http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday, 26 November 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :32 & 33. ஐந்திரியம் அடக்கும் அருமை, ஐந்திரியம் அடக்கும் முறைமை - பாடல்கள்: 008&013.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை...................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை......பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை ..பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 002
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி............. .பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:18: பூரணக் குகைநெறிச் சமாதி. பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:19: சமாதிக் கிரியை.....பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:20: விந்துற்பனம்.......... .பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:21: விந்துசயம்...............பாடல்கள்: 037
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:22: ஆதித்தநிலை.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:23: பிண்டாதித்தன்......பாடல்கள்: 003
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:24: மனவாதித்தன்...... .பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:25: ஞானாதித்தன்........பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:26: சிவாதித்தன்............ பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:27: பசு லக்கணம்-பிராணன்-பாடல்கள்: 002
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:28: புருடன்.......................பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:29: சீவன்...........................பாடல்கள்: 004
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:30: பசு................................பாடல்கள்: 002 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:31: போதன.......................பாடல்கள்: 006
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:32: ஐந்திரியம் அடக்கும் அருமை ..
பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:33: ஐந்திரியம் அடக்கும் முறைமை .பாடல்கள்: 013

============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -033
கூடுதல் பாடல்கள்  (287+008+013 =308)
==============================================
ஏழாம் தந்திரம்-32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை பாடல்கள்: 008
பாடல் எண் : 1
ஆக மதத்தன ஐந்து களிறுகள்
ஆக மதத்தறி யோடணை கின்றில
பாகனும் எய்த்தவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.

பொழிப்புரை :  இம்மந்திரம் ஒட்டணி. ஐந்து களிறுகள். ஐம்புலன்களின் மேல் செல்லும் ஐந்து அவாக்களையுடைய மனம் - மனம் ஒன்றாயினும் அவா வகையால் ஐந்தாயிற்று. ஆக மதத்தமை. மிகவும் மதம் கொண்டமை. அஃதாவது அவா மிக மிகுத்தமை. தறி - திருவருள். பாகன் - உயிர். அவன் எய்த்தமை - அந்த மனத்தை அவாக் கொள்ளாதவாறு தன் முயற்சியாலே தான் அடக்கி அடக்கிப் பார்த்து இயலாது இளைத்தமை. இனிக் களிறுகள் இளைத்தமை - மனம்தான் அவாவிய புலன்களை அடைந்து அடைந்து நிறைவுபெற விரும்பி, நிறைவு கூடாமையால் வெறுப்புற்றமை. இந்நிலையிலே அந்த மனம் திருந்தி நிறைவு பெறுதற்கு வழி சிவயோகத்தைத் தவிர வேறொன்றில்லாமை அறியப்பட்டது.
=======================================
பாடல் எண் : 2
கருத்தின்நன் னூல்கற்றுக் கால்கொத்திப் பாகன்
திருத்தினும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா(து)
எருத்துற ஏறி யிருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே.

