http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 7 October 2012

திருமந்திரம்-தந்திரம் 05: பதிகம் எண் :11, 12, 13, 14 & 15. சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சாலோக மாதி, சாரூபம், சாயுச்சம்




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:01: சுத்தசைவம் ................பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:02:
சுத்தசைவம் ............பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:03: மார்க்க
சைவம் ...........பாடல்கள்: 011
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:04: கடுஞ் சுத்தசைவம் .....பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:05: சரியை..........................
..பாடல்கள்: 008
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:06: கிரியை...........................பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:07: யோகம் ..........................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:08: ஞானம்...........................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:09: சன்மார்க்கம்.................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:10: சகமார்க்கம்..................பாடல்கள்: 007
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:11: சற்புத்திரமார்க்கம்.......பாடல்கள்: 007
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:12: தாசமார்க்கம்................பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:13: சாலோக மாதி..............பாடல்கள்: 003
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:14: சாரூபம்.........................பாடல்கள்: 002
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:15: சாயுச்சம்.......................பாடல்கள்: 002
==========================================
தந்திரம் 5- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் 10
கூடுதல் பாடல்கள்  (074+007+005+003+002+002= 093)

தந்திரம் 5-பதிகம்-11. சற்புத்திர மார்க்கம் -பாடல்கள்:007விளக்கங்களுடன்
தந்திரம் 5-பதிகம்-12. தாச மார்க்கம் -பாடல்கள்:005
விளக்கங்களுடன்
தந்திரம் 5-பதிகம்-13. சாலோக மாதி -பாடல்கள்:003விளக்கங்களுடன்
தந்திரம் 5-பதிகம்-14. சா ரூபம் -பாடல்கள்:002
விளக்கங்களுடன்
தந்திரம் 5-பதிகம்-15. சாயுச்சம் -பாடல்கள்:002விளக்கங்களுடன்

தந்திரம் 5-பதிகம்-11. சற்புத்திரமார்க்கம்-பாடல்கள்:007
பாடல் எண் : 01
மேவிய சற்புத் திரமார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாம் சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன் மார்க்கந் தெளிவதே.

பொழிப்புரை விரும்பப்படுகின்ற சற்புத்திர மார்க்கமாகிய கிரியையாவது, அகத்தில் மட்டுமன்றிப் புறத்திலும் ஒளிவடிவில் சிவனை நிறுத்தி முகம் முதலிய உறுப்புக்களை நினைவால் (பாவனை யால்) கண்டு பல முகமன்களும் (உபசாரங்களும்) செய்து வழிபடுதலாம். சகமார்க்கமாகிய யோகமாவது, உலகத்தோடு ஒட்டி நிகழும் முகமன் நிகழ்ச்சிகள் `அகம், புறம்` என்னும் இரண்டிடத்தும் நிகழ்தலாகிய அத்தன்மை இன்றி, யோகத்தில் வெளிப்படும் யோக சத்தியை அகத்தில் கண்டு, அதனோடு ஒன்றாதலாம். அனைத்தினும் மேலான சன்மார்க்கமாவது, தெளிவான ஞானமேயாகும்.
==============================================
பாடல் எண் : 02
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல்மற்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.

பொழிப்புரை அருக்கிய. பாத்திய.ஆசமனாதி முகமன்களைச் செய்தலும், தோத்திரம் சொல்லலும், திருமேனியைக் கண்ணை இமை காத்தல்போலப் பேணிக் காத்தலும், வழிபாட்டு முடிவில் மந்திரத்தைப் பலமுறை கணித்தலும், பசி தாகம் முதலியவற்றைப் பொறுத்துக் கொண்டு, செயல்களை விரையாது அமைந்து செய்தலும், உண்மையே பேசலும், காம வெகுளிகளாகிய மனக் குற்றங்கள் இல்லாதிருத்தலும், அன்போடு படைக்கப்படுகின்ற அன்னம், பெரிதும் உதவுகின்ற நீர் என்பவற்றையும் செயலாலும், பாவனையாலும் மிகத்தூயன ஆக்குதலும், மற்றும் இன்னோரன்ன செயல்கள் பலவும் அன்போடும், ஆர்வத்தோடும் செய்யப்படுதலால், கிரியை குற்றம் அற்ற சற்புத்திர மார்க்கம் ஆகின்றது.
==============================================
பாடல் எண் : 03
அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
மறுகா நரைஅன்னம் தாமரை நீலம்
குறுகா நறுமலர் கொய்வன கண்டும்
சிறுகால் அரன்நெறி சேரகி லாரே.

