பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
======================================================
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:01: சுத்தசைவம் ................பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:02: அசுத்தசைவம் ............பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:03: மார்க்க சைவம் ...........பாடல்கள்: 011
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:04: கடுஞ் சுத்தசைவம் .....பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:05: சரியை............................பாடல்கள்: 008
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:06: கிரியை...........................பாடல்கள்: 005
==========================================(019+005+008+005 = 037) ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:02: அசுத்தசைவம் ............பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:03: மார்க்க சைவம் ...........பாடல்கள்: 011
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:04: கடுஞ் சுத்தசைவம் .....பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:05: சரியை............................பாடல்கள்: 008
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:06: கிரியை...........................பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்-பதிகம் எண்:04. கடுஞ் சுத்த சைவம் (பாடல்கள்:005)
பாடல் எண் :
01
வேடங் கடந்த விகிர்தன்றன்
பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்
பாடொன்று பாசப் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.
ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்
பாடொன்று பாசப் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.
பொழிப்புரை
: துறவுக் கோலம் இன்றியே, ஆசையாகிய தளையையும் அறுத்தெறிந்து, துன்பத்தொடு படுதற்கு ஏதுவாகிய மலங்களாகின்ற பசுத்துவம் இல்லையாம்படி அடித்துப் போக்குகின்ற சிவஞானச் செயலரே கடுஞ்சுத்த சைவராவர்.
==============================================
பாடல் எண் :
02
உடலான ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும்
மடலான மாமாயை மற்றுள்ளம் நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மாமே.
மடலான மாமாயை மற்றுள்ளம் நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மாமே.
பொழிப்புரை
: தூல சூக்கும பர உடம்புகளாய் நிற்கும் முப்பத்தொரு தத்துவங்களும், அவற்றிற்கு மேல் உள்ள ஐந்து தத்துவங்களும் ஆக முப்பத்தாறு தத்துவங்களும் விரிவான நிலையையுடைய பெரிய மாயையாம். அவற்றை ஆன்மா நீக்கின் அறிவை மறைத்து நிற்கும் ஆணவ மலத்தைக் கழுவித் தனது இயற்கை நிலையை உறுதிப்பட எய்தும். அவ்வாறு எய்துவதே சித்தாந்தச் சைவ நெறியாகும்.
==============================================
பாடல் எண் :
03
சுத்தச் சிவனுறை தானத்தில்
தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாம்மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால்
சுத்த சிவமாவ ரே சுத்த சைவரே.
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாம்மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால்
சுத்த சிவமாவ ரே சுத்த சைவரே.
பொழிப்புரை
: தடத்த சிவன் எழுந்தருளியிருக்கின்ற சுத்தமாகிய சிவலோகத்தை அடையினும் அங்குப் பற்றுக் கொள்ளாமல் `முத்தர்` என்னும் சொல்லுக்குப் பொருளும் முத்தியாகிய நிலத்திற்கு வித்தும் ஆகியிருக்கின்ற அந்தத் தகுதியையுடைய முத்தான்மா ஆகின்றவர் அவ்வாற்றால் சிவனைச் சார்ந்து, அதனால், மூலமலம்
பற்றறக் கழிந்தவழிச்
சொரூப சிவனோடு இரண்டறக் கலப்பர். அங்ஙனம் கலப்பவரே உண்மைச் சுத்த சைவராவர்.
==============================================
பாடல் எண் :
04
நானென்றும் தானென்றும் நாடிநான்
சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பரம்
தானென்றும் நான் என்ற தத்துவம் நல்கலால்
தானென்றும் நானென்றும் சாற்றகில் லேனே.
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பரம்
தானென்றும் நான் என்ற தத்துவம் நல்கலால்
தானென்றும் நானென்றும் சாற்றகில் லேனே.
பொழிப்புரை
: `நான் எங்கேயிருக்கின்றேன், `தத்` பதப்
பொருளாகிய பரம் எங்கே உள்ளது` என்று நான் தேடி அலையும் நிலையில், `தான் அதோ உள்ளது, நான் இதோ உள்ளேன்` என வேறு வேறு கண்டு எண்ணுமாறு `இரண்டு` என்னும்
எண்ணிற்கே இடம் இல்லாது, என்னுள் ஒன்றாயே நிற்கின்ற அது எனது அலைவுக்கு இரங்கி வெளிப்பட்டு வந்து, தான் என்றுமே நானாய் - என் உயிருக்குயிராய் - ஒன்றியிருக்கிற உண்மையை உணர்த்தினமையால், நான் இப்பொழுது `தான்` என்று
அதனைத் தனியாகவும், `நான்` என்று என்னைத் தனியாகவும் எண்ணிச் சொல்லும் தன்மை இலேனாயினேன்.
