பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை............................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
========================================================(086+025=111)
மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:11. அட்டமாசித்தி(பாடல்கள்:26-50/71) பாகம்-II
பாடல் எண் : 26
இடையொடு பிங்கலை என்னும் இரண்டும்
அடைபடு வாயுவும் ஆறியே நிற்கும்
தடையவை ஆறெழுந் தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.
அடைபடு வாயுவும் ஆறியே நிற்கும்
தடையவை ஆறெழுந் தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.
பொழிப்புரை : யோகத்தில் இடநாடி, வலநாடி இரண்டும் அடை பட, நடுநாடி வழியே செல்லும் பிராணவாயு தன் முரண் அவிந்து உனக்குத் துணையாகியே நிற்கும். அதனைப் பற்றிக்கொண்டு சென்று, ஆறு ஆதாரங்களின்மேல் எழுகின்ற சந்திரனுள்ளே பொருந்தி வளர்கின்ற மின்னற்கொடி போன்ற பூரண சத்தியில் நீ ஒடுங்கிவிடு.
===================================================
பாடல் எண் : 27
ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கின்
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி அடங்கிடும் மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி அடங்கிடும் மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.
பொழிப்புரை : சந்திரமண்டலத்தில் ஒடுக்கி, மனம் ஒருங்கித் திருவருளையே உணர்ந்திருந்தால், பிராணவாயுவும் மெத்தென இயங்குதலும் ஒழிந்து, அடங்கியிருக்கும். இவ்வாறு மனமும், வாயுவும் அடங்குதலால், அவற்றின் வழிப் புறஉணர்வும், தன் உணர்வும் அற்றிருக்கும் உயிரின் உள்ளத்தையே ஐந்தொழிற் கூத்து இயற்றும் இறைவனும் தனக்குரிய இடமாக விரும்புகின்றான்.
===================================================
பாடல் எண் : 28
நாடியின் உள்ளெழு நாதத் தொனியுடன்
தேடியுடன் சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடில் ஒருகை மணிவிளக் கானதே.
அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.
தேடியுடன் சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடில் ஒருகை மணிவிளக் கானதே.
அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.
பொழிப்புரை : பத்து நாடிகளின் உள்ளே எழுகின்ற பத்து ஓசை களாகிய மங்கல முழக்கத்துடன் திருவருளாகிய நிதிக் குவியலைத் தேடிச் சென்று அடைந்து, அதனைக் கவர நினைக்கும் காமம் முதலிய குற்றங்களாகிய பகைவரைச் சிறைப்படுத்தி, அரண்மனையின் மேல் நிலமாகிய நிலாமுற்றத்தில் நந்தா மணிவிளக்கு (அணையாத இரத்தின தீபம்) ஆகிய சிவஞானத்தை ஏற்றிவைத்து இருத்தலே அதுவாம். (மேல், `ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கிருக்க` எனக் கூறிய சிவயோக சமாதியாம்.)
===================================================
பாடல் எண் : 29
எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
மொட்டாம் நடுநாடி மூலத் தனல்பானு
விட்டால் மதியுண்ண வும்வரு மேலதே.
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
மொட்டாம் நடுநாடி மூலத் தனல்பானு
விட்டால் மதியுண்ண வும்வரு மேலதே.
பொழிப்புரை : வசப்படாத பிராணனை அட்டாங்க யோகத்தால் வசப்படுத்தினால் அட்டமாசித்தி உண்டாகும். இனி மூலாதாரத்தில் உள்ள அக்கினி, மொட்டுப்போல் மூடியுள்ள நடுநாடியைத் திறந்து கொண்டு சூரிய மண்டலத்தையும் கடந்து சென்று அப்பால் நின்ற சந்திர மண்டலத்தில் உள்ள அமுதை உண்ணுதலும் யோகத்தாலே உண்டாவ தாகும்.
===================================================
பாடல் எண் : 30
சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.
புத்திக ளானவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.
