http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday, 2 March 2013

திருமந்திரம்-தந்திரம்09: பதிகம் 01 & 02. குருமட தரிசனம், ஞானகுரு தரிசனம் – பாடல்கள்: 06 & 19.

 
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்.....பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..பாடல்கள்: 019
*************************************************
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -002

கூடுதல் பாடல்கள்  (006+019=025)

*************************************************

ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்: பாடல்கள்: 06
பாடல் எண் : 1
பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியுய்எம் ஈசன் றனக்கென்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.

பொழிப்புரை :  `வித்தியா குரு, கிரியா குரு, ஞான குரு எனக் குருமார் முத்திறப்படுவர். அவருள் வித்தியாகுருமார் இருக்குமிடம், `குருகுலம்` எனப்படும். குலம் - இல்லம். ஏனை இருதிறத்தார் இருக்குமிடம் `மடாலயம்` எனப்படும். அஃது இங்குச்சுருக்கமாக, ``மடம்`` எனப்பட்டது. அவருள்ளும் இங்கு, ``குரு`` என்றது, சிறப்பாக ஞான குருவையே.
வித்தியா குரவராவார் இல்லறத்தவரே. வானப்பிரத்தராயும் இருப்பர். ஏனையிருவரும் `கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம்` என்னும் மூன்று ஆச்சிரமங்களில் தங்கட்கு ஏற்புடையதில் இருப்பர். இம்மூவரது இருப்பிடங்களுமே `மடம்` எனப்படும். எனினும், கிருகத்தர் தவிர ஏனையிருவரது இருப்பிடங்களையே வழக்கத்தில் `மடம்` என்பது குறிக்கின்றது.
``தாவில் சீர் முருகனார் திருமனைக் கெய்தி``
என முருக நாயனாரது இல்லத்தை, ``திருமனை`` என ஓரிடத்தில் அருளிச் செய்த சேக்கிழார் தாமே, அதனை வேறிடங்களில்
``திக்கு நிறைசீர் முருகர் முன்பு
செல்ல, அவர்மடம் சென்று புக்கார்``3
``முருகனார் திருமடத்தின் மேவுங் காலை``
``ஓங்குபுகழ் முருகனார் திருமடத்தில் உடனாக``3
என, ``மடம்`` என்றும், ``திருமடம்`` என்றும் அருளிச் செய்தார்.
ஆதலின், சிவனுக்கு அடியவராய்ச் சிவப்பணி செய்வார் யாவராயினும் அவரது இல்லங்கள், `திருமடம்` எனக் குறிக்கப்படுதற்கு உரியவாதல் விளங்கும். இன்னும் அவர், (சேக்கிழார்) அப்பரும், சம்பந்தரும் திருவீழிமிழலையில் சிலநாட்கள் எழுந்தருளியிருந்த இடங்களையே, `அக்காலங்களில் அந்த இடங்கள் திருமடங்களாய் விளங்கின` என்னும் கருத்தால்,
``ஈறி லாத பொருளுடைய
இருவர் தங்கள் திருமடமும்``l
 ``நாவினுக்கு வேந்தர் ``திருமடத்தில்``*
``பிள்ளையார்தம் திருமடத்தில்``
எனத், ``திருமடம்`` எனக் குறித்தருளினார். இன்னும் திருஞான சம்பநத்ர் திருமணத்தின் பொருட்டுச் சென்று, அதற்குமுன் சிறிதுபோது எழுந்தருளியிருந்த இடத்தையே, அவர் எழுந்தருளியிருந்தமை காரணமாகச் சேக்கிழார்,
``பூதநா யகர்தம் கோயிற்
புறத்தொரு மாமடத்திற் புக்கார்``*
என, ``மடம்`` என்று அருளிச்செய்தார்.
இனித் திருநாவுக்கரசு நாயனார், திருப்பூந்துருத்தியில்,
``திங்களும் ஞாயிறும் தோயும்
திருமடம் ஆங்கொன்று செய்தார்``... எனப்பட்டது, ஆசிரியன்மார்களும், அடியார்களும் எழுந்தருளி யிருக்கத் தக்கதாக, நிலையாக அமைந்த திருமடமாகும்.
