http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Tuesday, 25 September 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :13. நவாக்கரிச் சக்கரம் (பாடல்கள்:051-075) பாகம் III




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.......................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்............பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்.............பாடல்கள்: 100 
நான்காம் தந்திரம்:பதிக எண்:09: ஏரொளிச் சக்கரம்..........பாடல்கள்: 036
நான்காம் தந்திரம்:பதிக எண்:10: வைரவச் சக்கரம்...........பாடல்கள்: 006
நான்காம் தந்திரம்:பதிக எண்:11: சாம்பவிமண்டலச் சக்கரம் .பாடல்கள்:009
நான்காம் தந்திரம்:பதிக எண்:12: புவனாபதிச் சக்கரம்......பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:13: நவாக்கரிச் சக்கரம்.......பாடல்கள்: 100

======================================================(434+100=534)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:13.
நவாக்கரிச் சக்கரம் (பாடல்கள்:051-075) பாகம் III 

 
பாடல் எண் : 51
வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடின்
கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.

பொழிப்புரை : இச்சக்கரத்தில் வைத்துத் தியானிக்கப்படும் பொன் போன்றவளாகிய சத்தியுடன் பொருந்தத்தக்க சிறந்த வழிபாடு யாது என ஆராயின், சத்தியை மிக இளைவளாகவும், அவளுக்கு உரிய மந்திரம் இவ் எழுத்துக்களேயாகவும் கொண்டு, தேவிதன் ஆயிர நாமங்களால் ஆயிரமுறை அருச்சனை செய்தல் என அறிவாயாக.
==============================================
பாடல் எண் : 52
சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தாய் கரங்கள் இருமூன்றும் உள்ளன
பந்தமா சூலம் படைபாசம் வில்அம்பு
முந்தை (கீலீம்)எழ முன்னிருந் தாளே.

பொழிப்புரை : வழிபடுவோரது உள்ளத்திலே ஒளி விட்டு விளங்கு பவளாய், `க்லீம்` என்னும் பீசத்தை முதலில் வைத்துக் கணிக்க அங்ஙனம் கணிப்பவர்களது கண்முன் தோன்றிநின்று அருளுகின்ற சத்தியாகிய எம் தாயது ஆறு கைகளிலும் உள்ளவைகளில் படைகள் ஆவன, விடாது பறறிய `சூலம், பாசம், வில், அம்பு` என்பன.
==============================================
பாடல் எண் : 53
இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
இருந்த கரம்இரு வில்லம்பு கொண்டே.

பொழிப்புரை : வழிபடுவோனுக்கு எதிரே மேற்கூறிய சக்கரத்தில் சக்கர தேவியைச் சூழ்ந்து ஒவ்வொருத்திக்கு எண்மராக அறுபத்து நால்வர் சூழ எண்மர் சத்திகள் இருப்பர். அவர்கள், கையில் வில்லும் அம்பும் கொண்டிருப்பர்.
==============================================
பாடல் எண் : 54
கொண்ட கனங்குழை கோமுடி ஆடையாய்க்
கண்டஇம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரித ழானவை
உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே.

பொழிப்புரை : மணிகளால் கனமான குழை, அரசு முடி நல்ல ஆடை இவைகளை உடையதாய்க் காணப்படுகின்ற இவ்வடிவம் நெருப்புப் போன்றதாய் இருக்க, இயல்பாகவே பல இதழ்களை யுடைய விளக்கம் மிக்க தாமரைமலர் இருக்கையில் எழுந்தருளியிருக் கின்ற ஒருத்தி, தன்னை உணரவல்லவர்க்குத் தன் இருப்புத் தோன்ற நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 55
உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்
கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை ஒளியது காணும்
தணந்தெழும் சக்கரம் தான்தரு வாளே.

பொழிப்புரை : உணர வல்லார்க்கு உள்ளவள் ஆகின்ற அச் சத்தியை உள்ளே உணர்ந்து காணின், அவள் எங்கும் தானாய்க் கலந்து அருள்மழையைப் பொழிவாள்; (எவ்விடத்திலும் அவ் அடியவ னுக்குத் தடையின்றி அருளுவாள் என்றபடி.) அவள் அங்ஙனம் அருளும்பொழுது அவளோடு கூடி இனிய ஓசையும், அழகிய ஒளியும் தோன்றும். அவளும் அச்சக்கரத்தினின்றும் வெளிப்பட்டு வருவாள்; வந்து, வேண்டும் வரங்களைத் தருவாள்.
==============================================
பாடல் எண் : 56
தருவழி யாகிய தத்துவ ஞானம்
குருவழி யாகுங் குணங்களுள் நின்று
கருவழி யாகுங் கணக்கை அறுத்துப்
பெருவழி ஆக்குமப் பேரொளி தானே.

