பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006
*************************************************
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -006
கூடுதல் பாடல்கள் ..................................................(075+008+006=089)
*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து-பாடல்கள்: 08
பாடல்
எண் : 1
தானந்தம்
இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும்
ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம்
கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
ஆனந்தக்
கூத்தாட ஆடரங் கானதே.
பொழிப்புரை
: மேற்கூறிய ஐவகைக் கூத்துக்களுள் சிவானந்தக் கூத்தாவது,
என்றும் அழிதல் இல்லாமையால் சத்தாய்,
அதனோடே சித்தாய்,
ஆனந்தமாய் உள்ள சத்தியிடமாக நின்று ஆனந்தத்தை
முடிவின்றிப் பொழியும் கூத்தாகும் ஆகவே,
ஆன்ம அறிவைக் கடந்து அந்தக் கூத்தினை இயற்றும்
சிவனுக்கு அவ்விடத்தில் அந்த நடனத்தைச் செய்தற்கு அரங்காய் நிற்பது மேற்கூறிய
அந்தச் சத்தியே.
*************************************************
பாடல்
எண் : 2
ஆனந்தம்
ஆடரங்(கு) ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம்
பல்இயம் ஆனந்த வாச்சியம்
ஆனந்தம்
ஆக அகில சராசரம்
ஆனந்தம்
ஆனந்தக் கூத்தகந் தானுக்கே.
பொழிப்புரை
: `ஆனந்தம்`
என்னும் சொல் வழியாக உணரப் படுகின்ற அந்தப்
பொருள், ஆருயிர்களுக்கு
அனுபவப் பொருளாதற் பொருட்டு ஆனந்தக் கூத்தை விரும்பிச் செய்யும் சிவனுக்கு
அந்நிலையில், `மன்னன்
எப்படி, மன்னுயிர்
அப்படி` என்பதுபோல,
உடன் நிகழும் அரங்கமும் ஆனந்தமாய்;
பாட்டுக்களும் ஆனந்தமாய்;
பலவகை வாத்தியங்களும் ஆனந்தமயம்;
இயங்கு திணை றிலைத் திணைகளாகிய அனைத்துப்
பொருள்களும் ஆனந்தமயம்.
*************************************************
பாடல்
எண் : 3
ஒளியாம்
பரமும் உளதாம் பரமும்
அளியார்
சிவகாமி யாகும் சமயக்
களியார்
பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம்
சிவானந்த நட்டத்தின் சித்தியே.
பொழிப்புரை
: `உள்ளது`
என வழங்கபப்டும் சத்தாதல் தன்மையும்,
`ஒளி`
என வழங்கப்படும் சித்தாதல் தன்மையும்,
சமய நிலையில் `சிவகாமி`
என வைத்து வணங்கப்படும் அருள் வடிவான ஆனந்த
மாதல் தன்மையும் ஆகிய இம்மூன்று தன்மைகளையும் உயிர்கள் பெறுதல்,
சிவன் செய்யும் ஆனந்த நடனத்தை உள்ளத்தில் தெளிவாகக்
கண்டு தியானிக்கும் தியானத்தினாலாம்.
*************************************************
பாடல்
எண் : 4
ஆன
நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன
நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன
தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி
பாகன் திருநடம் ஆகுமே.
பொழிப்புரை
: அருவம், உருவம்
அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளை உயிர்களின் பொருட்டுக் கொள்கின்ற சிவன்
படைத்தல் முதலிய ஐந்தொழிக்கு ஏற்ப ஐந்து வகை வடிவங்களையும்,
அவற்றிற் குரிய பெயர்களையும் கொண்டு செய்தலை
நாடகமாக உடையவன். ஆகையால் அவன் செய்யும் தொழில்கள் யாவும் அருள் காரணமாகச் செய்வனவே
அந்நிலையில் அத்தொழிலை அவள் ஐந்தாக வகுத்து அம்மையோடு உடனாய் நின்று திருக்
கூத்தாடுகின்றான். அக்கூத்தும் ஐந்தாகும்.
