http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 15 July 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :10. வைரவச் சக்கரம் (பாடல்கள்:6)





 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.......................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்............பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்.............பாடல்கள்: 100 
நான்காம் தந்திரம்:பதிக எண்:09: ஏரொளிச் சக்கரம்..........பாடல்கள்: 036
நான்காம் தந்திரம்:பதிக எண்:10: வைரவச் சக்கரம்...........பாடல்கள்: 006
======================================================(407+06=413)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:10. 

வைரவச் சக்கரம் (பாடல்கள்:6)

பாடல் எண் : 1
அறிந்த பிரதமையோ டாறும் அறிந்து
அறிந்த அச்சத்தமி மேலவை குற்ற
அறிந்தவை ஒன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடத்தே.

பொழிப்புரை :   முற்பக்கம் (பூர்வ பக்கம்) பிற்பக்கம் (அபர பக்கம்) என்னும் இருபக்கங்களில் உள்ள பதினைந்து திதிகளையும் அவ்ஆறு திதிகளாகப் பிரிக்கும் முறையில் சக்கரத்தை அமைத்து, உவாக்களோடு கூடப் பதினாறு திதிகட்கும் பதினாறு உயிரெழுத்துக்களில் அகாரத்தைக் கடையுவாவிற்கும், (அமாவாசைக்கும்) பதினாறாவது உயிரெழுத்தைத் தலையுவாவிற்கும் (பௌர்ணிமைக்கும்) உரியவாக வைத்து, ஏனையவற்றை ஆகாரம் முதலாக நேர்முறையில் முற்பக்க பிரதமை முதலியவற்றிற்கு உரியவாக எண்ணியும், பதினைந்தாம் உயிர் முதலாக எதிர்முறையில் பிற்பக்கப் பிரதமை முதலியவற்றிற்கு உரியவாகவும் கொண்டு, முதல் அறை ஒன்றில் மட்டும் அகாரத்தை யும், அடுத்து உள்ள அறைகளில் முறையே வலமாக ஆகாரம் முதல் பதினைந்தாம் உயிர்முடிய ஓர் எழுத்தை இவ்விரண்டு அறைகளிலும், பதினாறாம் உயிரெழுத்தை மட்டும் ஓர் அறையிலும் அடைக்க, (14X2) இருபத்தெட்டும், இரண்டும் ஆக முப்பது அறைகள் நிரம்ப, ஆறு அறைகள் நடுவில் வெற்றிடங்களாய் நிற்கும்.

அவற்றிற்கு நடுவில் `ஓம் பம்` என்னும் பிரணவ பீசங்களையும், அவற்றின் கீழ்த் தொடங்கி, `பைரவாய நம` என்னும் ஆறெழுத்துக்களை ஆறு அறைகளிலும் எழுதச்சக்கரம் நிரம்பியதாம். இரண்டிரண்டாய் உள்ள ஆகாரம் முதலியவற்றை அமாவாசை தொடங்கி அகரத்தை அடுத்த ஆகாரம் முதலியவற்றை ஒன்றுவிட்டு ஒன்றான அறைகளில் நேரே முற்பக்கப்பிரதமை முதலியவாக ஓர் எழுத்தைப்பத்துருச் செபித்துப் பௌர்ணிமை முடிவில் நடுவில் உள்ள பிரணவ பீசங்களோடு மூலமந்திரத்தைப் பத்துருச்செபித்து அமாவாசை முதல் பௌர்ணிமை முடிய ஒவ்வொரு நாளும் இவ்வாறு வழிபாடு செய்தல் வேண்டும். 