``நான்காம் வருணத்தாறருள் நைட்டிகருக்கல்லது
ஆசாரியத் தன்மையில் அதிகாரம் இல்லை``..  என்றும்,
``ஆதிதசைவராயின் கிருகத்தருக்கும் ஆசாரியத்
தன்மையில் அதிகாரமும் உண்டு`` ...என்னும் சிவஞான யோகிகள் தமது சிவஞான போத மாபாசியத்துச் சிறப்புப் பாயிரப் பாடியத்துள், ``ஆசாரியத் தன்மையின் அதிகாரம்`` என்னும் தலைப்பின்கீழ்ப் பலவகைத் தடைவிடைகளால் நிறுவினார்.
அதுபற்றிச், `சைவ சமய நெறி` நூலின்,
``சூத்திரனும் தேசிகனா வான்மரணாந் தம்துறவி,
சாத்திரத்தின் மூன்றும்உணர்ந் தால்``... என்னும் திருக்குறளின் உரையில் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் பின்வருமாறு கூறியுள்ளதை இங்கு அறிதல் இன்றியமையாதது. (மூன்றும் - முப்பொருள்களின் இயல்பும்.)
``சூத்திரருள் நைட்டிகப் பிரமசாரிகட்கே
குருத்துவம்; கிருகத்தர்களுக்குச் சமயி,
புத்திர, சாதகத்துவம் மாத்திரம்; குருத்துவம்
இல்லை - என்று காமிகாகமத்தில் கூறப்படுதல் பற்றி இவ்வாறுரைத்தார்.
- சூத்திரருட் கிருகத்தருக்கும் குருத்துவம்
உண்டு - என்று வேறுசில ஆகமங்களில் விதிக்கப்பட்டது.
முன்னை விதி, நைட்டிகப் பிரமசரியம் வழுவாது
அநுட்டிப்போர் பலருளராகப் பெற்ற முனை
யுகங்களிலும், பின்னை விதி, நைட்டிகப்
பிரமசரியம் வழுவாது அநுட்டிப்போர்
மிக அரியராகப் பெற்ற இக்கலியுகத்திலும்
கொள்ளற்பாலன வாதலின், விரோதமின்மை ..தெளிக.``
இதனால், `ஆகமங்களில் சூத்திரர்களில் கிருகத்தருக்கும் ஆசாரியத் தன்மையில் அதிகாரம் உண்டு` எனக் கூறப்பட்டிருப்பதை அறிகின்றோம். வழக்கத்திலும் அவ்வாறு உள்ள ஆசாரியர்கள், `தேசிகர்கள்` எனப் பெயர் பெற்று விளங்கக் காண்கின்றோம். அவர்களைச் சிவஞான யோகிகள் `ஆசாரியர்கள்` என்று ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும், தீக்கையைப் பற்றி விரிவாகவும், சுருக்க மாகவும் கூறுகின்ற, சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் என்னும் நூல்களிலும, சாதியை வைத்துத் தீக்கை வேறுபாடு கூறவில்லை. அவ்வாறே சாதி பற்றிக் கூறப்படும் சைவ பேதங்களையும் அந்நூல்கள் குறிப்பிடவில்லை. இந்நாயனாரும் குருமார்களைப் பற்றிப் பேசும் இடங்களில் இவ்வாறெல்லாம் கூறவில்லை.
`ஞான தீக்கையால், உயிரே சீவனாய் இருந்தது, சிவமாகி விடுகின்றது` என்றால், அதன்பின் அதற்குக் கருவியாய் அமைந்து, அது வேண்டியவாறே பயன்படுகின்ற உடம்பைப் பற்றிய சாதி, தீக்கை யினாலும், மாறுதல் இல்லை` என்பதை உடன்பட முடியவில்லை.
சிவப்பிரகாச நூலில் உமாபதி தேவர், ``பெத்தான்மாவின் உடம்பே பாசம்; முத்தான்மாவின் உடம்பு திருவருளே`` என்கின்றார்.3 இந்நாயனாரும்,
``திண்மையின் ஞானி சிவகாயம்``l
என்பதனால், ``சிறந்த ஞானியின் உடம்பு சிவனது திருமேனியே`` என முன் தந்திரத்தில் கூறியிருத்தலைப் பார்த்தோம். துறவிகள் உடம்பிற்குச் சமாதிக் கிரியை விதித்ததும் இது பற்றியே. திருநாவுக்கரசு நாயனார்,
``எவரேனும் தாம்ஆக; இலாடத் திட்ட
திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்டபோது
உகந்தடிமைத் திறம்நினைந்து அங்கு உவந்து நோக்கி,
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.``9
