http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday, 16 May 2012

திருமந்திரம்-தந்திரம் 03 பதிகம்:16&17 வார சரம் & வார சூலம் (பாடல்கள்:06&02)








 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை............................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:12: கலைநிலை......................பாடல்கள்: 012
மூன்றாம்தந்திரம்:பதிக எண்:13: காரிய சித்தி......................பாடல்கள்: 016
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:14: காலச் சக்கரம்.................பாடல்கள்: 030

மூன்றாம் தந்திரம்:பதிக எண்:15: ஆயுள் பரீட்சை................பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:16: வார சரம்...........................பாடல்கள்: 006

மூன்றாம் தந்திரம்:பதிக எண்:17: வார சூலம்........................பாடல்கள்: 002

=====================================================(235+006 +002=243)
மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:16. வார சரம் (பாடல்கள்:06 )
பாடல் எண் : 1
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

பொழிப்புரை :  கிழமைகள் ஏழனுள், `வெள்ளி, திங்கள், புதன்` என்னும் மூன்றில் இடநாடி வழியாகவும், `சனி, ஞாயிறு, செவ்வாய்` என்னும் மூன்றில் வலநாடி வழியாகவும், வியாழனில் வளர் பிறையாயின் இடநாடி வழியாகவும், தேய் பிறையாயின் வல நாடி வழியாகவும் இயங்குதல் உடல் நலத்திற்கு ஏற்புடைய இயற்கைப் பிராண இயக்கமாகும்.
=======================================
பாடல் எண் : 2
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே. 

பொழிப்புரை :  `பிராணன், மேற்கூறியவாறு, குறித்த கிழமைகளில், குறித்த நாடியின் வழியே இயங்குமாயின், ஞானத்தைப் பெறுதற்கு வாயிலாகிய உடம்பிற்கு யாதொரு குறையும் உண்டாகாது` என்று, அருள் வள்ளலாகிய நந்தி பெருமான் எங்கட்குத் திருவுளம் உவந்து அருளிச்செய்தார்.
=======================================
பாடல் எண் : 3
செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.

பொழிப்புரை :  பிராணன், மேற்கூறியவாறு செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமை களில் வல நாடி வழியே இயங்குதல் வேண்டும் என்பதை அறிந்த யோகியை, `சிவன்` என்றே சொல்லலாம். அஃது அவ்வாறு இயங்காது மாறி நிகழும்பொழுது அதனை ஒத்த முறையில் இயங்கச்செய்து அதன் பயனை அறிபவர்க்கு, அப்பயன் சிவானந்தமாய் முடியும்.
=======================================
பாடல் எண் : 4
மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே. 

பொழிப்புரை :  இடை நாடி பிங்கலை நாடிகளாகிய வழியால், முறையே, `சந்திர கலை` என்றும், `சூரிய கலை` என்றும் ஆகின்ற பிராணன், எஞ்ஞான்றும் அவ்வாறே இயங்கி அப்பெயரையே பெற்று நில்லாமல் மாறி வரும். (அஃதாவது, இடை நாடியில் இயங்கி, `சந்திர கலை` எனப் பெயர்பெற்று நின்ற பிராணனே அந்நிலையினின்றும் மாறிப் பிங்கலையில் இயங்கி, `சூரிய கலை` எனப் பெயர்பெற்று நிற்கும். பின்னும் அச் சூரிய கலைதானே சந்திர கலையாய் மாறும். இம் மாற்றத்திற்கு முடிவில்லை) இனி, பிராணன் மேற்கூறியவாறு, `சந்திர கலை, சூரிய கலை` எனப்பெயர் பெறும்பொழுது, அவ்வந் நாடியின் வழி முன்னர் வெளிச் செல்லுதலையும், பின்னர் உட்புகுதலையும் உடையதாய் இருக்கும். நீர் ஊற்றுப்போல இங்ஙனம் சுரந்து முடிவின்றிச் சர ஓட்டமாய் ஓடுகின்ற பிராணன், மேற்கூறிய இரு நாடிகளின் வழி ஓடாது, நடு நாடி (சுழுமுனை நாடி) வழியே இயங்குமாயின், (அஃதாவது, பிராணாயாமமாய் அமையுமாயின்,) அஃது உடற்கேயன்றி, உயிர்க்கும் வலிமை தருவதாம். ஆகவே, அதனை அறிந்து, உலகீர், பிராணனை நடு நாடியிற் செலுத்தும் முறையைக் குருமுகமாகக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுங்கள்.
=======================================
பாடல் எண் : 5
உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும்
உதித்தது வேமிக ஓடிடு மாகில்
உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே.

