பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
========================================================================
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்..........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:10: திதி.................................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:11: சங்காரம்.......................................பாடல்கள்: 010
================================================(பாடல்கள்: 084 + 010 = 094 )
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
========================================================================
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006 இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்..................பாடல்கள்: 001 இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்..........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:10: திதி.................................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:11: சங்காரம்.......................................பாடல்கள்: 010
================================================(பாடல்கள்: 084 + 010 = 094 )
இரண்டாம் தந்திரம்- பதிகஎண்:11. சங்காரம்(பாடல்கள்:10)
பாடல் எண் : 1
அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.
வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.
பொழிப்புரை : சிவபெருமான் உலகம் முழுவதையும் அழித்ததும், கடல்நீரை மிக்கு வாராதவாறு அடங்கியிருக்கச் செய்ததும், முப்புரத் தவர் முதலிய அசுரர்களை அழித்ததும் நெருப்பை உண்டாக்கியே யாம். அதனால், நெருப்பே அவன் கையம்பாய் விளங்குகின்றது.
=============================================
பாடல் எண் : 2
இலயங்கள் மூன்றினுள் ஒன்றுகற் பாந்தம்
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந்தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலந் தான்வெந் ததுவே.
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந்தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலந் தான்வெந் ததுவே.
பொழிப்புரை : மூவகைச் சங்காரங்களுள் `கற்ப சங்காரம்` என்பதும்
ஒன்று. அதில் எல்லாப் பொருளும் சங்கரிக்கப் பட்டொழிந் தமையை ஏனைய இரண்டு
சங்காரங்களில் நிற்குமாற்றால் நான் கருதியுணர்ந்துகொண்டேன். கால
வயப்பட்டுநிற்கும் உலகம் உலை யில் இடப்பட்ட அரிசிபோல்வதாம். ஆகவே, என்றும் அழியாதன போல மலைவைத் தந்து நிற்கும் இப்பெரு நிலம் முடிவில் அழிந் தொழிந்தது.
=============================================
பாடல் எண் : 3
பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.
பொழிப்புரை : பல உயிர்கட்கு இடம் அளிக்கின்ற அகன்ற நிலமும், குளிர்ந்த எட்டு உயர்மலைகளும், நீரை
மிகத் தருகின்ற எழுகடல் நீர்ப்பரப்பும் முதலாக அனைத்துப் பொருள்களையும்
சிவபெருமான் தனது நினைவு மாத்திரத்தால் காய்தலைச் செய்யும் நெருப்பை வைத்து
அழித்து உருவில்லனவாகச் செய்துவிடுவான். இதில் வியப்பில்லை.
=============================================
பாடல் எண் : 4
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.
பொழிப்புரை : மேகங்கள் மலைக்கண் தங்குதலால் நிலத்தில் இறங்கிய நீராகிய குலமகள் உலகத்தில் தங்கியும், கடலாகியும் நின்று இனிய உணவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறைவன் `நாதம்` என்னும் அவ்விடத்ததாகிய குண்டத்தில் விளங்கும் மேலான நெருப்பை வளர்த்துவிட்டான். அஃதாவது, `அழித்தல் தொழிலை மேற்கொண்டான்` என்பதாம்.
=============================================
பாடல் எண் : 5
நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.
பொழிப்புரை : மூவகைச்
சங்காரத்துள் நித்திய சங்காரமாவது அன்றாடம் கீழாலவத்தையில்
அறிவிழந்திருத்தல். பிறவி எடுத்த எல்லா உயிர்கட்கும் பொதுவாக வைக்கப்பட்ட
ஆயுட் சங்காரமாவது விழித்தல் இல்லாத உறக்கமாகிய இறப்பாகும். சருவ
சங்காரமாவது ஆன்மா செயலற்று ஆணவத்திலே அழுந்திச் சடம்போலக் கிடத்தல்.
அதனால், உயிரை நீங்கா இன்பத்தில் செலுத்துதலாகிய திருவருட் சங்காரமாகிய அருளலே இறைவனது உண்மை நிலையைப் பெறுதலாகும்.
=============================================
பாடல் எண் : 6
நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன்அருள் உண்மையே.
