http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Friday, 26 October 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :04. சதாசிவலிங்கம்-பாடல்கள்:023.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
============================================== 
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -004
கூடுதல் பாடல்கள்  (026 +023 =049)

==============================================
ஏழாம்தந்திரம். 4. சதாசிவலிங்கம்-பாடல்கள்:023
பாடல் எண் : 1
கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும்
தேடும் முகம்ஐந்தும் செங்கயல் மூவைந்தும்
நாடும் சதாசிவ நல்லொளி முத்தே.

பொழிப்புரை :   சதாசிவ வடிவம் இரண்டு திருவடி, பத்துக்கை, ஐந்து முகம், முகம் ஒன்றற்கு மூன்று கண்களாகப் பதினைந்துகண்கள் இவற்றை உடையதாகும்.
=======================================
பாடல் எண் : 2
வேதா நெடுமால் உருத்திரன் மேல்ஈசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே.

பொழிப்புரை :  சதாசிவந்தானே கீழ் நின்று ஒடுக்க முறையில் மேல்நோக்கி எண்ணப்படுகின்ற `அயன், மால், உருத்திரன், மகேசுரன்` என்னும் நால்வராயும், தனக்குமேல் முறையே நிற்கும் `விந்து, நாதம், சத்தி, சிவம்` என்னும் நால்வராயும் இருக்கும். அதனால் அனைத்து மூர்த்தங்கட்கும் இது பொது மூர்த்தமாகும்.
=======================================
பாடல் எண் : 3
ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளெ கதிரெழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.

பொழிப்புரை :  அறிவு மாத்திரமாய் நிற்கின்ற சிவத்தினின்றும் செயல்வடிவாய்த் தோன்றுகின்ற சத்தியின் ஒருகூறு தோற்றமுறையில் சாந்தியதீதை முதலிய ஐந்து கலைகளாகின்ற ஆதார சத்திகளாய் நிற்கும். அந்தச் சத்திகளினின்றும் `இலயம், போகம், அதிகாரம்`, என்னும் ஆதேய சத்திகள் ஏற்ற பெற்றியால் தோன்ற, அந்தச் சத்திகளிலே சிவம் அதுவதற்கு ஏற்றவாற்றால் பொருந்தி நிற்க, அதன்பின் அந்த இலயம் முதலிய சத்திகளாலே அனைத்துலகங்களும் தோன்றும்.
=======================================
பாடல் எண் : 4
அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.

பொழிப்புரை பத்துத் திசைகளாய் அமைந்த அந்த உலகத்துள்ளேதான் வேதங்களின் ஆறு அங்கங்களும், அந்த அங்கங்கட்கு முதலாகிய நான்கு வேதங்களும், அந்த வேதங்களின் பொருளைச் சரியை முதலிய நான்கு பாதங்களாய் நின்று தெளிய உணர்த்துகின்ற சிவாகமங்களும் பொருந்தி நிற்கின்றன.
=======================================
பாடல் எண் : 5
சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசியீ ராறுள
சமயத் தெழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவந் தானே.

பொழிப்புரை :  முன்னை மந்திரத்தில் தலைமை பற்றி, `சமயம்` என்றே சொல்லப் பட்ட சைவசமயத்தில் இறைவனுக்கு அவத்தைகள் பத்துச் சொல்லப் படுகின்றன. (அவத்தை-நிலை, அவை நவந்தரு பேதங்களுள் மேல் நிற்கும் நான்கொழிய ஏனை ஐந்தும் `அணுபட்சம், சம்புபட்சம்` எனத் தனித்தனி இவ்விரண்டாவனவாம்.). உலகத்தில் சூரியன் முதலிய கோள்கள் இயங்கும் இராசிகள் பன்னிரண்டு சொல்லப்படுதல் போலச் சைவத்தில் இறைவன் தானங்கள் பன்னிரண்டு சொல்லப் படுகின்றன. (அவை பிராசாத கலைகள் இருக்கும் இடங்களாம்.). சைவத்தில், `இறைவனுக்குத் திருமேனிகள் ஆறு` என்றும், `எட்டு` என்றும் சொல்லப் படுகின்றன. (அவை முறையே ஆறு அத்துவாக்களும், அட்ட மூர்த்தங் களுமாகும்.). இவை அனைத்துமாய் நிற்பது சைவ சமயத்தில் சொல்லப்படும் சதாசிவலிங்கம்.
=======================================
பாடல் எண் : 6
நடுவு கிழக்குத் தெற்குஉத் தரம்மேற்கு
நடுவு படிகம்நற் குங்கும வன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற் கருளிய முகம்இவை அஞ்சே.