*************************************************
பாடல்
எண் : 5
பூதாண்டம்
பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம்
மூதாண்ட
முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட
தாகாண்டம்
ஐங்கரு மத்தாண்ட தற்பரத்(து)
ஏகாந்த
மாம்பிர மாண்டத்த தென்பவே.
பொழிப்புரை
: `நிலையற்ற
இன்பத்தில் மோகத்தை உண்டாக்குவ தாகிய சுவர்க்கம்,
மக்கள் விலங்கு முதலிய வேறுபட்ட பல
உடம்புகளையுடையதாகிய பூமி, துன்பத்தையே
தருவதாகிய நரகம்` என்றும்
மூவகை உலகங்களில் உயிர்களைச் செலுத்தி ஐந்தொழில் செய்து அவைகளை ஆட்கொள்கின்ற,
மேலான பரம்பொருளும் அனைத்துப் பொருட்கட்கும்
இடமாதல் பற்றி, `பிரமம்`
எனக் குறிக்கப்படுவதும் ஆகிய அந்த ஒரு பொருளில்
அடங்கியுள்ள அண்டங்களோ பல கோடி என்றாலும் அவை ஐந்து தொகுப்புக்களில் அடங்குகின்றன.
அவை, `பூதாண்டம்,
பேதாண்டம்,
போகாண்டம் இவை அனைத்திலும் பழைதான முத்தாண்டம்`
என்பன.
*************************************************
பாடல்
எண் : 6
வேதங்க
ளாட மிகும்ஆ கமமாடக்
கீதங்க
ளாடக் கிளாண்டம் ஏழாடப்
பூதங்க
ளாடப் புவனம் முழுதாட
நாதன்கொண்
டாடினான் ஞானானந் தக்கூத்தே.
பொழிப்புரை
: `அவனன்றி
ஓரணுவும் அசையாது`` என்னும்
பழமொழி. அவன் அசைய வில்லையாயின் எதுவும் அசையாது`
என்பதையும் தெரிவிப்பதுடன் `அவன்
அசைந்தால் அனைத்தும் அசையும்` என்பதையும்
தெரிவிக்கின்றது. ஆகவே, `அனைத்தும்
அசைய வேண்டி அவர் அசைகின்றான்` என்பது
விளங்குகின்றது. அசைதல், அது
அது தன் தன் இயல்பிற்கு ஏற்பச் செயற்படுதல்,
`அவனது திருக்கூதினாலே அனைத்தும் செயற்படுகின்றன`
என்பதையே இம்மந்திரம் உணர்த்துகின்றது.)
இதன்
பொருள் வெளிப்படை.
*************************************************
பாடல்
எண் : 7
பூதங்கள்
ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள்
ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில்
ஓதும்
கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள்
ஐந்தில் புணர்ந்தாடும் ஈசனே.
பொழிப்புரை
: (முன் மந்திரத்தில்,
`அளைத்துப் பொருள்களின் இயக்கங்கட்கும் காரணமாய்
நிகழ்வது சிவன் கூத்து` என்பது
கூறப் பட்டது. இம்மந்திரத்தில், அவை
இயங்குங்கால், அக்கூத்து
அவற்றோடு உடனாயும் இயங்கி திகழ்கின்றது`
என்பது கூறப் படுகின்றது. இவையே இவ்விரண் டிற்கும்
இடையேயுள்ள வேற்றுமை. எனவே மேற்கூறிய மந்திரத்தின் பொருளே இம்மந்திரத் திற்கும்
ஆகின்றது.) இதன் பொருள் வெளிப்படை.
*************************************************
பாடல்
எண் : 8
தேவர்
அசுரர்நரர் சித்தர்வித் யாதரர்
மூவர்கள்
ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர்
சாத்தர் சமயம் சராசரம்
யாவையும்
ஆடிடும் எம்இறை ஆடவே.
