http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday, 1 May 2013

திருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 25. மோன சமாதி - பாடல்கள்:20.

,
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:16: ஆகாசப்பேறு...................பாடல்கள்:010 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:17: ஞானோதயம்..................பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:18: சத்தியஞானானந்தம்...பாடல்கள்:009 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:19: சொரூப உதயம்...........பாடல்கள்: 011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:20: ஊழ்................................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:21: சிவரூபம்......................பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:22: சிவதரிசனம்................பாடல்கள்:008 

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:23: முத்திபேதம் கருமநிருவாணம்.பாடல்கள்:002
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:24: சூனிய சம்பாடனை..........பாடல்கள்: 067
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:25: மோன சமாதி..................பாடல்கள்: 020
*************************************************
தந்திரம் 9- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -025 
கூடுதல் பாடல்கள்  .........................................(273+020=293)

*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி பாடல்கள்: 20
பாடல் எண் : 1
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில் அஃ(து) ஆலயம் ஆமே.

பொழிப்புரை :  புற உலகத்தை நோக்குமிடத்து நிலமும், வானமும் ஆகிய இரண்டிடங்களில் நிலத்தில் அதனைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களும், நிலத்தைத் தாங்குகின்ற எட்டு உயர் மலைகளுமாகியும், வானத்தில் நெருப்பு மயமாய் உள்ள ஞாயிறும், பிற மீன்களும், மேகமும், காற்றும் ஆகியும் வியப்பூட்டுவதாய் என்றும் அழியாது நிலைத்திருப்பது போலக் காணப்படுகின்றது. இப்படியிருத்தலைக் கண்டு இந்த மண்ணுலகத்தைப் பொருளாகக் கருதி இல்லை நீடு வாழ நினைத்தால், உண்மையில் இதன் தன்மையோ, இவ்விரிவுகள் எல்லாம் ஒன்றும் இன்றி அடங்கி ஒடுங்கிப் போவதாய் உள்ளது.
*************************************************
பாடல் எண் : 2
ஆலிங் கனம்செய்(து) அகம்சுடச் சூலத்துச்
சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள்
மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.

பொழிப்புரை :  உலகத்தில் ஒருவனும், ஒருத்தியும் ஒருவரை ஒருவர் இறுகத் தழுவுமாற்றால் `அவளது வயிற்றிற்றானே அங்குள்ள தீயால் வெந்து உருவாகி நிலைப்பதாகிய மண் பாண்டத்தைக் கருவிலே அமைத்து, அதற்கு எந்தத் தன்னுரிமையும் இல்லாமற் செய்து விடுகின்றார்கள். பின்பு அது வெளியில் வந்த பிறகு அதற்கு வளர்ச்சி முறை அமைகின்றது. அப்பொழுது கிணற்றுப் பறவைகள் போல் வெளியுலகைப் பற்றி யாதும் அறியாத மக்கள் அந்தப் பாண்டத்திற்கு அமைத்து வைக்கும் நெறி, முன்பே பலமுறை அமைந்துகிடந்த மயக்க நெறியே யன்றிப் புதிய தெளிவு நெறி யாதுமன்று.
*************************************************
பாடல் எண் : 3
நின்றார் இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச்
சென்றார்தம் சித்தமே மோன சமாதியாம்
மன்றேயும் அங்கே மறைபொருள் ஒன்றுண்டு
சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.

பொழிப்புரை :   உலகில் பலர் மறைகின்ற காலத்தில், ``நின்றான்; இருந்தான்; கிடந்தான்; தன் கேள் அலறச் சென்றான்`` என்னும் சொல் நிகழும்படியாக, காளையராய்ப்பின் மூத்து ஒடுங்கிப் பின் பிணியுற்று கிடந்தே மறைகின்றனர். அவ்வாறின்றி, ஊர்ப் பயணம் புறப்படுவது போல இவ்வுலகை விட்டு நல்ல உணர்வோடு மறைகின்றவர்களது உணர்வு உற்றிருந்த நிலைமையே `மோன சமாதி` எனப்படுகின்றது. அந்த நிலை பலரும் சென்று அடையத்தக்க மன்றம் போன்றதுதான். மன்றம் ஆயினும் அங்கு மறைந்து நிற்கும் பொருள். அஃதாவது, அறிவினுள் அறிவாய் நிற்கும் பொருள் ஒன்று உண்டு. அதை அடைந்தவர் அடைந்த முறையே முறை. `பிற எல்லாம் முறையல்ல` என்பதாம்.
*************************************************
பாடல் எண் : 4
காட்டும் குறியும் கடந்தஅக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடி னல்லதை
யாட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.

