==============================================
பாடல்
எண் : 1
தன்னை
அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை
அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை
அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே
அற்சிக்கத் தானிருந் தானே.
பொழிப்புரை
: ஒருவன் பொருள்
இயல்புகளை உள்ளவாறு அறியப் புகும்பொழுது தன்னுடைய இயல்பை முதற்கண் உள்ளவாறு
அறிவானாயின், அதன்பின்பு
அவனது அறிவு பொய்யறிவாகிக் கெடாது; தானும் எந்தக் கேட்டினையும் எய்தான். ஆகவே, மனிதன் முதலில்
தன்னுடைய இயல்பை அறிய முயலாமல், பிற பொருள்களின் இயல்பை அறிய முற்படுவதால், அறிவுகெட்டு
அலைகின்றான். அதனால்,
ஒருவன் முதலில் தனது இயல்பை உள்ளவாறு அறியும் அறிவைப்
பெற்றுவிடுவானாயின், அவன் தன்னையே
பிறர் வழிபடும் அளவிற்கு உயர்ந்து நிற்பான்.
**********************************************
பாடல்
எண் : 2
அங்கே
அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா
தனத்தே சிவன்இருந் தான்என்று
சங்கார்
வளையும் சிலம்பும் சலேல்எனப்
பொங்கார்
குழலியும் போற்றிஎன் றாளே.
பொழிப்புரை
: `எந்த உயிருக்கு
மல பரிபாகம் வந்ததோ, அந்த உயிரின் உள்ளத்திலே
சிவபெருமான், வலிமையும், பெருமையும் உடைய
அனைத்துத் தேவர்களும் தொழும்படி வீற்றிருக்கின்றான்` என்பதை உணர்தலால், அருட்சத்தியாகிய
தேவியும் அங்கே மகிழ்ச்சியோடு விரைவில் சென்று அப்பெருமானை வணங்குவாள்.
**********************************************
பாடல்
எண் : 3
அறிவு
வடிவென் றறியாத என்னை
அறிவு
வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு
வடிவென் றருளால் அறிந்தேன்
அறிவு
வடிவென் றறிந்திருந் தேனே.
பொழிப்புரை
: மேற்கூறியவாறு, ``வானோர் தலைவி`` தந்த மயக்கத்தால், `எனது வடிவம் அறிவு` என்னும் உண்மையை
அறியாது. `உடம்பே` என்று மயங்கியிருந்த
என்னை, நந்திபெருமான்
தோன்றி அம்மயக்கத்தை நீக்கி, `உனது வடிவம் உடம்பன்று; அறிவு` என அருளிச்செய்து
உண்மையை உணரப் பண்ணினார். அவரது திருவுளக் கருணையால் அடியேனுக்கு அறிவு
உதயமாயிற்று. அதனால்,
`உடம்பு எனது வடிவம் அன்று` என உணர்ந்து அதனின் நீங்கியிருக்கின்றேன்.
**********************************************
பாடல்
எண் : 4
அறிவுக்
கழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்
கறிவல்ல(து) ஆதாரம் இல்லை
அறிவே
அறிவை அறிகின்ற(து) என்றிட்(டு)
அறைகின்
றனமரை ஈறுகள் தாமே.
பொழிப்புரை
: தோற்றமும், கேடும் சடத்துக்கன்றிச்
சித்துக்கில்லை. சித்துக்குப் பற்றுக்கோடு சித்தேயன்றிச் சடம் அன்று. அவ்வாறே
சித்தை யறிவதும் சித்தன்றிச் சடம் அன்று. இவ்வாறு, `வேத முடிபுகள்` எனப்படுகின்ற
உபநிடதங்கள் யாவும் கூறுகின்றன.
**********************************************
பாடல்
எண் : 5
மன்னிநின்
றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின்
றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந்
தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின்
றேன் `நீ பெரியை` என் றானே.
பொழிப்புரை
: `உலகத்தில் பலராய்க்
குழுமி வாழ்கின்ற அனைத்து மக்களிடையே தானும் ஒரு மகன்போல வந்து அருள்செய்ய
வேண்டும்` என்கின்ற
சூழ்ச்சியைத் திருவுளத்து எண்ணி, அவ்வாறு வந்து என்முன் நின்ற சிவனை யான் `சிவன்` என்று அறிந்துகொண்டு
போற்றினேன். பின்னும் அங்ஙனம் அவன் வந்து நின்ற திருமேனியை விடாது பற்றிக்கொண்டு
திரிந்தேன். அதைக் கண்டு அவனே வியந்து, `அப்பா` நீ மிகப் பெரியை` என்று கூறினான்.
