http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday, 28 January 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 08 . பராவத்தை-பாடல்கள்: 026.


பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026   ==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -008
கூடுதல் பாடல்கள்  (147+026=173)
============================================== எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை – பாடல்கள்: 026
பாடல் எண் : 1
அஞ்சும் கடந்த அனாதிபரம் தெய்வம்
நெஞ்சமுந் தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.

பொழிப்புரை :  உருவம் இரண்டு, (வித்தை, ஈசுரன்) உருவாருவம் ஒன்று, (சதாசிவன்) அருவம் இரண்டு (சத்தி, சிவன்) ஆகமுத்திறத்து ஐந்துநிலைகளையும் கடந்து, தன்னியல்பில் நிற்கும் பரசிவனே சுத்தசிவன். (மேற்கூறிய ஐந்தும் அபரசிவங்களாம்.) பரசிவன் - மனத்தையும் கடந்தவன். இயல்பாகவே மலங்கள் இல்லாதவன். எனவே, மாயா சரீரங்களை எடாதவன். ஆகவே, அவன் (தனது திருவருள் காரணமாக) மலங்களுட் பட்டனவாயினும் உண்மையில் அவற்றினும் மேற்பட்ட உயிர்களை முன்னர் மாயாகாரியமாகிய உடலோடு ஒன்று படுத்திப் பின்பு அதனினின்றும் வேறுபடுத்தி உய்வித்தற் பொருட்டு அவ்வுயிர்கள் தன்னை அறியாதபடி அவற்றின் அறிவினுள்ளே கள்வன் போல ஒளித்திருந்தான். எனினும், அவனது கள்ளத்தை நான் அவன் அருளாலே அறிந்து கொண்டேன்.
**********************************************
பாடல் எண் : 2
சத்தி பராற்பரம் சாந்தி தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்தி அம் மாயை தனுட்சக்தி ஐந்துடன்
சத்தி பெறும்உயிர்தான் அங்குற் றாறுமே.

