http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Friday, 3 May 2013

திருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 28. தோத்திரம் - பாடல்கள்: 23-46. பகுதி-I

,
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:16: ஆகாசப்பேறு...................பாடல்கள்:010 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:17: ஞானோதயம்..................பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:18: சத்தியஞானானந்தம்...பாடல்கள்:009   
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:19: சொரூப உதயம்...........பாடல்கள்: 011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:20: ஊழ்................................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:21: சிவரூபம்......................பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:22: சிவதரிசனம்................பாடல்கள்:008 

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:23: முத்திபேதம் கருமநிருவாணம்.பாடல்கள்:002

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:24: சூனிய சம்பாடனை..........பாடல்கள்: 067

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:25: மோன சமாதி..................பாடல்கள்: 020

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:26: வரையுரை மாட்சி...........பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:27: அணைந்தோர் தன்மை.....பாடல்கள்: 022
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:28: தோத்திரம்.....................பாடல்கள்: 046
*************************************************
தந்திரம் 9- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -028 
கூடுதல் பாடல்கள்  .........................................(318+046=364)

*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம் -பாடல்கள்:23-46: பகுதி-II
பாடல் எண் : 23
ஆதிப் பிரான்நம் பிரான் இவ்வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத் தப்பும் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.

பொழிப்புரை : அனைத்துலகங்களும் ஒடுங்கிய பின்னும் தான் ஒடுங்காது, ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றுதற்கு முதல்வனாய் உள்ளவன் எவனோ அவனே நமக்குப் பெருமான். அவன், விரிந்த இடத்தையுடைய இந்த உலகத்திற்கு விளக்காய் உள்ள `கதிர், மதி, தீ` என்னும் மூன்றிற்கும் ஒளியைத் தரும் பேரொளிப் பெருமான்; முன் மந்திரத்திற் கூறியவாறு விசுவ ரூபியாய் நிற்றலேயன்றி, விசுவாதி கனாய், அனைத்துலகங்களையும் கடந்து அவற்றிற்குமேலும், கீழும் இருக்கின்றான். இனி மேற்கூறியவாறு அவற்றினுள்ளும் விசுவ ரூபியாயும் இருக்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 24
அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன்
பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன்
கண்டர் கடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.

பொழிப்புரை : அண்டங்கள் அனைத்தையும் கடந்து எல்லையற்று விளங்கும் அகண்டப் பொருளாய் இருப்பினும் பிறவாய் பிறவியாகிய திருமேனிகள் பலவற்றைக் கொண்டு கண்டப் பொருளாயும் விளங்குகின்ற சிவனது, தீயோர் அணுகாத திருவடிகளைக் காணுந் தோறும் அவன் அடியார்கள் சுத்தாவத்தையில் அழுந்துகின்றார்கள்.
*************************************************
பாடல் எண் : 25
உலவுசெய் யோக்கப் பெருங்கடல் சூழ்ந்த
நிலமுழு தெல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழு தெல்லாம் படைத்தனன் முன்னே
புலம்உழு பொன்னிற மாகிநின் றானே.

பொழிப்புரை : சீவன் ஓவாது வீசுகின்ற அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் முழுதும் நிறைந்து நிற்கின்றான். நின்று, இதன்கண் உளவாகின்ற அனைத்துப் பயன்களையும் தோற்று -விக்கின்றான். இவையல்லாமலும் உயிர்களின் பட்பொறி சென்று பற்றும்படி பொன்னார் மேனியாய் முன் வந்து காட்சியும் தருகின்றான்.
*************************************************
பாடல் எண் : 26
பராபர னாகிப்பல் லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் வகலிடம் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே.

பொழிப்புரை :  சிவன், மேலான பொருள்கட்கெல்லாம் மேலான பெரும்பொருளாய் நிற்பினும் ஊழிகள் தோறும் அவற்றின் தொடக்க மாயும், முடிவாயும் நிற்கின்ற அளவினனும் ஆய், நாம் கண்டும், கேட்டும் உணர்கின்ற அனைத்துலகங்களையும் நிலம் போலத்தாங்கி நிற்கும் தன்மையுடையனாதலை உலகர் உணர்தல் இல்லை. ஆயினும், அவன் அதனால் கீழ்மை ஒன்றும் இலனாய், எல்லாப் பொருள்களிலும் நிறைந்து அவற்றை இயக்கியே நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 27
போற்றும் பெருந்தெய்வம் தானே பிறிதில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தான்என் றதுபெருந் தெய்வம்
காற்றது ஈசன் கலந்துநின் றானே.

