http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday, 21 January 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 07 . கேவல சகலசுத்தம் - பாடல்கள்: 042.(பகுதி-II)




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 ==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -007
கூடுதல் பாடல்கள்  (105+042=147)
==============================================
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்பாடல்கள்: 042 பகுதி-II
பாடல் எண் : 22
விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்ததம் ஞான பரையும் தனுச்சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர்
வந்த சகலர்சுத் தரான்மாக்கள் வையத்தே.

பொழிப்புரை :  பிரளயாகலர், சகலர், விஞ்ஞானகலர் ஆகிய மூவகை யினராய் விளங்கும் ஆன்மாக்கட்கும் முறையே அசுத்த மாயை, பிரகிருதி மாயை, சுத்த மாயை என்பவற்றால் அவ்வப் புவனங்களில் தனு கரண போகங்கள் உளவாகும். எல்லா உயிர்கட்கும் சுத்த மாயை -யின் காரியமாகிய வாக்குக்களால்தான் சவிகற்ப உணர்வு உண்டாகும்.
**********************************************
பாடல் எண் : 23
கேவல மாதியில் பேதம் கிளக் குறின்
கேவலம் மூன்றும் கிளறும் சகலத்துள்
ஆவயின் மூன்றும் அதிசுத்தம் மூன்றுமா
ஓவலில்லாஒன்பான் உற்றுணர்வோர்கட்கே.

பொழிப்புரை :  :  காரண அவத்தைகள் `கேவலம்` முதல் மூன்றாகச் சொல்லப்பட்டாலும் அவற்றுள் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் உண்டு. அவற்றை எடுத்துச் சொல்லுமிடத்து `கேவலத்திற் கேவலம், கேவலத்திற் சகலம், கேவலத்திற் சுத்தம்` என்று மூன்றும், `சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்திற் சுத்தம்` என மூன்றும், `சுத்தத்திற் கேவலம், சுத்தத்திற் சகலம், சுத்தத்திற் சுத்தம்` என மூன்றும் ஆக ஒன்பதாம். இவ்வேறுபாடுகள் நுண்ணுணர்வுடையார்க்கே விளங்கும்.
**********************************************
பாடல் எண் : 24
கேவலத் திற்கே வலம்அதீ தாதீதம்
கேவலத் திற்சக லங்கள் வயந்தவம்
கேவலத் திற்சுத்தங் கேடில்விஞ் ஞாகலர்
ஆவயின் நாதன் அருள்மூர்த்தி தானே.