பொழிப்புரை
: முன் இரு மந்திரங்களில் அஃறிணையாக
வைத்துக் கூறிய பொருளை இம்மந்திரம் உயர்திணையாக வைத்துக் கூறுகின்றது. இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை
: `ஆதியின்
மூவர்கள்` என
மாற்றிக் கொள்க. ஆதி உலகத் தோற்றக் காலம். சாத்தர் - சாத்தியர். `சாத்தியர்`
என்னும் ஒருசாராரும் தேவர் கூட்டத்துள்
சொல்லப்படுகின்றனர். சிவனது
திருக்கூத்து உலகத்தின் செயற்பாடு எல்லாவற்றிற்கும் காரணம் ஆதல் தொகுத்துக்கூறி
முடிக்கப்பட்டது.
*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து : பாடல்கள் : 06
பாடல்
எண் : 1
அண்டங்கள்
ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற
சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங்
கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங்
குமைகாணக் கூத்துகந் தானே.
பொழிப்புரை
: பிரகிருதி உலகங்களுக்கு அப்பால் உள்ளவை அசுத்த மாயா உலகங்கள். அவற்றிற்கு
அப்பால் சுத்த வித்தை, ஈசுரம்,
சாதாக்கியம் என்னும் தத்துவ புவனங்கட்கு அப்பால்
உள்ளவை சத்தி தத்துவ புவனமும், சிவ
தத்துவ புவனமும், அவைகளில்
முறையே `சத்தி`
என்றும்,
`சிவன்`
என்றும் இருதிறப்பட்டு நின்று ஐந்தொழில்
புரிகின்ற சிவன், அத்தொழிலின்
பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு சத்தி காணத்தான் ஆடலை விரும்பி ஆடுகின்றான்.
*************************************************
பாடல்
எண் : 2
பரமாண்டத்
துள்ளே பராசத்தி பாதம்
பரமாண்டத்
துள்ளே படரொளி ஈசன்
பரமாண்டத்
துள்ளே படர்தரு நாதம்
பரமாண்டத்
துள்ளே பரன்நட மாடுமே.
பொழிப்புரை
: எல்லாவற்றையும் வியாபித்து நிற்றலால் சுத்த மாயை யின் வியாபகம் பரமாண்டம் ஆகும்.
அதற்குள்ளே உள்ள அனைத்து இடங்களிலும் பராசத்தியின் கூறாகிய ஆதி சத்தி பரவியுள்ளது.
ஆகவே அந்தச் சத்தயைத் தனது விரிந்த ஒளியாகக் கொண்ட தடத்த சிவன்,
அவ்விடங்களில் எல்லாம் உளன். அவையேயன்றிச்
சுத்தமாயையின் காரியமாகிய வாக்குக்களும் `அதிசூக்குமம்,
சூக்குமம்,
தூலம்`
என்னும் வகையில் அந்த எல்லா இடங்களிலும் உள்ளன.
ஆகவே, அந்த
எல்லா இடங்களிலும் சிவன் தனது சுந்தரக் கூத்தினைச் செய்கின்றான்.
*************************************************
பாடல்
எண் : 3
`அங்குசம்`
என்ன எழுமார்க்கப் போதத்தில்
தங்கிய
`தொம்தி`
எனுந்தாள ஒத்தினில்
சங்கரன்
மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய
காலம் புகும்போதல் இல்லையே.
பொழிப்புரை
: (`அம்சம்`
என்பதை இடையே குகரச் சாரியைக் கூட்டி,
`அங்குசம்`
என ஒரு கருவியின் பெயர்போல ஆக்கி மறை பொருட்
கூற்றாக வழங்குதல் சித்தர் மரபு. எனவே,)
அங்குசம் என்ன எழும் மார்க்கம்`
என்பது,
`அம்சம்`
என எழுகின்ற வழி என்பதாம். இம்மந்திரம் இரேசக
பூரகமாய் நிகழும் வாயு இயக்கத்தால் இயல்பாக நிகழ்தலின் `அசபா
மந்திரம்` எனப்படும்.
