http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 15 July 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :12. புவனாபதிச் சக்கரம் (பாடல்கள்:12)






 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.......................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்............பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்.............பாடல்கள்: 100 
நான்காம் தந்திரம்:பதிக எண்:09: ஏரொளிச் சக்கரம்..........பாடல்கள்: 036
நான்காம் தந்திரம்:பதிக எண்:10: வைரவச் சக்கரம்...........பாடல்கள்: 006
நான்காம் தந்திரம்:பதிக எண்:11: சாம்பவி மண்டலச் சக்கரம் .பாடல்கள்:009
நான்காம் தந்திரம்:பதிக எண்:12: புவனாபதிச் சக்கரம்......பாடல்கள்: 012
======================================================(422+12=434)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:12

புவனாபதிச் சக்கரம் (பாடல்கள்:12)

பாடல் எண் : 1
ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

பொழிப்புரைமேல் (1158) \\\"தக்க பராவித்தை\\\" என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட `ஸ்ரீவித்தை` எனப்படும் பராவித்தையை மேற்கொள்ள மாட்டாத மெலியோர்க்கு அமைந்தது இச்சக்கரம் என்பது உணர்த்துதற்கு முதல் நான்கு மந்திரங்களால் ஸ்ரீவித்தையின் இயல்பே கூறுகின்றார். ககாரத்தை முதலில் உடைய ஐந்தெழுத்துக்களும் பொன்னிறம் உடையன; ஹகாரத்தை முதலில் உடைய ஆறெழுத்துக்களும் செந்நிறம் உடையன; ஸகாரத்தை முதலில் உடைய நான்கெழுத்துக்களும் தூய வெண்ணிறம் உடையன. ககாரத்தை முதலில் உடையது முதலிய இம்மூன்று வித்தைகளும் `போகம், மோட்சம்` என்னும் இரு பயன்களையும் தருவனவாம்.
==============================================

பாடல் எண் : 2
ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயந் தானே.

பொழிப்புரை :  மாணவனே, யான் உனக்கு ஒரே முடிவைச் சொல்லுகின்றேன்; கேள்; உண்மையை ஆராயுமிடத்து மேற்கூறிய பதினைந்தெழுத்து மந்திரமே மந்திரங்களில் தலையாயது. இம்மந்திரத்திற்குரிய தேவிதன் பெருமையை ஆராயின் இவளையன்றித் தெய்வம் வேறில்லையாம். இம்மந்திரத்தைக் கொண்ட `ஸ்ரீசக்கரம்` எனப் படுகின்ற முக்கோணச் சக்கரமே பேரின்பமாகிய வீட்டின்பக் கடலாயும் விளங்கும். இன்னும் ஆழ்ந்து நோக்கின், ஸ்ரீசக்கரமே மெய்யுணர்ந்தோர் காணும் சிவன் வடிவாகிய சிதாகாசமாம்.
==============================================

பாடல் எண் : 3
ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.

பொழிப்புரை பராசத்தியாய் உள்ளது ஒன்றே; அதுவே பரசிவத்திற்கு வடிவம். அந்தச் சத்திக்கு வடிவம், `பராவித்தை` எனப்படும் ஸ்ரீவித்தை. அந்த வித்தையால் முத்தி, சித்தி இரண்டும் உளவாம். இனிப் பராசத்தி ஒன்றேயாயினும் சிவன் அங்கியாய் நிற்கச்சத்தி அவனுக்கு அங்கமாய் நிற்றல் உண்மையால், எட்டாய்ப் பிரிந்து நிற்றல் உண்டாகின்றது.
==============================================

பாடல் எண் : 4
எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து)
ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

பொழிப்புரைபராசத்தி வழிபாடாகிய பராவித்தையால், அச்சத்தி பேதங்களாகிய மேற்கூறிய எட்டும் அட்டாங்க யோகத்தின் வழியே படிநிலைகள் எட்டினையும் அடையச்செய்து, முடிவில் நாதாந்தத்தில் சேர்க்கும். அதன்பின் பரசிவத்தை அடைதற்குத் தடையாய் உள்ள விந்து நாதங்களும் அகன்றொழியும். (ஒழியவே பரசிவத்தைக்கூடிப் பரானந்தம் எய்தலாம்.) இத்தகைய பராவித்தை அறிவாலும், ஆற்றலாலும் கீழ் நிலையில் உள்ளோர்க்கு இயலாததாம்.
==============================================

பாடல் எண் : 5
ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.

பொழிப்புரைஇதுமுதலாகவே புவனாபதிசக்கரம் கூறுகின்றார். வழிபடுவோர்க்கு எப்பயனையும் தருவதாய், `இயந்திரராசன்` எனப்படுகின்ற புவனாபதி சக்கரத்தை எந்தத் துதியினாலேனும் துதித்து, அதனை வழிபடும் முறையைக் குருவின் உபதேசத்தால் அறிந்து. நீ இயல்பாகச் செய்துவருகின்ற கர நியாச அங்க நியாசங்களை இவ்வழிபாட்டிற்கு ஏற்பச் செய்து, பிறவி நீக்கத்தைச் சிறப்பாக விரும்பி, செப்புத்தகடு ஒன்றில் முதலில் அறுகோணச் சக்கரத்தை வரை.
==============================================

பாடல் எண் : 6
சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட்
டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.

