http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday, 13 February 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 15. ஆறந்தம் – பாடல்கள்: 34 பகுதி-I.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை...........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  ==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -015
கூடுதல் பாடல்கள்  (246+34=280) 

==============================================  

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம் பாடல்கள்: 34 பகுதி-I

பாடல் எண் : 1
வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகும்எட் டியோகத்தின் அந்தமும்
ஆதிக் கலாந்தமும் ஆறந்த மாமே.

பொழிப்புரை :  அந்தங்கள், அவையாவன சமயநூல்களின் முடிவுகள் ஆறு. அவை, `வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்` - என்பன.
**********************************************
பாடல் எண் : 2
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியா ரவர்தமக்(கு)
அந்தமொ டாதி அறியஒண் ணாதே.

பொழிப்புரை :  ஒரு பொருளை உடன்பாட்டினும், எதிர் மறையினும் ஆய்ந்து உணர்பவரே உண்மை உணர்பவர் ஆதலால், மேற்கூறிய ஆறு அந்தங்களையும் அறிந்தவரே அறிவர் ஆவர். அவற்றை அறியாதவர் அறிவர் ஆகார்.
**********************************************
பாடல் எண் : 3
தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்(து) அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேரச் சிவோகமாய்
ஆனா மலம்அற் றருஞ்சித்தி ஆர்தலே.

பொழிப்புரை :  பிறிதொரு நூலால் அன்றித் தன்னாலேதான் பிரமாண மாகின்ற வேதத்தின் முடிவுதான் எக்காலத்தும் சிவாகமங் களின் முடிவு. அவ்விரண்டிலும் கூறப்படுவது, நின்மலாவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளுள் சிவனின் நீங்கி நில்லாத துரியாவத்தையில் ஆன்மா, தன்னை முதற்கண் உள்ளவாறுணர்ந்து, தேன்போல இனிக் -கின்ற பரம்பொருளை அடைதற்கு வழியாகிய சிவோகம் பாவனையில் நின்று, அதனானே அனாதிதொட்டு நீங்காது பற்றி வருகின்ற மலம் முற்றும் நீங்கப்பெற்று, பெறுதற்கரிய பேற்றைப் பெறுதலேயாம்.
**********************************************
பாடல் எண் : 4
நித்தம் பரனோ டுயிர்உற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்து தத்துவம் தான்நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்(து)
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.

பொழிப்புரை :  `பரனே யன்றிச் சீவனும் அவன் போலவே என்றும் உள்ள அனாதி நித்தப்பொருள்` என்னும் கொள்கையை முதலிற் கொண்டு, (சீவன் அனாதியே பந்தப்பட்டு நிற்றலாம்), அது சுத்த மாயை, அசுத்தமாயை இரண்டும் பின்னர் வந்து பற்றாதவாறு விலகுதற்குரிய வழியை அறிந்து, அவ்வழியால் பந்தத்தினின்றும் நீங்கி, தந்தையாகிய சிவனை அடைதலே `சித்தாந்தம்` என்னும் தத்துவமாகும்.
**********************************************
பாடல் எண் : 5
மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுமெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால்
மேவும் பரம்விந்து. நாதம் விட ஆறா(று)
ஓவும் பொழு(து)அணு ஒன்றுள தாமே.

பொழிப்புரை :  பஞ்சகலைகட்கு அதிதேவராகப் பொருந்துபவருள் பிரமனது அதிகாரத்திற்கு உட்பட்டது. நிவிர்த்தி கலை. இது `பிருதிவி` என்னும் தத்துவத்தைத் தன்னுட் கொண்டது. இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது பிரதிட்டா கலை. இஃது அப்பு முதல் பிரகிருதி முடிவாக உள்ள இருபத்து மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இதற்கு அதிதேவன் மாயோன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இது வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னுட்கொண்டது. இதற்கு அதிதேவன் உருத்திரன். இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது சாந்தி கலை. இது சிவதத்துவங்களில் கீழ் உள்ள சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் மகேசுரன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது சாந்தி யதீத கலை. இது சிவதத்துவங்களுள் எஞ்சி நின்ற, `சத்தி, சிவம்` என்னும் இரண்டு தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் சதாசிவன். இங்குக் கூறிவந்த தத்துவங்களில் இறுதியாக எல்லாவற்றிற்கும் மேலே உள்ளனவாகச் சொல்லப்பட்ட `சத்தி, சிவம்` என்னும் தத்துவங்களே `விந்து, நாதம்` என்றும் சொல்லப்படும். ஆகவே, இவைகளையும் கடந்தால்தான் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்தததாகும். அவ்வாறு கடந்த பொழுதுதான் கருவி கரணங்களின் வேறாய், `ஆன்மா` என ஒன்று உளதாதல் விளங்கும்.
**********************************************
பாடல் எண் : 6
உள்ள உயிர்ஆறா றாகும் உபாதியைத்
தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
எள்ளல்இல் நாதாந்தத்(து) எய்திடும் போதமே.

