http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 20 January 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 07 . கேவல சகலசுத்தம் - பாடல்கள்: 042.(பகுதி-I)




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040

எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 ==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -007
கூடுதல் பாடல்கள்  (105+042=147)
==============================================
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்பாடல்கள்: 042 பகுதி-I
பாடல் எண் : 1
தன்னை யறிசுத்தன் தற்கே வலன்றானும்
பின்ன முறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிலள வாகவே.

பொழிப்புரை :   தத்துவங்களையும், அவற்றின் நீங்கியவழித் தன்னையும் அறிதலை விடுத்துச் சிவத்தை அறிகின்ற சுத்த நிலையை அடைந்தவனும், அவ்வாறின்றி, `தத்துவம், சிவம்` என்ற இரண்டையும் அறியாது, ஆணவம் ஒன்றிலே மட்டும் அழுந்தியிருக்கின்ற தனது அநாதியியல்பை உடையவனும், இவ்விருவரின் வேறாய்த் தத்துவங்களை அறிந்து நிற்பவனும் தம்தம் ஆற்றலுக்கு ஏற்ப முறையே, சத்து, அசத்து, சதசத்து ஆகிய பொருள்களில் பொருந்தியிருப்பர்.
**********************************************
பாடல் எண் : 2
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

பொழிப்புரை :   (இதன் பொருள் வெளிப்படை.)
குறிப்புரை :  `உயிர்களினது பக்குவவகைகளே அவகைளின் அவத்தை வேறுபாடுகட்குக் காரணம்` என்பது இம்மந்திரத்தின் குறிப்புப் பொருள்.

``
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும், - நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்
``*
 
என்னும் நாலடிச் செய்யுளும் ஒருவனது அறிவு அறியாமைகளால் உளவாய செயற்கை நிலைகளையே அவனது இயற்கை நிலைகளாக உபசரித்துக் கூறினமை இங்கு ஒப்பு நோக்கிக் கொளத்தக்கது. `மறுமை, இம்மை` என்பன கால ஆகுபெயர்களாய், அக்காலங்களில் விளையும் பயன்களை உணர்த்தின.  இதனால், `காரண அவத்தைகட்குக் காரணம் உயிர்களின் பக்குவா பக்குவங்கள்` என்பது கூறப்பட்டது.
**********************************************
பாடல் எண் : 3
ஆம்உயிர் கேவல மாம்மாயை யின்னிடைந்(து)
ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்றுக்
காமிய மாயேய மும்கல வாநிற்பத்
தாமுறு பாசம் சகலத்த தாமே.

பொழிப்புரை :  உயிர் மாயை கன்மங்களோடு கூடாது ஆணவத்தோடு மட்டும் இருந்த நிலை கேவலாவத்தை. (இதுவே உயிர்களின் அநாதி நிலை). பின்பு இறைவன் மாயா காரியங்களைக் கூட்டுவிக்க, அவற்றால் சிறிது அறிவைப் பெற்று வினைகளை ஈட்டியும், நுகர்ந்தும் வரும் நிலை சகலாவத்தை.
**********************************************
பாடல் எண் : 4
சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
நிகரில் மலரோன் மால் நீடுபஃ றேவர்கள்
இகழும் நரர்கீடம் அந்தமு மாமே.

பொழிப்புரை :  :  ஆன்மதத்துவங்கள் கூடுதல் குறைதல்களால் நிகழும் அவத்தைகளே சகலாவத்தைகள் ஆதலின், அவைகளை அடைந்தோர் யாவரும் சகல வருக்கத்தினரே. ஏனெனில், அவர்களே முக்குண வடிவாகிய பிரகிருதியுட்பட்டு, மும்மலங்களை உடையவர் களாய் இருத்தலின். எழுவகைப் பிறவியும் எய்தும் உயிர்கள் யாவும் சகல வருக்கத்தின வாதல் தெளிவு. இனி அவ் உயிர்களின் மேம்பட்டவர்களாக எண்ணப்படுகின்ற `அயன் மால்` என்பவர்களும் பிரகிருதி புவனத்துள் பிறந்து இறந்தமை புராண இதிகாசங்களில் கேட்கப்படுதலால், அவர்களும் சகல வருக்கத்தினரே.
**********************************************
பாடல் எண் : 5
தாவிய மாயையில் தங்கும் பிரளயர்
மேவிய மற்ற துடம்பாய்மிக் குள்ளனர்
ஓவலில் கன்மத்தர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட் டுருத்திரர் என்பவே.