பொழிப்புரை :   காட்டு - எடுத்துக்காட்டு. குறி - ஏது. நேரே காண வாராத பொருளை அதனை விட்டு நீங்காததாய்க் காணப்படும் ஏதுவாலும், அதனோடொத்த உவமத்தாலும் கருதியுணரலாம். ``ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் - சோதிக்க வேண்டா`` என்று அருளிச் செய்தபடி, முன் மந்திரத்தில் ``மறைபொருள்`` எனப்பட்ட அந்த மெய்ப்பொருளை விட்டு நீங்காது அதனை அறிவிக்கும் ஏதுவாய் நமக்குக் காணப்படுவதும் ஒன்றில்லை. இனி, தனக்குவமை யில்லாதான்`` என்றபடி, அப்பொருளோடு ஒத்ததாய், அதற்கு உவமையாவதும் ஒன்றில்லை. அது பற்றி அப்பொருளை, ``காட்டும் குறியும் கடந்த அக்காரணம்`` என்றார். அப்பொருளே எல்லா வற்றிற்கும் முதலாய் நிற்றலின், ``காரணம்`` எனப்பட்டது. `காரணம், முதல்` என்பன ஒரு பொருட் சொற்கள். இங்ஙனம் காட்சி கருதல்கட்கு எய்தாத அப்பொருளை உணர்த்துவன உரைத்திட்சிகளேயாம். ஆயினும் அவ்வுரைப் பொருள்களை அனுபவமாகப் பயிலாது, உரைகளை ஏட்டின் புறத்திலே எழுதி வைத்தால், அதனால் என்ன பயன் விளையும்? ஒரு பயனும் விளையாது. இனி அப்பொருளை அனுபவமாகப் பற்ற அதனோடு சேர்ப்பிக்கின்றவர் சிவ குருவே. அவர் சேர்ப்பித்தால் மேற்குறித்த உரைப் பொருள்கள் எல்லாம் அனுபவமாகப் பயன்படும். இல்லாவிடில் ஏட்டில் எழுதி வைத்தன எல்லாம் ஆட்டின் கழுத்தில் மடிக் காம்புபோல்வன தூங்குகின்ற அத்தன்மையனவேயாம்.
*************************************************
பாடல் எண் : 5
மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன்
பிறப்பினை நீக்கிய பேரரு ளாளன்
சிறப்புடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்(து) உறங்கிடுந் தானே.

பொழிப்புரை :  தன்னை மறப்பதையே தனது தொழிலாகக் கொண்ட, வஞ்சக நாட்டில் வாழும் ஒருவன் (பெத்தான்மா) அம்மறதியால் அடைவது பிறவித் துன்பமே. அத்துன்பத்தை, அவன் தன்னை என்றும் மறவா நிலையை அடைவிக்கும் முகத்தால் நீங்கியருளிய பெருங்கருணையாளன், எவ்வாற்றானும் பிறப்பை எய்தாத சிறப்புடையவன். (சிவன்) அவன், பிறவித் துன்பத்தின் நீங்கிய அவன் (முத்தான்மா) முன்போலத் தன்னை மறப்பதாகிய அந்த உறக்கம் அல்லாத வேறு உறக்க இன்பத்தில் இருக்கும்பொழுது, தானும் தன் தேவியுடன் அந்த உறக்கத்தில் பங்கு பற்றியிருப்பான்.
*************************************************
பாடல் எண் : 6
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரைஇல் அனுபூ திகத்தில்உள் ளானே.

