பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003
எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001
எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020
எட்டாம் தந்திரம்:பதிக எண்:17: அடிதலை அறியும் திறங்கூறல் .பாடல்கள்: 010
எட்டாம் தந்திரம்:பதிக எண்:18: முக்குற்றம்....................பாடல்கள்: 002
எட்டாம் தந்திரம்:பதிக எண்:19: முப்பதம்......................பாடல்கள்: 008
எட்டாம் தந்திரம்:பதிக எண்:20: முப்பரம்.......................பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:19: முப்பதம்......................பாடல்கள்: 008
எட்டாம் தந்திரம்:பதிக எண்:20: முப்பரம்.......................பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:21: பர லக்கணம்............பாடல்கள்: 014
எட்டாம் தந்திரம்:பதிக எண்:22: முத்துரியம்...............பாடல்கள்: 008
எட்டாம் தந்திரம்:பதிக எண்:23: மும்முத்தி..................பாடல்கள்: 004
எட்டாம் தந்திரம்:பதிக எண்:26: முச்சூனிய தொந்தத்தசி.பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:27: முப்பாழ்.....................பாடல்கள்: 006
எட்டாம் தந்திரம்:பதிக எண்:23: மும்முத்தி..................பாடல்கள்: 004
எட்டாம் தந்திரம்:பதிக எண்:24: முச்சொருபம்..........பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:25: முக்கரணம்...............பாடல்கள்: 003 எட்டாம் தந்திரம்:பதிக எண்:26: முச்சூனிய தொந்தத்தசி.பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:27: முப்பாழ்.....................பாடல்கள்: 006
எட்டாம் தந்திரம்:பதிக எண்:28: காரண காரிய உபாதி ..பாடல்கள்: 004
எட்டாம் தந்திரம்:பதிக எண்:29: உபசாந்தம்..........பாடல்கள்: 006
எட்டாம் தந்திரம்:பதிக எண்:30: புறங்கூறாமை...பாடல்கள்: 015
எட்டாம் தந்திரம்:பதிக எண்:29: உபசாந்தம்..........பாடல்கள்: 006
எட்டாம் தந்திரம்:பதிக எண்:30: புறங்கூறாமை...பாடல்கள்: 015
==============================================
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -030
கூடுதல் பாடல்கள் (387+06+15=408) தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -030
==============================================
எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்-பாடல்கள்-06
பாடல்
எண் : 1
முத்திக்கு
வித்து முதல்வன்றன் ஞானமே
பத்திக்கு
வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு
வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு
வித்துத் தனதுப சாந்தமே.
பொழிப்புரை : ``பற்றுக பற்றற்றான்; பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு``*
என்றபடி, உலகப் பற்றை நீக்குதற்கு
வழி சிவப்பற்றைக் கொள்ளுதலாகும். அப்பற்று உண்டாதற்கு வழி, சிவனைக்
குருலிங்க சங்கமங்களை வழிபட்டு உறுதுணையாகப் பற்றுதலாகும். மனம் புலன்களின் வழி
ஓடாது தன் வயப்படுதற்கு வழி யோக சமாதி. முத்திக்கு வழி சிவ ஞானம். அந்த ஞானம்
வருதற்கு வழி உயிர் உபசாந்தத்தை அடைதலாம்.
**********************************************
பாடல்
எண் : 2
காரியம்
ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம்
ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய
காரண வாதனைப் பற்றறப்
பாரண
வும்உப சாந்தப் பரிசிதே.