எனப் பொதுவான திருவேடமுடையாரைப் பற்றியே இவ்வாறு அருளிச் செய்தார். அங்ஙனமாக, `சிறந்த ஞானாசிரியரால் பலவகைத் தீக்கைகளையும் செய்து, ஔத்திரி தீக்கையால் அத்துவ சோதனையும் செய்யப்பட்டபின்னும் அந்த அத்துவாக்களையுடைய உடம்பு, தாய் வயிற்றினின்றும் பிறந்தது பிறந்தபடியேதான் உள்ளது. சிறிதும் மாற்ற மில்லை` எனக் கூறுதல், `சமயத்திலும் சாதியே வலுவுடையது; அது பிறப்பு மாறினாலன்றி, மாறாது` எனக் கறும் மிகுதி நூல்களையே தலை யாய பிராமாணங்களாகக் கொள்கின்ற சுமார்த்த சமயத்தின் தாக்கமே யாகும். `சைவத்தில் அஃதல்லை` என்பது திருத்தொண்டர் புராணத்தில் மிக மகி வெளிப்படை. `தீக்கையால் உயிரினது நிலை மட்டுமே மாறும்; உடலது நிலையில் மாற்றம் உண்டாகாது` எனக் கூறினால், `துறவிகளது உடம்பிற்குச் சமாதி விதித்தலால் பயன் என்னை, என்க. `அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்` என்போர்` நிருவாண தீக்கைபெற்றுச் சைவ சந்நியாசமும் பெற்ற பின்னரும், `முன்பு இருந்த அந்தணன் அந்தணன்தான்; வேளாளன் வேளாளன் தான்` எனக் கூறுதல் எவ்வளவு தொலைவு உண்மையோடு ஒட்டு கின்றது என்று பார்த்தல் வேண்டும்.
எனவே, இங்கு, ``குரு`` என்றது, எவ்வாற்றாலேனும் ஆசிரியத்தன்மை பெற்றோரையேயாம். எனினும் சந்நியாச ஆச்சிரமத்தில் உள்ள குருமார் இருப்பிடத்தற்கே `மடம்` என்னும் பெயர் சிறப்பாக உரியது. வானப்பிரத்த, கிருகத்த ஆசாரியர்கள் இருப்பிடத்திற்கு அது பொதுவாக உரியதே.
இனி, `சந்நியாசிகட்கு ஆசாரியத் தன்மை இல்லை` என்னும் ஓர் வாதமும் உண்டு.*
அது தபசுவி - என்னும் சந்நியாசியைக் குறித்து மட்டுமே கூறியது` எனச் சிவஞான யோகிகளே மேற்குறித்த இடத்தில் விளக்கினார். இங்கு வானப்பிரத்தர் `தபசுவி` அல்லாத சந்நியா சிகளுள் அடங்குவர்
``அப்பாஇம் முத்திக்(கு) அழியாத காரணந்தான்
செப்பாய், அருளாலே; செப்பக்கேள் - ஒப்பில்
குருலிங்க வேடம்எனக் கூறில்இவை கொண்டர்,
கருஒன்றி நில்லார்கள் காண்``
``கற்றா மனம்போல் கசிந்துகசிந் தேஉருகி
உற்றாசான் லிங்கம் உயர்வேடம் - பற்றாக
முத்தித் தலைவர் முழுமலத்தை மோகிக்கும்
பத்திதனில் நின்றிடுவார் பார்``9 என்றபடி, சித்தாந்த முத்திக்குத் துணையான, குரு லிங்க சங்கமங்களே யாதல் பற்றி அவைகளை, மேல் இடம் வாய்த்துழிக் கூறிய நாயனார், இங்கு முதற்கண் குரு இடமாகிய திருமடத் தரிசனத்தின் சிறப்பைக் கூறுகின்றார். இவ்வதிகாரம் ஆறு மந்திரங்களையுடையது.
`சிவபெருமான் ஒருவனுக்கே உரியன` எனக் கருதிக் கொண்டு, தனியாகப் படைக்கப்படுகின்ற படையல்களும், நெருப்பிடமாக இடப்படுகின்ற அவிசுகளும், தூபம், வேள்வி, குருலிங்க சங்கமங்கட்காக அடுகின்ற அட்டில் இவற்றினின்றும் எழுகின்ற புகைகளும், வழிபாடுகளில் மெல்ல ஓதுகின்ற மந்திர ஒலிகளும், இசையுடன் உரக்க ஓதுகின்ற வேதம், திருமுறை இவற்றின் ஓசைகளும் வந்து வந்து பரவிக் குவிகின்ற இடம் குருமடம், இதைக் கண்ணால் கண்டவர்களும் சிவலோகத்திலே சிவனது திருவடியைச் சார்வார்கள்.
*************************************************
பாடல் எண் : 2
இவன்இல்லம் அல்ல(து) அவனுக்கங் கில்லை
அவனுக்கு வேறில்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவன்இல்லம் என்றென் றறிந்தும்
அவனைப் புறம்பென்(று) அரற்றுகின் றாரே.