பொழிப்புரை :  உயிர்கட்கு ஆணவ மல மறைப்பைச் சிறிதே நீக்கிச் சிறிதே அறிவைத் தருவன மாயா கருவிகள். அதனால், அவை ஒடுங்கிய விடத்து ஆணவம் மேற்படுவதே கேவல நிலை. கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் எல்லாக் கருவிகளும் நீங்காது, தலையாய கருவிகள் நீங்கியதே `அதீதம்` எனப்படுகின்றது. கீழா லவத்தையில் நிகழும் அதீதம் முக்குண வடிவான பிரகிருதி மேம்பட்ட நிலை. மத்தியாலவத்தையில் நிகழும் அதீதத்திலும் சிவ தத்துவமும், கால தத்துவமும் ஒடுங்காதே நிற்க, உயிருக்குப் புலன்கள் மிக்கு நிகழும். இதுவும் அதீதமே யாகும். இவ்விரண்டும் சகலாதீதமாகும்.  சருவ சங்கார காலத்தில் இறைவன் எல்லாக் கருவிகளையும் அழித்துவிட்டு, உயிர்களுக்கு முழு ஒய்வைத் தருதலால், அது பொழுது உயிர், உணர்வு சிறிதுமின்றி, முழுமூடமாய், ஆணவ இருளில் மூழ்கிக் கிடக்கும். இது கேவலா தீதமாகும். இதனையே `விஞ்ஞான கேவலம்` என்பர். இந்நிலையில், ஒடுக்கிய உயிர்களை இறைவன் மீளத் தோற்றுவிக்க முயலும் நிலையும் கேவலந்தான். அதனையும் `சகல கேவலம்` - என்றே கூறுவர். அதற்குக் காரணம் அந் நிலையில் இறைவன் சூக்கும ஐந்தொழில் செய்வான் என்பதே. இவை முதலான அவத்தைகள் பலவற்றுள் ஒன்றும் இல்லாது ஆன்மா ஆணவ இருளில் மூழ்கிக் கிடந்த நிலை அனாதி கேவலமாகும். இதனை, `மருட் கேவலம்` - என்பர். இவற்றுள் இரு சகலாதீதத்திற்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான கேவலத்தையே, `அதீதாதீதமாகிய கேவலத்தில் கேவலம்` என்றார். அதீதாதீதம் - அப்பாலைக்கு அப்பால். மேற் கூறியவாறு இறைவன் சூக்கும ஐந்தொழில் செய்யும் நிலையாகிய சகல கேவலமே கேவலத்தில் சகலமாம். சூக்கும ஐந்தொழிலாவது சூக்குமை முதலிய நால்வகை வாக்குக்களையும் தோற்றுவிக்கும் முகத்தால் உயிர்கட்கு உணர்வைப் பொதுவாக நிகழ்வித்தல். சிவதத்துவங்கள், வித்தியா தத்துவங்களைச் செலுத்திய வழியே உயிர்கட்கு அறிவு இச்சை செயல்கள் சிறப்பாக விளங்கும். அஃது இந்நிலையில் இல்லாமையாலும், நால்வகை வாக்குக்களும் சுத்த மாயையில் காரியமேயாதலாலும், `கேவலத்தில் சகலங்கள் வயிந்தவம்` என்றார். வயிந்தவம் (வைந்தவம்) - விந்துவின் காரியம். விந்து- சுத்த மாயை. வாக்குக்கள் பலவாதலால் அவற்றால் தோன்றும் உணர்வுகளும் பலவாதல் பற்றிச் `சகலங்கள்` எனப் பன்மையாகக் கூறினார்.  சகலரும், பிரளயாகலரும், `விஞ்ஞானகலர்` என்னும் நிலையை அடைதலே, கேவலத்தில் சுத்தமாகும். அஃதாவது` சகலர் மண்ணாதி கலையந்தம் முப்பத்தொரு தத்துவங்களைக் கடந்து சுத்த தத்துவ பந்தத்தை மட்டும் உடையர் ஆதலும், பிரளயாகலர் வித்தியா தத்துவங்களைக் கடந்து, சுத்த தத்துவ பந்தத்தை மட்டும் உடையர் ஆதலுமாம். இந்நிலையை அடைந்த பிரளயாகலர் சகலர்கட்கும் இறைவன் இயற்கை விஞ்ஞானகலர்க்குப் பக்குவ காலத்தில் உள்நின்றே ஞானத்தை உணர்த்தி, வீடு தந்தருள்வது போலவே அருள்தருவான்.
**********************************************
பாடல் எண் : 25
சகலத்திற் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிரா தீதம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே.

பொழிப்புரை :  மத்தியாலவத்தையில் நிகழும் அதீதமே சகலத்திற் கேவலமாகும். மத்தியாலவத்தையில் நிகழும் சாக்கிரமே சகலத்திற் சகலமாகும். சகலத்தில் சுத்தாவத்தையே சகலத்தில் சுத்தமாகும்.
**********************************************
பாடல் எண் : 26
சுத்தத்திற் சுத்தமே தொல்சிவம் ஆகுதல்
சுத்தத்திற் கேவலம் தொல் உப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே.