பொழிப்புரை :  முன் மந்திரத்தில் கூறியவாறு, தத்துவம் முப்பத்தாறனையும் கடந்த நிலையில் `தான்` என ஒரு பொருள் அவற்றின் வேறாய் உளதாதலை உணர்ந்த ஆன்மா, தனக்கு உபாதியாய் (குற்றமாய்)ச் சேர்ந்த அவற்றினது சடத்தன்மையையும், தனது சித்துத் தன்மையையும் தெள்ளியவாக ஆராய்ந்து, அதனானே, அவற்றினின்றும் அறவே நீங்கி, அவ்விடத்தில் உள்ள தன்னை மறைக்கின்ற ஆணவ இருளும் சிவனது அருளால் நீங்க, அவனது உணர்வாகிய சிவஞானத்தோடு கூடி, அதுவாகி நிற்குமாயின், அவ்விடத்தில், `போதம்` எனப்படுகின்ற ஞானம் உண்டாகும்.
**********************************************
பாடல் எண் : 7
தேடும் இயம நியமாதி சென்றகன்(று)
ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

பொழிப்புரை :  இயமம், நியமம் முதலிய எட்டுறுப்புக்களையும் மேற்கொள்ளப் புகுந்து, அவ்வாறே படிமுறையால் மேல் ஏறி, முடிவான `சமாதி` என்னும் நிலையை எய்திச் சிவனுக்கு அணுக்கமாகி நிற்கச் சீவன் சிவனாய்விடும். அந்நிலையில் உலகத்தாக்கம் ஒழிய ஓர் அமைதி நிலை தோன்றும். அதுவே உயிர் பெறத்தக்க பேறு என்னும் இதுவே யோக நூலின் முடிவான கொள்கை.
**********************************************
பாடல் எண் : 8
கொள்கையி லான கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையி லான நிவிர்த்தி மேதாதாதிக்(கு)
உள்ளன ஆம்விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.

பொழிப்புரை :  `ஆறந்தம்` எனப்படுகின்ற கொள்கைகளில் ஒன்றான, `கலாந்தமாவது யாது` என அறிந்து கொள்ளப்புகின், உயிர் பாசங்களினின்றும் நீங்குதற்கண் துணையாய் உள்ள நிவிர்த்தி முதலிய சத்திகட்கு இடமாய் நிவிர்த்தி முதலிய கலைகளும், மற்றும் பிராசாத மந்திரத்தின் மேதா முதலிய கலைகளும் சுத்த மாயையிலே தோன்றிச் சுத்த மாயையிலே ஒடுங்குமாற்றை ஆராய்ந்து தெளிதலே கலாந்தமாம்.
**********************************************
பாடல் எண் : 9
தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவே(று)
ஒளியுள் அமைந்துள்ள ஓரவல் லார்கட்(கு)
அளிஅவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிவு உபதேசம் ஞானத்தொ(டு) ஐந்தாமே.

பொழிப்புரை :  முன் மந்திரத்தில் கூறப்பட்ட கலாந்தம் ஒழுக்கம் பற்றியது. இனி, நூல் அறிவு பற்றி நோக்குங்கால் உள்ள கலாந்தம் வேறு ஐந்தாகும். அவை, `மந்திர கலாந்தம், தந்திர கலாந்தம், தெளிவுக் கலாந்தம், ஞான கலாந்தம். உபதேச கலாந்தம்` என்பன. அவையும் ஞானப் பகுதிகளேயாம். அவை ஆராய்ச்சியில் வேட்கை உடையவர்கட்கு ஆவனவாம்.
**********************************************
பாடல் எண் : 10
ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் மனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.