பொழிப்புரை :  (குண குணிகட்குத் தம்முன் வேற்றுமையின்மையால்,) `சத்தியே சிவம்` என்று கூறலாம். எனினும், சத்தியை ஆள்வது பொருளேயாதலின், சிவத்தினின்றே சத்தி தோன்றுகின்றது. (அஃதாவது செயற்படுகின்றது.) அதனால் உயிர்கட்கு, அமைதியைத் தருவதும், மேலான ஆனந்தமாய் விளைவதும் பராசத்தியே. இனி அந்தச் சத்தியினால்தான் சுத்தமாயையாகிய சத்தி காரியப்படுகின்றது. அது காரியப்படும் நிலையில் சிவசத்தி, `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` என ஐந்தாய் இருக்கும். அந்த ஐந்துடனும் கூடுவதனாலே தான் உயிர் ஆற்றலைப் பெறுகின்றது. ஆகவே, உயிர் அமைதியை அடைந்து, ஆனந்தத்தைப் பெறுவது பரையாகிய சத்தியிடத்தில்தான்.
**********************************************
பாடல் எண் : 3
ஆறாறுக் கப்பால் அறி(வு)ஆர் அறிபவர்
ஆறாறுக் கப்பால் அருள் ஆர் பெறுபவர்
ஆறாறுக் கப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக் கப்பால் அரன்இனி தாமே.
பொழிப்புரை :  முப்பத்தாறு தத்துவங்களும் சடமேயாதலின் சித்தாகிய பரம்பொருள் அத்தத்துவங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்டதாம். (அந்தப் பரம்பொருளை யடைதலே பராவத்தை) இந்தச் சடசித்துக்களைப் பகுத்து, சித்தின் இயல்பை அறிபவரும் அரியர். அந்தச் சித்துப் பொருளின் குணமே அருள் ஆதலின், அப்பொருளை அறிந்து அருளைப் பெறுபவரும் அரியர். உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது. ஆகலின், அறிவே வடிவான பரம் பொருளைச் சார்ந்து அறிவே வடிவாய்விட்ட அவர்கட்குத்தான் சிவன் அளவிலா இன்பப்பொருளாய் இன்புறுத்துவான்.
**********************************************
பாடல் எண் : 4
அஞ்சொடு நான்கும் கடந்(து) அகமேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சற நாடின் நயஞ்செய்யு மாறே.
பொழிப்புரை :  வித்தியா தத்துவங்கட்கு முதற் காரணமாய் உள்ள அசுத்த மாயையைக் கடந்து சிவத்துவத்தை அடைந்தமையால் `வித்தியாதரர்கட்குத் தலைவன்` எனச் சொல்லுதற்குரியசாதகன், பிராசாதகலைகளில் ஒன்பதைக் கடத்தலால், சுத்த மாயாகாரியங்களையும் கடந்த ஒருநிலையைப் பெற்றுப் பத்தாம் கலையாகிய வியாபினி கலையில் நின்று, அருட் சத்தியை வஞ்சம் அற்ற நெஞ்சுடன் நாடுவானாயின் அஃது, ஒன்பது அடுக்குக்களுக்கு மேல் உள்ள பத்தாவது மாடியில், காலில் செம்பஞ்சு ஊட்டுதல் முதலிய ஒப்பனைகளுடன் கட்டிலில் உறங்குகின்ற தலைவியைத் தலைவன் அடைந்து, அவளோடு இனிய சொற்களைக் கூறுவது போன்றதாகும்.
**********************************************
பாடல் எண் : 5
உரிய நனாத்துரி யத்தின் இவன்ஆம்
அரிய துரிய நனாவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரன்ஆம்
திரிய வரும்துரி யத்தில் சிவமே.
பொழிப்புரை :  எளிதில் இயல்பாக நிகழும் சகல சாக்கிர துரியம் போலவே, அரிதில் சாதித்து அடைவதாகிய நின்மல துரியத்திலும் ஆன்மா, ஆன்மாவாய்த்தான் இருக்கும். ஆயினும், வியாபகமாகிய பர துரியத்தில் அது மேல்நிலையை அடையும். அந்தத் துரியம் வேறுபட நிகழ்கின்ற பரதுரியாதீதத்தில் தான் ஆன்மாச் சிவமாம் தன்மையை அடையும்.
**********************************************
பாடல் எண் : 6
பரமாம் ஆதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் ஆதீதம் பயிலப் பயிலப்
பரமாம் ஆதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.
பொழிப்புரை :  `பராவத்தையிலும் அதன் முடிநிலையாகிய அதீதத்தை அடைதல் வேண்டும்` எனக்கூறுதல், சிறிதே எஞ்சி நிற்கும் மலவாசனை நீங்குதற் பொருட்டாம். (வாசனை, `இலய மலவாசனை` என்க.) இனி அந்த அதீதத்தைத் தலைப்பட்ட பின்பும் விடாது தொடர்ந்து அதிற்றானே பழகிப் பழகியிருந்தால்தான், ஆன்மாச் சிவமாம் தன்மையைப் பெறும். ஆகவே, அதில் அவ்வாறு தொடர்ந்து பழகாதவர்கள் எத்துணைச் சாதகங்களைச் செய்தவராயினும் அவர் சிவமாம் தன்மையை அடையார். அத்தன்மையை அடையாமையால், சிறிதளவு எஞ்சி நின்ற பாசமும் நீங்காமல் இருந்துக் கொண்டேயிருக்கும்.
**********************************************
பாடல் எண் : 7
ஆயும்பொய் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப் போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.
பொழிப்புரை :  பல சமயத்தாராலும், `எத்தன்மைத்து` என ஆராயப்படுவதாய், அருவமாய் நிற்கும்மாயை, சிவத்திற்கு வேறும் ஆகாமல், ஒன்றும் ஆகாமல் இடைப்பட்டதாய் இருக்கும். அதனால், வாக்கு மனங்கள் நீங்கிய பின்பும் வாசனையளவாய் நிற்கின்ற அந்த மாயை அறவே நீங்கினால், அறிவு முழுத்தூய்மை அடைந்து, அதனால் சிவானந்த மயமாகிப் பின்பு அந்தச் சிவானந்தத்தால் விழுங்கப்பட்ட பொருளாகிவிடும்.
**********************************************
பாடல் எண் : 8
துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்(கு)
உரிய வினைகள்நின்(று) ஓலமிட் டன்றே.
பொழிப்புரை :  பர துரியமாகிய குதிரைமேல் ஏறிய ஆன்மா, அதனை விடுத்து, அதற்குமேல் உள்ள அதீதமாகிய புலிக்குள் தன்னைப் புகவிடுமாயின், புலியால் கௌவிக் கொள்ளப்பட்ட ஆட்டினை நரிகள் பற்ற மாட்டாது அஞ்சி ஒடிவிடுதல் போல, அந்த ஆன்மாவை மாயா காரியங்களாகிய தத்துவங்கள் அணுகமாட்டாது நீங்கிவிடும். (அஃதாவது, `செயல் இழந்துவிடும்` என்பதாம்) மாயா கருவிகள் நீங்கினமையால் பிராரத்த கன்மம் வந்து பற்றமாட்டாது ஒழியும்.
**********************************************
பாடல் எண் : 9
நின்ற இச் சாக்கரம் நீள்துரி யத்தினில்
மன்றறும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணஞ்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.
பொழிப்புரை :  இங்குச் சொல்லிவாராநின்ற இந்தச் சாக்கிரமுதலிய அவத்தைகளில் துரியத்தை அடைந்த போதிலும் சிவன் அனைத்தும் கடந்த வெற்றவெளியான அதீத நிலையில் இருப்பவன் ஆதலால், அவ்விடத்திலே உயிரைக் கூட இருப்பான். (துரியத்தில் வந்துகூட மாட்டான்.) அவன் உயிரைக் கூடினால்தான் உயிர்க்கு உலக உணர்வு மறையும். அப்பொழுது அது சிவ உணர்வு ஒன்றேயுடையதாய்ச் சிவமாகும். (எனவே `உயிர் அதீத நிலையை அடைதல் வேண்டும்` என்பதாம்.)
**********************************************
பாடல் எண் : 10
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை யீடான மாயை
பொருந்தும் துரியம் புரியில்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதல லாதே.
பொழிப்புரை :  சிவத்திற்கும், ஆன்மாவிற்கும் இடையே நிற்பதாகிய மாயை தனது நிலையினின்று விருத்திப் படுமாயின் ஆணவ இருளில் உள்ள உயிர்கட்கு விளக்குப் போல உதவும். அதனாலேயே மத்தியாலவத்தை நிகழும் துரியத்தில் ஆன்மாப் பாசத்தினின்றும் நீங்காது அழுந்திநிற்கும். (ஆதலின் அஃது ஆன்மா அடைதற்குரிய துரியம் அன்று.) அஃது அடைதற்குரிய துரியம் பரதுரியமே. அதனை அடைந்தால் அது பாசங்கள் நீங்கித் தூயதாம்.
**********************************************
பாடல் எண் : 11
உன்னை யறியா(து) உடலைமுன் நான்என்றாய்
உன்னை யறிந்து துரியத் துறநின்றாய்
தன்னை யறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தனம லன்னென் றறிதியே.
பொழிப்புரை :  மாணவனே, நீ கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் நின்ற பொழுது உன்னையே நீ, `யார்` என்று அறிந்து கொள்ளாது, உடம்பையே, `நான்` என்று சொல்லிக் கொண்டிருந்தாய். பின்பு, நின்மலாவத்தையை அடைந்தபொழுது உன்னை நீ, `சடமாகிய உடம்பின் வேறாகிய சித்துப் பொருள்` என அறிந்து, அதன்கண் துரிய நிலையிலே சிவன் உன்னையே தானாகக் கொண்டு நிற்கும்படி அவனது அருள் வழியில் நின்றாய், எனினும் ஆன்மாத் தன்னையும், தலைவனையும் அறிந்து அவனது அருள் வழியில் நின்ற அளவிலே அதற்குப் பிறவி நீங்கி விடாது. `சிவன் எல்லாப் பொருளிலும் நீக்கமற நிறைந்து நின்றானாயினும், அவனது உண்மை நிலை பிறிதொன்றோடும் கூடாது அனைத்தினும் வேறாய் நிற்கு தூய்மையே` என்பதை அறிந்து, அவனை அந்நிலையிலே சென்று தலைப்படமுயல்.
**********************************************
பாடல் எண் : 12
கருவரம பாகிய காயத் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார்
குருவரம் பெற்(று)அவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகிநின் றாரே.

