http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday, 27 February 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 39, 40 & 41. ஞானிகள் செயல், அவா அறுத்தல், பத்தியுடைமை.– பாடல்கள்: 03, 09 & 10.


பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்...........
..பாடல்கள்: 025
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042

எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:17: அடிதலை அறியும் திறங்கூறல் .பாடல்கள்: 010  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:18: முக்குற்றம்....................பாடல்கள்: 002   
எட்டாம் தந்திரம்:பதிக எண்:19: முப்பதம்......................பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:20: முப்பரம்.......................பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:21: பர லக்கணம்............பாடல்கள்: 014
எட்டாம் தந்திரம்:பதிக எண்:22: முத்துரியம்...............பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:23: மும்முத்தி..................பாடல்கள்: 004

எட்டாம் தந்திரம்:பதிக எண்:24: முச்சொருபம்..........பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:25: முக்கரணம்...............பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:26:
முச்சூனிய தொந்தத்தசி.பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:27: முப்பாழ்.....................பாடல்கள்: 006 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:28: காரண காரிய உபாதி ..பாடல்கள்: 004  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:29: உபசாந்தம்..........பாடல்கள்: 006  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:30: புறங்கூறாமை...பாடல்கள்: 015
எட்டாம் தந்திரம்:பதிக எண்:31: அட்டதள கமல முக்குண அவத்தை ..பாடல்கள்: 010
எட்டாம் தந்திரம்:பதிக எண்:32: நவாத்தை அபிமானி.......பாடல்கள்: 009 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:33: சுத்தா சுத்தம்-பாடல்கள்:பாடல்கள் :011
எட்டாம் தந்திரம்:பதிக எண்:34: மோட்ச நிந்தை: பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:35: இலக்கணாத் திரயம்......பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:36: 'தத்துவமசி' மகாவாக்கியம் :பாடல்கள் :017
எட்டாம் தந்திரம்:பதிக எண்:37: விசுவக் கிராசம்: பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:38: வாய்மை....................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:39:ஞானிகள் செயல் .பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:40:அவா அறுத்தல்....பாடல்கள்: 009
எட்டாம் தந்திரம்:பதிக எண்:41: பத்தியுடைமை....பாடல்கள்:010 
==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -041
கூடுதல் பாடல்கள்  (486+003+009+010=508)
==============================================


எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல் : பாடல்கள்: 03

பாடல் எண் : 1
முன்னை வினைவரின் முன்உண்டு நீங்குவர்
பின்னை வினைக்(கு)அணார் பேர்ந்(து)அறப் பார்ப்பர்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.

பொழிப்புரை : தம்மை நன்குணர்ந்தபின் தலைவனையும் உள்ளவாறு அறிந்தவரே (சிவஞானபோதம்-அவையடக்கம்) உண்மைத் தத்துவஞானிகள். அவர்கள் பிராரத்த வினைதோன்றினால், `இது நாம் முகந்துகொண்டு வந்தது, இதனை அனுபவித்துத் தான் ஆகவேண்டும்` என்று உணர்ந்து அதன் பயனாகிய இன்பத்தில் விருப்பமும், துன்பத்தில் வெறுப்பும் இல்லாமல் கடன்கழிப்பார்போலப் பற்றற்றே ஐம்புலன்களை நுகருமாற்றால் அவ்வினையினின்றும் நீங்குவர். (பற்றுச் செய்யாமையால் அவ்வினை அவர்தம் உணர்வைத் தாக்காமல், உடலையே தாக்கி ஒழியும்) விருப்பு வெறுப்பு இன்மையால் இன்பத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், துன்பத்தை விரைவில் ஒழிக்கவும் அவர்கள் எண்ணமையால், அவர்கள் ஆகாமிய வினையில் வீழ்தல் இல்லை. அதன் தோற்றத்தை நிகழாதபடி தடுத்து விடுவார்கள்.
**********************************************
பாடல் எண் : 2
தன்னை அறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த திருவரு ளாலே.

பொழிப்புரை : முன் மந்திரத்திற் கூறிய அந்த ஞானிகள், அம் மந்திரத்தில் கூறியபடி தாங்கள் வினையினின்று நீங்குதலோடல்லாமல், தங்களைச் சிவமாகக் கருதி வந்து அடைந்தவர்களது வினைகளையும் சிவனது திருவருள் வியாபகத்தில் நின்று நீங்கியருள்வார்கள்.
**********************************************
பாடல் எண் : 3
மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவன் வாதனை தன்னால்
தனைமாற்றி ஆற்றத் தகும்ஞானி தானே.