பொழிப்புரை :  அநாதியே உள்ளவனால் செய்யப்பட்டமையின், `அநாதி நூல்` எனப்படுகின்ற ஆகமங்களையும், வேதங்களையும் ஓதி, ஐயம் திரிபு அற உணர்தல் மந்திரகலாந்தம். ஏனைப் பாசுபதம் முதலிய தந்திரங்களை அவ்வாறு உணர்தல் தந்திர கலாந்தம். அவ்வாறு உணரப் பட்ட அந்நூல்களில் கண்டவாறு ஒழுகும் ஒழுக்கத்தில் மேம்படுதல் தெளிவுக் கலாந்தம். திருவைந்தெழுத்தைத் தத்தமக்கு உரியமுறையில் மனம் முதலிய அந்தக் கரணங்களால் அன்றி, அறிவால் சுத்தமான -தாகப் பெரிய அளவில் கணித்தல் ஞான கலாந்தம். குரு உபதேசத்தை நன்கு சிந்தித்துத் தெரிந்தபின் நிட்டையில் நிற்றல் உபதேச கலாந்தமாம்.
**********************************************
பாடல் எண் : 11
தேசார் சிவம்ஆகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே.

பொழிப்புரை :  ஞான கலாந்தத்தில் சிவம் வெளிப்படும். (என்றாலும் அதன்கண் அன்பு செய்து அழுந்துதல் உபதேச கலாந் தத்தில் உண்டாகும்). தெளிவுக் கலாந்தம் இறைநெறி ஒழுக்கத்தையும், இறையன்பையும் வலுப்படுத்தும். (என்றாலும் அவற்றை அஃது அறிவியல் முறையில் உணர்த்தாது. அவ்வாறு உணர்த்துவது உபதேச கலாந்தமே). வாய் வாளாமைபெற்று, பிறபொருள் உணர்வும், தன்னுணர்வும் அற்ற பெருந்தகையோன் வாக்கு மனங்களைக் கடந்த பரமசிவன் ஆவான்.
**********************************************
பாடல் எண் : 12
தானது வாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானதும்
ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.

பொழிப்புரை :  வேதாந்தம் சித்தாந்தத்துள் அடங்க ஆறந்தங்கள் ஐந்தந்தங்களாகும். ஞாதுரு, ஞானம், ஞேயம் என்னும் மூன்று பொருள்கள் உள்ளன எனக் கூறுவதில் எந்த அந்தமும் வேறுபடவில்லை. `ஞானம் ஒன்றே உள்ளது; ஏனையவை இல்லை` எனக் கூறும் ஏகான்மவாதம் வேதாந்தம் அன்று என்பது மேலே கூறப்பட்டது, இவற்றுள் ஞாதுருவாகிய ஆன்மாவும், அதன் ஞானமும் சமாதிநிலையில் ஞேயத்திலன்றிப் பிறவற்றிற் செல்லாமையால், ஞாதுருவாகிய ஆன்மாவும் சிவமேயாய் நிற்கும்.
**********************************************
பாடல் எண் : 13
ஆறந்த மும்சென் றடங்கும்அஞ் ஞேயத்தே
ஆறந்தம் ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறிஉடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே.

பொழிப்புரை :  ஆறந்தங்களிலும், `ஞாதுரு ஞானத்துடன் சென்று, ஞேயத்தில் அடங்குதலைத்தான் முடிநிலையாகக் கூறுகின்றன. ஆகவே, ஞாதுருவும், ஞானமும் ஞேயத்தில் சென்று அடங்குதல்தான் ஆறந்தங்களின் குறிக்கோளும். ஆயினும், `ஞேயத்தில் அடங்குதல் மட்டுமன்றி, அவ்விடத்தில் எல்லையில்லாததோர் இன்பநுகர்ச்சியில் ஞாதுரு மூழ்கியிருத்தலே உண்மைப்பேறு` எனக் கூறுகின்ற சித்தாந்தமே ஏனை அந்தங்களினும் வடித்தெடுத்த மோன நிலையாகும்.
**********************************************
பாடல் எண் : 14
உண்மைக் கலைஆறொன் றைந்தின் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டைந்தோ டேழந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்(து)
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்த மாமே.

