http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Friday, 5 October 2012

திருமந்திரம்-தந்திரம் 05: பதிகம் எண் :09 & 10. சன்மார்க்கம் & சகமார்க்கம்.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:01: சுத்தசைவம் ................பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:02:
சுத்தசைவம் ............பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:03: மார்க்க
சைவம் ...........பாடல்கள்: 011
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:04: கடுஞ் சுத்தசைவம் .....பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:05: சரியை..........................
..பாடல்கள்: 008
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:06: கிரியை...........................பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:07: யோகம் ..........................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:08: ஞானம்...........................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:09: சன்மார்க்கம்...............பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:10: சகமார்க்கம்................பாடல்கள்: 007
==========================================
தந்திரம் 5- இல் பதிவானவை.-பதிகங்கள் 10-பாடல்கள்  (057+010+007 = 074)
தந்திரம் 5-பதிகம்-9. சன்மார்க்கம் -பாடல்கள்:010விளக்கங்களுடன்
தந்திரம் 5-பதிகம்-10. சகமார்க்கம் -பாடல்கள்:007
விளக்கங்களுடன்
தந்திரம் 5- பதிகம் 9. சன்மார்க்கம்-பாடல்கள்: 010
பாடல் எண் : 01
சாற்றுஞ்சன் மார்க்கமாம் தற்சிவ தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.

பொழிப்புரை  எல்லாவற்றினும் மேலானதாகச் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற சொரூப சிவத்தின் உண்மை இயல்பை விளக்குவனவாகிய வேத சிவாகமங்களில் ஞானப்பகுதியின் பொருளை உள்ளவாறு உணர்ந்து, அதனால் `வெகுளி, காமம், மயக்கம்` என்னும் முக்குற்றங்களும் நீங்கிச் சிவத்தோடு ஒன்றுபடும் நிலை சித்திக்கப் பெற்றுக் காலனை வென்றவரே குறிப்பொருளை (இலட்சியப் பொருளை) அறிந்து அடைந்தோராவர்.
==============================================
பாடல் எண் : 02
தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவாலயத் தோர்க்குத்
தரும்முத்தி சார்பூட்டும் சன்மார்க்கந் தானே.

பொழிப்புரை  குருபத்தி செய்யும் நன்மாணாக்கர் கண்ணால் காணுதல், திருமுழுக்கு, ஒப்பனை, புகை, ஒளி, படையல், மலரிடல் முதலாக முறைப்படி வழிபடுதல், தியானித்தல், தீண்டி அடிவருடல் முதலியன செய்தல், துதித்தல், பாதுகையைத் தலைமேல் தாங்குதல் முதலியவற்றால் குருவை வழிபட்ட வழியே சன்மார்க்கமாகிய ஞானம் கைகொடுத்து, முத்தி நிலையைத் தரும்.
==============================================
பாடல் எண் : 03
தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

பொழிப்புரை  குருவருளால் பெறப்படும் உண்மை ஞானத்தைப் பெறாதவர் சிவனது இயல்பை உணரமாட்டார், அதனால், அவர் ஆன்மலாபத்தை அடைதற்குரிய ஆன்மாவும் ஆகார். (`சடத்தோடொப்பர்` என்பதாம்.) ஆதலின், அவர் சிவமாம் நிலையைப் பெறுதலும், அப்பேற்றால் பிறவி யற்றவராதலும் இல்லை.
==============================================
பாடல் எண் : 04
தானவவ னாகித்தான் ஐந்தாம் மலம்செற்று
மோனம தாம்மொழிப் பால்முத்த ராவதும்
ஈனமில் ஞானானு பூதியில் இன்பமும்
தானவ னாய்உற லானசன் மார்க்கமே.

பொழிப்புரை  சீவன் சிவனேயாய் நிற்கும் முறையால் அஃது ஐந்து மலங்களை அழித்து, மௌனோபதேசத்தின் வழி முத்தி நிலையைப் பெறுதலும், பின் குறையில்லாத ஞானத்தால் உண்டாகும் அனுபவத்தில் விளைகின்ற இன்பமும் ஆகிய இவையே சீவன் சிவனேயாய் விடுகின்ற சன்மார்க்கமாகும்.
==============================================
பாடல் எண் : 05
சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும்
சன்மார்க்கத் தார்க்கு இடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.

பொழிப்புரை  எந்நிலையில் நிற்போர்க்கும் நோக்கும் திசை, இருக்கும் இருக்கை, உறையும் இடம், தியானிக்கப்படுகின்ற தெய்வம், இணங்கும் கூட்டம், வழிபடப்படும் குறி முதலிய எல்லாம் சன் மார்க்கத்தார்க்குப் போலவே குருவருளால் கொள்ளத் தக்கனவாம்.
==============================================
பாடல் எண் : 06
சன்மார்க்க சாதனந் தான்ஞானம் ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதைய தாய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தானவ னாகும்சன் மார்க்கமே.