பொழிப்புரை :  கருவிற்கு உட்படுதலையுடைய உடம்பில் நிகழ்வதாகிய துரியத்தில் நீயும், சிவனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டீர்கள். (அது போதாது; ஏனெனில்,) பிறப்பு இறப்புக்களிற் பட்டு உழல்கின்றவர்கள். ஞான குருவின் அருளைப் பெற்றுச் சிவனும், தாமும் வேறறக் கலந்த பின்பே தாம் சிவனின் வேறாய சீவராய் நில்லாது. சிவமாகி நிற்பர்.
**********************************************
பாடல் எண் : 13
அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணுஅசை விற்பரா தீதம். சுழுத்தி
பணியில் பாதுரி யம்பரம் ஆமே.

பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி யத்தனு மாமே.

பொழிப்புரை :  (`மேலாலவத்தை` என்றும், சகலத்தில் `சுத்தாவத்தை` என்றும் கீழ் உள்ளவைகளை நோக்கிச் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற யோகாவத்தைகள் அது காரணம் பற்றியே `துரியம்` எனப்படும். (துரியம் - மேற்பட்டது) ஆயினும், அதில் சீவத்தன்மை நீங்காமையால் அவை சீவதுரியமேயாம். அவையே இங்கு `அணுவின் துரியம்` என்றும் `அணுவசைவு` என்றும் சொல்லப்படுகின்றன.  சீவ துரியமாகிய யோகாவத்தையில் உள்ள, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்` என்பன தாழ்வுடையனவே என அறியப்பட்டால், அதன் பின்பே பராவத்தை உளதாகும். அந்தப் பராவத்தையே அவத்தைகளில் எல்லாம் மேலான அவத்தை.
**********************************************
பாடல் எண் : 14
பரமாம் நனவின்பின் பாற்சகம் உண்ட
திரமார் கனவு சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் முற்றல் துறவே
தரனாம்சிவதுரி யத்தனும் ஆமே.

பொழிப்புரை :  பராவத்தையில் சாக்கிரம் சீவன் முத்தி அதில் உலக அனுபவம் சிவானுபவமாய் நிகழும், (அதுவே,  `பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம்`l எனக் கூறப்பட்டது.) அந்த அனுபவம் அதிகார முத்தியில் பழக்க வாசனையாய் நிகழும். அதுவே பரசொப்பனம். போகமுத்தியில் அந்த வாசனையும் தாக்கமாட்டாது நீங்கும். அதுவே பரசுழுத்தி. (இதில் சுத்த தத்துவ போகத்தில் இச்சையுண்டாம்) அந்த இச்சையும், அதனால் வரும் அந்தப் போகமும் அடங்கி நிற்றலே `உபசாந்தம்` எனப்படும். அது பரதுரியம். அதை அடைந்தவன் மேல்நிலையை அடைந்தவனாவன். `சிவதுரியம்` எனப்படுகின்ற நின்மலத் துரியத்தை அடைந்தவனும் இந்நிலையை அடைந்தே உயர்வு பெறுதற்குரியன்.
**********************************************
பாடல் எண் : 15
சீவன் துரியம் முதலாகச் சீராக
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்(து)
ஓவும் பரானந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்துநின் றானே.

பொழிப்புரை :  `சிவதுரியம்` எனப்படுவது, யோகாவத்தையில் இமயம் முதலிய எட்டில் ஏழாவதாகிய `தியானம்` என்பது. `சிவ துரியம்` எனப்படுவது, தசகாரியத்துள் ஒன்பதாவதாகிய சிவயோகம். இவ்வொன்பதில் ஆன்மசுத்தி சிவதரிசன சிவயோகங்களில் அடங்கிவிடுதலால், எஞ்சிய எட்டோடு, யோகாவத்தையில் `தியானம் சமாதி` - என்னும் இரண்டைக் கூட்ட, சீவதுரியம் முதலாகச் சிவதுரியம் ஈறாக உள்ள அவத்தைகள் பத்தாம். ஆகவே, இந்தப் பத்தவத்தைகளையும் கடந்து, சிவானந்தந் தருவதாகிய உண்மைச் சுத்தாவத்தை அடைந்தவனே, தான் முன்பு கட்டுண்டிருந்த அனைத்துத் தத்துவங்களினின்றும் நீங்கினவனாவன்.
**********************************************
பாடல் எண் : 16
பரம்சீவன் மேலாம் பரமம் பரத்தின்
பரம்பரன் மேலாம் பரநன வாக
விரிந்த கனாஇடர் வீட்டும் சுழுனை
உரந்தகும் ஆனந்திஆம் உண்மை தானே.