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன்அருள் உண்மையே.
பொழிப்புரை : இன்னும் வேறொருவகையாற் கூறுமிடத்து, `நித்திய சங்காரம், தூலம், சூக்குமம்` என்னும் இரண்டு உடம்புகள் உள்ளபொழுதும் அவற்றோடு ஒட்டாது நீங்கி நிற்றல்` எனவும், `ஆயுட் சங்காரம் தூல உடம்பு அழிந்தொழிதல்` எனவும், `சருவ சங்காரம் சூக்கும உடல் நீங்குதல்` எனவும் கூறுதற்குரியன. எனவே, திருவருட் சங்காரமாகிய அருளலே சிவப்பேறாகும்.
=============================================
பாடல் எண் : 7
நித்தசங் காரங் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துள் தோய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துள் தோய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.
பொழிப்புரை : இனி, நித்திய சங்காரம் தூல உடம்பொடு நிற்கும் பொழுதே அதனொடு கூடாதிருக்கச் செய்வதென்றால், ஆயுட் சங்காரம் அதனை அடியோடு விடச் செய்வதாகும். சருவ சங்காரம் சூக்கும உடம்பையும் விடப்பண்ணுவது. ஆகவே, திருவருட் சங்கார மாகிய அருளலே சிவனை அடைதல் என்பது கடைப்பிடித்து உணரத்தக்கது.
=============================================
பாடல் எண் : 8
நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமுன் நாலாம் உதிக்கிலே.
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமுன் நாலாம் உதிக்கிலே.
பொழிப்புரை : நித்திய சங்காரம், அன்று உழைத்த உழைப்பினால் உண்டாகிய இளைப்பினை ஆற்றக் காண்டலால், ஆயுட் சங்காரமும் அப்பிறப்பில் உண்டான இளைப்பை ஆற்றுதற்பொருட்டு என்றும் உளதாய்நிற்கும். `சருவ சங்காரத்தில் எல்லாக் கருவிகளும் முற்ற அழிந் தொழிவதால், அதுவே சிவப்பேறு போலும்` எனின், அன்று; திருவருட் சங்காரம் உண்டாய வழியே `பிறத்தல், வாழ்தல், இறத்தல்` என்னும் மூன்றும் அற்ற நான்காம் நிலையாகி `வீடுபேறு` எனப்படும் சிவப்பேறாம்.
=============================================
பாடல் எண் : 9
பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.
பொழிப்புரை : மாயை வித்தாக, அதனினின்றும்
முளைக்கின்ற பயிராய் உலகம் தோன்றும். பின்பு அப்பயிராகிய உலகம் வித்தாகிய
அம்மாயையினிடத்தே ஒடுங்குவதாம். அவ்வாறு ஒடுங்கினும், என்றும்
உளதாகிய மாயை ஒன்றிலும் ஒடுங்குதல் இல்லை. உலகம் மாயையின் ஒடுங்குதலாகிய
சருவ சங்காரமின்றிப் பிரகிருதிகாறும் அழிவதாகிய அந்தச் சங்காரகாலத்திற்கு
உட்பட்டே மால் அயன் செய்திகளாகிய காத்தல் படைத்தல்கள் நிகழும். ஆகவே, தத்தம் கால எல்லையில் மடிந்து போகின்ற பயிர்போல, உலகம் முழுவதும் ஒடுங்குவது மாயையிலல்லது பிரகிருதியில் அன்று.
=============================================
பாடல் எண் : 10
தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே.
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே.
பொழிப்புரை : நிலையில்லாததாகிய உலகத்தை உண்டாக்கி நிறுத்திய சிவன், அதனையே உயிர்களுக்கு என்றும் வாழிடமாக வையாது அழிய வைத்து, அழிவின்றி வைத்த வாழிடம் ஒன்று உள்ளது. அதனை அறிந்து அடைதற் பொருட்டே உடம்பையும், பல உட்கருவிகளையும், நூல்களையும் தந்தருளினான். அவற்றைக் கொண்டு, தற்போதத்தால் ஈண்டும் வினைகளை ஈண்டாதபடி அழித்து, அந்த வாழிடத்தை அடைந்து இன்பத்தை நுகர்மின்கள்.
=============================================
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!