பொழிப்புரை :  இதுவும் ஒட்டணி. அடங்காமையை ஐம்பொறி மேல் வைத்துக் கூறினும் அடங்காது ஓடுவது மனமே. ஓட்டத்தின் விளைவு குறித்து மனம் குதிரையாக உருவகிக்கப்படும். பாய்மா - குதிரை. குதிரையைப் போரின்கண் செயற்படுத்தும் வீரன் அதன் முதுகின் மேல் அமர்ந்துகொண்டு கால்களால் குறிப்புத் தருவான். நல்ல குதிரைகள் அக்குறிப்பின் வழியே பாய்ந்து பாகனுக்கு வெற்றியை உண்டாக்கும். முருட்டுக் குதிரைகள் முரணி வேறுவழியிற் பாய்ந்து பாகனுக்கு வீழ்ச்சியைத்தரும். இங்கு ``பாய் மா`` என்றதை, `குறிப்பிட்ட ஒரு பாய்மா` எனக் கொள்க. அது மனம். அதனைப் பிராணாயாமத்தால் அடக்குதல் கூடும். ஆகவே ``கால்`` என்றது சிலேடை வகையால் உவமையில் பாகனது கால்களையும், பொருளில் பிராண வாயுவையும் குறித்தது. கொத்துதல் - உட்செலுத்துதல். பாகன், ஆன்மா. அவன் யோகநூலைக் கருத்துடன் கற்று அதன்படி பிராணாயாமம் செய்து தாரணை நிலையில் நின்று அடக்கினாலும் அடங்காது ஓடுவதே மனத்தின் இயல்பு. உவமையில் `நூல்` குதிரை செலுத்தும் நூல். `எருத்தம்` என்பது ஈறு குறைந்து, ``எருத்து`` என நின்றது. எருத்தம் - பிடரி; இங்கு அது முதுகைக் குறித்தது. `முதுகு` என்றது தாரணை நிலையை. திருத்துதல் - பிராணாயாமத்தினாலும், வருத்துதல், அஃதாவது அடக்குதல். தாரணையினாலும் என்றற்கு அவற்றைத் தனித் தனிக் கூறினார். திகைத்தல் - வேறு வழியில் செல்லுதல். வழி, நேர்வழி. அம் மா - மேற் குறிப்பிட்ட அந்தக் குதிரை. ``திகைத்தன்றிப் பாயாது, வழி நடவாது` என்றவை, அடங்குதல் அரிதாதலையே குறித்தது.
=======================================
பாடல் எண் : 3
புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
குலம்ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலமந்து போம்வழி ஒன்பது தானே.

பொழிப்புரை :  மேய்ப்புத் தொழில் செய்து பிழைக்கும் குலங்கள் ஆமேய்க்கும் குலம், எருமை மேய்க்கும் குலம், ஆடு மேய்க்கும் குலம், தாரா, கோழி முதலிய பறவைகள் மேய்க்கும் குலம் எனப் பலவகை உண்டு. அவற்றுள் பறவை மேய்க்கும் குலத்தில் இரங்கத் தக்க ஒரு குலம் உண்டு. அந்தக் குலத்தில் ஒருவனுக்கு ஒரு குடில். அந்தக் குடிலில் ஐந்து கூடுகள். அந்தப் பறவைகள் வெளியே மேயும் இடங்களும் ஐந்து. அந்த இடத்தில் மேய்கின்ற உணவுகளும் வேறு பட்ட ஐந்து. அந்த உணவுகளின் குணங்களும் வேறுபட்ட ஐந்து. இந் நிலையில் அந்த மேய்ப்பான் ஒருவன் அந்தப் பறவைகளை ஒரு வழியிற் செலுத்தி மேய்க்க வேண்டும். இது மாற்ற முடியாத ஓர் அமைப்பு முறை - அதனால் இந்த மேய்ப்புத் தொழிலில் வெற்றி பெற மாட்டாதார் பலர் மேற்குறித்த ஒரு குடிலில் ஒன்பது வாயில்கள் இருப்பதால் அந்த வாயில்களில் எந்த ஒன்றின் வழியாகவாவது யாருக்கும் தெரியாமல் ஓடிவிடுகின்றார்கள்.
=======================================
பாடல் எண் : 4
அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சா திறைவனை எய்தலும் ஆமே.