பொழிப்புரை :  `பரம்` என்பது `மேல்` என்னும் பொருளது ஆதலின், `எங்கும் பரன் என்று சொல்லப்படுகின்ற சிவன், மேலானவன்` - என்பது போதரும். இனி, `பரமம்` என்பது பரத்தினும் உயர்ந்த மேன்மையைக் குறிக்கும். ஆகவே, `பரம்பரன்` என்று சொல்லப்படுகின்ற சிவனே மேலான சிவன். அவனைத் தலைப்படும சீவன் முத்திநிலையே பரசாக்கிரம். (அதில் பிராரத்தம் உயிரைத் தாக்காவிடினும் உடலூழாய் வந்து போகும்.) `பர சொப்பனம்` எனப்படுகின்ற அதிகார முத்தியில் பிராரத்துவத் தொடர்பு உண்டாகாது. பரசுழுத்தியாகிய போக முத்தியிலும், பரதுரியமாகிய இலய முத்தியிலும் ஞானம் முற்றி நிற்கும். பரதுரியாதீதமாகிய பரமுத்தியில் சிவானந்தப் பெருக்கு உளதாம். இவையே உண்மைச் சுத்தாவத்தைகளாம்.
**********************************************
பாடல் எண் : 17
சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
பாலாய்ப் பிரமன் அரிஅமர் ஆபதித்
தேவாம் உருத்திரன் ஈசன்ஆம் காணிலே.

பொழிப்புரை :  தத்துவங்களை ஆராயுமிடத்து, எல்லா உயிர்களும் முடிவில் அடையும் இடமாய் உள்ள பரமசிவனும், பராசத்தியும் முதற்கண் முறையே பரநாத மூர்த்தியும் பரவிந்து சத்தியுமாய் நிற்க பின்பு பரவிந்து சத்தியினின்று அபர நாத மூர்த்தியும், அவனிடத்தினின்று அபரவிந்து சத்தியும் தோன்ற, அதன்பின் அபரவிந்து சத்தியினின்று சதாசிவன், மகேசுரன், உரூத்திரன், மால், அயன், என்போர் முறையே ஒருவரினின்று மற்றொருவர் தோன்றுவர்.
**********************************************
பாடல் எண் : 18
கலப்பறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்பறி யார்உடலோடுயிர் தன்னை
அறப்பறிந் திங்கர சாளகி லாதார்
குறிப்பது கோல கடலது வாமே.

பொழிப்புரை :  சிவன் தமது அறிவினுள் அறிவாய்க் கலந்திருத் தலையும், `பூவுலகம் முழுதும் ஒரு காலத்தில் முற்று அழிந்தொழியும்` என்பதையும் அறியாதமடவோர், உடலோடு கலப்பினால் ஒன்றாய் இருக்கின்ற உயிர் பொருளால் வேறாதலை உணர்ந்து உடம்பையே தாமாகப் பற்றி நின்று, அதனால் இவ்வுலகத்திற்றானே அருளரசு ஆளமாட்டுவாரல்லர். அவர் அத்தகைய நிலையை அடைய வேண்டின், அவர்கள் குறிக்கொளத்தக்கது சிவனது தடத்தத் திருமேனிகளை எழுதி வைக்கும் உள்ளமாகிய கிழியேயாம்.
**********************************************
பாடல் எண் : 19
பின்னை யறியும் பெருந்தவத் துண்மைசெய்
தன்னை யறியின் தயாபரன் எம்மிறை
முன்னை யறிவு முடிகின்ற ஞானமும்
என்னை யறியலுற் றின்புற்ற வாறே.

பொழிப்புரை :  சிறு தவங்களையெல்லாம் செய்து அலுத்துவிட்ட பின்பு நல்லறிவு பிறந்து செய்கின்ற பெருந்தவந்தின் வழியாக உயிர்களைப் பராவத்தையில் சேர்க்கின்ற தனது இயல்பை ஒருவன் அறிந்து தன்னை அடைய விரும்பினால் எங்கள் இறைவனாகிய சிவன் உடனே அவன் முன் தோன்றுவான். ஏனெனில் அவன் பெருங்கருணையாளன். அம்முறையில் யான் எனது பழைய சிற்றறிவு முடியும் காலத்தையும் அறிந்தேன் அதனால் சிவனது பேரறிவாலே என்னையும் அறிந்தேன். யான் இது பொழுது இன்புற்றிருக்குமாறு இவ்வாறாம்.
**********************************************
பாடல் எண் : 20
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தன தன்கர ணங்கள்தாம்
தன்னில் மறைந்தன தன்கர ணங்களே.

