http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday, 13 February 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 15. ஆறந்தம் – பாடல்கள்: 34 பகுதி-II.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034 
==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -015
கூடுதல் பாடல்கள்  (246+34=280)
============================================== 

தந்திரம்08: பதிகம் 15. ஆறந்தம் – பாடல்கள்: 34 பகுதி-II 

பாடல் எண் : 18


வேதாந்தந் தன்னில் உபாதிமேல் ஏழ்விடல்
நாதாந்தம் பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்தம் காரணோ பாதியேழ் மெய்ப்பரம்
போதந்தம் தற்பதம் போம்அசி என்பவே.

பொழிப்புரை :  வேதாந்தத்தில் சொல்லப்படுவது, `பிரகிருதியும் அதன் காரியமுமாகிய ஏழுவகைக் குற்றங்களினின்றும் நீங்க வேண்டும்` என்பதே. அவை 1. பூதங்கள், 2. ஞானேந்திரியங்கள், 3. அவற்றின் விடயங்கள், 4. கன்மேந்திரியங்கள், 5. அவற்றின் விடயங்கள், 6. அந்தக் கரணங்கள் என்பனவும், எல்லாவற்றிற்கும் மூலமாகிய 7. பிரகிருதியும் ஆகியவையாம்.  வேதாந்தத்திற்கு மேலேயுள்ள கலாந்தமாகச் சொல்லப் படுவது பிரோக காண்டம் ஆதல்பற்றிக் காரண தத்துவங்களாகச் சொல்லப்படுகின்ற சுத்த தத்துவங்களால் செலுத்தப்படுகின்ற வித்தியா தத்துவங்கள் ஏழும் நீங்குதலாம். இத்தத்துவங்கள் தடத்த சிவனால் செலுத்தப்படுதல் பற்றி, `பரோபாதி` என்றும் சொல்லப்படும்.  நாதாந்தமாகச் சொல்லப்படுவது, உயிர் உபாதிகள் அனைத்தும் நீங்கி நிற்கின்ற நிலையாம். `தத்துவமசி` மகா வாக்கியத்தில் ஆன்மாவைக் குறிப்பதாகிய `துவம்` பதம் இந்நிலையில் நின்ற ஆன்மாவையே குறிப்பதாம்.  போதாந்தமாகச் சொல்லப்படுவது, உபாதிகளின் நீங்கிய ஆன்மா மல வாசனையால் `யான், எனது` எனநிற்கின்ற நிலையை விடுத்துச் சிவமாகும் நிலையாம் `தத்துவமசி` மகாவாக்கியத்தில் `ஆசி` பதம் ஆன்மா இவ்வாறாகும் நிலையையே குறிப்பதாம். `தத்` பதம் சிவத்தைக் குறிக்கும்.
**********************************************
பாடல் எண் : 19
அண்டங்கள் ஏழுந் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளால் உளவொளி
பண்டுறு கின்ற பராசத்தி யென்னவே
கொண்டனன் அன்றிநின் றான்எங்கள் கோவே.

பொழிப்புரை :  `உலகங்கள் அனைத்தையும் கடந்தாலும் அவற்றிற்கு அப்பாலும் ஒருபேரொளி உள்ளது` என வேதாகமங்கள் கூறுகின்றன. அந்தப் பேரொளிக்குள்ளே உள்ள ஓர் ஒளிதான் எங்கள் சிவபெருமான். அவன் அந்தப்பேரொளியைத் தனக்கு இயல்பாய் உள்ள மேலான ஆற்றலாக உடையவன். எனினும் அந்த ஆற்றலை ஆட்சி செய்கின்ற ஒருவனாகவும் அவன் அதற்குள் இருக்கின்றான்.
**********************************************
பாடல் எண் : 20
கோவுணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் தும்கரு மச்செய்தி செய்யவே
பாஅனைத் தும்படைத்(து) அற்சனை பாரிப்ப
ஓவனைத் துண்டொழி யாத ஒருவனே.