பொழிப்புரை :  இவ்வதிகாரத்து முதல் மந்திரத்துள், `சதாசிவலிங்கத்திற்கு ஐந்து முகங்கள் உள்ளன எனக் கூறிய முகங்கள் ஒரு வரிசையில் இல்லாமல், நடுவு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு` என்னும் திசைகளில் பொருந்தியுள்ளன. அவற்றுள் நடுவண் உள்ள முகம் படிகம் போன்ற நிறத்தையும், கிழக்கில் உள்ள முகம் குங்குமம் போன்ற நிறத்தையும், வடக்கில் உள்ள முகம் செவ்வரத்தம் பூப்போன்ற நிறத்தையும் மேற்கில் உள்ள முகம் பால்போன்ற நிறத்தையும் உடையன. (கிழக்கில் உள்ள முகம் பொன் போன்ற நிறத்தை யுடையதாகச் சொல்லப் படுதலால், இங்கு, ``குங்குமம்`` என்பதற்கு, `கலவைச்சாந்து` எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும்.) இந்த ஐந்து முகங்களுடன் தோன்றியே சிவன் அடியேனுக்கு அருள்புரிந்தான்.
=======================================
பாடல் எண் : 7
அஞ்சு முகம்உள ஐம்மூன்று கண்உள
அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள
அஞ்சுடன் அஞ்சுஆ யுதம்உள நம்பிஎன்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.

பொழிப்புரை இவ்வதிகாரத்து முதல் மந்திரத்துட் கூறியவற்றுடன் பத்துக் கைகளிலும் பத்துப் படைக்கலங்களையுடைய சதாசிவ லிங்கமாய்ச் சிவன் என் இருதயத்துள் வந்து புகுந்து நிறைந்து நிற்கின்றான்.
=======================================
பாடல் எண் : 8
சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவம்மிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவம்தத் துவம்முப்பத் தாறே.

பொழிப்புரை :  அண்டலிங்கத்துள் பூமி பீடமாயும், வானம் பீடத்தின்மேல் உள்ள இலிங்கமாயும் அமையும். (எனவே, சதாசிவ லிங்கத்துள் பீடத்தில் பூமியும், இலிங்கத்துள் வானமும் அடங்கு வனவாம்.). இனி இறைவன் உயிர்கள் பொருட்டுக் கொள்கின்ற `தாபரம், சங்கமம்` என்னும் இருவகை வடிவங்களுள் தாபரம் சிவக்கூறும், சங்கமம் சத்திக்கூறும் ஆகும். (தாபரம் - பெயர்ந்து நிற்பன; திருவுருப் படிமங்கள். சங்கமம் - உலாவுவன; அடியார்கள்.). இறைவன் கொள்கின்ற திருமேனிகளில் உருவத்திருமேனிகள் சத்திக் கூறும், அருவத் திருமேனிகள் சிவக்கூறும் ஆகும்.
=======================================
பாடல் எண் : 9
 தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவ மாகும் சதாசிவந் தானே.

