பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
=======================================================================
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006 இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்..................பாடல்கள்: 001 இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்..........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
=================================================(பாடல்கள்: 045 + 030 = 075 )
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:9. சருவ சிருட்டி(பாடல்கள்:16-30/30)பாகம்-II
பாடல் எண் : 16
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.
பொழிப்புரை : ஒருவனும் ஒருத்தியுமான இருவர் (சிவனும், சத்தியும்) விளையாடலை மேற்கொண்டுள்ளார்கள். அவ் விளை யாடல் அவர்கட்குப் பொழுது போக்காகாது, எண்ணிலா
உயிர்கட்கு எண்ணிலாப் பயனை விளைப்பது. அப்பயனும் உயிர்களின் பக்குவ
நிலைதோறும் அதற்கேற்ப வேறு வேறாய் விளைவனவாம். உயிர்கள் வீடுபெறின், அவ்வொருவன் ஒருத்தியரது உலகத்தின் தொழிற்பாடு முற்றுப்பெறும்.
=============================================
பாடல் எண் : 17
புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.
பொழிப்புரை : `உருத்திரன், மால், அயன்` என்னும் மூவரும் தம்தம் எல்லை யளவும் உயிர்க்குயிராய் நிறைந்து நின்று அங்குள்ள நிலைகளையெல்லாம் நன்குணர்வர். ஆயினும், அவரெல்லாம் எங்கும் அவ்வாறு நின்று உணரும் சிவபெருமானாகிய தலைவனுக்கு உரிய அடியரேயாவர்.
=============================================
பாடல் எண் : 18
ஆணவச் சத்தியுள் ஆம்அதில் ஐவருங்
காணியர் காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்
தாணவம் நீங்கா தவரென லாகுமே.
காணியர் காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்
தாணவம் நீங்கா தவரென லாகுமே.
பொழிப்புரை : ஆணவ மலத்தொடக்கினுள் அகப்பட்டு நிற்கின்ற அந்நிலையில், அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் நிற்கின்ற அயன், மால், உருத்திரன், சீகண்டர், அனந்தர் என்னும் ஐவரும் பிறரால் கண்காணிக்கப்படும் காரியக் கடவுளரே. இனிக் காரணக் கடவுளராவார், மேற்சொல்லிய
அந்நிலைக்குப் பின்னர் தாம் முன்னர் மேற்கொண்டிருந்த அத்தொழில்களாலே
பக்குவம் முதிரப்பெற்று ஆணவம் நீங்கி அதன் வாதனை மாத்திரம் உடையராய்ச்
சுத்த மாயையில் உடம்பு முதலியவற்றைப் பெற்று நிற்பவர்களே.
=============================================
பாடல் எண் : 19
உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்றும்மா மாயோ தயம்விந்து
பெற்றவந் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.
மற்றைய மூன்றும்மா மாயோ தயம்விந்து
பெற்றவந் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.
பொழிப்புரை : நிலமுதல் மாயை ஈறாக உள்ள முப்பத்தொரு தத்துவங்களும் அசுத்த மாயையின் காரியங்கள். அதற்கு மேல் உள்ள ``சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம்`` என்னும் மூன்றும் `மகாமாயை` எனப்படும் சுத்த மாயையின் காரியங்கள். சாதாக்கியத்திற்குமேல் உள்ளது விந்து. அவ்விந்துவைப் பெற்ற அந் `நாதம்` என்னும் தத்துவம், பரவிந்துவிற் பிறத்தலால், யாவும், எல்லாத் தத்துவங் களையும் தனது உடைமையாக உடைய பராசத்தியோடு கூடிய பரம சிவனது பழைய திருவிளையாடலேயாம்.
=============================================
பாடல் எண் : 20
ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.
பொழிப்புரை : `வானம், காற்று, தீ, நீர், நிலம்` என்னும் பூதங்கள் ஐந்தற்கும் முறையே, `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என்னும் ஐவரும் தலைவராவர் என்று உணர். இவர் அனைவரும், யாதொரு
பொருளையும் விட்டு நீங்காது நிறைந்து நிற்கும் சிவசத்தி பதிய
ஒருங்குதோன்றியவரே. இவருள் மகேசுரன் முதலிய நால்வரும் உருவம் உடையவர்.
(சதாசிவன் அருவுருவினன்) இவர் ஐவர் தொழிலும், மேற்கூறிய ஆகாயம் முதல் பூமி ஈறான பூதங்களைக் காரியப்படுத்தலாம்.
=============================================
பாடல் எண் : 21
அளியார் முக்கோண வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம் அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்தும்செய் வாளே.
அளியார் திரிபுரை யாம் அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்தும்செய் வாளே.
பொழிப்புரை : சுத்தமாயையின் காரியமாகிய பரவிந்து, அபரநாதம், அபரவிந்து என்னும் மூன்று நிலைக்களமாகத் தோன்றும் சாதாக்கிய தத்துவத்தினைத் தோற்றுவிக்கும். அருள் காரணமாக, `திரிபுரை` என்னும் சத்தி தோன்றுவாள். அவளே அத்தத்துவத்தின் தலைவனாகிய சதாசிவனோடு ஒற்றுமைப்பட்டு நின்று, அருளல் முதலிய ஐந்தொழிலையும் செய்வாள்.
=============================================
பாடல் எண் : 22
வாரணி கொங்கை மனோன்மனி மங்கலை
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே.
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே.
பொழிப்புரை : அத்திரிபுரையே `மனோன்மனி` எனப்படுவாள். அவள் நித்திய சுமங்கலை. எல்லாவற்றிற்கும் காரணி. அதுவேயன்றிக் காரியப்பட்ட பொருள்களிலும் கலந்து நிற்பாள். `உமை, வாணி, திருமகள், மகேசுவரி` என்றும் பாகுபட்டு நிற்பாள். உயிர்கட்குச் சுட்டறிவையும், சுட்டிறந்த வியாபக அறிவையும் தருவாள்.