பொழிப்புரை :  பொன்னால் செய்யப்பட்ட அழகிய அணி கலன்கள் தம்மிடத்துப் பொன் உள்ளதாயினும் அதனை உரைச் செய்யாது மறைத்துத் தமது அழகினையே உணரப் பண்ணி மக்களை மயக்குகின்றது. ஆயினும் அந்த அணிகலன்களின் செயற்கை நலன்களை அழித்துவிட்டால், அணிகலனாய் இருந்த பொருள்கள் அழியாதிருப்பினும் அவை பொன்னாகி விட்ட அதனுள்ளே மறைந்து விடும். அவைபோல, சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற ஆன்மாவைப் பெத்தகாலத்தில் அதனுடைய தனுகரணங்கள் தம்வயப்படுத்தித் தம்மயம் ஆகச்செய்து, ஆன்மாத் தன்னைத் தான் அறியாதபடி மறைத்து அதனைத் தாமென்றே மயங்கிச் செய்துவிடுகின்றன. ஆயினும், ஆன்மாக் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்துவிடுதலால், ஆன்மாவில் வியாப்பியமாய்த் தமக்கெனச் சுதந்திரமின்றி ஆன்மாவின் வழியே செயற்படுகின்ற தனு கரணங்கள் தாம் அழிந்தொழியாது ஆவ்வான்மாவின் வயப்பட்டு முன்போல மருள் வழியில் இயங்காமல், ஆன்மாவைப் போலவே அருள் வழியில் இயங்கும்.
**********************************************
பாடல் எண் : 21
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே.

பொழிப்புரை :  மரத்தால் செய்யப்பட்ட பெரிய மதயானை உருவம் சிற்பியின் கைவண்ணத்தால் மரத்தை உணர ஒட்டாமல் மறைத்து, மக்களை மயக்குகின்றது. ஆயினும் சிற்பியினது வேலைப் பாடுகளை அழித்து விட்டால், அந்த மதயானையாய் இருந்த பொருள் அழியாதிருப்பினும் மரத்தினுள்ளே மறைந்துவிடும். அது போல, பரம்பொருளால் இயங்குகின்ற உலகம், ஆன்மாவின் பெத்த காலத்தில் தானே சுதந்திரமாய் இயங்குவனவாய் அதற்குக் காட்சியளிக்கும். ஆயினும் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்துவிடுவதால், உலகம் சுதந்திரம் அற்றொழியப் பெரும் பொருளின் இயக்குதலே விளங்கி நிற்கும்.
**********************************************
பாடல் எண் : 22
ஆறா றகன்று நமவிட் டறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.

பொழிப்புரை :  பெத்தம், முத்தி இரண்டும் சிவன் செயலே யாகலின் அது பற்றி அவையிரண்டும் முறையே, `ஊனநடனம், ஞான நடனம்` எனப்படும். ஊன நடனத்தில் சிவனது சத்திதிரோதான சத்தியாயும், ஞானநடனத்தில் சிவனது சத்தி அருட்சத்தியாயும் செயற்படும். சிவசத்தி பொருளால் ஒன்றேயாயினும், செயல் பற்றி இவ்வாறு இரண்டாக வகுத்து விளக்கப்படுகின்றது. திரோதான சத்தி மறைத்தலையும், அருட் சத்தி அருளலையும் செய்யும்.