அம்மந்திரவழி இயங்கும் உயிர்ப்பினாலே அறிவு நிகழ்தலி அவ்வாற்றால் அறிவை விளக்கு
கின்ற இறைவனது செயல் `அசபா
நடனம்` எனப்படுகின்றது.
அந்த நடனத்திற்கு, `அம்,
சம்`
என்பனவே,
`தொம்,
தி` என
ஒலிக்கின்ற தாளங்களாம். அந்தத் தாள ஒற்றுக்கு இயையச் சிவன் சுழுமுனை நாடிக்குள்
நின்று சுந்தரக் கூத்து ஆடுதலை அறிவு விளங்கிய காலத்தில் தொடங்குகின்றான். ஆயினும்
அக்கூத்தினை அவன் முடித்துவிட்டு அப்பாற்போதல் இல்லை.
*************************************************
பாடல்
எண் : 4
ஆளத்தி
ஆடிப் பின்நவக் கூத்தாடிக்
காலத்தீ
ஆடிக் கருத்தில் தரித்தாடி
மூலச்
சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞாலத்துள்
ஆடி முடித்தான்என் நாதனே.
பொழிப்புரை
: எனக்குத் தலைவனாகிய சிவபெருமான் முதலில் சுந்தரக் கூத்திற்கு ஆயத்தங்களைச்
செய்தும், பின்
அதனை, `அருவம்
நான்கு அருஉருவம் ஒன்று, உருவம்
நான்கு` என்னும்
முறையில் திருமேனி கொண்டு மும்மாயைகளின் மேலும் நிகழ்த்திப்பின் முற்
றொடுக்கத்தைச் செய்தும், அக்காலங்களில்
உயிர்களின் அறிவின்கண் நின்று அதனை விளக்கியும்,
தோற்றம் நிலை,
இறுதி மூன்றனுள் இடையதாகிய நிலைப்புக் காலத்தில்
முன் மந்திர்ததில் கூறியவாறு சுழுமுனை நாடியில் நின்று உயிர்ப்பு வழியாகப் புலன்
உணர்வைத் தந்து; இறுதியாக,
என்றும் அழிதல் இல்லாத பெருநிலவுமாகிய முத்தி
நிலத்தில் பேரானந்தத்தைத் தரும் நடனத்தைச் செய்தும் நிற்பதாக அக்கூத்தினை இங்ஙனம்
வரையறை செய்துகொண்டான்.
*************************************************
பாடல்
எண் : 5
சத்திகள்
ஐந்தும் சிவபேதந் தாம்ஐந்தும்
முத்திகள்
எட்டும் முதலாம் பதம்எட்டும்
சித்திகள்
எட்டும் சிவபதம் தாம்எட்டும்
சுத்திகள்
எட்டீசன் தொல்நட மாடுமே.
பொழிப்புரை
: சத்தி பேதங்கள் ஐந்து, அவை,
`பரை,
ஆதி,
இச்சை,
ஞானம்,
கிரியை`
என்பன. இவற்றோடு இயைந்த சிவபேதமும் ஐந்து,
அவை,
`பரம்,
சிவன்,
சிவன்,
கருணாகரன்,
நாதமூர்த்தி,
விந்துமூர்த்தி`
என்பன. திருவருள் பெற்றோர் அடையும் முத்திகள்
எட்டு. அவை, காலோக்கியம்,
சாமீப்பியம்,
சாரூப்பியம்,
சிவன் முத்தி,
அதிகாரமுத்தி,
போகமுத்தி,
இலயமுத்தி,
பரமுத்தி அல்லது சாயுச்சியம்`
என்பன. முதன்மைப்பதவிகள் எட்டு. அவை,
`கணபதி,
குமாரன்`
நந்தி,
சண்டி,
அரன்,
அரி,
அயன்,
இந்திரன்`
என்போரது பதவிகள். சித்திகள் எட்டு. அவை
அணிமாதிகள். சிவபதம் - சிவனது நிலை. அவை எட்டாதல் அட்டமூர்த்தியாய் நிற்றலால்.