பொழிப்புரை : பொருள்களும், சொற்களும், சொற்கள் ஒடுங்குகின்ற இடமும் தனக்கு வேறாயினும் அவை தனக்கு உடலாய் நிற்க, அவற்றிற்கு உயிராய் நிற்பது எதுவோ, அது பெருந்தெய்வம். (முதற் கடவுள்.) அத்தகைய பெருந்தெய்வம் சிவனன்றிப் பிறிதில்லை. அஃது எங்ஙனம் எனின், சிவனே எல்லா உயிர்களிடத்தும் அவற்றின் உயிராகிக் கலந்து நின்று அவற்றைப் புரந்து வருகின்றான்.
*************************************************
பாடல் எண் : 28
திகைஅனைத் தும்சிவ னே அவன் ஆகின்
மிகைஅனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகைஅனைத் தும்புறம் அங்கியிற் கூடும்
முகைஅனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.

பொழிப்புரை : மனம் உடைமையால், `மனிதர்` எனப் பெயர் பெற்றவர்களே! (அந்த மனம் திருந்தியதாய் இல்லையே.) (``மனிதர்காள்! இங்கே வம்மொன்று சொல்லுகேன்``1 என்பதிலும் இக்குறிப்பு உள்ளது.) உலகனைத்தும் சிவமயேமே. அனைத்தும் அவனானபின்பு சொல்ல வேண்டியது என்ன இருக்கின்றது? ஆகவே, வீண் வாதங்களைக் கிளப்ப வேண்டா. ஏனெனில், சில இடங்களில் வெளியே காணப்படுகின்ற புகை உள்ளே மறைந்திருக்கின்ற நெருப்பினின்றும் வந்ததுதான். பின்பு அஃது அடங்குவதும் நெருப்பில்தான் அது போலத் -தான் காணப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் சிவனிடத்திலிருந்து வந்தவைதாம். ஆகவே, அவை ஒடுங்குவதும் அவனிடத்தில்தான்.
*************************************************
பாடல் எண் : 29
அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி
இவன் `தான்` எனநின்(று) எளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகி
நவின்றா உலகுறு நம்பனு மாமே.

பொழிப்புரை : சிவன், ஏழுலகங்களும் ஒன்றாக ஓர் உருவாய்க் கலந்து, அப்பொழுதே தான் அவற்றுள் ஒன்றும் ஆகாது தனியனாய் நிற்பினும், தனிமையானோர் பலர் பிறர்க்கு எளியராதல்போல எளியனல்லன்; அரியனே, இனி இவன் அளவற்ற உயிர்களோடு அவையேயாய்க் கலந்து அவற்றின் செயல்களில் எல்லாம் தானும் உடன் பயின்று, அனைத்துயிர்கட்கும் ஆத்தனும் ஆகின்றான்.
*************************************************
பாடல் எண் : 30
கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
உரையில்லை உள்ளுறும் உள்அவன் தானே.

பொழிப்புரை :  நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளில் முதல் மூன்றைக் கடந்து, மேலேயுள்ள `சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் விளங்குவோனாய் உள்ளவன் சிவனேயன்றிப் பிறரல்லர். (பிறர் எல்லாரும் மேற்கூறிய மூன்று கலைக்குள் இருப்பவரே` என்றபடி.) ஆகவே அவனே யாவர்க்கும் தலைவன் எல்லாத் தத்துவங் கட்கும் முதல்வன். உயிர்கட்கெல்லாம் உயிராய் அவைகளின் அறிவினுள் உள்ளவனும் அவனே. ஆதலின், ஏனைத் தேவர்களோடு அவனையும் ஒப்ப வைத்துக் கூறும் கூற்றுக்கே இடமில்லை. இனி அவன், எவராயினும் தம்மை அவனுக்குக் கொடுத்துப் பெறத் தக்கவனேயன்றி, வேறு பொன், பொருள் முதலியவற்றைப் பண்ட மாற்றாகக் கொடுத்துப் பெறத்தக்கவன் அல்லன். இவற்றையெல்லாம் அறிந்து அவனை நினைமின்கள்.
*************************************************
பாடல் எண் : 31
படிகாற் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியோன் குறுமைசெய் நேசம் அறுத்து
செடியார் தவ்ததினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்(து) அன்புகொண் டானே.