பொழிப்புரை :  மாயை ஒழிந்த ஏனை இரு மலங்களையுடைய `பிரளயாகலர்` என்போர் பிரகிருதியைக் கடந்த மாயாதத்துவத்தில் இருப்பர். அதனால் இவர்களது தனு கரணாதிகள் பிராகிருதம் ஆகாது. மாயேயமேயாம். (எனவே, `மாயையின் நீங்கினார்` என்பது, `பிரகிருதியின் நீங்கினார்` என்பதேயாம். ஆகவே, இவர்கள் சகலரினும் மேம்பட்டவர்கள், சிவனை ஒரு போதும் அறியாது மயங்குவாரல்லர்.) மாயையின் நீங்கினாராயினும் கன்மம் நீங்கப் பெறாதவர்கள். (இவர்களுக்கு உள்ள கன்மம் சூக்கும கன்மமே.) அனந்த தேவர் வழிநின்று குணமூர்த்திகளை ஏவிப் பிரகிருதி மாயையில் காரியங்களைச் செய்விக்கும் சீகண்ட ருத்திரர், மற்றும் பிரகிருதி தத்துவத்தில் உள்ள நூற்றெட்டுப் புவன ருத்திரர்கள் ஆகியோர் இப்பிரளயாகலர் வருக்கத்தைச் சேர்ந்தவர்களே.
**********************************************
பாடல் எண் : 6
ஆகின்ற கேவலத்(து) ஆணவத்(து) ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரு மாமே.

பொழிப்புரை :  எல்லார்க்கும் உரித்தாகின்ற கேவலாவத்தையைத் தாங்களும் உடையவர் களாய், ஆயினும் கன்மமும், மாயையும் இன்றி, ஆணவம் ஒன்றை மட்டும் உடையவர்களில் பக்குவம் பெற்றோர் அனந்தர் முதலிய அட்ட வித்தியேசுரர்களும், சத்த கோடி மகா மந்திரேசுரர்களும் ஆவர். அபக்குவரோ அநேகர்.
**********************************************
பாடல் எண் : 7
ஆம்அவ ரில்சிவன் ஆரருள் பெற்றுளோர்
போம்மலந் தன்னால் புகல்விந்து நாதம்விட்(டு)
ஓம்மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலர்
தோம்அரு சுத்த அவத்தை தொழிலே.

பொழிப்புரை :  மேல், `ஒருமலம் உடையார்` எனக் கூறப்பட்டவர்களில், பெறுதற்கரிய சிவனது திருவருளை நிரம்பப் பெற்ற சிலர் அதிகார மல வாசனை, போக மல வாசனை ஆகியவைகள் நீங்கப் பெற்று, இலய மல வாசனை மட்டுமே உடையவர் ஆவர். ஆகவே, அவர்கள் மலம் முற்றும் நீங்கிய முத்தர்களாகவே கருதப்படுவர். (அதனால் அவர்கட்குக் கேவல நிலை உள்ளதாகவும் கருதுதல் கூடாது. அவர்கள் வாழ்வது அபர விந்து அபர நாதங்களைக் கடந்த பரவிந்து பரநாதங்களிலாம். ஆகவே, அவர்கள் சூக்குமை வாக்கு ஒன்றை மட்டுமே உடையவர் ஆவர். அவ்வாற்றால் அவர்கள், சுத்தாவத்தை ஒன்றை மட்டுமே அடைபவராகக் கருதப்படுவர்.
**********************************************
பாடல் எண் : 8
ஓரிருள் மூவகை நால்வகை யும்முள
தேரில் இவை கே வலம் மாயை சேர் இச்சை
சார்இயல் ஆயவை தாமே தணப்(பு) அவை
வாரிவைத்(து) ஈசன் மலம்அறுத் தானே.