பொழிப்புரை :  இம்மந்திரமும் பிசிச் செய்யுளே, முன் மந்திரங்களில் களிறுகளாகவும், குதிரைகளாகவும், பறவைகளாகவும் குறிக்கப்பட்ட புலனடக்கம் இல்லாத மனம் இம்மந்திரத்தில் அதனது அடங்காமையின் மிகுதி இனிது விளங்குமாறு சிங்கமாகக் குறிக்கப்பட்டது. அடவி - வேறுபட்ட பல பெருமரங்கள் செறிந்த காடு. அது `நல்லன, தீயன` எனப் பெரும்பான்மையாக இருவகைப்பட்டு, அவற்றுள் எண்ணிலவாய் விளையும் வினைகளைக் குறித்தது. நல்வினை, பயன்மரம், தீவினை, நச்சுமரம், வாய்ப்பு உள்ள பொழுது சென்று ஐம்புலன்களை நுகர்கின்ற மனம் வாய்ப்பு இல்லாதபொழுதும் அவற்றையே நாடுதல் பற்றி ``அஞ்சு அகமே புகும்`` என்றார். அஞ்சு - பொறிகள். சிங்கங்கட்கு உகிர் (நகம்) உண்டற்குரிய விலங்குகளை இறுகப் பற்றுதற்கும், எயிறு (பல்) அவ்விலங்கின் தசைகளை உண்டு சுவைத்தற்கும் உதவுவன. எனவே, `அவற்றை அறுத்தல்` என்பது மனத்திற்குப் பொருள்களின் மேல் உளதாய பற்றினையும், அவற்றை நுகர்தற்கண் உளதாய ஈடுபாட்டினையும் நீக்குதலாயிற்று. `நீக்குதற்குக் கருவி சிவயோக சிவானங்கள் என்பது மேல் பல இடங்களில் கூறப்பட்டது. ``அறுத் திட்டால்`` எனவே, ``அறுத்திடல் மிக அரிது`` என்பது விளங்கிற்று. நகமும், பல்லும் போயபின் காட்டில் வாழும் சிங்கங்கள் அங்குச்சென்றோரை அப்பாற் போகவிடாமல் மறித்துக் கொன்றொழிக்க மாட்டா. அதனால் அவர் அக்காட்டைக் கடந்து இன்புறலாம் என்பது பற்றி, ``அறுத்திட்டால் - எஞ்சாது இறைவனை எய்தலும் ஆகும்`` என்றார்.
=======================================
பாடல் எண் : 5
ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்
ஐவர்உம் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க் கிறையிறுத் தாற்றகி லோமே.

பொழிப்புரை :  அரசராகிய நம்மில் ஒவ்வொருவருக்கும் ஐவர் அமைச்சர் உள்ளிட்ட தொண்ணூற்றாறு பேர் வல்லுநர் பணியாளராய் உள்ளனர். அவர் நமக்கு அடங்கிப் பணி புரியாமல் ஒவ்வொருவரும் தனித்தனியே நம்மை ஆள விரும்புகின்றனர். எனினும் ஐவர் அமைச்சரே நம்மை ஆள்வதில் வெற்றி காண்கின்றனர். அந்த ஐவருக்குள்ளேயும் ஒற்றுமையில்லை. அதனால் அவரவரும் ஒவ்வொரு நோக்கத்தோடு நம்மை ஆள முயல்கின்றனர். அவர்கட்கு வரிசெலுத்தி நாம் எவ்வாறு நிறைவு செய்ய இயலும்!
=======================================
பாடல் எண் : 6
சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின் றோடும் குதிரையொத் தேனே.

பொழிப்புரை :  ``துஞ்சும் போதும் சுடர்விடும் சோதியாய், (தி.5 ப.93 பா.8) உள்ள இறைவனையும், அவனோடே நீக்கமின்றியிருக்கின்ற இறைவியையும் நாள்தோறும் ஒழிவின்றி மந்திரமொழியாலும், தோத்திரப் பாடல்களாலும் சொல்லக் கடவேனாகிய யான் அங்ஙனம் செய்ய மாட்டாதவனாய் நிற்கின்றேன். அதனால் அங்ஙனம் மாட்டாதாரிடத்து வளர்வனவாகிய ஐம்புல ஆசைகளையும், அதனை உடைத்தாகின்ற மனத்தையும் அடக்கும் வலியிலேனாகின்றேன் அதனால், தன்மேல் இருப்பவனைக் குழியில் வீழ்த்திக் கொல்லவே நினைத்து வேகமாகப் பாய்ந்து ஓடுகின்ற குதிரையை அடக்க மாட்டாது விழிப்பவன்போலத் திகைக்கின்றேன்.
=======================================
பாடல் எண் : 7
எண்ணிலி இல்லி யுடைத்தவ் விருட்டறை
எண்ணிலி இல்லியோ டேகிற் பிழைதரும்
எண்ணிலி இல்லியோ டேகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லத்தோர் இன்பம தாமே.

