http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 6 May 2012

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:11/1 அட்டமாசித்தி (பாடல்கள்:01-25/71) பாகம் I








பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை............................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
========================================================(086+025=111)
மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:11. அட்டமாசித்தி (பாடல்கள்:01-25/71) பாகம்-I
பாடல் எண் : 1
பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையும் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே. 

பொழிப்புரை :  யாவரும் அட்டமா சித்திகளைப் பெற்று, அவற்றை எட்டுத் திக்கிலும் சென்று விளங்கக் காட்டிப் பெருமை பெற்றது, சிவபெருமானைப் பல்லாற்றானும் வழிபட்டேயாம்.
=======================================================
பாடல் எண் : 2
பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே. 

பொழிப்புரை :  ``யான் பெறும் பரிசாவது சிவபெருமானது திரு வடிப் பேறு ஒன்றே`` எனக் குற்றமற உணர்ந்து அவனை யான் அகத்தே தியானித்தேன். ஆகவே, எனக்குப் பெறற்கரிதாய பேறு யாதும் இல்லை; (எல்லாப்பேறும் எளியனவே) அதனால், பிறர் அரியனவாக உணர்கின்ற அட்டமாசித்திகளை அவன் எனக்கு நிரம்பக் கொடுத்துப் பெரும்பயனாகிய பிறவி நீக்கத்தையும் அளித்தருளினான்.

=======================================================
பாடல் எண் : 3
குரவன் அருளிற் குறிவழி மூலன்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

பொழிப்புரை :  யோக குருவின் அருளால் அவன் குறித்த முறைப் படியே மூலாதாரத்தை நோக்கி ஓடப் பார்க்கும் வாயு, அவ்வாறு ஓடாது சத்தித் தானமாகிய இலாடத்திற் சென்று சேரும் அரிய நேரத்தைப் பார்த்து, அவ்வாறு சேரும் வாயுவே துணையாகச் சாம்பவி யோகம் கேசரி யோகங்களைச் செய்வார்க்குப் பெரிய சிவகதி போலக் கிடைப்பது, எட்டாம் சித்தியாகிய வசித்துவமாம்.
=======================================================
பாடல் எண் : 4
காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.

பொழிப்புரை :  ஆகாயம் முதலிய பூதங்களையும், கலை காலம் முதலிய உள்ளந்தக் கரணங்களையும் பற்றி நின்று ஒரு பொருளைச் சுட்டி யறியாமல் வியாபகமாக அறியும் அறிவால், ஒன்றாய், அனாதியே தனக்கு அறிவைத் தருதலை ஒழியாத பதிப்பொருளின் உண்மையை அடைய விரும்பினால், என்றும் அழியாத பரவெளியிற் சேரலாம்.
=======================================================
பாடல் எண் : 5
இருபதி னாயிரத் தேழ்நூறு பேதம்
மருவிய கன்மமாம் மாபந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகும் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே. 

பொழிப்புரை :  கன்மத்தையே பொருந்தச் செய்கின்ற சித்தி காம யோகம், இருபதினாயிரத்து எழுநூறாய் விளங்கும். சித்திகளையே தருகின்ற இவை அனைத்தும் உடல் உழைப்பாவனவன்றி, உணர்வுப் பெருக்கமாதல் இல்லை. இவை இத்துணையாக விரிவன வாயினும், சித்திகளின் தொகை நோக்கி எட்டாய் அடங்கும்.
=======================================================
பாடல் எண் : 6
மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியஓ ரெட்டுப்
பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே. 

பொழிப்புரை :  பன்னிரு கலையுடைய சில அதிசய நிலவுகள் முற்றும் மறைந்து பின் தோன்றும்பொழுது அக்கலைகளில் நான்கு ஒழிந்தேபோக, எட்டே நிலைபெறுகின்றன. அவ்வொழிவு நீங்கி அனைத்துக் கலைகளும் நிலைபெறும் செயலைப் பன்னிரண் டாண்டுகள் அயராது செய்தால், அவ்வாண்டெல்லைக்குள் சித்திகள் கைகூடும்.
=======================================================
பாடல் எண் : 7
நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயா சித்திகள்பே தத்தின்
நீடுந் தூரங்கேட்டல் நீள்முடி வீராறே. 