பொழிப்புரை :  :  பரமசிவனோடு இரண்டறக் கலந்த நிலையே சுத்தத்தில் சுத்தம். சீவன் முத்தி நிலையில் பிராரத்தத்தால் விளையும் இன்பத் துன்பங்களில் விருப்பு வெறுப்பற்றிருக்கும் நிலையே சுத்தத்தில் கேவலம். சீவன் முத்தி நிலையில் உலகர்பால் இரக்கம் மிக்கு அவர்கட்கு உய்தியை வலிந்து சென்றும் உணர்வித்தலும், அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி இவைகளை அடைந்து அவ்வந் நிலையில் விளையும் சுத்த போகங்களை நுகர்தலும் சுத்தத்தில் சகலம்.
**********************************************
பாடல் எண் : 27
சாக்கிர சாக்கிரந் தன்னிற் கனவொடு
சாக்கிரந் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிர தீதந் தனில்சகா னந்தமே
ஆக்கும் மறையாதி ஐம்மல பாசமே.

பொழிப்புரை :  மத்தியாலவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்திலும் சொல்லுலகம் முதலாகச் சொல்லப்படுகின்ற ஐந்து மலங்களாகிய பாசங்களே உயிருக்கு உலக அனுபவங்களையே தந்து நிற்கும்.
**********************************************
பாடல் எண் : 28
சாக்கிரா தீதத்தில் தான்அறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
ஆக்கும் பரோபாதி ஆம்உப சாந்தத்தை
நோக்கு மலம்குணம் நோக்குத லாமே.

பொழிப்புரை :  (`சாக்கிராதீதம்`-என்ற பெயர் சொல்லப்படுவன இரண்டு. ஒன்று ஆணவம் நீங்கிய சாக்கிராதீதம்; மற்றொன்று, ஆணவம் நீங்காத சாக்கிராதீதம்.) அவற்றுள் ஆணவம் நீங்கிய சாக்கிராதீதமும் பராவத்தையில் உயிர் சென்று தங்காதபடி பரோ பாதியை உண்டாக்கும் ஆகையால், பராவத்தையாகிய உபாதியற்ற நிலையை நோக்கியே செல். ஏனெனில், `உபாதியாயினும் பரோபாதி தானே` என நினைப்பனவெல்லாம் பாசத்தோடு கூடியிருக்க நினைப்பனவேயாகும்.
**********************************************
பாடல் எண் : 29
பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தான்உண்ணும்
`
அத்தன் அருள்` என்(று) அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே.

பொழிப்புரை :  `பெத்தம், முத்தி` - என்பவற்றையும், `சாக்கிர சொப்பன சுழுத்திகளுக்கு அப்பாலும், குறைந்த கருவிகளே செயற்படுகின்ற துரியம், ஒரு கருவியும் செயற்படாத துரியாதீதம் ஆகிய அவத்தைகள் உள` என்பதையும் அறியாமலே உயிர், அவத்தைகளை அனுபவித்து வருகின்றது. ஆயினும், `அவையெல்லாம் சிவனது திருவருளால் இன்ன இன்னவாறு நிகழ்கின்றன` என்பதை அவனது அருளாலே அறிந்த பின், உயிருக்குத் தற்போதம் இல்லை. அஃது இல்லையாகவே, அதற்குத் தனக்கென யாதொரு செயலும் இல்லை.
**********************************************
பாடல் எண் : 30
எய்திய பெத்தமும் முத்தியும் என்பன
எய்தும் அரன்அரு ளே விளையாட்டோ(டு)
`
எய்தி டுயிர்சுத்தத் திடும்நெறி` என்னவே
எய்தும் உயிர்இறை பால் அறி வாமே.

பொழிப்புரை :  உயிர்கள் அனாதியே அடைந்துள்ள பெத்த நிலையும், பின்பு முடிவில் அடையும் முத்தி நிலையும் சிவன் தனக்கு ஒரு விளையாட்டைப் போல மிக எளிதிற் செய்யும் அருட்செயலேயாகும். `அச்செயல்களில் அகப்பட்டு வருகின்ற உயிர்கள், இறுதியில் மாசு நீங்கிய நிலையில் இடப்படும்` என்று சொல்லப் படுவதால், அந்நிலையில் அவை சிவனையே அடைந்திருக்கும். அப்பொழுது அவை அறிவே முடிவாய் இருக்கும்.
**********************************************
பாடல் எண் : 31
ஐம்மலத் தாரும் அதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தர்
ஐம்மலத் தார்சுவர்க் கம்நர காள்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்கறி வோரே