பொழிப்புரை :  ஒரு தலைவன் எனக்கென ஓர் அறையை ஈந்துள்ளான். (தலைவன் - பிரமன். அறை - உடம்பு) அதில் உள்ள பொத்தல்களோ அளவில்லன. (மயிர்க்கால்கள்) ஆயினும் அந்த அறைக்குள்ளே சிறிதே ஒளிபுகாது இருட்டிக் கிடப்பது வியப்பைத் தருகின்றது. (ஞானம் உடம்பு வழியாக வாராமை தெளிவு,) இந்த இருட்டறையிலேதான் என்னுடைய காலமெல்லாம்போய் ஆக வேண்டும் என்றால், அஃது எத்துணைத் துன்பத்தைத் தரும் என்பது சொல்லவேண்டுவதில்லை. ஆயினும் இறைவன் என்னை அவ்வறை யிற்றானே யிருந்து காலந் தள்ளாமல் காக்கத் திருவுளம் பற்றுவானாயின், உடனே எனக்கு அளவுட்படாத கலத்தையுடைய ஒரு பெரிய மாளிகையைத்தரின் ஒப்பற்ற பெரியதோர் இன்பம் கிடைத்துவிடும். (அம்மாளிகை வியாபகப் பொருளாகிய திருவருள். இன்பம், சிவானந்தம்.)
=======================================
பாடல் எண் : 8
விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.

பொழிப்புரை :  உலகில் அறத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாய் உள்ள பொருளின் வலிமைக்குக் காரணம் மழையின் வலிமையேயாகும். அதுபோல, கடல் சூழ்ந்த நிலவுலகில் உள்ள அனைத்துயிர்களின் வாழ்க்கை வலி அயன் விதித்த விதியின் வலிமையும், அவ்வுயிர்களுள் மக்கள் உயிர்களின் வாழ்க்கை வலிமைக்குக் காரணம் அவர்களது ஆறாவது அறிவின் வலிமையும், சுவர்க்க லோகத்தவரது வாழ்க்கையின் வலிமைக்குக் காரணம் அவர்கள் இந்நிலவுலகில் செய்த பல தெய்வ வழிபாடுகளின் வலிமையும், சிவலோகத்தவரது வாழ்க்கையின் வலிமைக்குக் காரணம் அவர்கள் இந்நிலவுலகில் செய்த சிவவழிபாட்டின் வலிமையுமாகும்.
=======================================
ஏழாம் தந்திரம்-33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை பாடல்கள்: 013
பாடல் எண் : 1
குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே.

பொழிப்புரை :  ஒவ்வொரு மனித உயிரையும் ஒவ்வொரு நீர்வாழ் உயிராகக் கருதினால் அவ்வுயிர் வாழ்வதற்கு உள்ள குளமும் ஒரு சாண் குறுக்களவுடைய வட்ட வடிவினதாய்த் தோன்றும். எனவே அதன் ஆழமும் ஒரு சாணளவே உள்ளதாக மதிக்கப்படும். ஆயினும் அவ்வாறின்றி ஒரு சாணுக்குமேல் கூடுதலாக ஒரு முழ ஆழம் உள்ளது. (குளம் - முகம். ஆழம் கழுத்திற்குக் கீழ் மூலாதாரம் வரை உள்ள இடம்.) மேற்குறித்த குளத்தில் ஐந்து கொடிய மீன்கள் உள்ளன. (அவை அந்நீர் வாழ் உயிரை அமைதியாக வாழ விடாமல் அலைக்கழிப்பன. மீன்கள், (ஐம்பொறிகள்) இந்த நிலைமை எமக்குந்தான் உள்ளது. இதனை அறிந்த ஓர் வலைஞன் எம்மிடத்தில் இரக்கங்கொண்டு வலையைக் கொணர்ந்து வீசினான். மீன்கள் தப்ப முடியாமல் அவ்வலையில் அகப்பட, வலைஞன் அவைகளைத் தான் எடுத்துக் கொண்டான். (சிவன் கருணை கூர்ந்து தனது சத்தியைச் செலுத்தி எமது ஐம்பொறிகளைத் தன்னையே பற்றியிருக்கச் செய்தான்.) அதனால் யாம் துயர் ஒழிந்தோம்.
=======================================
பாடல் எண் : 2
கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம்
அடக்க லுறுமவன் றானே அமரன்
விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
நடக்கில் நடக்கும் நடக்கு மளவே.