பொழிப்புரை  ஞானம் ஒன்றே சன்மார்க்கத்தில் கொள்ளப்படும் சாதனமாகும். அந்தச் சாதனம் பின் ஞேயமாகிய சாத்தியத்தை அடை விக்கும். சகமார்க்கம் முதலியவைகளில் ஞானமல்லாத பிறவே சாதனங்களாம். பிற மார்க்கங்களைக் கடந்து சன்மார்க்கத்தில் நிற்போர் அதில் துரியத்தைக் கடந்தபொழுது விரும்புகின்ற சன்மார்க்கம் சீவன் சிவமாம் தன்மையாகிய சன்மார்க்கமே.
==============================================
பாடல் எண் : 07
சன்மார்க்கம் எய்த வரும்அருஞ் சீடர்க்குப்
பின்மார்க்கம் மூன்றும் பெறலியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.

பொழிப்புரை  சன்மார்க்கம் கைவரப்பெறும் தகுதியை அடைய விரும்பும் அரிய மாணாக்கர்க்கு, அதற்கு முன்னே ஏனை, யோகம் முதலிய மூன்றும் முற்ற வேண்டுதலே முறையாகுமாயின், வீடடையும் நெறியாவது, தன்னைச் சிவனுக்கு உரிய பொருளாக உரிமைப்படுத்து அறிதலேயாகின்றது, `இதுதான் ஆசிரியன்மார் தம் மாணாக்கர்க்கு அறிவுறுத்தத்தக்க நெறி` என்று உண்மை வேதம் தனது துணிவாகக் கொண்டு கூறுகின்றது.
==============================================
பாடல் எண் : 08
அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமும்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.

பொழிப்புரை  பூர்வபக்க மதங்களின் உணர்வுக்கு அப்பால் உள்ள பிரதிபந்தமாகிய ஆணவ மலத்தை, முன்னர் உணர்ந்து பின்னர் ஏனைய கன்மம், மூலப்பகுதி, அம்மதங்களால் உணரப்பட்ட சாக்கிரம் முதலிய அவத்தைகள், அவைகளில் தொடக்குண்டு நிற்கின்ற அறிவின் நிலைகள், பொருள் களிடையே உள்ள சிறியனவும், பெரியனவுமாகிய வேறுபாடுகள் என்பவற்றோடு தலைவனாகிய இறைவனையும் உணரும் சித்தாந்த ஞானம் வாய்க்கப் பெற்றவரே `சன்மார்க்கத்தோர்` எனப்படுவர்.
==============================================
பாடல் எண் : 09
பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்
தொசியாத உண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை ஆனசன் மார்க்கமே.

பொழிப்புரை  ஆன்மாவின் பசுத்துவம் காரணமாக வந்து பொருந்திய சம்பந்தங்களாகிய கருவி கரணங்கள் அனைத்தையும், `தன்னின் வேறானவை` எனக்கண்டு கழித்துத் தன்னைப் பதியாகிய சிவனுடன் பொருத்தி, அங்ஙனம் முன்பு பொருந்தாதிருந்த நிலையில் மறந்திருந்த அவனது உபகாரத்தை இடைவிடாது உணர்தலால், முன்பு அன்பினால் நெகிழ்தல் இன்றி வன்மையுற்றிருந்த மனத்தை இப்பொழுது நெகிழ்ந்து உருகும்படி உருகப்பண்ணி, அவ்வன்பினாலே, என்றும் மாற்றம் இன்றி நிற்கும் மெய்ம்மையாகிய சிவனது தன்னியல்பு வெளிப்பாட்டில் அசைவின்றி நிற்றலே முற்ற முதிர்ந்த சன்மார்க்கமாகும்.
==============================================
பாடல் எண் : 10
மார்க்கம்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கம்சன் மார்க்க மெனும்நெறி வைகாதோர்
மார்க்கம்சன் மார்க்க மதுசித்த யோகமே.

பொழிப்புரை இங்குக் கூறிய சன்மார்க்கம் இதனைப் பெறுதற் குரியோர் பெறுதற் பொருட்டு வகுக்கப்படுவது. தலைசிறந்த நெறி. இந்தச் சன்மார்க்கமன்றி வேறொன்று இல்லை ஆயினும், இந்தச் சன்மார்க்கத்தை அடைந்து இன்புற்றிருக்க மாட்டாதவர்க்குரிய சன்மார்க்கம், மன ஒடுக்கத்தைப் பயனாக உடைய யோக நெறியேயாம்.
==============================================
தந்திரம் 5- பதிகம் 10. சகமார்க்கம்-பாடல்கள்: 007

பாடல் எண் : 01
சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே.

