http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday, 29 March 2012

திருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:01/3 (பாடல்:41-56/56) பகுதி-III; சிவபரத்துவம்









பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 
விநாயகர் வணக்கம்...............................................................பாடல்கள்: 001
பாயிரம். பதிக்க வரலாறு.......................................................பாடல்கள்: 039

முதல் தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்.....................பாடல்கள்: 056
======================================================(040+056=096)
முதல்தந்திரம்-பதிகம் எண்:01. சிவபரத்துவம் (பாடல்கள்:41-56/56) பகுதி-III

பாடல் எண் : 41
விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே.

பொழிப்புரை :   கடல் சூழ்ந்த இவ்வுலகம் வினைவழியல்லது நடத்தல் இல்லை. இங்கு இன்பச்சூழலும் வினைவழித் தோன்றுத லல்லது வேறோராற்றான் இல்லை. ஆயினும் ஒளிமயமாகிய சிவபெருமான் தன்னை நாள்தோறும் துதிப்பவர்க்கு அத்துதி வழியாக முத்திக்கு வழிகாட்டும் பகலவனாய் நிற்பான்.
****************************************************
பாடல் எண் : 42
அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.

பொழிப்புரை :   `அந்தி வானம்போலும் நிறம் உடையவனே, அரனே, சிவனே` என்று சிவபெருமானது திருப்பெயர்கள் பலவற்றைச் சொல்லி, தியானத்திற்கு உரிய அவனது வடிவத்தைச் செம்மை பெற்ற அடியார்கள் வணங்கும்பொழுது நானும், `எவ்வுருவிற்கும் முதலாய திருவுருவத்தை உடையவனே, தலைவனே, மேலானவனே` என்று துதித்து வணங்கினேன்; அப்பொழுதே ஞானமயனாகிய அவன் இவ்வாறு என் உள்ளத்திற் புகுந்துவிட்டான்.
************************************************* 
பாடல் எண் : 43
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே.

பொழிப்புரை சிவபெருமானை ஒரோவொரு பொழுதாயினும் நினைப்பின், இல்லறத்தில் நிற்பவரும் பெரிய தவத்தவரேயாவர். துறவராயினார் சிவத்தியானத்திலே நிற்பாராயின், ஞானத்தில் நிற்பவராவர். இல்லறத்தவராயினும் துறவறத் தவராயினும், பனை மரத்தின் மேலே வாழ்ந்தும் அப்பனையின் பயனை அறிந்து நுகர மாட்டாத பருந்துபோலச் சிவனது திருவருளில் நின்றும் அதனை யறிந்து அழுந்தமாட்டாதவர்க்குப் பேரின்பம் உண்டாதல் இல்லை.
****************************************************
பாடல் எண் : 44

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

பொழிப்புரைமெய்யுணர்ந்தோரால் துதிக்கப்படு கின்றவனும், தேவர்கட்குத் தலைவனும், எப்பொருட்கும் முதல்வனும், இவ்வுலகத் திற்றானே நிரம்ப அருளைப் புரிபவனும், மேலானவற்றிற்கெல்லாம் மேலானவனும், எமக்குத் தந்தையாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை நான் அணையா விளக்காகக் கொண்டு தலையால் வணங்கி, மனத்தால் நினைந்து அன்பு செய்து நிற்கின்றேன்..

****************************************************
பாடல் எண் : 45
பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசங் கடந்தெய்த லாமே.

பொழிப்புரைதன்னின் வேறாகாத பரையாகிய சத்திக்கும், தன்னின் வேறாகிய பசு பாசங்கட்கும் தலைவனாகிய சிவபெருமானை நினைந்து, உயிர்க்குரிய உடலிடத்தே சொல்லும் அந்நெறிப்பட்டு நிற்க வல்லவர்கட்கு, கட்டுற்ற உயிர்கட்கு உரித்தாகிய அலைமோதும் பிறவிப் பெருங்கடலை நீந்தி, மும்மலங்களும் கழன்று, பரமுத்தி யாகிய கரையை அடைதல் கூடும்.
****************************************************
பாடல் எண் : 46
சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.