பொழிப்புரை :  உண்மையை உணர்த்தும் கலைகள் பலவாகச் சொல்லப்படினும் அவை அனைத்தும் பன்னிரு கலைக்குள் அடங்குவனவாம். இனி, அனைத்துக் கலைகளையும் விடாது கடக்க வேண்டின், பதினாறைத்தாண்டி அப்பால் செல்லுதல் வேண்டும், `நாதந்தம்` என்பது, இவ்வாறு கூறப்படுவனவற்றின் இடையே நிற்கின்ற ஒன்று. ஆகையால், அதையே `உண்மை` என்று சொல்லின், அஃது ஏகதேசத்தையே `முற்று` எனக் கருதுவதாகவே முடியும்.
**********************************************
பாடல் எண் : 15
ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி அருளிய கோனைக் கருதுமே.

பொழிப்புரை :  தேவரையெல்லாம் தம் ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சி புரிகின்ற, எங்களுடைய புகழ்மிக்க நந்திபெருமானே, நாங்கள் (`வேதாந்தமும், சித்தாந்தமும் வேறு வேறு` எனக் கூறிப்பிணங்குவார் பின் சென்று) கெடாதபடி எங்களை அறைகூவி அழைத்துத் திருவடி தீக்கை செய்து, `அவ்விரண்டிலும் சொல்லப் படுகின்ற உண்மை ஒன்றே என்பதையும், அவ்வுண்மையின் உயர்வையும் இனிது விளங்க உபதேசித்தருளிய ஞான குருவாவார். பசுக்களாகிய அனைத்துயிர் களையும் அடிமையாக உடைய சத்தி ஆதி சத்தியாய் நின்று ஆட்டிப் புடைக்கும் நிலையில், சிவனும் ஆதிசிவனாகவே அவளுடன் இருந்தவன், அந்நிலையை மாற்றித் தனது இயற்கை நிலையாகிய அநாதி சிவனாம் பரமசிவனாகி வந்து, அவளைத் தழுவிக் கொண்ட பின்பு, ஏனையோர்க்கும் எங்கட்கு அருளியவாறே அருளுமாறு அவன் அந்நந்தி பெருமானைத் திருவுள்ளத்தில் எண்ணுவான்.
**********************************************
பாடல் எண் : 16
கருது மவர்தம் கருத்தினுக் கொப்ப
அரன்உரை செய்தருள் ஆகமந் தன்னில்
வரும்சம யம்புறம் மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.

பொழிப்புரை :  கொள்வார் கொள்ளும் வன்மை மென்மைகட்கு ஏற்பச் சிவன் உலகில் பலவகைச் சமய நூல்களை ஆக்கி வைத்திருக்கின்றான். (அவை ஒன்றோடொன்று முரணுதல் போலத் தோன்றுதல், அவற்றைக் கொள்வாரது பக்குவத்திற்கு ஏற்ப அவை அமைந்ததனாலேதான். அதனால் அவற்றைக் கொள்வோர் தமக்கு விருப்பமானவற்றை கொண்டு அமைதல் வேண்டுமன்றிப் பிறருக்கு விருப்பமானவற்றைப் பழித்தல் கூடாது. ஏனெனில் எல்லா நூல்களும் இறைவன் அருளால் தோன்றியவையே யாகலின்) அந்நூல்களின் வழி அமைந்த சமயங்களில் சில, `புறம்` எனப்படும். மாயை, மகாமாயை இவற்றைக் கொண்டுள்ள சமயங்கள் அகச்சமயங்களாம். அவற்றையும் கடந்து நிற்பன வேதாந்த சித்தாந்தத் தத்துவங்கள்.
**********************************************
பாடல் எண் : 17
வேதாந்த சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்தம் ஞானம்யோ காந்தம் பொதுஞேயம்
நாதாந்தம் ஆனந்தம் சீருத யம்மாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கலே.

பொழிப்புரை :  ஆறந்தங்களில் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் ஒன்றே எனத் தெளிவான அடையாளங்களைப் பெற்றுள்ளன. `போதந்தம்` என்பது உயிர் அஞ்ஞானம் நீங்கி, ஞானத்தைப் பெறும் நிலையாகும். `யோகாந்தம்` என்பது, பொதுப்பட ஒரு பொருளைக் குறியாகக்கொண்டு அதனையே நோக்கிநிற்பது. நாதாந்தம் திருவருளைத் தலைப்பட்டு, அதனாலே சிவானந்தம் தோன்றப் பெறுவது. இவற்றிற்கு மேலாக முதலிற்கூறிய வேதாந்த சித்தாந்தங்களே முடிந்த அடையாளமாகிய பேசாநிலையை பெற்றுச் சிவானந்தத்தில் திளைத்திருக்கலாகும்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!