பொழிப்புரை  `அறுகாற் பறவை` எனப்படுகின்ற வண்டுகள் தேன் உள்ள மலர்களையே தேடித் திரியும்; வெறும் மலர்களை அணுகமாட்டா. வெண்ணிறத்தையுடைய அன்னப் பறவைகள் தாமரை மலரையே விரும்பியடையும்; நீலப்பூவை அடையமாட்டா. அவை போலச் சிவ வழிபாடு செய்வோர் சிவனுக்கு உவப்பாகின்ற நல்ல மலர்களையே பறிப்பர்; பிற மலர்களைப் பறியார். இவற்றையெல்லாம் நேரிற் கண்டும் நல்லறிவில்லாதார் இளமைக்காலத்திற்றானே சிவனை வழிபட்டு சிவபுத்திரராய் விளங்கும் வழியை அறிகின்றிலர்.
==============================================
பாடல் எண் : 04
அருங்கரை யாவ தரனடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை
வருங்கரை ஏகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
ஒருங்கரை யாய்உல கேழின் ஒத்தானே.

பொழிப்புரை பிறவிக் கடலுக்கு காணுதற்கு அரிய கரையாய் உள்ளது அரனது திருவடி நிழலே. உலகில் உயிர்கள் ஒழுக வேண்டிய நெறிமுறையாகச் சொல்லப்படுவது அவனது ஆணையே. அவ்வாணையின்வழி அவனது திருவடி நிழலாகிய கரையை நோக்கிச் செல்கின்ற உயிர்கள் பலவற்றிற்கும் தொகை நிலையாய் அமைந்த ஒரு பேரரசினை உடையவனாய், அனைத்துலகின் மேலும் கோட்டம் இன்றி ஒருபடித்தான கருணையையே யுடையவனாய் அரன் இருக்கின்றான்.
==============================================
பாடல் எண் : 05
உயர்ந்தும் பணிந்தும் உகந்தும் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயன்அது வாகும்
பயந்து பரிக்கிலர் பால்நவை யாமே.

பொழிப்புரை அரனது திருவடிகளின் நேரேநின்றும், வீழ்ந்தும், மனம் விரும்பியும், கைகளால் பிடித்தும், புகழ்ந்தும் முறைப்படி வழிபாடு செய்யுங்கள். அம்முறையீடு உலகப் பயனையும் தருவதா யினும், மானுடப் பிறப்பின் பயனாகிய வீடு பேற்றைத் தருவது அஃது ஒன்றே, ஆதலின், அதனை மேற்கொள்ள அஞ்சி ஒழிவாரிடத்தில் குற்றம் வந்து தங்குவதாம்.
==============================================
பாடல் எண் : 06
நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியை
துன்றுமலர் தூவித் தொழுமின் தொழுந்தொறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.

பொழிப்புரை  எம் பெருமானாகிய சிவனை யான் அவன் முன்னே, நின்றும், கீழே வீழ்ந்தும் மிகுந்த மலர்களைத் தூவி வணங்குவேன். இஃது ஒருகாலத்தில் மட்டுமன்று; எக்காலத்துமாம். இவ்வாறு தொழுவாரிடத்தில் அவர் தொழுந்தோறும் தேவர் தலைவனாகிய சிவபிரான் சென்று வெளிப்பட்டு நிற்பான். அதனால், நீங்களும் அவனை அவ்வாறு வணங்குங்கள்.
==============================================
பாடல் எண் : 07
திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரிதை
உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இரும்மன்னும் நாடோறும் இன்புற் றிருந்தே.