பொழிப்புரை :  ஐந்து மலங்களையுடையவர்களாகச் சொல்லப்படுவோர் யாவரும் அதிகமான மாயைத் தொடக்கு உடையவர்கள். அவர்கள் அசுத்த வினையிலும் நீக்குதற்கரிய தூல வினைத் தொடக்குடையவர்கள். அத்தன்மைத்தான வினைத்தொடக்கால் சுவர்க்க நரகங்களை அடைந்து உழல்பவர்கள். ஆகையால், அவர்கள் சிவனை எளிதில் அறியும் அறிவுடையராவாரோ! `ஆகார்`.
**********************************************
பாடல் எண் : 32
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரிய மதில் உண்ணும் ஆசையாம்
உரிய சுழுத்தி முதல்எட்டும் சூக்கத்(து)
அரிய கனா தூலம் அந்நன வாமே.

பொழிப்புரை :  (உயிர்கள் யாதானும் ஓர்யோனியிற்புக்குப் பிறந்த பின்பு தான் சாக்கிரம் முதலிய அவத்தைகளை அடையும்` எனக் கருத வேண்டா. அவ்வவ் யோனியிற் புக்கிருக்கும் நிலையிலு ஐந்தவத்தைகளை அடையும். அவை கருவளர் அவத்தைகளாம்.)  வித்தில் நின்ற உயிரை முளையாகிய உடம்போடு முதற்கண் கலக்கச் செய்வதாகிய `காரண சரீரம்`, அல்லது, `ஆனந்தமயகோசம்` எனப்படுகின்ற மாயா தத்துவத்தோடு உயிர்தொடர்பு கொள்வதே கருவினில் துரியாதீதம். பின்பு `கஞ்சுக சரீரம்` அல்லது, `விஞ்ஞானமய கோசம்` - எனப்படுகின்ற, அராகம் முதலிய ஐந்து தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் துரியம். பின்பு, `குணசரீரம்`, அல்லது, `மனோமய கோசம்` எனப்படுகின்ற மூலப் பிரகிருதியோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சுழுத்தி. பின்பு, `சூக்கும சரீரம்`, அல்லது `பிராணமய கோசம்` எனப்படுகின்ற சித்தம் ஒழிந்த அந்தக்கரணம் மூன்று, தன்மாத்திரை ஐந்து ஆக எட்டுத் தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சொப்பனம். (சித்தம் பிரகிருதியில் அடங்கும்.) பின்பு, `தூல சரீரம்`, அல்லது அன்னமய கோசம்` எனப்படுகின்ற ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, மாபூதம் ஐந்து ஆகப் பதினைந்து தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சாக்கிரம்.
**********************************************
பாடல் எண் : 33
ஆணவம் ஆகும் அதீதம் மேல் மாயையாம்
பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்
பேணுங் கனவுமா யேயம் திரோதாயி
காணும் நனவில் மலக்கலப் பாகுமே.

பொழிப்புரை :  துரியாதீத நிலையில் உயிருக்கு ஆணவமலம் மட்டுமே இருக்கும். அதற்குமேலே உள்ள தான துரிய நிலையில் அதனோடு வித்தியா தத்துவங்களில் தோற்ற முறையில் முதலிலே உள்ள மாயாதத்துவம் வந்து பற்றும். அடுத்து நிகழும் சுழுத்தியவத்தையில் நல்லனவும் தீயனவும் ஆகரிய காரிய கன்மங்கள் வந்து பற்றும். (இதனால், கால தத்துவமும், நியதி தத்துவமும் பற்றுதல் பெறப்படும்) அடுத்து நிகழும் சொப்பனத்தில் மேற்கூறிய கன்மங்களுக்கு ஏற்பமாயா காரியங்களான கலை முதல் நிலம் ஈறான ஏனை எல்லாத் தத்துவங்களும் வந்து பற்றும். (ஆகவே, சுத்த தத்துவங்கள் வந்து பற்றுதலும் தானே அமைந்தது.) இறுதியாக நிகழும் சாக்கிரத்தில், முன்பு நான்கு மலங்களும் பற்றிக்கொண்டதனால் அவை அனைத்தையும் செலுத்துகின்ற திரோதான மலம் வந்து பற்றும். (என்றது, `அனைத்தையும் முழுமையாக நடத்தும்` என்றபடி.) ஐந்தவத்தைகளிலும் ஐந்து மலங்கள் இம்முறையில் உயிரை வந்து பற்றுவனவாம்.
**********************************************
பாடல் எண் : 34
அரன்முத லாக அறிவோர் அதீதத்தர்
அரன்முத லாமாயை தங்கிச் சுழுத்திக்
கருமம் உணர்ந்து மாயேயங்கைக் கொண்டோர்
அருளும் மறைவார் சகலத்துற் றாரே.