பொழிப்புரை : சிவபெருமானையே என் தலைவன் என்று நினைந்து அவனது திருவடியாகிய மலர்களை நான் தலையில் சூடிக்கொள்வேன்; நெஞ்சில் இருத்திக்கொள்வேன்; பாடித் துதிப்பேன்; பலவாகிய மலர்களைத் தூவிப் பணிந்துநின்று கூத்தாடு வேன்; தேவர்க்குத் தேவன் என்று கொள்வேன்; திருவருள் பெற்ற இந்நிலையில் நான் அறிவது இவ்வளவே.
****************************************************
பாடல் எண் : 47
அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற் காமே.

பொழிப்புரை :என்றும் ஒழியாது செய்கின்ற படைப்பும், காப்பும், அழிப்பும், அருளும் என்ற நான்கனையும் ஆராயுமிடத்தும் அவை அனைத்தையும் சோர்வின்றிச் செய்பவன் சிவபெருமான் ஒருவனே. ஆயினும், மெய்யுணர்ந்தோராகிய அவன்றன் அடியார்கள் சொல் கின்ற அளவில்லாத அவன் பெருமைகள் `மால், அயன்` என்னும் இருவர்க்கும் ஏற்ற பெற்றி பொருந்துவனவாம்.
****************************************************
பாடல் எண் : 48
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 

பொழிப்புரையாவர்க்கும் முதல்வனாகிய சிவனும், அழகிய மணிவண்ணனாகிய மாயோனும், முதற்றொழிலாகிய படைப்பினைச் செய்யும் பிரமனும் என்கின்ற வடிவங்களை ஆராயின், அம்மூன்று வடிவங்களும் தொழில் இயைபில் ஒன்றே என்று அறியாமல்,`வேறு வேறு` என்று சொல்லி உலகத்தார் இகலி நிற்கின்றார்கள்; இஃதோர் அறியாமை இருந்தவாறு!
****************************************************
பாடல் எண் : 49
ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

பொழிப்புரை : வினையின் நீங்கி நிற்பவன் சிவபெருமான் ஒருவனே. அதற்கு உலகில் திருக்கோயில்களில், காணாத அரு வினுக்கும் காண்கின்ற உருவினுக்கும் (தி.8 பெரியபுராணம். சாக்கிய.8) முதலாயுள்ள அவனது இலிங்கத் திருமேனி நடுவிடத்தில் விளங்க, ஏனைத் தேவர் பலரும் அதனைச் சூழ்ந்து போற்றி நிற்றலும், அத்தேவர் நடுவிடத்தில் விளங்கும் கோட்டங்களில் அஃது அவ்வாறு நில்லாமையுமே சான்றாகும். காட்சியானே உணரப்படுகின்ற இதனையும் நோக்காது, முதற்கடவுள் `அது` என்றும் `இது` என்றும் பிற தெய்வங்களைச் சுட்டிச் சொல்லித் தம்முட் சிலர் கலாய்ப்பாராயின், அவர் பகுத்துணர்வில்லாதவரே யாவர். தூர்ப்புக்களையே பொருளென்று கண்டவர்கள் அத்தூர்ப்பைத்தான் அறிவார்கள்; அவற்றை அகற்றி உள்ளே உள்ள பொருளை அவர்கள் எவ்வாறு கண்டறிவார்கள்!
****************************************************
பாடல் எண் : 50
சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

பொழிப்புரை `சிவன், சதாசிவன், மகேசுரன்` என மூன்றாகவும், `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என ஐந்தாகவும், தொகுத்தும் வகுத்தும் சொல்லப்படுகின்றனர். நிலைகளே, `சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், மால், அயன்` என ஒன்பதாக விரித்துச் சொல்லப்படும். அந்நிலைகள் எல்லாம், முதல்களாகிய விந்து நாதங்களினின்றே தோன்றுதலால், யாவும் அத்தொகுதித் தலைவனாகிய சிவபெருமான் ஒருவனது நிலை வேறுபாடுகளேயன்றி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளன்று.
****************************************************
பாடல் எண் : 51
பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.