பொழிப்புரை மக்கள் உடம்பிற் பொருந்தி வாழ்கின்ற உலகத் தவரே! சிவனாகிய தந்தைதன் செல்வத்தில் பொருந்தி வாழ்தற்குரிய சற்புத்திர மார்க்கத்தின் மரபினைக் கூறுகின்றேன்; கேளுங்கள். பிறவிக்கு ஏதுவாய் நிலைபெற்றிருக்கின்ற ஆணவ மலம் தனது செயல் மடங்கி நிற்குமாறு உங்கள் இருகைகளும் ஒன்றாய்ச் சேர்ந்து குவியும்படி சிவனைத் தொழுது, என்றும் இன்பத்திலே பொருந்தியிருங்கள்.
==============================================
தந்திரம் 5-பதிகம் 12. தாசமார்க்கம்-பாடல்கள்: 005
பாடல் எண் : 01
எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

பொழிப்புரை  திருக்கோயிலில் விளக்கிடுதல், மலர்களைக் கொய்து கொடுத்தல், தொடுத்துக் கொடுத்தல், அலகிடல் மெழுகல், துதி பாடல், ஊர்தி சுமத்தல், பலவகைத் திருமஞ்சனப் பொருள்களைக் கொணர்ந்து கொடுத்தல் முதலிய எளிய பணிகளைச் செய்தல், தாச மார்க்கம், தொண்டர் நெறியாகும்.
==============================================
பாடல் எண் : 02
அதுவிது ஆதிப் பரமென் றகல்வர்
இதுவழி சென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடும்
அதுவிதி நெஞ்சில் அளிக்கின்ற வாறே

பொழிப்புரை  `அந்தத் தெய்வம் முதற்கடவுள், இந்தத் தெய்வம் முதற்கடவுள்` என்று பலவான எண்ணங்களைக் கொண்டு பலர் சிவனை அடையாது நீங்குவர். அதனால், `சிவனை அடைவதே உய்யும் நெறி` என்று தெரிந்து, அவனை வணங்குவார் அரியர். `எல்லாத் தேவர்க்கும் தலைவன் சிவபெருமான்` என்பது வேதாகமங் களை உணரின் தெளிவாம். ஆதலால், அம்முறையே சென்று அவனையே விரும்பி அடையுங்கள். அவ்வாறு அடையும் முறையே மக்கள் உள்ளத்தில் பொருந்தி நிற்கும்படி ஆன்றோர் உணர்த்துகின்ற நெறியாகும்.
==============================================
பாடல் எண் : 03
அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.

பொழிப்புரை  நான் முதலில் இடநாடியின் வழியும், பின்பு வல நாடியின் வழியும் பிராண வாயுவை அடக்கியும், விட்டும் ஒப்பற்ற ஒருவனாகிய சிவனது திருவடிகளை என்றும் தியானிப்பேன். பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் இயன்றன.
==============================================
பாடல் எண் : 04
அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந் (து) உள்நின் றடிதொழக்
கண்ணவன் என்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

பொழிப்புரை  சிவனைத் தேவர்கள் ஆயிரம் பெயர்களைச் சொல்லி உளம் மகிழ்ந்து போற்றித் தியானிப்பர். அவர் அவன்பாலே நின்று அங்ஙனம் செய்யினும் அவன் தன்னைத் தமக்குக் கண்போலச் சிறந்தவன் எனக் கருதி, அன்பும், ஆர்வமும் கொண்டு வழிபடுகின்ற அடியவரது உள்ளத்தில் நீங்காது நின்று, அவர்கள்பாலே பேரருள் உடையவனாகின்றான்.
==============================================
பாடல் எண் : 05
வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம் பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசித் திருந்த நினைவறி யாரே.