**********************************************
பாடல்
எண் : 6
அறிவறி
வாக அறிந்தன்பு செய்மின்
அறிவறி
வாக அறியும்அவ் வண்ணம்
அறிவறி
வாக அணிமாதி சித்தி
அறிவறி
வாக அறிந்தனன் நந்தியே.
பொழிப்புரை
: மெய்யறிவு வேண்டுவீர், உமது வேட்கை நிரம்ப
வேண்டுமாயின் நீவிர் சிவனையே பொருளாக உணர்ந்து அவனிடம் அன்புசெய்யுங்கள் (பிறரைப்
பொருளாக அறியும் அறிவுகள் எல்லாம் போலியறிவே.) யான் சிவனை உணர்ந்து பயன் பெற்றேன்.
(``நான் பெற்ற
இன்பம் பெறுக இவ்வையகம்``)
இவ்வாற்றால் உமது அறிவு உண்மை மெய்யறிவாயின், அதனைச் சிவனும் அறிந்து, பயன் தருவான். அதனால்
அத்தகைய அறிவால் நிலையான வீடுபேறே யன்றி, இடையில் அணிமாதி சித்திகளும் தாமே வந்து
வாய்க்கும்.
**********************************************
பாடல்
எண் : 7
அறிவறி
வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி
யாமையை யாரும் அறியார்
அறிவறி
யாமை கடந்தறி வானால்
அறிவறி
யாமை அழகிய வாறே.
பொழிப்புரை
: உலகினர், `எமக்கு அறிவு வேண்டும், அறிவு வேண்டும்` என்று கூப்பாடு
போடுகின்றனர். `ஆயினும், அங்ஙனம் கூப்பாடு
போட்டுப் பெற்ற அறிவு அறியாமையாய் இருத்தலை ஒருவரும் அறியார், அங்ஙனம் ஒருவராலும் அறியப்படாதிருக்கின்ற
அந்த அறியாமை நீங்கி,
அறிவு அறிவாகுமானால், முன்பு `அறிவு` என்று நினைக்கப்பட்டது அறியாமையாய் இருந்த அழுகு
வெளிப்பட நகைப்பு உண்டாகும்.
**********************************************
பாடல்
எண் : 8
அறிவறி
யாமையை நீவி யவனே
பொறிவாய்
ஒழிந்தெங்கும் தானான போது
அறிவாய
வற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி
நின்றவன் சீவனும் ஆமே.
பொழிப்புரை
: அறிவு அறியாமையாய்
இருந்த நிலையினின்றும் நீங்கி, அறிவேயாய் நிற்கப் பெற்றவனே, புற இந்திரியம் முதலிய
கருவிகளில் அவையேதானாய் ஒன்றி, அவற்றின் அளவாய் நின்ற ஏகதேச நிலை நீங்கி, எங்கும் தானாம் வியாபக
நிலையைப் பெறுவான். அந்நிலையைப் பெற்றபொழுதுதான். சடமேயாயினும் சித்துப்
போலத்தோன்றிய கரணங்களில் அறிவாய் உள்ளவனும், அவற்றால் சீவனாய் இருந்தவனும் தானே ஆதல்
அவனுக்கு விளங்கும்.
**********************************************
பாடல்
எண் : 9
அறிவுடை
யார்நெஞ் சகலிட மாவ(து)
அறிவுடை
யார்நெஞ் சருந்தவ மாவ(து)
அறிவுடை
யார்நெஞ்சொ டாதிப் பிரானும்
அறிவுடை
யார்நெஞ்சத் தாகிநின் றானே.
பொழிப்புரை
: மெய்யறிவை அடைந்தோரது
உள்ளங்கள் அனைத்துலகங்களையும் உட்கொள்ளவல்லன; செய்தற்கரிய சரியை கிரியா யோகங்களில் பழகிப்
பழுத்தன. அதனால், முதற்கடவுளாகிய
சிவபிரானும் அவரது உள்ளங்களையே தானாகச் செய்து, அவற்றின் கண்
நீங்காமலும் நிற்கின்றான்.
**********************************************
பாடல்
எண் : 10
மாயனு
மாகி மலரோன் இறையுமாய்க்
காயநன்
னாட்டுக் கருமுத லானவன்
சேயன்
அணியனாய்த் தித்திக்கும் தீங்கரும்
பாய்
அமு தாகிநின் றண்ணிக்கின் றானே.
