http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday, 27 February 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 42 & 43. முத்தியுடைமை, சோதனை–பாடல்கள்: 02 & 13.


பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025

எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042

எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:17: அடிதலை அறியும் திறங்கூறல் .பாடல்கள்: 010  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:18: முக்குற்றம்....................பாடல்கள்: 002   
எட்டாம் தந்திரம்:பதிக எண்:19: முப்பதம்......................பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:20: முப்பரம்.......................பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:21: பர லக்கணம்............பாடல்கள்: 014
எட்டாம் தந்திரம்:பதிக எண்:22: முத்துரியம்...............பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:23: மும்முத்தி..................பாடல்கள்: 004

எட்டாம் தந்திரம்:பதிக எண்:24: முச்சொருபம்..........பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:25: முக்கரணம்...............பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:26:
முச்சூனிய தொந்தத்தசி.பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:27: முப்பாழ்.....................பாடல்கள்: 006 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:28: காரண காரிய உபாதி ..பாடல்கள்: 004  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:29: உபசாந்தம்..........பாடல்கள்: 006  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:30: புறங்கூறாமை...பாடல்கள்: 015
எட்டாம் தந்திரம்:பதிக எண்:31: அட்டதள கமல முக்குண அவத்தை ..பாடல்கள்: 010
எட்டாம் தந்திரம்:பதிக எண்:32: நவாத்தை அபிமானி.......பாடல்கள்: 009 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:33: சுத்தா சுத்தம்-பாடல்கள்:பாடல்கள் :011
எட்டாம் தந்திரம்:பதிக எண்:34: மோட்ச நிந்தை: பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:35: இலக்கணாத் திரயம்......பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:36: 'தத்துவமசி' மகாவாக்கியம் :பாடல்கள் :017
எட்டாம் தந்திரம்:பதிக எண்:37: விசுவக் கிராசம்: பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:38: வாய்மை....................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:39:ஞானிகள் செயல் .பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:40:அவா அறுத்தல்....பாடல்கள்: 009
எட்டாம் தந்திரம்:பதிக எண்:41: பத்தியுடைமை....பாடல்கள்:010 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:42: முத்தியுடைமை. பாடல்கள்:002
எட்டாம் தந்திரம்:பதிக எண்:43: சோதனை...............:பாடல்கள்:013
==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -043
கூடுதல் பாடல்கள்  (508+002+013=523)
==============================================

 (எட்டாம் தந்திரம் முற்றியது.)


எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை :  பாடல்கள் : 002
பாடல் எண் : 1
முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியில் உற்றோர் பரானந்தர் போதரே.

பொழிப்புரை : முத்தி நிலையை அடைந்தவர் சிவனது திருவருளை முழுமையாகப் பெறுவர். (எனவே, `ஏனையோர் சிறிது சிறிது பெறுவர்` என்றதாம்). அதனால், அவரே கருவி கரணங்களின் கட்டற்றவராவர் (கருவி கரணங்களோடு கூடியிருப்பினும் அவற்றால் உலகியலில் செல்லார்` என்பதாம்). ஆகவே, அவர் தன் முனைப்புக் கொண்டு `யான், எனது என்னும் வகையில்) உலகை நோக்கி ஒன்றைச் செய்தலும், அவ் வாறன்றிச் சிவனையே நோக்கி ஒன்றைச் செய்தலும் ஆகிய செயல்கள் எல்லாவற்றையும் விடுத்து, சொரூப சிவனிடத்து உண்மையான பத்தியில் மட்டுமே நிற்பர். அதனால், அவர் அடையும் ஆனந்தமே உண்மைப் பேரானந்தமாகும். உண்மை ஞானியரும் அவரே.
**********************************************
பாடல் எண் : 2
வளங்கனி தேடிய வன்தாட் பறவை
உளங்கனி தேடி உழிதரும் போது
களங்கனி அங்கியிற் கைவிளக் கேற்றி
நலங்கொண்ட நால்வரும் நாடுகின் றாரே.