பொழிப்புரை  சிவபெருமானது புகழைக் கூறும் நூல்களை ஓதுதல், இயன்ற வகையில் சிவனை வழிபடுதல், மலர் கொய்து கொடுத்தல் முதலிய தொண்டுகளைச் செய்தல் என்னும் இவை போல்வனவற்றைச் செய்யினும், கல் வந்து விழப்பட்ட பாசிக்குளம் அக்கல்வீழ்ச்சியின் வேகம் உள்ள துணையும் பாசி நீங்கி நின்று, பின் பாசியுடையதாய் விடுதல் போல, மனத்தின் இயல்பை ஆராயுமிடத்து அத்தொண்டுகளில் ஈடுபடும் துணையும் அஃது ஐம்புல ஆசையின் நீங்கி நின்று, பின் அதனை உடைத்தாய்விடும். அப்பொழுது மக்கள் சிவன்பால் அன்பு கொண்டிருக்கும் நிலை இல்லாதவராவர்.
==============================================
தந்திரம் 5-பதிகம்-13. சாலோகமாதி-பாடல்கள்: 003
பாடல் எண் : 01
சாலோகம் ஆதி சரியா தியிற்பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் கிரியையால்
சாலோகம் சேரில் வழிஆகும் சாரூபம்
பாலோக மில்லாப் பரனுறு ஆமே.

பொழிப்புரை  சாலோகம் முதற் பயன் அது சரியையாகிய முதல் நெறியாற் பெறப்படுவதாகும். கிரியையாகிய நெறியால் அந்தச் சாலோகப் பயனில் சாமீபப்பயன் உண்டாகும். சாலோகத்தில் சாமீபம் கிடைத்தால் அதன் பின் சாரூபம் வரும். முடிவாக விரிந்த பல உலகங்களில் யாதொன்றிலும் இல்லாது பரசிவத்தோடே ஒன்றாகின்ற பயன் கிடைப்பதாம்.
==============================================
பாடல் எண் : 02
சமயம் கிரியையில் தன்மனம் கோயில்
சமய மனுமுறை தானே விசேடம்
சமயத்து மூலந் தனைத்தேறல் மூன்றாம்
சமயாபி டேகம்தா னாகும் சமாதியே.

பொழிப்புரை  தீக்கைகளில் சமயதீக்கை சிவனை மனத்தால் நினைக்கப் பண்ணும். விசேடதீக்கை சைவ சமய மந்திரங்கள் பலவற்றை பல முறையில் பயிலப் பண்ணும். மூன்றாவதாகிய நிருவாண தீக்கை சைவ சமயத்தின் முதற் பொருளுளாகிய சிவனது பெருமையை உள்ளவாறு ணர்ந்து, `அவனே முதற்கடவுள்` எனத் தெளியப் பண்ணும். சைவ அபிடேகம் தான் சிவமாயே நின்று பிறர் சிவனது திருவருளைப் பெறும் வாயிலாய் விளங்குப் பண்ணும்.
==============================================
பாடல் எண் : 03
பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாசம் அருளான தாகும்இச் சாமீபம்
பாசம் சிவமான தாகும்இச் சாரூபம்
பாசங் கரைபதி சாயுச் சியமே.

பொழிப்புரை  சாலோகம், மாயா கருவிகள், தாமே உயிர் என்று உயிரை மருட்டி அதனைத் தம் வயப்படுத்தியிருந்த நிலை நீங்கித் தாம் அதனின் வேறாய சடங்களாதலைத்தோற்றி, அதன்வயப்பட்ட நிலையை உடையது. சாமீபம், அக்கருவிகள் அருள்வயப்பட்டதாய் உயிர் இறைவனை அணுகுதற்குத் துணை செய்து நிற்கும் நிலையை உடையது. சாரூபம், அக்கருவிகள் சிவமயமாய் உயிருக்குச் சிவானந்தத்தைத் தரும் நிலையை உடையது. சாயுச்சம், அக்கருவிகள் யாவும் கழிய, உயிர் தான் நேரே சிவனைக் கூடியிருக்கும் நிலையை உடையது.
==============================================
தந்திரம் 5-பதிகம்-14. சாரூபம்-பாடல்கள்:002
பாடல் எண் : 01
தங்கிய சாரூபந் தான் எட்டாம் யோகமாம்
தங்கும் சன் மார்க்கம் தனிலன்றிக் கைகூடாது
அங்கத் தடல் சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக இழிவற்ற யோகரே.