பொழிப்புரைமேற்கூறியவாறு வரையப்பட்ட அறுகோணச் சக்கரத்தின் அறைகளில் `ஸ்ரீம், ஹ்ரீம்` என்னும் பீசங்களைப் பொறித்து, அச்சக்கரத்தின் ஆறுமூலைகளின் மேலும், `ஹ்ரீம்` என்னும் பீசத்தை மட்டும் எழுதி, எல்லா மூலைகளும் உள்ளே அடங்கும்படி அவற்றைச் சுற்றி வட்டம் ஒன்று வரைந்து, அவ்வட்டத்திற்கு வெளி யில் திக்கிற்கு ஒன்றாக எட்டுத் தாமரையிதழ் தோன்ற அமைத்து, அவ் இதழ்களின் கீழே வட்டத்தில் வடக்குமுதல், திக்கிற்கு இரண்டாக உயி ரெழுத்துப் பதினாறனையும் அகாரம் முதலாக முறையானே எழுதுக.
==============================================

பாடல் எண் : 7
இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே.

பொழிப்புரைசக்கரத்தைச் சூழ்ந்த வட்டத்திற்கு வெளியில் உள்ள இதழ்களின் இடைநிலம் எட்டிலும் எட்டு ஹகார மெய்யை உகார உயிர் புணர்த்து எழுதி, அவ் இதழ்கள் எட்டிலும் பொருந்தி நிற்க, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றைப் பொறித்து, இதழ்களின் இடப்பக்கங்களில் `ஆம், க்ரோம், என்னும் பீசங்களை எழுதுக.
==============================================

பாடல் எண் : 8
மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத்
தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே.

பொழிப்புரை : பொருந்திய சக்கரத்தின் வெளியே உள்ள இதழ்களின் வலப்பக்கங்களில் எங்கும் வரிசையாக, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றை எழுதி, எல்லாவற்றையும் கேடில்லாத ரீங்காரத்தால் வளைத்து முடித்தபின், அம்மையாகிய புவனாபதியை வழிபடு.
==============================================

பாடல் எண் : 9
பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

பொழிப்புரைபுவனாபதியம்மையை வழிபடும் பொழுது முதலில் மனத்தைக் காமாதி குற்றங்களின் நீங்கித் தூய்மையுடையதாகப் பண்ணி, அகத்தில் அவளது உருவத்தை நினைவு கூர்ந்து, பின்பு வெளியில் கும்பம், (நிறை குடம்) விம்பம், (திருவுருவம்) இச் சக்கரம் என்பவைகளில், அவ்வம் மறைமொழிகளால், (மந்திரங் களால்) ஆவாகனம், (வரவழைத்தல்) தாபனம், (இருத்துதல்) சந்நிதானம், (முகநோக்கம்) சந்நிரோதனம், (வேண்டிக்கோடல்) என்பவைகளால் விளக்கம் பெற நிறுத்திப் பின் உபசாரங்கள், (முகமன்கள்) பலவும் செய்து முடித்து, அவளது ஒளிமிக்க வடிவம் மனத்திலே நன்கு பொருந்தும்படி தியானித்து நில்.
==============================================

பாடல் எண் : 10
செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்
கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே.

பொழிப்புரை : புவனாபதியம்மைதன் வடிவில் விளங்குவன செம்மை நிறம், செம்பட்டு உடை , கைகளில் அங்குசம், பாசம் என்னும் படைக்கலங்களும், அபய வரதங்களும், அவயங்களில் அவ்வவற்றிற்கு ஏற்ற அணிகலன்கள் தலையில் இரத்தின கிரீடம் என்பவாம்.
==============================================

பாடல் எண் : 11
தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப்
பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால \\\"நாரதா யைசுவா கா` என்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சேவியே.

பொழிப்புரைபுவனாபதிக்கு முறைப்படி வழிபாடு செய்யும் பொழுது, மேலாடையை எடுத்து அரையில் கச்சு போலக் கட்டிக் கொண்டு செய்தல் வேண்டும். நிவேதனம் பால் அடிசிலேயாம். நிவேதிக்கும் மந்திரம் `ஓம் நாரதாயை சுவா:\\\" என்பது, இம் மந்திரத்தால் நான்கு திசைகளிலும் நிவேதனம் செய்தல் வேண்டும். வழிபாடு யாவும் முடிந்த பின்பு பாரங்முக அர்க்கியத்தால் அம்மையை முகம் மாற்றிய பின்பே நிர்மாலிய நிவேதனத்தைக் கைக்கொள்ளல் வேண்டும்.
==============================================

பாடல் எண் : 12
சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாபனத்தால்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்த தருமே.

பொழிப்புரை`சேடம்` எனப்படுகின்ற நிவேதப்பொருளைக் கைக்கொள்வதற்கு முன், கும்ப விம்ப சக்கரங்களில் நிறுவப்பட்ட தேவியை ஒடுக்கிக் கொள்ளுதற்குரிய மந்திரம் கிரியை பாவனைகளால் இருதயத்தில் ஒடுக்கி, யாவர்க்கும் அணுகுதற்கரிய மேலான இச்சக்கரத்தை நீ வைப்புப்பொருள் போல உள்ளத்திலே மறவாது வை; பின்பு இது நினைத்தவற்றை யெல்லாம் உனக்குக் கொடுக்கும்.
==============================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

2 comments:

  1. அய்யா அவர்களின் திருப்பணி தெடர்க... நன்றி வணக்கம் ந. சுந்தர்

    ReplyDelete
  2. தங்களின் வாழ்த்திற்கு மிக்க வந்தனம் இனிய நண்பரே ந.சுந்தர் அவர்களே!

    ReplyDelete

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!