http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday, 2 April 2012

திருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:23: கல்வி (பாடல்கள் :10)



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

விநாயகர் வணக்கம்...............................................................பாடல்கள்: 001
பாயிரம். பதிக்க வரலாறு.......................................................பாடல்கள்: 039
முதல் தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்.....................பாடல்கள்: 056
முதல் தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு .....................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு ....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்.............................பாடல்கள்: 030
முதல் தந்திரம்:பதிக எண்:05: யாக்கை நிலையாமை.....பாடல்கள்: 025
முதல் தந்திரம்:பதிக எண்:06: செல்வம் நிலையாமை....பாடல்கள்: 009
முதல் தந்திரம்:பதிக எண்:07: இளமை நிலையாமை......பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:08: உயிர் நிலையாமை...........பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:09: கொல்லாமை.....................பாடல்கள்: 002
முதல் தந்திரம்:பதிக எண்:10: புலால் மறுத்தல்.................பாடல்கள்: 001
முதல் தந்திரம்:பதிக எண்:11: பிறன்மனை நயவாமை.....பாடல்கள்: 003
முதல் தந்திரம்:பதிக எண்:12: மகளிர் இழிவு......................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:13: நல்குரவு................................பாடல்கள்: 005
முதல் தந்திரம்:பதிக எண்:14: அக்னி காரியம்.....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:15: அந்தணர் ஒழுக்கம்............பாடல்கள்: 014
முதல் தந்திரம்:பதிக எண்:16: அரசாட்சி முறை.................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:17: வானச் சிறப்பு......................பாடல்கள்: 002
முதல் தந்திரம்:பதிக எண்:18: தானச் சிறப்பு.......................பாடல்கள்: 001
முதல் தந்திரம்:பதிக எண்:19: அறஞ் செய்வான் சிறப்பு...பாடல்கள்: 009
முதல் தந்திரம்:பதிக எண்:20: அறஞ் செயான் திறம்........பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:19: அன்புடைமை......................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:20: அன்புசெயவாரை அறிவன்சிவம்:பாடல்கள்: 010

முதல் தந்திரம்:பதிக எண்:19: அன்புடைமை......................பாடல்கள்: 010
======================================================(289+010=299)
முதல் தந்திரம்: 27-பதிகங்கள்(பாடல்கள்:293+39+1=333)
பதிகம் எண் :23.கல்வி (10பாடல்கள்)

பாடல் எண் : 1
குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. 

பொழிப்புரை :  மாசில்லாத, உயர்ந்த கல்வியை யான் கற்றேன்; அதனால் உயிர் உடலோடு கூடிநின்றேனாய், அறியத்தக்க பொருளை அறிந்தேன்; அதன் பயனாக இறைவனை உள்ளத்திலே இருத்தத் தெரிந்தேன். அதனால், அவனும் மீண்டுபோகாதவனாய் என் உள்ளத்திலே வந்து புகுந்து நின்றான்.
***************************************************
பாடல் எண் : 2
கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.

பொழிப்புரை :  கல்வியைக் கற்ற அறிவினையுடையோர் அவ்வறிவால் கருதியுணருங் காலத்து, கல்வியைக் கற்ற அறிவினை உடையோர் பலரது உள்ளத்திலும் சிறப்பாக ஒரு கண் இருத்தல் புலனாகும். இனி அக்கற்ற அறிவினையுடையோர் ஆராய்ந்து சொல்லுகின்ற கல்வியறிவுரை, பாலை நிலத்திலே கயல்மீனைப் பிறழச் செய்தாற் போலும் நன்மையைப் பயக்கும்.
***************************************************
பாடல் எண் : 3
நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன் றிலாத மணிவிளக் காமே. 

பொழிப்புரை :  இளமை உள்ள பொழுதே என்றும் ஒரு பெற்றி யனாய் நிற்கின்ற சிவபெருமானது திருவடிச்சிறப்பைத் தெளிவிக் கின்ற நூல்களைக் கற்கின்ற செயல்களைத் தப்பாது செய்யுங்கள்; அவ்வாறு கற்றலானே பாவங்கள் பற்றறக்கழியும்; பின்பு அக்கல்விகள் வெறுங்கல்வியாய் ஒழியாதவாறு அத்திருவடிகளை வணங்குங்கள்; வணங்கினால் அவை, தன்னை ஆக்குதற்கும், தூண்டுதற்கும் பிறிதொன்றனை வேண்டாது இயல்பாகவே என்றும் ஒளிவீசி நிற்கும் மணிவிளக்குப் போல நின்று உங்கட்கு உதவுவனவாம்.
***************************************************
பாடல் எண் : 4
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார்
எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமு மாமே. 