பொழிப்புரை : உயிர்களின் மனமும், வாக்கும், காயமும் நேர்முறையில் செயற்படாது, கோடும் முறையில் செயற்பட்டால் உயிர்கட்கு, நீக்குதற்கரிய வலிய வினைகள் உளவாகும். அவை அவ்வாறின்றி, நேர்முறையில் செயற்பட்டால் அவ்வாறான நிலைமை ஏற்படாது. (எனினும் அஞ்ஞானமுடையவர்களது மனோவாக்குக் காயங்கள் நேர்முறையிற் செயற்படமாட்டா). இனி ஒருவன் அஞ்ஞானத்தின் நீங்கி மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, மனோ வாக்குக் காயங்களின் பிடியில் அகப்படாது விடுபட்டானாயினும், பழைய வாசனை காரணமாக ஒரோவழி அவை தம்மியல்பில் வந்து அவனைத் தாக்குதல் கூடும். அப்பொழுது அவன் தற்போதத்தை நீக்கிச் சிவபோதத்தை உடையவனாய் அவற்றைச் செயற்படுத்தி னால், அவன், `ஞானி` என்னும் நிலையினின்று நீங்கான்.
**********************************************
எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல் : பாடல்கள் : 09
பாடல் எண் : 1
வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே.

பொழிப்புரை : வாசி யோகத்தின் பெருமையையும், அதிற் பயிலும் யோகியின் பெருமையையும் நூல்களால் உணர்ந்து அவற்றை வகைவகையாக விரித்துரைப் பவனைப்போல, ஞானிகளும் விரித்துரைத்துக் கொண்டு காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால் நீவிர் உயிரல் பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும் உயிர்ப் பொருள்கள்மேல் செல்லும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீவிர் இறை நிலையை அடைதல் எளிதாகும்.
**********************************************
பாடல் எண் : 2
மாடத் துளான் அலன் மண்டபத் தான்அலன்
கூடத் துளான்அலன் கோயிலுள் ளான் அலன்
வேடத் துளான்அல்லன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.

பொழிப்புரை : சிவன், ஆசையால் மூடப்பட்டுள்ள அந்த மனங் களிலே வெளிப்படாது மறைந்து நின்று, ஆசையற்றவர்களது மனங் களிலே வெளிப்பட்டு விளங்கி, அவர்கட்கு முத்தியைத் தருகின்றான். ஆகையால் அவன், அவனை வைத்து வழிபடுகின்ற மாடம், மண்டபம், கூடம், கோயில், திருவேடம் ஆகிய இவ்விடங்களில் இல்லை.
**********************************************
பாடல் எண் : 3
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

பொழிப்புரை : மேற்கூறிய உலக ஆசைகள் அனைத்தையும் நீவிர் கட்டாயமாக அறவே விட்டொழியுங்கள்; அவைகளை விட்டு நீவிர் சிவனை அடைந்தபின்பும் பழைய பழக்கத்தால் அந்த ஆசைகள் மீண்டும் உங்கள்பால் தோன்றுதல் கூடும். அப்பொழுதும் அதனை முளையிலேயே அறுத்தெறியுங்கள்; ஏனெனில் ஆசை மிகுந்து மிகுந்து வருவதால்தான் எந்நிலையிலும் துன்பங்கள் மிகுந்து மிகுந்து வருகின்றன. ஆசையை நீக்க நீக்க, இன்பங்களே மிகுந்து மிகுந்து வரும்.
**********************************************
பாடல் எண் : 4
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.

பொழிப்புரை : கொல்வது போலும் துன்பத்தை ஒருங்குகூடிச் செய்வனவே ஐம்பூதங்கள், அவற்றின்மேல் வைக்கின்ற பற்று மீண்டும் மீண்டும் சிக்குதற்கு வழி செய்வதே. அதனால், அந்தப் பற்றினைப் போக்கி, மீண்டும் அவற்றின்மேல் செல்ல எழுகின்ற ஆசையை எழாமல் தடுப்பதே நிலைத்து நிற்கின்ற ஞானமாகும். அந்தப் பூதங்களை மனத்தால் சிறிது தீண்டுதலும் அவை தொடர்தலுக்கு வழியேயாகும்.
**********************************************
பாடல் எண் : 5
உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன(து)
உவாக்கட லுட்படுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுட்பட்(டு) அழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.