பொழிப்புரை :  சுற்றத் தொடர்பு யோகத்திற்குத் தடையாகும். யோகமின்றி, நூலறிவு, உலகியலறிவு, இயற்கை நுண்ணறிவு முதலியவற்றுள் ஒன்றினாலும் சித்திகள் கிடைக்கமாட்டா. அவை வேறு வேறாகக் கிடைத்தற்குச் செல்லும் தீர்ந்த யோக கால எல்லையாக நூல்களில் கேட்கப்படுவது, மேற்குறித்த பன்னிரண்டாண்டுகளாம்.
=======================================================
பாடல் எண் : 8
ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாம்
தாழா நடைபல யோசனை சார்ந்திடும்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே.

பொழிப்புரை :  யோகத்தைக் குறைவின்றிப் பயின்றால், ஏழாவ தாண்டில், பிறர் உடன் தொடர இயலாதவாறு காற்றைப் போலக் கடிதிற் செல்லும் நடை உளதாகும். அந்நடையது வேகம் எத்துணைக் காவதம் நடந்தாலும் குறையாது. எட்டாவது ஆண்டில், நரை திரை இருப்பினும் மறைந்து இளமைத் தோற்றம் காணப்படும். ஒன்பதாவது ஆண்டில் உடம்பு தேவ சரீரம்போல ஒளிவிடும்.
=======================================================
பாடல் எண் : 9
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏரொன்றும் பன்னொன்றில் ஈறாகும் எண்சித்தி
சீரொன்று மேலேழு கீழேழ் புவிச்சென்றவ்
வோரொன்றில் வியாபியாய் நிற்றல்ஈ ராறே. 

பொழிப்புரை :  யோகத்தில் பத்தாவதாண்டில் முன்பு இளைத்த உடம்பு பருத்துக் காணப்படும். பதினொன்றாவது ஆண்டில் நெருப்புப்போன்ற உருவினை உடைய உருத்திரனைப் போன்ற செம்மேனியும், எல்லாவற்றையும் வெல்லும் ஆற்றலும் உளவாகும். மேல், `எட்டாவது சித்தி` எனக்குறித்த அது, மேல் ஏழ் உலகம், கீழ் ஏழ் உலகம் இவைகளிற் சென்று அங்குள்ளாரையும் தன்வசப்படுத்தி நிற்றலாம். அது பன்னிரண்டாவது ஆண்டில் எய்தும்.
=======================================================
பாடல் எண் : 10
தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகலும்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே. 

பொழிப்புரை :  எட்டுச் சித்திகளாவன, யோகி ஒருவனே தான் வேண்டியவாறு எட்டுத் தன்மையனாக நிற்றல். அவை அணுவினுள்ளும் அணுவாய் நுழைதல், அண்டத்தினும் பெரியோனாய் அவற்றைக் கடந்து நிற்றல், காற்றினும் நொய்ம்மையனாய் வானத்தில் உலாவுதல், எத்துணை ஆடவர் கூடி எடுப்பினும் எடுக்கமாட்டாத வராம்படி மலை போலத் திண்மை யுடையனாயிருத்தல், நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் செல்லுதல், நினைத்ததை அடைதல், எல்லோராலும் ஏற்றுப் போற்றப்படுதல், யாவரையும் தன்வழிப் படுத்தி நிற்றல் என்பனவாம்.
=======================================================
பாடல் எண் : 11
தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மற்றோர் குறையில்லை
ஆங்கே எழுந்தோன் அவற்றுள் எழுந்துமிக்
கோங்கி வரமுத்தி முந்திய வாறே. 

