http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday, 7 November 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :21. விந்துசயம் - பாடல்கள்: 014.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை...................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை......பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை
..பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 009

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி.............
.பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:18: பூரணக் குகைநெறிச் சமாதி.பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:19: சமாதிக் கிரியை.....பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:20: விந்துற்பனம்.........
.பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:21: விந்துசயம்...............பாடல்கள்: 037

============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -021
கூடுதல் பாடல்கள்  (226+037 =263)

==============================================
ஏழாம் தந்திரம் - 21. விந்துசயம்-பாடல்கள்: 037:(முதல்பாகம்)
பாடல் எண் : 1
பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.

பொழிப்புரை :  தன்னைக் காதலோடு பார்க்கின்ற மகளிரைத் தான் அவர்க்கு இசைந்து பாராமல் விலகிச் சென்று யோகத்தில் நின்று புறப்பொருளைக் கண்ணால் பார்க்க எழுகின்ற ஆசையை மூலக்கனலை வளரப்பதில் சேர்த்து, மாதரைச் சிந்திக்கின்ற மனம் மாதேவனைச் சிந்தித்து உருகும்படி செய்கின்ற யோகியே சிவயோகியாதல் கூடும்.
=======================================
பாடல் எண் : 2
தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅக் காமாதி தங்குவோ னும்உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடம்கெடும்
ஊனே அவத்துற் றுயிரோம்பா மாயுமே.

பொழிப்புரை :  தன்னியல்பால் திருவருள் வழியில் சென்று சிவயோகத்தில் நில்லாது காமம் முதலியவற்றிலே நிற்கின்ற கீழ் மகனும் அஞ்சும் அளவிற்கு `யோகி` எனப்படுவன் காம நெறியில் மிக்குச் செல்வானாயின் விந்து மிக அழிந்தொழியும். உடம்பும் உயிரைக் காக்க மாட்டாது வீணே கெட்டொழியும்.
=======================================
பாடல் எண் : 3
மாயாள் வசத்தேசென் றாரிவர் வேண்டிடில்
ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள்
ஏயாஎண் ணாளின்பம் ஏற்பன மூன்றிரண்(டு)
ஆயா அபரத்(து) ஆதிநாள் ஆகுமே.

பொழிப்புரை :  மாமை நிறத்தால் வசீகரிக்கின்ற பெண்ணின் வசப்பட்டோராகிய இவர் அவளொடு கூட வேண்டின், என்றும் ஒழியாது மாறி மாறி வருகின்ற பூர்வ பக்க அபர பக்கங்களில் வளர்பிறையாகிய பூர்வ பக்கத்தில் முதல் எட்டு நாட்கள் போகத்திற்குப் பொருந்தா. (`விந்து சயத்தை விரும்புவோர் அந்நாட்களில் அதனைப் பெருதல் அரிது` என்பதாம்.) சோதிட நூலோரால் சிறப்பித்துச் சொல்லப்படாத அபர பக்கத்தில் முதல் ஆறு நாட்கள் வளர்பிறையின் இறுதி ஆறு நாட்களோடு ஒப்பனவாம்.
=======================================
பாடல் எண் : 4
ஆறைந்து பன்னொன்று மன்றிச் சகமார்க்கம்
வேறன்பு வேண்டுவார் பூவரின் பின்னைந்தோ(டு)
ஏறும் இருபத் தொருநா ளிடைத்தோங்கும்
ஆறின் மிகுத்தோங்கும் அக்காலம் செய்கவே.

