http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 17 June 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :08/2. ஆதார ஆதேயம் (பாடல்கள்:26-50/100) பாகம் II




 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை........................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.....................பாடல்கள்: 012

நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்..........பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்........பாடல்கள்: 100
======================================================(271+100=371)

நான்காம் தந்திரம்-பதிகம் எண்:08/2. ஆதார ஆதேயம் 
(பாடல்கள்:26-50/100) பகுதி-II

பாடல் எண் : 26
பத்து முகமுடை யாள்நம் பராசக்தி
வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே.

பொழிப்புரை :   பத்துத் திசைகளையும் நோக்கிய பத்து முகங்களை உடையவளாகிய, நமக்குத் தலைவியாம் பராசத்தி நம் பொருட்டு நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் ஆக்கி வைத்து, அவற்றிற் கூறப்பட்ட பொருளாகியும் நின்றாள். அத்தகைமைய ளாகிய அவள் ஒப்பற்ற ஓர் ஆதாரமாகிய ஷ்ரீசக்கரத்தில் நீங்காது நிற்கின்றாள். அவளை அந்நூல்களின் வழிப்போற்றுக.

==============================================
பாடல் எண் : 27
கூறிய கன்னி குலாய பருவத்தள்
சீறிய ளாய்உல கேழுந் திகழ்ந்தவள்
ஆறிய நங்கை அமுத பயோதரி
பேறுயி ராளி பிறிவறுத் தாளே.

பொழிப்புரை :   மேற் சொல்லப்பட்ட சத்தி இளமையான தோற்றத்தையுடையவள்; ஏழுலகிலும் நுண்ணியளாய் நிறைந்தவள்; அடக்கமான பெண்மை இயல்புடையவள்; அமுதமயமாம் பால் நிறைந்த தனங்களை உடையவள்; வீடு பெறுதற்குரிய உயிர்களை ஆட்கொண்டு, அவை தன்னை விட்டுப் பிரிதலை நீக்குபவள்.
==============================================
பாடல் எண் : 28
பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பெண்பிள்ளை
குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.

பொழிப்புரை :   சிவத்தோடு வேற்றுமையின்றி நிற்பவளாகிய சத்தி அடியவரது தியானத்திலே பொருந்தி விளங்குகின்ற அழகிய பூங் கொம்பு போன்றவள்; அதனால், முன்னர் மனம் முதலிய அந்தக் கரணங்களின் வழியே தலைப்பட்டுப் பின்னர் உயிர்களினது அறிவுக் கறிவாய் விளங்குவாள்.
==============================================
பாடல் எண் : 29
உள்ளத்தி னுள்ளே உடனிருந் தைவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்ததே.

பொழிப்புரை :   தன்னைக் கூடியதனால் விளைகின்ற இன்பத்தை யுடைய வள்ளலாகிய சிவனுக்குத் தேவியாய் உள்ள சத்தி அடி யேனைத் தன்வசப்படுத்தித் தவநெறியை அடையச்செய்தது, என் உள்ளத்திலே நின்று ஐம்புலக்கள்வர் தம் கள்ளத்தைப் போக்கி இரண்டறக் கலந்து, என்றும் உடனாய் இருந்ததாம்.
==============================================
பாடல் எண் : 30
புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்வி பூவண்ணத்
திருந்த இலக்கில் இனிதிருந் தாளே.

பொழிப்புரை :   உயிர்களுக்கு நலம் செய்ய விரும்பி அங்ஙனமே செய்துவருகின்ற போக சத்தி, உயிர்களிடத்துத் தான் தங்கியிருந்து ஆக்க இருக்கின்ற இன்பம் இது என்பதனை உலகர் ஒருவரும் அறிய மாட்டார். பூவில் நிறம்போல உயிர்களிடத்தில் பொருந்தியிருக்கின்ற அவள், தான் அவ்வாறிருக்கின்ற குறிக்கோளினின்றும் சிறிதும் மாறுபடாமலே இருக்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 31
இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி
நிரந்தர மாகிய நீர்திசை ஓடு
பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே.