பொழிப்புரை
: `காரிய தத்துவம்` எனப்பட்ட ஆன்ம
தத்துவங்கள் பிரகிருதியில் ஒடுங்கினும், பிரகிருதி ஒடுங்காத
பொழுது அவை மீளத் தோன்றும் நிலை உளதாகும். ஆகவே, பிரகிருதி
ஒடுக்கமே காரிய தத்துவ ஒடுக்கம் ஆதலின், அஃது அசுத்த மாயையில்
ஒடுங்குவதாம். இனி, `காரண தத்துவம்` எனப்பட்ட
வித்தியா தத்துவம் ஏழும் அசுத்த மாயையில் ஒடுங்க, அசுத்த மாயை
கலக்குண்ணாது சுத்த மாயையில் வியாப்பியமாகி நிற்றலே காரணதத்துவ ஒடுக்கம் ஆதலின், அசுத்த மாயை
சுத்த மாயையில் ஒடுங்குவதாகும். (இங்கு ஒடுக்கமாவது காரியப் படுதல் இன்றி
வியாப்பிய மாத்திரம் ஆதல்) இவ்வாறு காரிய காரண உபாதிகளின் வாசனையும் அற்றபொழுது
ஆன்மா பர துரிய நிலையை அடையும். (`அப்பால் அதீத நிலை தானே
வரும்` என்பது கருத்து) `உபசாந்தம்` என்பதன் தன்மை
ஆன்மா இவ்வாறு காரிய காரண உபாதிகளின் வாசனையும் அற்றுத் துரிய நிலையை
அடைதலேயாகும்.
**********************************************
பாடல்
எண் : 3
அன்ன
துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய
சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னு
பரம்காட்சி யாவ(து) உடன்உற்றுத்
தன்னின்
வியாத்தி தனி உப சாந்தமே.
பொழிப்புரை
: முன் மந்திரத்தில், ``பார்`` எனப்பட்ட
அந்தப் பர துரியமே முற்றான ஆன்ம சுத்தி நிலையாகும். (எனினும், அதற்கு முன்னே `சிவதுரியம்` எனச்
சொல்லப்பட்ட நின்மல துரியமே ஆன்ம சுத்தியாகச் சொல்லப்படுகின்றதன்றோ எனின்` பராவத்தையில்
இனிது வெளிப்படுகின்ற பர சிவம், நின்மலாவத்தையில்
ஓரளவாக வெளிப்படுதல் பற்றி அங்ஙனம் கூறப்படுகின்றது. ஆயினும் ஆன்மா பர சிவத்தோடு
இரண்டறக் கலந்து உடனாய், வியாபகமாய் நிற்றல் ஒப்பற்ற உபசாந்தமாகிய
பராவத்தையிலே யாகலின், பர துரியமே முற்றான ஆன்ம சுத்தியாம் என்க.
**********************************************
பாடல்
எண் : 4
ஆறா
றமைந்தா றவத்தையுள் நீங்குதல்
பேறான
தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
கூறாத
சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம்
வியாத்தம் பிறங்குப சாந்தமே.
பொழிப்புரை
: முப்பத்தாறு
தத்துவங்களும் தன்னின் மேம்பட்டுத் தன்னை மயக்காதபடி அவைகளைக் கீழ்ப்படுத்தி, அவைகளால் வரும்
மயக்கத்தினின்றும் நீங்குதலே தன்னைத் தான் பெறுதலாகிய ஆன்ம தரிசனமாகும். (சிவரூபம்
இதில் உடன் நிகழும். ``தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிரெல்லாம் தொழும்` என்றார் திருவள்ளுவரும்) ஆன்ம
தரிசனத்திற்குப்பின் நிகழ்வதாகிய ஆன்ம சுத்தியாவது, சொல்
நிகழ்ச்சியில்லாத, மௌன நிலையாகிய நின்மல துரியாதீதமாகும். (இதில்
சிவதரிசனமும், சிவயோகமும் உடன் நிகழும்) ஆன்ம சுத்திக்குப்
பின் அடையற்பலாதாகிய ஆன்ம லாபமாகிய சிவப்பேறாவது, பர துரியா
தீதமே.
**********************************************
பாடல்
எண் : 5
வாய்ந்த
உபசாந்தம் வாதனை உள்ளம் போய்
ஏய்ந்த
சிவம்ஆதல் இன்சிவா னந்தத்துத்
தோய்ந்து
அறல் மோனச் சுகானு பவத்தொடே
ஆய்ந்து
அதில் தீர்கை ஆனதீ ரைந்துமே.