பொழிப்புரை : நிறைமதி நாளன்று பொங்குகின்ற கடலைப்போல ஊழிவெள்ளம் தோன்றி உலகை விழுங்கிவிட்டு மறைந்தது. என்றும் கெடாத இன்பக்கடலை இறைவன் தாங்கிக் கொண்டிருக்கின்றான். ஆயினும், வானோரும், மண்ணோரும் ஆசைக்கடலில் மூழ்கியிருந் தமையால் இறைவனது இன்பக்கடலை அடைய மாட்டாது, அந்த ஊழி வெள்ளத்தில் மூழ்கி அழிந்தனரேயன்றி பயன் ஏதும் பெற்றாரில்லை.
**********************************************
பாடல் எண் : 6
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துன்றுந் தொழில்அற்றுச் சுத்தம் தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்றி அழுந்தலும் ஞானிகள் தூய்மையே.

பொழிப்புரை : ஞானிகளாயினார் செய்யும் வீட்டு நெறிச் செயலாவன, (தீக்கையால் எரிக்கப்பட்டு ஒழிந்த சஞ்சித வினைபோக, முகந்து கொண்டு) எஞ்சி நின்ற பிராரத்த வினைத் தாக்கத்தையும், கருவி கரணங்களால் நிற்கும் மாயையின் தாக்கத்தையும் வாசனை யளவாய் நிற்கும் ஆணவத்தின் தாக்கத்தையும் முன்போல நீடியாது (சிவஞானபோதப் பன்னிரண்டாம் சூத்திரத்திற் கூறிய முறையால்) உடனே தடுத்துப் போக்கித் தூய்மையோடிருத்தலும், ஐந்தொழில் முதல்வர் செய்யும் ஐந்தொழிலின்றும் நீங்கிச் சிவனது திருவருளைப் பெற்று அவற்றால் அவனை நேரே கூடி அவனது இன்பத்தில் மூழ்குதலுமேயாகும்.
**********************************************
பாடல் எண் : 7
உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தி ஆம்
பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
அண்மை அருள்தான் அடைந்தன்பின் ஆறுமே.

பொழிப்புரை : பொருளியல்புகளை உள்ளவாறு உணருமாற்றால் பொய்ப் பொருள்களில் ஆசையை அறத்தொலைத்து, மெய்ப் பொருளை உணர்ந்து நிற்றலால் அடையப்படும் வீடு பேறே ஒருவனுக்குச் சிறந்த பேறாகும். அவ்வாறன்றிப் பெண்ணாசையை மட்டும் தொலைத்துப் புகழ், பொருள் முதலியவற்றை அவாவி யோகத்தில் நிற்றலால் பெறும் பேறு அட்டமாசித்திகளாம். (அவை பிறப்பை நீக்காமையால் `பேறு` எனப்படா) மற்று, மேற்கூறியவாறு மெய்யுணர்தலால், ``உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காக்கும்``3 திறம் பெற்ற ஞானி தனுவோடு (உடம்போடு) இருப்பினும் அவனது தனு சிவதனுவேயாகும், பிராரத்தம் முடிந்தபின் அத்தனு நீங்கினால், அவன் சிவனை மிக அணியனாய் அணைதற்குரிய அருளைப் பெற்று அணைவான். அணைந்தபொழுது சிவனிடத்தே அன்பு மீதூர்ந்து அவன் சிவனது இன்பத்திலே அமைதியுடன் திளைத்திருப்பான்.
**********************************************
பாடல் எண் : 8
`அவன் இவன் ஈசன்` என்(று) அன்புற நாடிச்
`சிவன் இவன் ஈசன் என்(று) உண்மையைஓரார்
பவனிவன் பல்வகை யாம்இப் பிறவிப்
புவன் இவன் போவது பொய்கண்ட போதே.

