http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday, 18 June 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :08/4. ஆதார ஆதேயம் (பாடல்கள்:76-100/100) பாகம் IV





 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ..பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.....................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்..........பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்..........பாடல்கள்: 100
======================================================(271+100=371)

நான்காம் தந்திரம்-பதிகம் எண்:08/4. ஆதார ஆதேயம் 
(பாடல்கள்:76-100/100) பகுதி-IV

பாடல் எண் : 76
சத்தியும் நானும் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதல்அறிவா ரில்லை
அத்திமேல் வித்திடின் அத்தி பழுத்தக்கால்
மத்தியில் ஏற வழியது வாமே.
பொழிப்புரை :   `சத்தியும், யானும், சிவமும்` என்னும் மூவர் தவிர, வீடுபேற்றினை அதன் முதல் பற்றி அறிபவர் ஒருவரும் இல்லை. முதுகந்தண்டாகிய எலும்பின்கண் பிராண வாயுவைக் கும்பித்தால், அவ் எலும்பு பக்குவப்பட்டு, அந்தப் பிராணவாயு சுழுமுனையூடே மேல் ஏறிச் செல்லுதற்கு ஏற்றதாகும்.
==============================================
பாடல் எண் : 77
அதுஇது என்றவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே.
பொழிப்புரை :    வீடுபேற்றைத் தரும் வழியாவது `அது` என்றும் `இது` என்றும், சொல்லும் வழியில் எல்லாம் சென்று வாழ்நாளை வீணே கழிக்காமல், ஒருநெறியாய் உறுதிப்பட்ட மனத்துடன் சிவ சத்தியையே முத்தியைத் தரும் முதல்வியாகத் துணிந்து அவளை யோக நெறியால் சந்திர மண்டலத்திற் சென்று வணங்க வல்லவர்க்கு, வினை வழியாகிய பிறப்பு நெறியைக் கடக்கும் அப்பயனும் கூடும்.
==============================================
பாடல் எண் : 78
வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் றன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.
பொழிப்புரை :    யாவரது ஆற்றலையும், எப்பொருளது ஆற்றலையும் வெல்லும் பேராற்றலை உடையவளாகிய சிவ சத்தியினது உண்மை நிலையைத் தவத்தால் உணர வல்லவர்க்கு` விதியின் வழி யாகிய பிறப்பு, அப்பிறப்பிற்கு முதலாகிய `வினை, எனப்படுகின்ற அந்தப் பெரியகட்டு, அதனால், வந்து சார்ந்து மயக்குகின்ற ஐம்புலன்கள் என்னும் இவ்வனைத்துத் தீமைகளையும் வெல்லுதல் கூடும்.
==============================================
பாடல் எண் : 79
ஓரைம்ப தின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமது
தாரங் குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதம்இது சத்திய மாமே.
பொழிப்புரை :   தொன்று தொட்டு வழிவழியாகச் சத்தி சிவர்களைப் போற்றிவருகின்ற மரபு, ஐம்பதெழுத்துக்களின் அதிதேவரிடத்து அவர்கள் நிற்கின்ற முறைமையில் வைத்தேயாம். சத்தியும், சிவமும் முதற்கண்ணே சார்ந்திருக்கும் இடம் அவ் எழுத்துக்களும், அவற்றின் அதிதேவருமாம். இஃது உண்மையான ஒன்று.
==============================================
பாடல் எண் : 80
சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத் தொருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே.
பொழிப்புரை :   சத்தியும், சிவமும் ஒருவர்க்கு உண்மையாற் கிடைப்பார்களாயின், எல்லாப் பயன்களும் அவற்றுக்கு உரிய காரணங்கள் இல்லாமலேயும் விளைந்துவிடும். ஆதலால், அப்பொழுது ஐம்பத்தோர் அக்கரங்களின் அதிதேவர்களும் அச்சத்தி சிவங்களின் வழிபட்டபொழுது அவர்கள் உயிரினிடத்தும் கொடுமை நெறியின் நீங்கிச் செம்மையின் நிற்பவராவர்.
==============================================
பாடல் எண் : 81
திருந்து சிவனும் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த
அருந்திட அவ்விடம் ஆரமு தாக
இருந்தனர் தானம் இளம்பிறை யென்றே.
பொழிப்புரை :   மெய்நெறியில் விளங்குகின்ற சத்தியும், வந்து பொருந்திய வானவர்கள் தம்மை வணங்கித் துதிக்க, அவர்கள் பருகுதற்கு அந்த இடம் அரிய அமுதம் சுரக்கும்படி சந்திரமண்டலமே தமக்கு இடம் என்று சொல்லி, அங்கு வீற்றிருக்கின்றார்கள்.