பொழிப்புரை :  மேற்கூறிய தலைவன், மேற்கூறிய கலைகளும் கீழதாகிய நிவிர்த்தி கலையில் இருக்கும் பிரம தேவன் செய்கின்ற படைத்தலையும் நீக்கி, அவனுக்குமேல் இருபத்து மூன்று தத்துவங் -கட்குத் தலைவன் ஆதலின், `நெடியோன்` எனப்படுகின்ற மாயோன் செய்கின்ற சின்னாள் நிலைப்பதாகிய காத்தலையும் நீக்கி, அவனுக்கு மேல் உள்ள உருத்திரன் அறியாமையிற்படுத்துத் துன்பக்கிடையில் கிடத்துகின்ற அழித்தலையும் நீக்கி அடியேனை உய்ய வைத்து, என்மீது அருள்மிக உடையன் ஆயினான்.
*************************************************
பாடல் எண் : 32
ஈசன்என் றெட்டுத் திசையும் இயங்கின
ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி
தோசம் ஒன்(று) ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவிநின் றானே.

பொழிப்புரை :  சிவன், `நாதம்` எனப்படும் சூக்குமை வாக்கினின்றும் தோன்றிய அனைத்து மொழிகளுமாகிய சொற் பிர பஞ்சத்திலும் நீங்காது நிறைந்து நிற்கின்றான். `தேசம், என்று சொல்லப் படும் பூமி ஒன்றுதான் ஆயினும் அஃது ஒன்பது கண்டங்களாகப் பிரிந்து நிற்கின்றது. அப் பிரிவுகளாகிய பொருட் பிரபஞ்சத்திலும் அவன் மலரில் மணம்போல் மருவி நிற்கின்றான். அதனால் அனைத்துலகங்களும், சிவனாகிய முதலையே முதலாகக் கொண்டு இயங்குகின்றன.
*************************************************
பாடல் எண் : 33
இல்லனு மல்லன் உளனல்லன் எம்மிறை
கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.

பொழிப்புரை : எங்கள் சிவபெருமான், உலகர் எத்தனை கூறினாலும், அவனை உணர்ந்தோர். ``என் புந்தி வட்டத்திடைப் புக்கு நின்றானையும் பொய்யென்பனோ``1 எனவும், ``ஏதுக்களாலும், எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா; சுடர்விட்டுளன் எங்கள் சோதி``2 எனவும் உறுதிப்பட உரைத்தலால், இல்லாதவனும் அல்லன். அவர் எத்தனை சொல்லினும் உலகர், ``காணாதான் கண்டானாம் தான் கண்டவாறு``3 என்றபடி. தாம் கூறுவதையே கூறி, `சிவன் இல்லை` எனப் பிணங்குதலின், உள்ளவனும் அல்லன். `இல்லை` என்பவரது கல் போன்ற நெஞ்சங்களிலும் ஒரு காலத்தில் அந்நெஞ்சைப் பிளந்து கொண்டு வெளித்தோன்றுவான்; ஏனெனில், அவன் பழமையாகவே எங்கும் இருப்பவன்; இயல்பிலே மாசற்றவன் ஆதலின் மாசிலாமணிபோல ஒளிவிடுந் தன்மையன்; தோன்றியபின் தோன்றிய இடத்தினின்றும் பெயர்தல் இல்லாதவன்; சொல்லைக் கடந்த அறிவு வடிவினன். என்றாலும் அனைத்துயிர்களையும் தொடர்ந்து நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 35
மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவார் உள்ளத் தகத்தும் புறத்தும்
வேறுசெய் தாங்கே விளக்கொளி யாமே.

பொழிப்புரை : எப்பொழுதும் பகையாய் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவராகிய தேவரும், அசுரரும் தாம் தாம் தனித் தனியே வந்து நாள்தோறும் சிவபெருமானைத் துதித்து அவன் திருவடியை நினைப்பர். துதிப்பவர்க்கு அருளும் முறையில் அவர் வேண்டிய வற்றை அவர்க்கு அவன் அளித்து நிற்பான். (அவற்றால் விளையும் விளைவுகட்கு அவன் பொறுப்பாதல் இல்லை. மனிதருள்ளும் இத்தகையோர் உளர். அவர்களிடத்தும் சிவபெருமான் அத்தகையோ -னாகியே நிற்பன். ஆயினும், உள்ளத்தில் அன்பு மிகத் துதிக்கின்ற வர்களுக்கு அவன் அகமாகிய உயிரைப் பற்றியும், புறமாகிய பொருள், சுற்றம் பற்றியும் அவர் வேண்டுவனவற்றை வேண்டிய வாறே தாராது, ஆவனவற்றைத் தந்து, ஆகாதனவற்றை விலக்கி, அவர்களது அறிவையும் திருத்துவான்.
*************************************************
பாடல் எண் : 36
விண்ணினுள் வந்த வெளியினன் மேனியன்
கண்ணினுள் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினுள் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில்ஆ னந்தமும் எங்கள் பிரானே.