பொழிப்புரை :  `தத்துவம்` எனப்படுவன காரியப் பொருள்கள் அனைத்திற்கும் மூலங்கள் ஆதலின், அவையே `சரம், அசரம்` என்னும் இருதிறப் பொருளாயும் பரிணமிக்கும். தத்துவங்கள் யாவும் உயிர்கட்குத் துன்பம் நீங்கி, இன்பம் தோன்றுதற் பொருட்டே உள்ளனவாம், இவ்வாறு அனைத்துப் பொருளுமாய் நிற்கின்ற அனைத்துத் தத்துவங்களும் ஆவது சதாசிவலிங்கம்.
=======================================
பாடல் எண் : 10
கூறுமின் நூறு சதாசிவன் எம்மிறை
வேறுரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
ஏறுரை செய்தொல் வானவர் தம்மொடும்
மாறுசெய் வான்என் மனம்புகுந் தானே.

பொழிப்புரை :  சதாசிவனாய் நிற்பவனைத் துதியாது வேறு சொற்களைச் சொல்லிக் காலம் போக்குபவரும், அந்தச் சதாசிவமூர்த்தி அவரவர்க்கு ஏற்புடைத்தாக அளித்து ஏவுகின்ற தொழில்களைச் செய்பவரும் ஆகிய வானவரது நெறியோடு எனது நெறிமாறுகொளச் செய்தற்பொருட்டு அவன் எனது நெஞ்சத்தில் புகுந்தான். ஆதலின் அவனே நாம் வழிபடும் கடவுளாயினான். (என்வழி நிற்பீராயின்) நீங்களும் அவனது திருப்பெயர்கள் பலவற்றையும் கூறி அவனை வழிபடுங்கள்.
=======================================
பாடல் எண் : 11
இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த நெஞ்சத்தெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் னுள்ளே தெளிந்திருந் தேனே.

பொழிப்புரை :  அருளே நிறைந்த உள்ளத்தை உடையவனாகிய கடவுளை யான் எனது உள்ளத்திலே, கறுத்த கண்டத்தையும், மழு ஏந்திய கையையும், சுருண்ட சடையாகிய முடியையும், ஒளியையுடைய பிறையாகிய கண்ணியையும் உடையவனாக நன்கு காண்கின்றேன்.
=======================================
பாடல் எண் : 12
சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி
பச்சிமம் பூருவம் தற்புரு டன்உரை
தெற்கில் அகோரம் வடகிழக் கீசனே.

பொழிப்புரை :  சிவனது சத்தி ஒன்றே ஐந்தாகி அவனுக்கு மேற் கூறிய பக்கங்கள் ஐந்திலும் உள்ள ஐந்து முகங்களாய் நிற்கும். அதனால் அம்முகங்களின் பெயரானே அச்சத்திகளும் குறிக்கப்படும்.
=======================================
பாடல் எண் : 13
நாலுள்நல்ஈ சானம் நடுவுச்சி தானாகும்
தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும்
காணும்அ கோரம் இருதயம் குய்யமாம்
மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே.

பொழிப்புரை :  கிழக்கு முதலிய நான்கு திசைகளில் உள்ள முகங்கட்கு நடுவே யுள்ள முகமாய் நிற்கின்ற `ஈசானம்` என்னும் சத்தி சதாசிவனுக்கு அந்த முகமாய் நிற்றலேயன்றி, நடுத்தலையாகியும் நிற்கும். அவ்வாறே ஏனைய, `தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம்` என்னும் முகமாய் நிற்கின்ற சத்திகளும் அம்முகங்களாதலேயன்றிச் சதாசிவனது `முகம், இருதயம், குய்யம், பாதம்` என்னும் அவ்வுறுப்புக்களாயும் நிற்கும்.
=======================================
பாடல் எண் : 14
நெஞ்சு சிரம் சிகை நீள்கவசம் கண் அம்பாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர்ச் சேகரி மின்ஆகும்
செஞ்சுடர் போலுந் தெசாயுதந் தானே.