பொழிப்புரை
: உபசாந்தம் பத்து
நிலைகளையுடையதாகச் சொல்லப்படும்.
1.
கருவி கரணங்கள் உலகியல் வகையில் செயற்படாது, மெய்யுணர்வு
நெறியில் செயற்படுதல். (இஃது யோகாவத்தை, இது முன்பு `சீவ துரியம்` எனப்பட்டது.
இது கருவிகளின் மாற்றுச் செயல் ஆதலின், இதனை, வாதனை`` என்றார்).
2.
ஆன்மாத் தன்னைக் கருவிகளின் வேறாக உணர்தல் (இஃது ஆன்ம தரிசனமாம்.
உள்ளம் - ஆன்மா; `ஆன்மா` என்றது, `ஆன்மாத் தான்
ஆதல்` என்றபடி.)
3.
ஆன்மாத் தன்னையிழத்தல். (அஃதாவது தற்போதம் நீங்குதலாம்.) ``போய்`` என்றது, `தான் போய்` என்றபடி.
4.
தற்போதத்தை இழந்த ஆன்மாச் சிவனையே உணர்ந்து அவனேயாதல். (இதுவே
தசகாரியத்துள் சொல்லப்படும் சிவயோகம். ஆன்ம தரிசனத்தில் சிவரூபம் உடன் நிகழும்.
ஆன்ம சுத்தி சிவதரிசனத்தில் தொடங்கி சிவயோகத்தில் முற்றுப்பெறும்.)
5.
சிவானந்தம் உதயமாதல். (இது சிவயோகத்தில் முடிநிலையில் நிகழும்.)
6.
உயிர் சிவானந்தத்தை அனுபவித்தல். (இஃது `ஆனந்தானுபவம்` எனப்படும்.
இதில் உயிருக்கு, `நாம் ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம்` என்னும் உணர்வு
நிகழும்.)
7.
உயிர் ஆனந்தத்தில் அழுந்துதல். (இதில் அந்த உணர்வும்
இல்லாதொழியும்.) இஃது `ஆனந்தாதீதம்` எனப்படும். (இரண்டு
முதல் 5 முடிய உள்ள நான்கும் நின்மலாவத்தையில் சாக்கிர, சொப்பன, சுழுத்தி, துரிய
அவத்தைகளாம். 6,7 நின்மல துரியாதீதமாம்.)
8.
சகலரினின்று பிரளயாகலர்களாகப் பெற்ற உயிர்களும், பிரளயாகலரில்
பக்குவம் பெற்ற உயிர்களும் பின் விஞ்ஞானகலராய் இறைவனால் திருவருள் செய்யப்பெற்றுச்
சுத்த புவன போக்கியப் பொருள்களால் இன்புற்றிருத்தல்.
9.
அதற்கு மேலும் சுத்த புவன அதிபதிகளாய் ஆட்சி புரிதல். (இவை `அபர முத்தி` எனப்படும்).
10.
இங்குக் கூறிய இவைகளில் ஒன்றும் இன்றிச் சிவனோடு இரண்டறக் கலந்து
அவனது வியாபகத்தில் அடங்கி விடுதல் என்பன. (இறுதி மூன்றும் பராவத்தை களாம்.
அவற்றுள் பத்தாவதே பரமுத்தியாம்.)
**********************************************
பாடல்
எண் : 6
பரையின்
பரஅப ரத்துடன் ஏகமாய்த்
திரையின்இன்
றாகிய தெண்புனல் போலவுற்(று)
உரையுணர்ந்(து)
ஆரமு தொக்க உணர்ந்துளோன்
கரைகண்
டவன் உரை யற்ற கணக்கிலே.