உமாபதி தேவர், திருவைந்தெழுத்தை `நமசிவாய` எனத் தூலமாகக் கொண்டாலும், `சிவாயநம` எனச் சூக்குமமாகக் கொண்டாலும்,
``
ஊன நடனம் ஒருபால்; ஒருபால்ஆம்
ஞானநடம்; தான்நடுவே நாடு
``l
என அருளிச் செய்தார். தான் - சீவன்; அல்லது ஆன்மா. `அது நடுவே உள்ளது` எனக் கூறப்பட்டமையால், யகாரம் பசு வெழுத்தாயிற்று.
`
உண்மை விளக்க` - நூல் திருவைந்தெழுத்தை, `சிவாயநம` எனச் சூக்குமமாக எடுத்துக் கொண்டு,
``
சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்
அவன் எழுத்து ஐந்தின் அடைவாம்
``*
எனக் கூறிற்று. ஆகவே, `சிகாரம் சிவன்; வகாரம் அருட்சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோதான சத்தி, மகாரம் ஆணவ மலம்` என்ற தாயிற்று. மாயை கன்மங்கள் ஆணவ மலம் போல உயிருக்கு இயற்கை யாகாது, திரோதான சத்தியாலே செயற்யைாகக் கூட்டப்பட்டு, ஆணவ மலத்தின் பரிபாகத்திற்குத் தக்கவாறு அந்தத் திரோதான சத்தியாலே செயற்படுத்தப்படுவதால், அவை வேறு நில்லாது, திரோதான சத்தியுள் அடங்குகின்றன. `மாதவச் சிவஞான யோகி கட்கும் இதுவே கருத்து` என்பது அவரது உரைகளால் விளங்கும். இஃது அறியாதார், `மகாரம் மாயையைக் குறிக்கும்` என்பர். `அவ்வாறாயின் மூல மலமாகிய ஆணவத்தைக் குறிப்பது எது` என அவர் நோக்காமை யறிக.
உமாபதி தேவரும் ஆன்மாவை நடுவாக வைத்து, ``திருவெழுத் தஞ்சில் ஆன்மாத், திரோதம், மாசு, அருள், சிவம்``l என முதலில் முன் உள்ள எழுத்து பாச எழுத்து இரண்டையும், பின்பு பின் உள்ள பதியெழுத்து எழுத்து இரண்டையும் குறித்தார். `முன், பின்` என்பவற்றைக் காலம் பற்றிக் கொள்ளாது. இடம் பற்றிக் கொள்க. இவற்றால், `, ` என்பன பாச எழுத்துக் களும், `சி, ` என்பன பதி எழுத்துக்களும் ஆயின. எனவே, முப்பொருள்களும் அஞ்செழுத்தில் அடங்குதலாலும், ``பலகலை ஆகமம், வேதம் யாவையினும் கருத்துப் பதி, பசு, பாசம் தெரித்தலே`` யாகலானும்,
``
அஞ்செழுத்தே ஆகமமும், அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுரா ணம்அனைத்தும்
``8
என உண்மை விளக்கத்திலும்,
``
அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் அஞ்சின்
பொருள்நூல் தெரியப் புகின்
``3
எனத் திருவருட் பயனிலும் கூறப்பட்டன. இவற்றால், `நகார மகாரங்கள் ஊன நடனம்` என்பதும், `சிகாரவகாரங்கள் ஞான நடனம்` என்பதும் விளங்கும்.
கீழாலவத்தை மத்தியாலவத்தை, மேலால் அவத்தைகளில் நிற்போர் தத்துவங்களின் நீங்காமையால் அவர்களில் பற்றுக்களை விட விரும்பாதவர் அஞ்செழுத்து மந்திரத்தைத் தூலமாக வைத்தும், பற்றுக்களை விட விரும்பினோர் அதனைச் சூக்குமமாக வைத்தும் கணித்தற்கு உரியர். அவற்றின் பயனாக ஞான குருவின் உப தேசத்தைப் பெற்றுப் பற்றுக்களை விட்டொழிக்க முயல்கின்றவர்கள் தத்துவங்களாகிய பாசங்கள் நீங்குதற்பொருட்டு அஞ்செழுத்துக்களில் பாச எழுத்துக்கள் இரண்டையும் நீக்கி, மற்றை மூன்றெழுத்தை மட்டுமே கணித்தற்கு உரியர். இதனை, `அதிசூக்கும பஞ்சாக்கரம்` என்பர். இந்நிலையில் பிரணவத்தைச் சேர்த்தல் கூடாது. பிரணவம் இன்றிச் சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களைத் திரும்பத் திரும்பக் கணிக்குங்கால், யகாரம்வகாரத்திற்கும், சிகாரத்திற்கும் இடைப்பட்ட தாகிவிடும். ஆகவே, ஆன்மாவை எவ்வகையிலும் பாசங்கள் பற்றுதற்கு வழியில்லை, யகாரத்தைத் தொடர்ந்து சிகார வகாரங்கள் வர,பின்பு வகரத்தைத் தொடர்ந்து யகாரம் வருதலால், ``அடியேன் நடுவுண் இருவீரும் இருப்பதனால் ``* என்னும் திருவாசகத் தொடர் இதனையே குறிப்பதாகக் கூறுவர்.
சிவஞான போதஒன்பதாம் சூத்திரத்தில் மெய்கண்ட தேவர்.
``
உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதி
``
எனக் கூறி, அதனையடுத்து ``எண்ணும் அஞ்செழுத்தே`` எனக் கூறியவர், அதனை வாளா கூறாது, `விதி எண்ணும் அஞ்செழுத்தே, எனக் கூறியருளினார். வார்த்திகத்திலும்.
``
இவ்விடத்துச் சீபஞ்சாக்கரத்தை
விதிப்படி யுச்சரிக்க
``
என்றார். `பாசம்ஒருவ` என முன்னே கூறினமையால், `விதிப்படி` என்றது, `பாச எழுத்துக்களை நீக்கிப் பிரணவமும் இல்லாமல் உச்சரித்தல் வேண்டும்` என்றதேயாகின்றது. வெளிப்படையாகவே அந்த மூன்றெழுத்து மந்திரத்தை அவர் எடுத்துக் கூறாமைக்குக் காரணம், `அவ்வாறு கூறுதல் மரபன்று` என்பதும், இன்னோரன்னவை யெல்லாம் குருமுகமாகவே அறிதற்குரியன` என்பதுமேயாம். ஆயினும் காலப்போக்கில் அவரது பொருளை உணர்ந்து பயன் பெறு பவர்கள் அருகி மாறுபட்ட கருத்துக்கள் மலிந்து வருதலால், இவ் விடத்து எடுத்துக் காட்ட வேண்டி வருகின்றது. இதுபற்றியே மாதவச் சிவஞான யோகிகள்.