பொழிப்புரை :  பச்சை நிறத்தை உடையவளாய்ச் சிவனாகிய கதிரவனுக்கு அவனது மிகச் செப்பமாகப் பொருந்திய கதிராய் விளங்குகின்ற பராசத்தியாகிய பெண்டு சதாசிவனுக்கு மந்திரவகையால் (மேற்கூறிய ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களுமாய் நிற்றலேயன்றி,) இருதயம், சிகை, சிரம், கவசம், நேத்திரம், அத்திரம் என்னும் உறுப்புக்களாயும், அம்மூர்த்தியின் பத்துக் கைகளிலும் உள்ளனவாக மேற்கூறப்பட்ட பகலவன் போலும் ஒளியினையுடைய பத்துப்படைக்கலங் களாயும் நிற்பள்.
=======================================
பாடல் எண் : 15
எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம்மிக்க சிகைஆதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணும் கிரியை பரநேத் திரத்திலே.

பொழிப்புரை :    இருதயம் முதலாகக் கூறிய சடங்க மந்திரங்கள் ஆறனுள் அத்திரம் ஒழிந்த ஏனைய ஐந்தில் சிவனது ஞான சத்தியே இருதய மந்திரமாயும், பராசத்தியே சிர மந்திரமாயும், ஆதி சத்தியே சிகா மந்திரமாயும், இச்சா சத்தியே கவச மந்திரமாயும், கிரியா சத்தியே நேத்திர மந்திரமாயும் நிற்கும்.
=======================================
பாடல் எண் : 16
சத்தி நாற்கோணம் சலம்உற்று நின்றிடும்
சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும்
சத்திநல் வட்டம் சலம்அற் றிருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் றானே.

பொழிப்புரை :  இலிங்கத்தின் பீடம் நாற்கோணமாயிருப்பின் அது சிவனது இயக்கச் சத்தியாகும். அறுகோணமாய் இருப்பின் அது கிடத்தற் சத்தியாகும். வட்டமாய் இருப்பின் அது இருத்தற் சத்தியாகும். இதனால் சதாசிவன் சத்தி வடிவாய் நின்றே அருள்புரிவான் ஆகலின், சதாசிவ லிங்கமும் அத்தன்மையதேயாம்.
=======================================
பாடல் எண் : 17
மானந்தி எத்தனை காலம் அழைப்பினும்
தானந்தி அஞ்சில் தனிச்சுட ராய்நிற்கும்
கானந்தி உந்தி கடந்து கமலத்தின்
மேனந்தி ஒன்பதின் மேவிநின் றானே.

பொழிப்புரை :  பெரியோனாகிய சிவனைக் கிரியையாளர்கள் எத்தனை முறை தம்பால் வருமாறு அழைப்பினும் அத்தனை முறையும் அவன் ஐந்து முகங்களையுடைய சதாசிவ லிங்கத்திடத்தே வந்து, ஒப்பற்ற ஒளிவடிவாய் நிற்பான். யோகிகள் சுவாதிட்டானத்தினின்றும் பிராண வாயுவை மேல் எழத்தூண்டி, மேலும் உள்ள ஆதாரங்களைக் கடந்தவழி, ஏழாந்தானமாகிய ஆயிர இதழ்த் தாமரையிடத்தும், அதற்குமேல் எட்டாந் தானமாகிய நிராதாரத்திடத்தும், அதனையும் கடந்த ஒன்பதாவதாகிய மீதானத்திடத்தும் விளங்குவான்.
=======================================
பாடல் எண் : 18
ஒன்றிய வாறுஉம் உடலி னுடன்கிடந்து
என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
தென்றலைக் கேறத் திருந்து சிவனடி
நின்று தொழுதேன்என் நெஞ்சத்தி னுள்ளே.

பொழிப்புரை :  எங்கள் சிவபெருமான் தக்க முறையில் உங்களுடைய உடலின் உள்ளே பொருந்தி என்றும் விளங்குகின்ற முறை முன்னை மந்திரத்தின் பிற் பகுதியிற் கூறியவாறாகும். அதனால் நான் சிவனது திருத்தமான பாதங்கள் எனது அழகிய தலையிலே பொருந்துதற் பொருட்டு உள்ளத்துள் நின்றே வணங்கினேன்.
=======================================
பாடல் எண் : 19
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயில்என் நெஞ்சம்
புணர்தேன் புனிதனும் பொய்யல்லன் மெய்யே
பணிந்தேன் பகல்அவன் பாட்டும் ஒலியே.