பொழிப்புரை :   சிவன், `கேவல துரியம், சகல துரியம், யோக துரியம்` என்னும் இம்மூன்று துரியங்களையும் கடந்து நிற்கும் ஒளியாய் உள்ளவர். (இத்துரியங்கள் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன. இம்மூன்றையும் கடந்தது அரிய துரியம். அது நின்மல துரியம். (இதுவும் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டது.) அதன்கண் உள்ள மூன்றாவன, ஞாதிரு, ஞானம், ஞேயம் (அறிபவன் அறிவு, அறியப்படும் பொருள்.) `இவை தோன்றி நிற்றல் விரிவு` எனவும், தோன்றாது மறைதல் குவிவு` எனவும் உணர்க. துரிய நிலையில் விரிவும், அதனையும் கடந்த அதீத நிலையில் குவிவும் உண்டாகும். ஆகவே, `விரிவை விழுங்கிக் குவிவை உமிழ்ந்தது` என நிரல் நிறையாகக் கொள்க. குவிந்த நிலையே பேசா அனுபூதி, அல்லது, மோன சமாதி ஆதலின், ``உரைஇல் அனுபூதிகத்து உள்ளான்`` என்றார். `சோதி, விழுங்கி, உமிழ்ந்து உள்ளான்` என முடிக்க. ``மீது`` என்பது ஏழன் உருபாயும், `மேல்` என்னும் பொருட்டாயும் நின்றது. ``ஆய்`` என்னும் வினையெச்சம், ``விரிவு`` என்னும் தொழிற்பெயர் கொண்டது.
*************************************************
பாடல் எண் : 7
உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் தானே.

பொழிப்புரை :    (இம்மந்திரம் சிவனது தனிச் சிறப்பான இயல்புகளையே விரிக்கின்றது.)
குறிப்புரை :  உரு இலி - தன் இயல்பில் உருவம் இல்லாதவன். ஈன் இலி - பிறர் பொருட்டாக உருவம் கொள்ளுமிடத்தும் அவ்வுருவில் புலால் இல்லாதவன்; (`மாயா சரீரியல்லன்; சத்தி சரீரி` என்றபடி. ``அரிதரு கண்ணியாளை ஒருபாகமாக அருள் காரணத்தின் வருவார்`` என்னும் திருமுறையையும், காயமோ மாயையன்று; காண்பது சத்தி தன்னால்``l சாத்திரத்தையும் ஊன்றியுணர்தல் வேண்டும்.)  ஊனம் - குறை. தனக்கு இயல்பாய் உள்ள ஆற்றல் குறைவு படுதற்குரிய காரணம். அது பாசம். அதனை இயல்பாகவே இல்லாதவன். பாசங்கள் பல ஆதலின், `அவற்றுள் ஒன்றும் இல்லாதவன்` என்க. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.  திருஇலி - திருவை இல்லாளாக உடையவன். திரு - அருள். இல்லாள் - தேவி.  ``தீதிலி`` என்றதே பற்றி, `நன்றிலி` என்பதும் கொண்டு, `உலகில் வரும் தீமை நன்மைகளில் ஒன்றினாலும் தாக்குண்ணாதவன்` என்க.  மருவு இலி - புதிதாக வந்து பொருந்துதல் இன்றி, அனாதியே அத்துவிதமாய்க் கலந்து நிற்பவன். அத்தகையோனைப் ``புகுந்தான்`` என்றது, புதியோன்போல விளங்கி நின்றமை பற்றி, ``மனம்`` என்றது அறிவை.  ஏனைய வெளி. பல பெயர்களும் ஒரு பொருள் மேலவாய், ``வந்து என் உளம் புகுந்தான்`` என்பதனோடு முடிக்க.  இதனால், `எத்துணையும் அரியன் மோன சமாதியில் எளியனாய் நிற்றல் உணர்த்தப்பட்டது.
*************************************************
பாடல் எண் : 8
கண்டறி வார் இல்லைக் க யத்தின் நந்தியை
எண்டிசை யோரும் `இறைவன்`என் றேத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம்
தொண்டர் முகந்த துறைஅறி யோமே.