பொழிப்புரை :  :  ஆன்மாத் தன் அறிவையிழந்து நிற்பதாகிய கேவல நிலையுள் மூன்றுவகை உண்டு. அவை நாலாகவும் வகுத்துக் கூறப்படும். `அவை யாவை` - என ஆராயின், ஆணவகேவலம், ஆணவத்தை நீக்குதற்குச் சிவன் விரும்பும் விருப்பக் கேவலம், தத்துவ சுத்திக்குப்பின் ஆன்ம தரிசனத் தொடக்கத்தில் உளதாகும் திகைப்புக் கேவலம்` என்பன. (இவை முறையே ஆன்மா அநாதியில் ஆணவத்தில் மூழ்கியிருந்த நிலையும், பின்பு இறைவன் ஆன்மாவை அந்நிலையினின்றும் விடுவிக்க மாயையைக் கூட்ட முனையும் நிலையும், பின்பு மாயா காரியங்களாகிய கருவி கரணங்களினின்றும் நீங்கிய நிலையுமாகும். இவை முறையே மருட்கேவலம், சகல கேவலம், அருட் கேவலம் - எனப் பெயர் பெறும். இறைவன் மாயையைக் கூட்டமுனைவது சூக்கும ஐந்தொழிலாகும். இந்நிலை சருவ சங்காரத்திற்குப் பின் மீளப் படைத்தற்கு முன்னேயும் உளதாகும். இவற்றைச் சிவஞானபோத ஆறாம் சூத்திரத்து அதிகரணத்தின் சிற்றுரையால் உணர்க. அருட் கேவலம் துகளறு போதத்திலும் சொல்லப்பட்டது.  இனிச் சகல கேவலத்தை, விஞ்ஞான கேவலம், பிரளய கேவலம் - என இரண்டாக்கி, `கேவலம் நால் வகைத்து` என்றலும் உண்டு (இதனை நாயனார் உய்த்துணர வைத்தார். சகல கேவலத்தையும் வேறாக எண்ணி, `கேவலம் ஐவகைத்து` என்றலும் உண்டு. அதனை நாயனார் குறித்திலர். மாயை, கன்மம் - இரண்டனோடும் கூடாது, அவை கூட்டப்படுதற்கு ஆவன செய்யப்படும் நிலை விஞ்ஞான கேவலம் - எனவும், கன்மம் கூட்டப்பட்டு, மாயை கூட்டப் படாத நிலை பிரளய கேவலம் - எனவும் உணர்க.)  இவ்வாறான பல வகை அவத்தைகளை வைத்துச் சிவன் ஆன்மாக்களின் பாசங்களைப் போக்குகின்றான்.
**********************************************
பாடல் எண் : 9
பொய்யான போதாந்தம் ஆறாறும்விட்டகன்(று)
எய்யாமை நீங்கவே எய்யவன் தானாகி
மெய்யாஞ் சராசர மாய்வெளி தன்னுட்புக்(கு)
எய்தாமல் எய்தும் சுத் தாவத்தை என்பதே.

பொழிப்புரை :  உண்மையான சுத்தாவத்தையாவது, விபரீத ஞானத்தையே தருகின்றவை களாகிய கருவிகள் முப்பத்தாறினின்றும் விடுபட்டு அப்பாற்போய், அங்ஙனம் போயதனால் அறியா மையையே தருவதாகிய ஆணவமலம் வந்து பற்றுதலாகிய அந்நிலையும் தோன்றா தொழிய, யாதொன்றனையும் உண்மையாகவே அறியும் அறிவையுடையவனாய், அந்த அறிவால் சரம், அசரம் ஆகிய அனைத்தையும் ஒருகாலத்திலே ஒருங்கே உணரும் நிலையை உடையனாய், அத்தன்மைத்தாய் விளங்கும் பராகாயமாகிய அருள் வெளியுட் பகுந்து, அவ்வெளிக்குள் உள்ள சிவனை, அடையாமல் அடைந்திருப்பதாகும்.
**********************************************
பாடல் எண் : 10
அனாதி பசுவியாத் தியாகும் இவனை
அனாதிஇல் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலன் அச்சக லத்திட்(டு)
அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆக்குமே.

