http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Tuesday, 27 March 2012

திருமந்திரம்-சிறப்பும் வரலாறும் பகுதி -I. பத்தாம் திருமுறை

திருமூலர்

பத்தாந்திருமுறை : திருமந்திரம்

திருமூலதேவநாயனாரின் திருமந்திரமாலை, திருமந்திரம் என்ற பெயரால் வழங்கப்படும். இந்நூல் சைவத் திருமுறைகளுள் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது. தமிழ் மொழியில் பெருஞ்சிறப்புக்கு உரிய முதன்மையான நூல்களைத் தொகுத்து உரைக்கும் ஒரு பழம்பாடல் உள்ளது. அதில் திருமந்திரமும் இணைக்கப் பெற்றிருப்பது இதன் சிறப்பிற்குச் சான்று கூறி நிற்கிறது. சைவ ஆகமங்களின் சாரமாகத் திகழும் இந்நூலை, தமிழில் எழுந்த சைவசமயஞ் சார்ந்த ஒரு கலைக்களஞ்சியம் என்றே கூறலாம்.
திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் ஒரு தந்திரம்எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது தந்திரங்களும், ஆகமங்கள் ஒன்பதின் சாரமாக அமைந்துள்ளன. ஆகமங்கள் 28, அவற்றுள் ஒன்பதின் சாரமாக 9 தந்திரங்கள் அமைந்துள்ளன. அந்த ஆகமங்கள் வருமாறு: காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்பன.

தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே
என்ற சிறப்புப் பாயிரப்பகுதி இதனை உறுதி செய்கிறது. இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டுள்ளது.

திருமூலர் – வரலாறு:

திருமூலர் வரலாறு குறித்தும் பாயிரப் பகுதியில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருமூலர் பெரியபுராண நாயன்மார் வரிசையிலும் இடம் பெற்றுள்ளார். இவர் வரலாற்றைப் பெரிய புராணமும் எடுத்துரைக்கிறது. வடநாட்டிலிருந்து தென்னாடு வந்த முனிவர் ஒருவர் மாடு மேய்க்கும் ஓர் இளைஞன் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து மூலன் எனப் பெயர் பெற்றார். திருவாவடு துறையில் யோகத்தில் பலகாலம் இருந்து இத்திரு மந்திரமாலையை  உலகுக்கு வழங்கினார்.  திருமூலரே,

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே..(திருமந்திரம் : 81)  என்று குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது. தமிழில் ஆகமங்களின் சாரங்களைத் தொகுத்தளிப்பதே அவர் வருகையின் நோக்கம் என்பது உறுதியாகிறது.

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.... (திருமந்திரம் : 147)  என்ற அரிய தொடர் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விநாயகர் காப்பு

திருமந்திரத்தின் முதல் தந்திரம் முதல் ஒன்பதாவது தந்திரம் வரையிலான ஒவ்வொரு தந்திரமும் ஒவ்வொரு சமய உண்மையை நுட்பமுற எடுத்துரைப் பனவாக அமைந்துள்ளன. முன்னதாக அமைந்துள்ள பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, வேத ஆகமங்களின் சிறப்பு, திருமூலர் வரலாறு முதலியன விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இந்நூல் விநாயகர் காப்பு ஒன்றுடன் தொடங்குகின்றது.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே.....(திருமந்திரம் விநாயகர் காப்பு)

(இந்து = சந்திரன், எயிற்றன் = கொம்பினையுடையவன், நந்தி மகன் = விநாயகன், ஞானக்கொழுந்து = அறிவே வடிவானவன்) என்பது திருமந்திரத்தின் காப்புச் செய்யுள். கடவுள் வாழ்த்துப் பகுதியில் சிவபெருமானின் பெருமை பேசும் 50 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள்அறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.......(திருமந்திரம் : 8)

(வெய்யன் = வெப்பம் மிக்கவன், தண்ணியன் = குளிர்ச்சியானவன். அணியன் =அடியவர்க்கு நெருக்கமானவன்) சிவனின் மேலான கருணைத் திறத்தைச் சுட்டிக்காட்டுகிறது. எனினும் மக்கள் அவன் கருணையை முழுவதும் உணர்ந்து வழிபட்டு வாழ்வு பெற்றிலர் என்ற திருமூலரின் மன வருத்தம் இப்பாடலில் பதிவாகியுள்ளது. 
===========================================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர். இரா. செல்வக் கணபதி அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.


No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!