பொழிப்புரை : `சிவனுக்கென்று சுத்த தத்துவங்களில் உலகங்கள் உள்ளன` எனக் கூறப்படுவன, அவனுக்காக அமைக்கப்பட்டன அல்ல இந்தச் சிவகுருவுக்காக அமைக்கப்பட்டனவே. (ஏனெனில், சிவனுக்கு இருக்க ஓர் இடம் தேவையில்லை. சிவகுருவுக்கு, மாசுடம்பு நீங்கிய வுடன் இருக்க ஒரு தூய இடம் வேண்டும்.) `சுத்த தத்துவ உலகம் தவிர, அவற்றின் வேறாகச் சிவனுக்கென்றே இடம் இருக்கின்றது` என்று சொன்னால் அந்த இடம் இந்தச் சிவகுருதான். இதை உண்மை நூல்கள் பலவற்றால் அறிந்தும் சிலர், `குருமடம் வேறு; சிவனது உலகம் வேறு` எனக் கூப்பாடு செய்கின்றனர்.
*************************************************
பாடல் எண் : 3
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரிய சிறப்பில்லி எம்மிறை
ஓடும் உலகுயி ராகிநின் றானே.

பொழிப்புரை :  ஞானமாகிய கடலில் மூழ்குதற்கு உரிய பெரிய துறையாகிய குருமடத்தைச் சென்று நான் தரிசித்தபின்பு, எல்லா உயிர்களும் சென்று சேரும் இடமாகிய சிவனது, அப்பொழுது கொய்த தாமரை மலர்போலும் சிவந்த திருவடிகள் தேடிக் காண்பதற்கு அரியனவாகவே இருக்க, திருமடத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ள சிவகுருவே எங்கட்குச் சிவனாய் இயங்குகின்ற உலகம், உயிர் எங்கும் நிறைந்து நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 4
இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் மடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈரா றிருநிலத் தோர்க்கே.

பொழிப்புரை :  `சிவன் எழுந்தருளியிருக்கின்ற இருக்கை, கயிலாய மலை, ஞானிகளது உள்ளம் என்பன. முறையே திருமடத்தில் உள்ள பீடமும், மடலாயமும், திருநந்தவனமுமே` என்று நான், பன்னிரு பகுதியாகிய, பெரிய தமிழ்நாட்டு மக்கட்கு உறுதியாகக் கூறுவேன்.
*************************************************
பாடல் எண் : 5
முகம்பீட மாம்மட முன்னிய தேகம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் ஆட்சி
அகம்பர மாதனம் எண்ணெண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரந் தானே.

பொழிப்புரை : குருமடத்தில் முதன்மையாக அமைந்துள்ள பீடம், சிவபெருமானுடைய முகம். மடாலயம் உயிர்களால் நினைக்கப் படுகின்ற சிவனுடைய திருமேனி. திருமடத்தில் உள்ள பல உயிர்ப் பொருட்கள், உயிரல் பொருட்கள், சிவனுடைய வியாபகத்துள் அடங்கியுள்ள உயிர்களும், உயிர் அல்லாதனவும் ஆகிய உலகங்கள். குருமூர்த்தியின் ஆட்சி, சிவபெருமான் உயிர்களின் பாசத்தைப் போக்குதற்குச் செய்கின்ற செயல்கள். குருமூர்த்தியினுடைய உள்ளம், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மேலான இருக்கை. குருமூர்த்தி தாம் இருப்பதாகக் கொண்டுள்ள குகை, சிவனுடைய இடமாகிய சிதாகாசம். ஆகவே, குருமூர்த்திக்கு அவர்தம் மாணவர் செய்யும் பதினாறு வகை முகமன்களோடுகூடிய வழிபாட்டுச் செயல்கள். உலகில் சிவபெருமானுக்கு அந்தணர் முதலியோர் அவ்வாறு செய்யும் வழிபாட்டுச் செயல்களே.
*************************************************
பாடல் எண் : 6
அகமுக மாம்பீடம் ஆதாரம் ஆகும்
சகமுக மாம் சத்தி ஆதனம் ஆகும்
செகமுக மாம் தெய்வ மேசிவம் ஆகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.

பொழிப்புரை :  புற ஆரவாரங்களை விடுத்து, அகநோக்குக் கொண்டு நோக்குகின்ற ஞான குரவர்கட்கு, அனைத்திற்கும் அடி நிலையாகிய அந்த அக நோக்கு உணர்வே சிவன் எழுந்தருளி இருக்கும் ஆசனமாகும். அந்த அகநோக்கு உணர்வு. நிலை திரியாதே மாணாக்கர்பொருட்டு உலகை நோக்குகின்ற அதுவே சிவன் கொள்கின்ற திருவுருவமாகும். அங்ஙனம் நோக்கி மாணாக்கர்க்குச் செய்யும் அருட் செயல்களே அத்திருவுருவத்தில் உள்ள சிவபெருமானாகும்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்: பாடல்கள் : 019
பாடல் எண் : 1
மாயை இரண்டு மறைக்க மறைவுறும்
காயம்ஓ ரைந்தும் கழியத்தா மாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆயவர் ஞானாதி மோனத்த ராவரே.