பொழிப்புரை :  அனாதியே பாசத்துட்பட்டுப் பசுத்தன்மை எய்தி நின்ற இந்த உயிரை, அனாதியாயும், ஆதியாயும் வந்த ஐந்து மலங்களால் ஆட்டிப் படைப்பவன் சிவன். அவன் அனாதியில் கேவல நிலையிலிருந்த உயிரை சகல நிலையில் கொணர்ந்துவைத்துப் பின்பு அனாதியாய பிறப்பு ஒழியும்படி சுத்தாவத்தையில் சேர்ப்பான்.
**********************************************
பாடல் எண் : 11
அந்தரஞ் சுத்தவத் தைகே வலத்தாறு
தந்தோர்தஞ் சுத்தகேவ லத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே அறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந் தானே.

பொழிப்புரை :  எல்லாவற்றினும் மேலாய், நிறைவாய் உள்ள உண்மைச் சுத்த துரியாதீதமே, `சுத்தாவத்தை` என்றற்குப் பெரிதும் ஏற்புடையது. அஃது `அருட்கேவலம்` எனப்படும் தத்துவ சுத்திக்குப் பின் வாய்ப்பதாகும். அதனை அவ்வாற்றால் சிவனால் தரப்பட்டவர் தனித்த ஒரு சுத்தமாகிய அந்த அதீத நிலையில் யாதொரு பற்றும் இல்லாத சிவமேயாய் இருப்பர். (இதில், `யான், எனது` என்னும் உணர்வு இல்லையாம்.) இனி அதற்குக் கீழ்நிலையில் உள்ள துரிய நிலையில் ஆன்ம அறிவு சிறிதே நிகழ்தலால், ஆன்மாச் சிவனை அறியும் முகத்தால் தன்னை அறிபவனாக உணரும் நிலை உள்ளதாம்.
**********************************************
பாடல் எண் : 12
ஐயைந் தொடுங்குமவ் வான்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்தஅவ் வித்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதல் மூன்றுந் தொல்சத்தி
ஐயை சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.

பொழிப்புரை :  நிலம் முதல் பிரகிருதி ஈறான இருபத்தைந்து தத்துவங்களும் சகல வருக்கத்து ஆன்மாக்கட்குப் பரமாய் உள்ள சீகண்ட உருத்திரரிடத்தில் ஒடுங்கும் (இது பற்றியே இவை, `ஆன்ம தத்துவம்` எனப் பெயர் பெற்றன. ஒடுக்கம் கூறுதலால் காரணமாய் உள்ள பிரகிருதியையும் கூட்டி `இருபத்தைந்து` என்றார்.)  அந்தச் சீகண்ட உருத்திரரும், `தமக்கு` தனு கரணம் முதலியனவாய் வருவன அசுத்த மாயையே` என்னும் உண்மையை உணர்ந்து அவற்றின் நீங்கிச் சுத்த வித்தையில் வீடு பெறுவார். (எனவே, `அசுத்த மாயா காரியங்களாகிய வித்தியா தத்துவங்கள் அந்தச் சுத்த வித்தைக்குத் தலைவராகிய அனந்த தேவரிடத்தில் ஒடுங்கும்` என்பது தானே பெறப்பட்டது.)  இனி, அந்தச் சுத்த வித்தை முதலாக ஒடுக்க முறையில் நிற்கும் முதல் மூன்று தத்துவங்களும், `சத்தி` எனப்பெயர் பெற்று நிற்கும் இலய சிவனிடத்தில் ஒடுங்கும். சிவ தத்துவம் ஐந்தில் எஞ்சிநின்ற `சத்தி, சிவம்` என்னும் இருதத்துவங்களும் முடிநிலைப் பேறாய் உள்ள சுத்த சிவனிடத்தில் ஒடுங்கும். இவை யெல்லாம் மீளத் தோன்றுங்கால் இம்முறையானே தோன்றும்.
**********************************************
பாடல் எண் : 13
ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோ டடங்கிடும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவும்மெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபரத் தேகாண
எய்யும் படிஅடங் கும்நாலேழ் எய்தியே.