பொழிப்புரை :  ஒளிப் பொருளாகிய சிவனை நான் அத் தன்மையனாக இவ்வுலகிற்றானே உணர்ந்தேன். பின்பு அவனை இவ்வுலகத்திற்கே வருமாறு கொணர்ந்தேன். பின் என் மனமே கோயிலாக அவனைக் கூடினேன். அதனால் அவன் இல்லாதவன் அல்லன்; உண்மையாக உள்ளவனே. நாளெல்லாம் நான் பாட்டும், ஒலியுமாக அவனைப் பணிதலையே செய்கின்றேன்.
=======================================
பாடல் எண் : 20
ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழுள் தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம்என
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.

பொழிப்புரை :  உடம்பின்கண் ஒன்றின்மேல் ஒன்றாய் உள்ள அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் என்னும் மூன்றிலும் நெருப்புப் போன்ற ஒளி வீச, `சிவனது பேதம் ஒன்பதுள் நடுவணதாகிய சதாசிவ மூர்த்தத்தில் உலகத் தோற்றமும், ஒடுக்கமும் நிகழ்வன` என்று உணர்ந்து நின்றால், அந்தச் சதாசிவ மூர்த்தமும், உலகத்தோற்றமும், ஒடுக்கமுமாய் நிற்கின்ற சத்தி, அவ்வுணர்ச்சியை உடையவனது உடலில் சந்திரன் போல ஒளிவிட்டு நிற்கும்.
=======================================
பாடல் எண் : 21
தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாம்
தன்மேனி தானாகும் தற்பரன் றானே.

பொழிப்புரை :  அகவழிபாடு செய்பவனுக்கு அவனது உடம்பே சதா சிவமூர்த்தி யாயும், அம்மூர்த்தி மானாயும் நிற்கும். இன்னும் அது சுத்த சிவனாயும், அச்சிவனது ஆனந்தமாயும் நிற்கும். அஃது இவ்வாறெல்லாம் ஆகும்படி சிவன் அவனது உடம்பே தானாய் விளங்கி நிற்பான்.
=======================================
பாடல் எண் : 22
ஆரும் அறியார் அகாரம் அவன்என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
ஊறி எழுந்திடும் ஓசைய தாமே.

பொழிப்புரை :  சிவன் அகாரமாயும், சத்தி உகாரமாயும் நிற்க, அவ்விரண்டும் கூடி ஓகாரமாகும். அந்த ஓகாரம் உலக முழுதும் பரவி, உள்ளத்தினின்றும் எழுகின்ற எல்லா எழுத்துக்களுமாய் ஒலிக்கும்.
=======================================
பாடல் எண் : 23
இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரமாய்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்துள் வட்டம் இறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.

பொழிப்புரை :  (முன்னை மந்திரத்தில், `ஓங்காரத்துள் சிவமும், சத்தியும் முறையே அகாரமும், உகாரமுமாய் நிற்பர், என்றதனால், அவ்விருவரது வடிவமுமாகிய இலிங்கம் ஓங்காரமாய் நிற்றல் எவ்வாறு` எனின்,) பீடம் சமட்டியான ஓங்கார வடிவேயாய் இருக்கும் இலிங்கம். ஒவ்வொரு கூற்றில் ஒவ்வோர் எழுத்தாய் வியட்டியாய் இருக்கும். அவற்றுள் பீடத்தின் உள்ளே மறைந்து நிற்கும் பகுதி மகாரமாயும், பீடத்தோடு இணைந்து வெளியே புலனாகி நிற்கின்ற பொருத்து வாயாகின்ற வட்டம் உகாரமாயும், இலிங்கம் கீழ் நின்று முக்கூறுபட்டு முறையே அகாரமும், விந்துவும், நாதமுமாய் இருக்கும்.
=======================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!