பொழிப்புரை :   சத்தி, யான் உள்ளம் திருந்தித் தன்னை அடைய விரும்பிய நிலையில் அந்நிலையை நன்குணர்ந்து அவளும் எனது உள்ளத்தை விரும்பி, அதன்கண் இருப்பாளாயினாள். அவ் இருப்பு, இடையறாது ஓடும் நீர், தான் ஓடுகின்ற திசையை நோக்கி ஓடும் ஓட்டத்தை ஒப்ப இடையறாது இருக்கும் இருப்பாம்.
==============================================
பாடல் எண் : 32
அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.

பொழிப்புரை :   `எனக்கு அது வேண்டும், இது வேண்டும்` என்று அவாவுகின்ற அவாவை விடுத்து, சந்திர மண்டலத்தில் உள்ள ஆயிர இதழ்த்தாமரையில் விளங்குபவளாகிய சத்தி விளக்கியருளிய மூன்று மண்டலங்களில் உள்ள பொருள்களைப் போற்றி செய்து சுழுமுனை யில் நின்று பொருந்த நோக்கினால் விதியையும் வெல்லுதல் கூடும்.
==============================================
பாடல் எண் : 33
மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற லாகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.

பொழிப்புரை :   மேற்கூறிய மூன்று மண்டலங்களும் அசுத்த மாயையின் காரியங்களாய் நிற்கும் உடம்பில் உள்ள இடங்களே. எனினும், உச்சிக்கு மேல் பன்னிரண்டங்குலத்தில் உணர்வு செல்லின் அது சுத்த மாயையைப் பொருந்தியதாகும். அங்ஙனம் உணர்வு செல்லும்பொழுது சத்தி, பிராசாத கலைகள் பதினாறில் ஒன்பதை ஏற்றுச் சந்திர மண்டலத்தைக் கீழ்படுத்தி நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 34
இந்துவி னின்றெழும் நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழும் கண்டத்தின்
உந்திய சோதி இதயத் தெழும் ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே.

பொழிப்புரை :   பிறை வடிவாயுள்ள ஆஞ்ஞை எல்லையினின்று மேலெழுந்து நுணுகிச் செல்கின்ற நாதம், (வாக்கு) கீழே வந்து, நாவினால் பிராணவாயு அலைக்கப்படும் பொழுது பரு வடிவினதாய்ச் செவிக்குப் புலனாகிக் கேட்போருக்கும் பொருளை இனிது விளங்கச் செய்யும் முடிவு மொழியாம். ஆகவே, கண்டத் தானத்தில் உதான வாயுவால் உந்தப்பட்டுச் சொல்வோனுக்கு மட்டும் பொருள் விளங்க நிற்கின்ற இடைமொழியும், அங்ஙனம் உதான வாயுவாலும் உந்தப் படாமல் இதயத்தானத்தில் பொதுமையில் விளங்கியும் விளங்காதும் நிற்கும் முதல்மொழியும், ஆஞ்ஞை எல்லையினின்று மேலெழும், எனப்பட்ட, ஒடுக்கமாகிய அந்த நாதத்தின் விரிவேயாகும்.
==============================================
பாடல் எண் : 35
ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிரம்
மாறுதல் இன்றி மனோவச மாஎழில்
தூறது செய்யும் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே.

பொழிப்புரை :   மேல், ``இந்துவின் மேல் உற்ற ஈறு`` எனப்பட்ட அந்த நாதமே சொல்லுலகங்கள் எல்லாவற்றிற்கும் (வேதம், வேதாங்கம், ஆகமம், புராணம், இதிகாசம், மிருதி முதலிய எல்லா நூல் கட்கும், பலவாய் வழங்கும் மொழிகட்கும்) முதல். சில சுழிக் கூட்டத்தால் பூங்கொத்துப் போல்வதாய வடிவினையுடைய அது நிராதார யோகத்தில் பிராசாத கலைபதினாறில் முடிவாயுள்ள உன்மனா கலையிலும், ஆதாரயோகத்தில் ஆயிர இதழ்த் தாமரை யிலும் மனம் யாதோர் அசைவுமின்றி நின்று வசமாகும்படி உயிரினது ஆற்றலை மிகக் குவிப்பதாகும். அதனால், அதனைக் காணுதலையே சத்தி தன் அடியவர்க்குப் பெரும்பேறாக அளித்துத் தானும் அவ்விடத்தே அவர்கட்குக் காட்சியளித்து நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 36
இருந்தனள் ஏந்திழை ஈ(று) அதில் ஆகத்
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.