பொழிப்புரை :  கல்வியைக் கற்றவர்களிலும் சிலர் (அதன் பயனாகிய இறைவழிபாட்டினைக் கொள்ளாமையால்) வாளா இறந்தொழிகின்றனர். இனிக் கற்றதன் பயனாகிய இறைவழிபாடு உடையவர் இறையின்பத்தை இப்பொழுதே அன்பினால் நுகர்கின்றனர். ஆகையால், கல்வியைக் கற்கின்ற நீவிர் இரவும் பகலும் இறைவனைத் துதியுங்கள். அவ்வாறு துதித்தால் அவனது சத்தி உள்நின்று தாங்குவதாகிய அருள் உடம்பும் உங்கட்குக் கிடைக்கும்.
***************************************************
பாடல் எண் : 5
துணையது வாய்வருந் தூயநற் சோதி
துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வருந் தூயநற் கந்தம்
துணையது வாய்வருந் தூயநற் கல்வியே. 

பொழிப்புரை :  உயிர்கட்குச் செல்கதிக்குத் துணையாய் வருகின்ற இறைவன், என்றும் உறுதுணையாகப் பற்றுமாறு நல்லாசிரியரால் அறிவுறுத்தப்படுகின்ற தூய நல்ல உறுதிச் சொல்லே (உபதேச மொழியே)யாய் நிற்பன். அச்சொல்லும் மலரோடு ஒட்டியே வருகின்ற மணம்போலத் தூயநல்ல கல்வியோடு ஒட்டியே வருவதாம்.
***************************************************
பாடல் எண் : 6
நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினாற் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.

பொழிப்புரை :  வருந்தியாயினும் நூல் ஏணியைப்பற்றி ஏறுவோர் மதிலின் உச்சியை அடைந்து கோட்டையைப் பிடிப்பர். அது செய்யமாட்டாதார் பக்கத்தில் உள்ள சில வழிகளைப்பற்றி ஏறின் இடையே நின்று பயன்பெறார். அதுபோல நுண்ணிதாயினும் மெய்ந்நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் ஆன்மலாபமாகிய முடிந்த பயனைப் பெற்று இன்புறுவர். அதுமாட்டாது அயலாகிய மயக்க நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் பிற சில சிறுபயன்களைப் பெறுதலோடு ஒழிவர்; ஆன்மலாபத்தைப் பெறார். இன்னும் ஓர் உணவுப் பொருளைக் காப்பவர் கையில் கோல் ஒன்றை உடையாராய் இருப்பின் அப்பொருளைக் கவர எண்ணும் பறவைகள் அணுகமாட்டா. அதுபோல மெய்யறிவு உடையாராய் இருப்பாரது மனத்தை ஐம்புலன்கள் அலைக்க அணுகா. இவற்றையெல்லாம் அறியாது மக்கள் அறியாமையுள் நின்று மயங்கு கின்றார்களே, இஃது இரங்கத்தக்கது!
***************************************************
பாடல் எண் : 7
ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூல்ஏணி யாமே

பொழிப்புரை :  பகலவனது கதிர்கள் எங்கும் பரவி நிற்பினும் தூயதாகிய சூரியகாந்தக் கல்லே அதனால் நெருப்பை உமிழ்வதாகும். அதுபோல, இறைவன் திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் கற்றவரே அத்திருவருளால் இறைவனைக் காண்பவராவார். ஆகவே, இளம்பிறையை அணிந்த சிவபெருமானை அடையும் ஆற்றலுடையார்க்குப் பொருந்திய மனம் நிறைந்த மெய்ந்நூல்களே ஏணிபோல உதுவுவனவாம்.
***************************************************
பாடல் எண் : 8
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. 

பொழிப்புரை :  வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன். (அறியாமையை மிகுவிப்பன் என்பதாம்)
***************************************************
பாடல் எண் : 9
பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

பொழிப்புரை :  யாதொரு செயலாயினும் அது முற்றுப் பெறுகின்ற அந்நிலைமையெல்லாம் முதற்கடவுளது திருவருள் பெற்றவழியே ஆவதாம். `எல்லாவற்றையும் முடிக்க வல்ல வன்மையை உடை யோம்` எனத் தம்மை மதித்துக்கொள்கின்ற தேவரேயாயினும், அவனது இயல்பை உணர்த்தும் நூல்களைக் கற்றவரே அவனது பேரின்பத்தை அடைந்தனர்; ஏனையோர் அடைந்திலர். அதனால், நீவிர் நல்லதொரு துணையைப் பற்றவேண்டின், சிவபெருமானையே அறிந்து பற்றுதல் வேண்டும்.
***************************************************
பாடல் எண் : 10
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
துடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. 

பொழிப்புரை :  சிவபெருமான் ஊழிகள் பலவற்றிலும் கடல், மலை, ஐம்பூதங்களின் உரு முதலியவற்றிற் கலந்திருப்பினும், கல்வியாற் கனிந்துள்ளாரது நெஞ்சத்தையே தான் வாழும் இல்லமாகக் கொண்டுள்ளான்.
***************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத் தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே! அன்புடன் கே எம் தர்மா.

1 comment:

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!