பொழிப்புரை :  பிராண வாயு வல நாடியால் நுழைந்து, இட நாடியால் வெளியேறுமாயின், அது, பிராணன் தனது நிலை கலங்கி இயங்குதலாம். ஏனெனில், அவ்வாறான ஓட்டத்தால் பிராணன் தனது வலிமையை மிக இழந்து நிற்கும். இனி, அதுதானே இட நாடியால் நுழைந்து வல நாடியால் வெளியேறுமாயின், `அது தன் இயற்கையில் உள்ளது` என அறிவாயாக.
=======================================
பாடல் எண் : 6
நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
யிடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

பொழிப்புரை :  சுழுமுனையில் நில்லாமல், ஏனை இருவழிகளிலும் ஓடி, அதனால் வாழ்நாளைத் தேய்க்கின்ற பிராண வாயுவை யோகி தன் வசமாக்கிக் கொள்ளும் வழியிலே சென்று, அதனால் குண்டலி சத்தியை உணர்ந்தபின், அவ்வுணர்வு வாயிலாக அணையும் விளக்குப் போல மிக ஒளிவிடுகின்ற திரோதான சத்தியை அனுபவமாகக் காண்பான்.
=======================================
மூன்றாம் தந்திரம்-பதிக எண்:17. வார சூலம்(பாடல்கள்:02)
பாடல் எண் : 1
வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே. 

பொழிப்புரை :  சிவபெருமானது சூலம் மாறி மாறி வருகின்ற திசைகளைச் சொல்லுமிடத்து, திங்களும், சனியுமாகிய கிழமைகளில் கிழக்காம். செவ்வாயும், புதனுமாகிய கிழமைகளில் வடக்காம். ஞாயிறும், வெள்ளியுமாகிய கிழமைகளில் மேற்காம். இக்கிழமைகளில் சூலம் இவ்வாறாக நிற்கும்.
=======================================
பாடல் எண் : 2
தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமும் ஆம்இடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலம்முன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே. 

பொழிப்புரை :  வியாழக்கிழமையில் சூலம் இருக்கும் திசை தெற்காகும். சிவபெருமானுடைய சூலம் (பயணம் செய்பவனுக்கும், யோகிக்கும்) இடப்பக்கத்திலும், பிற்பக்கத்திலும் இருப்பின் ஏற்புடையதாகும். ஆகவே, அப்பொழுது அவர்கட்குத் தீங்கு இல்லை. வலப் பக்கத்திலும், முற்பக்கத்திலும் இருப்பின் தீங்கு மிக விளையும்.
=======================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:15 ஆயுள் பரீட்சை (பாடல்கள்:20)








 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை............................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:12: கலைநிலை......................பாடல்கள்: 012
மூன்றாம்தந்திரம்:பதிக எண்:13: காரிய சித்தி......................பாடல்கள்: 016
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:14: காலச் சக்கரம்.................பாடல்கள்: 030

மூன்றாம் தந்திரம்:பதிக எண்:15: ஆயுள் பரீட்சை................பாடல்கள்: 020
========================================================(215+020=235)
மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:15. ஆயுள் பரீட்சை (பாடல்கள்:20 )
பாடல் எண் : 1
வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்தம் மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே. 
பொழிப்புரை :  ஒருவனது வாழ்நாள் எல்லையை அளந்தறிகின்றவன் தனது கையை அளக்கப்படுபவனது தலையின்மேல் வைக்க, அஃது அவனுக்கு இயல்பான எடையுள்ளதாய்த் தோன்றுமாயின், அவனது வாழ்நாளுக்குக் கேடில்லை. அவ்வாறன்றி, மிகுந்த எடையுள்ளதாய்த் தோன்றுமாயின், அவனது வாழ்நாள் அதுமுதல் ஆறுதிங்கள் அளவின தாம். மேலும், அஃது இரட்டிப்பான எடையுள்ளதாய்த் தோன்றின், அவனது உயிர்க்கு ஒருதிங்களில் பிறக்கும் சொல் `இறப்பு` என்பதாம்.
=======================================
பாடல் எண் : 2
ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த வுணர்வது வாமே.

