பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்...பாடல்கள்: 018
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -002
கூடுதல் பாடல்கள் (018+003 =021)
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003
==============================================
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -002
============================================== =
எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்-பாடல்கள்-018
பாடல் எண் :
1
காயப்பை ஒன்று சரக்குப் பலஉள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பைஉண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பைஉண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.
பொழிப்புரை : ஒரு பையில் பல பண்டங்களை
அடைத்து வைத்தல் போல,
யாவராலும் நன்கு
அறியப்படும்
உடம்பாகிய ஒரு பை ஒவ்வோர்
உயிர்க்கும் கிடைத்திருத்தல் கண்கூடாக, அதன்கண் அடைக்கப்பட்டுள்ள பண்டங்களோ பல உள்ளன. (அவற்றை ஆராய்கின்றார்
ஒருவரும் இல்லை) இனி, அந்தப்
பை மாயம்போலக் கட்புலனாகி,
விரைவில் மறைவதாகும். என்றாலும்,
அந்தப் பைக்குள்ளே
மற்றொரு பையும் உண்டு;
(அதனை அறிந்தோர் சிலரே.) யாவரும் அறிந்த அந்தப் பைக்குள் அதற்கு வேறாகிய ஒன்று
உள்ளதோ, இல்லதோ`
என ஐயுறுமாறு ஒளிந்து
நிற்கின்ற உயிர் அதனை விட்டு வெளியே போய்விடுமானால், தோன்றியழிவதாகிய அந்த உடம்பு மண்ணோடு மண்ணாய்ப்போக, அதனை நிலையானதாகக் கருதி, அதனைத் தமக்கு உறவாகத் தெளிந்திருந்தோர் திகைப்புற்று நிற்கும் நிலை இரங்கத் தக்கதாகும்.
**********************************************
பாடல் எண் :
2
அத்தன் அமைத்த உடல்இரு கூற்றினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமன்ஆங் காரம் புரியட்ட காயமே.
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமன்ஆங் காரம் புரியட்ட காயமே.
பொழிப்புரை : இறைவன் உயிர்கட்காக அமைத்துக்
கொடுத்த, `தூலம்,
சூக்குமம்` என்னும் இருவகை உடம்புகளுள் (தூலஉடம்பின்
இயல்பு பற்றி மேலே கூறினோம்) இனி அதுபோலப் புலால் நாற்றம்
நாறுதல் இன்றியே உயிர்க்குப் பயன்படுகின்ற சூக்கும தேகத்தைப் பற்றிக் கூறுமிடத்துச் சத்தம் முதலிய தன் மாத்திரைகள் ஐந்தும், அந்தக் கரண நான்கனுள் சித்தம் ஒழிந்த
ஏனை மூன்றும் ஆக எட்டும் கூடியதாகும். அதனால் அது, `புரியட்டகாயம்` என்றும்
சொல்லப்படும்.
**********************************************
பாடல் எண் :
3
எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்றும் கரணம தாயிடும்
ஒட்டிய பாசம் உணர்வது வாகவே
கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.
கட்டிய மூன்றும் கரணம தாயிடும்
ஒட்டிய பாசம் உணர்வது வாகவே
கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.
பொழிப்புரை : எட்டுக் கருவிகள் கூடியதனால் `புரியட்ட
காயம்` எனப்படும் உடம்பு - என மேற்கூறப்பட்ட
சூக்கும சரீரத்திலிருந்தே மாபூதங்கள் ஐந்தும், இருவகை இந்திரியங்களும்
தோன்றும். (எனவே, அப்பதினைந்தும் கூடியதே தூலசரீரமாம்.) இனித்தூல
சரீரத்தில் உள்ள இருவகை இந்திரியங்களும், சூக்கும
சரீரத்தில் உள்ள
அந்தக்கரணங்கள் மூன்றும் `சரீரம்` எனப்பட்டாலும், உண்மையில்
அவை கரணங்களே யாம்.
அறிவுக்குத் துணையாதல் பற்றி
ஆன்மாவோடு பெரிதும் ஒற்றுமைப்பட்டு நிற்கின்ற அவற்றைக்
கொண்டே சிவன் ஆன்மாவின் அறிவைப் புலன்களில் அகப்படுத்தி வைத்துப் பின்பு அப்புலன்களினின்றும் பிரித்துவிடுவான்.
