http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday, 2 April 2012

திருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:16 அரசாட்சி முறை (பாடல்கள்:10)



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

விநாயகர் வணக்கம்...............................................................பாடல்கள்: 001
பாயிரம். பதிக்க வரலாறு.......................................................பாடல்கள்: 039
முதல் தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்.....................பாடல்கள்: 056
முதல் தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு .....................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு ....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்.............................பாடல்கள்: 030
முதல் தந்திரம்:பதிக எண்:05: யாக்கை நிலையாமை.....பாடல்கள்: 025
முதல் தந்திரம்:பதிக எண்:06: செல்வம் நிலையாமை....பாடல்கள்: 009
முதல் தந்திரம்:பதிக எண்:07: இளமை நிலையாமை......பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:08: உயிர் நிலையாமை...........பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:09: கொல்லாமை.....................பாடல்கள்: 002
முதல் தந்திரம்:பதிக எண்:10: புலால் மறுத்தல்.................பாடல்கள்: 001
முதல் தந்திரம்:பதிக எண்:11: பிறன்மனை நயவாமை.....பாடல்கள்: 003
முதல் தந்திரம்:பதிக எண்:12: மகளிர் இழிவு......................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:13: நல்குரவு................................பாடல்கள்: 005
முதல் தந்திரம்:பதிக எண்:14: அக்னி காரியம்.....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:15: அந்தணர் ஒழுக்கம்............பாடல்கள்: 014
முதல் தந்திரம்:பதிக எண்:16: அரசாட்சி முறை.................பாடல்கள்: 010
=======================================================(223+014=237)
முதல் தந்திரம்: 27-பதிகங்கள்(பாடல்கள்:293)
பதிகம் எண் :16.அரசாட்சி முறை  (10 பாடல்கள்)

பாடல் எண் : 1
கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

பொழிப்புரை : நீதி நூலைக் கல்லாத அரசனும், கூற்றுவனும் யாவரிடத்தும் கொலையே புரிதலால் தம்முள் ஒருபடியாக ஒப்பர். ஆயினும், கல்லா அரசனினும் கூற்றுவனே மிக நல்லவன். என்னை? கல்லா அரசன் தனது அறியாமை காரணமாக ஒரு குற்றமும் செய்யாதார்க்கும் ஆராயாமல் கொலைத் தண்டம் விதிப்பான்; கூற்றுவன் அறமுடையவர்பால் தண்டம் செய்தற்கு அடையான்.
****************************************************
பாடல் எண் : 2
நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.

பொழிப்புரை : நீதிநூலைக் கற்ற அரசன், அந்நூலின் நோக்கு முதற்கண் வைதிக நெறி மேலும், பின்னர்ச் சிவநெறி மேலும் ஆதலையறிந்து, நாள்தோறும் தனது நாட்டில் அவை பற்றி நிகழ்வனவற்றை, நாள்தோறும் அயராது ஒற்று முதலியவற்றான் ஆராய்ந்து, அவை செவ்வனே நடைபெறச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யானாயின், அவனது நாடும், செல்வமும் நாள்தோறும் பையப் பையக் குறைந்து, இறுதியில் முழுதுங் கெட்டுவிடும். அவற்றிற்குக் காரணம், யாண்டும் பாவச் செய்கையே மலிதலாம்.
****************************************************
பாடல் எண் : 3
வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே. 

பொழிப்புரை : யாதோர் உயர்ந்த தொழிற்கும் அதற்குரிய கோலம் இன்றியமையாதாயினும், அத்தொழிற்கண் செவ்வனே நில்லாதார் அதற்குரிய கோலத்தை மட்டும் புனைதலால் யாது பயன் விளையும்! செயலில் நிற்பாரது கோலமே அதனைக் குறிக்கும் உண்மைக் கோலமாய்ப் பயன்தரும். அதனால், ஒருவகை வேடத்தை மட்டும் புனைந்து, அதற்குரிய செயலில் நில்லாதவரை, வெற்றியுடைய அரசன், அச்செயலில் நிற்பித்தற்கு ஆவன செய்வானாயின், அதுவே அவனுக்கு உய்யும் நெறியும் ஆய்விடும்.
****************************************************
பாடல் எண் : 4

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
தாடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே. 

பொழிப்புரை :  `பிரமத்தை உணர்ந்தவனே பிராமணன்` என்று வாய்ப்பறை சாற்றிவிட்டு, அப்பொழுதே அம் முயற்சி சிறிதும் இன்றி மூடத்தில் அழுந்திக்கிடப்போர் குலப்பெருமை கூறிக்கொள்ளுதற் பொருட்டுப் பிராமணர்க்குரிய சிகையையும், பூணூலையும் முதன்மையாக மேற்கொள்வாராயின், அத்தன்மையோர் உள்ள நாடும், நன்னெறி நிகழாமையால் வளம் குன்றும்; அந் நாட்டிற்குத் தலை வனாகிய அரசனும் பெருவாழ்வுடைய னாயினும், தன் கடமையைச் செய்யாமையால், பெருமை சிறிதும் இலனாவன். ஆதலால், அத்தன்மையாளரது உண்மை நிலையை அரசன் பல்லாற்றானும் ஆராய்ந்தறிந்து, வெளியாரை மருட்டும் அவரது பொய்வேடத்தைக் களைந்தெறியச் செய்தால், பலர்க்கும் நன்மை உண்டாகும்.
****************************************************
பாடல் எண் : 5
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