பொழிப்புரை :  சிவன் தனது சத்தியாலே உயிர்கட்கு அறிவிக்கும் முறையை உணர்ந்து, அந்த வழியிலே குரு உபதேசித்த பணிகளைச் செய்வதாலும், மற்றும் மந்திரங்களைச் சமர்ப்பித்து வழிபாடு செய்வதாலும் பாசங்கள் யாவும் நீங்கும். பின்பு என்றுமே உயிர்க்குயிராய் நீங்காதிருக்கின்ற சிவன் ஒருவனே உயிரினிடத்து உள்ள பொருளாவான்.
**********************************************
பாடல் எண் : 21
ஒருவனை உன்னார் உயிரினை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேஉள் ளுணர்த்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே

பொழிப்புரை :  சித்தாந்தம், ``மற்றாருந்தன்னொப்பாரில்லாத`` l தலைவன் ஒருவன் இருக்கின்றான். எனக் கூறுவதையோ, `அத் தலைவனுக்கு அடிமையாய் உள்ள உயிர்கள் பல உள்ளன` எனக் கூறுவதையோ, `அவ்வுயிர்கட்கு நல்வினை; தீவினை யென்னும் இருவகை வினைகளும், சுத்த மாயை என்னும் மாயைகளும் ஆகிய கட்டுக்கள் உள்ளன` எனக் கூறுவதையோ சக்திநிபாதம் வாயாதவர் உணர வல்லவராகார். ஆகையால், எக்காலத்திலும் உயிர்களின் அறிவுக்கறிவாய் நின்று அவைகளுக்கு அறிவித்து, வினைப்பயனை நுகர்வித்து, அவற்றிற்கு அவை அறியாமலே ஆதாரமாயும் நிற்கின்ற அந்தத் தலைவனே இருவினையொப்பு மல பரிபாகங்களின்போது அறிவித்தால்தான் எவரும் இந்தச் சித்தாந்த உண்மைகளை உணர இயலும்.
**********************************************
பாடல் எண் : 22
அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வரும்அவை சத்திகள் முன்னா வகுத்திட்(டு)
உரன்உறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரன்உறத் தோயாச் சிவாநந்தி யாமே.

பொழிப்புரை :  சிவன்பால் அன்புள்ளவர்களை இடமாகக் கொண்டு வெளியாகின்ற ஆற்றல்கள் எல்லாம் அவர்களுடைய ஆற்றல்கள் அல்ல; மற்று, சிவனிடத்தினின்றும் வெளியாகின்ற ஆற்றல்களே அந்த ஆற்றல்களின் முன்னிலையில் எல்லாப் பொருள்களையும் சிவன் நிற்க வைத்துச் செயற்படச் செய்தலால், உயிர் நிலையாகச் சிவானந்தத்தில் மூழ்கி, அவ்வானந்தமே மயமாம் நிலையை அடையும்.
**********************************************
பாடல் எண் : 23
வேதாந்தம் தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்தம் பாசம் விடநின்ற நன்பதி
போதாந்தம் தற்பதம் போய்இரண் டைக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.

