http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday, 29 September 2012

திருமந்திரம்-தந்திரம்05: பதிகம் எண் :01, 02 & 03. சுத்த, அசுத்த மற்றும் மார்க்க சைவம்




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:01: சுத்தசைவம் .........பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:02:
சுத்தசைவம் ....பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:03: மார்க்க
சைவம் ..பாடல்கள்: 011
==========================================(004+004+011 = 019)
ஐந்தாம் தந்திரம்-பதிகம் எண்:01. சுத்த சைவம் (பாடல்கள்:004)
பாடல் எண் : 01
ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடில்
ஏருமிம் மூவுல காளி இலங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.

பொழிப்புரை : பல உலகங்களையும், அவை அடங்கியுள்ள பல அண்டங்களையும் ஒரு சேரப் படைக்கின்ற பேரறிவினையுடையவனாகிய சிவனது பெருமையைக் கூறுமிடத்து, எழுச்சியை உடைய இந்த உலகங்கள் மூன்றினையும் தன்னடிப் படுத்து ஆள்கின்ற தலைவனாம் அவன், விளங்கத் தோன்றும் நிலைக்களம் நால்வகைச் சைவமுமாகும்.
==============================================
பாடல் எண் : 02
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு
சித்தும் அசித்துமுன் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமும் தோய்வுறா மேநின்ற
நித்தம் பரம்சுத்த சைவர்க்கு நேயமே.

பொழிப்புரை : சுத்த சைவர்க்கு, சத்தாகிய பதியின் இயல்பையும், அசத்தாகிய பாசத்தின் இயல்பையும், இவற்றிற்கு இடைப்பட்டுச் சதசத்தாய் நிற்கின்ற பசுவின் இயல்பையும் உணர்ந்தபின், அறிவுடைப் பொருளாகிய உயிர்களுள்ளும், அறிவில் பொருளாகிய பாசங்களுள் ஒன்றாகாது வேறுபட்ட பொருளாய், சுத்தமாயுள்ள வைந்தவங்களிலும் அசுத்தமாயுள்ள மாயேயங்களிலும் தோய்ந்தும் தோயாமலி ருக்கின்ற நித்தியப் பொருளாகிய பரசிவம் ஒன்றே குறிப் பொருளாம்.
==============================================
பாடல் எண் : 03
கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேலித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

பொழிப்புரை : கற்கத் தக்கனவாகிய சிவாகமங்களைக் கற்று, அவைகளிலே சிறப்பாகப் பொருந்தியுள்ள பிராசாத யோகத்தின் வழிப் பிரணவ ஞானத்தைப் படிமுறையால் பொருந்தி, சாலோகம் முதலாகச் சொல்லப்பட்ட பதமுத்தி களையும், அடைந்து, இவை யெல்லாவற்றின் விளைவாகவும் அதிதீவிர பரிபாகமும், அதிதீவிர சத்திநிபாதமும் வரப்பெற்று, அனைத்துப் பொருளுக்கும் மேலாய், ஆன்ம வியாபகத்திற்கும் மேலான வியாபகப் பொருளாகிய பரசிவப் பொருளைத் தலைப்பட்டவரே `சைவ சித்தாந்திகள்` எனப் படுகின்றனர்.
==============================================
பாடல் எண் : 04
வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.

பொழிப்புரை : வேதத்தின் முடிந்த பொருள் இன்னது எனத்தெளிவாக விளங்குவதாகிய சித்தாந்த சைவத்தில் நின்று, நாத முடிவான தத்துவங்களைக் கண்டு கழித்தோரே, பின் ஒரு காலும் அசைவில்லாத திண்ணிய மெய்யுணர்வைப் பெற்றவராவர். பின்னும் அவர் `நான்` என்னும் தற்போதமும் கழலும்படி உணர்வு திருந்தப் பெறுவாராயின், நாதமுடிவில் விளங்கும் நிறை பரம் பொருளாகிய சிவமாந்தன்மையைப் பெறுவர். அதனைப் பெற்றோரே உண்மை ஞானத்தால் உண்மை ஞேயத்தை எய்தினோராவர்.
==============================================
ஐந்தாம் தந்திரம்-பதிகம் எண்:02.சுத்த சைவம் (பாடல்கள்:004)
பாடல் எண் : 01
இணையார் திருவடி ஏத்தும்சீ ரங்கத்
திணையார் இணைக்குழை ஈரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாம் சரியை கிரியையி னார்க்கே.