பொழிப்புரை :  யோகி, அணிமாவால் தான் நினைத்த உயிருட் புகுந்தவிடத்தும் மகிமாவால் அவற்றைக் கடந்து நிற்கும் தன்மை குறைபடுதல் இல்லை. எவ்வாறெனில், மகிமா நிலையில் நின்ற அவனே அணிமாவால் அவ்வுயிர்களுள் செறிந்துவர, அவற்றைக் கடந்து நிற்கும் நிலை திரிபின்றி நிற்கும் ஆகலான்.
=======================================================
பாடல் எண் : 12
முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வாய்வலம்
உந்தியுள் நின்று வுதித்தெழு மாறே. 

பொழிப்புரை : ``ஓர் ஆண்டு முந்நூற்றறுபது கூறுகளைக் கொண்டது`` எனத் தொன்றுதொட்டுக் கொள்ளப்பட்டு வருகின்ற அக்காலக் கூறு - அஃதாவது, ``ஒருநாள் என்பது, நாழிகைகளின் தொகுதியால் அமைந்தது. அந்த நாழிகைகளை ஐந்து கூறாகப் பகுத்து அப்பகுதி ஐந்தையும் ஐம்பூதங்கட்கும் உரிய பகுதிகளாகப் பாவனை செய்துகொள். பின்பு நிலம் முதலிய பூதங்களின் ஆற்றல் சுவாதிட்டானம் முதலாகத் தோன்றி நிலைபெறுவனவாகக் கொண்டு யோகம் செய்.
=======================================================
பாடல் எண் : 13
சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தின் திருநடத் தோரே. 

பொழிப்புரை : (அட்டமா சித்திகளை அடைய விரும்பி அவற்றைப் பெறும் பவயோகம் செய்பவர் அதனிடையே மலபரி பாகம் காரணமாக) மனம் வேறுபட்டு, சிவனை அடையும் வேட்கை யராய் முத்திப்பேற்றிற்குரிய வழியை உணர்ந்து ஐம்புல ஆசையற்றுச் சிவஞான ஒழுக்கத்தில் நிற்கும் சிவயோகியராதலும் உண்டு. அவ் வாற்றால் தத்துவங்களின் நீங்கவேண்டி மேற்கூறிய ஐம்பூதங்களின் கட்டினின்றும் நீங்கினோர், உள்ளம் இறைவனது ஆனந்த நடனத்தில் ஒடுங்கப் பெறுவர்.
=======================================================
பாடல் எண் : 14
ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே. 
பொழிப்புரை : சிறப்பால் தம்முள் ஒத்தனவாகிய, தனஞ்சயன் ஒழிந்த ஏனை வாயுக்கள் ஒன்பதும் வேறு வேறு நின்று செயற்படுவன. சிறப்பால் அவ்வொன்பதிலும் மேம்பட்டது `தனஞ்சயன்` என்னும் வாயு. அஃது ஏனை ஒன்பது வாயுக்களினும் ஒப்பக் கலந்து, அவற் றிற்கு வன்மையைத் தந்து நிற்கும். அஃது அவ்வாறு நிற்பதனாலே உயிரும், உடம்பும் இணங்கியிருக்கின்றன.
=======================================================
பாடல் எண் : 15
இருக்குந் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்கின்
இருக்கு முடலி லிருந்தில தாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே. 

பொழிப்புரை : வாயுக்களுள் ஒன்றாய் இருக்கின்ற தனஞ்சயன், மேற்கூறியவாறு ஏனை ஒன்பது வாயுக்களிலும் கலந்திருக்கும். ``தனஞ்சயன்`` என்ற வாயு இல்லை என்றால், உடம்பே நிலைபெறாது பதங்கெட்டு அழியும்.
=======================================================
பாடல் எண் : 16
வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே. 

பொழிப்புரை :  பலவகை நோய்களும், உறுப்புக் குறைகளும் தனஞ்சய வாயு, அளவில் செம்மையுற்று இராமையால் உளவாவன.
=======================================================
பாடல் எண் : 17
கண்ணில் வியாதி உரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே. 