பொழிப்புரை :   `அசுத்த மாயை, பிரகிருதி மாயை` என்னும் இரு மாயைகள் தம்முள் ஒடுக்க ஒடுங்குகின்ற ஐந்து உடல்களையும் அவற்றது இயல்பை உள்ளவாறு உணர்ந்து, `அவை நாம் அல்ல` என்று கழிக்கக் கழிதலால், மூன்னர்த் தாம் சடமாகிய அவையாகாது, சித்தாகி நின்று, அங்ஙனம் நின்ற அந்நிலையில், இயற்கையிலே அசுத்தமாய் நின்ற பாசஞானமும், செயற்கையால் அசுத்தமாகிய பசு ஞானமும் போலாது, இயல்பாகவே தூய்தாகிய பதிஞானம், தோன்ற, அதனானே அந்த ஞானத்திற்கு முதலாய் உள்ள சிவத்தை அறிந்து, அதனுள் அடங்கியிருப்பவர்` மோனிகட்கு மேலாகிய மோனிகளாவார்.
*************************************************
பாடல் எண் : 2
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடல்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலா அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகியே.

பொழிப்புரை :   உயிர்க்குச் சிவத்தைக் காட்டாது தம்மையே காட்டி நிற்கின்ற முப்பத்தாறு கருவிகளின் சேட்டைகளும் அடங்கும் முறையை மேலான குரு உபதேசம் செய்யும் பேற்றினை அக்குருவைத் தரிசித்து வணங்குவதாகிய வணக்கமே தரும். அவ்வுபதேச வாயிலாக அது மேலும் சிறப்பாகச் சிவனது திருவடியைத் தரும் பின்பு முடிநிலைப் பேறாக அவனது ஆனந்தத்தைத் தந்து, அஃது எல்லை யின்றிப் பெருகி வருமாறு பேணியும் நிற்கும்.
*************************************************
பாடல் எண் : 3
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையு மாகி
விரிவு குவிவற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே.

பொழிப்புரை :  தம்மை அடைந்தவரை, முத்துரியங்கட்கும் அப்பாற்பட்டு ஒளிரும் பேரொளிப் பிழம்பாகிய, அணுகுதற்கரிய பரசிவப் பொருளேயாய், அதனைப்போலவே எங்கும் வியாபகமாய், அறிவு மாயாகாரியங்களின்மேல் படர்ந்து செல்லுதலும், அதனை விட்டு ஒன்றும் அறியாது அறியாமையுள் மூழ்கிக்கிடத்தலும் ஆகிய `சகலம், கேவலம்` என்னும் இரண்டும் அற்ற இடமாகிய சுத்த நிலையிலே தங்கும்படி கொண்டுபோய்ச் சேர்க்கின்ற பெருஞான குருவின் திருவடி தரிசனச் சிறப்பை அளவிட்டுச் சொல்ல இயலாது.
*************************************************
பாடல் எண் : 4
ஆயன நந்தி அடிக்கென் தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.
பொழிப்புரை :  என் ஞானகுரு நந்தி பெருமான்; அவர் தாயைப் போலும் கருணையுடையவர்; உயிர்க்கு உறுதி பயக்கும் சொல்லை யுடையவர்; கட்புலனாகின்ற திருமேனியை உடையவர். எனினும் பாவிகட்கு எட்டாதவர். யான் தலையைப் பெற்றது அவரது திருவடிகளில் படும்படி வணங்குதற்காகவே; மற்றும் அவற்றைச் சூட்டுதற்காகவுமாம். நான் வாய்பெற்றது அவரை வாழ்த்துதற்காகவே. நான் கண்பெற்றது அவரைத் தரிசித்தற்காகவே, நான் மனத்தைப் பெற்றது அவரை நினைத்தற்காகவே.
*************************************************
பாடல் எண் : 5
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடந் தீர்த்து பயங்கேடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப்போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.
பொழிப்புரை :   (இதன் பொருள் வெளிப்படை.)
குறிப்புரை :  `கருடோகம் பாவனையால் விடம் நீங்குவது போல்ச சிவோகம் பாவனையால் மும்மலங்களும் நீங்கும்` என்பது இதன் திரண்ட பொருள். சிவோகம் பற்றி முன் தந்திரத்தில் சொல்லப்பட்டது. கருடோகம் பாவனை, சிவஞான போத ஒன்பதாம் சூத்திர பாடியத்துள் இனிது விளக்கப்பட்டிருத்தல் காண்க. இதனானே, `பாவனை பொய்யன்று` என்பதும் நிறுவப்பட்டதாம். ``கருட தியானத்தால் விடம் அகலும் அதுபோல``8 எனச் சிவஞான சித்தியிலும் சொல்லப்பட்டது. ``அவன்`` என்பதை மூன்றாம் அடியின் முதலிற் கூட்டுக. ``அவன்`` என்றது பாவிப்பவனை.  இதனால், குருத்தியானமே சிவோகம் பாவனையாதல் கூறப்பட்டது.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்`` என்னும் மந்திரம், மூன்றாம் தந்திரத்து, `கால சக்கரம்` அதிகாரத்தில் வந்தது.]
*************************************************
பாடல் எண் : 6
தோன்ற அறிதலும் தோன்றல்தோன் றாமையும்
மான்ற அறிவும் மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்(று)அற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.