பொழிப்புரை : சரியை, கிரியை நெறிகளில் நிற்பவர்க்குச் சிவனது இரண்டு திருவடிகளைத் தாம் வணங்குதற்குரிய கோலமாக உடம்பில் ஒன்று இரண்டாய்ப் பிணைந்த இருகுழைகள். இரண்டாகப் பொருந்திய முத்திரைகள், இரட்டை வடமாக அமைந்த கண்ட சரமும் ஆகியவை குறையாது பொருந்துதற்கு உரியன.
==============================================
பாடல் எண் :02
காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்
தோதுந் திருமேனி உட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.

பொழிப்புரை : காதில் பொன்னாற் செய்யப்பட்டுப் பொருந்திய கடுக்கன் இரண்டை அணிந்து, சிவாகமங்களில் சொல்லப்படுகின்ற `தூலம், சூக்குமம், பரம்` என்னும் மூன்று உடம்புகளையும் சோதித்துத் தூய்மை செய்யப் பெற்று, துவாதச கலாப் பிராசாதயோக நெறியில்நின்று, அந்நிலைக்கு ஏற்பத் தாம் உபதேச முறையாற் பெற்ற திருவைந்தெழுத்தையும் ஓதுபவர் மேற்கூறியவரின் வேறுபட்ட ஒருசார் சைவராவர்.
==============================================
பாடல் எண் : 03
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமா
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

பொழிப்புரை : பாரத வருடத்தின் ஒன்பது பகுதிகளையும் சென்று கண்டவரே அவைகளில் உள்ள சான்றோர் ஆராய்ந்துகண்ட அரிய உண்மையைக் கண்டவராவர். அதனால், அவர் எல்லாவற்றையும் உணர்ந்த இறைவனது நவந்தரு பேதங்களையும் உணர்ந்தோரும், பின்னர்க் கூறப்படும் கடுஞ்சுத்த சைவருக்கு நிகரானவரும் ஆவர்.
==============================================
பாடல் எண் : 04
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.

பொழிப்புரை : `ஞானத்தை விரும்புபவன்` என்று சொல்லப் படுவோன், உலகில் விளங்கித் தோன்றுகின்ற சமய நூல்கள் அனைத்தையும் உணர்ந்த உணர்வோடு, மன ஒடுக்கம் வரும் நிலையையும், முழுமையாக எண்ணப்படுகின்ற `எட்டு` என்னும் தொகையைப் பெற்றுள்ள சித்திகளையும், இவ்வுலகமேயன்றி, ஏனை மேல் கீழ் உலகங்களின் இயல்புகளையும், இருக்கு முதலிய நான்கு வேதங்களின் முடிவாகிய `ஆரணியகங்கள், உபநிடதங்கள்` என்பவற்றின் பொருள்களையும், எல்லாவற்றிற்கும் முதல்வனாகிய இறைவனது இயல்பையும், அவனுக்கு என்றும் அடிமையாகின்ற தனது இயல்பையும் உணரும் பண்புடையவனேயாவன்.
==============================================
ஐந்தாம் தந்திரம்-பதிகம் எண்:03. மார்க்க சைவம் (பாடல்கள்:011)
பாடல் எண் : 01
பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதன மாஞான சாதனம்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே.

பொழிப்புரை : சுத்த சைவநிலையை அடைய வேண்டுவார் கொள்ளத்தக்க முதற் சாதனங்கள், பொன்னாற் பொதியப்பட்ட உருத்திராக்கங்களின் மாலை, விபூதி என்னும் இரண்டுமாம். இவை நன்மையைத் தருகின்ற பெரிய ஞான சாதனமும், தீமை தோன்றாவாறு செய்கின்ற பெரிய காப்புச் சாதனமுமாம். ஆதலால், அவர்கட்கு இவை இன்றியமையாச் சாதனங்களாகும்.
==============================================
பாடல் எண் : 02
கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தி
னூடுறு ஞானோ தயன்உண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வன்பத்தன் நித்தனே.