பொழிப்புரை
: உடம்பும், உலகமும் ஆகிய இவற்றின்
அடிநிலைப் பொருளாகிய மாயைக்குத் தலைவனாய் உள்ள சிவன், உயிர்களின் பெத்த
காலத்தில், `அயன், மால், அரன்` என மூவராய் நின்று அவைகளை
முத்தொழிலில் அகப்படுத்தி,
அவைகளால் அணுகுதற்கு அரியனாய்ச் சேய்மையில் நின்றவன், முத்தி காலத்தில்
அம்மூவர்க்கும் மேலாய மூர்த்தியாய் வெளிப்பட்டு அருகில் விளங்கி கரும்பு போலவும், அமுதம் போலவும்
இனிப்பவன் ஆகின்றான்.
**********************************************
பாடல்
எண் : 11
என்னை
யறிகிலேன் இத்தனை காலமும்
என்னை
யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை
யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து)
என்னையிட்
டென்னை உசாவுகின் றேனே.
பொழிப்புரை
: இவ்வளவு காலமும் யான்
என்னையறியாமல், என்னின்
வேறாகிய பொருள்களையே யானாக எண்ணியிருந்தேன். (அதனால் அவற்றில் அழுந்தி, அவையேயாய் இருந்தேன்.)
நந்தி பெருமானது அருளால் என்னை யான் அவற்றின் வேறான பொருளாக அறிந்தபின் அந்தநிலை
சிறிதும் இல்லை. மேலும் யான் யானாகிய நிலையை நழுவ விடாமல் உறுதியாகப்பற்றி, என்னையே ஏதுவாகப் பற்றி, எனது இயல்பை யான் நன்கு
ஆராய்ந்து வருகின்றேன்.
**********************************************
பாடல்
எண் : 12
மாய
விளக்கது நின்று மறைந்திடும்
தூய
விளக்கது நின்று சுடர்விடும்
காய
விளக்கது நின்று கனற்றிடும்
சேய
விளக்கினைத் தேடுகின் றேனே.
பொழிப்புரை
: நம் கையில் உள்ளது உடம்பாகிய ஒரு விளக்கு, அது நிலையற்றது; சிறிதுபோதுநின்று
மறைந்து விடும் என்பது நம் போன்றவர்களை விட்டு அது மறைந்தமையால் அறிந்தேன். மேலும்
இது முடைநாற்றம் வீசுவதாயும், பசி, நோய் முதலியவற்றால் வருத்துவதாயும் உள்ளது.
இனித் திருவருளாகிய மற்றொரு விளக்கு மிகச் சேய்மையில் உள்ளதாகப் பெரியோர்கள்
சொல்வதால் அறிகின்றேன். அந்த விளக்கு எப்பொழுதுமே நம்மை விட்டு நீங்காமல்
ஒளிவீசிக் கொண்டே யிருக்குமாம். மேலும் அது தூய்மையானதாயும், தனி ஓர் இன்பத்தைத்
தருவதாயும் இருக்குமாம். அதனை அடையத்தான் நான் அலைந்து கொண்டிருக்கின்றேன்.
**********************************************
பாடல்
எண் : 13
தேடுகின்
றேன்திசை யெட்டோ டிரண்டிலும்
நாடுகின்
றேன்நல மேயுடை யான்அடி
பாடுகின்
றேன்பர மேதுணை யாம்எனக்
கூடுகின்
றேன்குறை யாமனத் தாலே.
பொழிப்புரை
: `நன்றேயுடையனாயும், தீதேயில்லாதவனாயும்
உள்ள சிவனது அருளே எல்லாவற்றினும் மேலான துணையாம்` என்று துணிந்து அதனையே
பெற விரும்புகின்றேன். விரும்பி அதனை எல்லாத் திசைகளிலும் சென்று தேடுகின்றேன்.
அதனைத் துதிக்கின்றேன். இவ் வகையில் யான் அதனை நினைவளவில் பெற்றுவிட்டேன்.
**********************************************
பாடல்
எண் : 14
முன்னை
முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப்
பெருமலம் வந்தவா பேர்த்திட்டுத்
தன்னைத்
தெரிந்து தன் பண்டைத் தலைவன்தாள்
மன்னிச்
சிவமாக வாரா பிறவியே.
பொழிப்புரை
: முன்னைப் பழம்
பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய்8 உள்ள முதல்வனாகிய சிவபெருமானது விளை -யாடலால்
முதற்கண் இயல்பாய் உள்ள ஒரு மலமாகிய ஆணவமும், அது பற்றிப் பின் வந்து பெருகிய மலங்களாகிய மாயை
கன்மங்களும் அவை வந்தவழியே ஒருவன் போகச் செய்து, அநாதியே அடியவ னாகிய
தன்னையும், தனக்கு அநாதியே
தலைவனாய் உள்ள அப்பெருமானையும் உணர்ந்து, பாசங்களை விட்டு அவனது திருவடியை அடைந்து அவனே
ஆயினால், பின்பு
அவனுக்குப் பிறவிகள் வாரா.
**********************************************
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!