==============================================
பாடல் எண் : 82
என்றும் எழுகின்ற ஏரினை எய்தினோர்
தன்றது வாகுவர் தாழ்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே.
பொழிப்புரை :    என்றும் யோக நெறியால் குண்டலி வழி மேல் ஏறும் முயற்சியில் இடைவிடாது நிற்பவர், சத்தியைத் தலைப்பட்டு, முடிவில் அவளது உடைமையேயாய்விடுவர். இனி அச்சத்திதான் யோகியர்க்கு அவர் பொருந்தும் தானந்தோறும் விளக்கொளி, விண்மீன், திங்கள், கங்கை என்னும் இவைகளாய் ஏற்ற பெற்றியில் விளங்குவாள்.
==============================================
பாடல் எண் : 83
நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய துள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடும் ஞானங்கள் தோன்றிடுந் தானே.
பொழிப்புரை :    மேற்கூறியவாறு ஏற்ற பெற்றியில் விளங்குகின்றவளாகிய சத்தியை உண்மையாகத் தலைப்பட்டு அவளோடு ஒன்றுதலாவது, உள்ளொளியாகிய பதிஞானத்தால் உணர்தலேயாம். அவ்வாறு உணர்ந்தோர், இனத்தால் பசுக்களேயாயினும், அவர் வேண்டிய யாவும் வந்து நிறையும், மற்றும் மெய்யுணர்வு வகைகளும் விளங்கும்.
==============================================
பாடல் எண் : 84
தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை
மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
சான்றது வாகுவர் தாம்அவ ளாயுமே.
பொழிப்புரை :    மேற்கூறியவாறு ஞானங்கள் தோன்றும்பொழுது; சிவமும், சத்தியுமே அவரவர் விரும்பித் தொழுகின்ற தெய்வங்களாய் நின்று அருள்புரிகின்ற உண்மை விளங்கும். சிவசத்தியே அவரவரது பக்குவ நிலைக்கு ஏற்ப மேற்கூறிய தெய்வங்களையே முதற்பொருளாகக் கூறும் பற்பல சமய நூல்களைப் படைத்தவாறும் புலப்படும். தாம் (மேற்கூறிய ஞானங்களைப் பெற்றோர்) சத்தியும் சிவமுமேயாய்விட்ட அந்நிலையிலும் அவ்விருவரும் தமக்கு இன்றியமையாத உயிர்த் துணைவராய் நின்று உதவுதலும் காணப்படும்.
==============================================
பாடல் எண் : 85
ஆயும் அறிவுங் கடந்(து) அணு வோரணி
மாயம தாகி மதோமகி ஆயிடுஞ்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம் தாம்நெறி யாகிநின் றாளே.
பொழிப்புரை :   பொருள்களை அறிதலில் மனத்தினும் நுண்ணியதாகிய அறிவையும் கடந்து, சிறுமையில் அணுவுக்கு அணுவாயும், பெருமையில் மகத்துக்கு மகத்தாயும் நிற்கின்றவளும், உயிர்களால் எட்ட ஒண்ணாதவளும் ஆகிய சிவசத்தி, உயிர்கள் விரும்புகின்ற எல்லா நெறிகளுமாய் நின்று அருள் புரிகின்றாள்.
==============================================
பாடல் எண் : 86
நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக் கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.
பொழிப்புரை :  மேற்கூறியவாறு பலப்பல நெறிகளாய் நின்று உயிர்களுக்கு அருள்புரிகின்ற சத்தியை ஒருவனாகிய சிவனின் வேறாகாதவளாக அறிந்து அவளை அச்சிவனோடு ஒன்றவைத்தே அவரையே பொருளாகப் பொருந்திக் குறிக்கொண்டு எண்ணும் அறிவுத்திறன் படைத்தவரே, அவ்வறிவால் அம்மையப்பராகிய அவ்விருவரிடையே அடங்கி ஆனந்தம் எய்துவர்.
==============================================
பாடல் எண் : 87
ஆமயன் மால்அரன் ஈசன்மேல் ஆம்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமயன் நாளும் தெனாதெனா என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.
பொழிப்புரை :  சுவாதிட்டானம் முதலிய ஆதாரங்களில் முறையே பொருந்தியிருக்கும் அயன், மால், உருத்திரன், மகேசுவரன் என்னும் இவர்கட்கு மேல் உள்ள `விந்து` நாதம்` என்பவற்றுக்குரிய சதா சிவனும், அவனுக்கு மேற்பட்ட சத்தி, வியாபினி, சமனை, உன்மனை என்னும் நால்வரும் ஆகிய ஒன்பதுபேர் நிலைகளிலும் யோக நெறியால் பொருந்தியவழி ஆன்மா இன்பமயனாய்த் தேனுண்ட வண்டு அக்களிப்பினால் இசைபாடித் திரிவதுபோலுந் தன்மையை அடைவான்.