``
இங்ஙனம் ஆசிரியர் மாட்டெறிந்ததூஉம்
உணராதார் ... ... ... ... சித்தாந்த வழக்கொடு
முரணிக் கூறுவர்``8
எனக் கூறினார்.
பஞ்சாக்கரத்தைத் தூலமாகக் கணித்தலை விடுத்துச் சூக்குமமாகக் கொண்டு கணிப்பினும் யகாரம் வகாரத்திற்கும், நகாரத்திற்கும் இடைப்பட்டே நிற்றலால் பாசம் நீங்காதது பற்றி,
``
ஆசில் நவா நாப்பன் அடையாது, அருளினால்
வாசி யிடை நிற்கை வழக்கு`` * *திருவருட்பயன்
89.
என்றார் உமாபதி தேவர். அஞ்செழுத்தில் பாச எழுத்துக்களை நீக்கி உச்சரிக்கின், யகாரம் வகாரதிற்கும் சிகாரத்திற்கும் இடைப்பட்டு நிற்றலை மேற்கூறியவாற்றால் அறிக. இதனையறியாதார், `சிவாய சிவ` என்பதை ஓர் உருவாக வைத்துப் பல உருக்கள் கணிக்க வேண்டும் என்பர். அவ்வாறு கணிப்பின். சில உருக்களில் `சிவா` என்பது `வசி` என இயைந்து அவ்வுருக்கள் வாசியிடை நிற்றலாகிய சாதகத்தப் பயவாமை உணர்க.
சிவஞானபோத ஒன்பதாம் சூத்திரத்தில் சொல்லப்பட்ட சகலத்தில் சுத்த சுழுத்தியில் சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களையே உச்சரித்தல் வேண்டும் எனக் கூறினமையால், `பத்தாம் சூத்திரத்தில் சொல்லப்பட்ட `அவனே தானே ஆகிய. அந்நெறி - ஏகனாகி` ஆன்மாத் தன்னை யிழந்து நிற்பதாகிய சகலத்தில் சுத்த சுழுத்தியில் யகாரத்தையும் நீக்கி, `சிவ` என இரண்டெழுத்தாக உச்சரித்தல் வேண்டும்` என்பது போந்தது. `இது காரண பஞ்சாக்கரம்` எனப்படும். இதனை நாயனார் அடுத்து வரும் தந்திரத்தில் ``சிவ சிவ என்றே தெளிகிலர் ஊமர்``, ``சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்`` என்பன முதலாக அருளிச் செய்வார்.
இங்ஙனமாகவே, சிவஞானபோதப் பதினொன்றாம் சூத்திரத்தில் அரன் கழலின்கீழ் ஆன்மா ஆனந்தத்தில் மூழ்குதலாகிய சகலத்தில் சுத்த துரியாதீதத்தில் அருள் எழுத்தாகிய வகாரமும் நீங்க. சிகாரம் ஒன்றுமே அசபா நலமாய் நிற்கும் என்பதும் பெறப்படும். இந்த ஓரெழுத்து மந்திரத்தை நாயனார் `நாயோட்டு மந்திரம்` என மறைபொருட்கூற்றாக ஓதினார். அந்தமந்திரத்தை மிகையானதாகப் பிற்காலத்தார் கருதிவிட்டனர். நாயின் தன்மை குரைப்பது. நாயின் தன் மையையே, `நாய்` என்றார். `குரைத்தலை ஓட்டுவது` என்றது, `பேச்சை ஒழித்து மௌனத்தை உண்டாக்குவது` என்றதாம். தருமை ஆதீன ஆதி பரமாசாரியராகிய குருஞான சம்பந்தரும்,
``
கற்க இடர்ப்பட்டுமிகக் கற்றஎலாம் கற்றவர்பால் தற்கமிட்டு நாய்போலச் சள்ளெனவோ``1 என, ஞான நெறியில் நில்லாது பேசும் பேச்சுக்களுக்கு நாயின் குரைப்பை உவமை கூறினார். `பேசா அனுபூதி`2 `மோனம் என்பது ஞானவரம்பு3 என்பன போன்றவற்றை நோக்குக. இந்த ஓரெழுத்து மந்திரம், `மாககாரண பஞ்சாக்கரம்` - எனப்படும். மந்திர நூல் வழக்கில், ஓர் எழுத்தான் ஆயதே சிறப்பாக `மந்திரம்` எனப்படும். அந்த மந்திரத்தை நாயனார் தமது மந்திர மாலையில் கூறாது போவாரோ.  ஐந்தெழுத்தாய் இருந்த மந்திரம் பின்பு மூன்றெழுத்தாய்ப் பின்பு இரண்டெழுத்தாய், இறுதியில் ஓரெழுத்தே ஆகிவிடுகின்றது. இது,
``
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
``4
என அருளிச் செய்த அனுபவத்திற்கு ஒத்துள்ளது. இதனை உமாபதி தேவர்,
``
பதிபசு பாச முதிர்அறி வுகளுடன்
ஆறா முன்னர்க் கூறாப், பின்னர்
இருபொருள் நீத்துமற் றொருநால் வகையையும்,
ஈனமில் ஞாதுரு ஞானம் ஞேயம் என்று
இசைய மூன்றாய்ப் பசு பதி என்றவற்று
இரண்டாய், இரண்டும் ஒன்றின்ஒன் றாகத்
திரண்டாம் பயனெனும் திருவருள் தெளியில்
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
என்றிவற் றியற்கை இயம்புதல் தகுமே
``*
எனக் கூறினார்.
இங்ஙனம் கூறிய இதனையே சிவஞான யோகிகள் பரம சித்தாந்தத்தை ஓதியதாக உரைத்தார்.* இங்ஙனம் ஓதப்பட்டதன் பொருளை உணரமாட்டாதவர், பூர்வ பட்சம் எது? என அறிந்து கொள்ளாமல் இதற்கு உரை செய்துள்ளனர். இம்மந்திரத்தின் பொருள் இனிது விளங்குதற் பொருட்டு இத்துணையும் கூற வேண்டியதாயிற்று.