பொழிப்புரை :   தோன்ற அறிதல் - பொருள்களை இனிது விளங்கத் தெளிய உணர்தல். தோன்றல் தோன்றாமை - விளங்கவும் விளங்காமலும் ஐயமாக உணர்தல். மான்ற அறிவு - யாதும் அறியாது அறிவு மூடமாதல். இவையே மறித்து மறித்து வரும் நனவு கனவு உறக்கங்களாம். இம்மூன்றும் நீங்கிய நான்காம் நிலை துரியம் அது மூன்று வகையாய் நிகழும். (அவை முன் தந்திரத்தில், `முத்துரியம்` என்பதில் காட்டப்பட்டன. அம்மூன்று துரியங்களும் நீங்க, ஐந்தாவதாகிய அதீதத்தில் ஞான குருவை உணர்பவன் (மேற்கூறியவாறு கருடோகம் பாவனை செய்பவன் கருடனே யாதல் போலக்) குருவேயாகிவிடுவான்.
*************************************************
பாடல் எண் : 7
சந்திர பூமிக்குள் தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் அறுத்த பளிங்கின் உருவினர்
பந்தம் அறுத்த பரம்குரு பற்று.

பொழிப்புரை :   புருடனது உடம்பில் சந்திர மண்டலம் எனக் குறிக்கப்படுகின்ற அந்த எல்லைக்குள்ளேயிருக்கின்ற புருவ நடுவில், நறுமணம் பொருந்திய ஈரிதழ்த் தாமரை மலரில் அருட்சத்தி, பிறிதொரு நிறத்தொடு கூடாது தூய்மையாய் உள்ள படிகம்போன்றிருக்கின்றார். உனது பாச பந்தங்களை முற்ற அறுத்த ஞான குருவை நீ அவ்விடத்திலே தியானி.
*************************************************
பாடல் எண் : 8
மனம்புகு தான்உல கேழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வான்நிலம் தாங்க
சினம்புகுந் தான்திசை எட்டும் நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்ப தாமே

பொழிப்புரை :   `ஏழுலகங்களிலும் உள்ள உயிர்கள் மகிழும்படி அவைகளின் மனத்தினுள் இருப்பவனும், நீண்ட வானுலகத் தேவரையும், மண்ணுலக மக்களையும் அருள்புரிந்து காக்க வேண்டிப் பல தலங்களில் எழுந்தருளியிருப்பவனும். பாவத்திற்கு அஞ்சாது உலகிற்குக் கொடுமையை விளைப்பவர் யாராயினும் அவர்கள் அஞ்சி நடுங்கும்படி சினம் கொள்கின்றவனும், காட்டை இடமாகக் கொண்டு ஆடல் புரிகின்றவனும் ஆகிய ஒருவனது இருப்பிடம் இப்பெரு நிலத்திற்கு வடக்கெல்லை ஆகிய இடத்தில் உள்ளது` என்று அறிந்தோர் சொல்லுவர்.
*************************************************
பாடல் எண் : 9
தான்ஆன வண்ணம்ஐங் கோசமும் சார்தரும்
தான்ஆம் பறவை வனம்எனத் தக்கன
தான்ஆன சோடச மார்க்கம்தான் நின்றிடில்
தான்ஆம் தசாங்கமும் வேறுள்ள தாமே.

பொழிப்புரை :   சார்ந்ததன் வண்ணமாம் தனது இயல்பினால் ஐந்து உடம்புகளைச் சார்ந்து அவையேதானாய் நிற்கின்ற பறவையாகிய உயிர் அது சென்ற திரியும் காடாகிய சொல்லுலகத்தில் `பதினாறு பாகளை உடைய ஒரு நல்ல வழியைக் கண்டு நடக்குமாயின், அது சிவமாம் தன்மையை அடையும், இனி, அஃதேயன்றி, அப்பறவை சிவமாதற்குப் பத்து படிகளையுடைய வேறொரு வழியும் உண்டு.
*************************************************
பாடல் எண் : 10
மருவிற் பிரவறி யான்எங்கள் நந்தி
உருவம் நினைக்கின்நின் றுள்ளே உருக்கும்
கருவிற் கலந்துள்ளம் காணவல் லார்க்(கு) இங்(கு)
அருவினை சோரும் அழிவார் அகத்தே.