==============================================
பாடல் எண் : 88
வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.
பொழிப்புரை :   சத்தியையும், சிவனையும் அடைய விரும்புவர் யாராயினும் அவர்களை வழிபட்டு அடைதல் அல்லது, பிறிதொரு வழியாலும் அடைய வல்லுநரல்லர். ஆதலின், மக்களில் அவர்களை அடைய விரும்பும் நல்லீர், நீவிரும் அதன் பொருட்டு அவர்களை வழிபடுதலையே நெறியாகக் கொண்டு பயிலுங்கள்.
==============================================
பாடல் எண் : 89
நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்தெரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை யாமே.
பொழிப்புரை :   சத்தியைச் சிவனது ஆற்றலாக அறியும் அறிவில்லாதவர் சத்தியை வேறாகவும், சிவனிற் பெரியவளாகவும் கருதி அவளையே வழிபடினும், அவ்வழிபாடு தூய முறையில் அமைந் திருப்பின், சத்தியையேயன்றிச் சிவனையும் உவப்பிக்கும்.
==============================================
பாடல் எண் : 90
தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி
பூங்கிளி தாங்கும் புரிகுழலாள் அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.
பொழிப்புரை :  உலகத் தோற்றத்திற்கு முன்னும், ஒடுக்கத்திற்குப் பின்னும் ஒருவனேயாய் உள்ள சிவன், உலகைத் தொழிற்படுத்தி நிற்குங் காலத்தில், சத்தியை ஒருபாற் கொண்டு அவளோடு உடனாய் இருவராயே நிற்கின்றான், ஆதலின், மாணவனே, நீ சிவனோடு சத்தியையும் உடன் வைத்தே வழிபடு.
==============================================
பாடல் எண் : 91
பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அங்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.
பொழிப்புரை :  மாணவனே, நீ, துவண்ட தோற்றத்தால் கொடி போலுதல் கொண்டு, நிறம் பற்றி, `பசுங்கொடி` என்றும், பயன் பற்றி, `நற்கொடி` என்றும், அழகு பற்றி `ஒளிக்கொடி` என்றும், புகழப் படுபவளும், மெய்யுணர்ந்தோரது அன்பிற்குத் தலைவியும், மூன்று கண்களை உடையவளும் ஆகிய பராசத்திக்கு அன்பு செய்து மேம்படு; அழகிய கொடிபோல்பவராகிய கலைமகளும், திருமகளும் உன் பாதங்களைப் போற்றுவார்.
==============================================
பாடல் எண் : 92
விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே.
பொழிப்புரை :  விளங்குகின்ற விளக்குப் போல்பவளும், மிக்க ஒளியுடைய மணி மாலைகள் அசையும் மார்பினை உடையவளும் ஆகிய பராசத்தி, செறிந்த இருள் மறையும்படி கண்டத்தில் நீல மணியைக் கொண்டு விளங்கும் சிவனுடன் இன்ப விளையாடலைக் கருதுகின்ற, நாணம் பொருந்திய ஒரு தோற்றத்தையும் நினைத்து வழிபடு.
==============================================
பாடல் எண் : 93
தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி யிருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்க உமையொடும் ஓருரு வாமே.
பொழிப்புரை :   பாம்பை அணிந்த விரிந்த சடையில் பெரிய கங்கை நீர் ஒரு புல்நுனியில் நீர்போல் அடங்கியிருக்கச் சிவன் சத்தியோடு இரு திறமும் ஒருவடிவிலே அமைய நிற்கின்றான். உலகில் பிறந்து அறிவு தொடங்க நின்ற நாள் முதலாக அவனது அழகிய அந்த மணக் கோலத்திலே அடங்கி நிற்பதே எனது அன்பின் பெருமையாகும்.
==============================================
பாடல் எண் : 94
உருவம் பலஉயி ராவல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடின்
புரிவளைக் கைச்சினம் பொன்னணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.
பொழிப்புரை :  பல உடம்புகளும், அவற்றில் உள்ள பல உயிர்களுமாய் நிறைந்து நிற்கின்ற சிவன் உயிர்களுக்குப் பல வேறு வடிவினனாய்க் காட்சியளித்தலை ஆராயின், அவையெல்லாம் அவன் தனது சத்தியோடு மணந்து மகிழ்கின்ற அருள் நாடகமே.
==============================================
பாடல் எண் : 95
மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்கும் சலதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்கும்அவ் வியோனியு மாமே.