பொழிப்புரை :   சிவபெருமானை அறிஞர் பலரும் `முதற் கடவுள்` என்று உணர்ந்து போற்றுகின்றனர். ஆயினும் அவன் அவரவர் உடலிற்குள்ளேயிருந்து அருள் புரிதலைப் பலர் அறிந்திலர், (புறத்திலேதான் வைத்துப் போற்றுகின்றனர் என்றபடி) ஆகவே, அதனை அறிந்த ஒரு சிலரே அவனுடைய மெய்த்தொண்டர் ஆகின்றனர். அவர்கள் உலகங்களைக் கடந்து ``கரையிலாக் கருணை மாகடலாயும்`` அதனானே கரையிலா இன்ப மாகடலாயும் உள்ள சிவனிடத்தில் அந்த ஆனந்தத்தைத் தம்மால் ஆமளவும் முகந்து உண்கின்ற துறையை நாமெல்லாம் அறியாதவர்களாகவே இருக்கின்றோம்.
*************************************************
பாடல் எண் : 9
தற்பர மல்லன் சதாசிவன் றானல்லன்
நிட்கள மல்லன் சகள நிலையல்லன்
அற்புத மாகி அனுபவக் காமம்போல்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :    (இம்மந்திரத்திற்கு முன் மந்திரத்திற் போந்த, ``நந்தி`` என்பதை எழுவாயாக வருவிக்க.)  சிவன், மோன சமாதியை அடைந்தவர்கட்கு, அதற்கு முன் பெல்லாம் அவர்கள் பாவித்த பாவனைகளில் தோன்றியது போலத் தோன்றாமல், அவர்களது பாவனைகளில் ஒன்றற்கும் உட்படாத வேறோர் அதிசயப் பொருளாய், அநுபவப் பொருளாய் விளங்கி நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 10
முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தினிற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்தன் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தினைச் சொல்லெனில் சொல்லுமா றெங்ஙஙே.

பொழிப்புரை :   இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை :  பின்னிரண்டடிகளை முதற்கண் கூட்டி, ஈற்றில் தொக்கு நின்ற `அச்சுகம், மகள் தன் மணாளனோடு ஆடிக் காணத்தக்கதே` என்னும் இசையெச்சத்தை விரித்து, `ஆனந்தம் சுகத்தில் கண்கொண்டு காண்பதே` என மாற்றியுரைத்து முடிக்க. முதல் அடி, இடைப்பிற வரலாய் வந்தது. இஃது எடுத்துக்காட்டுவமை.  காண்பதே - காணப்படுவதே. ஆனந்தம், ஏற்புழிக் கோடலால் இங்குச் சிவானந்தமே யாதல் தெளிவு. முகத்தினிற் கண்ணை `ஊனக் கண்` என்றும், அகத்தினிற் கண்ணை, `ஞானக் கண்` என்றும் வழங்குப. `தசையைக் குறிப்பதாகிய `` என்னும் பெயர், புணர்ச்சிக்கண் னகரச் சாரியை பெற்று, ஊன என வரும்` என்பது தொல்காப்பியம். பிற்காலத்தி அஃது, `ஊன்` என னகர ஈறேயாய்ச் சில இடங்களில் அகரச் சாரியை பெற்று வருவதாயிற்று. அகக் கண்ணால் காண வேண்டுவதை முகக் கண்ணால் காண முயலுதலும், அகக்கண்ணிற்கு அஃது அகப்படாமை பற்றி, `அஃது இல்லை` என முரணி நிற்றலும் உடைமை பற்றி அத்தன்மையுடையாரை ``மூடர்காள்`` என விளித்தருளினால். இம்மந்திரத்துட் கூறப் பட்ட பொருளையே திருவுந்தியார்,
``இங்ஙன் இருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்?
அங்ஙனம் இருந்ததென் றுந்தீபற;
அறியும் அறிவதன் றுந்தீபற`` என்றும், திருக்களிற்றுப்படியார்,
``அன்று முதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதில்லை - இன்றிதனை,
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்?
அவ்வா றிருந்த தது``  என்றும் கூறின.
இதனால், சிவானந்த அனுபவம் மோன (மௌன) சமாதி நிலையேயன்றி, மனோ வாக்குக்களின் செயற்பாட்டு நிலையன்று` என்பது வலியுறுத்திக் கூறப்பட்டது.
*************************************************
பாடல் எண் : 11
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேரபர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும்அவ் வாறே.

பொழிப்புரை :   செப்பு பராபரம் - குரு மொழியும், வேதாகமங்களும் சொல்லுகின்ற மெய்ப்பொருள். `பராற் பரம்` என்பது, `பராபரம்` என மருவிற்று. `மேலானதற்கும் மேலானது` என்பது அதன் பொருள்.
*************************************************
பாடல் எண் : 12
கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்டான் நிரம்பி மடவிய ளானால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.