பொழிப்புரை :  உணர்விற்கு முதலாய் நிற்றலில் சொல்லும், இறைவனும் ஒரு நிகரானவர். (ஆயினும் இஃது உலகியலிலாம். ஆதலால்,) சொல்லை விடுத்தவரே இறைவனை உணர்கின்றவாராவர். சொல்லை விடுத்தவரது உள்ளத்தில் இறைவனும் அச்சொல்லைத் தம்மின் வேறாக உணர்ந்த உணர்வு வடிவாய் நிற்பன்.
=======================================
பாடல் எண் : 3
ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகில் தலைவனு மாமே.

பொழிப்புரை :  ஒவ்வொரு மூச்சிலும் பிராண வாயு அழிதலை அறியும் அறிவு உண்டாகுமாயின், அது பயனுடையதாகும். அஃதாவது, நாம் நெடுங்காலம் இவ்வுலகில் வாழ்கின்ற நன்மையைக் கொடுக்கும். அதனால், ஆதார கமலங்களில் நிலைத்து நிற்றற்குரிய ஞானமும் கைவரும். அந்த ஞானம் கைவரப் பெற்றோர் உலகில் கட் புலனாய் நிற்கின்ற இறைவனாகி நிற்கும் பெருமையையும் அடைவர்.
=======================================
பாடல் எண் : 4
தலைவன் இடம்வலஞ் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலந் தன்வழி நூறே.

பொழிப்புரை :  இறைவன் கொடுத்த இடைநாடி பிங்கலை நாடி வழிகளைப் பயனுடையனவாகின்ற வகையில் சாதனை செய்பவர் உலகத்து அரியர். அந்நாடிகள் பயனுடையனவாய் விடின், அவற்றால் பஞ்சேந்திரியங்களும் தன்வழிப்படும். அவை தன்வழிப்பட்ட நிலையில் பின்னும் அச்சாதனையைச் செய்யின், அவ்வாறு செய் பவனது வாழ்நாள் நூறாண்டு அளவினதாய்க் குறைவின்றி நிற்கும்.
=======================================
பாடல் எண் : 5
ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாம் அமர்ந்த இரண்டையுந்
தேறியே நின்று தெளிஇவ் வகையே.

பொழிப்புரை :  பிராண வாயு வலநாடி இட நாடிகளில் முறையே, `ஒன்று, ஆறு` என்னும் முறையில் வெளிப்போகுமாயின், வாழ்நாள் எண்பதாண்டு வரையிற் செல்லும். அவ்வாறன்றி, `ஒன்று, ஏழு` என்னும் முறையில் வெளிப்போகுமாயின், வாழ்நாள் அறு பதாண்டாம். இவ்விரண்டையும் உணர்ந்து, இவ்வாறே இடை நாடியின் வழி இயங்கும் இயக்கம் மிக மிக, வாழ்நாளின் எல்லை குறையும் என்று மேற்கூறுவனவற்றையும் உணர்வாயாக.
=======================================
பாடல் எண் : 6
இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே.

பொழிப்புரை :  பிராண வாயு மேற்கூறிய வகையில், `ஒன்று, எட்டு` என்னும் முறையில் இயங்கினால், `வாழ்நாள் ஐம்பதாண்டே` என்று அறியலாம். இனி, `ஒன்று, ஒன்பது` என்ற முறையில் இயங்கினால் அது முப்பத்து மூன்றாண்டேயாம்.
=======================================
பாடல் எண் : 7
மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே.

பொழிப்புரை :  பிராண வாயு மேற்கூறிய வகையில், `ஒன்று, பத்து` என்னும் முறையில் வெளிச்சென்றால், வாழ்நாள் இருபத்தெட்டு ஆண்டாகும். இனி, `ஒன்று, பதினைந்து` என்னும் முறையில் இயங்கினால், `வாழ்நாள் இருபத்தைந்து ஆண்டு` என்று அறியலாம்.
=======================================
பாடல் எண் : 8
பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகுந் திருத்திய பத்தே.