பொழிப்புரை :  `பூப்பிற்குப் பின்னாட்களாகிய வளர்பிறையில் முதல் எட்டு நாட்கள் கூடதற்கு உரியன அல்ல` என மேல் விலக்கப்பட்டவற்றில் ஐந்தாம் நாளும், ஆறாம் நாளும் யோகியர்க்கு முற்றிலும் விலக்கத்தக்கன. (எனவே, `ஏனையோர்க்கு அந்நாட்கள் ஒருகாற் பொருந்தினும் பொருந்தலாம்` என்பதாம். பதினொன்றாம் நாள் யோகியர் அல்லார்க்கு ஆம்.) சக மார்க்கம் - யோக நெறி. வேறன்பு - மகளிரை விரும்புதல். ``சகமார்க்கத்தினிடையே வேறு அன்பை ஐந்து, ஆறு பதினொன்று அல்லாத நாட்களில் வேண்டுவர் நல்லோர்`` என்க. பூப்பிற்குப் பின் ஐந்து நாட்களில் அக்குற்றம் நீங்கியொழியும். (ஆயினும், `மேலும் `மூன்று நாட்கள் ஆகா` என முன் மந்திரத்தில் விலக்கப்பட்டன. அந்த ஐந்து நாட்களுக்கு மேல் இருபத்தொரு நாளில் பெண்மை சிறிது சிறிதாக மிகுந்து வரும் அந்த நாட்களில் இறுதி ஆறு நாட்களில் மிகவும் மிகுந்து நிற்கும். அதனால் இல்லறத்தில் நிற்கும் ஆடவர் அந்நாட்களில் கலவி செய்க.
=======================================
பாடல் எண் : 5
செய்யு மளவில் திருநான் முகூர்த்தமே
எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால்
நையு மிடத்தோடில் நன்காம நூல்நெறி
செய்க வலம்இடம் தீர்ந்து விடுக்கவே.

பொழிப்புரை :  கலவி செய்தற்குப் பொருந்திய காலம் இரவில் முதல் யாமமும், கடையாமமும் ஒழிந்த இடையிருயாமமேயாம். அதனுள்ளும் காலத்தை, `சூரியகலைக் காலம், சந்திரகலைக் காலம்` என வரையறுத்தற்கு ஏதுவாகிய பிராண வாயுவின் இயக்கம் சந்திர கலையாகின்ற இடநாடியின் நீங்கிச் சூரிய கலையாகின்ற வலநாடிவழியே இயங்கும்பொழுது காமநூல் முறைப்படி கலவி செய்த பின்பு சூரிய கலையும், சந்திர கலையும் அல்லாத அமுத கலையாகிய நடுநாடியில் பிராணவாயு செல்லுங்கால் விந்துவை விடுக்க.
=======================================
பாடல் எண் : 6
விடுங்காண் முனைந்திந் திரியங்களைப் போல்
நடுங்கா திருப்பானும் ஐயைந்தும் நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்கால் கரணம் கருத்துறக் கொண்டே.

பொழிப்புரை :  மண் முதல் புருடன்காறும் உள்ள இருபத்தைந்து கருவிகளும் தன்னை வந்து வாதிக்கும் பொழுது அவற்றால் சலனம் உறுதல் இன்றி இருக்கின்ற யோகியும் ஒரோ ஒருகால் பெண்ணின்பால் காதல் கொள்கின்றவனாவான் ஆயினும் அப்பொழுதும் அவன் அவள் மேல் பற்றுக்கொள்ளாது, போக காலத்தில் மிகுதியாய் இயங்குகின்ற பிராண வாயுவின் இயக்கத்தால் மெலிவடைகின்ற அந்தக் கரணங்களை அகமுகப் படுத்தி, முன் பஞ்சேந்திரியங்களைத் தன் வசப்படுத்தியது போலவே விந்துவையும் தன் வசப்படுத்தியே விடுவான்.
=======================================
பாடல் எண் : 7
கொண்ட குணனே நலனேநற் கோமளம்
பண்டை யுருவே பகர்வாய்ப் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும்போதில்
கண்ட கரணம்உட் செல்லக்கண் டேவிடே.

பொழிப்புரை :  மாதர்பால் ஆடவரது மனத்தை ஈர்ப்பனவாய் உள்ளன அவருக்கு இயல்பாக அமைந்த நாணம், மடம், அச்சம், பயிப்பு` - என்னும் குணங்களும், மேனியழகும், இளமையும், வடிவமைப்பும், பேசுகின்ற வாயாகிய பவளமும், ஒன்றை ஒன்று நெருக்கும் வகையில் புடைபரந்து எழுகின்ற கொங்கைகளும் ஆகிய இவையாம். `இவை நேற்றுக் கண்டனதாம் இன்று காணப்படுகின்றன` என்னும் வகையிலே இருப்பன அல்லது அவ்வப்பொழுது புதிது புதிதாய்த் தோன்றுவன அல்ல ஆயினும் அவை அவ்வாறிருந்தே ஆடவரை வசீகரித்தல் வியப்பு. அம்முறையில், மாணவனே, அவை உன்னைப் பற்றி நெருங்கியிருக்கும் பொழுது நீ விந்து சயம் பெற வேண்டினால் யோகியர் போல அவைகளைப் பொறிகளாற் பற்றி, அப்பற்றுதலானே திரிபெய்துகின்ற அந்தக் கரணங்களை அகமார்க்கத்தில் செலுத்தி அதனால் விந்துவை உன் வசப்படுத்திவிடு.
=======================================
பாடல் எண் : 8
விட்டபின் கற்பவுற் பத்தி விதியிலே
தொட்டுறுங் கால்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள்சா நாள்குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதென்றெண்ணுயும் பார்க்கவே.