பொழிப்புரை : மேலெல்லாம் `பேரொளி` எனச் சொல்லப்பட்ட சத்தி, வீடுபேற்றைத் தரும் வழியாகிய உண்மை ஞானம் ஆசிரியர் வழியாகப் பெருகும் செயலிடமாக விளங்கி நின்று, பிறவிக்கு ஏது வாகும் அவை தோன்றுகின்ற முறைமையை அழித்து, மேலான நெறி யாகிய அருளை வழங்குவாள்.
==============================================
பாடல் எண் : 57
பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்
சீரொளி யாகித் திகழ்தரு நாயகி
காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்
பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.

பொழிப்புரை : பொதுவாக, `பேரொளி` எனக் குறிக்கப்படுகின்ற, பெரிய ஒளிகட்கெல்லாம் பெரிய ஒளியாகிய சிவனது சிறப்புப் பொருந்திய ஒளியாய்த் திகழ்கின்றமையால் அவனுக்கு நாயகியாய், இயல்பிலே நீல நிறம் உடையவளாகிய சத்தி, பூமியின் நிறமாகிய பொன்னிறம் உடையவளாய்ப் பூமியில் எங்கும் நிறைந்து நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 58
பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி
பரிந்தருள் கொங்கைகள் முத்தார் பவளம்
இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.

பொழிப்புரை : உடம்பிற்கு வெளியே நீட்டியுள்ள இருகைகள் இரு தாமரை மலர்களை ஏந்தியிருக்க, உடம்பிற்கு உள்ளே அடக்கியுள்ள இரு கைகள் யாதும் ஏந்தாதே விளங்க, உயிர்கட்குத் தாயாகி அருளு கின்ற தனங்கள் முத்து மாலையும், பவழ மாலையும் உடையனவாக, உடுத்தியுள்ள ஆடை மிகச் சிறந்த ஆடையாய் மணிகளால் பொதியப்பட்டு அவள் மாட்டு இருந்தது.
==============================================
பாடல் எண் : 59
மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை
அணிபவ ளன்றி அருளில்லை யாகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப்
பணிபவர்க் கன்றோ பரகதி யாமே.

பொழிப்புரை : தலையில் இரத்தின கிரீடத்தை அணிபவளும் பாதத்தில் சிலம்பை அணிபவளும் ஆகிய இச்சத்தியையன்றித் `திருவருள்` என்பது வேறில்லை. ஆகவே, பிற தெய்வங்களின் மேல் செல்லும் அவா அடங்கித் தன்னை நினைப்பவர் நெஞ்சினுள்ளே தான் தனது இயல்பாகிய அருளோடு விளங்கிப் பின்னும் பலவாற்றால் தன்னை வழிபடுவார்க்கு அன்றோ இவள் மேலான கதியாயும் நிற்பாள்!
==============================================
பாடல் எண் : 60
பரந்திருந் துள்ளே அறுபது சத்தி
கரந்தனர் கன்னிகள் அப்படிச் சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
சிறந்தவர் ஏத்தும் (சிரீம்)தன மாமே.

பொழிப்புரை : இச்சத்தி, தன்னை வழிபடுவோனது உள்ளத்திலே நிறைந்திருந்து, அறுபத்து நால்வரும், எண்மரும் ஆகிய சத்திகள் மேற்கூறப்பட்டவாறு (1353) தன்னைச் சூழ்ந்திருக்க, பரந்த இரு கைகளில் இருதாமரை மலர்களையும் மேற்கூறியவாறு (1358) ஏந்தி, உயர்ந்தவர்கள் துதிக்கின்ற `ஷ்ரீம்` என்னும் பீசத்திற்குரிய திருமகளாய் நின்று செல்வத்தையும் அளிப்பாள்.
==============================================
பாடல் எண் : 61
தனமது வாகிய தையலை நோக்கி
மனமது ஓடி மரிக்கில்ஓ ராண்டில்
கனமவை அற்றுக் கருதிய நெஞ்சம்
தினகர னாரிடச் செய்திய தாமே.

பொழிப்புரை : சத்தியை `ஷ்ரீம்\\\' பீச வழிச் செல்வத் தலைவியாக வைத்து, மனம் பற்றித் தியானித்து வந்தால், ஓராண்டிற்குள் அம்மனம் செல்வத்தில் உள்ள பற்றாகிய சுமை நீங்கப்பெற்று, ஞான சூரியனாகிய சிவனிடத்திற் செல்லும் செயலை உடையதாகும்.
==============================================
பாடல் எண் : 62
ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்
பேர்கின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

பொழிப்புரை : பக்குவம் முதிர்தற்கு முதலாய் உள்ள மூலாதாரத் தாமரையினின்றும் வளர்ந்து செல்கின்ற மூலாக்கினி, சுவாதிட்டானம் முதலியமற்றை ஆதாரங்களில் உள்ள தாமரை மலர்களில் பொருந்திச் சென்று, அவற்றிற்கு மேலும் போகின்ற பூரண ஒளியாய் நிறைந்த பின்பு, அவ்வக்கினி யோகியின் உடம்பு முழுதுமான மண்டலமாய் நிற்கும்.
==============================================
பாடல் எண் : 63
ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள்
ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரும்
ஆகின்ற ஐம்பத் தறுவகைச் சூழலே.