பொழிப்புரை
: பர சிவத்தின்
சத்தியாகிய பராசத்தியின் தடத்த நிலை அதன் அபரமும், சொரூபநிலை அதன்
பரமும் ஆகும். பெத்தத்தின் நீங்கிய உயிர் முதற்கண் நின்மலாவத்தையிலும், பராவத்தையில்
அதீதத்திற்குக் கீழ்ப்பட்ட நான்கு நிலைகளிலும் பராசத்தியின் அபர நிலையைப் பொருந்தியும்
அதீதத்தில் அதன் பர நிலையைப் பொருந்தியும் அலையற்றுள்ள கடல்நீர் போல யாதோர்
அலைவுமின்றி யிருக்கும். எனினும், அபர நிலையில்
தேவாமுதத்தைப் பெற்று உண்பவன், அதனைத் தான் பெற்ற
அருமை, அதன் சுவை மிகுதி, அதன் பயன்
முதலியவற்றை உணர்ந்து நிற்பவன் போலவும், பர நிலையில் அவ்வாறு
உணர்தல் இன்றி அந்த அமுதத்தின் சுவையிலே மூழ்கித் தன்னை மறந்து நிற்பவன் போலவும்
இருப்பான். இவ்விருவரில் தன்னை மறந்து, உரையுணர்விறந்தவன்
நிலையே முடிந்த நிலையாம்.
**********************************************
எட்டாம்
தந்திரம் - 30. புறங்கூறாமை-பாடல்கள்:15
பாடல்
எண் : 1
பிறையுட்
கிடந்த முயலை எறிவான்
அறைமணி
வாட்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி
கண்டனைக் காண்குற மாட்டார்
`நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர்
தாமே.
பொழிப்புரை
: `சந்திரனிடத்து
உள்ள முயலையாம் வெட்டுவோம்` என்று சொல்லி, ஒலிக்கின்ற
மணிகட்டியுள்ள வாளையெடுத்து உயர உயர வீசுபவர் போல, அறிவில்லாதவர்
நீல மணிபோலும் கறுத்த கண்டத்தையுடைய சிவனை அடையும் நெறியை உணர மாட்டாமலே தாமே
மெய்ப்பொருளை முற்ற அறிந்த நிரம்பிய ஞானிகள் போலத் தாம் அறிந்தன சிலவற்றைக்கூறி
உண்மை ஞானியரை இகழ்வர்.
**********************************************
பாடல்
எண் : 2
கருந்தாட்
கருடன் விசும்பூ டிறப்பக்
கருந்தாழ்
கயத்தில் கரும்பாம்பு நீங்கப்
பெருந்தன்மை
பேசுதி ஒழி நெஞ்சே
அருந்தா
அலைகடல் ஆறுசென் றாறே.
பொழிப்புரை
: மனமே, `பெரிய
முயற்சியையுடைய கருடன் தன்போக்கிலே தான் ஆகாயத்தில் பறக்கவும், கரிய நாகம்
அஞ்சி ஓடி, மிக ஆழ்ந்த புற்றுள் ஒளிந்து கொள்ளுதல் போலவதே, மெய்யுணர்வுடையார் முன் மெய்யுணர்வில்லாதாரது நிலை என்பதைச் சில சான்றுகளால் நீ
உணர்ந்திருந்தும் மெய்யுணர்வில்லாதாரது கூற்றுக்களைப் பெரிதுபடுத்திப்
பேசுகின்றாய். இனி அவ்வாறு பேசுதலை விடு. ஏனெனில் உண்மை மெய்ந்நெறியாகிய
பெருநெறியில் ஏனைச் சிறுநெறிகள் எல்லாம் பெரிய ஒரு கடலிலே சிறிய பல ஆறுகள் சென்று
உருத்தெரியாது அடங்குதல் போல்வதே.
**********************************************
பாடல்
எண் : 3
கருதலர்
மாளக் கருவாயில் நின்றே
பொருதலைச்
செய்வது புல்லறி வாண்மை
மருவலர்
செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர்
வேட்ட தனிஉம்பர் ஆமே.