பொழிப்புரை :  ஒருவரை அணுகிவிட்டால், பின்பு அவரை விட்டு ஒருபோதும் நீங்குதல் இல்லாதவர் எங்கள் நந்தி பெருமான். அந்நிலையில் அவரது திருவுருவத்தை உள்ளே நினைத்தால், நினைக்கின்ற உள்ளங்களை அஃது உருக்கிவிடும். அதனால், அங்ஙனம் உருகிய உள்ளம் உடையவர்கள் அவரிடத்தே ஒடுங்கி, அவரது அருள் கண்ணாகவே எதனையும் காண்பர். அங்ஙனம் காண வல்லார் முன்பு அவரது பிராரத்த வினை இவ்வுலகத்தில் மிகவும் மெலிந்து விடும். (உயிரைத் தாக்காது, உடல் ஊழாய்க் கழியும்` என்பதாம்.) அதனால், அவர் தியானித்த அந்த உருவத்திலே அடங்கித் தற்போதம் அற்றிருப்பர்.
*************************************************
பாடல் எண் : 11
தலைப்பட லாம்எங்கள் தத்துவன் றன்னை
அலைப்படு பாசம் அறுத்தறுத் திட்டு
நிலைப்பட நாடி நினைப்பற உள்கின்
தலைப்பட லாகும் தருமமுந் தானே.

பொழிப்புரை :  எங்களது மெய்ப்பொருளாகிய சிவனைப் பலரும் அடையலாம். ஆயினும், அதன்பின்பும் அலைகள் போல வந்து வந்து தாக்குகின்ற பாசங்களை அவ்வப்பொழுது அவை தாக்காதபடி அறுத்தறுத்துப் போக்கி, அடைந்த அடைவு நிலைப்பில் நிற்கமாற்றை ஆராய்ந்து, தற்போதம் தலையெடாதபடி குறிக்கொண்டிருந்தால், அடைந்தது அடைந்ததாகவே இருக்கும். அதுவே சிவனை அடைந்தவர்க்குரிய தருமமும் ஆகும்.
*************************************************
பாடல் எண் : 12
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தார்உயர்ந் தாரே.

பொழிப்புரை :  சிவபெருமான், தன்னை நினைத்தால், நினைப்பவரைத் தானும் நினைப்பான். (நினைத்து, அவரை மேன்மேல் உயரச் செய்வான்) அதனால், சுனைக்குள்ளே மலர்ந்த ஒரு தாமரை மலரின்மேல் எழுகின்ற சோதிபோல இருதய கமலத்திலே ஒளிவடிவாய் விளங்கும் அப்பெருமானை `அடைதல்` என்பது மனத்தால் அடைதலேயாதலின் அவ்வாறு அவனை முதிர்ந்த அன்பால் அடைந்தவர், உலகியலில் எத்துணைச் சிறுமையராய் இருப்பினும், உயர்ந்தோரினும் உயர்ந்தோரேயாவர்.
*************************************************
பாடல் எண் : 13
தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை
விலக்குறின் `மேலே விதி`என்று கொள்க
அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே.

பொழிப்புரை :  சிவனை மனத்தால் அடைந்து நிற்கும் பொழுது இடையே அதனை நீக்குகின்ற ஊறு ஏதேனும் தோன்றுமாயின், அதனை, `இது நாம் முன்பு செய்த வினையினின்றும் முகந்து கொண்டு வந்த பிராரத்தத்தின் விளைவு` என அறிக. அங்ஙனம் அறியுமிடத்து, `அந்தப் பிராரத்தம் தானே வரும் சுதந்திரம் உடைத்தன்று; சிவனே அதனைக் கூட்டுவிக்கின்றான்` என உணரவல்லவர், அதனாலும் சிவபத்தி செய்பவராயே விளங்குவர்.
*************************************************
பாடல் எண் : 14
நகழ்வொழிந் தார்அவர் நாதனை உள்கி
நிகழ்வொழிந் தார்எம் பிரானொடுங் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தியனுள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.

பொழிப்புரை :  `யான், எனது` தன்முனைப்புக் கொண்டு தருக்குதலை ஒழிந்து, `எல்லாம் அவனே` என்று அடங்கி யிருப்பவர்களது அறிவினுள்ளே சிவன் நின்று எல்லாக்கலைகளாலும் புகழப்படுகின்ற தனது திருவருள் நெறியையே விளக்கி நிற்பான். அதனால், அவர்கள் அவனையே அறிந்து நிற்றலால் அத்திருவருள் நெறியைவிட்டு அப்பால் நகர்தல் இல்லை. மற்றும் அவனிடத்திலே அழுந்தி நிற்றலால் பிறவிக்குரிய நெறியில் சென்று பிறப்பதில்லை.
*************************************************
பாடல் எண் : 15
வந்த மரகத மாணிக்க ரேகைபோய்ச்
சந்தித் திடும்மொழி சற்குரு சன்மார்க்கம்
இந்த ரேகை இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுட் சோதியும் ஆமே.