பொழிப்புரை :  ஆடவன் பெண்டினிடத்து விந்துவை விட்டபின் கலவிக் காலத்துச் சரவோட்டம் முதலியவை பற்றி அவ்விந்து கருவாகித் தோன்றும் முறையில் அதன் தொடக்கம் முதலியவைகளையும், பின்பு அதன் வாழ்நாள் சாநாள்களையும், பின்பு அதன் இழி குணம், உயர்குணம் என்பவற்றையும் `தனித்தனி இவ்வியல்பினது` என்று ஆராய்ந்தறிதலையும் செய்வானாக.
=======================================
பாடல் எண் : 9
பார்த்திட்டு வையப் பர்பபற் றுருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற் றிருதிங்கள் சேரா தகலினும்
மூப்புற்ற பின்னாளில் எல்லாம்ஆம் உள்ளவே.

பொழிப்புரை :  மேற்கூறியபடி கருவைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டியவற்றை யெல்லாம் எண்ணிப்பார்த்து உலகத்தில் பொதுவாக நிகழும் புலன் அடக்கம் இன்மையைத் தந்தை, தாயர் தவிர்த்து இருத்தலால் கரு மக உருப் பெற்று வளர்ந்து முதிர்ந்து பின்பு விதி அம்மகவைத் தாயின் வயிற்றிலிருந்து நீக்கி நிலத்தைச் சேரும்படி சேர்த்து, (தாய் தந்தையர் குழவிமாட்டுள்ள அன்பால் ஊக்கம் மிகுந்து செய்விக்கும் தெய்வக் காப்புக்களால்) மேல் கருவுட் பட்டனவாகக் கூறிய அவ்வினைப் பயன்கள் குழவியை வந்து பற்றதொழியினும் அதன்பின் குழவி வளர்ந்து வரும் பிற்காலத்தில் அவையெல்லாம் வந்து பற்றுவனவேயாகும். ஆகையால், மேற் கூறியவற்றையெல்லாம் ஆடவன் எண்ணிப் பார்ப்பானாக.
=======================================
பாடல் எண் : 10
வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை
வித்தின்இல் வித்தை விதற உணர்வோர்க்கு
மத்தில் இருந்ததோர் மாங்கனி ஆமே.

பொழிப்புரை :  உலகில் விதையை நிலத்தில் விதைப்பவர்க்கல்லது விளைவு ஏதும் கிடைக்க மாட்டாது. விதையை நன்முறையில் விதைப்பவர்க்கல்லது சிறந்த ஓர் அறிவும் இல்லையாகும். (அதுபோல விந்துவாகிய வித்தினை நன்முறையில் இடாதார்கக்ம் நன்மகப் பேறாகிய விளைவும் கிடைக்கமாட்டாது; அவர்க்குச் சிறந்த ஓர் அறிவும் இல்லையாகும்.) விந்துவாகிய வித்தினது இல்லற வித்தையை அமைந்து நோக்கி உணர்வாராயின், மரத்தில் தூங்கும் மாங்கனி போலும் பயன் கிடைப்பதாகும்.
=======================================
பாடல் எண் : 11
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருவுயி ரோடும்
கருதத்து வித்தாய்க் காரண காரியம்
கருத்துறு மாறிவை கற்பனை தானே.

பொழிப்புரை :  இறைவன் கருவிற்பட்ட உயிரோடு அதன் அறிவுக்கறிவாய்க் கலந்து நிற்கின்றான். அதனால் அவ்வறிவிற்குப் பொருள்களை அறியும் ஆற்றலையும், ஆயுள் முதலானவற்றையும் அப்பொழுதே அமைக்கின்றான். அவன் அவ்வாறமைத்தற்கும் தந்தை தாயரது எண்ணமே காரணமாய் நிற்க, அவ்வமைப்பு அக்காரணத்தின் காரியமாகின்றது. ஆகவே, குழவியின் அறிவு, ஆயுள் முதலியவை தந்தை தாயரது எண்ணத்தினால் அமைவனவேயாம்.
=======================================
பாடல் எண் : 12
ஒழியாத விந்து உடல்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலம் சத்தி
ஒழியாத புத்திதபம் செபம் மோனம்
அழியாத சித்திஉண் டாம்விந்து வற்றிலே.