**********************************************
பாடல் எண் :
4
இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் மற்றாறும் முடிவிலே.
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் மற்றாறும் முடிவிலே.
பொழிப்புரை : `மாபூதங்கள் மட்டுமே உயிர்க்குக் கரணம் ஆகாதொழிய, `இருவகை இந்திரியங்களும் அந்தக்கரணம்
போல உயிர்க்குக் கரணமாம்`
என மேலே சொல்லப் பட்டமையால், `மாபூதங்ளும் அவற்றின் காரியங்களுமே தூல தேகமாக இந்திரியங் களும் அந்தக்கரணம்போலச் சூக்கும தேகமாம் என்றலே பொருத்தமுடைத்துப் போலும்` எனின்,
அங்ஙனம் கொள்ளுதல்
பொருந்துவதன்றாம். (இந்திரியங்கள் தூல தேகத்தில் இருந்து
புறப்பொருளை அறிதலும்,
பொருள்களை எடுத்தல், கொடுத்தல் முதலிய வற்றைச் செய்தலும்
கண்கூடாதலின் அவை தூல தேகமேயாம் என்பது கருத்து.) இனி மூலப்பிரகிருதியினின்றும்
தோன்றுவனவாகிய பஞ்சக் கிலேசங்களால் அவற்றிற்கு முன்பே
தோன்றிய பொதுப் புருட தத்துவத்தில் சிறப்புப் புருட தத்துவம் பொருந்தும். வித்தியா தத்துவம் ஏழில் `புருடன்` தவிர மற்றை ஆறு தத்துவங்களும் புருட
தத்துவத்திற்கு மேலே உள்ளனவாகும்.
**********************************************
பாடல் எண் :
5
இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே?
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே?
பொழிப்புரை : நிலையாய் இராமல் நிலையழிந்து
ஒழிந்து போவனவாகிய குருதி,
இறைச்சி முதலிய அழுக்குப் பொருள்களாம் பருப்பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல
உடம்பு வேறு
ஏதுவாதல் கூடும்?
**********************************************
பாடல் எண் :
6
ஆரே அறிவார் அடியின் பெருமையை
ஆரே அறிவார் அருந்தவம் நின்றது
ஆரே அறிவார் அறுபத்தெட் டாக்கையை
ஆரே அறிவார் அடிக்காவ லானாதே.
ஆரே அறிவார் அருந்தவம் நின்றது
ஆரே அறிவார் அறுபத்தெட் டாக்கையை
ஆரே அறிவார் அடிக்காவ லானாதே.
பொழிப்புரை : மேல்,
`அத்தன் அமைத்த உடல்` என்றபடி உயிர்களின் தகுதியை அறிந்து அத்தகுதிக்கேற்பப்
பல்வேறு வகையான உடம்புகளை அமைத்துத் தருகின்ற இறைவனது அருள்
மிகுதியையும் ஆற்றலின் மிகுதியையும் அறிய வல்லுநர் யாவர்; அந்நிலையில் `மக்களாய்ப் பிறந்தோர்
அவ்வுடம்பைப் பெறுதற்குப் பல பிறவிகளில் தாம்
செய்த நல்வினை இவை` என்பதை அறிய வல்லுநர் யாவர்; மக்களுடம்பு
அசுத்த உலகத்து உளது ஆதலின் அஃது அவ்வுலகத்திற்கு மேல் உள்ள மிச்சிர உலகம், சுத்த உலகம் என்பவற்றில்
உள்ளோரது உடம்புகளிலுள்ள கருவிகட்குமேல் அறுபத்தெட்டு கருவிகள் கூடியது என்பதை
அறிபவர் யாவர்! மூவகை உலகத்து உயிர்கட்கும் திருவருளே
முதற்காவலாய் உள்ளது என்பதை அறிகின்றவர் யாவர்! ஒருவரும்
இல்லை.
**********************************************
பாடல் எண் :
7
எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்பு தன்னால்உடம் பாமே.
கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்பு தன்னால்உடம் பாமே.