==============================================
பாடல் எண் :
05
சாற்றரி தாகிய தத்துவம்
சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.
பொழிப்புரை
: சொல்ல இயலாத மேற்குறித்த உண்மை நிலை கிடைக்கப்பெற்றால், பொறுத்தற்கரிய ஐம்புலன்களும் தம் குறும்புகள் நீங்கி அடங்கிவிடும். பாசஞான பசு
ஞானங்களைக் கடந்து மேலாய் விளங்கும் பதிஞானம் நொந்தா விளக்குபோல நிலைபெற்று
ஒளிரும். அதன்
பயனாகப் பின்னர்ப் பதிப்பொருள், மேலான சாயுச்சியமாய்க் கிடைக்கும்.
==============================================
ஐந்தாம் தந்திரம்-பதிகம் எண்:05. சரியை (பாடல்கள்:008)
பாடல் எண் :
01
நேர்ந்திடும் மூலன் சரியை
நெறியேதென்
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்தசை வத்த துயிரதே.
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்தசை வத்த துயிரதே.
பொழிப்புரை
: `மூலன் உடன்பட்டுக்
கூறிய சரியை நெறி யாது` என்று
ஆராய்கின்ற கஞ்சமலையமானே, கந்துருவே` `பூமியில் உண்மையை ஓர்ந்து உணரச் செய்வதாகிய சுத்த சைவத்தின் உயிர் நாடியாம் நெறிகள் இவை` எனக் கூறுகின்றேன்; கேண்மின்கள்.
==============================================
பாடல் எண் :
02
உயிர்க்குயிர் ஆய்நிற்றல்
ஒண்ஞான பூசை
உயிர்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்புறும் ஆவாகனம் புறப் பூசை
செயிர்க்கடை நேசம் சிவபூசை யாமே.
உயிர்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்புறும் ஆவாகனம் புறப் பூசை
செயிர்க்கடை நேசம் சிவபூசை யாமே.
பொழிப்புரை
: உயிர்க்கு உயிராய் உள்ள
பொருளை ஆராய்ந்தறிவது ஞானபூசை. உயிர்க்கு உணர்வுண்டாக்குகின்ற பிரணவத்தைப் பல வகையாலும் காணுதல் பெரியயோக பூசை. புறத்தில் விளங்கும் மூர்த்தி உயிருடையதாகும்படி மூர்த்திமானை அதன்கண் வருவித்துச் செய்தல் புறப் பூசை. இனிக் குற்றந் தீர்ந்த அன்புடன் செய்வனயாவும் சிவனுக்குச் செய்யப்படும் பூசையாம்.
==============================================
பாடல் எண் :
03
நாடும் நகரமும் நற்றிருக்
கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.
பொழிப்புரை
: இதன் பொருள் வெளிப்படை.
==============================================
பாடல் எண் :
04
பத்தர் சரியை படுவோர்
கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த இயமாதி தூயோகர் சாதகர்
சித்தர் சிவஞானம் சென்றெய்து வோர்களே.
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த இயமாதி தூயோகர் சாதகர்
சித்தர் சிவஞானம் சென்றெய்து வோர்களே.
பொழிப்புரை
: சரியையில் நிற்போர் பத்தியையுடைய `பத்தர்` என்றும், கிரியையில்
நிற்போர் அணுக்கத் தொண்டு
செய்யும் அத்தகுதியையுடைய `தொண்டர்` என்றும், இயமம்
முதலிய யோக நிலைகளில்
நிற்போர் `சாதகர்`
என்றும் ஞானத்தில் நிற்போர் `சித்தர்` என்றும் பெயர் பெறுவர். இவருள் முதல் இருவரும் திருவேடத்தைத் தவிராது பூண்பர்.
==============================================
பாடல் எண் :
05
சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ
னாயினோர்
சேர்ந்தஎண் யோகத்தர் சித்த சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே
சேர்ந்தஎண் யோகத்தர் சித்த சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே
பொழிப்புரை
: சிவமாந் தன்மையை எய்தினோரே மெய்ஞ்ஞானம் முற்றினவராவர். மனம் சமாதிநிலையில் அடங்கப் பெற்றவரே அட்டாங்கயோகம் முற்றினவராவர். ஒருநாளேனும் அர்ச்சனை
தவறி
யொழியாதபடி செய்தவரே
நுணுகியதான கிரியை முற்றினவராவர். நெடுந்தொலைவான நாட்டிலும் சென்று மூர்த்தி தலம் தீர்த்தங்களை முறைப்படி வணங்கினவரே
தாம்
ஏற்றுக்கொண்ட சரியை முற்றினவராவர்.