பொழிப்புரை : எங்கள் சிவபெருமான், ஆகாயத்திற்கு உள்ள அருவத்தன்மையன், ஆயினும் உருவம் உடையவனே. கண்ணாற் காணப்படும் பொருளல்லன். ஆயினும் கண்ணாற் காணப்படுபவனே. ஒன்றை ஆக்கும் செயலின் பலனாய்த் தோன்றுவது பலத் தோன்றியவன் அல்லன்; ஆயினும் அத்தன்மை உடையவனே. ஆகவே அவன் எல்லையுட்படாத இன்பமும் ஆவான்.
*************************************************
பாடல் எண் : 37
உத்தமன் எங்கும் முகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனைக் காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

பொழிப்புரை :  சிவன் ஏனை யாவரினும் மேலானவன்; எந்த இடத்திலும் முகந்துகொள்ளக் கூடிய பேரானந்தப் பெருங்கடலாய் உள்ளவன்; முத்துப்போலும் வெண்மை நிறம் உடையவன். அப்பொழுதே நீலமணிபோலும் கருமை நிறத்தையும் உடையவன். அத்தகையோனைச் சித்தர்களும், தேவர்களும் எத்துணையோ காலமாக பொதுவாக எண்ணுகின்றார்கள். ஆயினும் இன்னும் உண்மையாக அறிந்திலர்.
*************************************************
பாடல் எண் : 38
நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே.

பொழிப்புரை : உயிர்களுக்குச் சிவனது அறக்கருணை எந்த அள வினதாகக் கிடைக்கின்றதோ அந்த அளவினதாக வீட்டின்பம் உள தாகும். அவனது மறக்கருணை எந்த அளவினதாகக் கிடைக்கின்றதோ அந்த அளவினதாகப் பிறவித் துன்பம் உளதாகும். இவையறிந்து, உலகில் எத்தனை வண்ணங்களும், வடிவங்களும் உள்ளனவோ அத்தனை வண்ணங்களுடனும், வடிவங்களுடனும் சிவன் உலகில் விளங்குதலைக் கண்டும் மக்கள் அவனைத் துதிக்க மாட்டா தவர்களாய் உள்ளனர்.
*************************************************
பாடல் எண் : 39
இங்குநின் றான் அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான் புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறாய்
எங்கும்நின் றான்மழை போல்இறை தானே.

பொழிப்புரை : சிவன் இங்கிருக்கின்றான்; அங்கிருக்கின்றான்; எங்கும் இருக்கின்றான். எல்லாப் பொருள்கட்கும் மேலே யிருக்கின்றான்; உலகிற்குத் தலைவன்; அற வடிவினன்; இரவில் தண்கதிர் மதியாய் நிற்கின்றான்; பகலில வெங்கதிர் ஞாயிறாய் நிற்கின்றான்; மேகத்தைப்போலக் கைம்மாறு கருதாது எவ்வுயிர் கட்கும் தனது அருளைப் பொழிகின்றான்.
*************************************************
பாடல் எண் : 40
உணர்வது வாயுமே உத்தம மாயும்
உணர்வது நுண்ணற(வு) எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.

பொழிப்புரை : எங்கள் பெருமானாகிய சிவன், சார்ந்ததன் வண்ண மாவதும், ஒருகாலத்து ஒன்றனை மட்டுமே உணர்தலின் சிறிதாயும் உள்ள அறிவினையுடைய உயிர்களாயும் அவ்வுயிர்கட்கு நிலைக் களமாகிய உடல்களாயும் அவ்வுடல்களுக்கு இடமாகிய அண்டங் களாயும் உள்ளான். அவனை, உயிர்களின் அறிவுக்கறிவாகவும், உயிர்க்குணங்கலின் மாறுபட்ட குணங்களையுடையவனாகவும் உணரும் அறிவே நுண்ணறிவாகும்.
*************************************************
பாடல் எண் : 41
தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினுந் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் சார்பவன்
தன்வலி யாலே தடங்கட லாமே.