பொழிப்புரை : உடம்பை
`எண்சாண் உடம்பு` என்றல் யாவரும் அறிந்தது. `அவரவர் கையால் எண்சாணேயாகும்` என்பது இதன் பொருள். `எறும்பும் தன் கையால்
எண்சாண்` (தனிப்பாடல் திரட்டு, என்றார்
ஔவையார். இந்த அளவு யாவராலும் நன்கறியப்பட்ட தூல தேகத்தைப் பற்றியதே. அந்த உடம்பிற்றானே கண் முதலிய ஞானேந்திரியங்களும், கால் முதலிய கன்மேந்திரியங்களும்
ஆற்றல் வடிவாய்ச் சூக்குமமாய்த் தோன்றாது நிற்கின்றன. எவ்வாற்றாலேனும், எவ்விடத்திலேனும் ஊறு உண்டாகுமாயின் அவ்விடம் புண்ணாகிக் குருதியையும், சீழையும்
ஒழுக விடுகின்ற தூல தேகத்தைத் தோற்றுவித்தற் பொருட்டு
மேற்கூறிய அறுபத்தெட்டுக் கருவிகளைத் தக்கவாற்றால் திருவருள் ஒன்று சேர்க்கின்ற சேர்க்கையால் ஓர் உடம்பிலிருந்து மற்றோர் உடம்பு தோன்றுவதாகும்.
**********************************************
பாடல் எண் :
8
உடம்பிற்குள் நாலுக் குயிராய சீவன்
ஒடுங்கும் பரனோ(டு) ஒழியாப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றதிங் காரறி வாரே.
ஒடுங்கும் பரனோ(டு) ஒழியாப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றதிங் காரறி வாரே.
பொழிப்புரை : தூல உடம்புக்குள் சூக்கும
உடம்பாய் நிற்கின்ற அந்தக்கரணங்கள் நான்கிற்கும், மேலும் நுண்ணிதான அதிசூக்கும உடம்பைக் கொண்டு இயக்கும்
முதற்பொருளாய் உள்ள சீவான்மாத்தான்
பரமான்மாவாகிய சிவத்தில் வியாப்பியமாய் நிற்கும். ஆகவே, எப்பொருளிலும் எஞ்சாது நிறைந்து நிற்கும் பிரமப்பொருளாகிய சிவம், தான் ஒன்றேயாயினும் பல
சீவான்மாக்களிலும் வியாபித்து அதனதன் தன்மைக்கேற்ப ஏகதேசமாயும்
நின்று, பின் சீவான்மா சீவத்துவம் (பசுத்துவம்) நீங்கிய பொழுது தன்னைப் போலவே வியாபகமாகி விடுதலால் அவ்வேகதேசத் தன்மை நீங்கி வியாபகமாகி விடுகின்ற தன்மை, ஞாயிறு
ஒன்றேயாய் வியாபகமாயினும் பல குடங் களில் உள்ள நீரில்
எல்லாம் அதனதன் அளவிற்கேற்ப வேறு வேறு அளவில் பலவாய்த் தோன்றி, அக்குடங்களில் நீர் நீங்கிய பொழுது முன்பு நின்ற சிறு நிலையின்
நீங்கி வியாபகமாகிவிடுகின்ற தன்மையை ஒக்கும் என்னும் உண்மையை அறிந்தனர்
எத்துணைப் பேர்!
**********************************************
பாடல் எண் :
9
ஆறந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென் றிருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டுங் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம் பென்னுமே.
தேறிய மூவாறும் சிக்கென் றிருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டுங் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம் பென்னுமே.
பொழிப்புரை : யோகமுறையால் ஆறு ஆதாரங்களும் கீழாகியதனால், அவற்றிற்குமேல் உள்ள பிரமரந்திரத்தை அடைந்தால், அங்ஙனம் அடைந்தவருடைய தூல உடம்பு விரையில் அழிந்தொழியாது உறுதி பெற்று நெடுநாள் இருக்கும். அந்நிலையில் சூக்கும உடம்பும் அதற்கு
சார்பாய் உறுதிப்பட்டு நின்று, அதனை
என்றுமே உயிர் உள்ள உடம்பாகச் செய்யும்.
**********************************************
பாடல் எண் :
10
மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.
பொழிப்புரை : `தூலம், சூக்குமம்,
பரம்` என்னும் மூன்றுடம்புகளையும் ஒருங்குசேர்த்து ஓர் உடம்பிற்கு உவமித்தால், தூல
உடம்பு முகத்தையும், சூக்கும உடம்பு கழுத்திற்குக் கீழும், காலுக்கு மேலும் உள்ள உடலையும், பர உடம்பு கைகால்களையும் ஒத்து
நிற்கும் அவ்வாறு அமைந்த அந்தப் பேருடம்பு சிவனது திருவருளில்
அடங்கும்.