பொழிப்புரை  சாலோக சாமீபங்கட்கு மேலே பொருந்தியுள்ள சாரூபம் அட்டாங்க யோகங்களுள் எட்டாம் நிலையாகிய சிவ சமாதி கைவரப் பெற்றோர்க்கே கிடைப்பதாம். அந்தச் சாரூப நிலையினராய முதிர்ந்த யோகியர்க்கு அல்லது அதற்கு மேலே உள்ள சன்மார்க்க மாகிய ஞானம் உண்டாகமாட்டாது. மேலும் அட்ட அங்கங்களும் நிரம்பிய இந்த யோகத்தாலே காய சித்தியும் உண்டாகும். அதனால், இம்மையில் காய சித்தியும், மறுமையில் சாரூபமும் பெறுபவரே குறைவற்ற யோகத்தைப் பெற்றவராவர்.
==============================================
பாடல் எண் : 02
சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலமா தாகும் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை யிறைவன் கதிர்வடி வாமே.

பொழிப்புரை  பொன்மலையைச் சார்ந்த சராசரங்கள் யாவும் பொன்னேயாய் விளங்குதல்போல், திருக்கயிலாய மலையில் கல்லால் நிழலில் தென்முகக் கடவுளாய் நீங்காதிருந்து ஞான நெறியைத் தக்கார் வழியாக உலகிற்கு என்றும் அளித்து வரும் சிவபிரான் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானது உலகத்தை அடைந்த யோகிகளது உருவம் கயிலையில் மேற்கூறியவாறு வீற்றிருந்தருள்கின்ற பெருமானது ஒளி பொருந்திய உருவத்தோடு ஒத்த உருவமேயாகிவிடும்.
==============================================
தந்திரம் 5 பதிகம்-15.சாயுச்சம்-பாடல்கள்:002
பாடல் எண் : 01
சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.

பொழிப்புரை `சைவம்` என்னும் சொல்லின் பொருள் `சிவனுடன் தொடர்புற்று நிற்றல்` என்பது, ஆகவே, சீவன்தான் சிவனது அடிமை என்னும் உண்மையை உணர்ந்து அவனைச் சார்ந்து நிற்றலே நிறைவான சிவநெறியாம். சிவனைச் சார்ந்து நின்றபின்னும் அவனையன்றிப் பிறிதொன்றையும் சாராது அற விடுத்தலும் அந்நெறி நிறைவுடையதாதற்கு இன்றியமையாதது. அத்தகைய நிறைவான சிவ நெறியின் பயன் சிவனது பேரின்பமே. அவ்வின்பத்தைப் பெற்று அதில் மூழ்கியிருக்கும் நிலையே சாயுச்சமாம்.
==============================================
பாடல் எண் : 02
சாயுச் சியஞ்சாக்கி ராதீதம் சாருதல்
சாயுச் சியம்உப சாந்தத்துள் தங்குதல்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியம்மனத் தானந்த சத்தியே.

பொழிப்புரை  சாயுச்சம், சீவன் முத்தி நிலையில் சாக்கிராதீதமாய் அமைதியிற்படுத்தி, சிவம் அன்றி பிறிதொன்றும் தோன்றாமல் சிவம் ஒன்றையே தோற்றுவித்து, அறிவின்கண் சிவனது குணமான எல்லையில் இன்ப வெள்ளத்தைத் தந்து நிற்கும்.
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!