பொழிப்புரை
: பகைவரைப்
போர்க்களத்தில் எதிர்த்துப் போர் செய்யாது, அவர்தம் நகரத்தை
முற்றுகையிட்டே காலத்தைப் போக்குதல் புல்லறிவாண்மையாகும். சிவநெறியைச் சாராதவர்
செய்யும் பெரிய தவங்கள் எல்லாம் அப்புல்லறிவாண் மையை
ஒக்குமேயானால், அவற்றால் தரப்படும் பயன்கள் எல்லாம் சுவர்க்க
போக வாசிகளாய்ச் சில காலம் வாழ்ந்திருத்தலேயாகும்.
**********************************************
பாடல்
எண் : 4
பிணங்கவும்
வேண்டா பெருநிலம் முற்றும்
இணங்கிஎம்
ஈசனே ஈசன்என் றுன்னிக்
கணம்பதி
னெட்டும் கழலடி காண
வணங்கெழும்
நாடிஅங்(கு) அன்புறல் ஆமே.
பொழிப்புரை
: பெரிய நிலவுலகத்தவர்
யாவரும், வானுலகத்துப் பதினெண் கணங்களும், எங்கள்
இறைவனாகிய சிவனையே `பரம் பொருள்` என உடன்பட்டு
மனத்தால் நினைத்தும் பின்னர் அவன் திருவடியைக் கண்டு வாக்கால் வாழ்த்தியும்
தலையால் வணங்கியும் பயன் பெற முயல்கின்றனர். அதனை நன்கு சிந்தித்து அவனிடத்தில்
அன்பு செய்தலே தக்கது. அதை விடுத்து பிற சமயிகளது சொற்களைக் கேட்டு
மாறுபடாதீர்கள்.
**********************************************
பாடல்
எண் : 5
என்னிலும்
என்உயி ராய இறைவனை
பொன்னிலும்
மாமணி யாய புனிதனை
மின்னிய
வெவ்வுயி ராய விகிர்தனை
உன்னில்
உம் உன்னும் உறும்வகை யாலே.
பொழிப்புரை
: என்னைத்தான் நான், `என் உயிர்` என்று
ஓற்றுமைக் கிழமை பற்றி எண்ணுவேன். ஆயினும், என் உயிரினுள் உயிராய்
நின்று எனக்கு உறுதிசெய்து வருபவன் எங்கள் இறைவனாகிய சிவன். ஆகவே, `என் உயிர்` என்று யான்
வலியுறுத்திக் கூறுதற்கு உண்மையில் உரியவன் அவனே. அவன் உண்மையில் பொன்னினும், மணியினும்
சிறப்பாகக் கொண்டு போற்றத்தக்கவன். தூய்மையே வடிவானவன் உலகில் காணப்படும்
பொருள்களில் எல்லாம் மேலான ஒளிப் பொருளாகிய. பகலவன் ``வெங்கதிர்`` என்று
சொல்லப்படுதல் போல, உயிரினுள் உயிராய் இருந்து அங்குள்ள இருளை
முற்றக் கடிதலால் அவனை `வெவ்வுயிர்` என்றலும்
பொருந்தும் (`வெம்மை` என்பதற்கு, `விருப்பம்` என்பதும்
பொருளாகலின், ``வெவ்வுயிர்`` என்பது, `விரும்பத் தக்க
உயிர்` என்றும் பொருள் தரும்) அவன் உயிர்களின்
குணங்கட்கு வேறான குணங்களையுடையவன். அவனை நீவிர் நினைப்பீராயின், உம்மையும் அவன்
நினைப்பான். (அவனை நீவிர் அடைதல் கூடும்)
**********************************************
பாடல்
எண் : 6
நின்றும்
இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும்
பொருள்கள் உரைப்பவ ராகிலும்
வென்றைம்
புலனும் விரைந்து பிணக்கறுத்(து)
ஒன்றா
உணரும் ஒருவனும் ஆமே.