பொழிப்புரை :  (மேல், `நாலாறுடன் புருடன்` - என்னும் மந்திரத்தில் `வேதாந்தி தத்துவம்`-எனக் கூறப்பட்ட இருபத்தெட்டுத் தத்துவங்களில்) ஒடுக்க முறையில் முதல் இருபத்தைந்து தத்துவங்கள் சீவனில் அடங்கும். இருபத்தாறாம் தத்துவமாகிய ஈசுரன் உட்பட மற்றைய மூன்று தத்துவங்களும் மெயப்பொருளாகிய பரப்பிரமத்தில் சீவன் ஒன்றாகும் பொழுது அதில் அடங்கிவிடும். சுருக்கமாகச் சொல்வதென்றால், `விவகாரத்திற்குக் காரண சத்தியாகிய மாயை, அதற்கு அதிட்டானமாம் பாரமார்த்திகப் பொருளாகிய பரப்பிரமம் என்னும் அவ்விரண்டிலே எல்லாம் தோன்றுதலால், எல்லாம் ஒடுங்குதலும் அவற்றிலேதான்` எனலாம்.
**********************************************
பாடல் எண் : 14
ஆணவத் தார்ஒன் றறியாத கேவலர்
பேணிய மாயை பிரளயா கலர்க்காகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலம் முப் பாசமும் புக்கோர்க்கே.

பொழிப்புரை :  ஆணவ மலம் ஒன்றையே உடையவராகிய விஞ்ஞானகலர் கேவலாவத்தையை அடையுமிடத்துக் காரிய தத்துவங்களுள் ஒன்றையும் அனுபவியாது, நாதமாத்திரையா யிருப்பர். இரு மலம் உடையவராகிய பிரளயாகலர் கேவலாவத்தையை அடையும் பொழுது வித்தியா தத்துவத்தின் முடிவாகிய மாயாதத்துவம் அவர்கட்கு அனுபவப் பொருளாகும். போக்கிய காண்டமாய்த் தூலமாய் உள்ள பிரகிருதிக் காரியங்களை உடைய சகலர் கேவலாவத்தையை அடையும் பொழுது காரணமாகிய பிர கிருதியையே பற்றிக்கொண்டு, அதன் காரியப் பொருள்களில் ஒன்றையும் அனுபவித்தல் இன்றியிருப்பர், இனிச்சகலாவத்தை சகலர்கட்கே உளதாகும்.
**********************************************
பாடல் எண் : 15
ஆணவமா கும்விஞ் ஞானகலருக்குப்
பேணிய கன்மம் பிரளயா கலருக்கே
ஆணவம் கன்மமும் மாயையும் மூன்றுமே
காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே.

பொழிப்புரை :  (இம் மந்திரத்தில் பதிப்புக்களில் காணப்படும் பாடம் திரிவு செய்யப்பட்ட பாடம்.)  விஞ்ஞானகலர் - என்னும் இனத்தவர்க்கு உள்ள பாசபந்தம் ஆணவமலம் ஒன்றுமே. `பிரளயாகலர்` என்னும் இனத்தவர்க்கு உள்ள பாசபந்தம் அந்த ஆணவத்துடன் கன்மமும் கூடிய இரண்டு மலங்கள். `சகலர்` என்னும் இனத்தவர்க்கு உள்ள பாச பந்தமே. `ஆணவம், கன்மம், மாயை` - என்னும் மும்மலங்களும்.  `பிரளயாகலர்` என்பதில், `பி` என்னும் இகரம், வடசொல் பற்றிவந்த குற்றியலிகரமாய் அலகு பெறாதாயிற்று. பின்னும் இவ்வாறு ஆம் இடங்கள் உள.
**********************************************
பாடல் எண் : 16
கேவலந் தன்னில் கிளந்தவிஞ் ஞாகலர்
கேவலந் தன்னில் கிளர்விந்து சத்தியால்
ஆவயின் கேவலத் தச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.