பொழிப்புரை : அட்டாங்க யோகத்தால் அட்டமாசித்திகளே யன்றித் தத்துவ ஞானங்கள் பலவும் விளங்குவனவாம். ``சித்திகள்`` என்பவற்றைத் தமக்கே பெயராக உடைய அட்டமாசித்திகளும், திருவருளேயாய் நிற்கின்ற அந்தச் சித்திகள், மும்மாயைகளினும் நின்று செயல் செய்யும் ஆதிசத்தி அருள் புரிதலால் உளவாகும்.
===================================================
பாடல் எண் : 31
எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பும் இடந்தானின் றெட்டுமே.
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பும் இடந்தானின் றெட்டுமே.
பொழிப்புரை : பர சித்தியாகிய இந்த அருட் சித்தி எட்டனையும் அடைந்து, இவற்றால் சிவப்பேறும் கைகூடப் பெற்றவரே பர லோகத்தை அடைவராதலால் அவரே ``சித்தர்`` (சித்திகளைப் பெற்றவர்) என்று சொல்லத் தக்கவர். அவர்கள் தங்கள் விருப்பம் எல்லாவற்றையும் சிவனது திருவருள் வியாபகத்துள் ஒடுக்கி அத்திரு வருளையே கண்டுகொண்டிருத்தலே உண்மை யோகக் காட்சியாம். மாயையைக் கடந்த இந்த அருட்சித்தியன்றி மாயைக்குட்பட்ட மருட்சித்திகள் அம்மாயைகளில் நின்று சிவத்தை அணுகுதல் கூடுமோ!
===================================================
பாடல் எண் : 32
மந்தரம் ஏறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்று நற்கா மியலோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே.
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்று நற்கா மியலோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே.
பொழிப்புரை : ``மேரு`` எனப் பெயர் பெற்ற சுழுமுனை நாடியைச் சூழ்ந்து இயங்குகின்ற, `சந்திர கலை, சூரிய கலை` என்னும் பெயரை உடைய இடைநாடி பிங்கலை நாடிகளின்வழி இயங்கும் பிராண வாயுவை அடக்கிச் சுழுமுனை நாடியின் உள்ளே செல்லுமாறு மாற்றி யமைத்தபின், மூலாதாரம் முதலிய பள்ளங்களில் தறிபோல நில்லாது, அங்ஙனம் நிற்கும் குற்றத்தின் நீங்க வல்லவர்க்குப் பின் ஞானத்திற்கு ஏதுவாகிய விருப்பத்தைத் தரும் பரலோக இன்பம் இப்பொழுதே உண்டாகிப் பின்பு அவ்வுலகத்தைச் சார்தல் உண்டாகும். அத்தகை யோர்க்கு அந்த உலக இன்பங்களே அணிமாதி அட்டசித்திகளாம்.
===================================================
பாடல் எண் : 33
முடிந்திட்டு வைத்து முயங்கில்ஓ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனும்
தணிந்தஅப் பஞ்சினுந் தான்நொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.
அணிந்த அணிமாகை தானாம் இவனும்
தணிந்தஅப் பஞ்சினுந் தான்நொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.
பொழிப்புரை : கீழ் ஆதாரங்களில் இறங்காமல், ஆஞ்ஞையிலே தன்னைச் சத்தியுடன் ஓர் ஆண்டின் முடியிட்டு வைத்து, அவளுடன் நீக்கமின்றியிருந்தால், அச்சத்தி இவனுக்கு அணுவிலும் அணுவாகின்ற `அணிமா` என்னும் சித்தியாய் நிற்கும். அந்தச் சித்தியால் இவனும் அந்நிலையினனாவான். இந்த அருட்சித்தியைப் பெற்றவனை, மருட்சித்திகளால் வெல்ல இயலாது.
===================================================
பாடல் எண் : 34
ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
கின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாய்கின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே.
கின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாய்கின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே.
பொழிப்புரை : தான் காண்கின்ற எப்பொருளிலும், அணிமா வாகின்ற அந்த ஒப்பற்ற சத்தியுடனே சென்று, அச்சத்தியே தனக்கு நிலைக்களமாக, தனக்குக் கழிகின்ற காலம் முழுதும் அச்சத்திவழியே நிற்பானாயின், தற்போதங் கெடுதல் ஐந்தாண்டில் கூடும். அதுவே, பர லகிமாவாகும்.