பொழிப்புரை
: நூல்களில் சொல்லப்பட்ட
பொருள்களைப் பிறர் அறிய நன்கு உரைப்பவராயினும், தாங்கள்
ஐம்புலன்களை வென்று, `இவன் பரமோ, அவன் பரமோ, எல்லாருமே பரமோ` என இங்ஙனம் பலவாறாக
எண்ணி அலமரும் ஐயங்களை விரைவில் விடுத்து, `இவன் ஒருவனே
பரம்` என்று ஒருதலையாக உணரத்தக்கவன் ஒரு முதல்வனே.
அத்தகைய முதல்வன் எங்கள் பரமாகிய சிவன் ஒருவனே ஆதலின், அவனையே நீவிர்
நிற்றல், இருத்தல், கிடத்தல் முதலிய
எத்தொழிலைச் செய்யினும் மனத்தால் ஒன்றியிருங்கள்; பயன்
அடைவீர்கள்.
**********************************************
பாடல்
எண் : 7
நுண்ணறி
வாய் உல காய் உல கேழுக்கும்
எண்ணறி
வாய்நின்ற எந்தை பிரான்றன்னைப்
பண்ணறி
வாளனைப் பாவித்த மாந்தரை
விண்ணறி
வாளர் விரும்புகின் றாரே.
பொழிப்புரை
: உயிர்கள் தூல சித்தாதல்
போல இல்லாமல் சூக்கும சித்தாய், சடவுலகத்தை இயக்கியும், அறிவுலகமாகிய
உயிர்களின் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்தும் நிற்கின்ற, எங்கள்
தந்தையாகிய சிவபெருமான், உயிர்களின் தனித் தன்மையை உணர்ந்து அவற்றைப்
பக்குவப்படுத்தும் முறைகளில் பக்குவப்படுத்து வோனாவான். அவனை உணர்ந்த பெருமக்களையே
உயர்ந்த அறிவினையுடையோர் சேரவிரும்புகின்றார்கள்.
**********************************************
பாடல்
எண் : 8
விண்ணவராலும்
அறிவரி யான்றன்னைக்
கண்ணற
உள்ளே கருதிடில் காலையே
எண்ணுற
வாகும் முப் போதும் இயற்றிநீர்
பண்ணிடில்
தன்மை பராபர னாகுமே.
பொழிப்புரை
: தேவர்களாலும், (உம்மையால்
மூவர்களாலும்) அறிதற்கரியவனாகிய சிவனைச் சிறுதும் இடையீடின்றி உள்ளத்தால்
பற்றுங்கள்; பற்றினால் பற்றிய அப்பொழுதே அவன் உங்களால்
விரும்பப்படும் பொருளாய் வெளிப்பட்டு விளங்குவான். அதன் பின்பு எஞ்ஞான்றும் நீவிர்
அவனை அகத்தும், புறத்தும் வழிபட்டால், உமது தன்மை
சிவத்தன்மையாய்விடும்.
**********************************************
பாடல்
எண் : 9
ஒன்றாய்
உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்றான்
அருள்செய்த பேரரு ளாளவன்
கன்றா
மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத
போது புனைபுக ழானே.
பொழிப்புரை
: சிவன், தான் பொருளால்
ஒன்றாயினும், எண்ணில்லாத பல பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
(என்றது, `அவ்வாறு வியாபிக்கும் சத்தியை உடையவன்` என்றபடி)
ஆயினும் தன்னைச் சார்ந்தவர்க்குச் சார்ந்தபின்பே அருளும் பேரருளை யுடையவன். அன்பு
செய்யும் மனத்தினர் தாம் அறிந்தவாறு செய்யும் செயல்களுக்கெல்லாம் இணங்குபவன்.
அன்பர்கள் பலவாய் நிறைந்த மலர்களைத் தூவிப் புகழும் கெடாத புகழினையுடையவன்.
**********************************************
பாடல்
எண் : 10
போற்றி
என்றேன் எந்தை பொன்னான சேவடி
ஏற்றியே
யென்றும் எறிமணி தான்அகம்
காற்றின்
விளக்கது காயம் மயக்குறல்
மாற்றலும்
கேட்டது மன்றுகண் டேனே.