பொழிப்புரை :  வேதாந்தப் பொருள் முழுவதையும் மிகச் சுருக்கமாகத் தொகுத்துணர்த்தும், `ஒருமொழி அல்லது `பெரும்பெயர்` எனப்படுகின்ற மகாவாக்கியங்கள் சிலவற்றுள், `தத்துமசி` என்பதே சிறந்தெடுத்துச் சொல்லப்படுவது. (இது சாம வேதவாக்கியம்) இதனுள் `தத்` என்பது பதியாகிய சிவத்தையும், `துவம்` என்பது பசுவாகிய உயிரையும், `அசி` என்பது, உயிரைச் சிவமாக்குகின்ற அருட் சத்தியையும் குறிக்கும். எனினும், `இவற்றுள் பசுவாகிய உயிர் பஞ்ச பேதங்களையுடைய (இத்தந்திரத்து முதல் அதிகாரம்) உடலளவில் ஏகதேசமாய உள்ளதன்று; வியாபகமானதே` என்பதை வலியுறுத்தி விளக்குவதே வேதாந்தமாகும். மண்முதல் நாதம் ஈறாகச் சொல்லப் படுகின்ற உபாதிகளுள் ஒன்றும் இன்றி, நின்மலமாய் நிற்பது எதுவோ அதுவே பதிப்பொருள்` என வலியுறுத்தி விளக்குவது நாதந்தமாகும் (`உயிர் இவ்வுபாதிகளை உடைமையாலே - பசு - எனப்பட்டது` என்பதும் இதனானே விளங்கும்).  இனி, துவம் பதப்பொருளாகிய உயிர் தத் பதப்பொருளாகிய சிவத்தில் சென்று `பாலோடளாய நீர பாலாகு மலலது நீராய் நிறந்தெரிந்து தோன்றாதவாறு போல`` சிவமேயாய் வேறு தோன்றாது ஒன்றிவிடுதலை வலியுறுத்தி விளக்குவதே போதாந்தமாகும். (போதம் - சீவபோதம். அந்தம் - அதன் ஒடுக்கம். அஃதாவது கதிரொளியில் விளக்கொளி போலச் சிவபோதத்தில சீவ போதம் அடங்கியிருத்தல்). [`போதாந்தம் கூறும் நிலையை எய்தி, அவ்விடத்தில உயிர் பேரா இன்பப் பெருவெள்ளத்தில் அழுந்துதலை வலியுறுத்தி விளக்குவதே சித்தாந்தமாகும்` என்பது குறிப்பு.]  `சிவமும், சீவனும் பொருள் இரண்டாமாயின், அவை ஒன்றாதல் எங்ஙனம் கூடும்` எனின், அவ்விரண்டற்கும் இடையே உள்ள பொதுத்தன்மைதான் அவை அங்ஙனம் ஒன்றாதற்குக் காரணம் [அத்தன்மையாவது, இரண்டும் சித்தாய் இருத்தலாம். எனவே, சடத்திற்குச் சிவத்தோடு ஒன்றுதல் கூடாமை விளங்கும்].
**********************************************
பாடல் எண் : 24
சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம அவமமாம் அவ்வீ ரிரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்ததொன் றானால்
நவமான வேதாந்த ஞானம்சித் தாந்தமே.

பொழிப்புரை :  ஆறந்தங்களுள், `வேதாந்தம், சித்தாந்தம்` என்னும் இரண்டும், சீவன் சிவம் ஆதலைக் கூறுவதில் வேறுபடவில்லை. ஏனை, `போதாந்தம், கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம்` என்னும் நான்கும் ஒன்றின் ஒன்று கீழ்ப்பட்ட நிலைகளையே விளக்கி நிற்கும். வேதமும், சித்தாந்தத்தைக் கூறும் சிவாகமும், உண்மையில் `சிவம் எனப்படுகின்ற அந்தப்பொருளே, தடத்தத்தில் `சதாசிவன்` என்னும் பெயரையும், அதற்குரிய வடிவத்தையும் கொண்டு செய்த முதல்நூல் ஆகுமானால், அவற்றுக்கிடையே வேறுபாடிருத்தல் எங்ஙனம் கூடும். கூடாது. ஆகவே, வேதாந்த ஞானம், சித்தாந்த ஞானமேயாம்.
**********************************************
பாடல் எண் : 25
சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.