பொழிப்புரை : சிவஞானம் இல்லாத வெறுவியர் சிவஞானம் பெற்றுச் சிவனே ஆயினார் போலச் சிவனுக்குரிய சடை, சிகை, பூணூல் என்பவற்றைப் புனைந்துகொண்டு சிவஞானிகள் போல நடிப்பார் களாயின், அவரை அரசன் சிவஞானிகள் வாயிலாகவே பரிசோதனை செய்து உண்மைச் சிவஞானிகளாகச் செய்தல் நாட்டிற்கு நன்மை பயப்பதாகும்.
****************************************************
பாடல் எண் : 6
ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 

பொழிப்புரை : ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரையும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடி யாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழிவனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.
****************************************************
பாடல் எண் : 7

திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவும்
அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.

பொழிப்புரை : பல சமய நூலாரும் தாம் தாம் அறிந்தவாறு கூறும் யாதொரு முத்தியைப் பெறவேண்டினும், இம்மை மறுமைச் செல்வங்களை எய்த வேண்டினும் அரசன் மறந்தும் தனது அறநெறியினின்றும் வழுவுதல் கூடாது. அதனால், அவன், தன்கீழ் வாழும் குடிகளிடத்து விரும்பற்பாலது அவர்தம் தொழில் வருவாயுள் ஆறில் ஒன்றேயாம்.
****************************************************
பாடல் எண் : 8
வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தான்கொள்ளின்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 

பொழிப்புரை அரசன் உலகத்தை மேற்கூறியவாற்றாலெல்லாம் காப்பது பலர்க்கும் நன்மையை மிகத் தருவதாகும். எவ்வாறெனில், அத்தகைய ஆட்சியில் பொருந்திய மக்கள் மேற்கூறிய நெறிகளிலே வழுவாது நிற்பராகலின். அரசன் அங்ஙனம் காத்தலினின்றும் பிறழ்ந்து தனது நாட்டைப் பகை மன்னர் வந்து கைப்பற்றுமாறு தான் தனது குடிமக்களைத் தமக்கும், அறத்திற்கும் உரியவராகக் கருதாது, தனது நலம் ஒன்றற்கே உரியதாகக் கருதிவிடுவானாயின், அவன் தனது பசியின்பொருட்டுப் பிற விலங்குகளைப் பாய்ந்து கொல்லும் புலியோடொத்த தன்மையனே ஆவன்.
****************************************************
பாடல் எண் : 9
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

பொழிப்புரை : `கால் கட்டி மேல் ஏற்றிப் பால் கொண்டு சோம பானம் செய்க` என்பது யோகியரிடை வழங்குவதொரு குறிப்புச் சொல். அதன் பொருள் `காற்றை (பிராண வாயுவை) இடைகலை பிங்கலை வழிச் செல்லாதவாறு தடுத்து, சுழுமுனைவழி மேல் ஏறச் செய்து, அதனால் வளர்கின்ற மூலக்கனலால் நெற்றியில் உள்ள சந்திரமண்டலத்தினின்றும் வழிகின்ற அமுதத்தை உண்டு சமாதியில் அழுந்திப் பரவசம் எய்தியிருக்க` என்பதேயல்லது, `ஒருவனை இருகால்களையும் கட்டிக்கொண்டு பனை மரத்தின்மேல் ஏறச்செய்து, அவன் அதன் பாளையினின்றும் இறக்கிக் கொணர்கின்ற கள்ளை உண்டு அறிவிழந்திருக்க` என்பது பொருளன்று. அதனால், அவ்வுட் பொருளை உணரும் அறிவிலாதோர் தமக்குத் தோன்றிய வெளிப்பொருளே பொருளாக மயங்கித் தாமும் கள்ளுண்டு களித்துப் பிறரை யும் அவ்வாறு களிக்கச் செய்வர். அப்பேதைமாக்களை ஒறுத்தலை அரசன் தனது முதற்கடனாகக் கொண்டு ஒறுத்தல் வேண்டும்.
****************************************************
பாடல் எண் : 10
தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.

பொழிப்புரை சமயிகள் பலரும் தம் தம் சமய அடையாளங்களை மட்டும் உடையராய் அச்சமய ஒழுக்கத்தில் நில்லாதொழிவாராயின், அனைத்துச் சமயங்கட்கும் தலைவனாகிய சிவபெருமான் தான் தனது ஆகமத்திற் சொல்லியுள்ள தண்டங்கள் அனைத்தையும் மறுமையில் அவர்க்குச் செய்தல் திண்ணம் ஆயினும், இம்மையில் அவர்க்குரிய தண்டத்தைச் செய்தல் அரசனுக்குக் கடமையாகும்.
***************************************************
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத் தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!