(உரை): தச காரியங்களில் முதல் மூன்றின் முடிவில் உள்ள தத்துவ சுத்தி எய்திய பொழுது அது நிலை பெறுதற்பொருட்டுத் திருவைந்தெழுத்தில் பாச எழுத்தாகிய நமக்கனை நீக்கி - மூன்றெழுத்தாகக் கணித்து, அதனாலே முன்பு தத்துவங்களாகிய சடத்தோடு கூடிச்சடமாய் இருந்த நிலை நீங்கிச் சித்தாகிய ஆன்மாத் தானேயாகி யகாரத்தோடே நின்று, (அஃதாவது நமக்களோடு சேராது நின்று - ஆன்ம ரூபம். ஆன்ம தரிசனம் இரண்டும் இவ்விடத்தே நிகழ்ந்துவிடும் இவையெல்லாம் சகலத்தில் சுத்த சாக்கிரம் சுத்த சொப்பன சுத்த சுழுத்திகளாய்விடும்) பாசங்களினின்று மிக மேன்மையுற்றுப் பின் இறுதியில் உள்ள அருட்சத்தி வழியாக, (இது சகலத்தில் சுத்த துரியம்.) இயல்பாகவே பாசம் அற்று இருக்கின்ற சிவனைப் பெறும் பேற்றை அடை (இது சகத்தில் சுத்த துரியாதீதம்) அப்பொழுது முன்பு இருந்த யகாரம் வகாரத்திலே அடங்கும். பின்பு வகாரமும் சிகாரத்திலே அடங்கிவிடும் அதன் பிறகு உனக்குக் கிடைப்பது பரானந்தந்தான். (இதற்குமேல்) அடையத்தக்கது எதுவும் இல்லை என்பதாம்.
**********************************************
பாடல் எண் : 23
துரியத்துல் ஓரைந்தும் சொல்அகா ராதி
விரியப் பரையின் மிகுநாதம் மந்தம்
புரியப் பரையின் பராவத்தா போதம்
திரியப் பரமாமாம் துரியம் தெரியவே.
பொழிப்புரை :  சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தை ஐந்திலும் வாக்குக்கண் அகாரம் முதலிய ஐந்து அக்கரங்களாய், (, , , விந்து, நாதம் - என்பனவாய்)த் தூலமாய் நிகழும். (எனவே, அவ்விடத்து உலக வாசனை இருக்கவே செய்யும் என்பதாம்.) நின்மலாவத்தைக்கு மேலான உண்மைச் சுத்தாவத்தையில் அவ்வாக்குக்கள் சூக்குமமாய் நிகழும். (அதனால், உலக வாசனை தோன்றாவிடினும், `யான்` எனது என்னும் உணர்வினால் ஞாதுரு ஞான ஞேய வேற்றுமை நிகழவே செய்யும்.) அந்த வேற்றுமையும் அறுவது பரதுரியத்திலாம். (அவ்விடத்தில் ஆன்மா அருள்மயமாய் நிற்கும்.) அதன் பின்பு மேலானதாய அதீதம் தோன்றும். (அதில் ஆன்மா ஆனந்தமயமாய் இருக்கும்.)
**********************************************
பாடல் எண் : 24
ஐந்தும் சகலத்(து) அருளால் புரிவுற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி யிருள்போல ஐம்மலம் மாறுமே.
பொழிப்புரை :  சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளையும் சகலத்தில் மாயா கருவிகளால் அடையாது, திருவருளால் அடைந்து, (எனவே, `மேலாலவத்தையையும் கடந்து நின்மலாவத்தையை அடைந்து` என்றதாம்.) சகலத்திற் சுத்தமாகிய அந்த அவத்தைகளில் மேலே பாய்ந்தும், கீழே வீழ்ந்தும் பந்துபோல அலைகின்ற அலைவினால் அவ்வலைவு நீங்கப் பெறுகின்ற உண்மைச் சுத்தமாகிய பராவத்தையில் நாட்டம் உண்டாகுமானால், அந்த நாட்டத்தின் முன் ஐந்து மலங்களும் அந்திக் காலத்தில் விளக்கின்முன் இருள் நில்லாது நீங்குதல் போல நில்லாது நீங்கும்.
**********************************************
பாடல் எண் : 25
ஐயைந்து மட்டுப் பகுதியும் மாயையாம்
பொய்கண்ட மாயேயந் தானும் புருடன்கண்(டு)
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை யுள்உறல் சுத்தமே.
பொழிப்புரை :  `இருபத்தைந்து` எனத்தொகை பெற்று நிற்கின்ற தத்துவங்களாய் உள்ள மூலப் பிரகிருதியில் இயல்பையும், `மாயேயம்` எனப்படுகின்ற வித்தியா தத்துவங்களாய் உள்ள அசுத்தமாயையின் இயல்பையும் சாதகன் உள்ளவாறு உணர்ந்து தத்துவ ஞானியாய், எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றாகியும், பொருள் தன்மையால் வேறாகியும் நிற்கின்ற சிவமாகிப் பிறவியினின்றும் நீங்கி நிற்கும் பராவத்தையை அடைதலே உண்மைச் சுத்தாவத்தையாகும்.
**********************************************
பாடல் எண் : 26
நின்றான் அருளும் பரமும்முந் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத் தூங்கிற்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.

பொழிப்புரை :  பரம்பொருளை அறிய அவாவிநிற்கின்ற சுத்தான் மாவும், அதற்கு அதனை அறிதற்குத் துணைபுரிந்து அதன் அறிவுக்கு அறிவாய் நிற்கின்ற திருவருளும், அவ்வருளின் துணையால் அந்த ஆன்மாவால் அறியப்படுகின்ற பரம் பொருளும் ஆகிய மூன்று உயர் பொருள்களும், ஆன்மாவினிடத்து மூவகை உடம்புகளாய் நிற்கின்ற தத்துவங்களும், அவற்றைச் செலுத்துகின்ற திரோதான சத்தியும் நீங்கினவிடத்து ஒன்றாய்ப் பொருந்திவிடும். அஃதன்றியும், சிவன் பின்னர் அந்த ஆன்மாவைவிட்டுப் பிரியாத நிலைமையும் உண்டாகும்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!