பொழிப்புரை :  `ஆணவம் அதீதத்தில் பற்றும்` என முன் மந்திரத்தில் கூறினமையால், அந்நிலையை மட்டும் உடையராய் அதிலே நிற்பவர்கள், `சிவபெருமான் முதல்வன்` என உணரும் உணர்வை இழவார். (இவர்கள் விஞ்ஞான கலரே.)  `மாயா தத்துவம் துரியத்தில் வந்து பற்றும்` என்றும், `வித்தியா தத்துவங்களில் காலமும், நியதியும் வந்து பற்றும்` என்றும் முன் மந்திரத்தில் கூறினமையால், அந்த இரண்டில் நிற்பவர்களும் மேற் கூறப்பட்டவர்போல, `சிவபெருமானே முதல்வன்` என்னும் உணர்வை இழத்தல் இல்லை. (இவர்கள் இருதிறத்தினரும் தம்முட் சிறிது வேறுபாடுடைய பிரளயாகலரே. இவர்களில் பின்னவர் புருட தத்துவத்திற்குச் சிறப்பு ஏதுவாய் நிற்கும் கலை, வித்தை, அராகங்களைப் பொதுமையாக அன்றிச் சிறப்பாக உடையராகார் என்பது நாயனார் கருத்து - என்க. `கருவில் அதீதம்` என்னும் மந்திரத்திற் கூறியவற்றிற்கும், அடுத்து முன் மந்திரத்திற் கூறிய வற்றிற்கும் சிறிது வேறுபாடு உண்டென்க.) `கலை முதலிய ஏனை எல்லாத் தத்துவங்களும் சொப்பனத்தில் வந்து பற்றும்` - என்று முன் மந்திரத்தில் கூறப் பட்டமையால், அவர்கள், `தமக்கொரு தலைவன் உளன்` என்பதையே அறியார். இவர்கள் சகல வருக்கத்தினரே.
**********************************************
பாடல் எண் : 35
உருவுற்றுப் போகமே போக்கியத் துற்று
மருவுற்றுப் பூத மனாதியால் மன்னி
வரும்அச் செயல்பற்றி சத்தாதி வைகிக்
கருவுற் றிடுஞ்சீவன் காணும் சகலத்தே.

பொழிப்புரை :  `கருவில் அதீதம்`l என்னும் மந்திரத்திற் கூறியபடி கருவிலேயே பல அவத்தைகளை அடைந்த உயிர், பின்பு பலருங்காணப் பிறந்து, சகலாவத்தையில் பூதம் முதலிய புறக்கருவிகளாலும், மனம் முதலிய அகக்கருவிகளாலும் செய்தற்குரிய செயல்களை மேற்கொண்டு, பல போக்கியப் பொருள்களில் பொருந்தி, ஓசை முதலிய புலன்களில் மூழ்கிப் பலவகை அனுபவங்களை அனுபவிப்பதாய்க் காணப்படும்.
**********************************************
பாடல் எண் : 36
இருவினை ஒத்திட இன்னருட் சக்தி
மருவிட ஞானத்தில் ஆதரம் மன்னிக்
குருவினைக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.

