http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday, 14 November 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :22, 23 & 24. ஆதித்தநிலை, பிண்டாதித்தன், மனவாதித்தன் - பாடல்கள்: 010, 003, 005




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை...................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை......பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை
..பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 002

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி.............
.பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:18: பூரணக் குகைநெறிச் சமாதி.
பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:19: சமாதிக் கிரியை.....பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:20: விந்துற்பனம்..........
.பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:21: விந்துசயம்...............பாடல்கள்: 037
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:22: ஆதித்தநிலை.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:23: பிண்டாதித்தன்......பாடல்கள்: 003
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:24: மனவாதித்தன்......
.பாடல்கள்: 005 
============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -024
கூடுதல் பாடல்கள்  (239+010+003+005 =257)

==============================================
ஏழாம் தந்திரம்-22. ஆதித்த நிலை-அண்டாதித்தன்:பாடல்கள்: 010
பாடல் எண் : 1
செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கு தவமே.

பொழிப்புரை :  (சூரியன் முதலாகக் காணப்படுகின்ற அனைத்து ஒளிப் பொருள்களின் ஒளியும் சிவனது ஒளியேயன்றி, அவற்றினுடையன அல்ல. அஃது எங்ஙனம் எனின்,) சூரியன் நாள்தோறும் மகாமேரு மலையை வலம் வருதல் தெளிவு. ஏனைத் தேவர்கள் அவ்வாறு வலம் வருதலைப் பலர் அறியாராயினும் யோகியரும், ஞானியரும் அதனை நன்கறிவர். `அவர் வலம்வருதல் எதன்பொருட்டு` எனின், எங்கட்கு விள்ககாகி நின்று பயன் தருகின்ற சிவனாகிய கடவுளின் திருவடி ஒளிகள் தங்களிடத்துப் பொருந்தி விளங்குதற் பொருட்டேயாம். வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் தவத்தால்l ஆகலின் அவர் அதனைச் செய்கின்றனர்.
=======================================
பாடல் எண் : 2
பகலவன் மாலவன் பல்லுயிர்க் கெல்லாம்
புகல்வ னாய் நிற்கும் புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற ஓங்கும்
பகலவன் பல்லுயிர்க் காதியு மாமே.

பொழிப்புரை :  ஆதித்தனாலே உலகுயிர்கள் இறைவாது வாழ்தலால், அவன் காத்தற் கடவுளாகிய மாயோனாக ``சூரிய நாராயணன்`` என்று சொல்லப்படுகின்றான். அதனால் அவனே எல்லா உயிர்கட்கும் புகலிடமாகின்ற முதற்கடவுளும் ஆகின்றான். இன்னும் உயிர்கள் நால்வகை யோனிகளுள் கருவாகித் தோன்றுதலும் ஆதித்த னாலே யாகலின் அவனே அனைத்துயிர்கட்கும் முதலுமாவான்.
=======================================
பாடல் எண் : 3
ஆதித்தன் அன்பினொ டாயிர நாமமும்
சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.

பொழிப்புரை :  ஆதித்தனை ஆயிர நாமங்கள் விண்ணவர் சொல்லி வேண்டினாலும், வேதியர்சொல்லி வேண்டினாலும் அவையெல்லாம் சிவபிரானிடத்தில் அன்புதோன்றி முதிர்வதற்கு வழியாகவே அமையும். ஏனெனில், ஆதித்த மண்டலத்தின் ஒளிக்குள் ஒளியாய்ச் சிவபிரானே நிற்றலால்.
=======================================
பாடல் எண் : 4
தானே உலகுக்குத் தத்துவ னாய்நிற்கும்
தானே உலகுக்குத் தையலுமாய் நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவுமாய் நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.

பொழிப்புரை :  ஆதித்தனே உலகிற்கு அப்பனாய் இருப்பன்; அம்மையாய் இருப்பன். சுகத்தைத் தருபவனாய் இருப்பன். இனிச் சந்திரனாய்க் குளிர்ந்த ஒளியைத் தருகின்றவனும் இவனே.
=======================================
பாடல் எண் : 5
வலயம்முக் கோணம்வட் டம்அறு கோணம்
துலைஇரு வட்டம்துய் யவ்வித ழெட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈரெட் டிதழா
மலைவற் றுதித்தனன் ஆதித்த னாமே.