பொழிப்புரை : பின்னர்க் கெட்டொழியாது நிலை பெற்று நிற்கும் ஞானத்தை உணர்ந்தவனும், அதனால் `ஞான வேந்தன்` எனப் புகழப்படுபவனும், அழிவில்லாத வேத முடிவில் தொடங்கி விரிந்த சிவாகமங்களின் நாற்பாதங்களினுள்ளும் பொருந்தி விளங்கும் பொருள்கள் விளங்கப்பெற்ற அறிவையுடையவனும், அவற்றால் உண்மை முத்தியாகிய பரமுத்தியைப் பெறும் தகுதியை அடைந்தோனுமாகிய பெருமை பொருந்திய சுத்த சைவனுக்குத் தொண்டு பூண்டவன் பிறவிப் பயனைப் பெற்றவனாவன்.
==============================================
பாடல் எண் : 03
ஆகமம் ஒன்பான் அதில்ஆன நாலேழு
மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மைஒன்
றாக முடிந்த தருஞ்சுத்த சைவமே.

பொழிப்புரை : தொல் ஆகமங்கள் ஒன்பதே, `இருபத்தெட்டு` என்பன அவற்றினின்றும் விரிந்தனவாம். `சிவபேதம், உருத்திரபேதம், தேவபேதம்` என்னும் முப்பேதங்களும் `இருபத்தெட்டு` என்னும் அவற்றில் சொல்லப்படுவனவே. ஆகமங்கள் எத்துணையாக விரிந்து, எத்துணைப் பேதப்பட்டிருப்பினும் தற்போதத்தைப் போக்கவல்ல, வேதாந்தத் தெளிவாம் சித்தாந்தமாகிய அவற்றின் துணிபு ஒன்றேயாக முடிந்ததே சுத்த சைவநிலை வாய்ப்பதாகும்.
==============================================
பாடல் எண் : 04
சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓரேழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே.

பொழிப்புரை : `சுத்தம், அசுத்தம், மிச்சிரம்` என்னும் மூவகைப் பல்வேறு நிலைகளையும், மாயை கன்மங்களின் காரண காரிய நிலைகளையும் கடந்து, பரையாவும், அபரையாதற்குரியவளாயும் உள்ள, சிவனது அருளாகிய சத்தி, எல்லாப் பொருள்களையும் நடத்துபவளாய், அவற்றின் உட்பொருளாகி எவ்விடத்திலும் நிறைந்து நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 05
சத்தும் அசத்தும் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினோர்
சித்தியும் அங்கே சிறந்துள தானே.

பொழிப்புரை : எங்குமாய் நிற்கும் அருட் சத்தியை அடைந்து நிற்கும் நிலைக்கு மேலே, எல்லாப் பொருளையும் கடந்த பராசத்தியை அடைந்தவர், அச்சத்திக்கு முதலாய பரசிவமேயாய், சித்தும் சடமுமாய உலகங்களுள் யாதும் தோன்றாது சிவோகம் பாவனையில் அழுந்தி, பரமுத்தி நிலையில் விளையும் பேரின்பமாகிய ஆனந்த சத்தியில் மூழ்கியிருப்பர். அவரது பேறே ஏனை எல்லார் பேற்றினும் சிறந்த பேறாகும்.
==============================================
பாடல் எண் : 06
தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே.

பொழிப்புரை : ஆன்மா, `யாதும் செய்யாது அமைதியாயுள்ள பரசிவன், `சதாசிவன்` எனப்படுகின்ற ஐந்தொழில் முதல்வன், அப்பதியோடு ஏனைப் பசு பாசங்கள், அநாதி தொட்டே உள்ள ஆணவப் பிணிப்பாகிய முதற்பந்தம், அது நீங்கி நின்ற வீடு` என்னும் இவற்றை ஐயந்திரிபு அற ஆராய்ந்துணர்தல் என்பர். இவை சுத்த சைவராவார் தமக்கு உரிய உபாயமாகும்.
==============================================
பாடல் எண் : 07
பூரணந் தன்னிலே வைத்தற்ற அப்போதத்
தாரண வந்த மதிசித்தாந் தத்தொடு
நேரென ஈராறும் நீடும் நெடும்போகம்
காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.