பொழிப்புரை :   சத்தி மேற்கூறிய அவ்விடத்தே இனிது விளங்கி யிருக்கின்றாள்; பல புவனங்களில் உள்ளோரும் தாம் பேரானந்தத்தை அடைதற்குரிய செவ்விய வழியைப் பொருந்தித் தன்னை, `போற்றி` என்று சொல்லித் துதித்துப் பெருமுயற்சி செய்யவும் சத்தி அவர்கள் முன் வெளிப்படாமல், மேற்கூறிய இடத்தே அந்த ஆனந்தம் விளையும்படி அங்கே விளங்கி நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 37
மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின்
றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாருங் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.

பொழிப்புரை :   சத்தியும், சிவனும் தம்மிற் கூடிநின்று, தம்மைப் போலவே மங்கையர் ஐவரையும், அவர்கட்கு ஏற்ற காளையர் ஐவரையும் கை கோத்துவிட்டு, அவர்களது கருத்தையும் செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அத்தம்பதியர் தங்களுள் அன்பு செய்து கூடித் தங்கள் தொழிலைக் கடமையாக நன்கு நடாத்தி வருகின்றார்கள்.
==============================================
பாடல் எண் : 38
சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனி னுள்ளே கருதுவ ராயின்
தொடர்ந்தெழு சோதி துணைவழி ஏறி
அடங்கிடும் அன்பின தாயிழை பாலே.

பொழிப்புரை :   புறத் தொழிலைச் செய்யும் அளவில் தவத்தில் நிற்போர், உடம்பில் அகமுகத் தியானித்தலில் பழகுவார்களாயின், அந்தத் தியான உணர்வு தொடர்ந்து முதிர்ந்து, சுழுமுனை பற்றுக் கோடாக மேல் ஏறிச் சென்று, உயிர்களின் அன்பிற்குச் சார்பாகிய சத்தியிடத்தில் மேற்கூறிய இடத்தில் சென்று அடங்கும்.
==============================================
பாடல் எண் : 39
பாலித் திருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
மூலத்தின் மேலது முத்தது வாமே.

பொழிப்புரை :   துணைவழி ஏறுதற்குத் துணையாகின்ற மந்திரம் முதல் நிலையாகிய மூலாதாரத்திலே உள்ளது. அதுவே இரண்டாவது முதல் ஏழாவது முடிய உள்ள ஆறு நிலங்களின் தாமரைகளிலும் ஏற்ற பெற்றியிற் பொருந்தி, அவற்றைக் காத்து நிற்கும். அதனால், அம் மந்திரம் ஒன்றே அந்நிலங்களில் அழுந்தி விடுவதாகிய நிலையினை விடுத்து மேன்மேற் செல்லுதற்குச் சிறந்த துணையாம்.
==============================================
பாடல் எண் : 40
முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி
சத்தி சதுரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுள்ளம் மேவிநின் றாளே.

பொழிப்புரை :   மேல் (1155 - ல்) கூறப்பட்ட யோக நற்சத்தி முத்து வதனம் முதலியவைகளை உடையவளாய், என் உள்ளத்தில் விரும்பி இருக்கின்றாள்.

குறிப்புரை :  எனவே, `அவளை அவ்வாறு தியானித்தல் வேண்டும்` என்பதாம். ``சத்தி`` என்பதை முதலிற்கொள்க. முத்து, பற்களைக் குறித்து உவமையாகுபெயர். வதனம் - முகம்; என்றது வாயினை, சதுரி - திறமை உடையவள். சகளி - உருவத் திருமேனி கொண்டவள். ``பைந்தொடி`` என்பது, `தேவி` எனப் பொருள் தந்தது. ஏனையவை வெளிப்படை. பத்துக்கரம் கூறப்படுதலால் ஐம்முகம் உடையளாதல் பெறப்பட்டது.
இதனால் யோக சத்தியது வடிவு கூறப்பட்டது.
==============================================
பாடல் எண் : 41
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி
தாவிய நற்பதத் தண்மதி அங்கதிர்
மூவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பர்
ஓவினும் மேலிடும் உள்ளொளி ஆமே.