பொழிப்புரை :  (மேல், ``வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே`` என்றதனால், ``கண் அமைவதற்குத் தனஞ்சயனே காரணம் போலும்`` என மயங்கற்க.) கண்ணில் உளவாகும் நோய்கட்கு மட்டுமே தனஞ் சயனது செம்மையின்மை காரணமாகும். கண்ணில் பொருந்தியுள்ள நரம்புகளின் செயற்பாட்டிற்கும், அச் செயற்பாட்டினால் அமையும் கண்ணொளிக்கும் தனஞ்சயன் காரணமன்று; அவற்றிற்குக் ``கூர்மன்`` என்னும் வாயுவே காரணம்.
=======================================================
பாடல் எண் : 18
நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே. 

பொழிப்புரை :  கடவுளருள் சிறந்தோராகிய உருத்திரன், மால், அயன் என்னும் மூவருங்கூட யோகத்தில் பத்து நாடிகளிற் கேட்கப் படுவனவாக மேலே சொல்லிய பத்து ஓசைகளாகிய முழக்கத்தைக் (பா.593) கேட்டலை விடுத்து, கண்ணிலும், இருதயத்திலும் நிலைபெற்று நின்று உடம்பில் துடிப்புள்ளளவும் `துஞ்சும்போதும் சுடர்விடு சோதி` (தி.5 ப.93 பா.8) யாகிய சிவனை அங்கே தியானம் செய்கின்றனர்.
=======================================================
பாடல் எண் : 19
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒருங்கவல் லார்களுக்
கொன்பது வாசல் உலைநல மாமே. 

பொழிப்புரை : ஒன்பது வாயில்களை உடைய ஒரு வீடாகிய உடம்பில், ஒன்பது நாடிகளும் சுழுமுனை நாடியில் ஒவ்வோரிடத்தில் ஒருங்கு கூடுவனவாம். அவ்விடங்களை அறிந்து அந்த நாடிகளைத் தம்வசப்படுத்த வல்லவர்க்கு ஒன்பது துருத்திகளை உடைய ஓர் உலைபோல்வதாகிய உடம்பு ஞானத்தைத் தருவதாய் அமையும்.
=======================================================
பாடல் எண் : 20
ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே. 

பொழிப்புரை :  மூலாதாரத்தில் உள்ள அக்கினியை எழுப்பிச் சுழு முனை நாடி வழியே தலையளவும் செல்லச் செலுத்துதல், பிங்கலை இடைகலை வழியாகப் பிராணனை முறையே வெளியே ஓடவிட்டும், உள்ளே செல்ல இழுத்தும் பயிலுதல், ஏழுலகங்களையும் சுமந்து நிற்றல் ஆகிய முறைகளை நாம் சொன்னது, சிவனது அருள்வழியில் நிற்க விரும்புபவரை நோக்கியேயாம்.
=======================================================
பாடல் எண் : 21
தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.

பொழிப்புரை :  இடைகலை பிங்கலை நாடிகட்கு நடுவே துலை நாப்போல நிற்கும் சுழுமுனை நாடியையே நல்வழியாகக் கொண்டு இயங்கத் தெரிந்தால், வலையில் அகப்பட்ட பெண் மானை வந்து அடையும் ஆண்மான்போல, அந் நாடியின் முடிவில் விளங்கும் சத்தியைத் தேடிச் சிவனும் வந்து பொருந்துவான். இந்நடு நாடி வழி, விலைக்கு விற்க வைத்திருந்த வித்துத் தனக்கே பயன்படுதல் போல்வதொரு தன்மையுடையது.
=======================================================
பாடல் எண் : 22
ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கேயுந் தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே. 

பொழிப்புரை :  பல இடங்களிலும் ஓடிச்சென்று அங்கெல்லாம் ஒவ்வொரு பொருளைக் கண்டவர், அக்காட்சியின் பயனாகப் பத்து நாடிகளிலும் வேறுபட்ட பத்து ஓசைகள் எழக் கேட்டு இன்புறுவர். நீவிர் அதனைச் செய்யாது, தேனை உண்ண விரும்பி அஃது இருக்கும் மலை உச்சியைத் தேடி அடைந்து அங்கே பொருந்தியுள்ள தேனை உண்டு களித்திருத்தலேயன்றி, உம்மை அழிக்கப் பாசறையில் தங்கிக் காலம் பார்த்திருக்கும் பகைவரைச் சிறைப்பிடித்தலையும் செய்யுங்கள்.
=======================================================
பாடல் எண் : 23
கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
பொட்டிட்டு நின்றது பூரண மானதே. 