பொழிப்புரை : (மேல், ``பறவையில் கர்ப்பமும்`` என்னும் மந்திரத்தில் சொல்லியபடி) உலகமாகிய மரத்தில் தனக்கு இனிமையான பழத்தைத் தேடி அலைந்த சீவனாகிய பறவை, பின்பு அந்தப்பழம் தன்னுள்ளேயிருப்பதை அறிந்து அதனைத்தேடி அங்கு அலைந்து கொண்டிருக்கும் பொழுது, அதற்குக் கண்ணும், சிறகும்போல உதவுகின்ற அந்தக் கரணங்களாகிய நால்வரும் முன்புபோலத் தீயராய் இல்லாது நல்லவராய் விட்டமையால், அங்கே (உள்ளத்துள்ளே) மிக்கு விளங்குகின்ற பேரொளியிலிருந்து சிறு கைவிளக்கை ஏற்றிப் பிடித்து, அப்பறவைக்கு உதவி புரிகின்றனர்.
**********************************************
எட்டாம் தந்திரம் - 43. சோதனை : பாடல்கள் : 013
பாடல் எண் : 1
பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்(து)
அம்மான் அடிதந்(து) அருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத்(து) எம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடம் சோதனை ஆகுமே.

பொழிப்புரை : எல்லோரினும் பெரியவனும், பெருந்தலைவனும் சொல்ல வாராத பெரிய இன்பத்தைத் தன்னை அடைந்தவர்க்கு வழங்கியருளும் அன்னதொரு பெருந்தகையை உடையவனும் ஆகிய சிவன் உம்முன் வந்து தனது திருவடிகளை எங்கள் தலைமேற் சூட்டினமையால் நாங்கள் அவனது திருவருளாகிய கடலில் மூழ்கினோம் அதனால், (நீருள் இருக்கும் மீனைச் சிச்சிலி கொத்தமாட்டாது ஓடி விடுதல்போல) பொய்யாகிய பாசங்கள் எல்லாம் எம்மைப் பற்றமாட்டாது நீங்கிவிட, நாங்கள் எங்களை அவனிடத்தில் ஒளித்து வைத்துச் சும்மா இருக்கின்றோம். இந்த நிலையில் எங்கட்குச் சோதனைகள் வருகின்றன.
**********************************************
பாடல் எண் : 2
அறிவுடை யான்அரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்கும் தேவன்
பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த
குறியுடை யானொடும் கூடுவன் நானே.

பொழிப்புரை : அறியாமையோடு கூடுதல் சிறிதும் இன்மையால், `அறிவுடையான்` எனப்படுதற்கு உரிமையுடையவனும், அரிய பெரிய வேதங்களில் எங்கும் பரவலாகப் போற்றப்படுபவனும், பெரிய தேவர்கட்கும் தேவனும், கண், செவி முதலிய பொறிகளை உடையனாயினும் அவற்றால் அறியப்படுகின்ற ஐந்து புலன்களில் ஒருபோதும் தோய்வின்றித் தன்னிலையில் திரியாதிருப்பவனும், ஆகிய சிவனோடே யான் என்றும் கூடியிருப்பதன்றிப் பிரிதல் இல்லை.
**********************************************
பாடல் எண் : 3
குறியாக் குறியினில் கூடாத கூட்டத்(து)
அறியா அறிவில் அவிழ்ந்தே சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவம்என லாமே.

பொழிப்புரை : குறியாக் குறி - தற்போதத்தால் தானே கொள்ளாது, குரு கொள்வித்தபடி கொண்ட இலட்சியம் கூடாத கூட்டம் - தற்போதத்தின் வழிச்சென்று புணராது, திருவருள் வழிச்சென்று புணர்ந்த புணர்ச்சி. அறியா அறிவு - தற்போதமாய் நின்று அறியாது, சிவ போதமாய் நின்று அறியும் அறிவு அவிழ்தல் பாசக்கட்டு நீங்குதல் எனவே, `குறியா ... ... அவிழ்ந்து` என்றது ``தானே கொள்ளாது குருவுணர்த்திய இலட்சியமாகிய சிவத்தில், தற்போதத்தால் முயலாது, திருவருள் வழியாக முயன்று ஒன்றுபட்டு பின்னும் அந்தத் திருவருளாலே அஃதொன்றையே அறிந்து நிற்குமாற்றால் பாசங்கள் நீங்கப்பெற்று` என்றதாயிற்று. பாசக்கட்டு நீங்கினமையால், பலவாகிய பொய்ப்பொருட்பற்றுத் தொலைய, ஒன்றாகிய மெய்ப்பொருளிடத்தே அன்பு மீதூர நிற்றலால், நன்னெறியாகிய அருட்சத்தியின் முதலாகிய அச்சிவத்தில் அவ்வருளால் அழுந்துதலாகிய இயற்கை இயைபே உண்மைச் சிவ சம்பந்தமாம்.
**********************************************
பாடல் எண் : 4
காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம்மிறை
காவலன் எங்கும் கலந்துநின் றானே.