பொழிப்புரை :   அக்கினி மண்டலம் முதலிய மூன்று மண்டலங் களுடன் அவற்றிற்குரியோராகிய, `அக்கினிதேவன், நிலவோன், கதிரோன்` என்னும் மூவரும் கலந்து, அவரே சத்தியாய் முன்னிற்பர். அவர்களுக்கு உள்ளீடாக ஓங்காரத்தினின்றும் மேலெழுந்து செல்கின்ற மந்திர ஒளி உளதாகும்.
==============================================
பாடல் எண் : 42
உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்கும்
கொள்ளவி சித்திக் கொடியமு தாமே.

பொழிப்புரை :   மேற்கூறிய உள்ளொளி உயர்ந்து செல்கின்ற ஆறு ஆதாரங்களாகிய உறுப்புக்கள் வெண்மையான வேள்வித் தீயிலும் அவற்றின் அதிதேவர் வழியாகச் சத்தியைப் பொருந்தி விளங்கும். அதனால், அத்தீயின் வழியாகத் தேவர்கள் ஏற்கின்ற அவிசுகளும், யாவர்க்கும், எல்லாப் பயனையும் தருகின்ற சத்தியே யாய் நிற்கும்.
==============================================
பாடல் எண் : 43
கொடிய திரேகை குருவுள் ளிருப்பப்
படிவது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவது ஆனந்தம் வந்து முறையே
இடுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.

பொழிப்புரை :   ``சிந்திக்கொடி`` என மேற் கூறப்பட்ட சத்தியது உருவம் ஆஞ்ஞை முதலிய மேல் நிலங்களில் வெளிப்படாது மறைந்து நிற்கும் நிலையில் யாவரும் மூழ்குவது சிற்றின்பத்திலேயாம். ஆகவே, சிவனது வடிவாய் உள்ள ஆனந்தத்தை (சிவானந்தத்தை,ஆறு ஆதாரங் களிலும் முறையே வந்து வழங்குகின்ற முதல்வி யோக சத்தியே.
==============================================
பாடல் எண் : 44
ஏந்திழை யாரும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
மாந்தர் உளத்தியும் மந்திரர் ஆயமும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.

பொழிப்புரை :   மேற் கூறப்பட்ட யோக சத்தி `அயன், மால், உருத்திரர்` என்னும் மும்மூர்த்திகளும், அவர்களுக்குத் தேவியராய் உள்ளோரும், ஒளியை உடைய ஆதாரங்கள் ஆறுமாய் உள்ள ஆதார சத்தியும், `கலை` என்னும் பொருளாகச் சொல்லப்படுகின்ற மேதை முதல் உன்மனை ஈறாக உள்ள பதினாறு நிலைகளையுடைய குண்ட லினியும், மக்கள் அறிவில் பொருந்திப் புலன்களை அறிவிக்கின்ற திரோதாயியும், மந்திர மகேசுவர மகேசுவரிகளாய் உள்ள கூட்டத் தினரும் தன்னையடைந்து துதிக்கும்படி மேற்கூறிய மேல் நிலங்களில் எழுந்தருளியிருக்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 45
சத்தி என்பாள்ஒரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்ப தறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

பொழிப்புரை :   `சத்தி` என்று யாவராலும் போற்றப்படுகின்ற தேவி, வேண்டுவார் வேண்டும் பயனைப் பெறுதற்குத் துணைபுரிகின்ற ஒரு கன்னிகை. ஆயினும், வீடு பேற்றைத் தரும் முதல்வி அவளே என்பதைப் பலர் அறியமாட்டாதவராய் அவளிடத்துத் தாம் செய்கின்ற அன்புக்கு உலக வாழ்வே பயனாக எண்ணி அந்த அன்பினை வீணாக்கி யொழிகின்ற அறிவிலிகள் அவளை உலக வாழ்வை அளிப் பவளாகவே சொல்லிப் புகழ்ந்து, அறிவுடையோரால் நாய் போன்ற வராக வைத்து இகழப்படுகின்றது.
==============================================
பாடல் எண் : 46
ஆரே திருவின் திருவடி காண்பர்கள்!
நேரேநின் றோதி நினையவும் வல்லார்க்குக்
காரேய் குழலி கமல மலரன்ன
சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.