பொழிப்புரை :  உயிர்கள் தமக்கு இருவினையொப்பு வாய்க்கப் பெற்ற பொழுது சிவனது சத்தி முன்பு பிறவித் துன்பத்தைத் தரும் திரோதான சத்தியாய் இருந்த நிலைமை மாறி, வீட்டின்பத்தைத் தரும் அருட்சத்தியாகித் தங்கள் அறிவில் பதியப்பெற்று, அதனானே மெய்யுணர்வு வேட்கை நிலைத்து நிற்க அவ்வேட்கை மிகுதியால் ஞானகுருவை அடைந்து அவர் உபதேசித்த முறைப்படி தம்மைச் சிவனது அருட்சத்தியின் வழிப்படுத்திக் கொண்டு, அதனாலே எல்லா மலங்களும் நீங்கப் பெற்று, மீட்டும் பிறவா நிலையில் நிற்பதே சுத்தாவத்தையாம்.
**********************************************
பாடல் எண் : 37
ஆறாறும் ஆ(று) அதின் ஐயைந் தவத்தையோ
டீறாம் அதீதத் துரியத்(து) இவன்எய்தப்
பேறாகும் ஐவரும் போம்பிர காசத்தின்
ஈறார் பரசிவம் ஆதேய மாமே.

பொழிப்புரை :  முப்பத்தாறாகச் சொல்லப்படுகின்ற கருவிகளே அவத்தை வேறுபாடுகட்குக் காரணம். அந்தக் காரணத்தின் வழிக்காரியமாய் நிகழும் அவத்தைகள் இருபத்தைந்து. (கேவலம், சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்தில் சுத்தம், நின்மலம் ஆகிய ஐந்தில் ஒவ்வொன்றிலும் சாக்கிரம் முதலிய ஐந்து.) அந்த இருபத்தைந்தில் முடிவாய் உள்ளது சுத்த துரியாதீதம். அதனை உயிர் அடைந்த பொழுது, ஐந்தொழில் தலைவர்களாகிய ஐவரும் அதனைத் தடை செய்யாது இருக்க, அவ்விடத்து மிக்கு விளங்கும் அருள் ஞான ஒளியினால், அனைத்துயிர்கட்கும் முடிவான புகலிடமாய் உள்ள பரசிவனது பேரின்பம் அதன் அறிவினுள்ளே பொங்கித் ததும்பும்.
**********************************************
பாடல் எண் : 38
தன்னை அறியா துடலைமுன் `தான்` என்றான்
தன்னைமுன் கண்டான் துரியந் தனைக்கண்டான்
உண்ணும் துரியமுன் ஈசனோ டொன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடுந் தானே.

பொழிப்புரை :  சகலாவத்தையில் தன்னை உடம்பின் வேறாக உணராமல், உடம்பையே ``தான்`` என உணர்ந்து நின்றவன், சுத்தா வத்தையை ஓரளவேனும் அடைந்த பின்பே தன்னை உடம்பின் வேறு பட்ட பொருளாக உணர்ந்தான். பின்பு சுத்தத்தில் துரிய நிலையை அடைந்து, சிவனது அருளை உணர்ந்தான். ஆயினும் அதனையும் கடந்த சுத்த துரியாதீதத்தை அடைந்து சிவனை உணர்ந்து அவனோடு இரண்டறக் கலவாது, துரியத்திலேயே அவன் இருந்துவிடுவானாயின், உடம்பு நீங்கிய பின், மீளவேறோர் உடம்பை எடுத்தலும் கூடும்.
**********************************************
பாடல் எண் : 39
சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படின்
ஆக்கிய வந்த வயிந்தவ மால்நந்த
நோக்கும் பிறப்பறும் நோன்முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.

பொழிப்புரை :  புருவ நடுவிற்றானே திருவருளால் சிவத்தைத் தலைப்படும் சாக்கிரம் முதலிய அவத்தைகளில் முடிவான அதீத நிலை கைகூடுமாயின், பாச ஞானத்தை உண்டாக்க வந்த வாக்காகிய மயக்கும் பொருள் கெடும். அது கெடவே, `இனியும் வருங்கொல்` என எதிர்நோக்கி அஞ்சப்படுவதாகிய பிறப்பு, வாராதே ஒழியும். அதனால் பரமுத்தி நிலை கிடைக்கும். எவ்வாறெனில் அவ்விடத்தில் பாச ஞான பசு ஞானங்கள் தோன்ற மாட்டா ஆகையால்,
**********************************************
பாடல் எண் : 40
அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
அப்பும் அனலும் அகலத்துள் ஏதென்னில்
அப்பும் அனலும் கலந்த(து) அவ் ஆறே.