பொழிப்புரை :  ஓர் இல்லத்தில் உள்ள பல கட்டுக்களை ஒத்த ஆதாரத் தாமரை மலர்களில் அதன் தண்டினைப் பற்றி அங்கங்கு நின்று சிறிது சிறிது தேனைத் தெளித்த ஒன்பது மகளிர், அவ்விடங்களை விட்டுத் தேனை நிரம்ப முகர்ந்து வார்க்கின்ற அவ் இல்லத் தலைவியோடு சேர்ந்து விட்டார்கள். அவ்விடங்களில் நின்ற அவர்கள் அவற்றை விட்டு நீங்கித் திலகம் இட்டு நின்றதே தலைவியுடன் ஒன்றாய் நின்ற நிறைவு நிலையாயிற்று.
=======================================================
பாடல் எண் : 24
பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே. 

பொழிப்புரை :  பூரண சத்தியாகிய ஆதிசத்தி, `இச்சை, ஞானம், கிரியை` என மூன்றாகி, குண்டலியில், `அகாரம், உகாரம், மகாரம், அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதம்` என்னும் ஏழு கலை களிலும் பொருந்தி இருபத்தொரு கூறாதலால், அவ் விருபத்தொரு கூறும் பிரமன் முதலிய ஐவரது தொழிற்கும் காரணமாய் அவரொடு பொருந்தி நிற்குமாறு ஏகதேச சத்திகள் அக் காரணப்பகுதிகளை (ஐ இருபத்தொன்று) நூற்றைந்தாக்கிக் கொண்டனர். (எனவே, அவை பிரம இச்சா அகாரம், பிரமஞான அகாரம், பிரமகிரியா அகாரம் என்றற்றொடக்கத்தனவாகப் பெயர்பெற்று நிற்பனவாம்.) இனி அந்த நூற்றைந்தையும் மூலாதாரம் முதலிய ஆறாதாரங்களோடும், ஆஞ்ஞைக்கு மேல் உள்ள நிராதாரத்தோடும் கூட்டி மூலாதாரப் பிரம இச்சா அகாரம், மூலாதாரப் பிரமஞான அகாரம், மூலாதாரப் பிரம கிரியா அகாரம் என்றற்றொடக்கத்தனவாக உறழ்ந்து கூற, ஏழடுக்கிய நூற்றைந்தாம் (ஏழு நூற்றைந்து - 7 x 105 = 735 ஆம்) ஆதலின், அங்ஙனமும் ஆக்கினர்.
=======================================================
பாடல் எண் : 25
விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே. 

பொழிப்புரை :  பல ஏகதேச சத்திகளாய் விரிந்தும் ஒன்றேயான பூரண சத்தியாய்க் குவிந்தும் சிவத்தினின்றும் புலப்பட்டுச் செயல் ஆற்றுகின்ற இவ் ஆதி சத்தி, சிவத்தில் ஒன்றாய் அடங்கியிருக்கும் நிலையினின்றும் வெளிப்பட்டுச் செயலாற்றினால் மண் முதலிய பூதங்கள் தூலமாய் வெளிப்பட்டு விரிந்தும், அவள் சிவத்தில் அடங்கி ஒன்றாய் இருப்பின், அவை (பூதங்கள்) சூக்குமமாய் ஒடுங்கியும் இருக்கும். (ஆகவே, எல்லாம் ஆதிசத்தியால் ஆவனவாகலின்) பூரக இரேசகங்களில் பாம்பு சீறினாற் போன்ற ஓசையை உடையதாய், கும்பகத்தில் சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எழுகின்ற பிராணவாயுவால் அவளிடத்தில் சென்று ஒடுங்குவாயாக.
=======================================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!