பொழிப்புரை
: எம் தந்தையாகிய
சிவபெருமானது பொன் போலும் சிவந்த திருவடிகளில், அகத்தில் எனது
மனத்தையும், புறத்தில் பூக்களையும் ஏற்றி, `போற்றி போற்றி` என்று பலநாளும்
துதித்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியின் ஓசை போன்ற ஓர் ஓசை
உள்ளத்திலே கேட்டது. உடனே, காற்றின் முன்னே உள்ள விளக்குப் போல்வதாகிய
உடம்பு எந்த நேரத்திலும் நீங்குவதாயினும், அஃது என்றும் நீங்காமலே
இருப்பது போலக் காட்டி மயக்குகின்ற மயக்கத்தை நீக்கும் உபாயமும் கேட்டது. பின்பு
எல்லாவற்றையும் அடக்கி, மேலே வியாபித்துள்ள பரவெளியும் என் கண்முன்
காணப்பட்டது.
**********************************************
பாடல்
எண் : 11
நேடிக்கொண்
டென்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபுக்
காரும் உணர்ந்தறி வார் இல்லை
கூடுபுக்
கேறலுற் றேன் அவன் கோலம் கண்
மூடிக்கண்டேன்
உல கேழும்கண் டேனே
பொழிப்புரை
: என்னைத் தானே
தேடிக்கொண்டு வந்து என்னுள்ளேயிருக்க ஒருப்பட்டுவிட்ட சிவனை என்னுள்ளே புகுந்து
அறிகின்றவர் ஒருவரும் இல்லை. (ஆகவே, வேறிடத்தில் அவனை
அறிதலும் இயலாமை வெளிப்படை) யான் வெளியே சென்ற அலையாமல் என் உடம்பினுள்ளே கீழ்
இருந்து மேல் ஏறிச் சென்று பொழுது அவனது அழகைக் கண்டேன்; காணுங்கால்
கண்ணைத் திறந்து பார்த்துக் காணாமல் கண்ணை மூடிக்கொண்டே கண்டேன். அப்பொழுது அவனை
மட்டுமா கண்டேன்? ஏழுலகங்களையும் கண்டேன்.
**********************************************
பாடல்
எண் : 12
ஆன
புகழும் அமைந்ததோர் ஞானமும்
தேனும்
உடைய சிறுவரை ஒன்றுகண்(டு)
ஊனம்ஒன்
றின்றி உணர்தல்செய் வார்கட்கு
வானகம்
செய்யும் மறவனும் ஆமே
பொழிப்புரை
: யோகக் காட்சி பற்றி, `முக்காலமும்
உணர்ந்தவர்` எனப் பலரும் கூறப்பட்டுக் குவியும் புகழாகிய
உயர்வையும், அவ்யோகத்தாலே பிறர் ஒருவரால் அசைக்க ஒண்ணா அருள்
உணர்வாகிய துளங்கா நிலையையும், அமுதமாகிய தேனையும்
உடைய ஒரு சிறு குன்று மக்கள் எல்லாரது உடம்பிலும் உள்ளது. அதனை உணர்ந்து, ஏறும்
வழியறிந்து ஏறி, அதனை உணர்வினால் அடைந்த தவத்தோரை, அவர் உடம்பு
நீங்கிய பின்னர்த் தனது பேருலகில் ஏற்றுகின்ற ஆண்மையுடையவனாகவும் எங்கள் சிவன்
இருக்கின்றான்.
**********************************************
பாடல்
எண் : 13
மாமதி
ஆம்மதியாய் நின்ற மாதவர்
தூமதி
யாகும் சுடர்பர மானந்தம்
தாமதி
யாகச் சகம்உணச் சாந்திபுக்(கு)
ஆம்மலம்
அற்றார் அமைதிபெற் றாரே.