===================================================
பாடல் எண் : 35
மாலகு வாகிய மாய்வினைக் கண்டபின்
சாலொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கும் நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.
சாலொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கும் நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.
பொழிப்புரை : பர லகிமாவாகிய தற்போதம் கெடுதல் உளதாயின் ஏகதேச உணர்வாய்ப் பொருள்களைப் பற்றுதல் விடுதல்களைச் செய்து நின்ற உயிர், நிறைந்த பேரொளியாம் திருவருளேயாய் நிற்கும்; அதன் பயனாகப் பரம்பொருளாகிய சிவத்தை அறியும்.
===================================================
பாடல் எண் : 36
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடும் ஓராண்டின்
மைப்பொரு ளாகும் மகிமாவ தாகுமே.
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடும் ஓராண்டின்
மைப்பொரு ளாகும் மகிமாவ தாகுமே.
பொழிப்புரை : இலகிமா சித்திக்குப்பின் மெய்ப்பொருளாகிய சிவத்தைச் சத்தி உணர்த்தி நிற்பாள். அவ்வுணர்வினால் அதனை அடைதல் ஓராண்டில் கைப்பொருளாகக் கிடைக்கும். அதுவே, ஒன்றும் தோன்றாத சூனிய நிலையாகிய பர மகிமா வாகும்.
===================================================
பாடல் எண் : 37
ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றன
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றன
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.
பொழிப்புரை : எல்லாவற்றிற்கும் அடிநிலை ஒளியாகிய சிவத்தைக் கண்டபின், காலக் கழிவும் அங்ஙனம் கண்டவனது உணர்வில் தோன்றாது. இனி, எல்லாப் பொருள்கட்கும் மேலான தாகிய காலம், தன்னியல்பில் பொருள்களைத் தன்வழிப்படுத்து நடத்தி நிற்குமாயி னும், அவனது காலங்கள் அவனைக் கட்டுப்படுத்தாது அவன் வழியவேயாம்.
===================================================
பாடல் எண் : 38
தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழித் தன்னரு ளாகிநின் றானே.
தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழித் தன்னரு ளாகிநின் றானே.
பொழிப்புரை : தற்போதம் இழந்து சிவத்தை உணர்ந்து நின்றால், ஞானம் மேன்மேல் பெருகும். அங்ஙனம் பெருகப் பெற்றவனால், உலகமும் நலம் பெறும். அங்ஙனம் நலம்பெற்ற உலகம் அவன் வழிப்படுமாயினும், அவன் அவற்றை ஆள நினையாது, சிவனது அருள்வழி நின்று அதுவேயாய் நிற்பன்.
===================================================
பாடல் எண் : 39
நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை ஓராண்டுக் கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை ஓராண்டுக் கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.
பொழிப்புரை : தோன்றி நின்று தொழிற்படுவனவாகிய தத்துவங்கள் அனைத்திற்கும் தலைவியாகிய ஆதி சத்தியுடன் ஒற்றித்து நின்று கண்ட அத் தத்துவங்களை எல்லாம் யோகி தனக்குக் கீழ்ப்பட்ட வையாக உணர்ந்து ஓராண்டுக்காலம் அவற்றின் தொழிற்பாடுகளைத் தன்னின் வேறாகக் கண்டுகொண்டிருப்பானாயின், அத்தத்துவங் களால் உளவாகும் வாதனை ஒழிந்து அவ்வொழிவே அருட்சித்திப் பிராத்தியாகும்.
===================================================
பாடல் எண் : 40
ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே.
பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே.
