http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Friday, 1 February 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 09, 10, 11 & 12. 9. முக்குண நிர்க்குணங்கள், 10. அண்டாதி பேதம் - பாடல்கள்: 02, 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்: 03, 12. கலவு செலவுகள் – பாடல்கள்: 02




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002
==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -012
கூடுதல் பாடல்கள்  (173+001+002+003+002=181)

==============================================  
எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணங்கள்
பாடல் எண் : 1
சாத்திகம் எய்தும் நனவென்ப சாற்றுங்கால்
வாய்த்த இராசதம் மன்னும் கனவென்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.

பொழிப்புரை :  சாக்கிரம் பொருள்களை நன்குணரும் நிலையாகலின் அது, `சாத்துவிக குணத்தின் காரியம்` என்றும், சொப்பனம் பொருள்களைச் சாக்கிரத்தில் அனுபவித்த வாசனையளவாய் நிற்கும் நிலையாதலின் அது மெய்மைக்கு எதிரான போலி அனுபவம் ஆதல் பற்றிச் சாத்துவிகத்திற்கு எதிரான, `இராசதகுணத்தின்காரியம்` என்றும், சுழுத்தி, யாதும் உணராத நிலையாதலின் அஃது, இருள் மயமான `தாமத குணத்தின் காரியம்` என்றும் சொல்லப்படும். துரியம் இம்மூன்றையும் கடந்ததாகலின் அது `நிர்க்குணமாய் நிகழ்வது` என்றும் சொல்லப்படும்.
**********************************************
எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்  - பாடல்கள்: 02
பாடல் எண் : 1
பெறுவ பகிரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணலள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.

பொழிப்புரை : அண்டங்களை ஆசனமாகக் கொண்டு, அவற்றிற்கு மேலே விளங்குகின்ற சிவபெருமான், உயிர்களால் பற்றப்பட்டுப் புறமும், அகமுமாய்ப் பல்வேறு வகையில் அமைந்துள்ள அண்டங்கள் எண்ணிலவாய் நிற்க, அவை அனைத்திலும், கட்பொறிக்குப் புலனாகின்ற மாற்றொளியையுடைய, பொன்னால் ஆகிய அணிகலன்போல அவற்றினுள் நிறைந்திருக்கின்றான்.
**********************************************
பாடல் எண் : 2
ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின்மேல்
மேனி ஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த்
தானந்த மில்லாத தத்துவ மானவை
ஈனமி லாஅண்டத் தெண்மடங் காமே.

பொழிப்புரை :  அண்டங்களாகிய ஆசனத்தின்மேல் ஆனந்தமாய் உள்ள மெய்ப்பொருள்தான் (வடிவமற்றதாயினும்) அருவம் இரண்டு, அருவுருவம் ஒன்று, உருவம் இரண்டு ஆகிய ஐந்துவடிவங்களைக் கொண்டு விளங்குதலால், அதனால் வியாபிக்கப்பட்ட முப்பத்தாறு முதனிலைப் பொருள்கள் தோன்றி, அழிவின்றி நிற்பனவே `தத்து வங்கள்` எனப்படுகின்றன. அவையே குறைவில்லாத அண்டங் களாய்க் காரியப்பட்டு, அளவிறந்து நிற்கின்றன.
**********************************************
எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் -பாடல்கள்: 03

பாடல் எண் : 1
அஞ்சில் அமுதம் ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில் ஓங்காரம்ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயம் ஆம்
சிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

பொழிப்புரை :  கெடுதல் இல்லாத ஓங்காரத்தின் கலைகள் பன்னிரெண்டில் `, , , விந்து` என்னும் நான்கிற்கு அப்பால் ஐந்தாவதாய் உள்ள அர்த்த சந்திர கலையை அடைந்தால் ஓர் அமுததாரை ஒழுகும் (அஃது உடல் எங்கும் உள்ள நாடிகளில் பாய்ந்து உடலை உறுதிப்படுத்தும். இந்த இடம் புருவநடுவிற்குச் சற்றுமேல், `நெற்றி நடு` என்னலாம்) பின்பு நிரோதினியைத் தாண்டி ஏழாவதாய் உள்ள நாதகலையை அடைந்தால் அவ்விடத்து ஓர் ஆனந்தம் தோன்றும் (அந்த ஆனந்தம் சிறையில் உள்ளவனுக்கு, `விடுதலை தோன்றி விட்டது` என்பது தெரிந்தவுடன் உண்டாகின்ற ஆனந்தம் போல்வதேயாகும். இந்த இடம் பிரமரந்திரத்திற்குப் பின்) அதனைக் கடந்து நாதாந்தத்தைத் தாண்டி, ஒன்பதாவதாய் உள்ள சத்திகலையிலும் அதனைக் கடந்து வியாபினி கலையைத் தாண்டிப் பதினொன்றாவதாய் உள்ள சமனா கலையிலும் சென்று உள்ளத்தை அசையாதிருக்கச் செய்தால், அத்தகையோர் இவ்வுலகத்திலே இருப்பினும் உமைகேள்வனாகிய சிவன், `ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே`` என அருளிச்செய்தபடி அவர்கள் உடம்பிற் குள்ளே இனிது வெளிப்பட்டு நின்று, ``வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்து`` (அஃதாவது பேரானந்தத்தை விளைத்து) நிற்பான்.
**********************************************

பாடல் எண் : 2
புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்றும் ஆம்அவ் வவத்தையே.

