http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday, 2 April 2012

திருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:17&18: (17)வானச் சிறப்பு & (18)தானச் சிறப்பு (பாடல்:02&01)



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

விநாயகர் வணக்கம்...............................................................பாடல்கள்: 001
பாயிரம். பதிக்க வரலாறு.......................................................பாடல்கள்: 039
முதல் தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்.....................பாடல்கள்: 056
முதல் தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு .....................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு ....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்.............................பாடல்கள்: 030
முதல் தந்திரம்:பதிக எண்:05: யாக்கை நிலையாமை.....பாடல்கள்: 025
முதல் தந்திரம்:பதிக எண்:06: செல்வம் நிலையாமை....பாடல்கள்: 009
முதல் தந்திரம்:பதிக எண்:07: இளமை நிலையாமை......பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:08: உயிர் நிலையாமை...........பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:09: கொல்லாமை.....................பாடல்கள்: 002
முதல் தந்திரம்:பதிக எண்:10: புலால் மறுத்தல்.................பாடல்கள்: 001
முதல் தந்திரம்:பதிக எண்:11: பிறன்மனை நயவாமை.....பாடல்கள்: 003
முதல் தந்திரம்:பதிக எண்:12: மகளிர் இழிவு......................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:13: நல்குரவு................................பாடல்கள்: 005
முதல் தந்திரம்:பதிக எண்:14: அக்னி காரியம்.....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:15: அந்தணர் ஒழுக்கம்............பாடல்கள்: 014
முதல் தந்திரம்:பதிக எண்:16: அரசாட்சி முறை.................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:17: வானச் சிறப்பு......................பாடல்கள்: 002
முதல் தந்திரம்:பதிக எண்:18: தானச் சிறப்பு.......................பாடல்கள்: 001
=======================================================(237+002+001=240)
முதல் தந்திரம்: 27-பதிகங்கள்(பாடல்கள்:293)
பதிகம் எண் :17.வானச்சிப்பு  (02 பாடல்கள்)
பதிகம் எண் :18.தானச்சிப்பு  (01 பாடல்.)

முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு
பாடல் எண் : 1
அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே. 

பொழிப்புரை : வற்றாத அமுத ஊற்றுப் போலச் சுரந்து பொழிகின்ற பெரிய மழைநீராலே பயன் சுரக்கின்ற பல மரங்கள் இயற்கையாக நிலத்தில் தோன்றி வளர்வனவாம். இனி உழவரால் பயிரிடப்படுகின்ற கமுகு, இனிய நீரைத் தருகின்ற தென்னை, கரும்பு, வாழை முதலியனவும் அம்மழையினாலே மக்கட்கு நிரம்பிய உணவைத் தருவனவாம். இனி எட்டி போன்ற நச்சு மரங்களும் அம்மழையினால் உளவாவனவேயாம்.
***************************************************

பாடல் எண் : 2
வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே. 

பொழிப்புரை : எம் தந்தையாகிய சிவபெருமான் பொழிகின்ற திருவருளாகிய வெள்ளம் அன்பரது நெஞ்சகத்தினின்றும் ஊறுகின்ற சூக்குமமாகிய தெளிநீராம் ஆதலின், அதற்கு உலகில் மழையால் மலையினின்றும் பாய்கின்ற வெள்ளிய அருவி நீர்க்கு உள்ளதுபோல இடமும், காலமும் சுட்டும் சொல்லில்லை; நுரை இல்லை; மேலே மூடுகின்ற பாசியில்லை; கரையில்லை.
***************************************************
முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு
பாடல் எண் : 1
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

பொழிப்புரை : அறம் செய்தலில் விருப்பம் உடையவர்களே, அறம் வேண்டுமாயின், இரப்பாரை `அவர் நல்லர் இவர் தீயர்` என அவரது தகுதி வேறுபாடுகளை ஆராயாது யாவர்க்கும் இடுங்கள். உண்ணும் காலத்தில் விரையச் சென்று உண்ணாது, விருந்தினர் வருகையை எதிர் நோக்கியிருந்து பின்பு உண்ணுங்கள். காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை உண்ணும்பொழுது, தம் இனத்தையும் அழைத்துக்கொண்டு உண்ணுதலைக் காணுங்கள்; கண்டீராயின், முன்னோர் தேடிவைத்தனவும், நீவிரே முன்னே தேடி வைத்தனவும் ஆகிய பொருளைப் பொன்காக்கும் பூதம்போல வறிதே காத்திராது சுற்றத்தார் பலர்க்கும் உதவுங்கள்.
***************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத் தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!