பொழிப்புரை : வழிபடுவோன் ஆக்கம் பெறுதற்கு ஏதுவாகிய இச் சக்கரத்தில் வீற்றிருக்கும் சிவசத்தி, மாதுருகாட்சரம் ஐம்பத்தொன்றும், வியட்டிப் பிரணவமாகிய சூக்கும அக்கரம் ஐந்தும் ஆகிய ஐம்பத்தாறு அட்சரங்கட்கும் தலைவியாகிய முழுமுதல்வி. பிற சத்திகள் யாவரும் தனித்தனி இடங்களையுடைய அவற்றுள் ஒவ்வொன்றற்கே முதல்வியராவர்.
==============================================
பாடல் எண் : 64
சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமா
ஆங்கணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கையவை தார்க்கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.

பொழிப்புரை : அவளது அழகிய மேனி சுற்றிலும் ஒளி வீசி விளங்குவது. அதில் கேசாதி பாதம் அணியப்பட்ட அணிகள் முத்தாலாகியன. கீழ் இரண்டு கைகளில் கிளியும், ஞான முத்திரையும், உயர எடுத்த இரண்டு கைகளில் பாச அங்குசங்களும் விளங்கும்.
==============================================
பாடல் எண் : 65
பாசம தாகிய வேரை அறுத்திட்டு
நேசம தாக நினைத்திரும் உம்முளே
நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில்
காசினி மேலமர் கண்ணுத லாக்குமே.

பொழிப்புரை : சத்தியை மேற்கூறிய வடிவினளாக உங்கள் உள்ளத்தில் அன்போடு தியானியுங்கள்; துன்பங்கள் யாவும் ஒழியும்; ஐந்தாண்டிற்குள்ளே, பிறவிக்கு முதலாகிய மலங்களைப் போக்கி, `பூமியிலே காணப்படும் சிவன்\\\' என்னும் நிலையை நீங்கள் அடையச் செய்வாள்.
==============================================
பாடல் எண் : 66
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்காரம்
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

பொழிப்புரை : அருட் சத்தியின் அருள் கிடைத்தற்குரிய வழியில் நாதமும் ஒத்து நிற்கும்படி நிற்க வேண்டில், சிவசோதி விளங்கும்படி சத்தியை வழிபடுதற்குரிய சக்கரம் ஹ்ரீங்கார சக்கரமேயாம்.
==============================================
பாடல் எண் : 67
மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத் துள்ளே விளங்கி வருதலால்
தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.

பொழிப்புரை : நவாக்கரி சக்கரத்துள் விளக்குப் போல ஒளி விட்டுத் தோன்றுகின்ற சத்தியை உள்ளத்திலே கண்டு, பின் இடை யறாது தியானித்திருங்கள். அத்தியானத்தில் அவள் மேலும் விளக்கு முற்று வருதலால், சுழுமுனையில் உள்ள ஆதாரங்களில் நிகழும் அனுபவங்களை நீங்கள் முறையானே பெற்று உயரலாம்.
==============================================
பாடல் எண் : 68
தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்
தோங்கி யெழுங்கலைக் குள்உணர் வானவள்
ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட
வாங்கிய நாதம் வலியுட னாகுமே.

பொழிப்புரை : உந்தித் தானம் தாங்கியுள்ள தாமரை மலராகிய ஆதார சக்கரத்தினின்றும் வளர்ந்தெழுவதாகிய பிராசாத கலை களுக்குள் அறிவு வடிவாய் நிற்கின்ற சத்தி, பிராசாத யோகி வருந்தும் படி வருகின்ற அவனது பிறப்பை நீக்க எண்ணி, அங்ஙனமே நீக்குத லால், அவனைத் தன்வழிப்படுத்திவந்த நாதம் அவனது வழிக்குத் துணையாய் அவன் வயமாகும்.
==============================================
பாடல் எண் : 69
நாவுக்கு நாயகி நன்மணி பூண்ஆரம்
பூவுக்கு நாயகி பொன்முடி ஆடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அன்றமர்ந் தாளே.