பொழிப்புரை :  ஆறந்தங்களுள் சித்தாந்தத்தில் நிற்கும் நிலையில் தான் சீவன் முத்தி (அஃதாவது, உடம்பு உள்ளபொழுதே அதில் தொடக்கற்று, வீட்டின்பத்தில் இருக்கும்நிலை) கிடைக்கும். ஆகையால், சித்தாந்த நிலையில் நிற்பவர் உலகர்போலவே காணப்படினும், அவர் உலகருள் ஒருவராகாது, வீடுபேற்றில் இருப்பவரே ஆவார். வேதாந்தத்தின் உட்கிடையும் சித்தாந்தமேயாதலால், அவ்வுட்கிடையை உணரவல்லவர்கட்கு வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் சிவனையே பரமாகக் காட்டி நிற்றல் விளங்கும்.
**********************************************
பாடல் எண் : 26
சிவனைப் பரமனும் சீவனுட் காட்டும்
அவமற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆனால்
நவமுற் றவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.

பொழிப்புரை :  சிவனை ஈசுரனிடத்திலும், சீவனிடத்திலும் வைத்துக் காட்டுவது வேதாந்தம். அதில் இருவகை உண்டு. ஒன்று பரிணாம வாதம்; மற்றொன்று ஆபாசவாதம். ஆபாசம் - போலி. விவர்த்தனம் ஆபாசத்துள் அடங்கும். விவர்த்தனம் - கயிறு பாம்பாதல் போலும் பொய்த்தோற்றம். `நிர்க்குணமாகிய பரப்பிரமமே தன் இச்சையால், சத்துவகுணனாகிய ஈசுரனாகவும், இராசத குணனாகிய சீவனும், தாமத குணத்தவாகிய அந்தக் கரணம் முதலிய கருவிகளுமாய்ப் பரிணமிக்கும்` என்பது பரிணாம வாதம். `நிர்க் குணமாகிய பரப்பிரமத்திலே - இன்னது எனச்சொல்ல இயலாத - மாயை என்பது உண்டு. அது முக்குணங்களையுடையது. மூன்றுநிறம் உடைய கண்ணாடியைப் போன்றது. அம்மூன்றுகூற்றிலும் கண்ணாடியில் நிழல்போலப் பரப்பிரமம் பிரதிபலிக்கும். அவற்றுள் சத்துவக் கூற்றின் பிரதி பலனம் ஈசுரனாயும், இராரசதக் கூற்றின் பிரதிபலனம் சீவனாயும், தாமதக் கூற்றின் பிரதி பலனம் அந்தக் கரணம் முதலிய கருவிகளாயும் நின்று செயற்படும்` என்பது ஆபாசவாதம். இந்த ஆபாசத்திற்கு அடிப்படை மாயையேயாகையால், ஆபாசவாதமே `மாயாவாதம்` எனப்படுகின்றது எவ்வகையிலேனும் இந்தவேதாந்தம் `சகம், சிவன், பரம்` என்னும் முப் பொருளை உணர்த்துதலால், இதனை உணர்ந்த பின் ஆகமாந்தத்தை உணருங்கால், வேதாந்தக் கூற்று தூலாருந்ததி முறைமைத்தாதல் விளங்கும். தூலாருந்ததி முறைமையாவது, `அருந்ததி மீன் மிக நுண்ணிதாதலின், அதனைக் காட்டுதல் அரிது` என்று கருதி முதற்கண், அதற்கு அருகில் உள்ள ஒரு பெருமீனைச் சுட்டி, `அதுவே அருந்ததி` எனக் காட்டுதல் போன்ற முறை. முதலில் அப்பெரு மீனைக்கண்டு உணர்ந்தவனுக்குப் பின்பு, `அஃதன்று அருந்ததிமீன்; அதனைச் சார்ந்து மிகநுண்ணியதாய் விளங்குகின்ற தனைப் பார்; அதுவே அருந்ததி மீன்` எனக்காட்டினால், அவன் அருந்ததியைக் கண்டுகொள்வான். இம் முறையில் அருந்ததியல்லாத மீனை அணுக்கம் பற்றி `அருந்ததி` என்றல் போல்வது இங்குக் கூறிய வேதாந்தப் பொருள். அருந்ததி மீனையே சுட்டி, `அருந்ததி மீன்` எனக் காட்டுதல் போல்வது ஆகமாந்தப்பொருள். ஆகவே, தூலாருந்ததி முறைமை பற்றி நோக்கினால் இங்குக் கூறிய வேதாந்தமும் பயனில்லது ஆகாதாகலின், இந்த வேதாந்தமும் சித்தாந்தமேயாம். இவ்வாறு ஆகும் நிலைமையில் ஒருவனது ஞானம் அமையுமாயின், அந்த ஞானம் தசகாரியத்துள் ஒன்பதாம் நிலையாகிய `சிவயோகம்` எனப்படுகின்ற சீவன் சிவனாய் நிற்கும் நிலைமையைத் தரும். சரியை, கிரியை, யோகம்  என்றும் தவங்களின் மிகுதியனாலே இத்தகைய ஞானத்தை எய்தினோரே தத்துவ ஞானிகள் எனப்படுகின்றார்கள்.
**********************************************
பாடல் எண் : 27
தத்துவ மாகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன்நல் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.