**********************************************
பாடல் எண் :
11
காயுங் கடும்பரி கால்வைத்து வாங்கல்போல்
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிற்போர்வை ஒன்றுவிட் டாங்கொன்றிட்
டேயு மவரென்ன ஏய்ந்திடுங் காயமே.
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிற்போர்வை ஒன்றுவிட் டாங்கொன்றிட்
டேயு மவரென்ன ஏய்ந்திடுங் காயமே.
பொழிப்புரை : பகைவரைச் சினக்கின்ற வேகம் பொருந்திய
போர்க் குதிரை அண்மை,
சேய்மை என்னும் இடங்கட்குத் தக்கபடி முன்கால்களை எட்டி வைத்துப் பின் கால்களை வாங்கிக்கொண்டு தடையின்றி ஓடுதல் போலச் சூக்கும உடல் அண்மை
சேய்மைகளுக்கு
ஏற்ப விரைந்து செல்லவல்லது.
அதனால், உயிர் அவ்வுடலைப் பற்றிக் கொண்டு, அத்தன்மையில்லாத தூல உடம்புகளுள் ஒன்றை விட்டு நீங்கி மற்றொன்றை
எங்கு வேண்டுமானாலும் சென்று எடுத்துக் கொள்ளும். தூல சரீரம் சூக்கும
சரீரத்தின் மேல் போர்வை போலவே உள்ளதாகும். அதனால், உயிர்
தூல உடம்பில் ஒன்றை நீக்கி விட்டு, மற்றொன்றை எடுத்துக் கொள்ளுதல் மக்கள் தமது போர்வை ஒன்றை நீக்கிவிட்டு மற்றொன்றை எடுத்துப் போர்த்துக் கொள்ளுதல் போல்வதே.
**********************************************
பாடல் எண் :
12
நாகம் உடல்உரி போலும் நல் அண்டசம்
ஆகும் நனாவில் கனாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்(று)
ஏகும் இடம்சென்(று) இருபயன் உண்ணுமே.
ஆகும் நனாவில் கனாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்(று)
ஏகும் இடம்சென்(று) இருபயன் உண்ணுமே.
பொழிப்புரை : இவ்வுலகில் ஓர் உடம்பை விட்டு
நீங்கிய உயிர் இறைவனது அருளாணையின்படி வேறோர் உடலில் சென்று, அவ்வுடலுக்குரிய இடத்தை அடைந்து, முன்பு இருந்து இடத்தில் அனுபவித்த
அனுபவங்களை மறந்து அவ்விடத்து வரும் இன்பத் துன்பங்களை அனுபவிக்கும் அவை எவை போல எனின், பாம்பு முன்பிருந்த உடம்பாகிய தோலை நீக்கிவிட்டுப்
புதிய உடம்பைப் பெறுதல் போல்வதும், முட்டையிற்
பிறக்கும் உயிர்கள் முன்பு முட்டைக்குள் இருந்து பின்பு வெளிவந்து வேறு
இடத்தை அடைதல்
போல்வதும், கனவில்,
முன்பு நனவில்
நிகழ்ந்தவற்றை மறத்தல் போல்வதுமாகும்.
**********************************************
பாடல் எண் :
13
உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும் சூக்கம் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்பிறப் பெய்தியே.
கண்டு விடும் சூக்கம் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்பிறப் பெய்தியே.
பொழிப்புரை : ஓர் உயிர் நிலத்தில்
இறந்தபின் சூக்கும சரீரம் பற்றாகச் சென்று நரக சுவர்க்கங்களை
அடைந்து அங்கு உள்ளவைகளைப் பார்த்து அவற்றால் வரும் துன்ப இன்பங்களை நுகர்ந்து, அந்த
உலகங்களை விடுத்துத் தான் செய்த வினையில் மேற் கூறிய
உலகங்களில் நுகரப்பட்டு எஞ்சி நிற்கின்ற வினைகள் தொடர்தலால், யோக சித்தர் ஓர் உடம்பை
விட்டும் மற்றோர் உடம்பில் புகுதல் போல வேறு பிறப்பை அடைந்து
மீண்டு நிலவுலகத்தில் அப்பிறப்பிற்குரிய உடம்பை எடுத்துக் கொள்ளும்.