பொழிப்புரை : சுத்த சைவராய் உள்ளார்க்கு உளதாகின்ற அனுபவத்திற்கு, எங்கும் நிறைந்த பொருளாகிய சிவனிடத்தே வைக்கப்பட்டதனால் பிறபற்றுக்கள் நீங்கிய ஆன்ம போதத்தில், வேதாந்தம், சித்தாந்தத்தோடு ஒற்றுமைப் பட்டுத் தோன்றப் பெற்ற உணர்வோடு, பிராசாத கலைகள் பன்னிரண்டும் காட்சிப்பட, அதனால் இடையறாது விளங்கும் பேரின்பமே காரணமாம்.
==============================================
பாடல் எண் : 08
மாறாத ஞானம் மதிப்பற மாயோகம்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகும் ஞானி சரிதை குறிக்கிலே.

பொழிப்புரை : சித்தாந்த சைவத்தின் அங்கமாகும் மார்க்க சைவரது ஒழுக்கத்தைச் சொல்லுமிடத்து,தொன்று தொட்டுத் தொலையாது நிற்கின்ற தற்போதத்தைப் பெரிதாக எண்ணாமல், அஞ்ஞானத்தினின்றும் நீங்கமாட்டாத அறிவை மேற்கூறிய உயர்ந்த யோகமாகிய பிராசாத யோகத்தால் அஞ்ஞானத்தினின்றும் நீங்கித் தெளிவடையும்படிச் செய்து, அதனைச் சிவனது அறிவேயாக ஆக்கிப் பெறற்கரிய பேறாகிய சிவோகம் பாவனையைத் தலைப்பட்டு அதனைப் போற்றி அந்தப் பதிஞான நெறியில் நிற்றலேயாகும்.
==============================================
பாடல் எண் : 09
வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணர் அன்ன சைவர் உபாயரே.

பொழிப்புரை : சிவாகமங்களை உணராது வேதாந்தத்தை மட்டும் உணர்ந்தோர் முதற் பொருளை உண்மை மாத்திரையான் உணர்ந்தவரே. அதன் இயல்பையும், அதனைப் பெறுமாற்றையும் பெற்றவழி உளதாகும் பயனையும் அறிந்தவரல்லர். பிராசாத நெறியால் நாத முடிவைக் கண்டவர் அசைவில்லாத யோகிகளோயவர்; ஞானிகள் அல்லர். சைவாகமங்களை வேதாந்தத்தோடு ஒற்றுமைப்படவைத்து உணராது தனிப்ப வைத்து உணர்ந்தோர் பொதுச் சைவரே; உண்மைச் சைவர் அல்லர். ஆதலால், அவர் மார்க்க சைவரே; சுத்த சைவர் அல்லர்.
==============================================
பாடல் எண் : 10
விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.

பொழிப்புரை : பரந்துஎழும் மேகக் கூட்டம் அருவமாகிய ஆகாயத்தைப் பற்றமாட்டாது, பல காட்சிப் பொருள்களும் கண்ணொளியைத் தமக்கு இடமாகக் கொண்டு நிற்கமாட்டா. அவை போல, எண் வரையறை யில்லையாம்படி முடிவின்றி எண்ணப் படுவனவாகிய பசுக்களைப் பற்றி நிற்கின்ற பாசங்கள், தலைவனாகிய சிவனைச் சென்று அணுகமாட்டா.
==============================================
பாடல் எண் : 11
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகாரம் நீங்கியே
நின்ற பராற்பர நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.

பொழிப்புரை : மேற் கூறிய, `சிவனும், சீவனும் ஒருபொருளே` என்றுகூறும் `பிரம வித்தியாவாதமும், இருவரும் வேறுவேறானவர்களே` எனக் கூறும் வேதாந்தம் அல்லாத அசுரௌத வாதமும் இன்றி, `இருவரும் கலப்பினால் ஒன்றாய் பொருள் தன்மையால் வேறாய் இருப்பவர்` என்னும் சித்தாந்த அத்துவித ஞானத்தில் நிலைபெற்று நின்று, பொருளில்லாத சூனியம்` எனத்தக்க பலசமயத் தொடக்கி னின்றும் நீங்கி, அந்தச் சமயங்கள் அனைத்திற்கும் மேலே உள்ள முதற் பொருளாகிய, அறியப்படுபொருளாம் சிவனை, அவனது திருவடி ஞானத்தின் வழியே சென்று பொருந்திப் பின் அவனேயாகிவிடுதலே சித்தாந்த ஞானத்தின் பயனாகும்.
==============================================



மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.


No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!