பொழிப்புரை :  நாம் நடத்தினால் நடந்து, கிடத்தினால் கிடப்பதாகிய உடம்பை நம் விருப்பத்தின்படியே நடத்திட ஒட்டாது, அதினின்றும் எழுகின்ற ஐந்து இந்திரியங்களும் கிளர்ச்சி செய்கின்றன. அக்கிளர்ச்சியை அடக்குபவனே மனிதருள் தேவனாவான். அவ்வாறின்றி, அக்கிளர்ச்சியின் வழிப்பட்டு நமது உடம்பாகிய ஒரு மாமிச பிண்டத்துடன் இன்னொரு மாமிச பிண்டத்தை அணைத்து இன்பம் அடைய விரும்புவனவாய் உள்ளன தமது மனங்கள். அந்த மனத்தின் வழியே நாம் நடந்து கொண்டிருந்தால் நமது உடம்புகள் அவற்றிற்கு வரையறுத்த நாள் வரையில் நடந்து பின்பு வீழ்ந்துவிடும்.
=======================================
பாடல் எண் : 3
அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.

பொழிப்புரை :  `ஐம்பொறிகளையும் அடக்குதல்` என்பதற்கு, `அவற்றைக் கெடுத்தல்` எனப்பொருள் செய்து, `அவற்றை அடக்கு, அடக்கு` என மாணாக்கர்க்கு வலியுறுத்திக் கூறும் ஆசிரியர் உண்மை ஞானாசிரியர் ஆகார். ஏனெனில் அவ்வாறு அடக்கி உயர்நிலை பெற்றவர் வானுலகத்திலும் இல்லை. அதற்குக் காரணம் ஐம் பொறிகளைக் கெடுத்தொழித்தால் அவற்றால் அறிந்துவருகின்ற ஆன்மா அறிவற்ற சடம்போல் ஆகிவிடும். அதனையறிந்து யான் அவற்றைக் கெடுத்திடாது செயற்பட வைத்தே பெறுகின்ற ஞானத்தை அறிந்தேன்.
=======================================
பாடல் எண் : 4
முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.
பொழிப்புரை :  ஐந்திந்திரியங்களாகிய மத யானைகள் தறியில் கட்டுண்ணாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல்புடையன. அதையறிந்து நான் அவைகளை அடக்கி நேரிய வழியில் செலுத்துதற் பொருட்டு ஞானமாகிய அங்குசத்தைப் பயன்படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமான உணவை அளவு கடந்து உண்டு, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.
=======================================
பாடல் எண் : 5
ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.