பொழிப்புரை :    எட்டி மரத்தின் பழம் பார்ப்பவர் கண்கட்கு மிக அழகிதாய்த் தோன்றும். ஆயினும் அதனைத் தின்றாலோ, சுவை கைப்பாதலுடன், தின்றவரையும் கொல்லும் தன்மையுடையது. (அதனால், அறிவுடையோர் ஒருபோதும் அப்பழத்தைத் தின்னார்.) இனிப் பெண்ணொருத்தி பெண்மை நிரம்பி, `பெண்டு` என்பதற்குத் தகுதியடைந்த பின்பே அவளைக் கொண்டவன் அவளோடு தனிமையிற் பழகி, அவளுடைய குணங்கள் பலவற்றையும் உள்ளவாறு உணர்ந்து அவளது குணங்கட்கு ஏற்ப ஒழுகி இன்புறுத்துவான். (அவள் பெண்மை நிரம்பாதபொழுது கொண்டவன் அவ்வாறு செய்யான்.)
*************************************************
பாடல் எண் : 13
நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தி னாலே புணர்ந்துகொண் டேனே.

பொழிப்புரை :   சிவன் நடுத்தெருவிலே வெளிப்படையாகத்தான் இருக்கின்றான். (ஆயினும், இருள் மூடியிருப்பதால் அவனைக் காண இயலவில்லை.) பின்பு அந்த நடுத் தெருவின் முதலில் எரிகின்ற ஒரு விளக்கை எனது அறிவுக் கூர்மையாற் கண்டு பற்றிச் சென்றேன்; சிவனைக் கண்டு கொண்டேன். அப்பொழுது மேற்குறித்த அந்த விளக்கின்றிச் செய்யும் சந்தியானுட்டானங்களும், அவ்வனுட்டானத்தில் செய்யப்படும் தியானங்களும் என்னையறியாமலேயே நீங்கிவிட்டன.
*************************************************
பாடல் எண் : 14
விதறு படாவண்ணம் வேறிருந் தாயந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

பொழிப்புரை :   விதறு படுதல் - சோர்வு உண்டாதல். `வேறு ஆய்ந்து, இருந்து ஆய்ந்து` எனத் தனித்தனி இயையும். வேறு - முன் மந்திரத்திற்கூறிய அதற்கு வேறாக. இருந்து - மனம் ஒதுங்கியிருந்து. பதறு படுதல் - பதற்றம் உண்டாதல். ``பதறு படாதே`` என்றதும் ``இருந்து`` என்றதை வலியுறுத்தியதேயாம். மறை - மந்திரம். ``பழ மறை`` என்றது, `முதல் மந்திரம்` என்றபடி. அது திருவைந்தெழுத்தே.
*************************************************
பாடல் எண் : 15
வாடா மலர்புணை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று
நாடா அமுதுற நாடார் அமுதமே.

பொழிப்புரை :   தேவர்கள் இருவினைகளும் நல்வினையால் விளைந்த இன்பத்திலே மூழ்கிக் கிடத்தலால் அவர்கள் சிவனது திருவடியின்பத்தை நாடுதல் இல்லை. அவ்வாறே பெருமை நிறைந்த உள்ளக் கமலத்தில் ஒளிரும் ஒளி விளக்காகிய சிவனை அடைந்து, அவன் அருளால் தானே விளையும் அமுதத்தை உண்ணவும் அவர்கள் விரும்புதல் இல்லை. (ஆயினும் தாங்கள் அமுதத்தை உண்டு வாழ்வதாகவே அவர்கள் கருதுகின்றார்கள்.) அவர்கள் உண்ணும் அமுதம் அமுதமாகமோ? (ஆகாது.)
*************************************************
பாடல் எண் : 16
அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறு சமைந்தாரக் காணின்
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.

பொழிப்புரை :   காமக் கலவிக்கு உரியராய் அமைந்த இருவர் (ஒருவனும் ஒருத்தியும்) அது பற்றித் தம்முட் குறிப்புச் சொற்களால் உரையாடுதலை எதிர்பாராத வகையில் கேள்வியளவிற் கேட்டாலும் அவரோடு ஒத்த பருவத்தினர்க்கு அடங்கியிருந்த காமக்குறிப்புச் சடக்கென அவர் உள்ளத்தில் எழுந்து அவரைத் தன் வயப்படுத்துதல் போல, மோன சமாதிக்கு உரியராய் உலகரோடு சேராது தனித் திருக்கும் ஞானியரை எதிர்பாராத வகையில் கண்ணாற் கண்டாலும் அவரோடு ஒத்த ஞானியர்க்கு, அடங்கியிருந்த மோனசமாதி அப்பொழுதே சடக்கென மிக்கெழுந்து  அவரைத் தன்வயப்படுத்தும்.
*************************************************
பாடல் எண் : 17
தானும் அழிந்து தனமும் அழிந்து
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்தபின்
நானும் அழிந்தமை நானறி யேனே.