பொழிப்புரை :  சதுரம், வட்டம், முக்கோணம் அறுகோணம், துலாக் கோல், இருவட்டம் - என இவ்வாறு மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களில் அமைந்த பீடங்களில் ஒவ்வொன்றின் மேலும் எட்டிதழ்த் தாமரையில் ஆதித்தன் அசையும் வட்டமாய் உள்ள பதினாறிதழ்களையுடைய தாமரை மலர்போல மாறுபாடின்றி விளங்கினான்.
=======================================
பாடல் எண் : 6
ஆதித்தன் உள்ளினில் ஆனமுக் கோணத்தில்
சோதித் திலங்கும்நற் சூரியன் நாலாங்
கேத மறுங்கேணி சூரியன் எட்டில்
சோதிதன் ஈரெட்டில் சோடசந் தானே.

பொழிப்புரை :  ஆதித்தனுக்கு மிகச்சிறந்த இடமாகிய முக்கோண மண்டலத்தில் அவன் மிக்க ஒளியுடையவனாய் விளங்குவான். அவன் மூலாதாரத்தினின்றும் நான்காவதாகிய இருதயத்தை அளாவி ஓங்குவானாயின் முன் மந்திரத்தில் சொல்லப்பட்ட பதினாறு இதழ் வடிவம் அப்பால் விசுத்தியை அடைந்து அங்குள்ள பதினாறு இதழ்களில் ஒன்றி ஒளிர்வான்.
=======================================
பாடல் எண் : 7
ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்ககி லீரே.

பொழிப்புரை :  ஆதித்தன் இருண்ட பொழுது அவனோடு உலகமும் இருண்டுவிட்டது. வேறுபட்ட நான்கு வேதங்களின் மொழிகளும் வெறும் பிதற்றலாய்ப் பயனற்றுப்போயின. அவ்வாறாகவும் `ஆதித்தனுக்குள்ளே சிவசத்தி நின்றே உலகிற்கு ஒளியைத் தருகின்றாள்` எனக் கூறுகின்ற வேத மொழியின் பொருளை, நீவிர் உணரமாட்டீர்.
=======================================
பாடல் எண் : 8
பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.

பொழிப்புரை :  ஆதித்தன்மேல் எழுந்துவருகின்ற வழி நிலத்திற்குக் கீழே யாருக்கும் அறிய ஒண்ணாத அரும்பொருளாய் உள்ளது. (ஆதலின் அதனை அறிய முயல வேண்டுவதின்று.) இனிக் கண்ணிற்கு நன்கு புலனாயினும் யாராலும் அணுகிப் பற்ற இயலாத ஆதித்தன் புறப்பட்டுத் தோன்றுதல் நீருக்கும், தீக்கும் நடுவேயாகும்.
=======================================
பாடல் எண் : 9
மண்ணை இடந்ததின் கீழ்ஓடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து களிசெய்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக் கிசைந்துநின் றானே.

பொழிப்புரை :  ஆதித்தன் நிலத்தைப் பிளந்து கொண்டு அதன் கீழேயும் ஓடுகின்றான். பின்பு மேலே வந்து ஆகாயத்தைப் பிளந்துகொண்டு எங்கும் ஒளிமயமாகவும் செய்கின்றான். மற்றும் உயிர்களின் கண்களைத் துளைத்து அவற்றுள்ளேயும் புகுந்து இருளை ஓட்டி மகிழ்ச்சியைத் தருகின்றான். அந்த இன்பத்தை நினைத்தல் கடமையாகலின் அக்கடமையில் வழுவாது நின்று அவனைத் தியானித்தற்கும் அவன் உடன்பட்டு நிற்கின்றான்.
=======================================
பாடல் எண் : 10
பாரை யிடந்து பகலோன் வரும்வழி
யாரு மறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ் என்று
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :  ஆதித்தன் நிலத்திற்குக் கீழிருந்து அதனைப் பிளந்து கொண்டு மேலே எழுவது போலத் தோற்றுகின்ற அந்த வழியின் உண்மையை, தாழ்ந்த நிலையில் உள்ளார்க்கு உரிய நூலை மட்டுமே உணர்ந்தவர்களில் ஒருவரும் அறியமாட்டார். (அதனை அவ்வாறே கொள்வர். உண்மையில் அது புறநிலையில் நில உருண்டையின் சுழற்சியும், அகநிலையில் மேற்கூறியவாறு மூலா தாரத்திற்குக் கீழ் நின்றுமேல் எழுதலும் ஆகும்.) இனி அவ்வாதித்தின் விண்ணில் காணப்படும் பொழுது அவன் சிவபிரான் எழுந்தருளி யிருக்கின்ற மகாமேரு மலையை வலம் வருகின்றான் என்றே கொள்வர். (உண்மையில் அதுவும் புற நிலையில் நில உருண்டையின் சுழற்சியும், அகநிலையில் மேற்கூறியவாறு வீணாத் தண்டைச் சூழ்ந்து ஒளிர்வதுமேயாகும்.) கோள்களின் இயக்கம் பற்றியும், பிராணாயாமம் பற்றியும் இனிது விளங்கக் கூறும் நூல்களின் வழி அவற்றை உணர்ந்த ஒரு சிலரே மேற்கூறிய உண்மைகளை உணர்ந்திருந்தனர்.
=======================================
ஏழாம் தந்திரம்-23. பிண்டாதித்தன்: பாடல்கள்: 003
பாடல் எண் : 1
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றிய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