பொழிப்புரை :  பிராணவாயு பகல் முப்பது நாழிகையும் இடநாடி வழியே வெளிப்போதுமாயின், `வாழ்நாள் பன்னிரண்டாண்டு` என்று வரையறுத்துவிடலாம். அதனை அநுபவமாகவும் காண முடியும். இடையே மாற்றம் புகாதொழிய ஒருநாள் முழுதும், (அஃதாவது அறுபது நாழிகை) பிராணவாயு இடை நாடி வழியே உள்வந்து வெளிச் செல்லுமாயின், `வாழ்நாள் இனிப் பத்தாண்டு` என்று துணியலாம்.
=======================================
பாடல் எண் : 9
ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமே.

பொழிப்புரை :  பிராண வாயு இரண்டு நாள் அளவு இடைநாடி வழியாக இயங்கின், உயிர் எட்டாண்டுகாறும் இடையூறுறின்றி உடலில் நிற்கும். மூன்றுநாள் இயங்கின், வாழ்நாளை, `ஆறு ஆண்டு` என்று அளந்து கூறிவிடலாம்.
=======================================
பாடல் எண் : 10
அளக்கும் வகைநாலும் அவ்வழி ஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே.

பொழிப்புரை :  வாழ்நாளை அளந்தறிகின்ற வகையில் நான்கு நாள்கள் பிராணவாயு இடைகலை வழியே இயங்கின், நான்கு ஆண்டுகள் உயிர் உடலிற் பொருந்தி நிற்கும். ஐந்து நாள் அவ்வாறு இயங்கின், தெளிவாக மூன்றாண்டு அளவில் வாழ்நாள் எல்லையைக் காணலாம்.
=======================================
பாடல் எண் : 11
காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே.

பொழிப்புரை :  பிராண வாயு பத்து நாள் இடை நாடி வழியே இயங்கின், உயிர் உடலிற் கலந்து வாழும் ஆண்டு இரண்டு என்பதை அறியலாம். பதினைந்து நாள் அவ்வாறு இயங்கின், `வாழ்நாள் ஓர் ஆண்டு` என்பதை மனம் பொருந்தக் கொள்ளலாம்.
=======================================
பாடல் எண் : 12
கருதும் இருபதிற் காணஆ றாகும்
கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே. 

பொழிப்புரை :  பிராண வாயு இருபது நாள் இடைநாடி வழியே இயங்கினால், வாழ்நாள் ஆறு திங்களாம். இருபத்தைந்து நாள் இயங்கினால் மூன்று திங்களாம். இருபத்தாறுநாள் இயங்கினால் இரண்டு திங்களாம்.
=======================================
பாடல் எண் : 13
காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.

பொழிப்புரை :  பிராண வாயு இருபத்தேழு நாள் இடைநாடி வழியே இயங்கின், அப்பால் ஒரு திங்களே வாழ்நாள் என்பதை மெய்ப்பித்துக் காட்டமுடியும். இருபத்தெட்டுநாள் இயங்கின், அப்பால் பத்து நாள்களே வாழ்நாள் என்று காட்டலாம்.
=======================================
பாடல் எண் : 14
ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற வகைஆறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்றும் நாளே.

பொழிப்புரை :  பிராண வாயு மேற்கூறியவாறு இருபத்தொன்பது நாள் இயங்கினும் இருபத்தெட்டு நாள் இயங்குதலோடு ஒப்பதேயாம்; வேறுபாடில்லை. இனி, முப்பது நாள் இயங்கின், வாழ்நாள் அப்பால் ஏழு நாளாகவே நிற்கும்.
=======================================
பாடல் எண் : 15
ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகும்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே.