பொழிப்புரை : பிராத்தியில் குண்டலி சத்தியையும் தன் வழிப்படக் கண்ட பின்பு, சுத்த மாயையில் உள்ள சுத்த காலமும் அக்குண்டலிக் குள்ளே அடங்கிவிடும். அதனால், சுத்த தத்துவ நிகழ்ச்சிக்கு ஏதுவாக நிகழ் கின்ற சுத்த காலங்களும் நிகழா. ஆதலால், இந்நிலையில் பாகுபட்ட அனைத்துலகங்களில் உள்ள பொருள்களையும் தன் அறிவினுள்ளே காணுதல் கூடும்.
===================================================
பாடல் எண் : 41
போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
ஆவது மில்லை அறிந்துகொள் வார்க்கே.
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
ஆவது மில்லை அறிந்துகொள் வார்க்கே.
பொழிப்புரை : குண்டலி சத்தியை நன்கு காண வல்லவர்க்குப் பல்வேறு வகைப்பட்ட புவனங்களில் சித்திவழிப் போக்கு வரவு புரிதலும், எடுத்த உடம்பு இடையே வீழ்தலும், நுகர்ச்சிப் பொருள் களால் இன்புறுத்தலும், (மயக்கமுறுதலும்) துன்புறுதலும், யோகத்தில் நாடிகளில் பல இனிய ஓசைகளைக் கேட்டலும், மற்றும் ஆதாரக் காட்சிகளில் நிற்றலும், இவைபோல்வனவும் ஆகிய உலகியல்கள் சிறிதும் இல்லையாம்.
===================================================
பாடல் எண் : 42
அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாம்
குவிந்தவை ஓராண்டுக் கூட இருக்கில்
விரிந்த பரகாயம் மேவலு மாமே.
பறிந்தது பூதப் படையவை யெல்லாம்
குவிந்தவை ஓராண்டுக் கூட இருக்கில்
விரிந்த பரகாயம் மேவலு மாமே.
பொழிப்புரை : அணிமா முதலாகப் பல நிலைகளிலும் தன்னால் அறியப்பட்ட சிவசத்தி, பின் யோகியின் உள்ளத்தில் நீங்காதிருப்பின், தத்துவங்களின் குறும்புகள் முற்றிலும் நீங்கினவாம். அங்ஙனம் அவை நீங்கிய நிலையில் அந்தச் சத்தியுடன் அமைதியுற்று இருப்பின், ஓராண்டுக் காலத்தில் நாதத்திற்கு மேல் அளவின்றிக் கிடக்கின்ற அருள்வெளி வியாபகத்தை அவன் அடைதல் கூடுவதாம்.
===================================================
பாடல் எண் : 43
ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னேயு டையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாம்நின்றே.
மூல விளக்கொளி முன்னேயு டையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாம்நின்றே.
பொழிப்புரை : எல்லா ஒளிகட்கும் மூல ஒளியாகிய திருவருளை அனாதியே தம்மிடத்து உடைய அனைவரும் அது தமக்கு நலம் செய்யும் ஒளியாயிருத்தலை அறிந்திலர். அதனைச் சிவயோகப் பயிற்சியால் காட்டுத் தீப்போன்ற பேரொளியாகக் கண்டு மகிழ்பவர் கட்குப் பரஞ்சோதியாகிய சிவ பரம்பொருளில் ஒன்றுபடுகின்ற முத்தி எளிய பொருளாய் நிலைபெற்று நிற்கும்.
===================================================
பாடல் எண் : 44
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டுக் கூடி யிருந்திடிற்
பண்டை அவ் வீசன் பரத்துவ மாகுமே.
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டுக் கூடி யிருந்திடிற்
பண்டை அவ் வீசன் பரத்துவ மாகுமே.
பொழிப்புரை : முன்னைச் சித்திகளில் பல்லாற்றானும் நீங்கிப் போன தத்துவங்களையெல்லாம் ஆஞ்ஞையில் யோகிக்குத் துணை யாய் நிற்கின்ற சிவசத்தி வழியவாகக் கொண்டு அவற்றோடு ஓராண்டுக் காலம் கூடியிருப்பானாயின், அவனுக்கு, எப்பொருட்கும் முன்னோனாகிய சிவனது இறைமைத் தன்மைகள் எல்லாம் கிடைப்பனவாகும்.