அட்ட மூர்த்தமாவன `ஐம்பூதம்,
ஞாயிறு,
திங்கள்,
உயிர்`
என்பன. இவற்றில் நிற்குமிடத்தே `பவன்,
சர்வன்`
முதலிய எட்டுப் பெயர்களைச் சிவன் உடையவன்
ஆகின்றான். சுத்திகள் எட்டு, வழிபாட்டில்
செய்யப் படுவன. `நிரீக்கணம்,
புரோக்கணம்,
தாடனம்,
அப்பியுக்கரணம்`
என்பன. இவை முறையே `பார்த்தல்,
தெளித்தல்,
தட்டுதல்,
மூடுதல் மும்முறை கை கொட்டல்,
திசைக்காப்புச் செய்தல்,
சுற்றுதல்,
அமுதமய மாக்கல்`
என்பனவாம். இவை முதலாக அனைத்தும் நிகழும்படி
சிவன் தொன்று தொட்டுச் சுந்தரக்கூத்தினை நிகழ்த்தி வருகின்றான்.
*************************************************
பாடல்
எண் : 6
மேகங்கள்
ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள்
ஏழும் சிவபாற் கரன்ஏழும்
தாகங்கள்
ஏழும் சாந்திகள் தாம்ஏழும்
ஆகின்ற
நந்தியடிக்கீழ் அடங்குமே.
பொழிப்புரை
: மேகங்கள்
ஏழு:- பிங்கல நிகண்டிலும், சூடாமணி
நிகண்டிலும்` சிறிது
சிறிது வேறுபடச் சொல்லப்பட்டன. நீர்மழையை அளவாகவும்,
மிகையாகவும்,
சிறிதாகவும் பொழிவன,
மண்மழை,
கல் மழை,
பொன் மழை,
மணி மழை என்பவற்றைப் பொழிவன இவைகள். கடல் ஏழு:-
உப்பு, பால்,
தயிர்,
நெய்,
கருப்பஞ்சாறு,
தேன்,
நன்னீர் - என்பவற்றை உடையன. தீவு ஏழு:- அந்த ஏழு
கடல்களாலும் சூழப்பட்டுத் தனித்தனியே ஏழு நிலப்பகுதிகள். அவை:- சம்பு,
சாகம்,
குசை,
கிரௌஞ்சம்,
சான்மலி கேரமேதகம்,
புட்கரம் என்னும் காரணப் பெயர்களையுடையன.
சம்புத்தீவு, நாவலந்
தீவு. இதுவே நாம் வாழும் நிலம். தேகங்கள் ஏழு:- `தேவர்,
மக்கள்,
விலங்கு,
பறவை,
ஊர்வன,
நீர்வாழ்வன,
தாவரம்`
என்னும் எழுபிறப்புக்கள். பாற்கரன் - சூரியன்.
சிவ பாற்கரன் - சிவ சூரியன். சிவன் உள்ளிருந்து அறியாமை இருளைப் போக்கி அறிவைப்
பிறப்பித்தற்குக் கருவியாய் அவனால் அமைக்கப்பட்டவை. அவை ஏழாவன:- ஐம்பொறிகளும்,
மனமும் புத்தியும் ஆய அந்தக் கரணங்களுமாம்.
இன்னும் `ஏழ்`
என்றதனானே வித்தியா தத்துவம் ஏழினையும் கொள்க.
தாகம் - வெப்பம்; அஃது
அதனையுடைய தீயைக் குறித்தது. ``தீக்கு
நாக்கு ஏழ் உள` என்பர்.
அது பற்றி அஃது ஏழ் எனப்பட்டது. சாந்தி என்றது சுத்தத்தை அஃது ஏழாதல் - கலா சுத்தி
ஐந்தும், கன்ம
சுத்தி ஒன்றும், ஆணவ
சுத்தி ஒன்றுமாம். இந்த ஏழ் சுத்தியாலும் ஆன்ம சுத்தி உளதாகும்.
*************************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!