=============================================
பாடல் எண் : 23
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே.
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே.
பொழிப்புரை : மகேசுவரி முதலாகப் பாகுபட்ட அச்சத்தியே தானாய் நிறைந்த மகேசுரனே, உருத்திரன், திருமால், அயன் என்பவரிடத்தும் சென்று உலாவி அவர்களேயாயிருந்து அவர்களது தொழில்களை இயற்றுவிப்பன்.
=============================================
பாடல் எண் : 24
ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே.
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே.
பொழிப்புரை : முன்னை மந்திரத்திற் கூறியவாற்றால், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவனும், அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் ஆகிய அனைத்திலும் நீக்கமற நிறைந்து இருப்பவனும் ஆகிய முதற்கடவுள் ஒருவனே என்பது தெற்றென விளங்கும்.
=============================================
பாடல் எண் : 25
செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர்க் கூடிய கூட்டத்தும்
ஐந்தார் பிறவி அறுத்துநின் றானே.
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர்க் கூடிய கூட்டத்தும்
ஐந்தார் பிறவி அறுத்துநின் றானே.
பொழிப்புரை : எங்கள் இறைவனாகிய சிவபெருமானே செந்தாமரை மலரில் உள்ள அழகிய பிரமதேவனும், மேகம் போலும் நிறத்தையுடைய திருமாலும், நெருப்புப் போலும் நிறத்தையுடைய உருத்திரனுமாவான். ஆதலின், அவனே மாயை என்னும் முதற் காரணத்தினாலும், மகளிரை ஆடவர் கூடும் கூட்டமாகிய துணைக் காரணத்தினாலும் ஐந்து கூறாய்ப் பொருந்தும் உடம்புகளைத் தோற்று வித்து நிற்கின்றான்.
=============================================
பாடல் எண் : 26
தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவி குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே.
கூடும் பிறவி குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே.
பொழிப்புரை : பல்கோடி அண்டங்களிலும் தனக்காவதொரு புக்கிலை (நிலையான வீட்டைத்) தேடி அலைகின்ற சீவான்மாவின் பொருட்டு, உடலும், உயிரும்
கன்மத்தால் தொடர்பு கொள்கின்ற பல பிறவிகளை அவ்வவ்வுயிர்க்கு ஏற்றவாறு
மேற்கூறியவற்றால் மாயையினின்றும் தோற்றுவிக்கின்ற பரமான்மாவாகிய
சிவபெருமான், தான் தனது திவ்வியாகமங்களுள் கூறியுள்ள அப்படைப்பு முறைகளைத் தெளியமாட்டாது அவற்றொடு மாறுபடுகின்றவரது உள்ளத்துள்ளே நின்று, அவரது அறிவோடே ஒத்துக் கூறிய பல சமயக் கொள்கைகளையும் யான் அறிவேன்.
=============================================
பாடல் எண் : 27
ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே.
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே.
பொழிப்புரை : `படைத்தல், காத்தல், அழித்தல்` என்னும் தொழில்களை இயற்றுவோரும், அறிவுடைப் பொருள், அறிவில் பொருள் என்பவற்றில் தங்கிநின்று அவற்றை இயற்றுவோரும் பல்கோடி தேவர்களாகச் சொல்லப்படினும், அவர் யாவரும் சிவபெருமான் ஒருவனது ஆணையைத் தாங்கி அவன் குறிப்பின்வழி நின்று இயங்கும் ஒரு குழாத்தினரே யாவர்.
=============================================
பாடல் எண் : 28
நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே.
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே.
பொழிப்புரை : தலைவனாகிய சிவபெருமான் ஒருவனும், அவனது அருட்கு உரியராயினமையின் நல்லோராகிய `மால், அயன்` என்னும் இருவரும் ஆக மூவரும் தீயது, நல்லதுமாகிய முக்குணங்களைக் கூட்டிக் குழைத்து உலகை ஆக்குகின்றனர். எனினும், ``அடியேங்கட்கு இடும் பணி யாது`` என்று
விண்ணப்பித்து அவற்றைச் செய்ய இசைந்து நிற்கும் நல்ல இருவருக்கு நாதனாகிய
சிவபெருமானே அவர் செய்யத் தக்க பணியை அருளிச் செய்கின்றான்.
=============================================
பாடல் எண் : 29
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.
பொழிப்புரை : `எண்பத்துநான்கு நூறாயிரம்` எனச் சொல்லப் படும் வேறுபாடுகளை உடைய பிறவிகள் பலவும் மேற்கூறிய முறையிலே உடம்புகளாய் உருவெடுத்து வளர்ந்து, அவைதாமே
உயிர் போல இயங்கிநிற்கும். அதனை அறியாது பொய்ச்சமயங்களைப் பொருந்தி நின்று
உலகத் தோற்றத்தை மேற்காட்டியவாறு பலபடத் தம்முள் முரணிக் கூறுவோர்க்குச்
சிவபெருமான் அவரது அறிவை இன்று உள்ளவாறே அறியாமையால் மூடிவைப்பவனாகின்றான்.
=============================================
பாடல் எண் : 30
ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொளி பொங்கிய நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.
போதித்த வானொளி பொங்கிய நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.
பொழிப்புரை :அசுத்த மாயையில் உளவாகின்ற தத்துவ தாத்துவிகங்களோடு ஒத்த தத்துவ தாத்துவிகங்களும், பிறப்பு வகைகளும் சுத்த மாயையின்கண்ணும் உளவாவனவாம்.
=============================================
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!