http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday, 28 April 2012

திருமந்திரம்-தந்திரம் 02-பதிகம்:13. அனுக்கிரகம் (பாடல்கள்:09)







 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
========================================================================

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்..................பாடல்கள்: 001 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்..........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:10: திதி.................................................பாடல்கள்: 009

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:11: சங்காரம்.....................................பாடல்கள்: 010 

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:12: திரோபவம்.................................பாடல்கள்: 009

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:13: அனுக்கிரகம்...............................பாடல்கள்: 009

=================================================(பாடல்கள்: 103 + 009 = 112 )
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:13.  அனுக்கிரகம் (பாடல்கள்:09)

பாடல் எண் : 1
எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே. 

பொழிப்புரை :  `காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம்` என்னும் ஐம்பெரும் பூதங்களும் ஒருங்கியைத்துப் பின்னிய `உயிருக்கு இடம்` எனச் சொல்லப்படுகின்ற இந்த உடம்பாகிய பைக்குள் உயிர்களை முன்பு அடைத்துக் கட்டிவைத்துப் பின்பு அவிழ்த்து வெளிவிடுகின் றான் சிவபெருமான்.
=============================================
பாடல் எண் : 2
உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே.

பொழிப்புரை :  தம் தலைக்குப் பன்னிரண்டங்குலத்திற்கு மேலாய் ஓங்கி, அறிவு வடிவாய் ஒலிக்கின்ற சிவபெருமானது திருவடிச் சிலம்பொலியையே விரும்பிக் கேட்டு அதனால், இன்பம் அடை பவர்கட்கு இறப்பு இல்லை. உலகமாகிய தேர்க்கு உறுப்புக்களாகிய நிலம் முதலிய பூதங்களும், முச்சுடர்களும் ஆகிய பொருள்களையும் படைத்து, அவற்றால் அத்தேரினைப் பண்ணி இயங்க விடுகின்ற தச்சராகிய வினைஞர்களைப் படைப்பவனும் அவனேயாகலின்.
=============================================
பாடல் எண் : 3
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுஇது வாமே. 

பொழிப்புரை :  மட்கலத்தை வனைகின்ற குயவன் மண்ணைக் கொண்டு ஒருவகைக் கலத்தையே வனையாது, குடம் சால் கரகம் முதலாகப் பல்வேறு வகைப்பட வனைவன். அதுபோலவே, எங்கள் சிவபெருமானது இச்சையால் தளர்வில்லாத உலகம் பல்வேறு வகைப்படத் தோன்றும்.
=============================================
பாடல் எண் : 4
விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்கும்
கொடையுடை யான்குணம் எண்குண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

பொழிப்புரை :  நன்மையே (மங்கலமே) வடிவாய் உள்ள சிவ பெருமான் உலகியிலின் வேறுபட்டவன்; அஃது அவன் இடபத்தையே ஊர்தியாகவும், பூதங்களையே உறுதிச் சுற்றமாகவும் கொண்டிருத்த லால் விளங்கும். அதனால், உயிர்களின் வினைகட்குத் தக்க பரிசாக உலகத்தைப் படைத்துக் கொடுக்கும் கொடையாளனும், கொடுத்து அவ்வுயிர்களின் அறிவிற்கறிவாய் நின்று வினைப் பயனைத் துய்ப்பித்து அவை செவ்வி முதிர்ந்த காலத்தில் வீடுபெறச் செய்கின்றவனும் அவனே.
=============================================
பாடல் எண் : 5
உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே. 

பொழிப்புரை :  சிவபெருமான் `சுத்தம், மிச்சிரம், அசுத்தம்` என்பனவாக உலகங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நல்லூழி, தீயூழி, பொதுவூழி` என்பனவாகக் காலங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நிலம், நீர், தீ, வளி, வான்` எனப் பூதங்களை ஐந்தாகப் படைத்ததும், உடம்புகளை, தேவ உடம்பு, மக்கள் உடம்பு முதலாக ஏழு வகையாகப் பலவேறு வகைப்படப் படைத்ததும் எல்லாம் உயிர்கள் உய்ய வேண்டும் என்று விரும்பியேதான்.
=============================================
பாடல் எண் : 6
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.

பொழிப்புரை :  சிவபெருமான் மேற்கூறியவாறு பலவற்றையும் படைத்து, அவற்றுள் சித்துப்பொருளை அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு, தான் தலைவனாய் நின்று, அவையனைத்தையும் ஆள்கின்றான்.
=============================================
பாடல் எண் : 7
ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.

பொழிப்புரை :  மேற்கூறிய பலவற்றையும் படைத்த சிவபெருமான், படைத்ததனோடு ஒழியாது, அவற்றைக் காத்தும் நிற்கின்றான். அதனால், அருளலும் அவனது கடன்` என்பது குறிப்பெச்சம். முதல் மூன்று அடிகள் அனுவாதம்.   இதனால், ஏதுக்காட்டி மேலது வலியுறுத்தப்பட்டது.
=============================================
பாடல் எண் : 8
உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோதமாமே. 

பொழிப்புரை :  ஆன்ம அறிவினுள் நிற்கின்ற அறிவாயும், ஆன்ம அறிவின்வழி உடலை இயக்குதலின் உடலாயும், தேவர்களும் விரும்பி அடையும் இன்பப் பொருளாயும், `மண்ணுலகத்தேவர்` (பூசுரர்) என்று சொல்லப்படுகின்ற அந்தணர்கள் வேதம் முதலிய வற்றால் புகழ்கின்ற அருட்கோலத்தை உடையவனாயும் உள்ள சிவபெருமானே, கண்ணில் உள்ள கருமணி, உடல் செல்லுதற்குரிய நன்னெறியைக் காட்டுதல்போல, உயிர் செல்லுதற்குரிய ஞான நெறியைக் காட்டுகின்ற பேராசிரியனாய் வருவன்.
=============================================
பாடல் எண் : 9
ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே. 

பொழிப்புரை :  ஒருவராலும் அறியப்படாத சிதாகாசத் திருமேனியனாகிய சிவபெருமான், மண் முதலிய பூதக் கூட்டுறவாலாகிய மானுட உடம்பிலே நிற்கின்ற உயிரின்கண், நீரிற் கலந்த பால்போல வேறற நின்று, செவ்விபெற்ற உயிர்கட்கு அருள் புரிகின்ற செம்மையை அறியாமையால் மறந்தொழியாது, அறிவால் அறிந்து நின்று, அதனால் விளைகின்ற இன்பத்தையும் நான் பெற்றேன்.
=============================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரமாம் திருவாசகத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருவாசகரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!