பொழிப்புரை :  உயிர்களின் பொருட்டுப் பலப்பல நாடகங்களைத் திருவுளத்துக் கொள்கின்ற சிவனது திருவடியாகிய உரிமைப் பொருளை உயிர்களுக்கு கூட்டுவிக்கின்ற நடிகையாகிய சிவசத்தி அச்சிவனை உருவம் உடையவனாகச் செய்தற்கு, அவனோடு கூடுகின்ற கூட்டத்திலே அவனுக்கு உருவத்தைக் கொடுத்தலேயன்றிப் பல்வேறு இனங்களாக அமைக்கின்ற பிறப்பு வகைகளாயும் நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 96
உணர்ந்தொழிந் தேன்அவ னாம்எங்கள் ஈசனைப்
புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யானை
அணைந் தொழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்தொழிந் தேன்தன் அருள்பெற்ற வாறே.
பொழிப்புரை :   உயிர்களால், `அவன்` என்று சேய்மைச் சுட்டாகப் பொதுவே உணரப்படுபவனாகிய எங்கள் தலைவனாகிய சிவனை நான், `அவன் அன்ன அருமையினன்` என முதற்கண் உணர்ந்தேன். பின்னர் அவன் உலக முதல்வியாகிய சத்தியையுடைய சத்திமானாதலை அறிந்து அவனை அணுகினேன். அதன்பின்னர் அவனோடு ஒன்றினேன். முடிவாக ஒருஞான்றும் அவனை விட்டு விலகாத நிலைமையனாயினேன். இவையே நான் சிவனது திருவருளைப் பெற்ற முறைமை.
==============================================
பாடல் எண் : 97
பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனி
நற்றாள் இறைவனே நற்பய னேஎன்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.
பொழிப்புரை :  இறைவனைப் போற்றுபவர், `நல்ல திருவடிகளை உடைய இறைவனே` என்றும், `அடியார்கட்கு மிக நல்ல பயனாய் உள்ளவனே` என்றும் அழைத்துப் போற்றுவர். அந்தத் திருவடிகளும், பயனுமாய் இருக்கின்ற பெருமையைப் பெற்றுள்ளவள் உயர்பெருந் தேவியாம் சத்தியே, இறைவனைப் பற்றிக்கூறும் நூல்களைக் கற்றுணர்ந்தவன் அறியும் பொருளாகிய இதனை அறிய வல்லவர்கட்கு இறைவனது அருளுலகத்தை அடைதல் சிறப்புப் பயனாகும்.
==============================================
பாடல் எண் : 98
தனிநா யகன்றனோ டென்நெஞ்சம் நாடி
இனியாள் இருப்பிடம் ஏழுல கென்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியா நினைவதென் காரண அம்மையே.
பொழிப்புரை : ஒப்பற்ற தலைவனாகிய சிவனோடே எனது நெஞ்சத்தை விரும்பி இனியவளாய் இருக்கின்ற சத்தி ஏழுலகத்திலும் நிறைந்திருப்பவளே. ஆயினும், எனக்குத் தாயாகிய அவளை நான் நல்ல புதுமலர்களைக் கையில் கொண்டு உண்ணுவது உள்ளங்கை நெல்லிக்கனியாகவே.
==============================================
பாடல் எண் : 99
அம்மனை அம்மை அரிவை மனோன்மனி
செம்மனை செய்து திருமக ளாய்நிற்கும்
இம்மனை செய்த இருநில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே.
பொழிப்புரை :  சிவனுக்கு அழகிய மனைவியும், உயிர்களுக்குத் தாயும் ஆகிய சத்தி, உயிர்களின் பல்வேறு நிலைகளிலும் அவற்றிற்கு ஆதாரமாய் நின்று, வேண்டுவனவற்றை வழங்குபவளாயும் இருப்பாள். அதனால், இன்று நமக்கு ஆதாரமாய் நிற்கின்ற நிலமகளும் அந்தச் சிவசத்தியாகவே எனக்குத் தோன்றுகின்றாள்.
==============================================
பாடல் எண் : 100
அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அம்மையும் அத்தனும் ஆரறிவார் என்னை
அம்மையொ டத்தனும் யானும் உடனிருந்
தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே.
பொழிப்புரை : உலகத்தாயும், தந்தையுமாகிய சத்தியும், சிவனும் என்பால் அன்புவைத்து எனக்கு ஆவன செய்தலல்லது, என்னைப் பெற்ற தாய் தந்தையர்தாம் என்னை எந்த அளவில் அறிந்து எனக்கு என்ன செய்யவல்லுவர்! ஆகையால், உண்மைத் தாயாகிய சத்தியும், தந்தையாகிய சிவனும், மகனாகிய யானும் மட்டும் ஒன்றியிருந்த காலத்து யான் அவ்விருவரையே விரும்பி அவரிடம் அயரா அன்பு உடையவனாயினேன்.
==============================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!