பொழிப்புரை :  யோக முயற்சியால் விந்து வீழ்தலின் நீங்கி உடற்குள்ளே நிற்குமாயின் பிராணனும், உடலின் மிக்க வலிமையும், அறிவின் ஆற்றலும் அழியாது நிலைபெறும். இனி விந்து மூலாக்கினியால் தன் இயல்பு வேறுபட்டு உடம்பினுள் ஒன்றாய்க் கலந்து விடுமாயின் இடைவிடாத ஞானம், தவம், செபம், மௌன நிலை, எட்டுச் சித்திகள் ஆகிய எல்லாம் உளவாகும்.
=======================================
பாடல் எண் : 13
வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழுனைச் சொருகிச் சுடருற்று
முற்று மதியத் தமுதை முறைமுறைச்
செற்றுண் பவரே சிவயோகி யாரே.

பொழிப்புரை :  விந்து வறளும்படி யோக முயற்சியால் மூலஅனலை அதன்பால் சேர்த்து, அதனால் அது கீழ்நோக்கி வீழும் இயல்பை விட்டு மேல்நோக்கி ஏறும் இயல்பினதாகச் செய்து அவ்வாறு சுழுமுனை வழியாக மேல் ஏறி ஆஞ்ஞையை முட்டி அடையப் பண்ணி, அஃது அவ்விடத்துள்ள ஒளியோடு கலந்தபின்னர், மேலும் செல்கின்ற மூலக்கனலால் ஆஞ்ஞைக்கு மேல் உள்ள நிறைமதி மண்டலத்திலிருந்து ஊறி வழிகின்ற அமுதத்தை முறை முறையாகத் தமது பண்டை இயல்பு கெட உண்கின்றவர்களே சிவயோகியர் ஆவார்கள்.
=======================================
பாடல் எண் : 14
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
போகியும் ஞான புரந்தர னாவோனும்
மோக முறினும் முறைஅமிர் துண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.

பொழிப்புரை :  மாதர்மேல் மையலை உற்றபோதிலும் அதனால் உண்டாகிய விந்து அவர்பால் சென்று வீழாத நிலைமையை எய்திய பெரியோன், யோகியும், மேலான சித்திகளைப் பெற்றவனும், அதே நிலையில் போகத்தை இழக்காதவனும், ஞான வேந்தனாய் விளங்குபவனும், யோக முறையில் உண்ணும் மதி மண்டலத்து அமுதத்தைப் பெற்று உண்பவனுமாவான்.
=======================================
பாடல் எண் : 15
அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணம் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்(து)
உண்ணில் அமிர்தாகி யோகிக் கறிவாமே.

பொழிப்புரை :  சிவோகம் பாவனையால் உயிர் சிவனாதலால், அது நின்ற உடம்பும் சிவனது உடம்பாகியபின், அவ்யோகியது விந்தும் நீர்த்தன்மை நீங்கிச் சிவனது விந்துபோல நெருப்புத் தன்மை எய்த அதனையும், உலகில் நாள்தோறும் வெளிவிடுத்துச் சிறிது சிறிதாக அழிக்கப்படுகின்ற பிராணவாயுவாகிய மூலப் பொருளையும் ஒற்றுமைப்பட ஒன்றாகக் கலந்து மூலாக்கினியால் சமைத்து உண்ணும் முறையை ஓர் யோகி வல்லனாயின், அவனுத விந்து தேவாமிர்தமாய் உடல் நலங்கள் பலவற்றைத் தருதலுடன், ஞானமும் நன்கு சிறந்து பிரகாசிக்கச் செய்யும்.
=======================================
பாடல் எண் : 16
அறியா தழிகின்ற ஆதலால் நாளும்
பொறிவாய் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருவிந்து சேரவே மாயுமே.