பொழிப்புரை :  இந்திரியங்களாகிய யானைகள் ஐந்தும் மதம் பிடித்துத் திரியாமல் ஆன்ம அறிவாகிய கூடத்திற்குள்ளே அடங்கியிருக்குமாயின் அதுவே அறம், தவம், இறையுலகப் பேறு, ஞானம் எல்லாமாம்.
=======================================
பாடல் எண் : 6
பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம்
பெருக்கிற் பெருக்கும் சுருக்கிற் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :  `உலகம் நிலையற்றது` என்பதைக் கூறும் நூல்களைப் பலவாக எடுத்துச் சொல்லி, அவற்றின் பொருளையும் பலவாறாக விளக்கிப் பேசினாலும், `உலகம் கானல் போல்வது` என்பதைக் கல்வியளவிலும் கேள்வியளவிலும் உணர்ந்தாலும் அவை யெல்லாம் இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாவன அல்ல. ஏனெனில், நிலையாதவற்றின்மேல் அவாக்கொண்டு ஓடி அவற்றுள் முன்னர் ஒன்றைப் பற்றிக் கிடந்து, பின்பு அதனை விட்டு மற் றொன்றின்மேல் தாவி அதனைப் பற்றிக்கிடந்து இவ்வாறு முடிவின்றிச் செல்வது மனமே. அதனால் அஃது அவ்வாறு முடிவின்றி ஓட விட்டால், அது புலனுணர்வை முடிவின்றித் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும். மனத்தை ஓடவிடாது நிறுத்திவிட்டால், புலன் உணர்வின் தோற்றமும் இல்லையாய் விடும். ஆகையால் மனத்தை யடக்குதலே இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாகும். `இந்திரியங்களை அடக்குமாறு எவ்வாறு` என ஆராய்பவர்க்கு அறிய வேண்டிய பொருளாயிருப்பது அவ்வளவே.
=======================================
பாடல் எண் : 7
இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த
கிளைக்கொன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
அளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கின்
துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே.

பொழிப்புரை :  இன்பத்தை நுகர்ந்து இனிதே வாழ்தற்கு உரியனவாகிய உயிர்கள் அவ்வாறின்றித் துன்பத்திற் கிடந்து துயர் உறுதலை அறிந்து அவை அத்துன்பத்தினின்றும் நீங்குதற்குரிய வழியை அமைத்துக் கொடுத்து, அதனாலே உறவாதற்குப் பொருந்தியவன் தானேயாய் நிற்கின்ற இறைவனைப் புகழ்ந்து போற்றி அதனால் தானும் என்றும் அழியாப் புகழைப் பெறுகின்ற அறிவன், ஐம்பொறிகளாகிய பாம்புகள் ஐந்தும் தாம் படம் எடுத்து ஆடுகின்ற ஆட்டத்தை விடுத்துத் தமது புற்றிலே சென்று அடங்கிக் கிடக்கும்படி அடக்கி விடுவானாயின், அதன்பின், அவனும் துளையை உடைய அந்தப் புற்றுவழியாகவே இன்பம் பெற்று அமைதியை அடைவான்.
=======================================
பாடல் எண் : 8
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே.

பொழிப்புரை :  பூத காரியங்களாகிய ஐம்புலப் பொருள்கள்மேல் மதங்கொண்டு செல்கின்ற ஐந்து இந்திரியங்களாகிய யானைகளை அவற்றின் வழியே செல்கின்ற உயிரினது அறிவு, தான் அடையத்தக்கதாகிய திருவடி ஞானமாகிய தறியை அடைந்து அதன்கண் கட்டிவிட, அதனைக் கண்டு, அறிவர் பலரும் அறிந்து அடைகின்ற அருளானந் தத்தை இறைவன் தருவானாயின், அதுவே, யாவரும் மேற்கொள்ளத் தக்க முதல் நூல் விதியின் பயனாகும்.
=======================================
பாடல் எண் : 9
நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே.

பொழிப்புரை :   உயிர் செய்யும் செயல் யாவற்றிலும் தானும் உடனாய் நின்று செய்யும் சிவனை அறியாது அனைத்துச் செயல்களையும் தானே செய்வதாகக் கருதி மயங்குகின்ற உயிர் அம்மயக்கத்தினின்றும் நீங்கி அவனை இடைவிடாது உணர்ந்து நிற்பின், ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கிய நிலை ஒருவர்க்கு வாய்க்குமாயின், உலகில் உள்ள அனைத்துக் கோயில்களும் அவரது மனமாகிய அந்தக் கோயிலாகவே அமைந்துவிடும்.
=======================================
பாடல் எண் : 10

சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழஅதில் தாங்கலும் ஆமே.