பொழிப்புரை :  ஞான குரு காட்டும் ஞானநெறி, அன்று அயன் மால் தேடும்படி வந்த, மரகத மணியொளிவும் மாணிக்க மணி யொளியும் சேர்ந்த ஓர் ஒளிவடிவை அடையும் உபதேச மொழியேயாம். அந்தமொழியின் பொருளே மூக்கின் அடி இடமாகிய புருவ நடுவில், ஆன்மாவின் அறிவினுள் அறிவாகத் தியானிக்கப்படும் ஒளியுமாகும்.
*************************************************
பாடல் எண் : 16
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணும்மா யோகக் கடவுள் இருப்பது
மண்ணும் நீர் அனல் காலொடு வானும் மாய்
விண்ணும்பின் னின்றி வெளியானோர் மேனியே.

பொழிப்புரை :  நிலம் முதலிய பூதங்கள் ஐந்தையுமேயன்றி, அவை தோன்றியொடுங்கும் இடமாகிய மூலப் பகுதியையும் கடந்து அறிவேயான ஞானியரது உடம்பில், யோகத்தால் கருதியுணரப் படுகின்ற கடவுள் இருப்பது, உணவை உண்கின்ற வாய் முதலிய உறுப்புக்கள் அவற்றையுடைய, உடம்பு அதனுள்ளிருக்கும் உயிர் ஆகிய அனைத்திலும் ஒன்றாய்க் கலந்தேயாம்.
*************************************************
பாடல் எண் : 17
பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும்மப் பாதியால்
பெரிய பதிசெய்துபின்ஆம் அடியார்க்(கு)
உரிய பதியும்பார் ஆக்கிநின் றானே.

பொழிப்புரை :  வேதாகமங்களால், `பதி` என்று போற்றப்படுகின்ற பரமசிவனது திருவாணை எவ்வுலகிலும் தடையின்றிச் செல்லும். அதில் ஒரு கூற்றினால் முன்னுள்ள அடியார்களை அவன் தானாகச் செய்து, மற்றொரு கூற்றினால் பின்னுள்ள அடியார்களுக்காகப் பலவகையான உலகங்களைப் படைத்து வைத்துள்ளான்.
*************************************************
பாடல் எண் : 18
அம்பர நாதன் அகலிட நீள்பொழில்
தன்பர மல்லது தாம் `அறியோம்` என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.

பொழிப்புரை :  மக்கள் நிலவுலகத்துள்ளாராயினும் அவர்கள் எங்கள் சிவபெருமானது திருவருளைப் பெற்றிருக்கின்றார்கள் ஆகையால், அவர்கள், `அகன்ற இடத்தையுடைய அனைத் துலகங்களும் சிதம்பர நாதன் ஆகிய அவனது ஆணை வழியல்லது பிறவாற்றால் நடத்தலைத் தாங்கள் அறியவில்லை` என்று கூறுகின் றார்கள். அஃதாவது, `அவன் அன்றி ஓர் அணுவும் அசைதலைக் காணவில்லை` என்கின்றார்கள். தேவரும் மக்களுக்கு மேலிடத்துள்ளாராயினும் இந்த உண்மையை அவர்கள் உணர்ந்திலர்.
*************************************************
பாடல் எண் : 19
கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.

பொழிப்புரை :  எங்கள் ஞான குருவாகிய நந்தி பெருமான் எங்களுடைய நாங்கள் எங்களையே புகழ்ந்து கொள்ளும் இயல்புடையனவாய் இருந்த நிலையை மாற்றித் தமக்கு வணக்கங் கூறுவன ஆகும்படி அருள்புரிந்தார். அதனால், பின்பு எங்கள் அறிவுகள் தெளிவுடையன ஆகப் பெற்றோம். ஆகி, தேவர்கோவும் மக்கட் கோக்கள் பலரும் வணங்கும்படி `கோவணமும் மிகையே` என்னும் மனப்பான்மையுடன் துறவுக் கோலத்தை உடையர் ஆயினோம். யாவரும் பல அரிய சாதனங்களின் வழியே சென்று அடையப்படும் பொருளாகிய சிவமேயாய் இருக்கின்றோம். ஆகவே இனிப் `பிறிதொரு தெய்வத்தை வணங்குதல்` என்பது எங்கள்பால் நிகழாது.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா





No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!