பொழிப்புரை : சிவபெருமான் ஒருவனையே முதற்கடவுளாக உணர்தலே, முன் மந்திரத்திற் கூறியவாறு உண்மையை உணர்தலாகும். அவ்வாறின்றி, பிற கடவுளரை, `அவனே கடவுள், இவனே கடவுள்` என உணர்ந்து அன்பு செய்வன எல்லாம் இறையன்புகள் ஆகா; உயிர் அன்புகளே. தான் உண்மையை உணர்ந்து விட்டதாகக் கருதிய ஒருவன் அதன் பின்னும் வலிய பலவகைப் பிறவிகளாகிய தேரினை ஊர்ந்து, பலவகைப் புவனங்களாகிய வீதிகள்தோறும் பவனி வருதல் அவன் பொய்யை மெய்யாகத் திரிய உணர்ந்த பொழுதேயாம்.
**********************************************
பாடல் எண் : 9
கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரகம் முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்துள் நூல்ஒன்றல் ஆமே.

பொழிப்புரை : துன்பத்தைக் காய்தலும், இன்பத்தை உவத்தலும் ஆகிய இத்தன்மை களையே உள்ளத்தில் உறுதியாகக் கொள்ளும் முறைமையையுடையதே இவ்வுலகம் முழுதும், ஆயினும், அந்தத் துன்ப இன்பங்கள் அவற்றிற்குக் காரணமான புலன்களைக் கொணர்ந்து பொருத்துகின்றவர் ஐம்பொறிகளாகிய துட்டரேயாகலின், அவரை உலகம் வெறுத்தொதுக்கி, அழியும் தன்மையுடைய இவ்வுடம்பில் இருந்துகொண்டே சிவநூல்களின் வழி நிற்றலே தக்கது.
**********************************************
எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை : பாடல்கள்: 010
பாடல் எண் : 1
முத்திசெய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரானைச்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தன் பரசும் பசுபதி தான் என்றே.

பொழிப்புரை : வீடுபேற்றைத் தருகின்ற ஞான நூலைக் கற்கின்ற கல்வியின் பயனாயும், அவற்றைப் பற்றிக் கேட்கின்ற கேள்வியின் பயனாயும் உள்ளவனும், உலகிற்குத் தந்தையும் தேவர்கட்குத் தேவனும், தான் இயல்பாகவே தூயனாய், உயிர்கள் தூய்மை அடைதற்குரிய வழியாய் நிற்பவனும், அறிவே வடிவாய் உள்ளவனும் ஆகிய சிவனையே, `உயிர்கட்குத் தலைவன்` என்று உணர்ந்து இறையன் புடையோன் போற்றுவான்.
**********************************************
பாடல் எண் : 2
அடியார் அடியார் அடியார் அடிமைக்(கு)
அடியனாய் நல்கிட்(டு) அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட்ட
`அடியான் இவன்` என்று அடிமைக்கொண்டானே.

பொழிப்புரை : சிவனுக்கு அடியராயினார்க்கு அடியர் ஆயினார் சிலர் அவர்கட்கு அடியராயினார் சிலர். அவர்கட்கு அடியராயினார் மற்றும் சிலர் அவர்கட்கே நான் அடியவன் ஆக என்னைக் கொடுத்து அடியவனாகி, அடிமைகட்குரிய பணிகளைச் செய்வதையே எனது கடமையாகவும் மேற்கொண்டேன். அதனால் என்னை ஆளாக ஏற்றுக் கொண்ட அடியார்கள் என்மேல் கருணை வைத்து அந்தப் பெருமானுடைய திருவடிகளில் என்னைச் சேர்ப்பிக்க, அப்பெருமானும் என்னைத் `தனக்கே அடியவன்` என்று சொல்லி, நேராகவே என்னை அடிமை கொண்டான்.
**********************************************
பாடல் எண் : 3
நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆர்இக் கடன்நந்தி ஆமா றறிபவர்
பாரில் பயன்ஆரைப் பார்க்கிலும் நேரியன்
ஊரில் உமாபதி யாகிநின் றானே.