பொழிப்புரை :  உலக மாந்தரது விந்துக்கள் அவரது அறியாமையாலேதான் வீழ்ந்தொழிகின்றன ஆதலால், அவ்வீழ்ச்சிக்கண் நாள்தோறும் அவர்ஐம்பொறி வழியில் அகப்பட்டுத்துயர் உறுகின்றனர். ஆகையால், பெரியோர் அறிவுடையராய்ச் சாக்கிரத்தில் தானே அதீத நிலையை அடைந்திருக்க, பிண்டத்திற்கு முதலாயுள்ள விந்துவாகிய சுக்கிலமேயன்றி, அண்டத்திற்கு முதலாயுள்ள விந்துவாகிய சுத்த மாயையும் ஒரு சேர அவர்க்கு அடங்கித் தம்மியல்பு கெட்டு நிற்கும்.
=======================================
பாடல் எண் : 17
மாதரை மாய வருங்கூற்றம் என்றுன்னக்
காதல தாகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி யாண்டினும்
சோதியி னுள்ளே துரிசறும் காலமே.

பொழிப்புரை :  விந்து இழப்பிற்குக் காரணம் பால் உணர்ச்சியேயாகலின், அதனை மகளிரை அந்தப் பாலினராகக் கருதாமல், அங்ஙனம் கருதுபவர்க்கு அதனால் வரும் அழிவுபற்றி அவரைக் கொல்லவரும் கூற்றுவனாகவே கருதின் அவர்மேல் செல்கின்ற ஆசையும், அதனால் எழும் பால் உணர்ச்சியும் நீங்கிவிடும். அவை நீங்கவே விந்து இழக்கப் படாதாகலின், அதனால் மனித ஆயுள் அளவேயன்றி, மேலும் பல்லாண்டு செல்லினும் இறப்பு வாராது. இனி அந்நாட்கள் எல்லாம் பரம்பொருளின் உள்ளே குற்றமற்றிருக்கும் நாட்களாயும் அமையும்.
=======================================
பாடல் எண் : 18
காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே.

பொழிப்புரை :  விந்து சயம்பெற்றவன் பல்லாண்டுகள் வாழ்தலால் காலத்தைக் கடந்து நிற்பவனாவன். விந்துவை அழித்துவிட்டவன் குறிப்பிட்ட சிலகாலம் வரையில் எவ்வகையிலோ வாழ்ந்து மறைந்தவனாவான். இவ்விருவரும் முறையே கலவிக் காலம் உட்பட எந்தக் காலத்திலும் விந்துவைத் தன் உடலில் வற்றியிருக்கச் செய்தவனும், மாதினொடு பிராணாயாம முறையில் அமைந்த கலவியை அறியாதவனும் ஆவர்.
=======================================
பாடல் எண் : 19
கலக்குநாள் முன்னாள் தன்னடைக் காதல்
நலத்தக வேண்டில் அந் நாளி உதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேல்அணை வீரே.

பொழிப்புரை :  மாதினொடு கூடுவீர், நீவிர் அக்காதல் வாழக்கை இருவரிடத்தும் நலமாக அமைய வேண்டின் மேலெல்லாம் கூறிவந்த முறையில் குறித்த நாட்கு முன்னாளே அவளது உடம்பில் மலமும், சலமும் ஆகிய உபாதிகளும், வாதம், பித்தம், ஐ என்னும் அவற்றின் மிகை குறைகளும் இல்லாதபடி நீக்குதற்கு உரியவற்றைச் செய்து அதன்பின்னர்க் கூடுவீராக.
=======================================
பாடல் எண் : 20
மேலாம் நிலத்தெழும் விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமுதுண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.

பொழிப்புரை :  விந்து ஆறு ஆதாரங்களில் மேல் ஆதாரமாகிய ஆஞ்ஞையில் தோன்றும்; அதற்கு மூலமாகிய பொருள் ஏழாம் தானமாகிய மதி மண்டலத்தில் தோன்றும். ஆகையால், பிராண வாயுவையும், அதனால் எழும் மூலாக்கினியையும் சுழுமுனை வழியாகச் செலுத்தி ஒவ்வோர் ஆதாரமாகக் கடந்து மதி மண்டலத்தை அடைந்து அங்கே உண்டாகின்ற அமிர்தத்தை உண்டு கொண்டே மாதினை ஆசையின்றித் தழுவினால், மையல் உண்டாகாது. அஃது உண்டாகாதாகவே விந்துவும் வெளிப்படாது அகத்திலே நிற்கும்.
======================================= (இரண்டாம் பாகம் தொடரும்...)
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!