பொழிப்புரை : எல்லாப் பொருள்களிலும் தங்கியிருத்தல் பற்றி, `இறை` என்றும், எல்லா உயிர்களையும் பாதுகாத்தல் பற்றி, `பதி` என்றும் சொல்லப் படுபவனாகிய எங்கள் சிவபெருமான், காற்றில் பரிசமும், கரும்பில் வெல்லமும், பாலில் நெய்யும், பழத்தில் சுவையும், மலரில் மணமும் போல, உயிர்களின் உள்ளங்களில் எல்லாம் இரண்டறக் கலந்து நிற்கின்றான்.
**********************************************
பாடல் எண் : 5
விருப்பொடு கூடி விகிர்தரை நாடில்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்து நிறைந்தே.

பொழிப்புரை : எங்கள் சிவனார், தம்மை அன்பினால் நோக்கின், தம்முடைய சத்திபோல வந்து, அங்ஙனம் நோக்கி நிற்பவரது உள்ளத்தில், பேரறிவாய், உயிர்க்குயிராய் நிறைந்து, நீங்காதிருப்பார்.
**********************************************
பாடல் எண் : 6
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான் கொள்ள
`எந்தைவந் தான்`என்(று) எழுந்தேன் எழுதலும்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.
பொழிப்புரை : `பர வியோமம்` எனப்படுகின்ற அருள்வெளியில் உள்ள சிவபெருமான், அங்கு நின்றும் போந்து என் உள்ளத்துள்ளே புகுந்து அதனையே தனது இடமாகக் கொண்டான். கொண்டது எவ்வா றெனில், அவன் எனது உள்ளத்தை நோக்கி வரும்பொழுது, ``வாராத என் தந்தை வருகின்றான்`` என்று நான் பதைத்தெழுந்து எதிர்கொண்டேன். அதனால்தான் அவன் என் உள்ளத்தையே தனது இடமாகக் கொண்டுவிட்டான்.
**********************************************
பாடல் எண் : 7
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய்
தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே

பொழிப்புரை : உயிர்களுக்கு ஆகும் நன்மைகளை யெல்லாம் செய்ய வல்லவனும், அனைத்துயிர்களையும் ஒப்ப நோக்கும் நடுவு நிலையாளனும் இயல்பாகவே பாசங்கள் இல்லாத தூயவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் புன்மை உண்டாகும்படி பொய்த்தல் இன்றி, உண்மையாக விரும்புங்கள்; விரும்பினால், பல உயிர்களுள்ளும் உம்மை, `இவ்வுயிர் யாது` எனச் சிறப்பாக நோக்கி, நும் செயற்கையை நீக்கி, இயற்கையாகச் செய்து அத்தொன்னிலையில் பின்னும் தொடர்ந்தே நிற்பான்.
**********************************************
பாடல் எண் : 8
தொடர்ந்துநின் றான்என்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றான்நல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின்(று) ஆதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.

பொழிப்புரை : சிவபெருமான் சற்குருவாய் வந்து எனது ஆறு அத்துவாக்களையும் அவற்றில் உள்ள சஞ்சித கன்மங்களை நீக்கித் தூய்மை செய்யும் பொழுது, அந்தச் செயலிலே தொடர்ந்து நின்றான். பின்பு தூய்மையாகிவிட்ட அந்த அத்துவாக்களிலே அவனே தொடர்ந்து நின்றான். அதன் பின்பு எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றாகியும், பொருள்தன்மையால் வேறாகியும் நிற்கின்ற அந்த நிலைகளை எனக்கு அறிவித்துக் கொண்டே யிருக்கின்றான்.
**********************************************
பாடல் எண் : 9
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேளிரே ஒக்கும்
செவ்வழி சேர்சிவ லோகத் திருத்திடும்
இவ்வழி நந்தி யியல்பது தானே.

பொழிப்புரை : விண்ணுலகத்தில் விண்ணவர்கட்கும் அவர்கள் அவ்வுலகத்தில் பற்றற்றுச் செல்ல வேண்டிய அந்த வழியைக் காட்டும் அரிய பொருளாய் இருப்பான். மண்ணுலகத்தில் மக்களுக்குத் தந்தை போலவும், தாய்போலவும், உறவினர் போலவும் இம்மைக்கு வேண்டுவன பலவும் செய்து, அம்மைக்கு ஆகும் நல்வழியையும் கற்பித்துத் தனது உலகத்தில் இருக்கச் செய்வான். இஃது எங்கள் சிவபெருமானது இயல்பு.
**********************************************
பாடல் எண் : 10
எறிவது ஞானத்(து) உறைவாள் உருவி
அறிவத னோடே அவ் ஆண்டகை யானைச்
செறிவது தேவர்க்கும் தேவர் பிரானைப்
பறிவது பல்கணம் பற்றுவிட் டாரே.