பொழிப்புரை : சிவன் குளிர்ச்சியால் இருக்க வேண்டிய சமையத்தில் நீரைவிடக் குளிர்ச்சியாய் இருப்பான். சுடவேண்டிய சமையத்தில் நெருப்பை விடச் சூடாகச் சுடுவான். (இரண்டும் கருணையே). அவனது முறை இவ்வாறாதலை அறிய வல்லார் ஆர்! நிலவுலகில் உள்ளார்க்குப் புலனாகாமலே சூக்குமமாய் இருந்து, அவர்கட்குப் பயன் தருகின்ற தேவர் பலரையும்விடச் சிவன் அதிசூக்குமன் ஆயினும், அவன் உயிர்களின் பொருட்டு ஊர்கள் தோறும் உமாதேவிக்குக் கணவனாய், அவளோடும் எழுந்தருளிக் காட்சியளிக்கின்றான்.
**********************************************
பாடல் எண் : 4
ஒத்துல கேழும் அறியா ஒருவன்என்
றத்த னிருந்திடம் ஆர்அறி வார்செல்லப்
பத்தர்தம் பத்தியின் பாற்படி னல்லது
முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.

பொழிப்புரை : அன்பரது அன்பில் சென்றாலல்லது, `அனைத் துலகங்களாலும் அறிய இயலாத ஒருவன்` எனச்சொல்லப்படுகின்ற சிவன் இருக்கின்ற இடத்தை அறிந்து சென்றடைய வல்லார் யாவர்? அவ்வாறே, அன்பர்கள் தம் அன்பிற்கண்டு சொன்னா லல்லது, கிடைத்தற்கரிய முத்துப்போன்ற அவனைக் கண்டுசொல்ல முற்படுவார் யாவர்? ஒருவரும் இல்லை.
**********************************************
பாடல் எண் : 5
ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல
நான்கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றான் நாடிவந் துள்புகுந் தானே.

பொழிப்புரை : தாயைப் பிரிந்த பசுக்கன்று தன் தாயை நாடி அழைப்பதுபோல, சிவன் ஆவாய் இருக்க, நான் அவனைப் பிரிந்து வாடும் கன்றாய் இருந்து, என் தலைவனாகிய அவனையே நாடி, `அப்பாவோ! ஐயாவோ!` எனப் பன்முறை அழைத்தேன்; அவன் வானுலகத்திலுள்ள பசுக்கன்றுகள் போலும் தேவர்கட்கெல்லாம் அப்பால் நிற்கும் வேதப்பொருளாயினும் எனது கூக்குரலைச் செவிமடுத்து, உருவம் யாதும் கொள்ளாமலே என்னைத் தேடி வந்து, என் உள்ளத்துள்ளே புகுந்தான்.
**********************************************
பாடல் எண் : 6
பெத்தத்தும் தன்பணி இல்லை பிறத்தலால்
முத்தத்தும் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலால்
பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.

பொழிப்புரை : உயிர்களின் நிலை `பெத்தம், முத்தி` என இரண்டு. பெத்தம், பாசங்களிற் கட்டுண்ட நிலை. முத்தி, அவற்றினின்றும் விடு பட்ட நிலை. இவ்விரண்டு நிலைகளிலும், `உயிர்களின் செயல்` என்று ஒன்று இல்லை ஏனெனில், பெத்தத்தில் உயிர்கள் பல பிறவிகளில் சென்று உழல்கின்றன. அப்பிறப்புக்களைத் தருபவனும், வாழுங் காலத்து இன்பத் துன்ப நுகர்ச்சிகளை அவற்றிற்குரிய பொருள்களைத் தந்து ஊட்டுவிப்பவனும், பின்பு அந்தப் பிறவியை நீக்கிவிடுபவனும் எல்லாம் சிவனே. அதனால், பெத்தத்திலும் அவற்றிற்கென்று ஒரு செயல் இல்லை. இனி, முத்தியாவது சிவன் குருவாய் வந்து ஞான தீக்கை செய்து வினைக்கட்டினை அறுத்து அதினின்று விடுவிப்பது. அந்நிலையிலும் உயிர் அவன் காட்டிய வழியில் நடத்தற்குரியதே யன்றித் தானாக எவ்வழியிலும் செல்லாது. மேலும் ஞான தீக்கையில் உயிர் தனது, உடல், பொருள், ஆவி அனைத்தையும் சிவன் கையில் முழுமையாக ஒப்புவித்துவிடுகின்றது. இவ்வாற்றால், பெத்தம், முத்தியிரண்டிலும் உண்மையில் உயிருக்கென்று ஒரு செயல் இல்லை. ஆயினும் மயக்கத்தால் உயிர்கள் பெத்தத்தில் நிகழும் செயல்களைத் தம் செயல்களாகவும், முத்தர்கள் செயலையும் அவரது செயல்களாகவும் கருதி மயங்குகின்றன. ஞானம் கைவரப் பெற்று பத்தி மிகுந்தவர்க்கு அத்தகைய மயக்கம் இன்றி, உண்மையே விளங்கி நிற்றலால், தமக்கும் பணியாதும் இல்லையாகும் நிலை அவர்கட்கே உள்ளது.
**********************************************
பாடல் எண் : 7
பறவையிற் கர்ப்பமும் பாம்பும்மெய் யாகக்
குறவம் சிலம்பக் குளிர்வரை யேறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவன்என் றென்மனம் ஏத்தகி லாதே.