===================================================
பாடல் எண் : 45
ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே.
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே.
பொழிப்புரை : ஆஞ்ஞையாகிய சந்திர மண்டலத்தை அடைந்த யோகி அங்கு நின்றும் மீளாது நிற்குமிடத்து முதற்கண் அம் மண்டலத்தின் ஒளியைப் பெற்றுப் பின்னர் அதன் குளிர்ச்சியைப் பெறு வான். அதன்பின் அம்மண்டலத்தின் பகுதிகளை ஒவ்வொன்றாக அடைவானாயின், இறுதியில் அச்சந்திர மண்டலமே தானாய் விடுவான்.
===================================================
பாடல் எண் : 46
தானே படைத்திட வல்லவ னாயிடும்
தானே அளித்திட வல்லவ னாயிடும்
தானேசங் காரத் தலைவனு மாயிடும்
தானே சிவனெனுந் தன்மைய னாமே.
தானே அளித்திட வல்லவ னாயிடும்
தானேசங் காரத் தலைவனு மாயிடும்
தானே சிவனெனுந் தன்மைய னாமே.
பொழிப்புரை : ஈசத்துவத்தைப் பெற்ற யோகி இறைவன் செய்யும் செயலெல்லாம் தானே செய்ய வல்லவனாவான். இதனால், `சிவன் இவனே` என உலகத்தாரால் எண்ணப்படும் தன்மை உடையவனாய் இருப்பன்.
===================================================
பாடல் எண் : 47
தன்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.
பொழிப்புரை : ஈசத்துவத்தை அடைந்தோன், பலவாகப் பரந்து விரிந்து கிடக்கின்ற தத்துவங்களை, சத்தியின் தன்மையால் அமைந்த நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளுள் அடங்கி நிற்பனவாக உணர்ந்து ஓராண்டு நிற்பானாயின், சூக்குமப் பொருளாகிய மெய்ப்பொருளைக் காண்பான்.
===================================================
பாடல் எண் : 48
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாம்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாம்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.
பொழிப்புரை : ஈசத்துவத்தால் மெய்ப்பொருட் காட்சி கிடைத்த பின், அதனால் விளையும் பயன் யாது எனின், சித்திகள் எல்லா வற்றுள்ளும் சிறந்த `வசித்துவம்` என்னும் சித்தி பெறுதலேயாம். வசித்துவ சித்தியைப் பெற்றோன், இறைவனுடையவாய்ப் பொருந்தி யுள்ள எல்லா உயிர்கட்கும் தானே மெய்ப்பொருள் போலும் தன்மையை உடையவனாவான்.
===================================================
பாடல் எண் : 49
தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
புன்மைய தாகிப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே.
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
புன்மைய தாகிப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே.
பொழிப்புரை : மேற்கூறியவாறு பல்லுயிர்கட்கும் மெய்ப் பொருள் தன்மையனாய்ப் பெருமை பெற்று நிற்கின்ற அருளொளிக் கதிர வனாகிய சிவயோகி மெய்ப்பொருளைக் கண்டவனாதலின், ஐம்புல ஆசைகள் அருவருக்கத்தக்க பொருள்களாய்த் தலைகாட்டா தொழிய, ஞானஉருவான திருவருளையே நோக்கி நிற்பான்.
===================================================
பாடல் எண் : 50
நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டுப்
பொற்கொடி யாய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே.
அக்கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டுப்
பொற்கொடி யாய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே.
பொழிப்புரை : ஞான உருவான திருவருளோடு கூடி, அதனது இன்பத்தை யோகி ஒருவன் அறிவானாயின், அதன் பின் ஓராண்டுக் காலத்தில் பொன்மயமான கொடிகளும், தருக்களும் நிறைந்த விண்ணுலகங்களில் சென்று மீள வல்லவனாவான். ஆயினும், அவன், மேருவை அடைந்து பொன்னிறத்தைப் பெற விரும்புகின்ற காக்கையினது ஆசைபோன்ற அவ்வாசையை உடையனாவனோ!
===================================================
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!