பொழிப்புரை
: `மதி` என்பதற்கு, `அறிவு` என்பதும்
பொருள் ஆதலால் `மதி` என்னும் பெயருக்கு
வானத்துச் சந்திரனை விட மிக உரிமையுடைய உச்சிச் சந்திரனை அடைந்து, அதனால்
உண்டாகும் அறிவையே அறிவாகப் பெற்ற யோகிகளுடைய தூய அறிவாய் விளங்கும் ஒளி, பேரின்பமே
வடிவாக உடைய பரம்பொருளாம். அதனால், பிறரெல்லாம் தங்களுடைய
நிலையற்ற அறிவையே அறிவாகப் பற்றி உலகத்தை நுகர்ந்துகொண்டிருக்க இவ்யோகிகள் `உபசாந்தம்` என்னும் நிலையை
அடைந்து, அநாதியே பற்றிய மலங்கள் நீங்கப்பெற்று, அமைதி நிலையை
அடைகின்றனர்.
**********************************************
பாடல்
எண் : 14
பதமுத்தி
மூன்றும் பழுதென்று கைவிட்(டு)
இதமுற்ற
பாச இருளைத் துரந்து
மதம்அற்(று)
`எனதியான்` மாற்றிவிட் டாங்கே
திதம்உற்
றவர்கள் சிவசித்தர் தாமே
பொழிப்புரை
: `சாலோகம், சாமீபம், சாரூபம்` மூன்றும் பத
முத்திகளாம். சிலர் இவற்றையே வேறு வகையாகக் கூறி `பரமுத்தி` எனச்
சாதிப்பர். அவற்றில் எல்லாம் இருள்மலம் ஆகிய ஆணவம் பற்றறக் கழியாமையால் அதன்
காரியமாகிய துன்பம் அவ்விடங்களில் சிறிது சிறிது உள்ளதேயாம். ஆகையால், `அவை குறையுடையன` என்று அறிந்து, அவற்றோடு
நிற்றலை விடுத்து. ஆணவம் பற்றற நீங்கினமையால், அதன்
காரியமாகிய மயக்கமும், `யான், எனது` செருக்கும்
பற்றறக் கழிய, அப்பற்றுக்களை இயல்பிலே இல்லாதவனாகிய பரமசிவனிடத்தில் அடங்கி நிலைத்திருப்பவர்களே உண்மையில் சிவனைப் பெற்றவராவர்.
**********************************************
பாடல்
எண் : 15
சித்தர்
சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத்
தத்துதுடன் தோய்ந்தும்தோ யாதவர்
முத்தர
முத்திக்கும் மூலத்தர் மூலத்துச்
சத்தர்
சதாசிவத் தன்மையர் தாமே.
பொழிப்புரை
: சிவஞானத்தால்
சிவதரிசனத்தைப் பெற்றோர் யாவரும் சிவனைப் பெற்றவராகவே எண்ணப்படுவர். (அவர் பின்பு
பதமுத்திக்கு மேலான அபர முத்தி பரமுத்திகளை அடைவர் ஆதலின்,)
``பரஞானத்
தாற்பரனைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள்
பாரார்.``
என்றபடி
அவர்கள் `சுத்தம், அசுத்தம்` என்னும்
இருவகைப் பிரபஞ்சத்துள் எதில் இருப்பினும் அதில் பற்றற்றேயிருப்பர். அவர், `பதமுத்தி, அபரமுத்தி, பரமுத்தி` என்னும்
மும்முத்திகளையும் தம்மை அடைந்த மாணாக்கர்க்கு அளிக்க வல்ல ஆசிரியர்களும் ஆவர்.
இனி மூலாதாரத்தில் ஒடுங்கியிருக்கும் குண்டலி சத்தியை எழுப்பி அதன் பயனைப் பெற்ற
யோகியரும் சதாசிவ மூர்த்திபோல அபர ஞானமாகிய கலைஞானங்களை வழங்கத் தக்கவராவர்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத்
தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன்
திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!