பொழிப்புரை : [சகலத்தில் சுத்தமாகிய யோக வகைகளில் பிராசாத யோகத்தில் ஒருவகையான பராவத்தை நின்மலாவத்தைகள் சொல்லப் படுகின்றன. அவை மேற்கூறிய சுத்தத்தில் சுத்தாவத்தைகளாகிய பராவத்தையும், இனிக்கூறப்படும் நின்மலாவத்தைகளும் அல்ல.* அந்த அவத்தைகளில் தத்துவங்களின் நீக்கமும் சொல்லப்படுகின்றது. அவற்றுள் அமைந்த நின்மலாவத்தையை இம்மந்திரம் குறிப் பிடுகின்றது.]  புருடதத்துவமும், அதற்குக் கீழே பொருந்தியுள்ள சித்தமும் சூக்குமமாகிய நாதவிந்து கலைகளிலே ஒடுங்கும். அவ்வொடுக்கங்கள் முறையே யோகத்தில் நின்மலாதீதமும், யோகத்தில் நின்மல துரியமும் ஆகும். சித்தத்திற்குக் கீழ் உள்ள புத்தி, அகங்காரம், மனம் ஆகிய மூன்று அந்தக்கரணங்களும், தன்மாத்திரைகள் ஐந்தும் ஆகிய எட்டும் யோகத்தில் நின்மல சுழுத்தி முதலியவற்றில் விரிந்துநிற்கும். இங்ஙனமாகவே ஞானவத்தைகளை நோக்க, மேற்கூறிய பதினொன்றாந் தானமாகிய சமனா கலையும் யோகாவத்தைத் தானமேயாம். (`ஏனெனில், அவ்விடத்தும் சுத்த மாயைத் தொடர்பு இருத்தலின்` என்பது கருத்து).
**********************************************

பாடல் எண் : 3
காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திட நந்தியல் லால்இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டும் அதுதிடம் எண்ணலும் ஆமே.

பொழிப்புரை :  முன் மந்திரத்தில் சொல்லப்பட்டபடி சிவாகமங்கள் கூறுகின்ற அந்தத்தானங்கள் பதினொன்றிலும் சென்று நின்றால் உடம்பு விரைவில் அழியாது நெடுங்காலத்திற்கு நிலைபெறும் வகையில் உறுதியடையும். அந்நிலையில் அவ்வுடலில் உள்ள உயிருக்குச் சிவனைத் தவிரத் துணையாவார் வேறு ஒருவரும் இலராவர். (அஃதாவது, `அவ்வுண்மை அவ்வுயிருக்கு நன்கு விளங்கி நிற்கும்` என்பதாம்) அதனால் உனது மனம்போனபடி நீ போய் அலைந்துகொண்டிருந்த அலைவுகளையெல்லாம் விடுத்து அமைதியுற்றிருந்த அந்த அமைதியே வழியாகச் சிவன் தன் அடியார்களோடு கூட்டுதல் உறுதி. இந்த உறுதியும் உனக்கு அந்நிலையில் விளங்குவதாகும்.
**********************************************

எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள் – பாடல்கள்: 02
பாடல் எண் : 1
கேவலந் தன்னில் கலவு சகலத்தின்
மேவும் செலவு விடாவிருள் நீக்கத்துப்
பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

பொழிப்புரை : கேவலாவத்தைக்குப் பின்பு ஆன்மாச் சகலத்தை அடைதலே கலவு நிலையாகும். (கலத்தல் மலத்தோடேயாகையால், இக்கலப்பு அசுத்தமேயாம். எனவே, கேவலத்திலிருந்த அசுத்தம் போய்விடவில்லையாம். முன்னை அசுத்தமே பின்னை அசுத்தத்திற்குக் காரணம் ஆகையால்) விடாது பற்றியுள்ள முதல் அசுத்தமாகிய இருள் நீங்கும் சமையத்தில் ஆன்மாச் சகல நிலையினின்றும் சிறிது சிறிதாக விலகி அப்பாற் செல்லுதலே செலவு நிலையாகும். (இது மலங்களினின்றும் நீங்கும் நிலையாகலின், `நின்மலாவத்தை` எனப்படும்) இந்நிலையில் ஆன்மாத் தன்னைக் காணுதல், பின் திருவருளைக் காணுதல் பின் பராசத்தியைக் காணுதல் இவை மூன்றும் முறையே நிகழ்ந்து நீங்கினால் சாக்கிராதீதம் வாய்க்கும். அதன்பின்பே நின்மலாவத்தை முடிவுபெறும்.
**********************************************

பாடல் எண் : 2
வெல்லும் அளவு விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

பொழிப்புரை :  எந்தப் பொருள் மேலும் எழுகின்ற விருப்பத்தை வெல்லுங்கள்; வெறுப்பை ஒழியுங்கள்; உள்ளம் தூய்மையாகும். ஆனபின் அதனை இயன்ற அளவு திருவருளைப் பற்றியே இயங்கச் செய்யுங்கள். பின்பு அஃது அல்லும், பகலும் திருவருளையே சார்ந்து அமைதியுற்றிருக்கும். அப்பொழுது மலைக்குகையுள் அடைக்கப்பட்டவனுக்கு அந்தக் குகை வெடித்துப் பெரிய விடுதலை கிடைத்தது போன்ற ஒருநிலை உண்டாகும்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!