பொழிப்புரைமேற்கூறிய நிலைகளால் உயிர்கட்கு விளையும் பயன்களை அறிந்து அவற்றை முறைப்படுத்தி எண்ணுங்கால் சீகண்டவுருத்திரர்க்குக் கீழ் நிற்கும் `அயன், மால்` என்பவர் தாமும் நமக்கு அயலாவாரல்லர்; அதனால் நீவிர் அக்கடவுளராலும் சிவனுக்கு அடியவராகும் வகையைப் பெற முயல்வீராக.
****************************************************
பாடல் எண் : 52
ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.

பொழிப்புரை :  எண்ணில்லாத தேவர்கள் திருவோலக்கத்தில் சூழ்ந்து பணிகின்ற சிவபிரானது திருமேனியை அடியேனும் பணிந்து கும்பிட, அவன், `நீ திருமாலையும், படைப்புக் கடவுளாகிய பிரமனையும் நிகர்த்தவன்; ஆதலின், நிலவுலகத்திற்கு நமது திருவருட் பெருமையை உணர்த்து` என ஆணை தந்தருளினான்.
****************************************************
பாடல் எண் : 53
வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

பொழிப்புரைஉடம்போடு கூடி நிற்பவருள் சிலரை`இவர் தேவர்` என்றும், சிலரை, (இவர் மக்கள்) என்றும் உணர நிற்கும் நிலைமைகள் எல்லாம் சிவபெருமானது செயலால் அமைவனவன்றித் தானாகவே அவ்வாறு நிற்கும் தனித் தெய்வம் இல்லை..
****************************************************
பாடல் எண் : 54
சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

பொழிப்புரை :   சிவதன்ம நூலுள், `உருத்திரன், மால் அயன்` என்னும் மூவரும், மெய்யுணர்ந்தோர் ஆய்ந்துணர்ந்த பேரொளியாகிய அநாதிப்பொருள் ஒன்றே மூன்றாயும், ஐவந்தாயும் நின்ற முதனிலைகளில் அமைவனவாதலை அந்நூலை அறியாதார் அறிய மாட்டார். அதனால், அவர் உலகியல் நூலே பற்றி அவரை வேறுவேறு கடவுளாக்கி அவருள் ஒருவராகப் புகழ்ந்தும், ஏனையிருவரையும் இகழ்ந்தும் திரிகின்றனர்.
****************************************************
பாடல் எண் : 55
பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

பொழிப்புரை :   சிவபெருமான் ஒன்றோடும் ஒட்டாது தனித்து நிற்கும் மேல் நிலையில் ஒருவனேயாய், அந்நிலையினின்று வருதலாகிய பொதுநிலையில் எல்லாப் பொருட்கும் உள்ளும், புறம்பும் நிறைந்து நிற்பவனாய் மால், அயன் முதலிய ஒன்பது நிலைகளை உடையவனாகியும், உயிர்களின் தகுதி வேறுபாட்டிற்கேற் மற்றும் பல்வேறு நிலைகளையுடையனாகியும் இவ்வாறெல்லாம் தனது திருவருள் ஒன்றிலே நின்று உயிர்கட்குப் பாசத்தைப் போக்கியருளுகின்றான்.
****************************************************
பாடல் எண் : 56
தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

பொழிப்புரை :    எம் கடவுளாகிய சிவபெருமான் தானே ஒரு கூற்றில் சதாசிவ மூர்த்தியாய் `சாந்தியதீதை` என்னும் ஒரு கலையுள் நின்று அதனையே தன்னிடமாகக் கொண்டும் இருக்கின்றான். மற்றொரு கூற்றில் உயிர்க்குயிராய் நின்று உணர்த்து வதாகிய இலய சிவனாயும் நிற்கின்றான். பிறிதொரு கூற்றில் பாசங்களின் வழிநின்று நடத்தும் மறைப்பாற்றலாயும் உள்ளான். வேறொரு கூற்றில் பாசத்தை நீக்கித் தன்னைத் தரும் அருளாற்றலாயும் இருப்பன்.
*************************************************
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத் தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே! அன்புடன் கே எம் தர்மா.

1 comment:

  1. மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் இனிய நண்பரே!! குனு குமார் அவர்களே!! இந்த வலைப்பூவை விரைவில் மேலும் மேம்படுத்த உள்ளேன். வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!