http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday, 25 October 2012

திருமந்திரம்-தந்திரம் 07: பதிகம் எண் :01. ஆறாதாரம் - பாடல்கள்: 008.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

=============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008
=============================================
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -01
கூடுதல் பாடல்கள்  (008=008)

==============================================
ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம் - பாடல்கள்: 08

பாடல் எண் : 1
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலின்மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்த முதல்இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.

பொழிப்புரை :  ஆறு ஆதாரங்களுள் மூலாதாரம் முதலிய ஐந்தனையும் முதலில் நன்கு தரிசித்து, அதன்பின் ஆறாவதாய் உள்ள ஆஞ்ஞையைத் தரிசிக்கும் பொழுது சிவனது திருவடியைத் தரிசித்தல் கூடும்.
=======================================
பாடல் எண் : 2
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பராசத்தின்
போதா லயத்து அவிகாரந் தனில்போதம்
மேதாதி ஆதார மீதான உண்மையே.

பொழிப்புரை :  பிரணவ கலைகளில் பன்னிரண்டளவும் ஏறிக்காணின், நாதத்தளவும் செல்லலாம். பதினாறளவும் ஏறிக் காணின், நாதத்தைக் கடக்கலாம். மேதை முதலாக நாதாந்தம் ஈறாக உள்ள கலைகளுக்கு மேல் உள்ளது பராசத்தியே. அந்த சத்தி ஞானமயமானது; விகாரம் அற்றது. அதுவே ஞானத்தைப் பெறும் இடமாகும். மேதை முதலாகச் சொல்லப்படுகின்ற பிராசாத கலாயோகத்தின் உண்மை இதுவாகும்.
=======================================
பாடல் எண் : 3
மேலென்றும் கீழென் றிரண்டறக் காணுங்கால்
தானென்றும் நானென்றும் தன்மைகள் ஓராறும்
பாரெங்கு மாகிப் பரந்த பராபரன்
காரொன்று கற்பக மாகிநின் றானே.
பொழிப்புரை :  நிராதாரத்தையும் கடந்து மீதானத்தில் பாரசத்தியைத் தலைப்பட்ட வழி ஏகதேச உணர்வு நீங்கி வியாபக உணர்வு எய்தப்பெறும். அவ்வுணர்விலே சருவ வியாபகனாகி சிவன் இனிது விளங்கித் தனது எல்லையில் இன்பத்தை இனிது வழங்கி நிற்பன்.
=======================================
பாடல் எண் : 4
ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கரணம் புந்தி
சாதா ரணம்கெட்டாற் றான்சக மார்க்கமே.

பொழிப்புரை :  ஆதார யோகத்தால் எய்தும் பயன் நாடிகள் சுத்தியாகி, அமுதம் நிரம்பப் பெறுதலே, (அதனால் மனம் ஒருங்கிய தியான சமாதிகளே உண்டாகும்,) ஆகவே, பிராசாத யோகத்தில் பதினாறாவது கலைக்கு அப்பால் உள்ள மீதானத்திற்றான் மேல் உள்ள மந்திரத்தில் கூறியவாறு `சிதாகாசம்` எனப்படுகின்ற பராசத்தியின் விளக்கம் உள்ளது. ``போதாலயம்`` என மேற்கூறப்பட்ட அதனை அடைந்து ஐம்புலன்களும், நாற்கரணங்களும், சீவபோதமும் என்னும் இவற்றின் குறும்புகளாகிய பெத்தம் நீங்கினால் தான் `சகமார்க்கம்` - என்னும் யோகம் முற்றியதாகும்.
=======================================
பாடல் எண் : 5
மேதாதி யாலே விடாதோம் எனத் தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதார மாகவே தான்எழச் சாதித்தால்
ஆதாரம் செய்போக மாவது காயமே.

பொழிப்புரை :  மோதாதி கலைகளின் வழியே பிரணவ நினைவை இடைவிடாது வளர்த்து, அதனாலே ஆதார சோதனை அத்துவ சோதனைகளைச் செய்தால், உணர்வு மிகுதலே யன்றி, உடம்பும் விரைவில் வீழ்ந்தொழியாது சீவபோகத்தைத் தலைப்படுதற்குத் துணையாய் நெடிது நிற்கும்.
=======================================
பாடல் எண் : 6
ஆறந் தமும்கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றுங் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத் தோரெழுத் தாமே.

பொழிப்புரை :  `உடம்பு ஆறாதாரங்களோடே அமைந்தது` - எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் மேற் கூறிய ஏழாந்தானமும், அதற்குமேல் உள்ள நிராதாரமும் ஆகிய அவைகளையும் தரிசிக்கக் கடவீர். ஏனெனில், ஆறாதாரங்களில் அடங்கி நிற்கின்ற ஐம்பது எழுத்துக்களும் காரிய எழுத்துக்களேயாக, காரண எழுத்தாகிய பிரணவம் அந்தக் காரண நிலையிலே நிற்கும் இடம் அவைகளேயாகலின்.
=======================================
பாடல் எண் : 7
ஆகும் உடம்பும் அகின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.

பொழிப்புரை :  தூலதேகம் தோன்றுதற்கு முதலாயுள்ள சூக்கும தேகமும் இறுதியில் அழிவதேயாம். இனிக் காரியமாதல் பற்றி அநித்தியமாதல் தெளிவுற நிற்கின்ற தூலதேகம் சூக்கும தேகத்தோடு இயைந்து நின்று அறிவும் செயலும் உடையதாதல் காரிய எழுத்துக்களாகிய ஐம்பதனாலேயாகும். ஆகவே சூக்குமதேகத்திற்கும் ஆறாதாரங்களின் இயைபு உள்ளதே.
=======================================
பாடல் எண் : 8
ஆய மலர்இன் அணிமலர் மேலது
வாய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் விளைந்தது தானே.

பொழிப்புரை :  ஆராய்ச்சிக் கருவியாகிய மனத்திற்கு இடமாய் உள்ள இருதய தாமரையாகிய இனிய அழகிய மலரின் மேல் உள்ளதாகிய ஓர் ஆதாரமாய் நிற்கும் இதழ்கள் பதினாறும் அவ்விடத்திலே உள்ளன. அதனை அடைந்த அறிவே மாசு நீங்கிச் சிவத்தோடு கூடி அதன் ஆனந்தத்தைப் பெற்று பின் அந்தச் சிவத்தின் வேறாய் நில்லாது ஒன்றாய் நிற்கும் முடிநிலையை எய்தும்.
=======================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!