பொழிப்புரை :  உயிர்கள் உடம்போடு கூடிநிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் முதலிய எத்தொழிலைச் செய்யினும் அவ்வுயிர்களில் அழுந்தப் பொருந்தியுள்ள சிவன் அவற்றின் உடம்பில் உள்ள ஆதாரங்களில் நீக்கமின்றி நிற்கின்றான். பிராணவாயு இடநாடி வல நாடிகளை ஒழித்து நடுநாடி வழியாக ஓடினால் அஃது ஆதித்தனைப் போல ஒளியுடையதாய்க் காணப்படும். அந்த ஒளியில் சிவன் மும்மலங்களை ஒழித்து, உயிர்களின் தற்போதத்தையும் அடக்கி, அவற்றின் அறிவுக்கறிவாய் விளங்குவான்.
=======================================
பாடல் எண் : 2
ஆதித்தன் ஓடி அடங்கும் இடம்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
பேதித் துலகம் பிதற்றும் பிதற்றெல்லாம்
ஆதித்த னோடே அடங்குகின் றாரே.

பொழிப்புரை :  `பிண்டாதித்தன்` என மேற்கூறிய பிராணன் ஓடுமளவும் ஓடி ஒடுங்கி நிற்கும் இடத்தை `இது` என உணர்ந்து அவ்விடத்திலே நின்று பயன்பெற வல்லவரே தம்மை அண்டாதித்தன் இயக்கத்திற்கு வேறாய்ப் பிண்டாதித்தன் இயக்கத்தின் வழிபட்டவராக உணர்ந்து அவ்வியக்கத்தால் நீண்டகாலம் இவ்வுலகில் வாழ்வர். உலகம் இவ்வியல்பின் வேறுபட்டுத் தான் அறிந்ததையே அறிவாக நாட்டித் தான் வல்லவற்றை ஓயாது கூறும். அக்கூற்றினைத் தெளிந்தோர் எல்லாம் அந்த அண்ட ஆதித்தனது இயக்கத்திற்கு உட்பட்டு விரைவில் மாய்பவரேயாவர்.
=======================================
பாடல் எண் : 3
உருவிப் புறப்பட் டுலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறைஅறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறைஅறி வாளர்க்(கு)
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

பொழிப்புரை :  [இம் மந்திரம் அண்டாதித்தன், பிண்டாதித்தன் இருவர்க்கும் பொருந்தக் கூறியது.] அண்டாதித்தன் கீழ் நின்றும் ஊடுருவி மேலே புறப்பட்டு உலகைச் சுற்றிச் சென்று, முடிவில் ஒடுங்கி நிற்பது உலக முதல்வனாகிய சிவனிடத்திலாகும். அவ்வாறே பிண்டாதித்தனும் மூலாதாரத்திற்குக்கீழ் நின்றும் உருவி மூலாதாரத்திலே வெளிப்பட்டு மேலே ஏனை ஆதாரங்களையும் கடந்து, முடிவில் ஒடுங்கி நிற்பது ஆஞ்ஞையில் உள்ள சதாசிவ மூர்த்தியினடத்திலாகும். ஆகவே எவ்வகையிலும் உயிர்கட்குப் புகலிடமாகின்றவன் சிவனேயாவன். ஆயினும் இவ்வுண்மையை அறிபவர் உலகில் இல்லை. அறிபவர் எவரேனும் இருப்பின், எனது உள்ளத்தில் உள்ள அன்பு அவரிடமே சென்று உருகி நிற்கும்.
=======================================
ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்: பாடல்கள்: 005
பாடல் எண் : 1
எரிகதிர் ஞாயிறும் இன்பனி சோரும்,
எறிகதிர் சோமன் எதிர்நின் றெறிப்ப;
விரிகதி ருள்ளே விளங்கும்என் ஆவி
ஒருகதி ராகில் உவாவது தானே.