பொழிப்புரை :   பிறிது பயனை வேண்டாது தன்னைப் பெறு தலையே பயனாகக் கருதி, மந்திரங்களைச் சொல்லி, மறவாது தன்னை நினைக்கவும் வல்லவர்களுக்கே அம்மை தனது தாமரை மலர் போன்ற அழகு பொருந்திய சிவந்த திருவடிகளை அவர்களது உள்ளக் கம லத்தில் பதிய வைத்துக் காட்சி வழங்குகின்றாள். ஆகவே, அந்நிலை யில் நின்று அவளது திருவடிகளைக் காண வல்லார் உலகருள் எவர்!.
==============================================
பாடல் எண் : 47
சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

பொழிப்புரை :   தேவியை முதலில் உங்கள் உடம்பில் சிரம் முதலிய இடங்களிலே வைத்தும், பின்பு இருதயம் முதலிய உறுப்புக்களிலே வைத்தும், அதன்பின் உங்கள்முன் உள்ள திருவுருவத்தில் வைத்தும், அதன்பின் மூலம் முதலிய ஆதாரங்களில் வைத்தும் வழிபட்டு அவளோடு ஒன்றாகி நில்லுங்கள். அங்ஙனம் வழிபடும் பொழுது பிற வற்றை நினைத்தலாகிய குற்றத்தில் அகப்படுத்தப்படாத மனத்தை அவ் விடங்களிலே பிறழாது நிறுத்துதலையும், அவ்வவற்றிற்கு ஏற்ற மந்திரங்களில் அவளை எண்ணுதலையும் இன்றியமையாததாகக் கொள்ளுங்கள்.
==============================================
பாடல் எண் : 48
சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்
சிவாதியில் ஆகும் சிலைநுத லாளை
நவாதியில் ஆக நயந்தது ஓதில்
உவாதி அவளுக் குறைவில தாமே.

பொழிப்புரை :   தன்னைத் தியானித்துத் தன்னிடத்து வேறற ஒன்றி நிற்கும் உணர்வுடையவர்கட்குத் தலைவியாய், `சிவா` என்பதை முதலாகக் கொண்ட மந்திரத்தில் பொருந்தி நிற்பவளாகிய சத்தியை, `நவாக்கரி` எனப்படும் ஒன்பது பீஜங்களில் பொருந்த வைத்து அந்த மந்திரத்தை விருப்பத்துடன் ஓதினால், செயற்கையாய் நிற்கின்ற நிலைமை அவளிடத்துப் பொருந்துதல் இல்லையாம்.
==============================================
பாடல் எண் : 49
உறைபதி தோறும் உறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாள்தொறும் நண்ணி
மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
இறைதிளைப் போதிடில் எய்திட லாமே.

பொழிப்புரை :   சத்தி இந்நிலவுலகத்தில் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ள தலங்களில் அவள் எழுந்தருளியிருக் கின்ற வகைகளை விருப்பத்துடன் உணர்ந்து, நாள்தோறும் அவ்விடங் களை அடைந்து, அவளுக்குரிய மந்திரத்தோடு நீங்காது நிற்கின்ற `பிர ணவம், பீஜம், சக்தி, கீலகம்` என்னும் நான்கினையும் தெய்வத் தன்மை மிகும்படி ஓதி வழிபட்டால், பயன்கள் பலவற்றை அடையலாம்.
==============================================
பாடல் எண் : 50
எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாம்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றிக் கருத்துறு மாறே.

பொழிப்புரை :   ஞானிகட்கு உரிய இருவினைப் பயனாவன, அம்மையிடத்தில் அன்பு செய்தலும் `செய்யாமையுமாகிய அவற்றால் வருவனவாம்.
==============================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.



No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!