பொழிப்புரை :  பிராண வாயு இடை நாடி வழியே முப்பத்தொரு நாள் இயங்குமாயின், வாழ்நாள் அப்பால் மூன்று நாளே. முப்பத் திரண்டு நாள் இயங்கின், அப்பால் இரண்டு நாளில் அவ்வுயிர் உடலை விட்டுச்செல்ல, அது வாழ்ந்த இல்லத்தில் பலர் கூடி ஒலிக்கின்ற மன்றத்தின் இயல்பு தோன்றுவதாகும்.
=======================================
பாடல் எண் : 16
மனையினில் ஒன்றாகும் மாதம்மும் மூன்றும்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே.

பொழிப்புரை :  உயிர் வளர்கின்ற மாதங்கள் முதற்கண் ஓர் அறை யில் ஒன்பதும், பின் நீர்க்குட்டத்தில் ஒன்றும் என்று எங்கள் நந்தி பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். (அஃதாவது தாயின் வயிற்றில் ஒன்பது மாதம் உருப்பெற்று வளர்ந்து, பத்தாம் மாதம் நீரில் மிதந்து கிடக்கும் என்றவாறு) பத்தாம் மாதம் அவ்விடத்தை விட்டு அகன்று திருவருள் உணர்வோடு சிறப்புற்று வெளிவருமாயின், அது தன்னைப் பெறுதலாகிய பேற்றினால் உலகர்க்குத் தலைவனாதலும் கூடும்.
=======================================
பாடல் எண் : 17
ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியா அறிவறிந் தேனே.

பொழிப்புரை :  வாழ்நாளை அளந்தறிதற்குக் கருவியாகிய (எனவே, உயிர் வாழ்தற்கு முதலாகிய) மூலாக்கினி, பிராண வாயு இவற்றின் பெருமைகளை அறிகின்றவர் உலகில் எவரும் இல்லை. அதனால், அவற்றை ஒழுங்குபட நிறுத்தாமையால் விரைவில் நீங்குகின்ற உயிரினது பெருமையையும் அறிகின்றவர் இல்லை. யான் திருவருளால் அவ்விரண்டையும் அறியப் பெற்றேன்.
=======================================
பாடல் எண் : 18
அறிவது வாயுவொ டைந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயிர் அத்தின்
பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்
செறிவது நின்று திகழும் அதுவே.

பொழிப்புரை :  அறியவேண்டுவது, பிராணவாயுவின் இயக்கமும், அதனால் நிலைபெறுகின்ற ஐம்பொறிகளாகிய அறிவும் ஆகிய வற்றையே, `அறிவு` என்று சொல்லப்படுவது எதுவோ அதுவே, உலகில் `உயிர்` என்று சுட்டப்படுவது. அவ்வுயிர் உலகினின்றும் பிரிந்து போகாதவாறு அதற்குரிய முறைகளை அறிந்து, அறிந்த வழியிலே பேணிக் காப்பின், அது உடம்பில் அழுத்தம் உடையதாய் நிலைபெற்று விளங்கும்.
=======================================
பாடல் எண் : 19
அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறைஅவ னாமே.

பொழிப்புரை :  `அது` என்று பொதுமையிற் சுட்டப்படும் முதற் பொருள் செய்கின்ற அருள் அனைத்துயிர்க்கும் பொதுவாக உலகின்பத்தையும், உயர்ந்தோர்க்குச் சிறப்பாகப் பேரின்பத்தையும் தரும். அவ்வருளும், செந்தாமரை வெண்டாமரை மலர்களில் வீற்றிருக்கின்ற திருமகள், கலைமகள் என்னும் இருவர்க்கும் தலைவியாகிய உமையே. அதனால், வாழ்நாளை நீட்டிக்கும் அருளைப்புரியும் இறைவன், அவ்வுமைக்குத் தலைவனாகிய சிவபெருமானே.
=======================================
பாடல்
எண் : 20 
பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலும் மதியே. 

பொழிப்புரை :  `உயிர்கள் பிறத்தல் வேண்டும்` என்று கருதிய இறைவனது குறிப்பின்படி அவற்றிற்குக் கிடைத்த அழகிய உடம்பு, `பிஞ்சு, காய், செங்காய்` என்று ஆகி முடிவில் பழமாய்ப் பழுத்து விழுந்துவிடும். அதற்குள் பாசங்கள் ஆழ்ந்து போம்படி அதற்குரிய முறைகளில் பழகினால், பாசம் விலகி, ஞானம் மிகும்.
=======================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.