================================
பாடல் எண் : 03
யோகிக் கிடுமது உட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாகற்றுச் சுற்றம் சடையதொன்
றாகத்து நீறணி அங்கம் கபாலம்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.

பொழிப்புரை :  சிவயோகிக்கு அணியப்படும் பொருள்களாவன, அரையிற் கட்டும் கீளோடு கூடிய கோவணம் உமைக்குப் பாகம் இல்லாமல் ஒரு சடையால் சுற்றிக் கட்டப்படும் சடைமுடி, உடம்பு முழுவதும் முற்றுப் பூசிய திருநீறு, வேண்டும் பொழுது எடுத்துத் தன் உடம்பில் பூசிக் கொள்ளுதற்கும், தன்னை வனங்கினார்க்குக் கொடுத்தற்கும் திருநீறு வைக்கப்பட்ட பொக்கணம் அல்லது பை, பிரம கபாலத்தை நினைப்பிக்கும் பிச்சைப் பாத்திரம், திருக்கையில் பிடிக்கும் மாத்திரைக் கோல் அல்லது பிரம்பு என்னும் இவைகளாம்.
==============================================
பாடல் எண் : 04
காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே.

பொழிப்புரை :  காதில் அணியப்படும் குண்டலம், உருத்திராக்க மாலை, நல்ல ஒலி உண்டாக வாய் வைத்து ஊதுகின்ற திருச்சங்கு, குண்டலத்தினும் உயர்ந்ததாகிய ஆறுகட்டி, திருவோடு, சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தவச்சாலை, பாதுகை, யோகம் முடிதற்குரிய இருக்கை, குற்றமற்ற யோகபட்டம், யோகதண்டம் என்னும் பத்தும் தவத்தோர்க்குரிய வேடங்களாம்.
==============================================

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!