பொழிப்புரை : சித்தாந்தத்தில் சொல்லப்படுகின்ற உருவம், அருவம் உருவாருவம் ஆகிய சிவவடிவங்களும், அவற்றிற்கு இடமாகின்ற விந்து, நாதம், சாதாக்கியம் ஆகிய நிலைக்களங்களும், சீவனும், அதனின் மேம்பட்ட சிவன், சத்தி, சதாசிவன் ஆகிய கருத்தாக் -களும் உண்மைகளேயன்றி, மேற்கூறிய வேதாந்தத்தில் சொல்லப் படுபவன போல, பரிணாமமோ, ஆபாசமோ அல்ல. ஆகவே, சீவன் சிவனோடு, கதிரவன் ஒளியில் விளக்கொளிபோல இரண்டறக் கலக்கும் சித்தாந்த முத்தியே உண்மை முத்தியாம்.
**********************************************
பாடல் எண் : 28
வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்
பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே.

பொழிப்புரை :  இதன்பொருள் வெளிப்படை.

குறிப்புரை : பொது, உண்மையை முற்ற உணர்த்தாது, ஓரளவாக உணர்த்துவது. சிறப்பு, உண்மையை முற்ற உணர்த்துவது, உலகர் உண்மையை ஓரளவே உணர்வார்; சத்தி நிபாதரே முற்ற உணர்வார். மேலும் உண்மையை முதற்கண் ஓரளவாக உணர்ந்தே பின்பு முற்ற உணர இயலும். அது பற்றியே உலகர்க்காவும், சத்திநிபாதர்க்காகவும் முறையே வேதமும், ஆகமமும் சிவனால் செய்யப்பட்டன. எனவே இவ்வுண்மையை உணராதவர், `வேதாந்தம் வேறு சித்தாந்தம் வேறு` என்பர். இவ்வுண்மையை உணர்ந்தவர் ஓர் உண்மைதானே பொதுவும், சிறப்புமாம் வகையில் `வேதாந்தம்` எனவும், `சித்தாந்தம்` எனவும் நிற்கின்றது என்பர் என்றபடி.  ``வேதநூல், சைவநூல் என்றிரண்டே நூல்கள்; வேறும்உள நூல்இவற்றின் விரிந்த நூல்கள்; ஆதிநூல் அனாதிஅமலன் தருநூல் இரண்டும்; ஆரணநூல் பொது; சைவம் அருஞ்சிறப்பு நூலாம்; நீதியினால் உலகர்க்கும் சத்தநிபாதர்க்கும் நிகழ்த்தியது`` -சுபக்கம் சூத். 8 - 15.  என்றது சிவஞானசித்தி. இதனால், ஆறந்தங்களுள் வேதாந்த சித்தாந்தங்களது தலைமை அவற்றின் இயல்பு கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.
**********************************************
பாடல் எண் : 29
பரானந்தி மன்னும் சிவானந்த மெல்லாம்
பரானந்தி மேன்மூன்றும் பாழுறா னந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்ந்நட னானந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.