**********************************************
பாடல் எண் :
14
தானவ னாகிய தற்பரந் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
ஏனை உயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.
ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
ஏனை உயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.
பொழிப்புரை : தான் சிவனேயாய் நிற்கின்ற சிவயோகி, அது காறும் தான் அடைந்திருந்த நிலைகளை யெல்லாம்
போக்கி, உடல் நீங்கினபின் அந்நிலைக்கு அப்பாற்பட்ட முடிநிலைப்பேற்றை அடைவான். அந்நிலையை அடையாது தாமேயாய் நிற்கின்ற
மற்ற உயிர்கள் தாம் செய்த வினைக்கீடாகக் கிடைக்கின்ற இடங்களில்
செல்வனவாய், விண்ணுலகிலும், மண்ணுலகிலும்
புகுந்து துன்புறும்.
**********************************************
பாடல் எண் :
15
ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாம் அஞ்
ஞானிக்கூன் நிற்கு முடம்பே யதுவாகும்
மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.
ஞானிக்கூன் நிற்கு முடம்பே யதுவாகும்
மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.
பொழிப்புரை : மெய்ஞ்ஞானிக்கு உடம்பாவது சிவனது
அருளாகிய உடம்பேயாம்,
அஞ்ஞானிக்கு உடம்பாவது
புலாலால் ஆகிய அந்த உடம்பேயாம். அஞ்ஞானிக்குமேல் நிற்பவனாகிய யோகிக்குப்
பைசந்தி வாக்கும் அதற்கு மேல் உள்ள சூக்குமை வாக்கும் தக்கபடி உடம்பாகும். ஞானத்தின் மேல் எல்லையாகிய மோன நிலையை எய்தியவன் முப்பாழையும்
கடந்த முத்தி
நிலையையே உடம்பாகக்
கொண்டிருப்பான்.
**********************************************
பாடல் எண் :
16
விஞ்ஞானத் தார்க்கா ணவமே மிகுதனு
எய்ஞ்ஞானத் தார்க்குத் தனுமாயை தானென்ப
அஞ்ஞானத் தோருக்குக் கன்மம் தனுவாகும்
மெய்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.
எய்ஞ்ஞானத் தார்க்குத் தனுமாயை தானென்ப
அஞ்ஞானத் தோருக்குக் கன்மம் தனுவாகும்
மெய்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.
பொழிப்புரை : மூவகை ஆன்ம வர்க்கத்தினருள்
விஞ்ஞானகலர் நிலையை ஆணவமே சூக்கும தேகமாய் நிற்கும். இனி
அந்த விஞ்ஞானகலர்க்கு அடைய இருப்பவராகிய பிரளயாகலருக்கு அசுத்த மாயையே எல்லா உடம்புமாய் இருக்கும். `ஞானம்
இல்லா தவர்` எனப் படுகின்ற சகலர்க்குக் கன்மத்திற்கு
ஈடாக வருகின்ற பிராகிருதங்களே உடம்பாகும். ஆகவே, அருள்உடம்பு மெய்ஞ்ஞானைத்தை எய்தினவர்கட்கே வாய்ப்பதாம்.
**********************************************
பாடல் எண் :
17
மலமென் றுடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென் றிதனையே நாடி யிருக்கின்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் வண்டத்தே.
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென் றிதனையே நாடி யிருக்கின்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் வண்டத்தே.
பொழிப்புரை : அறிவுடையீர், தம்
உடம்பை அருவருத்து நீக்கத் தக்கதாக அறிவும் அறிவையில்லாதவர் அதனையே தாம்,
என்றும் இருக்கும்
இடமாகக் கருதி, அதன்கண் தனியான ஒருபற்று வைத்துப் போற்றிவருதலைக்
கண்டீரன்றோ! அவர் நிலையை அடைந்திருக்கும் உயிர்கள் அதன் பயனாகப் பற்பல தூல தேகங்களை எடுத்து உலகங்களிலேயே உழலும்.
**********************************************
பாடல் எண் :
18
நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்லவிளை யாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்லத் தரித்தார் மிகுத்தார் பசித்தே.