பொழிப்புரை :  சிவன் தனது ஆற்றலால் தானே உலகத்தை யெல்லாம் தாங்குகின்றான்; அதனால் அவன் மிகப்பெரிய பொருள் போலத் தோன்றினும் தனது ஆற்றலாலே அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்ணியனும் ஆகின்றான்; எட்டுப் பெருமலைகளிலும் நின்று நிலத்தை நிலைபெறுவிக்கின்றான்; நிலம் முழுவதையும் தன்னுள் அடக்கியுள்ள பெரிய கடலாயும் விரிந்து நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 42
ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
தானே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

பொழிப்புரை : எங்கள் சிவபெருமான் ஏனைத் தேவரினும் பார்க்க மிகப் பெரியோனாயினும், உயிர்களின் சிற்றுடம்பினுள் அவற்றினும் சிறியவாய இருதயத்துட் சிறியனாய்க் கலந்து, அங்குச் சுடர்வடிவாய் விளங்குகின்றான். ஆகவே, அப்பெரியோன் ஏனைத் தேவரால் அளவிட்டறியப்படும் அளவினன் அல்லன். இங்ஙனமாகவே உயிர்கள் செய்யும் தவங்களை அளவிட்டறிபவன் அவனே.
*************************************************
பாடல் எண் : 43
பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை
குண்டாலங் காய்த்துக் குதிரை பழுத்தது
உண்டார்கள் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே.

பொழிப்புரை : ஆல் மரத்தினின்றும் பாகுபட்ட பழத்தின் விதையி லிருந்து முளைத்த சிறு முனை, பெரிய மரமாகி, உருண்ட வடிவான ஆலங்காயே காய்த்தது. ஆயினும், அந்தக் காய் மாம்பழமாகப் பழுத்தது. இந்த அதிசயப் பழத்தை உண்டவர்கள் பிறவித் துன்பத்தி னின்றும் நீங்கிக் களித்தார்கள். உண்ணும் உணர்வு இல்லாத பேதை -யர்கள், பிறவித் துன்பத்தில் அகப்பட்டு முரணியே நிற்கின்றார்கள்.
*************************************************
பாடல் எண் : 44
முதல்ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும்
திதமுறு கொம்பு செவி துதிக் கை கால்
மதியுடன் அந்தர் வகைவகை பார்த்தே
அதுகூற லொக்குமவ் வாறு சமயமே.

பொழிப்புரை : ``ஒன்றே பொருள் என்னின், வேறென்ப; வேறென்னின் - அன்றென்ப ஆறு சமயத்தார்.1 என்றாற்போலச் சமய வாதிகள் ஒருவர் கொள்கையை மற்றவர் மறுத்து வாதம் புரிதலை யானை கண்ட குருடர் கதையில் வைத்து உணர்த்திற்று இம்மந்திரம்.
*************************************************
பாடல் எண் : 45
ஆறு சமயம் முதலாம் சமயங்கள்
ஊற தெனவும் உணர்க உணர்பவர்
வேற தறஉணர் வார்மெய்க் குருநந்தி
ஆற தமைபவர்க் கண்ணிக்குந் தானே.

பொழிப்புரை : சமயங்களுட் சிறந்தனவாகச் சொல்லப்படுகின்ற ஆறு சமயம் முதலாக அனைத்துச் சமயங்களிலும் ஒரோ ஒன்றே `நன்று` என உணர்பவர் உணரட்டும் (அஃது அவர் விருப்பம்) சமய வேற்றுமை பாராட்டாது, `அனைத்துச் சமயங்களையும் அதனதனளவில் நன்றே` என உணர்பவர்க்கு உண்மைக் குரு நந்தி பெருமானேயாவார். அவரது மரபு நெறியே சான்றோர்க்கு இனிதாய் இனிக்கும்.
*************************************************
பாடல் எண் : 46
ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின்
முத்தி விளைக்கும் முதல்வனு மாமே.

பொழிப்புரை : `புறப்புறம், புறம் அகப்புறம், அகம்` எனப் பாகுபட்ட சமயங்கள் பலவற்றுள் பெரும்பான்மை ஒத்த கொள்கை யுடையவாய்ச் சிறுபான்மையே வேறுபட்ட சமயங்கள் அகச் சமயங்களாகும். அவையாவும் சைவமே. அவை ஆறு வகைப்பட்டன. அந்த ஆறும், `தம்மை ஆக்கினவன் சிவனே` எனக் கருதுகின்றன. அதனைப் பிற சமயிகள் மறுக்கின்றனர். அம்மறுப்புக்களைக் கேளாமல், `அகச் சமயங்கள் ஆறும் சிவனையே முதல்வனாக உடையன` என்பதை ஒருவன் அறிந்து, அவற்றுள் எந்த ஒன்றனையேனும் தெளிந்து அதில் நிற்பானாயின், அவன் சிவஞானியாய்த் தானும் முத்திக்கு உரியவனாய்ப் பிறரையும் முத்திக்கு உரியவராகச் செய்ய வல்ல ஆசிரியனும் ஆவான்.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!