பொழிப்புரை : உபநிடதம் கூறுமாறு ஐந்து பறவைகள் போன்றுள்ள ஐந்து உடம்புகளுள்ளும் உள்ளீடாய் நிற்கின்ற ஆன்மாவும், அன்ன மயம், பிராணமயம் என்னும் உடம்பினுள் பாம்பு வடிவாய் உள்ள குண்டலினியும் பொதுமை நீங்கி, உண்மை நிலையை அடைந்திருக்க, அவ் வுடம்புகளுள்ளே மலையில் வாழும் குறவர்கள் இசைக்கும் இசைபோல எழுகின்ற நாதங்கள் ஒலிக்க, அமிர்தத்தால் குளிர்ந்திருக்கின்ற, விந்துத் தானமாகிய, `மேரு` எனப்படும் ஆஞ்ஞையை அடைந்து அங்குக் கொல்லாமை முதலிய எட்டையும் எட்டு மலர்களாகக் கொண்டு வழிபட்டுத் `தியானம்` செய்யும்பொழுது, எங்கள் சிவபெருமானையன்றி, எனது மனம் வேறொருவனை `இறைவன்` என்று கொண்டு தியானியாது.
**********************************************
பாடல் எண் : 8
உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப்
பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
செறுதுணை செய்து சிவனடி சிந்தித்(து)
உறுதுணை யாய் அங்கி யாகிநின் றானே.

பொழிப்புரை : சிவன், தன்னையே நெருங்கி நிற்கும் துணைவனாக உணர்ந்து, தனது திருவடிகளைச் சிந்தித்தவழிக் கிடைக்கும் துணைவனாயும், ஒளி விளக்காயும் உள்ளான். அவனையன்றிப் பெருந்துணைவரும், பெறத்தக்க துணைவரும் வேறிலர். (ஏனெனில், பேரருளால் உயிர்களின் பிறப்பை அறுப்பவன் அவனேயாகலின்) ஆகையால், உணர்வுடையீர், அதனை உணர்ந்து அவனையே துணையாகப் பற்றிப் பிறப்பையறுத்துப் பிழையுங்கள்.
**********************************************
பாடல் எண் : 9
வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரம் சென்ற தலைவனை
கானவன் என்றும் கருவரை யான்என்றும்
ஊனத னுள்நினைந் தொன்று படாரே.

பொழிப்புரை : தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களது மூன்று கோட்டைகளைத் தன் சிரிப்பினாலே ஒரு நொடியில் சாம்பலாக்கி அழித்த தலைவன் சிவன். அவனைச் சிலர், `காட்டிலே ஆடுபவன்` என்றும், `கரிய மலையில் வாழ்பவன்` என்றும் தங்கள் ஊன் உடம்பின் உள்ளுக்குள்ளாகவே இகழ்ந்து, அவனைக்கூடார் ஆயினார்.
**********************************************
பாடல் எண் : 10
நிலைபெற கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்தும் ஊழ்த்துநின் றானே.

பொழிப்புரை : உலகனைத்தையும், `இவை சிலகாலம் நிலைபெற்றிருந்து, பின் `ஒடுங்குக` என்று சங்கற்பித்துப் படைத்த தலைவன் எங்கேயிருக்கின்றான்`` என்று அவனைக் காணத்தேடி என் உள்ளம் திகைத்தது. பின்பு அவன் தேட வேண்டாது எங்கும் நிறைந்து, உயிர்களின் புறத்தும், அவனைத்தேடித் திகைக்கும் உள்ளத்தும் `புறம், அகம்` என்னும் வேறுபாடின்றி விளங்குதலைக்கண்டு வியந்தேன்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!