மெல்லவிளை யாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்லத் தரித்தார் மிகுத்தார் பசித்தே.
பொழிப்புரை : நல்ல சொற்களையே பேசுகின்ற
வாக்கிலும், நல்ல நினைவுகளையே நினைக்கின்ற மனம் முதலிய
அகக்கருவிகளிலும் இறைவன் மெல்ல மெல்ல வெளிப்பட்டு விளையாடுவான். நல்லன அல்லாத சொற்களையே கேட்க விரும்பு கின்ற செவியையும், அவ்வாறே,
அறியத் தகாத தம் தம் புலன்களையே அறிய விரும்புகின்ற கண் முதலிய ஏனைப்
பொறிகளையும், நல்லன அல்லாதவற்றையே நினைக்கின்ற உட்கருவிகளையும் உடைய மக்கள்
இவ்வுலகில் வறுமையால் பசி மிக்கவராய் வருந்துவர்.
**********************************************
எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல் – பாடல்கள்-003
பாடல் எண் :
1
பண்ணாரும் காமம், பயிலும்
வசனமும்,
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும்,
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும்,
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.
பொழிப்புரை : நன்கு அமைந்த உடலால் எழுகின்ற
காமமும், பலவகையாகப் பேசுகின்ற பேச்சுக்களும், வெளிச்செல்லும் பொழுது விளங்கி நிற்கின்ற மூச்சும், அம்மூச்சுப் பெரிதாயவழி எழுகின்ற
ஓசையும், புலால் வடிவாகிய உடம்பின் உள்ளே இருப்பதாகிய மனமும் ஆகிய இவைகளையெல்லாம் பிறர், `எங்கே
போயின` என்று திகைத்து அண்ணாந்து பார்க்கும்படி
உடல் முதலில் நிலையழிந்து,
பின்னர் உருவும்
அழிந்தொழியும்.
**********************************************
பாடல் எண் :
2
அழிகின்ற ஓர்உடம் பாகும் செவி,கண்,
கழிகின்ற கால்,அவ் இரதங்கள், தானம்,
மொழிகின்ற வாக்கு, முடிகின்ற நாடி;
ஒழிகின்ற ஊனுக் குறுதுணை யில்லையே.
கழிகின்ற கால்,அவ் இரதங்கள், தானம்,
மொழிகின்ற வாக்கு, முடிகின்ற நாடி;
ஒழிகின்ற ஊனுக் குறுதுணை யில்லையே.
பொழிப்புரை : நிலையின்றி அழிவதாகிய உடம்பை இடமாகக்
கொண்டிருப்பனவே செவி,
கண் முதலிய அறிவுப் பொறிகளும்,
வாக்கு முதலிய
செயற்பொறிகளும், அவற்றின்வழி வருகின்ற புல இன்பங்களும், அந்தக் கரணங்களுக்கு வலுவூட்டுகின்ற பிராண வாயுவும், ஒன்றையொன்றோடு முடிந்துவைத்துள்ள நாடிகளும், மற்றும் பல ஆற்றல்களுக்கு உரிய இடங்களும்.
ஆகவே, உடம்பு அழிந்தால், அவையும்
அதனோடே அழிந்தொழிதலால்,
அழிவதாகிய உடம்பிற்கு
அதனை அழியாது நிலைபெறுத்துவ தொருதுணை எதுவுமில்லை.
**********************************************
பாடல் எண் :
3
இலையாம் இடையில் எழுகின்ற காமம்
உலைவாய நேசத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் னிடைக்கே.
உலைவாய நேசத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் னிடைக்கே.
பொழிப்புரை : மாதரது நுண்ணிய இடையின்மேல்
எழுகின்ற காம உணர்ச்சி மக்கள் உள்ளங்களில் உலையிடத்தில்
உள்ள நெருப்புப்போல மிகுகின்ற ஆசையாலே பெருகி மிகும். ஆயினும்
அந்த ஆசையால் சிறிதும் கலங்காது கல்போல உறுதியுற்று நிற்கும் உள்ளம் உடையவர்கள், சிவனது
திருமுன்பில் காமம், குரோதம் முதலிய குற்றங் களோடுகூடாது மேன்மையுற்று
விளங்குகின்ற ஒளி உடம்பைப் பெற்று வாழ்வார்கள்.
**********************************************
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!