பொழிப்புரை :  வாழ்நாளில் கழிவன சில நாழிகைகள் போலத் தோன்றுகின்றன. ஆயினும் அவை உண்மையில் சிலவும், பலவுமான நாட்களாய் விடுகின்றன. நெடுங்காலம் நிற்பதுபோலத் தோன்றுகின்ற உடம்பு நீர்மேல் எழுத்துப்போல விரைய மறைவதாகின்றது. இதனை உணர்ந்து, `அறிவுடையேம்` என உங்களை நீங்களே மதித்துக் கொள்கின்ற உலகீர், இளமையிற்றானே ஐம்புல ஆசையை வென்று, அப்புலன்களுக்குச் சார்பாய் உள்ள பொருள்களைத் துறந்து விடுங்கள். இல்லையேல், அவ்வாசையால் விளையும் வினைகள் மலைபோல வந்துவிழும்; அவைகளைத் தாங்க இயலாது.
=======================================
பாடல் எண் : 11
போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டுப் புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத் தொருங்கலு மாமே.

பொழிப்புரை :  சிவனது திருமேனியைத் துதிக்குமாற்றால் பருப் பொருள்களாய் உள்ள அவைகளைச் சார்ந்துள்ள புலன்களை விரும்பிச் செல்கின்ற மனத்தை அச்செலவினின்றும், மீட்டு, மீண்டும் அதனையே துதி. அங்ஙனம் துதித்தால், அப்பெருமானை அவனது ஆனந்தத்தைப் பொழிகின்ற மனத்திலே ஒன்றியிருக்கச் செய்தலும் கூடும்.
=======================================
பாடல் எண் : 12
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தி னுள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.

பொழிப்புரை :  சிவபெருமானது உருவத் திருமேனியினுள்ளே படிந்து நிற்றற்குரிய மனத்தை அங்ஙனம் நிற்க ஒட்டாமல் நச்சரித்துப் பெயர்க்கின்ற ஐம்புலன்களாகிய குறும்பரது தீச்செயலை உலகவர் யாரும் உணர்வதில்லை. அதனால் அங்ஙனம் உணராத நிலையில் இருந்து கொண்டே கவலையின்றி ஒருவரோடொருவர் நகையாடிச் சிலவும் பலவுமாகிய பேச்சுக்களைப் பேசி அவர் பொழுது போக்குவாரேயானால் அவரது செயல் தனது நிலையான இயற்கைப் பொலிவுடன் விளங்கத் தக்கதாகிய மலையை நிலையாது நீங்கும் அழகையுடைய மேகங்கள் வந்து சூழ்ந்து மறைத்தல் போல்வதாகும்.
=======================================
பாடல் எண் : 13
கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள்
எய்தி யவனை இசையினால் ஏத்துமின்
ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.

பொழிப்புரை :  `ஐந்திந்திரியங்களை அடக்குதல் நம்மால் ஆகிற காரியம் அன்று` என இளைத்து, அதனைக் கைவிடுதற்குக் காரணம் சிறிதும் இல்லை. ஏனெனில், ஐந்திந்திரியங்களின் அவாவிற்குக் காரணமான நிலையற்ற பொருள்களில் பொருந்தியுள்ள புலன்களும் ஐந்திற்குமேல் இல்லை. அந்த ஐந்தையும் அடக்குதற்குச் செய்யத் தக்க உபாயமும் ஒன்றே ஒன்றுதான். அஃது ஒருபொழுதும் நம்மை விட்டு நீங்கிச் சேய்மையில் இல்லாது, எப்பொழுதும் நம் உள்ளத்திலேயே வீற்றிருக்கின்ற சிவனை நல்ல இசைப் பாடல்களால் துதிப்பதுதான். ஆகவே, அதனைச் செய்து இந்திரியங்களை அடக்கி, இன்பம் எய்துங்கள்.
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!