பொழிப்புரை : உலகப் பற்றை விடுத்துச் சிவப்பற்றைப் பற்றினோர், அந்நிலைக்கண் தமக்கு யாதேனும் இடையூறுவரின் அவர்கள் அவற்றைப் போழ்வது, ஞானமாகிய வாளைத் திருவருளாகிய உறையினின்றும் உருவியாம். அங்ஙனம் இடையூற்றைப் போக்கி முன்போல அவர்கள் அறிந்து நிற்பது, தம் இயல்பையும், தலைவன் இயல்பையுமாம்(ஆகவே அடிமை நிலையினின்றும் பிறழார் என்பதாம்). அங்ஙனம் அறிந்து அடிமைசெய்து நிற்றலால் அவர்கள் இரண்டறக்கலப்பது சிவபெரு மானையே அவர்கள் அறவே விட்டு விலகுவது, வேற்றியல்புடைய பல குழுக்களையாம்.
**********************************************
பாடல் எண் : 11
ஆதிப் பிரான்தந்த வாள்அங்கைக் கொண்டபின்
வேதித்திங் கென்னை விலக்கவல் லார்இல்லை
சோதிப்பன் அங்கே சுவடும் படாவண்ணம்
ஆதிக்கண் தெய்வம் அவன்இவன் ஆமே.

பொழிப்புரை : யான் தொடக்கத்தில் தேவனாய் இருந்து, இப்பொழுது சிவனே ஆகிவிட்டேன். அஃது முழுமுதற் கடவுளாகிய சிவன் தனது ஞானமாகிய வாளை எனக்கு ஈந்தருள, இதனை யான் விடாது பற்றிக்கொண்டமையால். என்னை இனி அவனை அடைய ஒட்டாமல் வேறுபடுத்தி விலக்க வல்லவர் எங்கும், எவரும் இல்லை. அவ்வாறன்றி எங்கேனும், யாரேனும் என்னை வேறுபடுத்தி விலக்க வருவார்களேயாயின் அவர்கள் வந்து சென்ற சுவடும் தோன்றாதபடி அவர்களது வலிமையைச் சோதித்து ஓட்டிவிடுவேன்.
**********************************************
பாடல் எண் : 12
அந்தக் கருவை அருவை வினைசெய்தற்
பந்தப் பனிஅச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
சிந்தை திருத்தலும் சேர்ந்தார்அச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகும் சதுரர்க்கே.

பொழிப்புரை : எல்லா அனத்தங்கட்கும் மூலமாய் உள்ள ஆணவம், சத்தி சமூகம் ஆதலின் அருவமாய் உள்ள மாயை, அதனைக் கொண்டு சில செயல்களைச் செய்வதாகிய கன்மம் ஆகிய இப் பந்தங்களால் உளவாகின்ற, நடுங்கத் தக்க அச்சத்தைத் தரும், எண்ணிறந்தனவாகிய பிறப்புக்கள் அனைத்தையும் போக்கி, ஞானாசிரியர் ஆன்ம அறிவைத் தூயதாக்க, அதனால் சிவத்தைச் சேர்ந்து சிவமாயினோர், அதன்பின்பும் வரும் சோதனைகளை உறுதியோடு சந்தித்து வென்றால், அங்ஙனம் வென்ற திறமையாளர்க்கு அந்தச் சிவப்பேறு நிலைத்திருக்கும்.
**********************************************
பாடல் எண் : 13
உரையற்ற தொன்றை உரைத்தான் எனக்குக்
கரையற் றெழுந்த கலைவேட் பறுத்துத்
திரையற்ற என்னுடல் நீங்கா திருத்திப்
புரையற்ற என்னுட் புகும்தற் பரனே.

பொழிப்புரை : முதுமை காரணமாக வருகின்ற திரையில்லா (இளமையாகவே யிருக்கின்ற) என்னுடைய உடம்பை அவ்வாறே என்றும் அழியாதிருக்கும்படி வைத்து, `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் குற்றங்கள் அற்ற என்னுடைய உள்ளத்தில் புகுந்த சிவன், எனக்கு, அளவின்றிக் கிடக்கின்ற நூல்களின்மேல் செல்கின்ற அவாவை அறுத்து, சொல்லுக்கு எட்டாத ஓர் அரும்பொருளை எனக்கு உபதேசித்தான்.
 ===================================
 (எட்டாம் தந்திரம் முற்றியது.)
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!