பொழிப்புரை :    நான் மோன சமாதியில் மூழ்கிவிட்டபொழுது, எனக்கு அந்த நிலையை வருவித்த குருவும் தோன்றவில்லை. அவர் அளித்தருளிய செல்வமாகிய ஞானமும் தோன்றவில்லை. அவரால் தூய்மை செய்யப்பட்ட உடம்பும் தோன்றவில்லை. அந்த உடம்பை ஆட்டிப் படைத்த உயிரும் தோன்றவில்லை. அந்த உடம்போடு கூடி நான் இருந்த இடமும் தோன்றவில்லை. உடம்பிற்கு உள்ளும், வெளியுமாய் அலைந்து கொண்டிருந்த மனமும் தோன்றவில்லை. அந்த மனத்திற்குமேல் அதன் செயலை ஆராய்ந்து நின்ற அகங்காரம் புத்தி சித்தங்களும் தோன்றவில்லை. கடைசியாக, `நான், நான்` என்று என்னால் `சொல்லப்பட்டும் உணரப்பட்டும் வந்த அந்த ஆன்மாவும் தோன்றவில்லை. இவையனைத்தும் தோன்றாமல் எப்படி எங்கே மறைந்துவிட்டன என்பது தனக்குத் தெரியவில்லை.
*************************************************
பாடல் எண் : 18
நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல்
பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல்
சற்றியல் ஞானம்தந்(து) ஆனந்தம் தங்கவே
உற்ற பிறப்பற்(று) ஒளிர்ஞான நிட்டையே.

பொழிப்புரை :    (`இம்மந்திரம் அதிகப்படியாக உள்ளது` எனப் பதிப்புக்களில் குறிக்கப்பட்ட போதிலும் இங்கு இருத்தற்குரியதே.)  மோன சமாதியை அடைந்தோர் பின்பு உலகத்தில் ஒன்றோடொன்று மாறுபட்ட செயல்களைச் செய்தபோதிலும் திருவருள் உணர்வு சலியாது நிற்றலால் சிவஞானம் திரிபெய்தல் இன்மையால் சிவானந்தானுபவமும் குறையாது. அவர்கட்கு இனிப் பிறப்பும் இறப்பும் இல்லை இஃதே நிருவிகற்ப சமாதியாகிய நிட்டை நிலையாம்.
*************************************************
பாடல் எண் : 19
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல்மனம் உற்றுநின் றேனே.

பொழிப்புரை :   `கேவலம் சகலம்` என்னும் இரு நிலைகளையும் கடந்து சுத்த நிலையை எய்தி, அதில் மேற்பொருள் மேற்பொருளேயாயும், கீழ்ப்பொருள் கீழ்ப்பொருளேயாயும் விளங்க, அந்த மேற் பொருளுக்குள்ளே அடங்கியதனால், இடையிட்ட முன் மந்திரத்திற் கூறியபடி அனைத்தும் திருவருளால், தோன்றாது மறைவதாகிய சிவனது திருவடி நிழலில், சிறிதும் நகர்ந்து அப்பாற் செல்லாத கல்போன்ற உணர்வை நான் இப்பொழுது பொருந்தி நிற்கின்றேன்.
*************************************************
பாடல் எண் : 20
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.

பொழிப்புரை :   நான் வெளியே எங்கெங்கு ஓடி ஓடி அலைந்ததை விட்டு, எங்கும் செல்லாது என்னளவுக்கு நின்று, என்னிடத்திலே என் அறிவை ஒன்ற வைத்து என்னுள் தானே நோக்கினேன். அப்பொழுது பரம்பொருள் காட்சிப்பட்டு பின் அதனை அடைந்து இன்புறும் வழியும் தோன்றிற்று. அவ்வழியாவது என் அறிவுக்கறிவாய் இருந்து பெத்தம், முத்தி இரண்டிலும் அறிவித்து வரும் திருவருளை அறிவாற் பற்றுதல். ஆயினும் இவைகளை நான் உணர்தற்கு எனக்குப் பல ஊழி சென்று விட்டன.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!