பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை............................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி .................................பாடல்கள்: 013
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
========================================================(078+008=086)
மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:10. அட்டாங்க யோகப்பேறு(பாடல்கள்:8)
பாடல் எண் : 1
போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடும்
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடும்
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.
பொழிப்புரை : மலர்களை விரும்புதலால், அவை பொருந்தப் பெற்ற புரிந்த சடையினையுடைய சிவபெருமானது திருவடியை எத்துணைச் சிறிதளவு விரும்புவராயினும், அவர் சுவர்க்கத்தையே அடைவர்; நிரையம் புகார், இறைவியை ஒருபால் விரும்பிவைத்து நடனம் புரிகின்ற அப்பெருமான், தன்னை விரும்புபவன் எவனாயினும் அவனுக்கு `இவன் விரும்பியது யாது` என்று நினைந்து அதனை அருள்செய்பவன் ஆதலின்.
=======================================
பாடல் எண் : 2
பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே.
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே.
பொழிப்புரை : சிவபிரானது திருவடியைத் துணையாகப் பற்றி அன்பு செய்து, அவனது புகழைக் கற்றும், கேட்டும் ஒரு பெற்றியே ஒழுகுவார்கட்கு, பின்னர், முனிவர் குழாம் முழுவதும் சுவர்க்க லோகத்தே முன்வந்து எதிர்கொள்ள ஒளிமயமாகிய அவ்வுலகத்தை அடைதல் கூடும்.
=======================================
பாடல் எண் : 3
வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.
பொழிப்புரை : மக்கள், மெய் வருத்தத்தைப் பெற்றுத் தவம் செய்தபின் சிவபெருமானது அருளால் விண்ணவர்க்குத் தலைவராய், `வானுலகச் செல்வத்திற்கு உரிமையுடையவர் இவரே` என்று பலரும் புகழும்படி, மத்தளம், குழல் முதலிய வாச்சியங்கள் ஒலிக்க வீற்றிருந்து, தலைவராம் இன்பத்தை அடைவர்.
=======================================
பாடல் எண் : 4
செம்பொற் சிவகதி சென்றெய்தும் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.
பொழிப்புரை : பிராண வாயுவைக் கும்பகம் செய்ததன் பயனாக மக்கள் செம்பொன் மயமான இன்ப உலகத்தில் சென்று சேரும் பொழுது, விண்ணவர் குழாம் வந்து எதிர்கொள்ள, விண்ணுலக மகளிர் தாம் தாம் `எமக்கு அரிதிற் கிடைத்த தலைவன் இவனே` என மைய லுற்றுச் சொல்லுமாறு கலவி இன்பம் மிகப்பெற்று இருத்தல் கூடும்.
=======================================
பாடல் எண் : 5
சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.
பொழிப்புரை : இம்பருள்ளாரை விடுத்து, உம்பருள்ளாரைப் பாவனையால் அடைந்தோர், அதன் பயனாக அவரை உண்மை யாகவே அடையுங் காலத்து, அவ்விடத்துள்ளார், `மக்களுள் இவ்வுயர் நிலையை அடைந்தோன் யாவன்` என்று வியப்புற்று வினாவ, (ஒரு சாரார் ஓர்ந்துணராது வடிவம் ஒன்றே பற்றி) `இவன் சிவபெருமான் தான்` என்று மயங்கிக் கூற, இவ்வாறு அமரர் பலரும் ஒருங்குவந்து எதிர்கொள்ளத் திருநீலகண்டப் பெருமானைக் கண்ட முறைமையே எங்கும் நிகழ்வதாகும்.
=======================================
பாடல் எண் : 6
நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.
பொழிப்புரை : மக்கள் நல்வழி ஒழுகுமாற்றை ஆராய்ந்து, அவரைத் தீவழியினின்றும் நீக்குகின்ற நிறைமொழி யுடையராகிய முனிவர், பின் விண்ணுலகில் எவ்விடத்துச் செல்லினும், அவ்விடம் மண்ணுலகில் மிக்க கொடையுடைய இல்லறத்தவர் வாழ்கின்ற இடம்போலவே எதிர்கொண்டு பேணும் இடமாம்.
=======================================
பாடல் எண் : 7
தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே.
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே.
பொழிப்புரை : சமாதி, பிரத்தியாகாரம், தாரணை, தியானம் இவற்றில் நிற்பாற்கு அவரவரது தியானப் பொருளின் இடமே அடையுமிடமாகும்.
=======================================
பாடல் எண் : 8
காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.
பொழிப்புரை : தாத்துவிகங்களாகிய தனு, கரணம் புவனம், போகம் என்னும் அனைத்துப் பந்தங்களையும் கடந்தபின், அவற்றிற்கு நிரம்பிய காரணமாகிய தத்துவங்கள் ஏழனது இயல்பும் தன் அறிவிடத்தே இனிது விளங்கித் தோன்றவும், இடையறாது கிளைத்து வருகின்ற வினையாகிய காரணம் கெட்டொழியவும் அடைவுபடப் பயின்ற யோகத்தால் மறுமையில் தனது கடவுளோடு ஒப்ப இருத்தல், சமாதியாலே பெறத்தக்கதாம்.
=======================================
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!