பொழிப்புரை :  (ஒன்று இடையிட்டு முன்னை மந்திரத்தில் கூறிய கேவல வகைகளில்) தமக்குரிய கேவலநிலை அடைபவராகக் கூறப்பட்ட விஞ்ஞானகலர், அக்கேவல நிலையினின்றும் எழுச்சி பெறுதல் `விந்து` எனப்படும் சத்தி தத்துவத்தினாலாம். (எனவே, கேவல நிலையில் அவர்கள்` நாதம்` எனப்படும் சிவதத்துவத்தைப் பற்றியிருந்தமை பெறப்படும்.) அந்த விந்து சத்தியோடு பிற சுத்த மாயா தத்துவங்களைப் பற்றிச் செயற் படுதலே அவர்களது சகல நிலையாகும். (ஆகவே சகலருக்குப் போலப் பிரகிருதி தத்துவங்களைப் பற்றும் சகல நிலை அவர்கட்கு இல்லையாம்.) அந்தச் சகல நிலையில் அவர்களுடைய தனு கரணங்கள், மந்திர வடிவாகிய சுத்த மாயையால் ஆயினவேயாம்.
**********************************************
பாடல் எண் : 17
மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவம்
மாயச் சகலத்துக் காமியம் மாமாயை
ஏயமன் னூற்றெட் டுருத்திரர் என்பவே.

பொழிப்புரை :  வித்தியா தத்துவங்களில் மாயா தத்துவம் மட்டுமே செயற்பட்டு நிற்கும் நிலையில் பிரளயாகலர்பால் அந்த மாயா தத்துவமும் மெத்தெனவே செயற்படுதலால் ஆணவம் மேற்பட்டு நிற்கும். (அஃதே அவர்க்குக் கேவல நிலையாகும்.) இனி, அவர்கட் குரிய சகலாவத்தைக்கண் சுத்த தத்துவங்கள் செயற்படுதலானே கன்ம மலங்காரியப் படுவதாகும். இந்நிலையில் நிற்பவர்கள், மேல், ``தாவிய மாயை``- என்னும் மந்திரத்தில் (2199) குறிப்பிடப்பட்ட நூற்றெட்டுருத்திரராவர்.
**********************************************
பாடல் எண் : 18
மும்மலம் ஐம்மலம் கூடி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் அசுரர் நரர்
மெய்ம்மையில் வேதா விரிமால் கீ டாந்தத்தின்
அம்முறை யோனிபுக் கார்க்கும் சகலரே.

பொழிப்புரை :  `மும்மலம்` என்றும், ஐம்மலம்` என்றும் சொல்லப் படுகின்ற அனைத்து மலங்களையும் உடையவர்களாய், `தமக்குமேல் ஒரு முதற் பொருள் உண்டு` என அறியாது மயங்குகின்றவர்களே உண்மையான சகலாவத்தையை அடைபவர்கள். தேவர்கள், அசுரர்கள், மக்கள், அடி முடி தேடிய காலத்தில் `முடியைக் கண்டேன்` எனப் பொய் கூறிய பிரமன், வியாபகன்` என்னும் கருத்தால், `விட்டுணு` என்று அழைக்கப்படுகின்ற மாயோன் இவர்கள் யாவரும் தமக்குக் கீழ் புழுவரையில் உள்ள அனைத்து யோனிகளிலும் புகுந்து ஆரவாரிக்கின்ற சகல வருக்கத்தினரே.
**********************************************
பாடல் எண் : 19
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
சத்தசத் தோடத் தனைத்தலைப் பாசமாம்
மத்த இருள்சிவ னானகதி ராலே
தொத்தற விட்டிடச் சுத்தரா வார்களே.