பொழிப்புரை :  வேதாந்தத் தெளிவாம் சித்தாந்த நெறியில் அடையப்படும் ஆனந்தம் சிவானந்தம். அதனை முற்றப்பெற்ற உயிரே மேலான ஆனந்தத்தைப் பெற்ற உயிராகும். இனி அந்த ஆனந்தம் முப்பாழுக்கு மேலே விளைவதாகும். அதனை இவ்வுலகிலே இறைவன் செய்யும் திருக்கூத்திலும் பெறலாம். திருக்கூத்தில் பெறும் `முத்திரானந்தம், எனப்படும். அதனை எல்லாரும் பெறுதல் கூடும். சிவானந்தத்தை எந்த வகையிலேனும் பெறும் உயிரே இன்பத்தால் நிறைக்கப்பட்ட உயிராகும்.
**********************************************
பாடல் எண் : 30
ஆகும் கலாந்தம் இரண்டந்தம் நாதாந்தம்
ஆகும் பொழுதில் கலைஐந்தாம் ஆதலின்
ஆகும் அரனேபஞ் சாந்தக னாமென்ன
ஆகும் மறைஆ கமம்மொழிந் தானே

பொழிப்புரை :  ஆறந்தங்களில், `கலாந்தம், நாதாந்தம்` என இரண்டு கூறப்படினும், நாதாந்தம் கலாந்தத்துள் அடங்கும் ஆதலின், நிவிர்த்தி முதலிய பஞ்சகலைகளின் முடிவே முடிவாகும் ஆகவே, `அந்தப் பஞ்சகலைகளையும் சுத்த மாயையுள் ஒடுக்கியும், மீள விரித்தும் நிற்பவன் சிவன்` எனக் கேட்கப்படுதலன்றிப் பிறர் ஒருவரும் அத்தன்மையராதல் கேட்கப்படாமையால், அவனே ஆறந்தங்கட்கும் மூலமாகிய வேதாகமங்களைச் செய்தருளினான்.
**********************************************
பாடல் எண் : 31
அன்றாகும் என்னாதை ஐவகையந் தந்தம்மை
ஒன்றான வேதாந்தம் சித்தாந்தம் முன்னிட்டு
நின்றால் இயோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே.

பொழிப்புரை :  வேதாந்தத்தைத் தவிர மற்றை ஐந்து அந்தங்களை, `உண்மையல்ல; போலி என்று இகழாதே தலையாய வேதாந்தத்தைச் சித்தாந்தத்தின் வழியாக உள்ளவாறுணர்ந்து நின்றால், யோகாந்தம் செயல்முறையில் வாய்க்கும். அது வாய்த்தால், மன்றாடியாகிய சிவனது திருவடிப்பேறும் கூடும்.
**********************************************
பாடல் எண் : 32
அனாதிசீ வன்னைம் மலமற்றப் பாலாம்
அனாதி அடக்கித் தனைக்கண் டரனாய்த்
தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்
வினாவும்நீர் பால்ஆதல் வேதாந்த உண்மையே.

பொழிப்புரை :  பதியைப்போலவே பசுவாகிய சீவனும் அனாதி. அதற்கு அனாதியே ஒரு குற்றம் உண்டு. அந்தக்குற்றம் மேல் எழாமல் கீழாம்படி அடக்கினால் சீவன் தனது உண்மையைத்தான் உணரும். தன்னை உணர்ந்தால், பின் தலைவனை உணர்ந்து, அவனைச் சார்ந்து அவனாகி நிற்கும். அங்ஙனம் நிலையை அடைதற்பொருட்டுச் சீவன் அனாதிக்குப் பின் ஆதியாய் வந்த மலங்களும் நீங்கும்படி அவற்றைக் கடக்கும் முறையை ஞான குருவை அடைந்து வினாவும். பின் அவர் உபதேசித்தபடி நின்று, ஐந்து மலங்களும் நீங்கப் பெற்றுத் தூயதாய் உலகத்தைக் கடந்து நிற்கும். அந்நிலையில் அது சிவத்தைச் சேர்ந்து சிவம் ஆதல், நீர் பாலோடு சேர்ந்து பாலாதல் போல்வதாம். வேதாந்தத்தின் உண்மைப்பொருள் இதுதான்.
**********************************************
பாடல் எண் : 33
உயிரைப் பரனை உயர்சிவன் றன்னை
அயர்வற்ற றறிதொந்தத் தசியெ னதனால்
செயலற் றறிவாகி யும்சென் றடங்கி
அயர்வற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆமே.