பொழிப்புரை : நாதத்திற்குத் தலைவியாகிய வாகீசுவரி நல்ல மாணிக்கத்தால் ஆகிய ஆபரணத்தையும், ஆரத்தையும் அணிந்தவள். செந்தாமரை மலராம் இல்லத்திற்குத் தலைவியாகிய திருமகள் பொன் னாலாகிய முடியையும், ஆடையையும் கொண்டவள். பாடல் களுக்குத் தலைவியாகிய கலைமகள் பால்போலும் வெண்ணிறம் பெற்றவள். பசுக்களாகிய உயிர்கள் அனைத்திற்கும் தலைவியாகிய சிவசத்தி படைப்புக் காலந்தொட்டே இவரிடத்து இருந்து அருள் புரிகின்றாள்.
==============================================
பாடல் எண் : 70
அன்றிரு கையில் அளந்த பொருள்முறை
இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டங் கிருந்தவர்க் காரணி காணுமே.

பொழிப்புரை : பிரமசாரியாய் இருந்தபொழுது இரு கைகளிலும் இருந்தது பொருள்களின் இயல்பை அளந்து காணும் நூல் எழுதப்பட்ட சுவடி. யோகியாய்விட்ட இன்று இரு கைகளிலும் இருப்பது தூய கமண்டலம். இவ்வாறு படி முறையான ஆச்சிரம ஒழுக்கத்தில் நிற் பதையே இறைவன் நடனம் புரியும் அம்பலத்தை உள்ளபடி காணும் முறையாகக் கொண்டு, அங்ஙனமே கண்டு அங்கு இருப்பவரை அனைத்துக்கும் காரணியாகிய சத்திதான் கடைக் கணித்திருப்பாள்.
==============================================
பாடல் எண் : 71
காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்
காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்கும்
காரணி தன்னரு ளாகிநின் றாளே.

பொழிப்புரை : எப்பொருட்கும் காரணியாகிய சிவ சத்தி, பிற சத்திகளாய்க் கன்னியராய் உள்ள ஐம்பத்திருவராய்ச் சக்கரங்களுள் மறைந்து தனது இயல்பான அருள் வெளிப்பட நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 72
நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்
கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில்
கொண்ட விரதம்நீர் குன்றாமல் நின்றிடில்
மன்றினில் ஆடும் மணியது காணுமே.

பொழிப்புரை : நவாக்கரி சக்கரத்தில் நிற்கின்ற சத்தி உங்கள் உள்ளத்தில் நிலைபெறும் வகையில் நீங்கள் ஒழுகினால், உங்களைக் கண்டுகொண்டிருந்த ஒளியாகிய சத்தி ஓராண்டில் உங்கட்கு வெளிப் படுவாள். அதற்குப் பின்னும் நீங்கள் அவ்வொழுக்கம் சிறிதும் குறையாதபடி கடைப்பிடித்து நின்றால், மேற்கூறிய அம்பலத்தில் நடிப்பவன் உங்கட்குக் காணப்படுவான்.
==============================================
பாடல் எண் : 73
கண்டஇச் சத்தி இருதய பங்கயம்
கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்
பண்டை அவாவுப் பகையை யறுத்திட
இன்றென் மனத்தில் இனிதிருந்தாளே.

பொழிப்புரை : எல்லா உயிரையும் காண்கின்றவளும், எனது உள்ளத் தாமரையை இடமாகக் கொண்டு இருக்கின்ற மெய்ப் பொருளானவளும் ஆகிய இச்சத்தி, தொன்று தொட்டு வருகின்ற எனது `அவா` என்கின்ற பகையை அறுத்து அருள் செய்தற் பொருட்டே என் உள்ளத்தில் இனிது வீற்றிருக்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 74
இருந்தஇச் சத்தி இருநாலு கையில்
பரந்தஇப் பூக்கிளி பாசம் மழுவாள்
கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங்
குரந்தங் கிருந்தவள் கூத்துகந்தாளே.

பொழிப்புரை : என் உள்ளத்தில் இருக்கின்ற இவளே எட்டுக் கைகளை உடையவளாயும், அக்கைகளில், `தாமரை மலர், கிளி, பாசம், மழு, வாள், எதிர்வரும் கருவியைத் தடுக்கின்ற கேடகம், வில், அம்பு` என்ற இவைகளை ஏந்தி வீரநடனம் புரிபவளாயும் விளங்குவாள்.
==============================================
பாடல் எண் : 75
உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து
தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.

பொழிப்புரை : மேற்கூறிய வீர சத்தி பச்சை நிறங்கொண்டவள்; பொன்முடியை விரும்பிக் கவித்தவள்; ஆரமாகப் பரந்த முத்துக் களையும், பவளங்களையும் அணிந்து, பட்டாடை உடுத்து, புடை பரந்த கொங்கைகளின்மேல் இரத்தினக் கச்சு அணிந்து, மிகவும் பொலிவுடன் விளங்குவாள்.   
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

 

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!