பொழிப்புரை சிவநெறியில் யோகத்தை, `சகமார்க்கம்` - ஒத்துடன் நிற்கும் தோழமை நெறி - எனக் கூறுதல், சன்மார்க்கமாகிய ஞானத்தின் தன்மையையே கொண்டு விளங்குதல் பற்றியாம். அதனால், சிவநெறியோகம், உண்மை ஞானத்தால் உளதாகின்ற முத்திப் பேற்றுள் உய்க்கும். ஏனையோர் கூறும் யோகங்கள் ஓயாது பிறந்து இறத்தலை வெறாது விரும்பிக் கொள்வனவேயாகும். அவற்றால் ஞானமாகிய உறுதிப் பொருள் கிடைத்தலும் கூடுமோ!
==============================================
பாடல் எண் : 02
மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீடில்லை யாகும்
உருவும் கிளையும் ஒருங்கிழப் பாரே.

பொழிப்புரை சிரசிற்குமேல் பன்னிரண்டங்குலமாகச் சொல்லப் படுகின்ற நிராதாரத்தைப் பொருந்துகின்ற யோகநெறி யில்லாது, பிற வற்றையே யோகமாக மயங்குவோர், ஞான குருவையும், சிவனை யும், உண்மைச் சமயத்தையும் அடையமாட்டார். அவர் அணி மாதியாக விரும்பும் சித்திகளாகிய செல்வத்தைத் தரும் திருமகளும் அவர்பால் அணுக அஞ்சுவாள்; மோட்சமும் அவருக்கு இல்லை. உடம்பையும், சுற்றத் தொடர்பையும் வீணே இழப்பர்.
==============================================
பாடல் எண் : 03
யோகச் சமாதியி னுள்ளே அகலிடம்
யோகச் சமாதியி னுள்ளே உளரொளி
யோகச் சமாதியி னுள்ளே உளள்சத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

பொழிப்புரை சிவயோக சமாதியுள்ளே உலக முழுதும் அடங்கித் தோன்றும். உள்நிற்கும் ஒளியும் விளங்கும். அருட்சத்தியும் விளங்கு வாள். ஆதலால், சிவயோக சமாதி பெற்றவரே எல்லாம் சித்திக்கப் பெற்றவராவர்.
==============================================
பாடல் எண் : 04
யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.

பொழிப்புரை சிவயோகிகட்கு யோகத்தோடு உலக போகமும் சுத்தபோகமாய் வரும். சிவயோகத்தால் சிவசாரூபம் கிடைக்கும். ஆகவே, இம்மை, மறுமை இரண்டையும் இழவாது பெறும் சிவ யோகிக்கு அவன் உலகில் விரும்புகின்ற புருடார்த்தம் உளதாகும்.
==============================================
பாடல் எண் : 05
ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே.

பொழிப்புரை சிவயோகத்தில் ஆறு ஆதாரங்களிலும் சிவனது நிலைகளையே காணுதலால் உணர்வை உண்டாக்கும் நாடிகள் நல்லனவாகும். மேதாகலை முதலிய பதினாறுகலைகளின் முடிவில் பர வெளியில் விளங்கும் ஒளியாகிய சிவம் தோன்றும். சீவ போதம் ஒடுங்கிப் பஞ்சேந்திரியங்கள், அந்தக்கரணம் இவையும் சீவத் தன்மை கெடச் சிவத்தன்மையைப் பெறும். அதனால், அவ்யோகம் சகமார்க்கம் ஆதற்குத் தடையில்லை.
==============================================
பாடல் எண் : 06
பிணங்கிநிற் கின்றவை யைந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயில்மன வாளால்
கணம்பதி னெட்டும் கருதும் ஒருவன்
வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.

பொழிப்புரை சிவயோகம் வல்லானது சிந்தையிடமாகப் பதினெண் கணங்களும் வணங்குகின்ற தனித்தலைவனாகிய சிவன் வந்து நிலைத்து நிற்பானாயின், பின்பு அவன் தன்னோடு இகலி நிற்கின்ற ஐம்பொறிகளாகிய பகைவர்களைத் தனது மனமாகிய கூரிய வாளால் தாக்கி வெட்டி யொழிப்பான்.
==============================================
பாடல் எண் : 07
வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
உளங்கனிந் துள்ளே உகந்துநிற் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.

பொழிப்புரை மேற் கூறிய சிவன், வேடத்தால் வளப்பமானகனி (சிவப் பழம்) போன்ற பொலிவையுடையராய் உள்ள சரியை கிரியா மார்க்கத்தார்க்கும் வளப்பமான கனி கிடைத்தாற்போலும் உண்மையையே உடையனாவன். ஆயினும், யோகத்தால் உள்ளம் பழுத்து அவனை உள்ளத்தே விரும்பிக் கண்டுகொண்டிருப்பவர்க்குப் பழம் அளிந்து கிழிந்து சாற்றைப் பொழிதல் போல மிக்க இன்பத்தைத் தருபவனாய் இருப்பன்.
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.
 

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!