பொழிப்புரை :  `உயிர், பரன், திருவருள்` என்னும் முப்பொருளையும், `அவற்றுள் ஒன்றையும் விடாது முறையே உணர்த்துகின்ற, `துவம், தத், அசி` என்னும் மூன்று பதங்களால் ஆகிய வேதாந்த மகாவாக்கியத்தை அனுபவமாக உணர்வதால், நீ சடமாகிய பாசங்கள் ஆகாது, சித்தாகி விடுவாய். ஆயினும், அதன்பின் `யான் எதனையும் யானே அறியமாட்டாமையால், தூலசித்தாகின்ற எனக்கு எஞ்ஞான்றும் அறிவித்து வருகின்ற சூக்கும சித்து ஒன்று உண்டு என உணர்ந்து, எதனையும், `யான் அறிகின்றேன், யான் செய்கின்றேன்` எனச் செருக்குதலை விடுத்து, அந்தச் சூக்கும சித்தின்கீழ்ப் போய் அடங்கியிரு. அப்பொழுதே வேதாந்தம் சித்தாந்தம் ஆகிவிடும்.
**********************************************
பாடல் எண் : 34
மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய(து) ஆன சிவோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்
துன்னிய ஆகம நூல்எனத் தோன்றுமே.

பொழிப்புரை :  பொது மறையாகிய வேதத்தை மட்டுமே நூலாகக் கொண்டு, சிவாகமங்களை நூலாகக் கொள்ளாதவர்கட்குத் தலையான மகாவாக்கியமாய் உள்ளது, ``ஸோஹம் அஸ்மி`` என்பது [இதன் பொருள், `அது நான் ஆகின்றேன்` அல்லது, `அவன் நான் ஆகின்றேன்` என்பது `தத்துவமசி` மகாவாக்கியத்தில் முன்னிலையில் வைத்துச் சொல்லப்பட்ட பொருளே இதில், தன்மையில் வைத்துச் சொல்லப்பட்டது. ஆகையால் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளது வடிவு வேற்றுமையேயன்றிப் பொருள் வேற்றுமையில்லை. `தத்துவமசி` மகாவாக்கியம், மாணவனுக்கு உபதேசிக்கும் ஆசிரியர் கூற்று. `ஸோஹம் அஸ்மி` மகாவாக்கியம், ஆசிரியர் உபதேசித்த பொருளை அனுபவமாகக் காணும் மாணவன் கூற்று. இவற்றால் இவை முன்னிலையிடத்தும், தன்மையிடத்தும் ஆயின]. இனிப் பொதுமறையாகிய வேதத்தோடு, சிறப்பு மறையாகிய சிவாகமங்களையும் நூலாகக் கொள்வோர், வேதாந்தத்தில் `ஸோக மஸ்மி` எனப் பொதுவாகக் கூறப்பட்டது, உண்மையில், `சிவோஹ மஸ்மி` எனக்கொள்வர். (இதன் பொருள், `சிவன் நான் ஆகின்றேன்` என்பது). அக்கொள்கையே சிறப்பு மறையாகிய சிவாகமங்கள் ஆராய்ந்து காட்டும் முடிநிலை முடிபாகும். அந்த முடிபைப் பல்லாற்றானும் வலியுறுத்த எழுந்த நூல்களே `சிவாகமம்` எனப்பெயர் பெற்று விளங்குகின்றன.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!