==============================================
பாடல் எண் :
06
கிரியையோ கங்கள் கிளர்ஞான
பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே.
அரிய சிவனுரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே.
பொழிப்புரை
: கிரியை வழிபாட்டிலும், யோக வழிபாட்டிலும் சிவனது அருள் உருவம் நிற்கும். ஞானவழிபாட்டில் உருவம் அற்ற அருவ நிலை தோன்றும். இவ்வழிபாடுகள் சத்தி
நிபாத
நிலைக்கு ஏற்பக் குருவின் வழி
நூல் நெறியாற் செய்யப்படுவன. இவ்வாறன்றி அன்பு காரணமாகத் தத்தமக்கு இயலும் வகையிற் செய்யப்படுவன இவற்றினும்
உயர்ந்த
வழிபாடாய் அமையும்.
==============================================
பாடல் எண் :
07
சரியாதி நான்கும் தகும்ஞான
நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது நந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது நந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.
பொழிப்புரை
: `சரியை,
கிரியை, யோகம்,
ஞானம்` என்னும் நான்கு நெறிகளும், அவற்றில் முடிவாக உள்ள தகுதி பெற்ற ஞானம் ஒன்றிலே `ஞானத்திற் சரியை` முதலிய
நான்கும்
விரிந்துள்ள இவையே வேதத்தின்
தெளிவாய் அமைந்த சிவாகம நெறி. அரனையே பொருளாகின்ற நிலையைச் சிவபெருமான், அறியாமையுடைய மக்கள் அதனினும் நீங்கித் தனது ஒளி யுலகத்தை யடைந்து தன்னை வணங்கி வாழ்தற்பொருட்டு` வைத்துள்ளான்.
==============================================
பாடல் எண் :
08
சமையம் பலசுத்தி தன்செயல்
அற்றிடும்
அமையும் விசேடம் அரன்மந் திரசுத்தி
சமையுநிரு வாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே.
அமையும் விசேடம் அரன்மந் திரசுத்தி
சமையுநிரு வாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே.
பொழிப்புரை
: வீட்டு நெறிளாகிய சரியை முதலியவைகளில் நிற்க விரும்புவோர், ஆசிரியரை அடைந்து தீக்கை பெற்று நின்ற வழியே அவை உண்மைச் சரியை முதலியனவாய்ப் பயன்தரும். அத்தீக்கை, `சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம்` என நான்கு
வகைப்படும். சமயதீக்கை தூல உடம்பைப் பல
வகையில் தூய்மைப் படுத்து வதாகும். அதன் பயனாக, மாணவன்,
இது காறும் எல்லாச் செயல்
களையும் தன்னால் ஆகின்றன வாகவேயாக மயங்கியிருந்த மயக்கம் நீங்குமாறு. `எல்லாம் அவன் செயல் (சிவன் செயல்)` ஆதலை உணரும் வாய்ப்பினைப் பெறுவான். அதனை அடுத்துச் செய்யப்படும் விசேட தீக்கை சிவமந்திரங்களைப் பீசங்களோடு கூட்டி உபதேசித்து, அதனால் பெரும்பயன் அடையச் செய்வதாகும். சாந்தத்தை உடைய நிருவாண தீக்கை, `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை,
சாந்தி, சாந்தி யாதீதை` என்னும்
கலைகள் ஐந்தில் ஏனைய பொருட்
பிரபஞ்சம், சொற்பிரபஞ்சங்களாய் அடங்கியுள்ள அத்துவாக்களிடமாக நிற்கும் சஞ்சித கன்மங்களை ஆகுதிகளால் அழித்து, மாணவனது ஆன்மாவை நின்மலம் (மாசற்றது)
ஆக்குவதாம். அதற்குமேல் உள்ள அபிடேகம்` ஆசிரியராய் விளங்கிப் பிறர்க்கும் தீக்கை செய்தற்கு உரிய பெரிய ஞானத் தகுதியுடைய வர்க்கு அவ் ஆசிரியத் தன்மையை அபிடேகம் செய்து அளிப்பது.
========================================
ஐந்தாம் தந்திரம்-பதிகம் எண்:06. கிரியை (பாடல்கள்:005)
பாடல் எண் : 01
பத்துத் திசையும் பரம்ஒரு
தெய்வமுண்டு
எத்திக் கினில்இல்லை என்பது இனமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரண்எனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
எத்திக் கினில்இல்லை என்பது இனமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரண்எனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
பொழிப்புரை
: எல்லாத் தெய்வங்கட்கும் மேலான ஒரு தெய்வமாகிய சிவபிரான் பத்துத் திசைகளிலும் நிறைந்திருக்கின்றான். அவனை எந்தத் திசையில் `இல்லை` என்று
கூறமுடியும்! ஆதலால், பலவகை
மலர்க் கூட்டத்தைக் கொண்டு அவனது திருவடியையே புகலிடமாகக் கருதி வழி பட்டால், பொங்கிப் புரண்டு வருகின்ற வினையாகிய கடல் வந்து மோத மாட்டாது ஒழியும்.