பொழிப்புரை :  `இன்பம், துன்பம்` என்னும் இரண்டும் உலக உணர்வே நிகழும் சகலாவத்தையில் நிலையின்றி, மாறி மாறித் தோன்றும். அகலாவத்தையாகிய சுத்தாவத்தையில் அவை தோன்றவேமாட்டா. `சகலாவத்தையில் அவை தோன்றுதல் ஏன்` எனில், இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததுதான் சகலாவத்தை.
**********************************************
பாடல் எண் : 41
அறுநான் கசுத்தம் அதின் சுத்தா சுத்தம்
உறும்ஏழும் மாயை உடன்ஐந்தே சுத்தம்
பெறுமா றிவைமூன்று காண்டத்தால் பேதித்(து)
உறுமால்மாமாயையின் ஆன்மாவினோடே.

பொழிப்புரை :  :  முப்பத்தாறு தத்துவங்களில் கீழ் உள் ஆன்மதத்துவம் இருபத்து நான்கும் அசுத்த தத்துவங்களாகும். அவை அவ்வியத்தமாகிய மூலப்பிரகிருதி யினின்றும் நோறி ஒடுங்கும். இடையில் உள்ள வித்தியா தத்துவம் ஏழும் மிச்சிர தத்துதவமாகும். அவை அசுத்த மாயையினின்றும் தோன்றி ஓடுங்கும். மேலே உள்ள சிவ தத்துவம் ஐந்தும் சுத்த தத்துவங்களாகும். அவை சுத்த மாயையினின்றும் தோன்றி ஒடுங்கும். இம் மூவகைத் தத்துவங்களும் மூன்று காண்டங்களாய்ப் பிரிந்து ஆன்மாவோடு கூடி, அதற்கு அறிவிச்சை செயல்கள் நிகழக்கருவிகளாய் நிற்கும்.
**********************************************
பாடல் எண் : 42
மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏரும் உயிர்கே வலசகலத் தெய்திப்பின்
ஆய்தரு சுத்தமும் தான்வந் தடையுமே.

பொழிப்புரை :  சிவனே எல்லாம் செய்பவன் ஆகையால், உலகமாகிய மகவிற்கு அவனை, `தந்தை` எனலாம். உலகிற்கு முதற்காரணமான `சுத்தமாயை, அசுத்தமாயை` என்னும் இரு மாயைகளுள் சுத்தமாயையையே சிவன், தான் நேரே பற்றிச் செயற்படுத்துதலால் அதனைச் சிவனோடு புணர்ந்து உலகமாகிய மகவை ஈன்ற, `நற்றாய்` எனலாம்; அசுத்தமாயையைச் சிவன், தான் நேரே பற்றிச் செயற்படுத்தாமல், அனந்த தேவரைக் கொண்டும், அவர் வழியாகச் சீகண்ட உருத்திரரைக் கொண்டும் செயற்படுத்துதலால் அதனை, உலகமாகிய மகவை வளர்க்கும் `செவிலித்தாய்` எனலாம். எனவே, சுத்தமாயை, அசுத்தமாயை என்னும் இரு முதற் காரணங்களாலும், சிவனாகிய கருத்தாவினாலும் உலகம் தோன்றி நிலை பெற, உயிர்கள் அவ்வுலகத்தைப் பற்றி நின்று, `சகலம், கேவலம்` என்னும் இருநிலைகளில் மாறி மாறி உழன்று, முடிவில் சிவனது அருளாலே ஞானத்தைப் பெற்று, அவற்றினினின்றும் விடுதலை அடைந்து சுத்த நிலையை அடையும்.
**********************************************
 
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!