பொழிப்புரை :  `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றனுள் சுத்தவத்தையில் மூழ்கினவர்களே, `ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும்மலங்களும் செயல் ஒழிந்து, உண்மை மாத்திரையாய் நிற்றலாலும், அம்மலங்களைச் செயற்படுத்தித் தனியாகி அவறறிற்குத் தலைமை பூண்டு நின்ற திரோதான சத்தியாகிய மலமும் சிவசூரியனது கிரணமாம் அருட் சத்தியால் சற்று விட்டு நீங்குதலாலும் உண்மையில், `சுத்தர்` எனத் தக்கவர் ஆவர்.
**********************************************
பாடல் எண் : 20
தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பாற் புரிவது தற்சுத்த மாமே.

பொழிப்புரை :  உயிர் சிவத்தோடு மட்டுமே பொருந்தி நிற்கின்ற அந்தத் தனிநிலையே பரமுத்தி நிலையாகும். அதுவே உண்மையில் தூய்மையாகும். (இதனைச் `சிவகேவலம்` என்றும். `பரகேவலம்` என்றும் கூறலாம்.) இதற்குக் கீழ்ப்பட்டன எல்லாம் சகலங்களே. (அஃதாவது, மாசொடுபட்டனவே.) அந்நிலையில், சகல வருக்கத்து ஆன்மாக்கள் கலை முதல் மண் ஈறாய் உள்ள தத்துவங்களின் நீங்கி நிற்றல். அவற்றிற்கு மெய்ந்நூல்களில் சொல்லப் படுகின்ற சுத்த கேவலமாகும். (இஃது, `அருட்கேவலம்` என்பதாகத் துகளறு போதத்தில் சொல்லப்பட்டது. வெண்பா-25) புருவ நடுவிலே நிகழ்வதாகிய சாக்கிராவத்தையிலே புறப்பொருளில் தோய்தல் இன்றி, அறிவுக் கறிவாய் உள்ள சிவத்திலே தோய்ந்திருத்தல் சகலத்தில் சுத்தமாம். (இதுவே, `சாக்கிரத்தில் அதீதம்` - என்க.)
**********************************************
பாடல் எண் : 21
அறிவின் றமூர்த்தன் அராகாதி சேரான்
குறியொன் றிலான் நித்தன் கூடான் கலாதி
செறியும் செயல்இலான் தினக்கற்றல் இல்லோன்
கிறியன் மலவியாபி கேவலத் தானே.

பொழிப்புரை :  சிவஞான சித்தியாரில்,
``
அறிவிலன்; அமூர்த்தன்; நித்தன்;
அராகாதி குணங்க ளோடும்
செறிவிலன்; கலாதி யோடும்
சேர்விலன்; செயல்க ளில்லான்;
குறியிலன்; கருத்தா அல்லன்;
போகத்திற் கொள்கை யில்லான்;
பிறிவிலன் மலத்தி னோடும்
வியாபி - கேவலத்தில் ஆன்மா
``l
எனப் போந்த செய்யுளின் உரையை நோக்கி இம்மந்திரத்தின் பொருளை உணர்ந்து கொள்க.
குறிப்புரை :  இம்மந்திரத்து இறுதியில் உள்ள `கேவலத்தான்` என்னும் எழுவாயை முதற்கண் வைத்து, `அறிவின்று` என்பதன்பின் `ஆக` என்பது வருவித்துப் பின் அனைத்துப் பயனிலை களோடும் கூட்டி முடிக்க. அமூர்த்தன் - உடம்பில்லாதவன். அராகம் முதலியவை புத்தி குண பாவகங்கள். குறி - இச்சை. நித்தம் - பிறப்பு இறப்பு இன்மை. கலாதி - கலை முதலிய தத்துவங்கள். `கலாதியைக் கூடான்` என்க. `தின` என்பது, `தின்ன` என்பதன் இடைக்குறை. `போகம் புசிக்க` என்பது பொருள். கிறியன் - பொய்யன்; இருந்தும் இல்லாதவன். மல வியாபி - ஆணவ மலத்தையே முழுமையாகப் பற்றியிருப்பவன்.
இதனால், காரண அவத்தை மூன்றனுள் `கேவலம்` என்னும் அவத்தையின் இயல்பு அதனை அடைந்த ஆன்மாவின்மேல் வைத்துக் கூறப்பட்டது.
**********************************************
 
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!