==============================================
பாடல் எண் :
02
கோனக்கன் றாய குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாய நடுவே உழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
ஆனைக்கன் றீசன் அருள்வெள்ள மாமே.
ஞானக்கன் றாய நடுவே உழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
ஆனைக்கன் றீசன் அருள்வெள்ள மாமே.
பொழிப்புரை
: தலைவனாகிய சிவபெருமானது நடனம் புரிகின்ற திருவடிகளைத் துதியுங்கள். ஏனெனில், `ஞானக்கன்றுகளின் கூட்டம்` எனத்தக்க அடியார் கூட்டத்தின் நடுவே திரிந்து கொண்டிருப்பவனும், வானத்தில் வாழும் பசுக்கன்றுகளாகிய தேவர்களால் தொழப்படுபவனும் ஆகிய சிறப்பால் யானையை ஒத்த அடியவனுக்கே மறுமையில்
சிவனது திருவருட்பெருக்கு உளதாகும்.
==============================================
பாடல் எண் :
03
இதுபணிந் தெண்டிசை மண்டல
மெல்லாம்
அதுபணி செய்கின் றவள்ஒரு கூறன்
எதுபணி மானுடர் செய்பணி? ஈசன்
பதிபணி செய்வது பத்திமை யாமே.
அதுபணி செய்கின் றவள்ஒரு கூறன்
எதுபணி மானுடர் செய்பணி? ஈசன்
பதிபணி செய்வது பத்திமை யாமே.
பொழிப்புரை
: உலகங்கள் அனைத்தையும் செயற்படுத்தலாகிய அச்செயலைச் செய்பவளாகிய அம்மையும் அதனைச் செய்தல் அவளை ஒரு கூற்றிலே உடைய சிவனிடத்து இக்கிரியைத் தொண்டைச் செய்தேயாம். அங்ஙனமாயின், `மக்கள் செய்யத் தக்க பணி` யாது என்பார்க்கு, பதியாகிய அவனிடத்துச் செய்யுங் கிரியையே` என்பது கூற வேண்டுமே! இனி, `பத்திமை` எனக் கூறப்படுவது இக்கிரியையேயாம்.
==============================================
பாடல் எண் :
04
பத்தன் கிரியை சரியை
பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குருவரு ளால்சிவ மாகுமே.
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குருவரு ளால்சிவ மாகுமே.
பொழிப்புரை
: பத்தியை வேண்டுபவன், முன்னே சரியை கிரியைகளிற் பழகிப் பின்பு சத்திநிபாத முதிர்வால் குற்றம் அற்ற சிவயோகத்தில் மனத்தை செலுத்தும் வழியிலே பொருந்தி, அதனால், முதிர்ந்து
வருகின்ற ஞானத்தால் குருவருள் வாய்க்கப் பெற்றுப் பின்பு அவ்வருளானே சிவத்தை அடைந்து சிவமேயாவான்.
==============================================
பாடல் எண் :
05
அன்பின் உருகுவன் ஆளும்
பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ ணொனக்கருள்
என்பினுட் சோதி இலிங்கம்நின் றானே.
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ ணொனக்கருள்
என்பினுட் சோதி இலிங்கம்நின் றானே.
பொழிப்புரை
: செம்பொன்போலும் திருமேனியும், அதனுட் சிறப்பாகக் குறிக்கத்தக்க தாமரை மலர்போலும் திருவடிகளும் என் கண்முன் தோன்றினாற்போல, என் உடம்பகத்து இருதய கமலத்தில் ஒளியாய் விளங்குகின்ற சிவன், புறத்தில் இலிங்க மூர்த்தியிடமாக எனக்கு விளங்கி நிற்கின்றான். அதனால், அடியேன் அவன்மேல் வைத்த அன்பினால் மனம் நெகிழ்ந்து உருகுகின்றேன்; அவன் இடும் பணிகளைச் செய்கின்றேன்; எல்லாம் செய்து அவனை வேண்டுவது அவனது அருள் ஒன்றையே. அவ்வாறு அகத்தும் புறத்தும் வழிபடல் வேண்டும் என்பதும் கூறியதாயிற்று.
==============================================
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!