பொழிப்புரை :  பூர்ணிமை நாளில் மிக விளங்குகின்ற சந்திரன், தெறும் இயல்பினையுடைய கதிர்களையுடைய சூரியனுக்கு எதிரே நின்று தன் கதிர்களை வீசும் இயல்பு அமைந்திருக்குமாயின், அந்தச் சூரியனும் குளிர்ந்த கதிர்களை வீசுவோன் ஆகிவிடுவான். (அந்த அமைப்புத்தான் இல்லையே!) பிண்டாதித்தனுக்குள்ளே விளங்கு கின்ற எனது மனம் அவனால் ஓர் ஆதித்தனாயின், அது பின்பு பிண்டத் துள்ளே விளங்கும் சந்திர மண்டல்தினது அமுத தாரையால் பூர்ணிமை நாளில் தோன்றுகின்ற சந்திரனாகிவிடும்.
=======================================
பாடல் எண் : 2
சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை;
அந்த இரண்டும் உபய நிலத்தினில்,
சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே.

பொழிப்புரை :  `சந்திர கலை` எனப்படும் இட நாடியில், `சூரிய கலை` எனப்படும் வல நாடிக் காற்று ஒடுங்கி இட நாடிக் காற்றே இயங்கினும் பின்னர் மாறி இயங்கும் காலமே சிவனைப் பூசித்தற்கு உரிய காலமும். (`ஆகவே, பூசை செய்வோர் அவ்வாறு செய்து கொள்க` என்பதாம்.) இனி அந்த இருவழியிலும் யோகம் ஆதலின், அவ்வாறு யோகம் செய்பவரே அந்தக்கரணம் தூய்மையாகப் பெற்றவர் ஆவர். அவரே பின்பு சிவயோகத்தால் சிவமாகி நிற்பர்.
=======================================
பாடல் எண் : 3
ஆகும் கலையோ(டு) அருக்கன் அனல்மதி
ஆகும் கலைஇடை; நான்கென லாம்என்பர்;
ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற
ஆகும்அப் பூரணை யாம்என் றறியுமே.

பொழிப்புரை :  யோக முறையில், சூரியன், அக்கினி, சந்திரன்` எனச் சொல்லப்படுகின்ற கலைகளோடு, அக்கினி செல்லும் வழியாகிய நடு நாடியும் `கலை` என்று சொல்லப்படும். ஆகவே, கலைகளாவன நான்காம். அவற்றுள் சூரிய கலை, நடு நாடி வழியாக மேற்செல்கின்ற அக்கினியோடு சேர்ந்து சந்திர மண்டலத்தை அடையின் அந்நிலையே யோகியர்க்கு, மேல், `உவா` எனக்குறித்த பூரணையாகும் என்று அறிமின்கள்.
=======================================
பாடல் எண் : 4
ஈரண்டத் தப்பால் இலங்கொளி அவ்வொளி
ஓரண்டத் தார்க்கும் உணரா உணர்வு; அது
பேரண்டத் துள்ளே பிறங்கொளி யாய்நின்ற
ஆரண்டத் தக்கார்? அறியத்தக் காரே.

பொழிப்புரை :  கீழ்ஏழ் உலகங்களை உள்ளடக்கியுள்ள அண்டமும், மேல் ஏழ் உலகங்களை உள்ளடக்கியுள்ள அண்டமும் ஆகிய இரண்டு அண்டங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பால் விளங்குகின்ற ஓர் ஒளி பரமசிவன். அவ்வொளி எந்த உலகத்தார்க்கும் உணர இயலாத உணர் வாய் இருப்பது. எனினும் அஃது எல்லா உலகங்களிலும் விளங்குகின்ற எல்லா வகையான ஒளிகளிலும் உள்ளொளியாய் நிற்றலை அறியத் தக்கவர் யார்? அணுகத்தக்கவர் யார்? ஒருவரும் இலர்.
=======================================
பாடல் எண் : 5
ஒன்பதின் மேவி உலகம் அலம்வரும்;
ஒன்பதும் ஈசன் இயல்பறி வார்இல்லை;
முன்பதின் மேவி முதல்வன் அருள்இலார்
இன்பம் இலார்; இருள் சூழநின் றாரே.

பொழிப்புரை :  உலகம் ஒன்பது கோள்களில் உளம்பொருந்தி, அதனால் அமைதி காணாது அலமருகின்றது. (``வேரண்டத்துள்ளே பிறங்கொளியாய் நின்றது`` என மேற்கூறியபடி) `ஒன்பது கோள்களின் ஆற்றலும் சிவனது ஆற்றலே` என்னும் உண்மையை உணர்ந்து அவனையடைந்து அமைதிகாண்பவர் ஒருவரும் இல்லை. முதலில் அந்நிலையில் நிற்பினும் பின்பாவது அருளாளரது அருள் மொழிகளைக் கேட்டுச் சிவனது அருளைப் பெறாதவர் ஒரு ஞான்றும் இன்பம் இல்லாதவரேயாய்த் துன்பத்தையே உடையவராய் இருப்பர்.
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!