பின்பு பௌர்ணிமை தொடங்கிப் பிற்பக்கப் பிரதமை முதல் ஒவ்வொருநாளும் பதினைந்தாம் உயிர் முதலாக எதிர் முறையில் அவ்வாறே ஒன்றுவிட்டொன்றாக ஒவ்வோர் எழுத்தையும் பத்துருச் செபித்து, முடிவில் மேற்கூறியவாறு நடுவில் உள்ள மந்திரத்தைச் செபித்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபடும் நாளில் அன்றைய திதிக்குரிய எழுத்து முதலாகத் தொடங்கி அதற்கு முன்னுள்ள எழுத்தில் வந்து முடியவே செபித்தல் வேண்டும். எழுத்துக்களை முதலில் பிரணவத்தையும், ஈற்றில் மகாரத்தையும் கூட்டி உச்சரித்தலே முறை. பதினைந்தாம் உயிரைமட்டும் ஹகாரத்தின் மேல் ஏற்றி `ஹம்` எனக்கூறல் வேண்டும். அகாரம் ஒழிந்த பிற உயிர்களையும் ஹகாரத்தின் மேல் ஏற்றிக் கூறுதல் வடமொழி வழக்கு.
==============================================
பாடல் எண் : 2
நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.

பொழிப்புரை :   இச்சக்கரத்தில் விளங்கும் வயிரவ மூர்த்தி, சிறப்பாகச் சூல கபாலங்களை ஏந்திய வேகவடிவத்தினர். அதனால், அவர் தம் அடியவரை வென்ற பகைவரைத் தாம் போர்ச்சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்தம் உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக அவர்களது உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவார்.
==============================================
பாடல் எண் : 3
ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டங்கு
ஆமே தமருக பாசமும் கையது
ஆமே சிரத்தொடு வாளது கையே.

பொழிப்புரை :   நரசிங்கன், திரிவிக்கிரமன் இவர்களது தோலைப் போர்த்துள்ள ஆதி வயிரவர் மேற்கூறிய சூல கபாலங்களைச் சிறப்பாக ஏந்தி விளங்குவார். இனித் தமருகம், பாசம், வெட்டப்பட்ட தலை, வாள் என்னும் இவைகளையும் அவர் கொண்டிருப்பார்.
==============================================
பாடல் எண் : 4
கையவை ஆறும் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்ய ருளத்தில் துலங்குமெய் உற்றத்தாப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

பொழிப்புரை :  ஆறுகைகளும் நெஞ்சில் விளங்கும்படி நினைக்கப் படுகின்ற திருமேனி செந்நிறம் உடையதாக விளங்குகின்ற வயிரவ மூர்த்தியினது, தூயவர் உள்ளத்தில் துலங்கி நிற்பதாகிய வடிவம், உனது நெஞ்சிலும் உள்ளதாகக் கருதி, மாணவனே, நீ வஞ்சனையற்ற, மெய்யான அன்போடு அக்கடவுளை வழிபடுதலைச் செய்.
==============================================
பாடல் எண் : 5
பூசனை செய்யப் பொருந்திஓர் ஆயிரம்
பூசனை செய்ய அதுஉடன் ஆகுமால்
பூசனை சாந்துசவ் வாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

பொழிப்புரை :   வயிரவ வழிபாட்டினைச் செய்ய விரும்பினால், மேற்கூறிய வயிரவச் சக்கரத்தினை மேற்கூறிய வகையில் ஓர் ஆயிரம் நாள் வழிபடல் வேண்டும். வழிபடின் அச்சக்கர வழிபாட்டின் பயன் கூடுவதாகும். அவ்வழிபாட்டினை, சந்தனம், சவ்வாது, புனுகு, நெய் என்னும் இவைகளைச் சிறப்பாகக் கொண்டு செய்து. அது நிறைவெய்திய பின் பகைவர்பால் உங்கள் பகையைப் புலப்படுத்திக் கொள்ளுங்கள்.
==============================================
பாடல் எண் : 6
வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய ஆறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே.

பொழிப்புரை :  ஒரு வரிசையில் ஆறு அறைகளை உடைய சக்கர வழிபாட்டின் பயன் கிடைக்கப்பெறின் பகைவர்பால் நீ கருதிய மாறுபாட்டுச் செயல் நீ நினைத்தவாறே முடியும். இனித்தம்பனம் முதலிய அறு செயல் ஆற்றலை அடைய விரும்பி இவ்வழிபாட்டினைச் செய்யின் அவ்விருப்பமும் இதனால் நிறைவுறும்.
==============================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!